Friday, May 6, 2022

தமிழ் ஞானப் பன்றி - நுண்கதை

திருவருட்பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகள் பிறந்து ஒரு நூற்றாண்டு கழித்து, அதே நாளில்தான் நான் பிறந்தேன். சரியாக அவர் ஜோதியில் கலந்த அதே நாளின் நூற்றாண்டில் நான் மறைந்தேன். என் பெயர் இராமலிங்கம். காலரூபன் எனும் பெயரில் கவிதைகள் எழுதிவந்தேன். பாரதியும் வள்ளலாரும் என் நண்பர்கள். அடிக்கடி அவர்களோடு பேசுவது உண்டு. நான் அவர்களோடு பேசுவதைப் பலரும் வியப்பாய்ப் பார்ப்பார்கள். ‘அவர்களுக்கு இதெல்லாம் புரியாது’ என்பார் சுவாமிகள். பல விஷயங்கள் அப்படித்தான் இங்கு பலருக்கும் புரிவது இல்லை. ஒருமுறை நான் ஒரு கவிதை எழுதினேன். ‘தமிழ் ஞானப் பன்றி’ என்ற தலைப்பில். அது முதல் சுவாமிகளும் பாரதியும் என்னைத் தமிழ் ஞானப் பன்றி என்றே அழைப்பார்கள்.

தமிழ், ஒரு மானுட மொழி கிடையாது என்பான் அயோனிகன். அவனுக்குத் தெரியாதது இல்லை. அவன் நம்மைப் போல் யோனியில் பிறந்தவன் இல்லை. இந்தப் பூமியைச் சார்ந்தவனே இல்லை. பாலற்றவன். அவனை அவன் என்பதுகூட வெறும் விளித்தல் நிமித்தமே. அவள் என்பதும் அதுவென்பதும் அவன்தான். அவன்தான் சொன்னான் ஒருமுறை, ‘இந்த மொழி பூமியின் மொழி அன்று’ என. இதைப் பழுதறப் பயின்றவன் உன்மத்தனாகிறான். இப்பூமிக்குத் தேவையற்றவனாகிறான். இந்த மொழியே உன்மத்தர்களின் மொழிதான். அயோனிகர்களின் மொழிதான். இதைக் கற்றுதான் வள்ளலார் ஓர் உன்மத்தர் ஆனார். பாரதி உன்மத்தன் ஆனான்.

‘வண்ணத்துப்பூச்சிகள்

கடும் விஷம் கொண்டவை

தினம் ஒரு

வண்ணத்துப் பூச்சியை

தின்று வருபவனை

பாம்பின் விஷம்

அழிக்காது’

பத்து வயதில் எனக்கு முதன்முறையாக வலிப்பு வந்தது. அப்போது நாங்கள் ஏர்வாடிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தோம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏதோ வாக்குவாதம். அப்பா அம்மாவை ஓங்கி அறைந்தார். அம்மா ‘ஓ...’வென அலறியபடியே கீழே விழுந்தாள். என் அண்ணன் அப்பாவை அடிக்கப் பாய, அவர் அவன் விலாவில் எட்டி உதைத்தார். அவனும் சுருண்டு விழ. அப்பா மூர்க்கமாய் எனைப் பார்த்தார். ஏற்கெனவே காய்ச்சலில் இருந்த எனக்குத் தலை கிறுகிறுத்தது. கண்கள் நிலைகுத்த, வெட்டி வெட்டி இழுத்துக் கீழே விழுந்தேன்.

விழித்தபோது நாங்கள் பேருந்தில் இருந்தோம். என் சட்டைப் பொத்தான்கள் நீங்கி இருந்தன. அம்மா என் நெஞ்சை வருடிக்கொண்டிருந்தாள். அப்பா வரவில்லை.  அம்மா அழுதுகொண்டிருந்தாள்.   “அழாதே” எனச் சொல்ல நினைத்தேன்.  ஏனோ சொல்லவில்லை. அப்போதுதான் அவரைப் பார்த்தேன்; வள்ளலார். எனக்கு அவரை முன்பே தெரியும். அம்மா சொல்லி இருக்கிறாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். “இங்கு வா” என்றார். ஏதோ சொல்ல முயன்றார். நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

பிறகு, கொஞ்ச நாட்கள் அவர் வரவே இல்லை. பள்ளியில் ஒருமுறை மீண்டும் வலிப்பு வந்தது. இம்முறை வாத்தியார் ஒரு பையனை அடித்தார். அவன் அங்கிருந்த பானையில் தண்ணீர் குடித்தான். அதற்குத்தான் அடி. அதைப் பார்த்த பயத்தில் எனக்கு வலிப்பு வந்தது. சிறிது நேரம் என்னைப் படுக்க வைத்திருந்தார்கள். அப்போது அவர் வந்தார். பளீரென வெள்ளுடை. ஆதரவாய் தலைவருடினார். “பயப்படாதே” என்றார்.

‘நீராலானது யாவும் நீரால் அழியும்

நானோ கண்ணீரால் ஆனவன்

கண்ணீரின் உப்பால் ஆனவன்

உப்பின் நெருப்பு

கண்ணீரின் நெருப்பு’

பதினைந்து வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.  கவிதை எனது நோயாகவும் மருந்தாகவும் இருந்தது. வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க, குழப்பங்களும் அதிகரித்தன. மனம் நுட்பமாகிக்கொண்டே இருந்தது. பிரச்னைகளும் நுட்பமாகிக்கொண்டே இருந்தன. மன அழுத்தம் தாளாமல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன். அம்மாவும் அப்பாவும் செத்துப்போனார்கள். அண்ணனோடு எந்தத் தொடர்பும் இல்லை. தனியனாய்ச் சுற்றிக்கொண்டிருந்தேன். பாரதி அடிக்கடி வரத் தொடங்கினான். ஊர் ஊராய்ச் சுற்றினோம் இருவரும். ஒருமுறை காசியில் சாமியார் ஒருவனுடன் உறவுகொண்டு, கொஞ்சம் கஞ்சா வாங்கிக்கொண்டு கங்கைக் கரையில் அமர்ந்து இழுத்துக்கொண்டிருந்தேன். பெளர்ணமி இரவு. நிலா என் காலருகே கிடந்தது. எட்டி உதைத்தேன். ஆற்றில் போய் விழுந்து மீண்டும் எழுந்து வந்து நின்றது. மீண்டும் மீண்டும் உதைத்துக்கொண்டே இருந்தேன். அது வந்து நின்றுகொண்டே இருந்தது. பக்கத்தில் இருந்த சாமி, கெக்கலியிட்டுச் சிரித்தான். பாரதி, அவனைக் கொன்றுவிடு என்றான். ஒரு பெரிய கல்லை அவன் தலையில் போட்டுச் சிரிப்பை அடக்கினேன். இப்போது மூளைக்குள் சிரிப்புச் சத்தம். இம்முறை சிரித்ததோ வள்ளலார். என்னால் நம்ப முடியவில்லை. நான் அவர் காலில் விழுந்து கதறினேன். அவர் சிரித்துக்கொண்டே இருந்தார். கோபத்தில் கத்தினேன். மீண்டும் அழுதேன். சிரிப்பு மட்டும் நிற்கவே இல்லை. ஓடிப்போய் சாமியார் வைத்திருந்த ஒரு கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டினேன். சிரிப்புச் சத்தம் என் தலைக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. கத்தியை என் கழுத்தில் வைத்து சர்ரெனக் கிழித்தேன். சிரிப்பு மெள்ள மெள்ள ஓய்ந்து அடங்கியது. அருட்பெருஞ்ஜோதி...அருட்பெருஞ்சோதி...தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி!


நன்றி: விகடன் தடம் 

No comments:

Post a Comment