Thursday, May 5, 2022

மணலின் புத்தகம் - நுண்கதை1975-ம் வருடம் ஹோர்ஹே லூயி போர்ஹெஸ் ’மணலின் புத்தகம்’ என்ற தன் புகழ் பெற்ற சிறுகதையை  எழுதத் திட்டமிட்ட நாளில்தான் பாம்பேவில்  என் தாத்தா கங்கா சிங்கை போலிஸ் அடித்து இழுத்துச் சென்றது. பிரதமர் இந்திரா  இந்தியாவில் ’நெருக்கடி நிலை பிரகடனம்’ கொண்டு வந்த மறுநாள் அது என்று என் அப்பா தன் பால்யத்தின் தைல வண்ண நினைவுகளில் முழ்கியவராய் அதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். நாங்கள் அப்போது தாராவியில் இருந்தோம். எங்களின் பூர்வீகம் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு சிறுகிராமம். மும்பையில் தன் சாதிப் பெயரைச் சேர்த்துக்கொள்ள இயலாத தாழ்த்தப்பட்ட மக்கள்  பெயரின் பின்னொட்டில் சிங் என சேர்த்துக்கொள்வது வழக்கம் என்று அப்பா சொல்வார். அப்படித்தான் என் தாத்தா கங்காதரன் கங்கா சிங் ஆனார். தாராவியில் எங்கள் தாத்தா ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். வீதிதோறும் அலைந்து, பழுப்பேறிய, கிழிந்த, முனை கசங்கிய பழைய புத்தகங்கள் சேகரித்து அரை விலைக்கு விற்பார். நேரம் கிடைக்கும் போது அதில் ஒருசில புத்தகங்களை வாசிக்கவும் செய்வார். ஒருமுறை ஜின்னிங் மில்லில் வேலை செய்யும் தோழர்.ஆறுமுகம் இறந்தபோது அவர் மகன் டிட்டோ கொண்டு வந்து கொடுத்த சிவப்பு வண்ண கெட்டி அட்டைப் புத்தகங்களின் தாளின் வழுவழுப்பில் மயங்கி அவற்றில் சிலதை வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதில் ஒன்றிரண்டை வாசிக்க முற்பட்ட போது அவருக்கு உலகத்தின் இன்னொரு கதவு திறக்கப்படுவதை உணர்ந்தார். மெல்ல வாசிப்பில் ருசியேற ஒவ்வொரு கதவாய் திறந்து சென்றுகொண்டேயிருந்தார். இப்படித்தான் அவர் ஒரு சிவப்புத் துண்டுக்காரர் ஆனார்.  பிறகு ஒரு மழை நாளில் பாபாசாகேப் அம்பேத்கரின் புத்தகம் ஒன்றை வாசிக்கத்துவங்கியபோது அவருக்கு இந்த தேசத்தின் வேறு கதவுகள் திறக்கப்படுவதை உணர்ந்தார். அம்பேத்கரின் புத்தகங்களைத் தேடித் தேடி படிக்கத் துவங்கினார். அப்படித்தான் அவருக்கு ஒரு புத்தகம் கையில் வந்து சேர்ந்தது. அதன் பெயர் மணலின் புத்தகம்.  முதலும் முடிவுமற்ற அந்த புத்தகத்தைப் போலவே, பல விநோத புத்தகங்கள் என் தாத்தாவிடம் சேரத்துவங்கின. பகல் முழுதும் அலறல் ஒலிக்கும் புத்தகங்கள்; விதவிதமான நறுமணங்களைப் பரப்பும் புத்தகங்கள்; ஓயாது பிற புத்தகங்களுடன் வாதிட்டுக்கொண்டிருக்கும் புத்தகங்கள், கடைசி பக்கம் தீராவே தீராத புத்தகங்கள் என பலவிதமான புத்தகங்கள். ஒருமுறை ஒரு புத்தகத்தில் சாணிப்பால் புகட்டப்படுவதை, யோனியில் கம்பி செருகப்படுவதைக் கண்டு அந்தப் பக்கங்களைக் கிழித்து துப்பாக்கி செய்துகொண்டார் என் தாத்தா. அது முதலாய்  அந்த வீடு அவருக்கு அந்நியமாய் போனது. என் அப்பா நிமோனியா கண்டு மரணப்படுக்கையில் இருந்தபோது அவரைப் பார்க்க ஒரு முசல்மான் வேடத்தில் வந்தார் என் தாத்தா. எப்படியும் வருவார் எனக் காத்திருந்த போலிஸார் அவரைப் பிடித்து என் அப்பாவின் கண் முன்பேயே துவம்சம் செய்துகொண்டு சென்றார்கள். வீட்டில் இருந்த புத்தகங்கள் உட்பட அனைத்தும் சூறையாடப்பட்டன. கடைசிப் பக்கம் முடியவே முடியாத பைசாசம் பீடித்த அந்த மணலின் புத்தகம் எங்களிடம் இருந்து தொலைந்தும் போனது. சில நாட்கள் கழித்து போர்ஹெஸின் கதை பிரசுரமானபோது என் தாத்தா தாராவியின் சாக்கடை மேட்டில் அழுகிக்கிடந்தார்.

No comments:

Post a Comment