Tuesday, May 3, 2022

பத்தாயிரம் வெள்ளிகள் - நுண்கதை(அ)

பதினாறாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பாரசீக ஓவியரும் ஹுமாயுன், அக்பர் போன்ற பேரரசர்களின் ஆஸ்தான கலைஞருமான அப்துல் சமத் ஒரு நாள் இரவு ஆலம்கீரின் அரண்மனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் பனை மரம் போல் ஓங்கி வளர்ந்திருந்த வீரன் ஒருவனால் வழிமறிக்கப்பட்டார். ஆஜானுபாகுவான தோற்றமும் தீட்சண்யம் நிறைந்த கருந்திராட்சை போன்ற விழிகளும் கொண்டிருந்த அவன்  ஒட்டாமான் சாம்ராஜ்யத்தின் சுல்தானது வணிகக் காவல் படையில் பணியாற்றுபவன். துருக்கியிலிருந்து சீனத்துக்கும் அங்கிருந்து டெல்லிக்கும் பயணித்த பட்டு வியாபாரி ஒருவரின் பாதுகாவலனாய் வந்திருந்தவன் தன் சொந்தக் காரணம் ஒன்றுக்காக யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் ஓவியரைக் காண வந்திருந்தான்.

தன் தோற்றுத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத பணிவான குரலில் ’அஸ்ஸலாமு அலைக்கும் க்வாஜா சமத் பாய்’ என்று வணங்கவே, திடீரென்று குரல் வந்த திசையை நோக்கி ஒரு கணம் துணுக்குற்ற ஓவியர் பதில் முகமன் கூறித் தயங்கி நின்றார்.

தன்னைப் பற்றிய விவரங்களைச் சுருக்கமாகச் சொன்ன அவன் அவரால் தனக்கொரு தனிப்பட்ட, ரகசிய காரியம் நிறைவேற வேண்டும் என்று பீடிகையிட்டான். அதாவது, நுண் விவரணை ஓவியங்களின் நிபுணரான சமத் அவனையும் ஹிந்துஸ்தானின் பேரரசரைப் போல ஓர் ஓவியம் வரைந்து தர வேண்டும் என்று வேண்டினான். இந்தக் கோரிக்கையின் அபத்தத்தைக் உணர்ந்த சமத். கோபமும் எரிச்சலும் கலந்த குரலில் ’முட்டாளே! டெல்லியில் சுவருக்கும்கூட காதுகள் உண்டு. உளறுவதை நிறுத்திவிட்டு ஓடிப்போ. இல்லாவிடில் உன் தலை கழுத்தில் தங்காது’ என்று எரிந்துவிழுந்தார்.

அவன் சற்றும் அசராமல் அதே பணிவு மாறாத திடமான குரலில் ’வஜீர்! அல்லா மீது ஆணையாக தாங்கள் இதைச் செய்யத்தான் வேண்டும்’ என்றான்.

சமத் மீண்டும் அதிர்ந்தார். ’என்ன சொன்னாய் வஜீரா? யார் வஜீர் நானா? குடித்திருக்கிறாயா என்ன?’ என்று திக்கினார்.

’நீங்கள் இப்போது வஜீர் இல்லைதான் க்வாஜா பாய்’ ஆனால். தங்கள் பாட்டனார் அரபுப் பேரரசர் ஷாசோல்ஜா முஜாபரித் அவையில் வஜீராக இருந்தவர்தானே? அதனால்தான் உங்களையும் அப்படி விளித்தேன்’ என்றான்.

வந்திருப்பவன் சற்று விவரமானவன் என்பதைப் புரிந்துகொண்ட ஓவியர் அவனிடம் சற்று தணிவாகப் பேசினார். ’அப்படியில்லை வீரனே உன் கோரிக்கை ராஜ துரோகம் என்பதை அறிவாய்தானே? சரி உனக்கு எதற்கு அப்படி ஓர் ஓவியம்?’ என்று கேட்டார்.

’க்வாஜி! நானும் ஓர் அரச குலத்தில் பிறந்தவன்தான். என் முன்னோர் ஆப்கானை ஆண்டவர்கள் என்று என் தாய் சொல்லியிருக்கிறாள். அவள் இறப்பதற்குள் நான் ஒரு சுல்தானாக வேண்டும் என்பது அவள் ஆசை. தற்போது அவள் மரணப் படுக்கையில் இருக்கிறாள். தாங்கள் என்னை பாதுஷா போல் வரைந்து கொடுத்தால் அதைப் பார்த்துவிட்டாவது அவள் நிம்மதியாகக் கண் மூடுவாள். ஒரு பாசமுள்ள தனயனாக நான் இதைத் தங்களிடம் யாசிக்கிறேன்’ என்றான்.

இதில் என்னவோ விஷயம் இருக்கிறது என்று தயங்கிய ஓவியர். தான் ஒரு நுண் விவரணை ஓவியர் மட்டுமே என்றும், தன்னால் அவன் கேட்பது போல் வரைய இயலாது என்றும் விரும்பினால் அவரின் பழைய மாணவன் ஒருவரிடம் இதற்குப் பரிந்துரைக்கிறேன் என்றும் கூறினார்.

சமத்தின் பழைய மாணவன் பெயர் ஜிபு. சாத்தான் ஜிபு என்பார்கள் சமத்தின் பிற மாணவர்கள்.  ஓவியங் கற்றறுக்கொண்டிருந்த காலத்திலேயே துஷ்டத்தனங்களுக்குப் பேர் போனவன். நிஜமாகவே சாத்தானின் நட்பைப் பெற்றவன். இரவுகளில் தனது அறையில் விநோதமான பயிற்சிகளில் எல்லாம் ஈடுபடுவான். ஓவியம் எனும் புனிதமான கலையை அல்லாவுக்கு மாறுபாடான வழிகளில் பயன்படுத்துபவன் என்று கூறி அவனை சமத் விலக்கித் துரத்தினார். இந்துகுஷ் மலைகளின் அடிவாரத்தின் ஒரு கிராமத்தில் அவன் தற்போது வசித்துவருவதாகக் கேள்விப்பட்டிருந்தார். இந்த விநோதமான அசடனை அந்த ஜின் சகவாசம் கொண்ட துஷ்டனிடம் அனுப்புவதே நல்லது என்று தோன்றியது அவருக்கு.
(ஆ)

ஜிபு பார்ப்பதற்கு ஓர் ஓவியனைப் போலவே இல்லை. கந்தலான உடையும் அழுக்கான அலர்வாடைவீசும் தேகமும் அத்திப் பழ சாராய வாடையுமாய் இருந்தான். வீரனின் கோரிக்கையையும் தன் குருநாதரின் அறிவுரையையும் கேள்விப்பட்டவன். அவனுக்கு உதவத் தயாராய் இருப்பதாய் கூறினான். ஆனால், இதற்கு சன்மானமாக தனக்கு நூறு வெள்ளிக் காசுகள் தர வேண்டும் என்று கூறினான். வீரன் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டான்.

மறுநாள் பெளர்ணமி இரவில் வீரனை வரச்சொல்லி அச்சு அசலாய் ஓர் அரசகுமாரனைப் போல் அவனை வரைந்துகொடுத்தான் ஜிபு. வீரன் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான். ’எவ்வளவு அழகு! இந்த ஓவியம் மட்டும் நிஜமாய் இருந்தால் கலைஞனே நான் உனக்கு பத்தாயிரம் வெள்ளிகள் தருவேன்’ என்றான்.

’இதைக் கேட்டு துணுக்குற்ற ஓவியன். அதை நிஜமாக்க என்னால் முடியாது வீரனே… ஆனால் நிஜம் போல உணரச் செய்ய என்னால் முடியும்’ என்றான். ’அப்படியானால் அதைச் செய் நான் உனக்கு நிஜமாகவே பத்தாயிரம் வெள்ளிகள் தருகிறேன்’ என்றான்.

ஓவியன் தன் வீட்டின் மூலையில் இருந்த ஒரு கூழாங்கல்லை சுட்டிக் காட்டி ’அதை எடுத்து என்னிடம் தா’ என்றான். அவன் எடுத்துத் தரவே அதை வாங்கி தன் இடுப்புப்பட்டையில் முடிந்துகொண்டு ’சரி வா போகலாம்’ என்றான்.

அவனை இந்துகுஷ் மலை அடிவாரத்தின் அடந்த காட்டுக்குள் கண்களைக் கட்டி அழைத்துச் சென்றான். முட் செடிகள் உடல் கிழிக்க விநோத வாசனை வீசும் தாவரங்களை விலக்கி அவர்கள் சென்றுகொண்டே இருந்தார்கள். ஓரிடத்தில் வீரனை நிறுத்தி ஓவியன் அவன் கண்கட்டுகளை அவிழ்த்தான். அந்த இடத்தில் ஓர் அழகான அரண்மனை இருந்தது. இது யாரின் அரண்மனை என்று கேட்ட வீரனிடம் இது உங்கள் அரண்மனைதான் ஆலம்கீர் என்றான். வீரன் ஓவியனைப் புரியாமல் பார்த்தான். ஓவியன் அதோ பாருங்கள் எனக் கைகாட்டிய இடத்தில் ஒரு குதிரை நின்றிருந்தது.

வாருங்கள் அரசே இதில் ஏறி நம் அரண்மனைக்குச் செல்வோம் என்று அழைக்க மந்திரத்தில் கட்டுண்டவன் போல் அவனும் உடன் வந்தான். குதிரையில் இருவரும் அரண்மனை தலைவாசலருகே வந்தபோது வீரர்கள் வணங்கித் திறந்தன. எதிர்புறம் ஓர் அரசனும், அரசியும் மந்திரிகளும், சேனாதிபதிகளும், அரசிளங்குமரிகளும் இன்னும் பல பிரபுகளும் திரளாய் அவர்களை வரவேற்றனர். ’உங்களுக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தோம் இளவரசே வாருங்கள். நான்தான் இந்நிலத்தின் அரசன். என் மகள் செளமியை உங்களை மணக்கவே காத்திருக்கிறாள்’ என்றான் அரசன்.

வீரன் தான் யாரெனத் தெரியுமா என்று கேட்க, அரசன் அவனைப் பற்றி அனைத்தும் தெரியும் என்றார். விரைவில் டெல்லியின் பாதுஷாவாக பதவியேற்கப் போவதும் தெரியும் என்றார். வீரனுக்கு எதையுமே நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க இயலவில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் அரண்மனையின் ஆடம்பரங்களில் மூழ்கினான். சில நாட்கள் கழித்து தன் அன்னையையும் மற்ற குடும்பத்தாரையும் அரண்மனைக்கு வரவழைத்தான். மகன் நிஜமாகவே அரசனாகியிருப்பதைக் கண்ட அன்னையின் முதுமை நோய் விலகியது. கிழவி ராஜமாதாவாகி துள்ளி நடந்தாள்.

இந்த உல்லாசத்தில் வீரன் ஓவியனை மறந்தே போனான். ஒருநாள் வீரன் அந்தப்புரம் நோக்கிப் போய்கொண்டிருந்தபோது ஒரு பணியாள் ஓடிவந்து அவனைக் காண ஓவியன் வந்திருப்பதாகக் கூறினான். வேண்டா வெறுப்பாய் ’அவனை வரச் சொல்’ என்றவன். ’என்ன விஷயமப்பா’ என்று எரிந்துவிழுந்தான்.

’நாம் பேசிக்கொண்டபடி அந்த பத்தாயிரம் வெள்ளிகளை நீங்கள் தர வேண்டும்’ என்றான் ஓவியன்.

’எந்த பத்தாயிரம் வெள்ளி. நாம் எப்போது பேசினோம்’ என்றான் வீரன்.

’அரசே இது நம்பிக்கை துரோகம். உங்களை அரசராக்கினால் பத்தாயிரம் வெள்ளி தருவதாக முன்பு சொன்னீர்களே’ என்றான்.

வீரன் சிரித்தான். ’உனக்கு பைத்தியமா ஓவியனே. கேவலம் பத்தாயிரம் வெள்ளியை வாங்கிக்கொண்டு யாராலாவது யாரையாவது அரசனாக்க முடியுமா? ஒருவேளை உன்னால் அது முடிந்தால் நீயே அரசனாகியிருக்கலாமே’ என்று ஏளனம் பேசினான்.

ஓவியன் அரசே பரிகாசம் வேண்டாம் பேசியபடி தந்துவிடுங்கள் என குரல் உயர்த்த, ஓ அரசனையே எதிர்க்கும் அளவு துணிந்துவிட்டாயா என்று வாளில் கைவைத்தான். திடீரென ஓவியன் தன் இடுப்புப் பட்டியிலிருந்த கூலங்கல்லை எடுத்து ’வீரனே இதைப் பார்’ என அரண்மனை, மாட மாளிகை அனைத்தும் மறைந்து ஓவியனின் குடிசையில் இருவரும் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தான். கண் இமைத்துக் கண் திறந்த மறுகணம் மீண்டும் சமீதின் முன்புறம் நின்றுகொண்டிருந்தான் அந்த வீரன்.

No comments:

Post a Comment