டோக்யோவின்
தெற்குப் பக்கத்தில் உள்ள கருங்கண்கள் என்ற பொருள் வரும் பகுதியான மெகுரோவில் ஓர் அரசுக்
கட்டடம் உள்ளது. அதன் பெயர் அகினோ பாஷோ. அதாவது வசந்தத்தின் இடம். அந்தக் கட்டடத்தில்
சமீபமாய் ஒரு புதிரான விபரீதம் நிகழ்ந்துகொண்டிருப்பதாய் காவல் துறைக்குத் தகவல் வந்தது.
பணி நிமித்தமாய் அங்கு வருகின்றவர்களில் சிலர் திடீரென யாருக்கும் தெரியாமல் மாயமாகிக்கொண்டிருந்தார்கள்.
இதனை விசாரிக்க காவல் அதிகாரி ஜிசிஷா நியமிக்கப்பட்டார். டோக்கியோவின் மஞ்சள் வண்ண
சூரியன் கடுக்கத் தெரியாமல் வானில் ஏறிக்கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில் அந்தக் கட்டடத்துக்கு
விசாரணைக்குச் சென்ற அதிகாரி ஜிசிஷாவும் மாயமானார். அரசு என்ன செய்வதென தெரியாமல் கையைப்
பிசைந்துகொண்டு நின்றது. அந்தக் கட்டடம் தீயசக்திகளால் கையகப்படுத்தப்பட்டுவிட்டது
என்ற புரளி பரவியது. ஊழியர்கள் அங்கு பணியாற்றவே அஞ்சினார்கள். மறுபுறம் காணாமல் போகிறவர்கள்
எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது. நாளைடவில் முணுமுணுப்புகள் ஒத்துழையாமை போராட்டங்களாக
மாறவே அரசு அந்தக் கட்டடத்தை உடனடியாக மூடியது. அங்கிருந்த பொருட்கள் அப்படியே கைவிடப்பட்டன.
இப்படியாக சில வருடங்கள் கழிந்தன. காவல் அதிகாரி ஜிசிஷாவின் மகன் தன் தந்தையின் மாயாத்துக்குப்
பின்னுள்ள புதிரை அறிய அங்கு வந்தான். கட்டடத்தின் ஒவ்வொரு மாடியாக அலசினான். ஒவ்வொரு
அறையாகத் தேடினான். அவனுக்குக் கிடைத்ததெல்லாம் சில சுருட்டுகள் மட்டும்தான். அது அவன் அப்பாவினுடையது.
அவர் மெக்சிக சுருட்டுப் பிரியர். அதை ஒரு தடயமாகக்கொண்டு அவன் தேடியதில் ஒரு விஷயத்தைக்
கண்டுபிடித்தான். அந்த சுருட்டுகள் நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது மாடிகளில் மட்டுமே
கிடந்தன. அப்படியானால் மாயமான அன்று அவன் தந்தை அந்த தளங்களில் மட்டுமே புழங்கியிருக்க
வேண்டும். இதைக் கொண்டு, இந்த நான்காவது மாடிக்கும் ஏழாவது மாடிக்கும் இடையில்தான்
அவன் தந்தை மாயமாகியிருக்க வேண்டும் என்பதைக் கணித்தான். அந்த கணிப்பு மற்றவர்களுக்கு
மட்டுமல்ல அவனுக்கே விநோதமாகவும் அபத்தமாகவும் இருந்தது. எப்படி ஒரு மனிதன் நான்காவது
மாடிக்கும் ஏழாவது மாடிக்கும் இடையில் காணாமல் போக இயலும் என்ற கேள்வி குடைந்தது. மறுபுறம்,
இன்னொரு உண்மையைக் கண்டுபிடித்தான் அந்தக் கட்டடத்தில் மாயமான ஒவ்வொருவரும் ஒவ்வொரு
தளத்தில் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் எல்லோருமுமே நான்கு முதல் ஏழுக்குள்தான்
மாயமாகியிருக்கிறார்கள். நாலு முதல் ஏழு வரை மொத்தம் நான்கு தளங்கள். காணாமல் போனவர்களுக்கு
இடையே இருந்த இந்த ஒற்றுமை அவனை திகைப்படைய வைத்தது. இதில்தான் எதுவோ இருக்கிறதென கருதினான்.
மற்ற தளங்களைப் போலவே இந்த எல்லா தளங்களுமே ஒரே மாதிரியான அறைகளாலும் கட்டட அமைப்புகளாலும்
ஆனதாக இருந்தது. ஒரே மாதிரியான தரை அறைகலன்கள், ஒரே மாதிரியான வடிவமைப்புகள், ஒரே மாதிரியான
வண்ணம், ஒரே மாதிரியான மணம். அந்த வகையில் அவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
எல்லாமும் ஒன்று போலவே இருப்பவற்றில் வித்தியாசங்களைத் தேடுவதன் வழியே உண்மையை நோக்கி
நகர்வது ஒரு வழிமுறை எனில் எல்லாமும் ஒன்றுபோலவே இருப்பவற்றில் எதெல்லாம் ஒன்று போல
இருக்கின்றன எனப் பட்டியலிட்டு ஆராய்வதில் உண்மையை நோக்கி நகர்வது இன்னொரு வகை. அது
கொஞ்சம் கடினமான பாதை என்றாலும் அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. அந்தப் பாதையையே தேர்ந்தெடுத்தான்.
அந்த தளங்களில் எதுவெல்லாம் ஒன்று போலவே இருக்கிறதென நெடும்பட்டியல் ஒன்றையிட்டான்.
அதில் ஒவ்வொன்றாய் ஆராய்ந்துகொண்டு வந்தான். இப்படி நுணுக்கி நுணுக்கி பார்த்துக்கொண்டே
வந்ததில், எல்லா தளங்களிலும் உள்ள தெற்குப் பக்க அறைகளின் ஜன்னலோரம் ஒரு போன்சாய் மரம்
இருப்பதைக் கவனித்தான். ஒரே மாதிரியான சுவர் ஓவியங்களும் ஒரே மாதிரியான ஜன்னல் திரைகளும்
ஒரே மாதிரியான தரை விரிப்புகளும் ஒரே மாதிரியான சுவர்க் கடிக்காரங்களும் இன்னும் பல
ஒரே மாதிரியானவைகளும் நிறைந்திருக்கும் ஓர் இடத்தில் இப்படி ஒரே மாதிரியான போன்சாய்கள்
இருப்பதில் என்ன ஆச்சர்யம் என்றே முதலில் நினைத்தான். ஆனால், அவற்றைப் பற்றி விசாரித்தபோது
ஒரு சுவாரஸ்யம் பிடிபட்டது. அவை அனைத்தும் ஒரே மரத்தின் விதையால் ஆனவை. அதாவது எல்லா
மாடிகளிலும் அந்த இடத்தில் ஒரு போன்சாய் இருந்தாலும், அந்த நான்கு மாடிகளின் போன்சாய்
மட்டும் ஒரே மரத்தின் விதைகளால் ஆனவை. அம்மரத்தின் பெயர் கீ தெத்தோ. ஜப்பானியக் காட்டில்
ஆயிரம் வருடப் பழைய மரம் ஒன்றிருந்தது. அதுதான் கீ தெத்தோ எனும் மரணத்தின் மரம். பல்லாயிரம் ஆண்டுகளாய் கிளைவிரித்திருந்த அம்மரத்தில், திடீரென
வசந்த காலத்தில் அங்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் காரணமேயில்லாமல் சுருக்கிட்டு
தொங்கிக்கொள்ளத் தொடங்கினார்கள். இதை அறிந்த அரசர் அம்மரத்தை வெட்டி, தீயிட்டு அழித்தார்.
இது நடந்தது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு. ஆனால், அதனை அவர் அழிக்கும் முன்பு அதிலிருந்து
ஒருவிதையை எடுத்து போன்சாய் செய்துகொண்டார். மரத்தை அழித்தால் தன் வம்சம் அழியும்
என்ற அச்சத்தில், அதனை முழுமையாக அழிக்காமல் அதன் சந்ததிகள் தழைக்கட்டுமென அதிலிருந்து
ஒரு போன்சாய் செய்தார். அப்படிச் செய்த போன்சாயை யாரும் நெருங்கவியலா ஓர் இடத்தில்
தன் மாளிகையில் வைத்திருந்தார். இதற்குப் பிறகு சில நாட்களில் அரசர் மாயமானார். அந்த
போன்சாய்தான் அவரைப் பலிவாங்கியது என்று மக்கள் கருதினார்கள். அவரை ஜிசிஷா எனும் பலியானவர்
என்ற பெயரிலேயே அழைத்தார்கள். மன்னர் போய்
மாளிகையும் போன பிறகும் அந்த போன்சாய் பரம்பரை தொடர்ந்தது. அந்த மரத்தின் விதையிலிருந்து
இன்னொரு போன்சாயை உருவாக்கி அதனை மெகுரோவில் உள்ள பண்டைய முசாசினோ சமவெளியின் எச்சமான
இயற்கைப் பூங்காவில் வைத்திருந்தார்கள். அந்த போன்சாயிலிருந்து உருவான நான்கு போன்சாய்கள்தான்
இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன. அதில்தான்
தன்னுடைய தந்தை ஜிசிஷாவும் மறைந்திருக்கிறார் எனக் கண்டுகொண்டார் அவர் மகன். வான் தொடும்
தினவோடு அகலக் கிளைபரப்பி வெளியைப் பருகி நிற்கும் ஒரு பெருமரம் போன்சாயாகிவிட்டதால்,
அந்த போன்சாயை மீண்டும் நெடுமரமாக்கும் வழியில் திரும்பச் சென்றால் மட்டுமே தன் தந்தையை
அழைத்து வர முடியும் என அறிந்துகொண்டான் அதிகாரி ஜிசிஷாவின் மகன். அதற்கு நெடுமர காலத்துக்குள் நுழைய வேண்டும்
என அதற்கான வழியைத் தேடத் தொடங்கினான்.
😍
ReplyDelete👌
ReplyDelete