Sunday, May 1, 2022

அமைதிக் கடல் - நுண்கதை

 


அ.கரை


ரசூல் ஓட்டமும் நடையுமாய் மூச்சிரைக்க குஞ்சலி மரக்காயரின் கொட்டார நெடுவாயிலை அடைந்தபோது வானில் விடிவெள்ளி தோன்றியிருந்தது. செழுஞாயிற்றின் மென் வெளிச்சமும் புலரிப் பறவைகளின் விதவிதமான ஒலிகளும் அக்கடற்கரை நகரெங்கும் நிறைந்திருந்தன.


தலைமை வாயிற்காப்போன் பீலி சையது  அரை உறக்கத்தில் வந்து நின்று என்னவென்று கேட்டான். ரசூல் விஷயத்தை மரக்காயரிடம் மட்டுமே சொல்ல முடியும் என்றான். எரிச்சலில் சையது ஏதோ சொல்ல வாயெடுக்கவும் மாடத்திலிருந்து அபுதாகீர் கிழவனின் செருமல் கேட்கவே அமைதியானான்.


ரசூல் கிழவனை பணிந்து வணங்கினான். யாரது என்று அதட்டலாய் கேட்டான் கிழவன் அபுதாகீர். நான்தான் வாப்பா ரசூல். மம்மது பூவின் கடைசி புத்திரன் என்றான். அவ்வளவு இருளிலும் கிழவனின் முகம் மலர்வது தெரிந்தது. என்ன இருந்தாலும் பால்ய நண்பனின் மகன் அல்லவா. என் குட்டி மம்மதுவே! ரசூலே, இவ்வளவு காலையில் நீ ஏன் மிரண்ட யானைக்கன்று போல் பதட்டமாய் இருக்கிறாய் என்றான். வலிய குஞ்ஞாலியிடம் சொல்ல ஓர் அவசர தாக்கீது உண்டு வாப்பா. மரக்காயர் உண்டோ என்றான். வலிய குஞ்ஞாலி மரக்காயர் நேற்றுதான் பொன்னானி திரிகோவிலகத்தில் உள்ள மகாராஜா புன்னாலகோனைப் பார்க்கப் போனாரப்பா. மரக்காயர் குட்டிப் பொக்கர் உண்டு. அவரிடம் சொல்கிறாயா என்றார். அவன் ஓ சொல்கிறேன் எனவே அவனை இளைய மரக்காயரிடம் அழைத்துச் சென்றார்கள்.
ஆ.கடல்


அமைதிக் கடல் இதுதான் பழைய பெயர். ஆனால் இதன் அமைதி தொலைந்து வெகுநாட்களாயிற்று என்பார் ரசூலின் வாப்பா மம்மது மரக்காயர். சமுத்திரி மகாராஜாவிடம் கடற்பரிபாலனம் செய்யும் உரிமை பெற்ற குஞ்ஞலி மரக்காயர்களின் நம்பிக்கைக்குரிய தளபதி அவர். கடலை அடைந்தபோது நன்றாக விடிந்திருந்தது. பெரிய கலங்கள் நான்கில் வீரர்களை நிரப்பிக்கொண்டு ரசூலுடன் கடலுக்குச் சென்றார் மம்மது. மோனே ரசூல் எங்க பார்த்த அந்த மிலேச்சர்கள் கலங்களை? என்றார். கப்பக்கடவிலிருந்து இரண்டு லீக் தொலவில்  வாப்பா. நடுக்கடலில் நங்கூரமிட்டுள்ளார்கள். கொஞ்ச தூரம் சென்றபோதே வித்தியாசமான இரண்டு கலங்கள் நடுக்கடலில் நிற்பதைப் பார்த்தார்கள். எல்லா திசைகள் நோக்கியும் விதவிதமான அளவுகளில் பெரிதும் சிறிதுமான பாய்மரங்களோடு நீள்வட்ட பெரிய கலங்கள் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. பாய்மரக் கித்தானிலும் உயரப் பறந்த கொடியிலும் வித்தியாசமான கோடுகள் வரையப்பட்டிருந்தன. எந்த சைத்தானின் கலங்கள் இவை அல்லாவே என்று மம்மதுவின் குரல் அனிச்சையாக முணுமுணுத்தன. கலங்களின் அருகே போய் ரசூல் சத்தமாகக் குரல் கொடுத்தான். தாவி அந்தக் கலத்துக்குள் குதித்து உள்ளே நுழைந்து கத்தினான். நெடுநெடுவென உயரமாய் நீலக் கண்களும் செம்பட்டை முடியுமாய் ஒருவன் வந்து ஏதோ சொன்னான். அவன் உதடுகள் கீறல் விழுந்த பாக்குக்கொட்டை போல் இருந்தன. ரசூல் மலையாளம் மலையாளம் தெரியுமா என்றான். அவன் வடக்கு இத்தாலியின் ஜெனோவா மொழி ஒன்றில் பேசினான். என்ன சொல்கிறான் அந்த மிலேச்சன் என்றான் மம்மது பொறுமையில்லாமல். ஏதோ மூர்களின் பாஷையில் பேசுகிறான். இவனை அந்த நெட்டையன் ரபீக்கிடம்தான் கூட்டிச் செல்ல வேண்டும் என்றான். பிறகு தனக்குத் தெரிந்த டுனீஹீயில் எங்களுடன் வருகிறாயா? யார் உங்கள் தலைவன் என்றான். அவன் காப்டன் மேஜர், காப்டன் மேஜர் என்றான். உள்ளேயிருந்து நீண்ட அழுக்கான தாடியும் தேக்கு வண்ண கால்சராயும் முட்டிங்கால் உயரத்துக்கு சப்பாத்துகளும் கடினமான ஆட்டுத்தோல் மேலங்கியும் அணிந்த வெளிறிய மனிதன் ஒருவன் வந்தான். அவன் முகமெங்கும் செம்புள்ளிகள். செயற்கையான புன்னகையுடன் ரசூலிடம் ஏதோ சொன்னான். பக்கத்திலிருந்தவன் மொழிபெயர்த்தான். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. அரசரை சந்திக்க முடியுமா? இவன் உடைந்த அந்நிய மொழியில் முதலில் மரக்காயரைப் பார்க்கலாம் வா என்றான். பதிலுக்கு அந்த மனிதன் நான் வர இயலாது வேண்டுமானால் என் தூதுவனை அழைத்துப்போ என்று இன்னொருவனைக் கை காட்டினான். ரசூல் விஷயத்தை மம்மதுவிடம் சொன்னான். சரி வரச் சொல் பார்த்துக்கொள்ளலாம் என்றான். தூதுவன் அவன் தலைவனை வணங்கிவிட்டு இவர்களுடன் கிளம்பத் தயாரானான்.அந்த தாடி வைத்த மனிதன் மீண்டும் கலத்தின் அடிப்புறம் நுழைய முற்பட்டபோது ரசூல் கேட்டான். காப்டன் மேஜர் இதுதான் உங்கள் பெயரா? அந்த தாடிக்காரன் இல்லை என்று தலை அசைத்துவிட்டு,  டா காமா... வாஸ்கோ டா காமா என்றான்.
No comments:

Post a Comment