தெகார்தே (Descartes)
நானே இப்பூமியின் ஒரே மனிதன், ஆனால் ஒருவேளை இங்கு பூமியோ மனிதனோ இல்லாமலும் இருக்கலாம்.
ஒருவேளை ஒரு கடவுள் என்னை ஏமாற்றக்கூடும்.
ஒருவேளை ஒரு கடவுள் எனக்கு தண்டனை அளித்திருக்கக்கூடும் காலம் எனும் இந்த தீரா மாயைக்கு.
நான் கனவு கண்டேன் நிலவை. நான் கனவு கண்டேன் என் கண்கள் நிலாவைக் காண்பதை.
நான் கனவு கண்டேன் முதல் நாளின் காலையையும் மாலையையும்.
நான் கனவு கண்டேன் கார்தேஜ் நகரத்தை மற்றும்
அந்நகருக்காக வீணடிக்கப்பட்ட படையணியை.
நான் கனவு கண்டேன் கவி லூக்கனை
நான் கனவு கண்டேன் கொல்கதா மலைகளையும் ரோமானிய சிலுவைகளையும்.
நான் கனவு கண்டேன் வடிவியலை.
நான் கனவு கண்டேன் புள்ளி, சமதளம் மற்றும் அடர்த்தியை.
நான் கனவு கண்டேன் மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பை.
நான் கனவு கண்டேன் என் நோய்மையுற்ற பால்யத்தை.
நான் கனவுகண்டேன் வரைபடங்களையும் பேரரசுகளையும் மற்றும் அவற்றின் துயரத்தின் விடியலையும்.
நான் கனவு கண்டேன் தாங்கவொண்ணா துயரங்களை.
நான் கனவு கண்டேன் என் வாளை
நான் கனவு கண்டேன் போமியாவின் எலிசபெத்தை.
நான் கனவு கண்டேன் சந்தேகங்களையும் நிச்சயங்களையும்.
நான் கனவு கண்டேன் நேற்றின் மொத்தத்தையும்
ஒருவேளை நேற்று என்பதே இல்லாமல் இருக்கலாம், ஒருவேளை நான் பிறக்காமலே இருக்கலாம்,
ஒருவேளை நான் கனவு காண்பதாய் கனவு கண்டுகொண்டிருக்கலாம்.
நான் உணர்கிறேன் குளிரின் கூர்வலியை, அச்சத்தின் கூர்வலியை.
டான்யூப் நதியின் மேல் இரவு இப்போது
நான் தெகார்த்தேவின் இக்கனவைத் தொடர்வேன் மற்றும் அவரின் தந்தையர் மீதான கீழ்படிதலையும்.
பின்குறிப்பு:
போர்கெஸின் இக்கவிதை அவரின் புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்று. தெகார்த்தே 17ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஃப்ரெஞ்ச் தத்துவவாதி. நவீனத்துவம் முன்வைத்த நிருபணவாத மரபின் தொடக்கம் என்று தெகார்த்தேவைச் சொல்வார்கள். கார்டீசிய ஆய்வு முறை எனும் அதன் முறைமைகளை உருவாக்கிய பொருள்முதல்வாதி. மதவியல் சிந்தனைகளிலிருந்து தனிமனித வாதம் நோக்கி ஐரோப்பா திரும்பியதில் தெகார்தேவின் பங்கு முக்கியமானது. நவீன மனிதனின் மனித மைய சிந்தனை தெகார்த்தேவின் பங்களிப்பே. ’Cogito, ergo sum ( I think, therefore I am) சிந்திப்பதால் நான் இருக்கிறேன்’ என்ற புகழ் பெற்ற வரி தெகார்த்தே சொன்னதுதான். போர்கெஸின் இக்கவிதை அந்த மனித மைய வாதத்திலிருந்து பேசுகிறது. மதத்திலிருந்து வெளியேறி தன்னை ஒரு தனித்த பிரபஞ்ச இருப்பாய், இயற்கையின் படைப்பாய் கண்டுணர்ந்த மனதின் குரல் இக்கவிதையில் ஒலிக்கிறது.
----
கனவுப் புலிகள்
நான் குழந்தையாய் இருந்தபோது, புலிகளை மிகுந்த ஈடுபாட்டோடு வழிபட்டேன்: பரனா ஆற்றிலோ அமேசானின் புதிர்மைகளிலோ வசிக்கும் மஞ்சள் புலிகளை அல்ல. ஆனால் வரிப்புலிகளை ஆசியாவின் உயர்ரகப் புலிகளை, அவற்றை யானையின் முதுகில் உள்ள அம்பாரிகளின் மேல் அமர்ந்திருக்கும் ஆயுததாரிகளால் மட்டுமே வேட்டையாட இயலும். நான் வனவிலங்கு சரணாயலயங்களின் கூண்டுகள் முன் முடிவற்று அமர்ந்து பெரிய கலைக்களஞ்சியங்கள் மற்றும் இயற்கை வரலாறு பற்றிய புத்தகங்களை அவற்றின் புலிகளின் கம்பீரத்துக்காக வியப்பேன். (என்னால் அந்த விவரணைகளை இப்போதும் தெளிவாக நினைவுகூர முடிகிறது-ஒரு பெண்ணின் முகம் அல்லது சிரிப்பை நினைவுகூர்வதில்கூட சிரமம் உடையவன்) என் பால்யம் கழிந்தது. புலிகளின் மீதான என் ஆர்வமும் வற்றியது. ஆனால் அவை கனவில் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. சுயநினைவற்ற மற்றும் குழப்பமான மனநிலைகளில் அவற்றின் இருப்பு பின் வருமாறு இருக்கும்: நான் உறங்கிக்கொண்டிருப்பேன் ஒரு கனவோ அல்லது வேறு எதுவோ தொந்தரவு செய்த கணம் உணர்வேன் நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். அந்நேரங்களில் எனக்கு நானே நினைத்துக்கொள்வேன்: இது ஒரு கனவு, என் விழைவுகளின் நிகழ்வு; என் சக்திகள் எல்லைக்குட்பட்டவை, நான் ஒரு புலியை கனவு காணப்போகிறேன்.
முழுமையான கையாலாகத்தனம்! என் கனவால் நான் ஆசைப்பட்ட உயிரினத்தை உருப்பெறச் செய்ய இயலவில்லை. ஒரு புலி தோன்றும், நிச்சயமாக, ஆனால் ஒரு பலவீனமான புலி, பொம்மைப் புலி, தோற்ற ஒழுங்கற்று அல்லது தவறான வடிவிலோ அல்லது சொற்ப நேரமே தோன்றுவதாகவோ அல்லது காட்சிக்கு ஒரு நாய் அல்லது ஒரு பறவை போல இருப்பதாகத் தோன்றும்.
பின் குறிப்பு:
போர்கெஸின் இக்கவிதை உரைநடைக்கும் கவிதைக்குமான இடைவெளிகளை அழிக்க முயலும் ஒரு கலை எத்தனம். கலை வடிவங்கள் பற்றி போர்கெஸுக்கு தீர்மானமான மனநிலைகள் இருந்ததில்லை. அதனால்தான் கட்டுரை வடிவிலான சிறுகதைகள், நூல் மதிப்புரை வடிவிலான சிறுகதைகள், சுயவரலாறு போன்ற சிறு கதைகள், சிறுகதைகளில் சுயவரலாறு, உரைநடைக் கவிதைகள், கவித்துவமான நடை கொண்ட உரைநடைகள் எனப் பலவாறு எழுதிக் குவித்தார். போர்கெஸுக்கு புலிகள் மீதான பிரேமை என்பது அசாதாரணமானது. அவற்றை தன் ஆன்மாவின் ஸ்தூல வடிவம் என்றே நம்பினார். தனது அகங்காரத்தின், தான் என்ற சுயத்தின் கர்ஜனை புலியின் குரலை உடையது என்று கருதினார். புலிகள் பற்றி குறிப்பாய் ஆசிய (இந்திய) புலிகள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆட்டோ பயோகிராபி தன்மை கொண்ட இக்கவிதையில் புலிகள் மீதான தன் பால்ய கால நினைவுகள் பற்றிச் சொல்கிறார். இக்கவிதையை உளவியல்ரீதியாகக் கட்டுடைப்பு செய்பவர்களுக்கு இதில் போர்கெஸின் பெண் மற்றும் காமம் தொடர்பான மனநிலைகள் பதிவாவதை உணரலாம். ஐரோப்பிய மனத்துக்கு புலி மற்றும் பூனை இரண்டுமே அவர்களின் பெண் பற்றிய கற்பிதங்களோடு தொடர்புடைய குறியீடுகள் என்று சொல்வார்கள். புகழ் பெற்ற ’புலியா பெண்ணா’ என்ற ஐரோப்பிய குட்டிக்கதையை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.
--
போர்ஹெஸும் நானும்
இன்னொரு போர்ஹெஸை நான் சந்திக்க நேர்ந்தது. புயனஸ்அயர்ஸில் சுற்றிக்கொண்டிருந்தேன். ஏதோ நினைவில் நின்றிருந்தேன். அந்நாட்களில், நுழைவாயிலின் தோரண வளைவையும் அதன் உலோகக் கதவுகளையும் ஆய்ந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் போர்கெஸைப் பார்த்தேன் எழுத்துகளில், பேராசிரியர்களின் பட்டியல்களில் மற்றும் சுயவரலாற்றுப் பதிவேடுகளில். எனக்குப் பிடிக்கும் காலக் குடுவைகளை, வரைபடங்களை, பதினெட்டாம் நூற்றாண்டின் அச்சுக்கட்டைகளை, காபியின் சுவையை, ஸ்டீவென்சனின் உரைநடையை. அவனுக்கும் அதெல்லாம் பிடித்திருந்தன. ஆனால் அவனின் வெற்றுப் பெருமிதம் அவற்றை நாடகீயப் பொருட்களாக மாற்றுகின்றன. சொல்லப்போனால் எங்கள் உறவு விரோதமானதாக, மிகைப்படுத்தப்பட்டதாகக்கூடும்: நான் இருக்கிறேன். இருப்பேன், அதனால்தான் போர்கெஸால் அவனது இலக்கியங்களைப் படைக்க முடியும். மேலும் இந்த இலக்கியம்தான் எனக்கான நியாயப்படுத்துதல். நான் உடனடியாக ஒப்புக்கொள்கிறேன் அவனின் சில பக்கங்கள் பிரயோஜனமானவைதான். ஆனால் இந்தப் பக்கங்கள் எனக்கான தீர்வுகள் அல்ல. ஒருவேளை நல்ல எழுத்து குறிப்பிட்ட யார் ஒருவருக்குமே உரியதானது அன்று. அவனுக்குமேகூட. மற்றபடி, நான் முழுமையாக மறைந்துபோக விதிக்கப்பட்டிருக்கிறேன் மற்றும் என்னில் மிகச் சிறிய பகுதி ஒன்று மட்டுமே அவனில் வாழ முடியும். நான் அவனுக்குக் கையளித்துக்கொண்டிருக்கிறேன் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக, அவனின் விலகலையும் ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக உணர்ந்தபடி. ஸ்பினோஸாவுக்குத் தெரியும் எல்லா பொருட்களுமே விரும்புகின்றன, தன் இருப்பில் தன்னை சகித்துக்கொள்ள. கற்கள் விரும்புகின்றன கற்களாக இருக்க, புலிகள் புலிகளாக, அனைத்து நிரந்தரங்களுக்கும் அப்படியே. நான் என்னில் இருப்பதைவிடவும் போர்கெஸில்தான் இருக்க வேண்டும். (ஒருவேளை நான் என் ஒரு சுயமாய் இருந்தால்) நான் மற்றவற்றைவிடவும் அவன் புத்தகங்களில் குறைவாகவே என்னை உணர்கிறேன். ஒரு கிடாரின் கம்பியதிர்வில் உணர்வதைவிடவும் குறைவாக, சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அவனை நீங்க முயன்றேன்: புறநகரின் தொன்மங்களுடன் விளையாடச் சென்றேன் காலம் மற்றும் முடிவின்மையோடு. ஆனால், அவை இப்போது போர்கெஸின் விளையாட்டுகளாகவிட்டன-நான் வேறு எதையாவது சிந்தித்தாக வேண்டும். இப்படியாக என் வாழ்க்கை தப்பித்தல் என்றானது. நான் தோற்றுவிடுவேன் அனைத்தையும், பிறகு அனைத்துமே அறிதலின்மைக்கோ அவனுக்கோ சொந்தமாகும்.
எனக்குத் தெரியாது இருவரில் இதை எழுதியது யாரென.
-----
இரங்கற்பா
ஓ போர்ஹெஸின் விதி--
உலகின் பல்வேறு கடல்களுக்கும் செல்வது
அல்லது பல்வேறு பெயர்கள் கொண்ட அதே தனிமைக் கடலுக்கு,
எடின்பர்க், ஜூரிக், இரண்டு கோர்டோபாக்கள், கொலம்பியா மற்றும் டெக்சாஸின் பகுதியாய் இருப்பது,
தலைமுறைக்களுக்கும் பின்னால் பயணிப்பது,
முன்னோர்களின் பழம் நிலங்களுக்கு,
அந்தலூசியாவுக்கு, போர்ச்சுகல்லுக்கு, அந்த பழம் ஊர்ப்புறங்களுக்கு,
எங்கு சாக்ஸன்கள் டேன் பழங்குடிகளுடன் போரிட்டார்களோ அங்கு செல்வது, ரத்தக் கலப்புகளுக்கு,
சிவந்ததும் அமைதியானதுமான லண்டனின் புதிர்ப்பாதைகளில் அலைந்து திரிவது,
பற்பல கண்ணாடிகளில் முதுமையாய் வளர்வது,
சிலைகளின் மார்பிள் கண்களைப் பிடிக்க முயன்று தோற்பது,
லித்தோகிராப், கலைக்களஞ்சியங்கள், உலக வரைபடங்களைக் கற்பது,
அனைத்து மனிதர்களும் சாட்சியாய் இருக்கும் விஷயங்களுக்கு தானும் சாட்சியாய் இருப்பது--
மரணம், விடியலின் பாரம், முடிவற்ற வலி
மற்றும் நட்சத்திரங்களின் சிக்கல்கள்,
மற்றும் ஏதுமின்மையைப் பார்ப்பது அல்லது பெரும்பாலும் ஏதுமின்மையை,
மேலும், புயனெஸ் அயர்ஸின் ஓர் இளம்பெண்ணின் முகத்தைப் பார்ப்பது,
நினைத்துக்கொள்ள கோராத ஒரு முகம்.
ஓ போர்ஹெஸின் விதி, ஒருவேளை உங்களுடையதைவிடவும் அந்நியமானதல்ல.
----
தற்கணம்
நூற்றாண்டுகள் எங்கே, தர்தார்களை மகிழ்வித்த வாட் கலவரங்களின் கனவுகள் எங்கே
தரைமட்டமாக்கப்பட்ட பெரும் மதிற்சுவர்கள் எங்கே?
சிலுவை மரக்கட்டைகள் எங்கே? ஆதாமின் மரம்?
நிகழ்காலம் ஒற்றையானது. நினைவுதான்
காலத்தை உருவாக்குகிறது. வெற்றியும் சரிவும்
கடிகாரத்தின் சுழற்சியில் வருகின்றன. ஒரு வருட
வீணடிப்பு வரலாற்றின் வீணடிப்புக்குக் குறைந்ததல்ல.
விடியலுக்கும் இரவுக்கும் இடையே துயரங்களின் பள்ளங்கள்
மகிழ்ச்சிகள் மற்றும் அக்கறைகள்.
வீணடிக்கப்பட்ட கண்ணாடிகளில், அந்த இரவின் கண்ணாடிகளில் திரும்பிப் பார்க்கும் முகங்கள்
அதே முகங்கள் அல்ல
நழுவிச் செல்லும் நாள் அற்பமானது ஆனால் நித்தியமானது
வேறு சொர்கத்தையோ வேறு நரகத்தையோ எதிர்பார்க்காதீர்கள்
---
ஒரு ரோஜாவும் மில்டனும்
ரோஜாக்களின் அத்தனைக் கடந்த காலத் தலைமுறைகளிலிருந்தும்,
காலத்தின் ஆழத்தில் உதிர்ந்தவற்றிலிருந்து
ஒன்றை மட்டும் மறதியிலிருந்து மீட்க நினைக்கிறேன்
அத்தனைகளுக்குமிடையே எந்த விதிவிலக்குற்ற ஒன்றை மட்டும்,
அவை ஒருபோதிருந்தன. விதி என்னை அனுமதிக்கிறது
முதல் முறையாக அதைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்னுரிமைக்கு,
அந்த அமைதியான, மிகக் கடைசியான மலர்
மில்டன் தன் முகத்துக்கு நேரே பிடித்திருந்தது
ஆனால் அவரால் பார்க்க முடியாதது
ஓ ரோஜாவே குங்குமச் சிவப்பு அல்லது மஞ்சள்
அல்லது வெள்ளையே, அழிந்தபோன தோட்டத்தினதே
உன் கடந்த காலம் மாயமாய் இக் கவிதையில் இருக்கிறது
எப்போதும் மினுமினுப்பாய்
தங்க அல்லது ரத்த வண்ணம், தந்த அல்லது நிழல் வண்ணம்
ஒரு முறை மில்டனின் கைகளில் இருந்த அதே
புலனாகா ரோஜா
பின் குறிப்பு:
போர்ஹெஸ் மில்டனைப் போலவே நடு வாழ்வில் பார்க்கும் திறனை இழந்தவர். இக்கவிதையில் தன்னை மில்டனோடு ஒப்பிடுகிறார். விதியின் கொடுங்கரங்கள் தன்னை அதற்குத் தேர்ந்தெடுத்தன என்கிறார். மில்டன் பார்த்த அதே புலனாகா ரோஜாவை தான் மட்டுமே பார்த்தேன் என்ற வரிகளின் வழியாக ரூபத்திலிருந்து அரூபத்துக்கு நகரும் கவிதை, அரூபத்தில் யாவும் ஒன்றே, தோற்றம் போலவே தோற்றமின்மையும் ஓர் இருப்பே எனும் தத்துவார்த்த பண்புகளை அடைகிறது. இந்தியவியலில் வைசேஷிகம் (விசேஷ வாதம்) என்று ஒரு தரிசனம் உண்டு. பொருட்களின் இருப்பு மற்றும் இருப்பின்மை பற்றிய அந்தப் பொருள் முதல்வாத தரிசனமே பூஜ்யம் என்ற எண்ணை கணிதத்துக்குக் கொடுத்தது. சந்திரசேகர் ஒருமுறை கருந்துளை பற்றிய கருதுகோளை வைசேஷிக சிந்தனைகளிலிருந்தே தான் பெற்றேன் என்று சொல்லியிருக்கிறார். போர்ஹெஸின் இக்கவிதையும் இருப்பிலிருந்து இருப்பின்மைக்கும் இருப்பின்மை வழியான இருப்புக்கும் ஊடாடுவதைப் பார்க்கலாம்.
--
கவிதைக் கலை
காலம் மற்றும் நீரினாலான நதியைப் பார்ப்பது
மற்றும் காலம் இன்னொரு நதியென நினைவில்கொள்வது
நாம் நதிபோல் தொலைந்தோமென அறிவது
மற்றும் முகங்கள் நீராய் கரைவதையும்.
விழிப்புநிலைக் கனவுகள் அது தூக்கம்மல்ல என்றுணர்வது
அது வேறொரு கனவு மேலும் அம் மரணத்தில்
நம் தசை பயந்து போவது அதுவும் மரணம்தான்
அது ஒவ்வோர் இரவும் வருவது அதை தூக்கம் என்போம்
மனிதன் மற்றும் அவன் நாட்களை
நாளாக அல்லது வருடமாகப் பார்ப்பது
ஆண்டுகளின் வெறியை இசையாய் மாற்றுவது, குரல்களின் ஒரு முணுமுணுப்பாய் மற்றும் குறியீடாக்குவது
மரணத்தில் தூக்கத்தைப் பார்ப்பது மற்றும் அஸ்தமனத்தில் ஒரு துயரத்தின் பொன்னை - அதுவே கவிதை,
அது அழிவற்றது, வறியது. கவிதை
திரும்புகிறது உதயமாக மற்றும் அஸ்தமனமாக.
சில சமயங்களில் மாலைகளில் ஒரு முகம்
கண்ணாடியின் ஆழங்களிலிருந்து பார்க்கும்
கலை அந்தக் கண்ணாடி போல் இருக்க வேண்டும்
அது நம் சுயமுகத்தை நமக்குக் காட்டுவதாக
அவர்கள் சொல்கிறார்கள் யூலிசிஸ் தன் அற்புதங்களில் சலித்து
அன்பில் அழுதான் தன் இதாகா நகரைக் கண்டதும் என்று
பசும் நித்தியத்துவம் அற்புதங்களால் ஆனதல்ல
அது முடிவற்ற நதி போலவும் உள்ளது
நிறைந்தோடுகிறது மற்றும் எஞ்சுகிறது மேலும் மாறிக்கொண்டேயிருந்த
ஹெராக்லிட்டஸின் அந்த நதியினது கண்ணாடி போலவும்
இது அதேதான் மற்றும் வேறொன்று
ஒரு நதி முடிவற்றிருப்பது போல
---
Jorge Luis Borges Selected Poems
Edited by: Alexander Coleman, Penguin Books
தமிழில்: இளங்கோ கிருஷ்ணன்
No comments:
Post a Comment