Friday, April 29, 2022

பாரதிதாசம் - தமிழ் வரைவியலின் நவீன முகம்!
இன்று பாரதிதாசன் பிறந்த நாள். இரண்டாயிரம் வருட தமிழ் நெடு மரபில் கடைசி மாபெரும் மரபுக் கவிஞன் அவர்தான் என்று சொல்வேன். 

பாரதிக்குப் பிறகு ஆற்றல் மிக்க கவிஞராகவும் தனி மனித இயக்கமாகவும் உருப்பெற்ற ஆளுமை என்றால் அது பாரதிதாசன்தான். பாரதி முதல் புதுமைப்பித்தன் வரை பல முன்னோடிகளின் அபிமானத்தைப் பெற்றவர். பு.பி பொதுவாக கவிஞர்களை மதிக்கமாட்டார் என்பார்கள். ஆனால், அவர் பாரதிதிக்குப் பிறகு பாரதிதாசன் மீதே பெரும் மதிப்புகொண்டிருந்தார்.

பாரதிதாசன் ஒருவரே கவிஞனுக்குரிய எல்லா அந்தஸ்துகளையும் அடைந்த தமிழ் ஆளுமை. அதற்கேற்ற தகைமையும் அவருக்கு இருந்தது. பாரதிக்கே அமையாத மாபபெரும் மாணவப் பட்டாளம் பாரதிதாசனுக்கு அமைந்தது. பின்னாட்களில் அவர்களில் பலர் புகழ்பெற்ற ஆளுமைகளாயினர்.

குயில், பொன்னி இதழ்களில் பாரதிதாசன் பரம்பரை என சுமார் முந்நூறு கவிஞர்கள் இணைந்திருந்தனர். இதில், சுரதா, கோவேந்தன், வேழ வேந்தன், முடியரசன், வாணிதாசன், பெருஞ்சித்திரனார், லெனின் தங்கப்பா, ஈரோடு தமிழன்பன், மதியரசன், சாரண பாஸ்கரன்,  கோவை இளஞ்சேரன், வா.செ.குழந்தைசாமி, செரீப், சிற்பி பாலசுப்பிரமணியன், காசி ஆனந்தன், நாரண துரைக்கண்ணன், முருகு சுந்தரம், அழ.வள்ளியப்பா, பொன்னடியான், சாலை இளந்திரையன் போன்றோரே முக்கிய மாணாக்கர் என இயலும். மேலும்  கண்ணதாசனும் கம்பதாசனும்கூட பாரதிதாசன் பரம்பரை என்றே சொல்ல இயலும். அவர்களின் கவியோட்டத்தில் அதற்கான தரவுகள் இருக்கின்றன. 

பாலா, மீரா, அப்துல் ரகுமான் என பாரதிதாசனோடு கவியரங்குகளில் கலந்து ஊக்கம் பெற்ற இளம் கவிஞர்களையும் பாரதிதாசனின் தாக்கம் பெற்றவர்கள் என்று வரையறுக்கலாம். இதில் பலர் பின்னாளில் புதுக்கவிதைக்குள் நுழைந்தார்கள். சிலர் குழந்தை இலக்கியம் போன்ற சிறப்புத் துறைக்குள் நுழைந்தனர். 

கிட்டதட்ட உலகம் முழுதுமே புதுக்கவிதைக்குள் நுழைந்தவிட்ட பின்னும் மரபில் கவிதை எழுதிக்கொண்டிருந்தவர் பாரதிதாசன். டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட், நிகோனர் பர்ரா, பெர்டோல்ட் ப்ரெக்ட், நெரூதா, ஆக்டோவியா பாஸ், ஆலன் கின்ஸ்பெர்க் போன்ற மேதைகள் கோலோச்சிய நாட்களில் இங்கு தமிழ் சிலம்பம் சுழற்றிக்கொண்டிருந்தவர் என்ற விமர்சனம் ஒன்று அவர் மீது உண்டு.  

நம் மண்ணின் இரண்டாயிர வருட மரபு கொடுத்த அழுத்தம் அது. நெரூதாவுக்கும் எலியட்டுக்கும் இல்லாத ஒரு கவிதையியல் தொடர்ச்சி நமக்கு இருக்கிறது. அதிலிருந்து பட்டென்று வெளியேறுதல் சுலபம் அல்ல. பிறகு மரபின் அத்தனை வளங்களையும் கற்ற ஒருவன் அதிலிருந்து வெளியே வருவது சாத்தியமே இல்லாத விஷயம். 

மரபில் எழுதினாலும் பெண் விடுதலை முதல் சாதி எதிர்ப்பு வரையான நவீன சிந்தனைகளே அவரின் பாடு பொருளாய் இருந்தன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எஸ்.வி.ராஜதுரை போன்றவர்கள் அதையும் விமர்சிக்கிறார்கள். அவரின் பெண் விடுதலை ஆண் மையமானது என்கிறார்கள். இருக்கலாம். ஒரு கருத்தியல் மெல்ல மெல்லதானே பரிணாமம் அடையும். இந்த நூற்றாண்டில் அமர்ந்துகொண்டு போன நூற்றாண்டை மதிப்பிடக் கூடாது அல்லவா? 

தொடக்கத்தில் ஆத்திகராய் இருந்தவர் பின்னர் நாத்திகராகிறார். பாரதி "எழுக புலவ" என்று ஆசிர்வதித்த முதல் பாடலே 'எங்கெங்கு காணிணும் சக்தியடா...' என்ற சாக்த உபாசகம்தான். 

பாரதிதாசன் திராவிட இயக்கத்தில் இருந்தது. அவர் சிந்தனைகளை வளப்படுத்தியது. நாத்திகராக உருப்பெற்றார். பிறகு அங்கிருந்தே பொதுவுடமைச் சிந்தனைகளுக்குள் செல்கிறார். ஒரு கவிஞனாக அவர் சிந்தனை இயல்பாகவே பரிணாமம் அடைந்துகொண்டுதான் இருந்தது. மாற்றங்களை ஏற்றுக்கொண்டுதான் இருந்தது என்பதன் சான்றுகள் இவை. 

தமிழ் என்பதையே ஒரு தொல்படிமமாக (Archetype)  ஓர் உயர் விழுமியமாக நோக்கும் போக்கு ஒன்று பழங்காலம் முதலே நமக்குண்டு. பாரதிதாசன் அதன் நவீன காலத் தொடர்ச்சி. நிலத்தை வணங்கும் பண்பாடுகளுக்கிடையே மொழியை வணங்கும் பண்பாடு இது. நிலத்துக்கு இணையாக மொழியையும் போற்றி அதனையும் ஒரு தூலப் பொருளாய் கருதும் சிந்தனைப் போக்குக்கு சமகால முகம் கொடுத்தவர் என்பதுவே பாரதிதாசனின் முதன்மையான பங்களிப்பு. அந்தவகையில் தமிழ் அடையாளம் என்ற கருத்தியல் இருக்கும் வரை பாரதிதாசன் பெயர் நிலைத்திருக்கும்.


4 comments:

  1. மரபுக் கவிதைக்குள் கரைத்த பாரதிதாசன் அவர்களின் முகம் காட்டும் பதிவு. சிறப்பு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை 💕

    ReplyDelete