Monday, April 22, 2019

பச்சை அரவம் - கவிதை


உன்னுடைய கனவில் பெய்யும் மழையில் 
நான் நனைவதெப்படி சீப
எனக் கேட்டாள்
ஒரு சால மரத்தின் அடியில் அமர்ந்திருந்தோம்
அவள் என் மடியில் இருந்தாள்
வெற்றிலையின் அலர் வாடை வீசும் சொற்கள்
மீண்டும் மீண்டும் நெஞ்சில் எதிரொலிக்கின்றன
வானம் தூரம் இல்லாத உயரத்தில் 
நாங்கள் இருந்தோம்
தலைக்கு மேல் 
மிதக்கும் மேகங்கள்
காலுக்கடியில்
பூமி முழுதும் 
சின்னச் சின்ன மலைக்குன்றுகள்
தங்கம் இறைந்துகிடக்கும் இளவெயிலில் 
நுணல் மலை அமிழ்ந்திருந்தது. அவள் காலெங்கும் சின்ன சின்ன சிராய்ப்புக் காயங்கள் சிறுமயிரடர்ந்த கால்களின் குதிரைத் தசைகளில் சிவப்பான ரத்தத் தீற்றல்கள் வயிற்றில் பசி ஒரு மிருகம் போல் இரைக்காக அமர்ந்திருக்கிறது. கொன்றைகள் உதிர்ந்துகிடக்கும் துறுகல் புலிக்குறளை மீது ஒரு மலை அணில் அமர்ந்து எங்களைக் கவனித்துக்கொண்டிருந்தது. நான் ‘அஞ்சி… அஞ்சி‘ என்றேன். அவளிடம் சிறு அசைவும் இல்லை. அதற்குள்ளா உறங்கிவிட்டாள். நல்ல களைப்புப் போலும். அவள் தலையை என் மடியிலிருந்து தூக்கி, நிலத்தில் வைத்துவிட்டு,  நான் அமர்ந்தபடியே உள்ளங்கை அளவு கல் ஒன்றை எடுத்து, அணிலை நோக்கி விசைகொண்டு எரிந்தேன். அது துறுகல் மீது பட்டு விலகிப் பள்ளத்துக்குள் பாய்ந்தது. அணில் துள்ளி பக்கத்தில் இருந்த மருத மரத்தில் தாவி ஏறி ஓட அதன் மீதிருந்த வெண் குறுகுகள் சடசடவென பறந்தோடின. ஓசை கேட்டு கண் விழித்தாள். ‘பசிக்கிறதா?‘ என்றேன். ‘ஆமாம்‘ என்றாள். சிவப்பரிசி மறைய உடும்புக் கறியிட்டு வயிறாற உண்ட கானவப் பெண்ணல்லவா என்ன செய்வாள் பாவம். ’கொஞ்சம் பொறு ஏதாவது கொண்டு வருகிறேன்‘ என்றேன். ‘நீ செல்ல வேண்டாம் சீப. இங்கேயே இரு. இல்லை எனில் என்னையும் அழைத்துச் செல்‘ என்றாள். ’அந்த ஊரா குதிரை மலை தாண்டினால் மருதக் குடிக்குப் போய்விடலாம். வா செல்வோம்‘ என்றேன். பாணர் கூட்டம் ஒன்று நேற்று எதிர்படும்போது சொன்னது. ஊரா குதிரையின் மறுபுறம் உள்ள வாணி நதிகரையில் ஒரு மருதக்குடி உள்ளதாம். வழி எங்கும் சரளைக் கற்கள் கரடுமுரடுமாய் இருந்தன. மழை நதி ஓடிய குறுந்தடத்தில் யானைகள் நடந்து நடந்து பாதை சமைந்திருந்தன. அந்த இறக்கங்கள் வழியாகப் புதர்செடிகளுக்கும் குறுமரங்களுக்கும் இடையே இறங்கிக்கொண்டே இருந்தோம். அரவம் கேட்டு சிறு சிறு உயிர்கள் ஓடி மறைந்தன. ஒரு மலை எலி சட்டென திகைத்து நின்று பார்த்தது. நான் அதன் கண்களை நோக்கினேன். மிளகைப் போன்ற கண்கள். மலைநாடெங்கும் மரங்களிலும் கற்றூண்களிலும் நெடும்பாம்பாய் சுற்றிப் படர்ந்து நிலமழித்து எம் குலமழித்த குறுங்கோளகம். பச்சை அரவம். அதில் மினுங்கும் நூறு நூறு கன்னங் கரு சிறு கண்கள். நினைக்கும்போதே அச்சமாய் இருந்தது. மருதக்குடிகள் வசிக்கும் இடங்களிலும் அரவங்களுண்டு. நீர் அரவம். ஓவென்று சத்தமிட்டு நீண்டு புரண்டோடி, கரை எல்லாம் அன்னம் வளர்க்கும் நதிகள். அங்குதான் எங்களின் எதிர்காலம். ஏழிலைக் கிழங்கு போன்ற இந்தப் பெண் இவளுக்காகவாவது நான் அங்கு செல்லத்தான் வேண்டும். சோவென கொட்டும் பெருமழையில் மரிகள் நனைந்து செல்லும் கனவொன்று கண்டேன் 
மரிகளும் மழையும் குன்றாவளத்தின் நிமித்திகம் 
அந்தக் கனவை இவளிடம் சொன்னேன் 
உன்னுடைய கனவில் பெய்யும் மழையில்
நான் நனைவதெப்படி சீப
என்கிறாள் 
காற்றில் நிலெமெங்கும் அலையும்
பஞ்சுப் பூச்சி போல 
எம் மக்கள் ஐந்திணைகளிலும் அலைகிறார்கள்
எறும்புக்கூட்டத்தில் நெருப்புப் பொரி விழுந்ததுபோல்
சிதறியது குடி
பற்றிக்கொள்ள ஏதுமற்ற திக்கற்ற கூட்டத்தில்
பூவைப் போல் நம்பிக்கையாய் மலர்கிறது ஒரு வரி
யாதும் ஊரே யாவரும் கேளிர்
அதைப் பற்றிக்கொள்வோம் எம் சிறு பெண்ணே
யார் கனவின் மழையில் யார்தான் நனைய முடியும்.

2 comments:

  1. செம்மை. ஒவ்வொரு வரிகளையும் ரசித்து வாசித்தேன்.

    ReplyDelete
  2. அற்புதம். வேறு சொற்கள் இல்லை

    ReplyDelete