Friday, April 12, 2019

படை - நுண்கதைவிருமனுக்குப் பசி அடிவயிற்றைக் கிள்ளியது. நேற்று இரவு தேவகிரி சாவடிக்கு முன்பு காகதேய வணிகர்களிடம் புளிச்சோறு பெற்று உண்டதுதான். இன்றையப் பொழுது சாயப்போகிறது. கொலைப் பட்டினி. கையில் காசு இல்லாமல் இல்லை; நூறு செப்புக்காசுகள் உள்ளன. இதை நீட்டினால், சத்திரக்காரன் ஏளனமாய் சிரிக்கிறான். சுல்தான் உத்தரவாம். புதிய செப்புக்காசுகளும், வெள்ளித் தங்காக்களும் செல்லாதாம். கஜானாவில் கொடுத்து, பழைய தினார்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமாம். கஜானாவுக்கு இன்னும் ரெண்டரைக் காதம் போக வேண்டும். உடல் சோர்வாக உள்ளது. இன்று இரவுக்குள் சென்றாலும், நாளை பகலில்தான் மாற்ற முடியும். வழியில் ஏதேனும் வணிகர்கூட்டத்தில் பிக்‌ஷை பெற்றால்தான் ஆச்சு.

சாலையின் இருமருங்கிலும் மக்கள் சாரிசாரியாகக் கோட்டையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். கையில் இருந்த மூட்டை முழுதும் செப்புக்காசுகள். சிலர், குதிரைவண்டி பூட்டிச் சென்று கொண்டிருந்தார்கள். வணிகர்கள் இல்லை; குடியானவர்களும் கொல்லர்களும்தான். அவர்களிடம்கூட மூட்டை மூட்டையாய் காசு இருந்தது. பிறகு, தங்கக் காசுக்குப் பதிலாகச் செப்புக்காசைச் செலவாணி ஆக்கினால், வேறென்ன நடக்கும். பட்டறை வைத்திருந்தவன் எல்லாம் தனவந்தன் ஆனான். புரோகிதர்கள்கூட மந்திரங்களை மறந்துவிட்டு, நாணயச்சாலை நடத்தினார்கள். ஆயிரம் தினாருக்குக் கிடைத்த குதிரைகள் ஐந்தாயிரம் தினார்கள் ஆயின. கவலையேயின்றி கூடுதலாகக் காசை வார்த்து, குதிரை வாங்கிக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் எல்லோரிடமும் காசு இருந்தது. வாங்கப் பொருள் இல்லை. சுல்தான் துக்ளக், பெரிய அறிஞர் என்கிறார்கள். தர்க்கமும் தத்துவமும் படித்த மன்னனுக்கு, இந்த எளிய கணக்குப் புரியாமல் போனதுதான் விநோதம். இதோ இந்தப் புதிய அறிவிப்பால், கையில் உள்ள செலவாணியை மாற்ற ஜனக்காடு பைத்தியம் பிடித்து அலைகிறது.

நடைசோர்ந்து விருமன் ஒரு புளியமர நிழலில் ஒதுங்கினான். மாலை நேரப் பறவைகளின் இரைச்சல் தொடங்கிவிட்டது. கழுத்துமணி அசையச் செல்லும் மாட்டுவண்டிகளில் காகதீயர்கள் முண்டாசு தரித்து, வெற்றிலை குதப்பிக்கொண்டு செல்கிறார்கள். இன்னும் ஒரு காத தூரத்தில் ஒரு சாவடி இருக்கக்கூடும். அநேகமாய் அங்கு தங்கிக்கொள்ளலாம். இரண்டு வீரர்கள் விருமனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவனின் அந்நியமான தோற்றம் அவர்களைச் சந்தேகிக்க வைத்திருக்க வேண்டும். பக்கம் வந்து,  “யாரப்பா நீ” என்று ஹிந்தவியில் கேட்டார்கள். ‘‘நான் பாண்டிய தேசத்தில் இருந்து வருகிறேன். பெயர் விருமன். பாட்டுக் கட்டுவது என் தொழில். சுல்தானின் நதிம் ஜியாவுத்தின் பரணியையும் கவி அமீர் குஸ்ரூவையும் பார்க்க வேண்டும்.” விருமனின் சரளமான ஹிந்தவிப் பேச்சு அவர்களைக் குழப்பியது. பாண்டிய தேசத்தவர்கள் ‘டட் டட் டென’ நாக்கைத் தட்டித் தட்டி ஏதோ ஒரு விநோத மொழியில் பேசுவார்கள். இவனென்ன இவ்வளவு இயல்பாய் ஹிந்தவி பேசுகிறான் என யோசித்தவாறே, “அவர்கள் இருவரும் சுல்தானுடன் தில்லி நோக்கிக் கிளம்பிவிட்டது தெரியாதோ அய்யா?” என்றார்கள். விருமனுக்கு மலைப்பாய் இருந்தது. “தில்லியா..? சுல்தான் மீண்டும் தில்லி போய்விட்டாரா?” என்றான் கவலையாக. காவலர்கள் இருவரும் விருமனிடம் அதற்கு மேல் ஏதும் பேசாமல் சென்றார்கள். ராஜ விஷயத்தை அந்நியனிடம் எதற்குப் பேசுவது என்ற நினைப்பாய் இருக்கும்.

நேற்று இரவு காகதீயர்கள் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. தலைநகரம் தேவகிரியில் இருந்து மீண்டும் தில்லி போகப்போகிறதாம். இதென்ன வெட்கங்கெட்ட பரிபாலனம்? தெளிவான புத்தியும், நிலையான மனமும் இல்லாதவன் என்ன அரசன்? மஹாபாரதக் காலத்திலிருந்தே இந்திரப்பிரஸ்தத்தில் சகுனிகளுக்கும் குறைவில்லை; கோமாளிகளுக்கும் குறைவில்லை போல. தில்லியில் இருந்து வர மறுத்தவர்களை குதிரையில் கட்டி இழுத்து வந்தார்கள் என்று கேள்வி. கண் தெரியாத ஒரு பக்கீரை அப்படித் தரதரவென இழுத்துவந்ததில், அவரின் ஒரு கால் முற்றிலுமாகச் சிதைந்துபோனதாம். ராஜதுரோகி என்ற அவப்பெயருக்கும் தண்டனைக்கும் பயந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருநூற்று ஐம்பது காத தூரம் வந்தவர்களுக்கு, இங்கு கிடைத்தவை அம்மையும் சாவும்தான். வழியிலேயே கொஞ்சம் பேர் மரித்தார்கள். வந்து செத்தது கொஞ்சம் பேர்.  எஞ்சி இருப்பவர்களைத்தான் இப்படிப் பிழிந்துகொண்டிருக்கிறார் சுல்தான். இந்த லட்சணத்தில் மீண்டும் தில்லிக்கே போவதாம். வைத்தியன் சூரமலையன் ஒருமுறை சொன்னான். “தேவகிரி சிவன் உலவும் இடமாக்கும். அங்க பக்கிரிகளையும் முசல்மான்களையும் சேர்த்தா செல்லுமா? சிவன் சொத்து குல நாசமாக்கும். யாரு ஊருக்கு யாரு பேரு போடுறது. தெளலதாபாத்தாம். கத்திய காட்டினா கும்பிடுபோட சாமி என்ன குடியானவனா? அழிச்சிடுவான் பாத்துக்கோ... விநாச காலே விபரீத புத்தி.”


சீனத்தில் குப்ளாய்கான் காகிதத் தாள் செலவாணி கொண்டுவருகிறார் என்றால், அவருக்கு அவர் தேசம் பற்றி, குடிகள் பற்றித் தெரிந்திருந்தது; செய்தார். பிங்கல தேசத்தவர்கள் தலைநகரை மாற்றுகிறார்கள் என்றால், அவர்கள் வாழ்க்கைமுறை அப்படி. மக்களென்ன மரிகளா? இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் விரட்டினால் வெருண்டு ஓட....

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை’

என்ற குறள் ஏனோ நினைவுக்கு வருகிறது. வள்ளுவன் எப்படிப்பட்ட மேதை. வாளும் வேலும் மட்டுமல்ல படை. மன்னர்களுக்கு இது என்றுமே புரியாது.

சற்று தொலைவில் ஒரு மரத்தின் அருகே  ‘ஓ...’வென்று அலறல் சத்தம். சிறிய சலசலப்பு. ஒரு குடியானவப் பெண், அழுதுகொண்டிருந்தாள். அவள் அருகே அம்மை கண்ட குழந்தை வேப்பிலைப் படுக்கையில் கிடந்தது. தோஆப்பிலிருந்து தன் கணவனுடன் வந்திருக்கிறாள். விவசாயம் பொய்த்துப் போகவே, தலைநகரம் போய் பஞ்சம் பிழைக்கலாம் என்று வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில் இந்தச் செலவாணி மாற்றப் பிரச்னை. குழந்தைக்கு உடல் கெடவே, அருகில் உள்ள இடையர் குடிலில் விட்டுவிட்டு, நேற்று மாலை செப்புக்காசுகளை மாற்றச் சென்ற கணவனை, காவலர்கள் பிடித்துச் சென்று விட்டார்களாம். வெகுநேரமாகியும் வராததால், சந்தேகப்பட்டு இடையர்களிடம் சொல்லி இருக்கிறாள். அவர்கள் விசாரித்துச் சொல்லியிருக்கிறார்கள். மடார் மடாரென மார்பிலும் வயிற்றிலும் அடித்து அழுதுகொண்டிருந்தவள், ஆங்காரம் கொண்டவளாய் ஒரு காவலனின் முகத்தில் காறித்துப்பினாள்; வசைபாடினாள். மூர்க்கமுற்ற காவலன் அவளை நெட்டிக் கீழே தள்ளினான். கீழே விழுந்தவளை மூன்று நான்கு காவலர்கள் சேர்ந்து உதைக்கத் தொடங்கினார்கள். குழந்தை வீறிட்டு அழுதது. அவர்கள் அவளை உதைத்துக்கொண்டே இருந்தார்கள். இடையர்கள் சிலர் ‘ஐயா... சாமி... விட்டுருங்க... விட்டுருங்க’ என்று அரற்றிக்கொண்டிருந்தார்கள். மரத்தில் இருந்த பறவைகள் பதற்றமாய் கலைந்து பறந்தன. காவலர்கள் ஓய்ந்து காறித் துப்பிவிட்டு விலகினார்கள். அவள் உடலெங்கும் மண்ணும் ரத்தமுமாய் துணி கிழிந்து, குற்றுயிராய்க்கிடந்தாள். குழந்தை அசைவற்று விறைத்துக்கிடந்தது. செம்மண் புழுதியும் ஓலமும் மெள்ள அடங்கின. அனைத்தையும் மறைக்கும், அனைத்தும் மறையும் இருள் முழுமையாகக் கவிந்திருந்தது.

நன்றி: தடம்

No comments:

Post a Comment