Monday, April 29, 2019

கவிதைகள்
மாவலியின் கண்கள்
------

நிலவின் ஒளியை நீராக மாற்றும் சந்திரகாந்தம் நான்
இந்த மலை வனத்தின் பால்யம் தொட்டு
இப்பெயரற்ற நதிக் கரையில் கிடக்கிறேன்
பெளர்ணமி இரவுகளில்
புலியின் கண்களில் ஒளிரும்
இளம் பச்சை மரகதம் என் சகோதரன்
எம் முத்தச்சனின் குறட்டை ஒலி போல் உறுமும்
அவன் குரலில்தான் மூங்கிலரிசிகள் விளைகின்றன
இம்மலை எங்கும் புதைக்கப்பட்ட
எம் மூதாதைகளின் மண்டையோடுகள்தான்
பலாக் காய்கள்
வேண்டுமானால் அவற்றை உடைத்துப் பாருங்கள்
உங்கள் வரலாற்றைப் பார்த்து
அவை உள்ளுக்குள் இளித்துக்கொண்டிருக்கும்
எம் குடிகளின் பச்சை நரம்புகள்தான்
இவ் வன வேர்கள் என சொல்லவும் வேண்டுமா ஈஸ


Monday, April 22, 2019

பச்சை அரவம் - கவிதை


உன்னுடைய கனவில் பெய்யும் மழையில் 
நான் நனைவதெப்படி சீப
எனக் கேட்டாள்
ஒரு சால மரத்தின் அடியில் அமர்ந்திருந்தோம்
அவள் என் மடியில் இருந்தாள்
வெற்றிலையின் அலர் வாடை வீசும் சொற்கள்
மீண்டும் மீண்டும் நெஞ்சில் எதிரொலிக்கின்றன
வானம் தூரம் இல்லாத உயரத்தில் 
நாங்கள் இருந்தோம்
தலைக்கு மேல் 
மிதக்கும் மேகங்கள்
காலுக்கடியில்
பூமி முழுதும் 
சின்னச் சின்ன மலைக்குன்றுகள்
தங்கம் இறைந்துகிடக்கும் இளவெயிலில் 
நுணல் மலை அமிழ்ந்திருந்தது. அவள் காலெங்கும் சின்ன சின்ன சிராய்ப்புக் காயங்கள் சிறுமயிரடர்ந்த கால்களின் குதிரைத் தசைகளில் சிவப்பான ரத்தத் தீற்றல்கள் வயிற்றில் பசி ஒரு மிருகம் போல் இரைக்காக அமர்ந்திருக்கிறது. கொன்றைகள் உதிர்ந்துகிடக்கும் துறுகல் புலிக்குறளை மீது ஒரு மலை அணில் அமர்ந்து எங்களைக் கவனித்துக்கொண்டிருந்தது. நான் ‘அஞ்சி… அஞ்சி‘ என்றேன். அவளிடம் சிறு அசைவும் இல்லை. அதற்குள்ளா உறங்கிவிட்டாள். நல்ல களைப்புப் போலும். அவள் தலையை என் மடியிலிருந்து தூக்கி, நிலத்தில் வைத்துவிட்டு,  நான் அமர்ந்தபடியே உள்ளங்கை அளவு கல் ஒன்றை எடுத்து, அணிலை நோக்கி விசைகொண்டு எரிந்தேன். அது துறுகல் மீது பட்டு விலகிப் பள்ளத்துக்குள் பாய்ந்தது. அணில் துள்ளி பக்கத்தில் இருந்த மருத மரத்தில் தாவி ஏறி ஓட அதன் மீதிருந்த வெண் குறுகுகள் சடசடவென பறந்தோடின. ஓசை கேட்டு கண் விழித்தாள். ‘பசிக்கிறதா?‘ என்றேன். ‘ஆமாம்‘ என்றாள். சிவப்பரிசி மறைய உடும்புக் கறியிட்டு வயிறாற உண்ட கானவப் பெண்ணல்லவா என்ன செய்வாள் பாவம். ’கொஞ்சம் பொறு ஏதாவது கொண்டு வருகிறேன்‘ என்றேன். ‘நீ செல்ல வேண்டாம் சீப. இங்கேயே இரு. இல்லை எனில் என்னையும் அழைத்துச் செல்‘ என்றாள். ’அந்த ஊரா குதிரை மலை தாண்டினால் மருதக் குடிக்குப் போய்விடலாம். வா செல்வோம்‘ என்றேன். பாணர் கூட்டம் ஒன்று நேற்று எதிர்படும்போது சொன்னது. ஊரா குதிரையின் மறுபுறம் உள்ள வாணி நதிகரையில் ஒரு மருதக்குடி உள்ளதாம். வழி எங்கும் சரளைக் கற்கள் கரடுமுரடுமாய் இருந்தன. மழை நதி ஓடிய குறுந்தடத்தில் யானைகள் நடந்து நடந்து பாதை சமைந்திருந்தன. அந்த இறக்கங்கள் வழியாகப் புதர்செடிகளுக்கும் குறுமரங்களுக்கும் இடையே இறங்கிக்கொண்டே இருந்தோம். அரவம் கேட்டு சிறு சிறு உயிர்கள் ஓடி மறைந்தன. ஒரு மலை எலி சட்டென திகைத்து நின்று பார்த்தது. நான் அதன் கண்களை நோக்கினேன். மிளகைப் போன்ற கண்கள். மலைநாடெங்கும் மரங்களிலும் கற்றூண்களிலும் நெடும்பாம்பாய் சுற்றிப் படர்ந்து நிலமழித்து எம் குலமழித்த குறுங்கோளகம். பச்சை அரவம். அதில் மினுங்கும் நூறு நூறு கன்னங் கரு சிறு கண்கள். நினைக்கும்போதே அச்சமாய் இருந்தது. மருதக்குடிகள் வசிக்கும் இடங்களிலும் அரவங்களுண்டு. நீர் அரவம். ஓவென்று சத்தமிட்டு நீண்டு புரண்டோடி, கரை எல்லாம் அன்னம் வளர்க்கும் நதிகள். அங்குதான் எங்களின் எதிர்காலம். ஏழிலைக் கிழங்கு போன்ற இந்தப் பெண் இவளுக்காகவாவது நான் அங்கு செல்லத்தான் வேண்டும். சோவென கொட்டும் பெருமழையில் மரிகள் நனைந்து செல்லும் கனவொன்று கண்டேன் 
மரிகளும் மழையும் குன்றாவளத்தின் நிமித்திகம் 
அந்தக் கனவை இவளிடம் சொன்னேன் 
உன்னுடைய கனவில் பெய்யும் மழையில்
நான் நனைவதெப்படி சீப
என்கிறாள் 
காற்றில் நிலெமெங்கும் அலையும்
பஞ்சுப் பூச்சி போல 
எம் மக்கள் ஐந்திணைகளிலும் அலைகிறார்கள்
எறும்புக்கூட்டத்தில் நெருப்புப் பொரி விழுந்ததுபோல்
சிதறியது குடி
பற்றிக்கொள்ள ஏதுமற்ற திக்கற்ற கூட்டத்தில்
பூவைப் போல் நம்பிக்கையாய் மலர்கிறது ஒரு வரி
யாதும் ஊரே யாவரும் கேளிர்
அதைப் பற்றிக்கொள்வோம் எம் சிறு பெண்ணே
யார் கனவின் மழையில் யார்தான் நனைய முடியும்.

Wednesday, April 17, 2019

கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மழை பற்றிய சித்திரங்கள் - நுண்கதை0.00
அவர்கள் குஷிநாரம் நோக்கிச் செல்ல வேண்டும். மழை நசநசவென பெய்துகொண்டிருந்தது. மலைப்பாதைக் கரடுமுரடாய் இருந்தது. நாயுறுவிகள் காலை கிழித்ததில் காலெங்கும் ஈரத்தில் எரிந்தது. கண் மறைக்கும் இருளில் 'தம்மம்... சரணம்... கச்சாமி' என முனகியபடியே மூத்த பிக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். அவர் நடை சன்னதம் கொண்டதாய் இருந்தது. அத்தி ஒரு கணம் தடுமாறி கீழே விழப்போனான். நடந்துகொண்டிருந்த இளைய பிக்கு நிலைகுலைவின் சத்தம் கேட்டு என்னாச்சு என்றார். "ஒன்றுமில்லை போங்க..." என்றபடியே அத்தி பின் தொடர்ந்தான். மூத்த பிக்கு நடையை நிறுத்தவே இல்லை. மலையேறிக்கொண்டிருந்த அத்தி எதேச்சையாய் திரும்பிப் பார்க்கவும் ஒரு பெரிய மின்னல் வெட்டியது. ஒரு கணம் சுற்றிலும் மலை அடுக்குகள் வெளிப்பட்டு மீண்டும் இருளில் பதுங்கின.


0.01
காலை நன்கு புலர்ந்துவிட்டிருந்தது. ஓய்வின்றி விடிய விடிய நடந்தாயிற்று. மூத்த பிக்கு சற்றும் சோர்வின்றி முன்னேறிக்கொண்டே இருந்தார். புதர்க்காடுகளின் பல வண்ண பூச்சிகள் மழை நின்ற ஏகாந்தத்தில் காற்றில் பறந்துகொண்டிருந்தன. தும்பிகள் மீன்களை போல அங்கும் இங்கும் காற்றில் நீந்திக்கொண்டிருந்தன. மரச்செறிவு முடிந்து புதர்களும் தர்ப்பைப்புற்களும் அடர்ந்து சென்றன. 'ஆறு பக்கம் வந்துவிட்டது' என அத்தி நினைத்தான். வண்டல் மண் காலில் பதிய, சேரும் சகதியுமாய் தர்ப்பையை மிதித்து உருவாக்கிய ஒற்றையடிப்பாதையில் சென்றுகொண்டிருந்தார்கள். தூரத்தில் மரங்களின் இடைவெளியில் கந்தகி நதி தெரிந்தது. ஆர்வமாய் அத்தி முன்நோக்கி ஓடினான். பக்கம் செல்ல செல்ல கந்தகி பெரும் ஆவேசத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் ஸ்தூலமாய் கேட்டது. செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. வாழை மரங்கள், இலைதழைகள் நீரின் மேற்புறம் தோன்றி மறைந்தன.  "பெரிய ஆவேசக்காரிதான்" அத்தி புன்னகையுடன் சொன்னான். "நதியில் புது வெள்ளம் போகும்போது இறங்கக் கூடாது" இளைய பிக்கு சொன்னார். மூத்த பிக்கு அமைதியாக இருந்தார். "ஆனால் வேறு வழி இல்லை ஆற்றைத் தாண்டித்தான் ஆக வேண்டும்" என்றார். "இன்னும் கொஞ்சம் கீழே போனால் நதி அகலமாகிறது அங்கு போகலாம்" என்றார் இளைய பிக்கு. மூவரும் நடக்கத்துவங்கினர். திடீரென ஒரு பிளிறல். ஆற்றின் ஆர்ப்பரிக்கும் ஓசையைக் கிழித்துக்கொண்டு கேட்டது. எதிர் கரையில் மூன்று யானைகள் நின்றுகொண்டிருந்தன. துதிக்கை உயர்த்தி அவை பிளிறின. தண்ணீரில் ஒரு யானை நிலைகொள்ள முடியாமல் உருண்டு கொண்டிருந்தது. வெள்ளத்தை எதிர்த்து நிற்பதும், மீண்டும் உருள்வதுமாய் ஆற்றின் போக்கில் போய்கொண்டிருந்தது. கரையில் நிற்கும் யானைகள் பிளிறிக்கொண்டிருந்தன.


0.02. 
குஷிநாரம் மழையில் தியானத்திக்கொண்டிருந்தது. மெல்லிய தூறல்கள் சரிந்துகொண்டிருந்தன. காற்றில் தூறல்கள் நடனமிடுவதை குடிலுக்குள் இருந்து கவனித்துக்கொண்டிருந்தான் மிலிந்தன். மிலிந்தன் வைத்தியன். கவிராஜ் என்று சொல்வார்கள். கவிராஜ் மிலிந்த என்றுதான் அனைவரும் அழைப்பர். காலையில் எழுந்ததிலிருந்தே அவனுக்கு சங்கத்துக்குச் செல்ல வேண்டும் என்று தவிப்பு. ஆனந்தர் நேற்று இரவு அவசரமாக வந்து கவிராஜ் சோமதத்தரை அழைத்துச்சென்றார். என்ன விஷயமாக இருக்கும் என்று மனம் அலைபாயத்துவங்கியது. ஒருவேளை ததாகதருக்கு மீண்டும் உடல் நிலை சரி இல்லையோ?
"குஷிநாரத்துக்கு மேற்கே நல்ல மழை..." குரல் கேட்டுத் திரும்பினான் மிலிந்த.
அத்தி புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தான். "கந்தகியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று, அதில் ஒரு யானை  அடித்துச்செல்லப்படுவதைப் பார்தேன்."
"நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? தெற்கே சென்றவர்கள் இல்லையா?"
"ஆமாம்... நாங்கள் தெற்கின் கடைக்கோடியில் இருந்து வருகிறோம். ததாகதர் எப்படி இருக்கிறார்?"
தூரத்தில் ஒருவன் மூச்சிரைக்க ஓடிவந்துகொண்டிருந்தான்.
அவன் துவராடை மிகுந்த அழுக்காய் இருந்தது. "கவிராஜ்! உங்களை பெரியவர் வரச்சொன்னார்" மூச்சுவாங்க சொன்னவன். பதிலுக்குக்கூட காத்திருக்காமல் எங்கோ ஓடினான். 


0.03
"யானை நீரில் அடித்துச்செல்வதைப் பார்த்தது யார்?"  பெரிய கவிராஜ் முணுமுணுப்பாய் கேட்டார்.
அத்தி தயக்கத்துடன் முன்னகர்ந்து வந்து "நான்தான்" என்றார். 
"உன் பெயர்?"
"அத்தி" மிலிந்தன் சொன்னான். அத்தி அவனைப் பார்த்தான்.
"ததாகதர் உன்னை வரச்சொன்னார்" என்றார் பெரியவர். அவர் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. இரண்டு பெரிய மருத மரங்களின் கிளைகள் ஒன்றை ஒன்று கோர்த்திருந்தன. அதன் நிழலில் ஒரு மஞ்சள் வண்ண துவராடையின் மீது உலர்ந்த மலர் போல ததாகதர் கிடந்தார். அருகில் ஆனந்தரும்  மூத்த பிக்குவும் இருந்தார்கள். ஆனந்தர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர். பொறுக்க முடியாமல் விசும்பிக்கொண்டிருந்தார்.
கோதம முனி மெலிதாய் தலை அசைத்து அத்தியை "இங்கே வா" என்றார். அத்தி பக்கம் செல்லவும் அவன் தலையில் கை வைத்து, "யானையை வெள்ளம் அடித்துச் செல்லட்டும்" என்றார்.

Friday, April 12, 2019

படை - நுண்கதைவிருமனுக்குப் பசி அடிவயிற்றைக் கிள்ளியது. நேற்று இரவு தேவகிரி சாவடிக்கு முன்பு காகதேய வணிகர்களிடம் புளிச்சோறு பெற்று உண்டதுதான். இன்றையப் பொழுது சாயப்போகிறது. கொலைப் பட்டினி. கையில் காசு இல்லாமல் இல்லை; நூறு செப்புக்காசுகள் உள்ளன. இதை நீட்டினால், சத்திரக்காரன் ஏளனமாய் சிரிக்கிறான். சுல்தான் உத்தரவாம். புதிய செப்புக்காசுகளும், வெள்ளித் தங்காக்களும் செல்லாதாம். கஜானாவில் கொடுத்து, பழைய தினார்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமாம். கஜானாவுக்கு இன்னும் ரெண்டரைக் காதம் போக வேண்டும். உடல் சோர்வாக உள்ளது. இன்று இரவுக்குள் சென்றாலும், நாளை பகலில்தான் மாற்ற முடியும். வழியில் ஏதேனும் வணிகர்கூட்டத்தில் பிக்‌ஷை பெற்றால்தான் ஆச்சு.

சாலையின் இருமருங்கிலும் மக்கள் சாரிசாரியாகக் கோட்டையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். கையில் இருந்த மூட்டை முழுதும் செப்புக்காசுகள். சிலர், குதிரைவண்டி பூட்டிச் சென்று கொண்டிருந்தார்கள். வணிகர்கள் இல்லை; குடியானவர்களும் கொல்லர்களும்தான். அவர்களிடம்கூட மூட்டை மூட்டையாய் காசு இருந்தது. பிறகு, தங்கக் காசுக்குப் பதிலாகச் செப்புக்காசைச் செலவாணி ஆக்கினால், வேறென்ன நடக்கும். பட்டறை வைத்திருந்தவன் எல்லாம் தனவந்தன் ஆனான். புரோகிதர்கள்கூட மந்திரங்களை மறந்துவிட்டு, நாணயச்சாலை நடத்தினார்கள். ஆயிரம் தினாருக்குக் கிடைத்த குதிரைகள் ஐந்தாயிரம் தினார்கள் ஆயின. கவலையேயின்றி கூடுதலாகக் காசை வார்த்து, குதிரை வாங்கிக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் எல்லோரிடமும் காசு இருந்தது. வாங்கப் பொருள் இல்லை. சுல்தான் துக்ளக், பெரிய அறிஞர் என்கிறார்கள். தர்க்கமும் தத்துவமும் படித்த மன்னனுக்கு, இந்த எளிய கணக்குப் புரியாமல் போனதுதான் விநோதம். இதோ இந்தப் புதிய அறிவிப்பால், கையில் உள்ள செலவாணியை மாற்ற ஜனக்காடு பைத்தியம் பிடித்து அலைகிறது.

நடைசோர்ந்து விருமன் ஒரு புளியமர நிழலில் ஒதுங்கினான். மாலை நேரப் பறவைகளின் இரைச்சல் தொடங்கிவிட்டது. கழுத்துமணி அசையச் செல்லும் மாட்டுவண்டிகளில் காகதீயர்கள் முண்டாசு தரித்து, வெற்றிலை குதப்பிக்கொண்டு செல்கிறார்கள். இன்னும் ஒரு காத தூரத்தில் ஒரு சாவடி இருக்கக்கூடும். அநேகமாய் அங்கு தங்கிக்கொள்ளலாம். இரண்டு வீரர்கள் விருமனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவனின் அந்நியமான தோற்றம் அவர்களைச் சந்தேகிக்க வைத்திருக்க வேண்டும். பக்கம் வந்து,  “யாரப்பா நீ” என்று ஹிந்தவியில் கேட்டார்கள். ‘‘நான் பாண்டிய தேசத்தில் இருந்து வருகிறேன். பெயர் விருமன். பாட்டுக் கட்டுவது என் தொழில். சுல்தானின் நதிம் ஜியாவுத்தின் பரணியையும் கவி அமீர் குஸ்ரூவையும் பார்க்க வேண்டும்.” விருமனின் சரளமான ஹிந்தவிப் பேச்சு அவர்களைக் குழப்பியது. பாண்டிய தேசத்தவர்கள் ‘டட் டட் டென’ நாக்கைத் தட்டித் தட்டி ஏதோ ஒரு விநோத மொழியில் பேசுவார்கள். இவனென்ன இவ்வளவு இயல்பாய் ஹிந்தவி பேசுகிறான் என யோசித்தவாறே, “அவர்கள் இருவரும் சுல்தானுடன் தில்லி நோக்கிக் கிளம்பிவிட்டது தெரியாதோ அய்யா?” என்றார்கள். விருமனுக்கு மலைப்பாய் இருந்தது. “தில்லியா..? சுல்தான் மீண்டும் தில்லி போய்விட்டாரா?” என்றான் கவலையாக. காவலர்கள் இருவரும் விருமனிடம் அதற்கு மேல் ஏதும் பேசாமல் சென்றார்கள். ராஜ விஷயத்தை அந்நியனிடம் எதற்குப் பேசுவது என்ற நினைப்பாய் இருக்கும்.

நேற்று இரவு காகதீயர்கள் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. தலைநகரம் தேவகிரியில் இருந்து மீண்டும் தில்லி போகப்போகிறதாம். இதென்ன வெட்கங்கெட்ட பரிபாலனம்? தெளிவான புத்தியும், நிலையான மனமும் இல்லாதவன் என்ன அரசன்? மஹாபாரதக் காலத்திலிருந்தே இந்திரப்பிரஸ்தத்தில் சகுனிகளுக்கும் குறைவில்லை; கோமாளிகளுக்கும் குறைவில்லை போல. தில்லியில் இருந்து வர மறுத்தவர்களை குதிரையில் கட்டி இழுத்து வந்தார்கள் என்று கேள்வி. கண் தெரியாத ஒரு பக்கீரை அப்படித் தரதரவென இழுத்துவந்ததில், அவரின் ஒரு கால் முற்றிலுமாகச் சிதைந்துபோனதாம். ராஜதுரோகி என்ற அவப்பெயருக்கும் தண்டனைக்கும் பயந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருநூற்று ஐம்பது காத தூரம் வந்தவர்களுக்கு, இங்கு கிடைத்தவை அம்மையும் சாவும்தான். வழியிலேயே கொஞ்சம் பேர் மரித்தார்கள். வந்து செத்தது கொஞ்சம் பேர்.  எஞ்சி இருப்பவர்களைத்தான் இப்படிப் பிழிந்துகொண்டிருக்கிறார் சுல்தான். இந்த லட்சணத்தில் மீண்டும் தில்லிக்கே போவதாம். வைத்தியன் சூரமலையன் ஒருமுறை சொன்னான். “தேவகிரி சிவன் உலவும் இடமாக்கும். அங்க பக்கிரிகளையும் முசல்மான்களையும் சேர்த்தா செல்லுமா? சிவன் சொத்து குல நாசமாக்கும். யாரு ஊருக்கு யாரு பேரு போடுறது. தெளலதாபாத்தாம். கத்திய காட்டினா கும்பிடுபோட சாமி என்ன குடியானவனா? அழிச்சிடுவான் பாத்துக்கோ... விநாச காலே விபரீத புத்தி.”


சீனத்தில் குப்ளாய்கான் காகிதத் தாள் செலவாணி கொண்டுவருகிறார் என்றால், அவருக்கு அவர் தேசம் பற்றி, குடிகள் பற்றித் தெரிந்திருந்தது; செய்தார். பிங்கல தேசத்தவர்கள் தலைநகரை மாற்றுகிறார்கள் என்றால், அவர்கள் வாழ்க்கைமுறை அப்படி. மக்களென்ன மரிகளா? இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் விரட்டினால் வெருண்டு ஓட....

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை’

என்ற குறள் ஏனோ நினைவுக்கு வருகிறது. வள்ளுவன் எப்படிப்பட்ட மேதை. வாளும் வேலும் மட்டுமல்ல படை. மன்னர்களுக்கு இது என்றுமே புரியாது.

சற்று தொலைவில் ஒரு மரத்தின் அருகே  ‘ஓ...’வென்று அலறல் சத்தம். சிறிய சலசலப்பு. ஒரு குடியானவப் பெண், அழுதுகொண்டிருந்தாள். அவள் அருகே அம்மை கண்ட குழந்தை வேப்பிலைப் படுக்கையில் கிடந்தது. தோஆப்பிலிருந்து தன் கணவனுடன் வந்திருக்கிறாள். விவசாயம் பொய்த்துப் போகவே, தலைநகரம் போய் பஞ்சம் பிழைக்கலாம் என்று வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில் இந்தச் செலவாணி மாற்றப் பிரச்னை. குழந்தைக்கு உடல் கெடவே, அருகில் உள்ள இடையர் குடிலில் விட்டுவிட்டு, நேற்று மாலை செப்புக்காசுகளை மாற்றச் சென்ற கணவனை, காவலர்கள் பிடித்துச் சென்று விட்டார்களாம். வெகுநேரமாகியும் வராததால், சந்தேகப்பட்டு இடையர்களிடம் சொல்லி இருக்கிறாள். அவர்கள் விசாரித்துச் சொல்லியிருக்கிறார்கள். மடார் மடாரென மார்பிலும் வயிற்றிலும் அடித்து அழுதுகொண்டிருந்தவள், ஆங்காரம் கொண்டவளாய் ஒரு காவலனின் முகத்தில் காறித்துப்பினாள்; வசைபாடினாள். மூர்க்கமுற்ற காவலன் அவளை நெட்டிக் கீழே தள்ளினான். கீழே விழுந்தவளை மூன்று நான்கு காவலர்கள் சேர்ந்து உதைக்கத் தொடங்கினார்கள். குழந்தை வீறிட்டு அழுதது. அவர்கள் அவளை உதைத்துக்கொண்டே இருந்தார்கள். இடையர்கள் சிலர் ‘ஐயா... சாமி... விட்டுருங்க... விட்டுருங்க’ என்று அரற்றிக்கொண்டிருந்தார்கள். மரத்தில் இருந்த பறவைகள் பதற்றமாய் கலைந்து பறந்தன. காவலர்கள் ஓய்ந்து காறித் துப்பிவிட்டு விலகினார்கள். அவள் உடலெங்கும் மண்ணும் ரத்தமுமாய் துணி கிழிந்து, குற்றுயிராய்க்கிடந்தாள். குழந்தை அசைவற்று விறைத்துக்கிடந்தது. செம்மண் புழுதியும் ஓலமும் மெள்ள அடங்கின. அனைத்தையும் மறைக்கும், அனைத்தும் மறையும் இருள் முழுமையாகக் கவிந்திருந்தது.

நன்றி: தடம்

Monday, April 1, 2019

சில காதல் கவிதைகள்காதலைப் பற்றிய சித்திரங்கள்
---

1.
யாராவது யாரையாவது முத்தமிடும்போதுதெல்ல்லாம்
எங்கோ திரள்கின்றன மேகங்கள்
கூடுதலாய் ஒரு விடியலுக்குத் திட்டமிடுகிறது பூமி
நம்பிக்கையோடு பூக்கத் தயாராகின்றன சில மலர்கள்
துணிந்து வானில் இறங்குகின்றன பறவைகள்

2.
பேருந்தின் எதிர்க்காற்றில்
முடிக்கற்றைகள் பறக்க
உதடு கடித்து விசும்பிக்கொண்டேயிருக்கிறாள்
கண்களிலிருந்து உதிர்ந்துகொண்டே இருக்கிறகின்றன
துயரத்தின் கை மலர்கள்
போன் ஒலிக்கிறது
ஆவேசமாய் எடுத்தவள்
நான் செத்துட்டேன் வைச்சிடு என்கிறாள்
சடசடவென சரிகின்றன
சில விண்மீன்கள்

3.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு
வாழ்ந்தவளையா இன்னமும்
தேடிக்கொண்டிருக்கிறாய் என்றாள்
நான் அவள் எழுதிய
காதல் கடிதத்தைக் காட்டினேன்
இது வெள்ளி வீதியின்
கவிதை நண்பா
இன்று காலை
மழையாய் வந்தாளே
பார்க்கவில்லையா என்றாள்
மரம்
---

உன் வீட்டு வாசலில்
தழும்புகளும்
காயங்களுமாய் நின்றுகொண்டிருக்கும்
அந்த அரச மரம் நானேதான்
அதன் ஆயிரம் நாவுகளும்
காற்றில் படபடத்துக்கொண்டிருப்பதும்
நம் காதலைத்தான்
அதன் கிளைகளில்
நீ அனுப்பிய இரு புறாக்கள்
அமர்ந்துள்ளன பாரேன்
ஒன்றின் பெயர் விருப்பம்
இன்னொன்று விருப்பின்மை
விருப்பின்மை எழுந்து
பறந்துவிடும் போதெல்லாம்
நான் உற்சாகமாகிவிடுகிறேன்
ஆயிரம் இலைகளையும்
ஒன்றோடு ஒன்றாய் உரசி ஓசையிட்டு
களி கூத்தாடுகிறேன்
விருப்பம் பறந்துவிடும்போதோ
புழுக்கம் வந்து
அமர்ந்துகொள்கின்றன என் கிளைகளில் - அன்பே
உன் வீட்டு வாசலில்
நிற்கும் அந்தக் கிளை ஒடிந்த
இலையுதிரும்
சோர்வுற்ற மரம் நானேதான்பெயரிடுதல்
---
தெரிந்தும் தெரியாமலும் ஒளிரும்
ஒரு மங்கலான நட்சத்திரத்துக்கு
உன் பெயர் வைத்திருக்கிறேன்
ஒருநாள் வெகு நேரம் தேடியும்
அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை
அவ்வளவு பிரகாசமான இருளில்
எங்குதான் போனதோ
உன் சொற்களிலிருந்து
காதலை உணர்வதை விடவும்
சிரமமானது இல்லைதான்
அதன் இருப்பை அறிவது
ஆனாலும் சமயங்களில்
சலிப்பாகிவிடுகிறது இந்த விளையாட்டுபோதை
---

நீயே என் போதை நேரப் பேச்சு
உனை
உளறி உளறி
உளறி உளறி
ஒரு கவிதை செய்கிறேன்
குழறலும் கதறலும்
புலம்பலும் மோகமும் தாபமுமாய்
அதில் அத்தனை வண்ணங்கள்

நீயே என் போதை நேரப் பயணம்
வளைந்து நெளிந்து
தடுமாறி விழுந்து
முட்டி உடைந்தாலும்
நான் உனை நோக்கியே வருகிறேன்

நீயே என் போதைக்கான பரிதவிப்பு
மாலையானதும்
என் அழுக்குச் சட்டையைத் துழாவி
சில்லறைகளைத் தேர்த்தி
திரும்பத் திரும்ப
உன் முன் வந்து நிற்கிறேன்
முள் விளையாட்டு
----

இந்த விளையாட்டை நீதான் தொடங்கினாய்
அல்லது நான் தானோ தெரியவில்லை
ரகசியமாய் வாசிக்கும் கவிதைகளில்
முள்ளை மறைத்து வைப்பது
பிரெய்லி விரல்களாய்
புன்னகையுடன்
வரி வரியாய்
நிரடிக்கொண்டே வர
எதிர்பாரா இடத்தில்
சரக்கென்று ஒரு கீறல்
கண்ணீர் போல் ரத்தம்
துளியாய் எட்டிப்பார்த்தது
சுவாரஸ்யம் கூடட்டும்
என்று மறுமுறை நான்
ஒரு கத்தியைப் பொதித்து வைத்தேன்
சரியாய் அது
உன் கண்களையே கீறியது
இம்முறை நான் எதிர்பார்த்தது போலவே
நீயும் ஒரு கத்தியைத்தான் வைத்திருந்தாய்
மிகக் கவனமாக சரியாகச் சென்று
கீறிக்கொண்டேன் - பிறகு
மிகுந்த விருப்புடன்
இம் முள் விளையாட்டில் இறங்கினோம்
இப்போதெல்லாம்
எளிய சொற்களைக்கூட கடக்க முடிவதில்லை
அதன் முட்களைத் தேடாமல்

காத்திருத்தல்
---

தென்னையின் பச்சையங்களில் மிளிரும் பூர்ணமைக்கு
உன் சருமத்தின் வாசம்
உன் நினைவுகள்
கொடுரூப நிழல்களாய் திரியும் இவ்வறையில்
ஓர் உலர்ந்த நாவல் கனியென சுருண்டு கிடக்கிறேன்
பல காலமாய்
புராதான வெளவால்களின் வீச்சம்
ஒரு குரல் போல் அலறிக்கொண்டிருக்கிறது ஓயாமல்
எத்தனை யுகங்கள்
எத்தனை யுகங்கள்
என்று ஓர் எதிரொலி
மனகுகை எங்கும் அதிர்கிறது
பல நூற்றாண்டுகளாய்
எங்கோ
அகாலத்தில் ஒரு காகம் கரைகிறது
இந்த துயர இரவின் இசை இதுதானா
திடீரென சடசடக்கின்றன தென்னைகள்
மனம் துணுக்கிடுகின்றது
நீதான் வந்துவிட்டாயா
காட்டுப்பூக்களில் தேன் நிறையும்படி அணைக்கAgalmatophilia
----
போயும் போயும்
ஒரு சிலையையா காதலிக்கிறாய் என்றாள்
நான் ஓவிட்டின் பிக்மாலியன்
கதையைச் சொன்னேன்
காதல் தேவதை அப்ரோடைட்டின்
வரத்தால்
தான் உருவாக்கிய தந்தச்சிலைக்கு
உயிர் வரம் வாங்கிக்கொண்டவன்
அது அவன்தானே
அவனைத்தானே
அவன் சிலையாக வடித்தான் என்றாள்
அவன் மட்டுமே அல்ல
அவனும்தான் அது
ஆணில் உள்ள பெண் அவள்
ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும்
எல்லோருக்குள்ளும் உண்டு
கலைஞர்களிலேயே
அந்த உள்ளுருக்கள்
முழு விழிப்பில் இருக்கிறார்கள்
ஒரு பெண் ஆணைச் சீண்டுவதன் வழியே
அவனுள் உள்ளவளையே சீண்டுகிறாள்
அவள் அவனை அடைவதன் வழியே
தன்னுள் உள்ளவனையே அடைகிறாள்
என்றேன்
நல்ல கதை என்று சிரித்துச் சென்றாள்
கலகலவென
சிலை இதழ் அறுபடச் சிரிக்கிறாள் தேவிகாத்திருத்தல்
--
காத்திருக்கத் தொடங்கி
எல்லோர் முகங்களிலும்
உனைக் கண்டதுதான் மிச்சம்
சிறு புன்னை பூக்கள்
உதிரும் தண்ணென்ற நிழலில்
இருப்பவள்
நீயல்ல என்றாலும் நீ என்று
ஒரு விளையாட்டு
ஒருவேளை நீயாக இருந்துவிடமாட்டாயா
என்ற பேராசைதான்
பக்கம் வரவர
என் சொல்போன் ஒலிக்கிறது
அதிலும் நீயல்ல
ஆனால் நீயென்று ஒரு பரபரப்பு
மென் காற்று வீசுகிறது
மனம் ததும்பிக்கொண்டேயிருக்கிறது
கண்கள் பெருகுகின்றன
வேறொருத்தியாய் நிற்கும்
அந்த புன்னை மரத்துப் பெண்ணைப் பார்க்கிறேன்
இவ்வளவு நிச்சயமாகவா
இந்தத் துயரம் கையளிக்கப்பட வேண்டும்

குட்டிச் செடி
----
சாக்கடை மேட்டின்
குட்டிச் செடிக்கு
வலுவில்லை என்றாலும்
வேர் உண்டு
நூறு இதயங்களாய் துடிக்கும்
இலைகளுக்கு அங்கிருந்து
ரத்த ஓட்டம் உண்டு
குட்டிக் குட்டியாய்
புன்னகைக்கும்
பூக்களும் உள்ளன
இளம்பச்சை வனப்பு
அதில் அத்தனை குதூகலம்
உடலெங்கும் மின்னும்
நிலவொளியில்
அதில் பூரிப்பதென்ன
காதலன்றி

Friday, March 29, 2019

எல்லாமே இலக்கியம்தானே பாஸ்?


எல்லாமே இலக்கியம்தானே? கலையின் முன் அனைவரும் சமம். நீ எழுதறது உனக்கு. நான் எழுதறது எனக்கு. சக இலக்கியவாதி எழுதுவதை இலக்கியம் இல்லை என்பவர்கள் பொறாமைக்காரர்கள். 

மேற்கண்ட உரையாடல்கள் தமிழ் சூழலில் தொடர்ந்து பல வருடங்களாக இருந்துவருகின்றன. உண்மையில் இக்கேள்வி எப்போதும் எல்லா காலத்திலும் இருக்கவே இருக்கும். 

கலை, இலக்கியம் போன்ற விஷயங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்ற புரிதல் உள்ள ஒருவர். இலக்கியங்களில் அடிப்படையான வாசிப்பு உள்ள ஒருவர் மிக நிச்சயமாக இப்படியான கருத்துகளைக்கொண்டிருக்க மாட்டார். கலையில் பல வகைமைகள் உள்ளன. அது வேறு. ஆனால், கலைத்தன்மை குறைவு என்பது வேறு. கலைத்தன்மை குறைந்த படைப்பு என்பது கலைத்தன்மை குறைந்ததுதானே அன்றியும் நிச்சயம் அதுவும் ஒருவகைக் கலைத்தன்மை அல்ல.

ஒருவர் தன் முயற்சியாலும் பயிற்சியாலும் தன்னை செழுமைப்படுத்திக்கொள்ள விழையாது இதுக்கு என்ன குறைச்சல் என்று கேட்பாரானால் அவரால் அவரது மொழிக்கு மட்டும் அல்ல அவருக்குமேகூட நிச்சயமாக எந்த நலனும் விளையப்போவது இல்லை.  

ஒரு நல்ல கவிதையைப் படித்ததுமே அது நல்ல கவிதையா இல்லையா என்பதை நம் மனம் சொல்லிவிடும். அதனோடு ஒரு சுமாரான ஒரு கவிதையை ஒப்பிட்டு பேச நேர்ந்தால் எதிர்வினை செய்யாவிடிலும் அனைவருக்குமே இது தவறு என்றுபடும்.

பிறகு ஏன் இப்படியான சொல்லாடல்கள் வருகின்றன. மிக நேரடியாகச் சொன்னால் அது ஒருவகை ஈகோ. நான் எழுதுவதை இலக்கியம் இல்லை என்று சொல்ல நீ யார் என்று ஒரு மனோபாவம். நம் ஜனநாயக சமூகம் உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகள்தான் இது போன்ற முதிர்ச்சியற்ற உரையாடல்களை உருவாக்குகின்றன. மற்றபடி, இதற்கும் இலக்கியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புதியவர்களுக்காக இதைச் திரும்பச் திரும்ப சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.  

எல்லா காலத்திலுமே மாஸ்டர்ஸ் இருந்திருக்கிறார்கள். எல்லா காலத்திலுமே அடுத்த நிலை எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். எல்லா காலத்திலுமே போலிகளும் இருந்திருக்கிறார்கள். ஒரு நல்ல வாசகனுக்கு இது நன்றாகவே புரியும். அவரவர்க்கு ஒரு மனமுதிர்ச்சி உண்டு. எல்லோருக்கும் எல்லாமும் எட்டிவிடுவதில்லை. ஒருவரின் சிரத்தை, பயிற்சி, வாழ்வியல் சூழல் எனப் பல விஷயங்கள் ஒருவரின் மன முதிர்ச்சியை, ரசனையை, புரிதலை உருவாக்குவதில் செயல்படுகின்றன. நிச்சயம் இது ஏதோ சரஸ்வதி அருளியதோ இயற்கை தேர்ந்தெடுத்ததோ இல்லை. ஒருவரின் உடல் அமைப்பு எப்படி இயற்கையானதோ அதே அளவுதான் இதுவும் இயற்கையானது. பிறகு, உழைப்பு என்று ஒரு விஷயம் உண்டு. அது இல்லாமல் இங்கு எதுவுமே இல்லை. அதனை மேம்படுத்தாமல் எல்லாம் என் இஷ்டப்படி நடக்க வேண்டும் என்பவர்கள் சூழலை மேலும் சிக்கலாக்குகிறார்கள். அந்தக் குழப்பத்தில் குளிர் காய்ந்துகொள்கிறார்கள். அவர்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

எல்லா காலத்திலும் மாஸ்டர்ஸ் இருந்திருக்கிறார்கள் என்றேன். சரி மாஸ்டர் எப்படி உருவாகிறார்கள்? ஏன் சிலரை மட்டும் அப்படி சொல்ல வேண்டும். அவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் எழுவதும் அதே மொழிதான். அவர்களுக்கு மட்டும் என்ன சிறப்பு அந்தஸ்து. யாரை மாஸ்டர் என்று சொல்வது? 


இலக்கியப் பெருந்திரட்டு என்று ஒரு விஷயம் உள்ளது. (literary canon) இது ஒரு மொழியின் தொடக்கம் தொட்டே சிறுக சிறுக உருவாகிவருவது. ஒரு மொழியின் செவ்விலக்கியங்களால் ஆனது. இந்த இலக்கியப் பெருந்திரட்டுக்கு செறிவான பங்களிப்பு செலுத்தும் ஓர் ஆளுமை அந்த மொழியின் மாஸ்டர் ஆகிறான்.

சரி எது செவ்விலக்கியம்? ஒரு மொழியின் அந்த மொழி பேசும் சமூகத்தின் உச்சபட்ச அழகியல், அறவியல் விழுமியங்களைச் சிறப்பாகப் பேசும் இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்கள் எனலாம். அழகியல், அறவியல் என்ற சொற்கள் மேலும் சிக்கலானவை. நான் இங்கு இன்றைய சூழலில் எல்லாவகை அழகியல் மற்றும் மானுட ஏற்பு அறவியலை மட்டுமே ஏற்கிறேன். நம் மொழியின் பழைய அறவியல் சிந்தனைகள் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்பதையும் புரிந்தே இதைச் சொல்கிறேன்.தமிழில் திருக்குறள் ஒரு செவ்விலக்கியம் என்றால் பின்னர் உருவாகிவந்த சிலப்பதிகாரம் ஒரு செவ்விலக்கியம். இவ்விரு செவ்விலக்கியங்களும் சேர்ந்தே கம்பனை பேரிலக்கியவாதியாக செவ்வியல் கலைஞனாக மாற்றுகின்றன. கம்பனைக் கடந்து ஒருவன் எழுதும்போது, கம்பன் அழகியல் தரத்துக்கு ஒருவன் செல்லும்போது அவனும் செவ்வியல் கவிஞனாகிறான். இப்படி செவ்வியல் என்பது ஒரு மொழியில் முன்னர் எழுதப்பட்ட உச்சபட்ச இலக்கியமாக இருக்க, காலத்தால் பின்னர் வருபவனை சவாலுக்கு அழைப்பதாக இருக்கிறது. நெஞ்சுரத்துடன் அந்த சவாலில் இறங்கி அதை எதிர்கொள்பவன் அடுத்த தலைமுறை மாஸ்டர் ஆகிறான். இது ஒரு தொடர் செயல்பாடு. 
இப்படியான தொடர்ச்சியான செயல்பாடுகள் வழியாகவே ஒரு மொழியில் இலக்கியப் பெருந்திரட்டு உருவாகிறது. இந்த இலக்கியப் பெருந்திரட்டில் பேரிலக்கியங்கள் உண்டு. நல்ல இலக்கியங்கள் உண்டு நிச்சயமாகப் போலிகள் இருக்க முடியாது. 

இவை பற்றி எல்லாம் எந்தவித அறிதலும் இல்லாமல் ஒருவர் எழுதுவது அபத்தமாகவே இருக்கும். ஒரு மொழியில் இருக்கும் மாஸ்டர்ஸ் யார் என்பதைப் பற்றி அறிந்துகொள்ளகூட மாட்டேன். அது எனக்குத் தேவையே இல்லை. நான் எழுதுவதுதான் இலக்கியம். அதை நீங்கள் படிக்க வேண்டும். அங்கீகரிக்கவும் வேண்டும் என்பவர்களைப் பற்றி என்ன சொல்ல? பரிதாபப்படுவதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமே இல்லை. கடுமையாக நிராகரித்தால் உடனே நீ யார் கமிஷாரா என்று போர் கொடி தூக்கிக்கொண்டு வருகிறார்கள். தன் நெஞ்சறிய பொய் சொல்பவர்களை என்னதான் செய்ய முடியும்? ஒரு மொழியின் இலக்கியப் பெருந்திரட்டுக்கு அதன் இதுவரையிலான பயணத்துக்கு சிறப்பு சேர்ப்பதாக ஒன்று இல்லை எனில் யோசிக்காமல் அதை புறக்கணிப்பது அன்றி நமக்கு வேறு வழியில்லை.

சரி இந்த இலக்கியப் பெருந்திரட்டு என்பது செவ்வியல்களால் ஆனது. செவ்வியல் என்பது அறவியல், அரசியல், அழகியல் சிந்தனைகளால் ஆனது எனில் இந்த அறவியல், அரசியல், அழகியல் என்பது எல்லாம் என்ன? 

அது ஒருவகை உளவியல் நிலைப்பாடு. இதை உருவாக்குவதில் ஒரு சமூகத்தின் கூட்டு நனவிலி (collective consciousness), சமூகப் படிமம் போன்றவற்றுக்கும் அதன் சமகால சமூக-அரசியல்-பண்பாட்டுச் சூழலுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. கூட்டு நனவிலி என்பது ஒரு சமூகத்தின் அரசியல் பண்பாட்டு வரலாறோடு தொடர்புடையது. ஒன்றுக்கும் மேற்பட்ட முரண்பாடுகள் உடைய சமூகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு நனவிலிகளுக்கான போராட்டம் இருந்தே தீரும். இப்படியான முரண்பாடுகள் வழியாகவே நமது அழகியல், அறவியல், அரசியல் உரையாடல்கள் உருவாகி ஒவ்வொரு காலத்தின் செவ்வியல் இலக்கியங்களையு உருவாக்குகின்றன. 

இப்படி மாறுபட்ட கூட்டு நனவிலிகளின் பெருந்தொகுப்பு உடைய சமூகத்தில் பல்வேறு விதமான இலக்கியப் பெருந்திரட்டுகளும் இருந்தே தீரும். இப்படியான பெருந்திரட்டுகளுக்கு இடையிலான பயணத்தைத்தான் நாம் இலக்கிய வரலாறு என்கிறோம். 


தமிழ் இலக்கிய வரலாறை நன்கு கவனித்தால் எந்த ஒரு படைப்பும் எல்லா காலத்திலும் ஒரே மதிப்புடன் இருந்தது இல்லை என்பதை உணரலாம். இதற்கு காரணம் நமது பெருந்திரட்டுகளுக்கு இடையிலான முரண்பாடுகள்தான். ஒரு காலச் சூழலுக்கு எது மேன்மையான படைப்பு என்பதை தீர்மானிப்பதில் அதன் அரசியல் பண்பாட்டு அதிகார சக்திகள் செயல்படும்போது அதற்கு ஏற்ற பெருந்திரட்டுகளே முதன்மைப்படுத்தப்படும்.

உதாரணமாக, திருக்குறள் இன்று இருக்கும் உயர்வான இடத்திலேயே எப்போதும் இருந்திருக்கவில்லை. இடையில் பக்தி இயக்க காலங்களில் கிட்டதட்ட காணமலேயே போயிருந்தது. கம்பராமாயணத்தின் இன்றைய ஒளிவட்டம் அது எழுதப்பட்ட காலங்களிலோ சிற்றிலக்கிய காலங்களிலோ இல்லை. அந்தந்தக் காலகட்டங்களில் சூழல் வெவ்வேறு வகையான இலக்கியப் பெருந்திரட்டுகளை முன்வைத்து அதன் செவ்வியல்களை தொகுக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சூழலில் எழுதப்படும் எழுத்து அந்த காலச் சூழலின் பெருந்திரட்டினுடைய செவ்வியல் பண்பையே உச்சமாகக் கண்டு அதை நோக்கிச் செல்லவும் அதை விஞ்சிச் செல்லவும் முயல்கின்றன. இதுவே கலை, இலக்கியச் செயல்பாடு. இப்படியான செவ்வியல் பண்பை அடையாத இலக்கியங்களை அந்தந்த பெருந்திரட்டுகளே எளிதாக நிராகரித்துவிடும்.

பல்வேறு வகையான இலக்கியப் பெருந்திரட்டுகள் இருந்தாலும் இவற்றுக்கு இடையே எப்போதும் வித்தியாசங்களைப் போலவே ஒற்றுமையும் இருந்துவந்திருக்கிறது. இதுவும் ஒருவகை கூட்டு நனவிலிச் செயல்பாடுதான். இந்த ஒற்றுமையே சக பெருந்திரட்டுகள் மீதான வன்மத்தை அழித்தொழிப்பை நிகழ்த்தாத வண்ணம் மனிதர்களைத் தடுத்திருக்கிறது. (அப்படி இருந்தும் நாம் தொலைத்த இலக்கியங்கள் இங்கு ஏராளம்) கால சூழலையும் கடந்து படைப்பாளிகளிடையே எந்த பெருந்திரட்டைச் சேர்ந்தது என்றாலும் செவ்வியல் இலக்கியத்தின் மீதான ஏற்பும் இருந்தே வந்திருக்கிறது. அந்த ஏற்புதான் திருக்குறளை இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து நம்மிடம் வந்து சேர்த்திருக்கிறது. ஓர் இலக்கியம் எப்படி செவ்வியலாகிறது என்பது அதன் அரசியல், சமூகவியல் பண்புகளைக் கடந்து கூட்டு நனவிலியால் தீர்மானம் ஆகும் விஷயம்.

திருக்குறள் ஓர் ஆசிவக நூல். பாவை நோம்பு இருக்கும் ஆண்டாள் எனும் வைணவக் கவி தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள். வைணவர்களிடம் இருந்த ஆசிவக மற்றும் சமண ஏற்பின் அடையாளமாக இதைப் பார்க்கலாம். (சமணத்துக்கும் சைவத்துக்கும் ஆகாது என்பதைப் போலவே சைவத்துக்கும் வைணவத்துக்கும் ஆகாது. எனவே, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற மனநிலையாகவும் இருக்கலாம்) 

வரலாறு என்பதும் சமூகம் என்பதும் காலம்தோறும் மாறும்போது இந்த செவ்வியல் இலக்கியங்கள் பற்றிய நமது கோட்பாடுகள், பார்வைகள் ஆகியவையும் காலந்தோறும் மாறியே வந்திருக்கின்றன.  

பின் நவீனத்துவம் போன்ற உரையாடல்கள், இலக்கியப் பெருந்திரட்டு போன்ற கருத்தாக்கங்களைப் பெருங்கதையாடல்கள் என்கின்றன. இவ்வகைப் பெருங்கதையாடல்கள் சமூகங்களில் மையம் மற்றும் விளிம்பு என பாரபட்சங்களை உருவாக்குகின்றன என்கிறது. எனவே, இந்தப் பெருங்கதையாடல்களுக்கு மாற்றாக பன்முகத்தன்மையை முன்வைக்கின்றன. இது ஒரு பார்வை அவ்வளவே. பின் நவீனத்துவம் பெருங்கதையாடல்களை மறுக்கிறது என்பதன் பொருள் எல்லா குப்பைகளையும் ஒரே தட்டில் வைத்துக் கட்ட வேண்டும் என்பது அல்ல. ஒரு அமைப்புக்கும் இன்னொரு அமைப்புக்கும் இடையே நிகழும் அரசியலை, அதிகாரத்தை நீக்க வேண்டும் என்பதுதான் அதில் முக்கியமே அன்றியும் நுட்பத்துக்குப் பதிலாக மொன்னைத்தனத்தை முன்வைப்பது அல்ல.