Monday, November 27, 2017

தரிசனம் (சிறுகதை)
இன்று காலை நான் கடவுளைப் பார்த்தேன். சரி சிரிக்க வேண்டாம். நிஜமாகவே பார்த்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால், நான் கதாசிரியன். கதாசிரியன் சொல்வதை நம்பத் தொடங்குவதுதான் கதை கேட்பதன் முதல் தகுதி. சரி கடவுளைப் பார்த்தேன் என்றேன் அல்லவா? எங்கு பார்த்தேன் என்று சொல்லவில்லையே, கோயம்பேடு மார்க்கெட்டில்தான் தரிசனம். அதுவும் ஒருமுறை அல்ல; இரு முறை. அதை தரிசனம் என்று சொல்லலாமா தெரியவில்லை. என் கண் எதிரே தட்டுப்பட்டார். அதுவும் நான் எதிர்பார்க்காத நேரத்தில்.

எத்தனையோ கோடி பக்தர்கள் எத்தனை எத்தனையோ வழிகளில் தேடித் திரிகிறார்கள். நாள்தோறும் ஆறுகால பூஜை செய்து, விரதம் இருந்து, சஷ்டி பிடித்து, சபரிமலைக்கு மாலை போட்டு, த்ரிகால சந்தியாவந்தனம் செய்து என்று ஒரு கூட்டம். ஹஜ்ஜுக்கு யாத்திரை போய், ஆறு வேளையும் மறக்காது தொழுது என்று ஒரு கூட்டம். ஞாயிறு தோறும் சர்ச்சுக்குப் போய் சங்கீதம் வாசித்து, சிலுவை தரித்து என்று ஒரு கூட்டம் இப்படி பல கூட்டங்கள். ஒவ்வொருவரும் தலையால் தண்ணிக்குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் விட்டுவிட்டு அவர் ஏன் எழுத்தாளர்களிடமே வருகிறாரோ? முன்பு புதுமைப்பித்தனிடம்; அப்புறம் அசோகமித்திரனிடம்; ஏன் கடைசியாக ஆதவன் தீட்சண்யாவைக்கூட போய் பார்த்திருக்கிறார். ஆனால், அவர்கள் எல்லாம் பராவாயில்லை. மதித்துப் பேசவாவது செய்தார்கள். நான்தான் கண்டுகொள்ளவே இல்லை. இலக்கியக்கூட்டத்தில் பெரிய எழுத்தாளரைப் பார்த்த இளம் எழுத்தாளன் போல நடந்துகொண்டேன்.

விஷயத்துக்கு வருகிறேன். உங்களுக்கு அடிஸ்கேலைத் தெரியுமா? அதாவது நான் சொல்லும் அடிஸ்கேல் நீங்கள் புரிந்துவைத்திருப்பது அல்ல. அது ஒரு ஜீவராசி. இன்னும் சொல்லப்போனால் மனிதன். அதுவும் சின்னப்பையன் எல்லாம் அல்ல; - நாலு கழுதை வயசு -– அப்படித்தான் அவன் வீட்டில் திட்டுவார்கள் - உள்ள மனிதன். அடிஸ்கேலுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்பது ஒரு கதை. அதை அப்புறம் சொல்கிறேன்.

அவன் போனவாரம் வீட்டில் கோபித்துக்கொண்டு போய்விட்டான். இது அவனுக்கு வழக்கம்தான். அடிக்கடி இப்படி கோபித்துக்கொண்டு ஓடிப்போய்விடுவான். அதுவும் தப்புத் தப்பாகத் தமிழில் கடிதம் எழுதிவைத்துவிட்டு என்பது கூடுதல் எரிச்சல். சென்ற முறை சின்னக் குறிப்பு ஒன்றை எழுதி, அதை முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்புறம் சொருகிவிட்டு போனான். அதைப் பார்த்தபோது எனக்கு சிரிப்பும் கோபமும் ஒருங்கே வந்தன. ’நாண் பேகிறேன். தோடாதீர்கள்‘ என எனக்கு அவன் ஓடிப்போனதைவிட அப்படி ஒரு கடிதம் எழுதியது அவமானமாய் இருந்தது. இருக்காதே பின்னே? என்ன இருந்தாலும் ஒரு எழுத்தாளனின் மச்சான் அல்லவா? இப்படித் தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டிருந்தால் இந்த சமூகத்தில் என் மரியாதை என்னாவது?

அப்படி ஓடிப்போனவன் ஒரு வாரம் கழித்து வந்தான். திருச்செந்தூருக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு, கடலில் விழுந்து தற்கொலை செய்யப் போனானாம். குழந்தையின் (என் மகளின்) முகம் நினைவுக்கு வர மனசை மாற்றிக்கொண்டானாம். செல்லாமாள், என் மனைவி இதைச் சொல்லிச் சொல்லி மெய்சிலிர்த்தாள். ‘என் தம்பிக்கு நம்ம கொழந்தை மேல எத்தனை பாசம்‘ என்று. நான் அதை நம்பவில்லை. ‘கையில் கொண்டுபோன காசு தீர்ந்திருக்கும். கும்பி காய்ந்ததும் வீட்டுக்குத் திரும்பியிருப்பான்‘ என்றேன். ‘என் தம்பியை எப்போதும் மட்டம் தட்டிட்டே இருங்க‘ என்று அங்கலாய்த்தாள்.

சென்றமுறை பரவாயில்லை; அவனுக்குக் கல்யாணம் இல்லை. இப்போது அவனையும் நம்பி ஒருத்தி வந்துவிட்டாள். ஆனாலும் தடிமாட்டுக்குப் பொறுப்பில்லை. ஆனால், இந்த முறை ஒரு மாதமாக பயலைக் காணவில்லை. அவனின் அம்மாவும், பொண்டாட்டியும், அக்காளுமாகச் சேர்ந்து மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தார்கள்.

தினந்தோறும் அழுகைதான். நாளாக ஆக எனக்குமே பயமாக இருந்தது. ரோஷக்காரன் எங்காவது விழுந்துகிழுந்து தொலைச்சிருக்கப்போறான் என்று. 10 நாளாக காணவில்லை என்றதும் போலிஸில் சொல்லலாம் என்று நான் சொன்னேன். ஸ்டேஷனில் எனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் போய் சொன்னோம். புகார் எழுதித் தாருங்கள் என்றார்கள். தந்துவிட்டு வந்தோம். காசு செலவானதுதான் மிச்சம்.

பிறகு, தாடிக்கொம்பு மாந்திரீகரிடம் போய் மைபோட்டுப் பார்த்தார்கள். சாமியார் ‘அவன் வடக்கே போய்விட்டான்‘ என்றார். ‘காசிக்குப் போய் பார்க்கலாமா‘ என்று செல்லம்மாள் கேட்டாள். ‘காசி என்ன பக்கமா? பாடா? பாஷையும் தெரியாது… இப்படித்தான் போன வருஷம் ஆபிஸ் டூரில் ஆக்ரா போனபோது, ஒரு வளையல் கடையில் நுழைந்தோம். அந்தப் பெண் ஒரு ஜோடி வளையல் இருபது ரூபாய் என ஹிந்தியில் சொல்ல, அதெல்லாம் முடியாது முப்பது ரூபாய்தான் தருவேன் என நான் அடம்பிடித்தேன். அந்தப் பெண்ணோ ‘கிறுக்கா இவன்‘ என நினைத்தபடி திருதிருவென விழித்தது. அப்புறம் உடன் வந்த சாமிநாதன்தான் விஷயத்தை விளங்கவைத்தார். இப்படி நான் ஆக்ரா போன கதையே வட இந்தியா முழுக்க மணக்கிறது. இதில் காசி வேறா விஸ்வநாதா என்று பலப்பல சிந்தனையில் நான் குழம்பிக்கொண்டிருந்தபோதுதான், விடிந்தும் விடியாத பொழுதில், பக்கத்து ரூம் அசோக் போன் செய்தான். ’சார்! உங்க மச்சானைக் கோயம்பேடு மார்க்கெட்டுல பார்த்தேன்‘
நான் சுருட்டிவாரிக்கொண்டு எழுந்தேன். விஷயத்தை மனைவியிடமும், மாமியாரிடமும் சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தேன். என் வீட்டில் இருந்து ஒரு அரை கிலோ மீட்டர்தான் மார்கெட் என்பதால் சுலபத்தில் போய்விடலாம். ஆனால், காலை நேரம் லோடு அடிக்கும் வண்டிகள் மொய்த்திருக்கும் என்பதால், மார்க்கெட்டுக்குள் நுழைவது அவ்வளவு எளிதில்லை. அப்படியே அந்த தெருவில் நுழைந்தாலும் பார்க்கிங்குக்கு இடம் கிடைப்பது துர்லபம். ஒரு வழியாய் மார்க்கெட்டுக்குள் நுழைந்து, இடம் தேறி வண்டியை ஸ்டாண்டிட்டுவிட்டு நான்கடி நடந்தால், ஒருத்தன் பின்னாடியே வந்து, ’சார் வண்டியை அப்பால போடு சார்‘ என்பான். சரி என்று தள்ளிக்கொண்டு போனால், மார்கெட்டின் கடைக்கோடி வரை தள்ளிக்கொண்டே போகவேண்டியதுதான். அப்படியும் நிறுத்த இடம் கிடைக்காது. இன்று எப்படியோ வண்டியை நிறுத்திவிட்டு, அசோக் சொன்ன செந்தில் ஆண்டவர் ஸ்டோர்ஸ் கடையைத் தேடி ஓடிக்கொண்டிருந்தேன்.

அழுகிய காய்கறிகளின் மெலிதான நாற்றத்தோடு காலையின் பரபரப்பில் இருந்தது மார்கெட். இங்குதான் எத்தனை எத்தனை வகையான மனிதர்கள். இருமருங்கிலும் காய்கறிகள் குவிந்திருக்க, காய்கறிக் குப்பைகள் கொட்டப்பட்டு ஈரமும் நசநசப்புமாய் இருக்கும் நடுப்பாதையில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும், முந்திக்கொண்டும் நகர்ந்துகொண்டிருந்தது கூட்டம். இதில் தள்ளுவண்டி வேறு. இந்த லட்சணத்தில் பைக்கை வேறு உள்ளேயே ஓட்டிக்கொண்டு வருவார்கள் மகாராஜர்கள். எதன் மீதோ கால் வைத்தேனா? படீர் என வழுக்கி விழுந்தேன். அப்போதுதான் கடவுள் என்னைக் கடந்து சென்றார் போல… ‘அடக்கடவுளே‘ எனவும், ‘என்னப்பா‘ என்றார். அப்போது நான் தேடிக்கொண்டிருந்தது மச்சானைத்தானே கடவுளை அல்லவே… எனவே கண்டுகொள்ளவில்லை என்று சொன்னால் நீங்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது.

ஒரு வழியாய் அலைந்து திரிந்து செந்தில் ஆண்டவர் ஸ்டோர்ஸைக் கண்டுபிடித்தேன். நான் போகும்போது புளி மூட்டையைப் பிரித்து, அதில் இருந்த எடை போட்டுக் கட்டிக்கொண்டிருந்தான் அடிஸ்கேல். அவன் என்னைப் பார்த்ததும் மிக இயல்பாக ‘மாமா‘ என விளித்தான். உள்ளே சென்று யாரிடமோ சொல்லிவிட்டு வந்தான். ’ஏண்டா எங்க உயிரை எடுக்கறே‘ என்றேன். ‘திட்டாதீங்க மாமா… என் ஜாதகத்தால உங்க உசிருக்கு ஆபத்துன்னு எட்டிமடை ஜோஸ்யர் சொன்னாரு. அதான், என்னால எதுக்கு உங்களுக்குப் பிரச்னைன்னு கிளம்பிட்டேன்.‘ என்றான். ‘அடேய்! கக்ககருமம் பிடிச்சவனே நீ இல்லாட்டியும் பிரச்சனைதாண்டா, முதல்ல வீட்டுக்கு வந்து சேரு‘ என்றேன். வீட்டுக்குத் திரும்பும் வழியில் சரியாக அதே இடம்… அதே போல வழுக்கல்… அதே போல் கீழே விழுந்தேன்… அதே போல் கடவுளே எனவும், அப்போதும் கேட்டார் ‘என்னாச்சுப்பா‘ என்று, ஆனால், எனக்குத்தான் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. என்னத்தைச் சொல்ல என்ன இருந்தாலும் பாவம் அவரே வெறும் கடவுள்தானே, சொல்லி என்ன ஆகப்போகிறது சொல்லுங்கள்?

--

(நன்றி: குங்குமம் வார இதழ்)


1 comment: