Monday, November 27, 2017

தரிசனம் (சிறுகதை)
இன்று காலை நான் கடவுளைப் பார்த்தேன். சரி சிரிக்க வேண்டாம். நிஜமாகவே பார்த்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால், நான் கதாசிரியன். கதாசிரியன் சொல்வதை நம்பத் தொடங்குவதுதான் கதை கேட்பதன் முதல் தகுதி. சரி கடவுளைப் பார்த்தேன் என்றேன் அல்லவா? எங்கு பார்த்தேன் என்று சொல்லவில்லையே, கோயம்பேடு மார்க்கெட்டில்தான் தரிசனம். அதுவும் ஒருமுறை அல்ல; இரு முறை. அதை தரிசனம் என்று சொல்லலாமா தெரியவில்லை. என் கண் எதிரே தட்டுப்பட்டார். அதுவும் நான் எதிர்பார்க்காத நேரத்தில்.

எத்தனையோ கோடி பக்தர்கள் எத்தனை எத்தனையோ வழிகளில் தேடித் திரிகிறார்கள். நாள்தோறும் ஆறுகால பூஜை செய்து, விரதம் இருந்து, சஷ்டி பிடித்து, சபரிமலைக்கு மாலை போட்டு, த்ரிகால சந்தியாவந்தனம் செய்து என்று ஒரு கூட்டம். ஹஜ்ஜுக்கு யாத்திரை போய், ஆறு வேளையும் மறக்காது தொழுது என்று ஒரு கூட்டம். ஞாயிறு தோறும் சர்ச்சுக்குப் போய் சங்கீதம் வாசித்து, சிலுவை தரித்து என்று ஒரு கூட்டம் இப்படி பல கூட்டங்கள். ஒவ்வொருவரும் தலையால் தண்ணிக்குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் விட்டுவிட்டு அவர் ஏன் எழுத்தாளர்களிடமே வருகிறாரோ? முன்பு புதுமைப்பித்தனிடம்; அப்புறம் அசோகமித்திரனிடம்; ஏன் கடைசியாக ஆதவன் தீட்சண்யாவைக்கூட போய் பார்த்திருக்கிறார். ஆனால், அவர்கள் எல்லாம் பராவாயில்லை. மதித்துப் பேசவாவது செய்தார்கள். நான்தான் கண்டுகொள்ளவே இல்லை. இலக்கியக்கூட்டத்தில் பெரிய எழுத்தாளரைப் பார்த்த இளம் எழுத்தாளன் போல நடந்துகொண்டேன்.

விஷயத்துக்கு வருகிறேன். உங்களுக்கு அடிஸ்கேலைத் தெரியுமா? அதாவது நான் சொல்லும் அடிஸ்கேல் நீங்கள் புரிந்துவைத்திருப்பது அல்ல. அது ஒரு ஜீவராசி. இன்னும் சொல்லப்போனால் மனிதன். அதுவும் சின்னப்பையன் எல்லாம் அல்ல; - நாலு கழுதை வயசு -– அப்படித்தான் அவன் வீட்டில் திட்டுவார்கள் - உள்ள மனிதன். அடிஸ்கேலுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்பது ஒரு கதை. அதை அப்புறம் சொல்கிறேன்.

அவன் போனவாரம் வீட்டில் கோபித்துக்கொண்டு போய்விட்டான். இது அவனுக்கு வழக்கம்தான். அடிக்கடி இப்படி கோபித்துக்கொண்டு ஓடிப்போய்விடுவான். அதுவும் தப்புத் தப்பாகத் தமிழில் கடிதம் எழுதிவைத்துவிட்டு என்பது கூடுதல் எரிச்சல். சென்ற முறை சின்னக் குறிப்பு ஒன்றை எழுதி, அதை முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்புறம் சொருகிவிட்டு போனான். அதைப் பார்த்தபோது எனக்கு சிரிப்பும் கோபமும் ஒருங்கே வந்தன. ’நாண் பேகிறேன். தோடாதீர்கள்‘ என எனக்கு அவன் ஓடிப்போனதைவிட அப்படி ஒரு கடிதம் எழுதியது அவமானமாய் இருந்தது. இருக்காதே பின்னே? என்ன இருந்தாலும் ஒரு எழுத்தாளனின் மச்சான் அல்லவா? இப்படித் தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டிருந்தால் இந்த சமூகத்தில் என் மரியாதை என்னாவது?

அப்படி ஓடிப்போனவன் ஒரு வாரம் கழித்து வந்தான். திருச்செந்தூருக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு, கடலில் விழுந்து தற்கொலை செய்யப் போனானாம். குழந்தையின் (என் மகளின்) முகம் நினைவுக்கு வர மனசை மாற்றிக்கொண்டானாம். செல்லாமாள், என் மனைவி இதைச் சொல்லிச் சொல்லி மெய்சிலிர்த்தாள். ‘என் தம்பிக்கு நம்ம கொழந்தை மேல எத்தனை பாசம்‘ என்று. நான் அதை நம்பவில்லை. ‘கையில் கொண்டுபோன காசு தீர்ந்திருக்கும். கும்பி காய்ந்ததும் வீட்டுக்குத் திரும்பியிருப்பான்‘ என்றேன். ‘என் தம்பியை எப்போதும் மட்டம் தட்டிட்டே இருங்க‘ என்று அங்கலாய்த்தாள்.

சென்றமுறை பரவாயில்லை; அவனுக்குக் கல்யாணம் இல்லை. இப்போது அவனையும் நம்பி ஒருத்தி வந்துவிட்டாள். ஆனாலும் தடிமாட்டுக்குப் பொறுப்பில்லை. ஆனால், இந்த முறை ஒரு மாதமாக பயலைக் காணவில்லை. அவனின் அம்மாவும், பொண்டாட்டியும், அக்காளுமாகச் சேர்ந்து மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தார்கள்.

தினந்தோறும் அழுகைதான். நாளாக ஆக எனக்குமே பயமாக இருந்தது. ரோஷக்காரன் எங்காவது விழுந்துகிழுந்து தொலைச்சிருக்கப்போறான் என்று. 10 நாளாக காணவில்லை என்றதும் போலிஸில் சொல்லலாம் என்று நான் சொன்னேன். ஸ்டேஷனில் எனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் போய் சொன்னோம். புகார் எழுதித் தாருங்கள் என்றார்கள். தந்துவிட்டு வந்தோம். காசு செலவானதுதான் மிச்சம்.

பிறகு, தாடிக்கொம்பு மாந்திரீகரிடம் போய் மைபோட்டுப் பார்த்தார்கள். சாமியார் ‘அவன் வடக்கே போய்விட்டான்‘ என்றார். ‘காசிக்குப் போய் பார்க்கலாமா‘ என்று செல்லம்மாள் கேட்டாள். ‘காசி என்ன பக்கமா? பாடா? பாஷையும் தெரியாது… இப்படித்தான் போன வருஷம் ஆபிஸ் டூரில் ஆக்ரா போனபோது, ஒரு வளையல் கடையில் நுழைந்தோம். அந்தப் பெண் ஒரு ஜோடி வளையல் இருபது ரூபாய் என ஹிந்தியில் சொல்ல, அதெல்லாம் முடியாது முப்பது ரூபாய்தான் தருவேன் என நான் அடம்பிடித்தேன். அந்தப் பெண்ணோ ‘கிறுக்கா இவன்‘ என நினைத்தபடி திருதிருவென விழித்தது. அப்புறம் உடன் வந்த சாமிநாதன்தான் விஷயத்தை விளங்கவைத்தார். இப்படி நான் ஆக்ரா போன கதையே வட இந்தியா முழுக்க மணக்கிறது. இதில் காசி வேறா விஸ்வநாதா என்று பலப்பல சிந்தனையில் நான் குழம்பிக்கொண்டிருந்தபோதுதான், விடிந்தும் விடியாத பொழுதில், பக்கத்து ரூம் அசோக் போன் செய்தான். ’சார்! உங்க மச்சானைக் கோயம்பேடு மார்க்கெட்டுல பார்த்தேன்‘
நான் சுருட்டிவாரிக்கொண்டு எழுந்தேன். விஷயத்தை மனைவியிடமும், மாமியாரிடமும் சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தேன். என் வீட்டில் இருந்து ஒரு அரை கிலோ மீட்டர்தான் மார்கெட் என்பதால் சுலபத்தில் போய்விடலாம். ஆனால், காலை நேரம் லோடு அடிக்கும் வண்டிகள் மொய்த்திருக்கும் என்பதால், மார்க்கெட்டுக்குள் நுழைவது அவ்வளவு எளிதில்லை. அப்படியே அந்த தெருவில் நுழைந்தாலும் பார்க்கிங்குக்கு இடம் கிடைப்பது துர்லபம். ஒரு வழியாய் மார்க்கெட்டுக்குள் நுழைந்து, இடம் தேறி வண்டியை ஸ்டாண்டிட்டுவிட்டு நான்கடி நடந்தால், ஒருத்தன் பின்னாடியே வந்து, ’சார் வண்டியை அப்பால போடு சார்‘ என்பான். சரி என்று தள்ளிக்கொண்டு போனால், மார்கெட்டின் கடைக்கோடி வரை தள்ளிக்கொண்டே போகவேண்டியதுதான். அப்படியும் நிறுத்த இடம் கிடைக்காது. இன்று எப்படியோ வண்டியை நிறுத்திவிட்டு, அசோக் சொன்ன செந்தில் ஆண்டவர் ஸ்டோர்ஸ் கடையைத் தேடி ஓடிக்கொண்டிருந்தேன்.

அழுகிய காய்கறிகளின் மெலிதான நாற்றத்தோடு காலையின் பரபரப்பில் இருந்தது மார்கெட். இங்குதான் எத்தனை எத்தனை வகையான மனிதர்கள். இருமருங்கிலும் காய்கறிகள் குவிந்திருக்க, காய்கறிக் குப்பைகள் கொட்டப்பட்டு ஈரமும் நசநசப்புமாய் இருக்கும் நடுப்பாதையில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும், முந்திக்கொண்டும் நகர்ந்துகொண்டிருந்தது கூட்டம். இதில் தள்ளுவண்டி வேறு. இந்த லட்சணத்தில் பைக்கை வேறு உள்ளேயே ஓட்டிக்கொண்டு வருவார்கள் மகாராஜர்கள். எதன் மீதோ கால் வைத்தேனா? படீர் என வழுக்கி விழுந்தேன். அப்போதுதான் கடவுள் என்னைக் கடந்து சென்றார் போல… ‘அடக்கடவுளே‘ எனவும், ‘என்னப்பா‘ என்றார். அப்போது நான் தேடிக்கொண்டிருந்தது மச்சானைத்தானே கடவுளை அல்லவே… எனவே கண்டுகொள்ளவில்லை என்று சொன்னால் நீங்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது.

ஒரு வழியாய் அலைந்து திரிந்து செந்தில் ஆண்டவர் ஸ்டோர்ஸைக் கண்டுபிடித்தேன். நான் போகும்போது புளி மூட்டையைப் பிரித்து, அதில் இருந்த எடை போட்டுக் கட்டிக்கொண்டிருந்தான் அடிஸ்கேல். அவன் என்னைப் பார்த்ததும் மிக இயல்பாக ‘மாமா‘ என விளித்தான். உள்ளே சென்று யாரிடமோ சொல்லிவிட்டு வந்தான். ’ஏண்டா எங்க உயிரை எடுக்கறே‘ என்றேன். ‘திட்டாதீங்க மாமா… என் ஜாதகத்தால உங்க உசிருக்கு ஆபத்துன்னு எட்டிமடை ஜோஸ்யர் சொன்னாரு. அதான், என்னால எதுக்கு உங்களுக்குப் பிரச்னைன்னு கிளம்பிட்டேன்.‘ என்றான். ‘அடேய்! கக்ககருமம் பிடிச்சவனே நீ இல்லாட்டியும் பிரச்சனைதாண்டா, முதல்ல வீட்டுக்கு வந்து சேரு‘ என்றேன். வீட்டுக்குத் திரும்பும் வழியில் சரியாக அதே இடம்… அதே போல வழுக்கல்… அதே போல் கீழே விழுந்தேன்… அதே போல் கடவுளே எனவும், அப்போதும் கேட்டார் ‘என்னாச்சுப்பா‘ என்று, ஆனால், எனக்குத்தான் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. என்னத்தைச் சொல்ல என்ன இருந்தாலும் பாவம் அவரே வெறும் கடவுள்தானே, சொல்லி என்ன ஆகப்போகிறது சொல்லுங்கள்?

--

(நன்றி: குங்குமம் வார இதழ்)


விதானத்துச் சித்திரம் - நூல் விமர்சனம்

இசையில் விரியும் நிலம்!

ரவி சுப்பிரமணியனின் ’விதானத்துச் சித்திரம்’ கவிதைத் தொகுப்பு குறித்து…

1.
உணர்வின் சொல் வடிவம்தான் கவிதை என்றால்; அந்த உணர்வில் கரைவதுவே கவிதை வாசிப்பு. ’கரைவதும் அனுபவமாவதும் தவிர வேறென்ன இருக்கிறது கவிதையில்’ என்ற லா.ச.ரா வின் வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை. உணர்வுதான் கவிதை என்றால் பிரவாகித்தல்; தணிதல் என்ற இரு பண்புகள் கவிதைக்கு எப்போதும் உள்ளன. மேற்கின் மரபு அதை கிளாசிஸம் என்றும் ரொமாண்டிசம் என்றும் பகுக்கிறது. நம் மரபிலும் இந்த இரண்டு பண்புகளும் இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுகளால் ஆன செவ்வியல் என்றால் பக்தி இலக்கியம் கட்டுக்கடங்காத உணர்வெழுச்சிகளின் பிரவாகம். எந்த மொழி என்றாலும் இந்த இரண்டு போக்குகளும் மாறி மாறி வருவதும் கூடியும் முயங்கியும் ஒட்டியும் வெட்டியும் வருவதுவே கவிதையியலின் வரலாறாக இருக்கிறது.

தமிழ் கவிதையைப் பொருத்த வரை சென்ற நூற்றாண்டு என்பது மிக முக்கியமான திருப்பு முனை. பாரதி போன்ற நியோ ரொமாண்டிசிஸ கவி ஒருவரின் தாக்காத்தோடு உருவான நவீன கவிதை, ரொமாண்டிசிஸ வழியை விட்டு விலகி செவ்வியலின் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்ற பாதையில் நுழைந்தது. இதற்கு க.நா.சு ஒரு முக்கியமான காரணம்.

தமிழ் நவீன கவிதையின் தொடக்கம் என்பது மேற்கின் நியோ கிளாசிசத்தால் ஆதர்சம் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் அதை போலச் செய்வதாக அதன் பாதிப்பில் உருவானதாக இருந்தது. உண்மையில் இலக்கியத்தில் மட்டும் அல்ல, சென்ற நூற்றாண்டின் தமிழ் வாழ்வு என்பதுவே ஆயிரம் ஆண்டுகால மரபார்ந்த இம்மண்ணின் வாழ்வுடன் திடீரென கத்தரித்துக்கொண்டதாகத்தான் இருந்தது.

குறிப்பாக, இந்திய சுதந்திரத்துக்குப் பிறகான காலத்தைச் சொல்லாம். தமிழில் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் முழுதும் விடுபடாத நிலையில் முதலாளித்துவத்துக்குள் தமிழ் சமூகம் நுழைந்ததும் நிறைய பண்பாட்டு மாற்றங்களை உருவாக்கின. அப்படி நிகழ்ந்தவற்றுள் தலையாயது இம்மண்ணின்
மரபார்ந்த கலை வடிவங்கள், அறிவுமுறைமைகள் அனைத்தும் கைவிடப்பட்டதுதான்.

செந்தமிழ், கொடுந்தமிழ் என செவ்வியல் இலக்கியத்தையும் நாட்டார் இலக்கியத்தையும் வகுத்து வளர்த்த மரபு ஒன்று இங்கிருந்தது. கூத்து போன்ற கலை வடிவங்கள் செவ்வியல் மரபுகளையும் பெளராணிக மரபுகளையும் நாட்டார் மரபுகளையும் இணைக்கும் வேலையையும் செய்தன. அதுமட்டும் அல்லாமல் ஒரு மரபின் கலை அறிவை இன்னொரு மரபின் கலை அறிவோடு உரையாடச் செய்யும் வேலையையும் செய்துவந்தன. இன்னொரு பக்கம் நிலப்பிரபுத்துவத்தின் அங்கமாக இருந்த கோயில் மையப் பொருளாதாரம் எனும் அமைப்பு சிற்பம், ஓவியம், நடனம், பாடல், காப்பியம், நாடகம் போன்ற செவ்வியல் கலைகளையும் கூத்து போன்ற நாட்டார் கலைகளையும் இணைக்கும் வெளியாகவும் இருந்தன. இப்படியான சூழலில்தான் நாம் நவீன காலம் தொடங்கியது.

ஏலவே சொன்னது போல நம் நவீன காலம் என்பது மேற்கின் நவீன காலம் போன்றது அல்ல. மேற்கின் நவீன காலம் என்பது அதன் இயல்பான வரலாற்றுப்போக்கிலான சமூக முதிர்ச்சியால் உருவானது. ஆனால் நம் நவீன காலம் சமூக அரசியல் காரணங்களால் மேலிருந்து கீழாக திணிக்கப்பட்டது.

ரவி சுப்பிரமணியன் 1980-களின் பின் பகுதியில் எழுதவருகிறார். இந்தக் காலம் என்பது நவீன கவிதையின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்த தொடக்க கால குழப்பங்கள் ஓரளவு தெளிய தொடங்கிய காலம் எனலாம். மேற்கின் தத்துவ மரபு, சிந்தனை மரபு, கலை இலக்கிய மரபு ஆகியவை பற்றிய உரையாடல்கள், நம் நிலம் சார்ந்த தத்துவ, கலை மரபுகள் எதுவென்ற தேடுதலை உருவாக்கிய காலகட்டமாக அது இருந்தது. வானம்பாடிகள், எழுத்து என்ற இரு முக்கியமான இலக்கியப் போக்குகள் அதன் தீவிரமான சுவடுகளைப் பதித்திருந்த காலகட்டம். இவ்விரண்டு போக்குகளில் இருந்தும் உத்வேகம் பெற்ற படைப்பாளிகள் தமிழில் உருவாகத் தொடங்கிய காலகட்டமாகவும் அது இருந்தது. இப்படியான சூழலில்தான் ரவி சுப்பிரமணியனின் கவிதைப் பிரவேசம் நிகழ்கிறது.

2.
தமிழில் புதுக் கவிஞர் என்ற சொற்பிரயோகம் வானம்பாடி மரபினரையும் நவீன கவிஞர் என்ற சொற்பிரயோகம் எழுத்து மரபினரையும் குறிப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. 1980-களுக்குப் பின்வந்த கவிஞர்கள் இவ்விரண்டு மரபுகளின் போக்குகளிலும் ஆதர்சம் பெற்றவர்களாக இருந்தார்கள். ரவி சுப்பிரமணியனின் கவிதைகளில் வடிவ எளிமையில் வானம்பாடிகளின் சாயலையும் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு முறையிலும் உணர்ச்சிகளைக் கையாள்வதிலும் எழுத்து மரபின் சாயலையும் காணலாம்.

ரவி சுப்பிரமணியன் கவிதைகள் எளிமையானவை. நேரடியான அர்த்தங்கள் கொண்டவை. சிக்கலான படிமங்கள்; சூட்சுமமான பிரதிகள் அதிகம் இல்லாதவை. இவரின் பல கவிதைகள் மிக நேரடியாகச் சொல்ல வந்ததைத் சொல்லிவிடுகின்றன. இவரின் கவிதையில் வரும் ஒரு விதானம் விதானமாகவே இருக்கிறது. அதற்கு மேலதிக படிமத்தன்மையோ குறியீட்டுத்தன்மை அவர் வழங்குவதில்லை. இந்தப் பண்பு கவிதைகளுக்கு ஓர் எளிமையையும் தனித்தன்மையையும் கொண்டு வருகிறது.

எழுத்து மரபின் கவிதைகள் தனிமனித சிக்கல்களைப் பிரச்சனைகளைப் பேசுபவை என்பதால் அவற்றில் கசப்பும் அழுகையும் பிரதான உள்ளடக்கமாக இருக்கும். ரவி சுப்பிரமணியன் கவிதைகளிலும் கசப்பு உண்டு. ஆனால் அது வன்மமாவது இல்லை. கண்ணீர் உண்டு. ஆனால் அது சுயகழிவிரக்கமாவது இல்லை. புகார்களற்ற உறவுச் சிக்கல்களைப் பேசும் கவிதைகளாக இவரின் கவிதைகள் இருக்கின்றன.

ரவி சுப்பிரமணியன் கவிதைகளின் பிரதான பண்பு இசைமை. இவரின் பல கவிதைகளில் இசை பற்றிய படிமங்கள், கூற்றுகள், சொல்லாடல்கல் மிக இயல்பாக வெளிப்படுவது ஒரு பக்கம் என்றால், கவிதையின் ஓசை அமைப்பிலும் இசை ஒரு பிரதான இடம் வகிக்கிறது. பொதுவாக, நவீன கவிதைகள் என்பவை மரபுக் கவிதைகளில் இருந்து வெளியேறிவை என்பதால் அவற்றில் மரபின் சந்த நயம் இருக்காது என்பார்கள். ஆனால் நவீன கவிதைகளிலும் மனதை உறுத்தாத ஒரு மெல்லிய இசைமை எப்போது இருந்து வந்திருப்பதை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் கவனித்திருக்கக்கூடும். ரவி சுப்பிரமணியனின் கவிதைகளிலும் இந்த இசைமை துலக்கமாக பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. உதாரணமாக ஒரு கவிதையைப் பார்க்கலாம்

குழலின் துளையில் மறையும் சூரியன்
---
சாரலிலே அசைந்தாடும் ஜீவஸ்வரங்கள்
ஏறுநிரல் பாதைகளில் ஊதல் காற்று
இறங்கு நிரல் வழியெங்கும் கணுக்கால் வெள்ளம்
மந்த்திரத்தில் நிற்கையிலே குளிரின் விதிர்ப்பு
குழலின் துளைகளிலே மழைநாளின் சூரியனை
மறைத்தும் விடுத்தும் விளையாடும்
பிரெய்லி விரல்கள்

இவ்வளவு சந்தநயம் மிகுந்த கவிதைகள் நவீன கவிதைப் பரப்பில் எழுதுபவர்கள் அரிது என்றே சொல்ல வேண்டும். ரவி சுப்பிரமணியன் இசையை முறையாகக் கற்றவர் என்பதும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும். மேலே சொன்ன கவிதையைக் கவனியுங்கள். கண் தெரியாத கலைஞன் குழல் ஊதிக்கொண்டிருக்கிறான். இதுதான் லெளகீகம். அவனின் பிரெய்லி விரல்கள் துளையை மறைத்தும் விடுத்தும் விளையாடுவதன் வழியே ஒரு மழைக்காலத்தின் சூரியன் மறைந்தும்படியும் தோன்றியபடியும் இருக்கிறது. ஏறுநிரல் வரும் போது ஊதல் காற்று அதன் சாரலில் ஜீவஸ்வரங்கள் அசைந்தாடுகின்றன. இறங்கு நிரல் வந்தாலோ கணுக்கால் வெள்ளம். இப்படி இசை கேட்கும் அனுபவத்தை மழையில் நனையும் அனுபவமாக மாற்றிப்பார்க்கிறது கவி மனம். இசை என்பது ரவி சுப்பிரமணியத்துக்குப் பொருண்மையான ஒரு வெளியாகவே இருக்கிறது. அந்தப் பொருண்மையான வெளியில் அவருக்கான நிலம் விரிகிறது. அந்த பொருண்மையான வெளியில், அந்த நிலத்தில்தான் அவர் வசித்துக்கொண்டிருக்கிறார். அதில் இருந்து வெளியே வரும் தருணம் அது தரும் ஆச்சரியம் அல்லது அசெளகரியம் அவருக்குக் கவிதையாகிறது.

தமிழ் சமூகம் கைவிட்டுவிட்ட நம் மரபார்ந்த கலைகளான இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்கள் குறித்தும் அதன் கலைஞர்கள் குறித்தும் பெரும் அக்கறை ரவி சுப்பிரமணியத்துக்கு இருக்கிறது. இப்படி நம்மால் கைவிடப்பட்ட ஒரு பெரும் பண்பாட்டின் எச்சமாக நம்முடைய பழங்கோயில்களைப் பார்க்கிறார் கவிஞர். கோயில்கள் என்பவை வெறும் வழிபடுவதற்கான, புலம்புவதற்கான, கோரிக்கைகளுக்கான இடம் மட்டும் இல்லை. ரவி சுப்பிரமணியத்தைப் பொருத்தவரை கோயில்கள் என்பவை இழந்த பண்பாட்டின் குறியீடு. கருணையற்ற காலத்தால் விழுங்கப்படும் பெருநிலம். மறக்கமுடியாமல் தொண்டைக்குழிக்குள் நின்றுகொண்டிருக்கும் துக்கம் போல, இம்மண்ணில் வீற்றிருக்கும் துயர நினைவு. யாருமற்ற பிராகாரங்கள், வெளவால்கள் வசிக்கும் மண்டபங்கள், நிசப்தமான விதானங்கள் என நிர்கதியையும் கைவிடுதலையும் பேசும் புறக்கணிப்பின் வலி நிறைந்த இடங்கள்.

ரவி சுப்பிரமணியன் இந்தத் தொகுப்பின் வழியாக கோயிலை கொண்டாடவில்லை மாறாக அதை தன் உள்ளார்ந்த துயரம் ஒன்றின் குறியீடாகப் பார்க்கிறார். கோயிலின் இருப்பின் வழியாக தன் இருப்பை உணர்கிறார். ’விரஜை நதிக்கும் வைத்தரணி நதிக்கும் நடுவே…‘ என முன்னுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறார். விரஜை என்பது வைகுண்டத்துக்குச் செல்லும் முன்பு கடக்க வேண்டிய ஒரு நதி என்று வைஷ்ணவ சம்பிரதாயம் கூறுகிறது. வைத்தரணி என்பது நரகத்தின் தெற்கு மூலையில் சென்று சேரும் ஒரு நதி. இப்படி சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் நடுவே இருப்பது என்ன? அதுதான் வாழ்வா?

கவிஞரின் பூர்விகமான கும்பகோணம் காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் நடுவே இருக்கிறது. இந்த இரண்டில் எது வைத்தரணி எது விரஜை என்று தெரியாது. ஆனால் இந்த இரண்டுக்கும் நடுவேதான் கும்பகோணம் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் நடுவேதான் கோயில்கள் இருக்கின்றன. இந்த இரண்டுக்கும் நடுவேதான் நம் மண்ணின் மரபார்ந்த கலைகள் இருக்கின்றன. நம் கட்டட கலையும் சிற்பக் கலையும் நாட்டியமும் ஓவியமும் இசையும் இந்த சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் நடுவேதான் இருக்கின்றன. இங்குதான் ரவி சுப்பிரமணியனின் கவிதை உலகமும் இருக்கிறது. இப்படித்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டியதாய் இருக்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வழியாக ஒலிக்கும் குரலில் அடிநாதமாய் இருந்துகொண்டிருப்பது சொர்கத்துக்கும் நரகத்துக்குமான ஸதிதி போல சொர்க்கமாகவும் நரகமாகவும் இருக்கும் நம் கோயில் பண்பாடுதான். அந்தப் பண்பாட்டின் செழுமையையும் ஆழத்தையும் உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு மனிதனின் எளிய பாடுகள், அக்கறைகள், புலம்பல்கள், தன்னிலை விளக்கங்கள், கோபங்கள் கவிதைகளாகியிருக்கின்றன.

3.
ரவி சுப்பிரமணியனின் கவிதைகளில் திணை மிகச் சிறப்பாக இயங்குகிறது. கோயில் பிரஹாரங்கள், மகிழ மரம், மைனாக்கள், காக்கைகள், பூனைகள், கொய்யா பூக்கள், தட்டாரப் பூச்சிகள், தாமரைச் செண்டுகள், மழைக்காலம், மாலை நேரம், வெயில் காலம் என கவிதை நிலம் முழுதும் தொழிற்படும் உரிப்பொருட்களும் கருப்பொருட்களும் பெரும்பொழுதுகளும் சிறுபொழுதுகளும் கவிதைகளை மிகவும் தமிழ்தன்மை உடையாதாக மாற்றிவிடுகின்றன. தமிழ் நவீன கவிதைகள் ஐரோப்பிய தாக்கத்திலிருந்து இன்னமுமேகூட விடுபடாதவை. தொடர்ந்து படையெடுக்கும் மொழிப்பெயர்ப்பு கவிதைகளின் தாக்கத்தால் ஒருவித திருகலான மொழிக்குள்ளும் நிலமற்ற வெளியிலும் உலவிக்கொண்டிருக்கும் கவிதைகளுக்கு இடையே ரவி சுப்பிரமணியனின் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன.

இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதப்படும் கவிதைகளின் பிரதான அம்சம். கவிதைகளில் கதை சொல்வது. ரவி சுப்பிரமணியத்தின் முதல் தொகுப்பில் இருந்தே கதை சொல்லும் கவிதைகள் இருக்கின்றன என்றாலும் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் தமிழில் தற்போது எழுதப்படும் சமகாலக் கவிதைகளின் தன்மையோடு இருப்பதைக் குறிப்பிட வேண்டும். உதாரணமாக நாம் ஏன் அவனை அப்படி ஆக்கினோம் என்ற கவிதையைச் சொல்லலாம்.

இந்தக் கவிதையில் ஒரு சிறுகதை உள்ளது. ஒரு மோர்சிங் கலைஞன் ஏதோ ஒரு சூழ்நிலையில் கொலைசெய்துவிடுகிறான். இந்தக் கவிதை சொல்லப்பட்ட விதம் அதன் சொற்பிரயோகம் போன்றவை பழைய ரவி சுப்பிரமணியத்தின் கதை சொல்லும் கவிதை முறைகளில் இருந்து சற்று விலகி இருப்பதைப் பார்க்கலாம். மொழியைக் கையாள்வதில் தற்போதைய கவிகளிடம் காணப்படும் தாரளமும் மெலிதான பகடியும் விலகலான சித்தரிப்பும் உள்ள கவிதை இது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் பல கவிதைகள் சிறந்த முறையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஓரிரு கவிதைகள் முழுமையான கவிதையாகமலேயே போயிருக்கின்றன. ரவி சுப்பிரமணியன் எனும் சமூக மனிதனின் கோபம் பதிவாகியுள்ள கவிதைகளும் இதில் உள்ளன. மிக நல்ல கவிதைகளாக வந்திருக்க வேண்டிய கவிதைகள் அவை. ஒப்பீட்டளவில் இந்தத் தொகுப்பின் பலவீனமான கவிதைகளாக அவையே இருக்கின்றன. நாம் ஏன் அவனை அப்படி ஆக்கினோம், உனக்கு துப்பாக்கி ஒரு கேடா, விதானத்துச் சித்திரம், நீ செய்த மழை, முகநூலில் நெடுநாளாய் நிலைத்தகவல் போடாத திரு.கிருஷ்ணனுக்கு ஒரு பிராது, வீம்பு நொறுங்கிய தெரு முனை போன்ற கவிதைகள் குறிப்பிடும்படியாய் சிறப்பான கவிதைகள் எனலாம்.

4.
இந்தத் தொகுப்பின் இன்னொரு சிறப்பு இதன் வடிவமைப்பு. இந்தத் தொகுப்பின் முன் அட்டை மற்றும் உட்புற ஓவியங்களை பாலாஜி ஸ்ரீநிவாசன் வரைந்திருக்கிறார். முன் அட்டை ஓவியம் குறித்து ஓவியரின் குறிப்பு ஒன்று உள்ளது. காவிரியையும் அரசலாற்றையும் இடையில் உறை நிலத்தையும் குறியீடாக்கி, காலத்தைத் தன்னைத் தானே விழுங்கும் யாழியாக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் ஓவியர். உட்புறத்தில் கவிதையின் மனநிலைக்கு ஏற்ப ஆங்காங்கே நம் கூத்து மரபில் உள்ள மனுநீதிச்சோழன் நாடகம், அமுது படையல் நாடகம் முதல் கோணங்கிதாசர் உருவம் வரை பல்வேறு ஓவியங்கள் உள்ளன. முதல் பார்வைக்கு எளிமையும் யோசிக்க யோசிக்க ஆழங்களையும் கொண்டுள்ள அற்புதமான ஓவியங்கள் இவை. கவிதைத் தொகுப்பின் ஒட்டுமொத்த மனநிலையையும் உட்பிரதியையும் வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்லும் ஓவியங்களாகவும் இவை இருக்கின்றன.

நன்றி: காலச்சுவடு இதழ்
----


நூல் விவரம்
----
விதானத்துச் சித்திரம் (கவிதைகள்)
ஆசிரியர் : ரவிசுப்பிரமணியன் (மின்னஞ்சல் : ravisubramaniyan@gmail.com)
பதிப்பகம் : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம்,
12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014
பதிப்பு : ஏப்ரல் 2017, விலை : ரூ.100.