Wednesday, September 16, 2015

உயிர்ச்சொல் - கவிதை

அ) சூறைக்காற்றில் ஒரு இலை
இன்னொரு இலையிடம் படபடத்துச் சொன்னது
இப்படித்தான்
சென்ற கோடைமழையில்
நம் முன்னோர் உதிர்ந்தனர்
இன்னொரு இலை கேட்டது
அப்படியா!
யார் சொன்னார்கள்
வரலாறு அப்படித்தான் சொல்கிறது
இன்னொரு இலை சொன்னது
ஒரு இலை இவ்வளவு வரலாற்று உணர்வுடன் இருப்பது
ஆபத்தானது நண்பா

ஆ)ஒரு பெளர்ணமியில்
போதி மரத்தில் ஊர்ந்துகொண்டிருந்த
எறும்பிற்கு ஞானம் பிறந்தது
ஞானத்தின் எறும்பு ஊரத்துவங்கியது
பால்வெளியில்
கவிதையில்
முதுகுத்தண்டுவடத்தில்
மன்மதக் கரும்பில்
பிறகு
புத்தனுக்கு நடந்ததற்கு மேல் ஒரு சுவாரஸ்யமும்
இல்லை கதையில்

இ) ஒரு ஆமை தலைமுறைக்கும்
இன்னொரு ஆமைத்தலைமுறைக்குக்கும் இடையே
450 முறை சூரியனை சுற்றியலைகிறது பூமி
நகரவே நகராத
பெரும் ஆமை ஒன்று
ஊழிகளாய் நிற்கிறது
தன்னுள் தான் அலைந்தபடி

ஈ)ஒரு டைனோசர்
வ.ஊ.சி பூங்காவில் உள்ளது
அவ்வளவு பெரியது
ஆனால் பொல்லையானது
அது எவ்வளவு பெரியதோ
அவ்வளவு பெரிய பொல்லை
ஆயிரம் கிலோ இருக்கும்
என்றார் ஒருவர்
எனில் ஆயிரம் கிலோ பொல்லை அது
பொல்லை டைனோசர்கள் பாதுகாப்பாக வாழ்பவை
வேட்டைக்கான தந்திரங்கள் தேவையில்லை
புத்தகத்தின் ஒரு பக்கத்துக்கும் இன்னொரு பக்கத்துக்கும்
இடையே நுழைய முயலத் தேவையில்லை
ஒரு சொல்லையும் அடுத்து சொல்லையும்
நகர்த்திப் பார்க்கத் தேவையில்லை
ஒரு வீடு ஒரு மரம் எதுவுமே தேவையில்லை

பேய்க்காற்றில் பறக்கத் தெரியும்
கொட்டும் மழையில் கரையத் தெரியும்
கொளுத்தும் வெயிலில் எரியத் தெரியும்
போதாதா?

உ) பகலின் பூனைகள் சேட்டை நிறைந்தவை
பருவ காலங்களை அவைதான் கொண்டு வருகின்றன
மற்றும்
உறவினர்களை மற்றும் நண்பர்களை
இரவின் கரப்புகள்
மகத்தான லட்சியங்கள் உடையவை
நிசப்தமான ஆழமான மனநிலைகளை
தம் முடைநாற்றத்தால் நிரப்புபவை

ஊ) நண்பர்களான உணமையும் பொய்யும்
ஆளுக்கொரு புறா வளர்த்தனர்
ஒன்று சாமபல் வண்ணம்
ஒன்று வெள்ளை
இரண்டும் ஒன்றாகவே வலசை கிளம்பும்
ஒன்றாகவே கூடடையும்
ஒரு முறை வெட்டுக்கிளி கேட்டது
நதியின் கரைகள் அடியில் கைகுலுக்குவது போல
நீங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் இருக்கறீர்களா?
எனில்
நான் எதைக் கொறிப்பது
வெள்ளையையா சாம்பலையா
ஒரு புறா வெள்ளையை எழுதுகிறது
ஒரு புறா சாம்பலை எழுதுகிறது
எதையும் எழுதாத புறா ஒன்று
எந்த வண்ணத்தை வரையுமோ
அதைக் கொறி
அந்த அரூப வண்ணத்தை


நன்றி: ஆனந்த விகடன்

Tuesday, September 15, 2015

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் - கவிதை
வைக்கம் முகம்மது பஷீர்
கேரளத்தின்டே சூஃபி
அவருக்கு ஆயிரம் வேலைகள் தெரியுமாம்
அவர் பார்த்த முதல் வேலை
குரங்குக்குப் பேன் பார்ப்பது
சாதரணக் குரங்கு இல்லை
பைத்தியம் பிடித்த
பெரும் மசைக் குரங்கு
இன்னொரு வேலை
சுமை கழுதைகளை மலையேற்றுவது
பஷீர் கழுதை ஒன்றை
இழுத்துக்கொண்டு கொண்டு போகும்
சித்திரம்
சிலுவை சுமக்கும் தேவகுமாரனுக்கு
நிகரானது
வேறொரு வேலை
குட்டிச்சாத்தான்களை கட்டிவைப்பது
பஷீர்
ஒரு குட்டிச்சாத்தனை கட்டிவிட்டு
இன்னொன்றை துரத்திக்கொண்டு
ஓடும் போது
முதல் சாத்தான்
தப்பித்துக்கொள்ளும்
நான்காவது வேலை
கொஞ்சம் கவித்துவமானது
பேய்களை சிங்காரித்து
மேடைக்குக் கூட்டி வருவது
இப்படியாக
பஷீர்
தன் ஆயிரமாவது வேலையில்
மூச்சிரைத்துக்கொண்டிருந்த போது
அல்லா அவர் முன் தோன்றினார்
மோனே
பஷீர்!
என்னை தெரியலையா?
பஷீர்
ஸ்டைலாய் பீடி வழித்துக்கொண்டே
சொன்னார்
தெரியாம என்ன அச்சனே!
நான் கண்ட
குரங்கும், கழுதையும்
குட்டிச்சாத்தானும் பேயும்
நீ தன்னே...


பஷீரின் ஓவியங்கள்: வாசுதேவன் நம்பூதிரி
நன்றி: perchblogs.wordpress.com


Saturday, March 21, 2015

வனம் - நுண்கதை
அவன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தான். மழை கொஞ்சம் தணிந்து சூரியன் தயக்கமாய் எட்டிப்பார்த்தது. வனமெங்கும் பறவைகள் விடியலின் குதூகலத்தில் இரைந்துகொண்டிருந்தன. அவன் அந்த சால மரத்தடியே வந்து நின்றான். மேலே ஒரு பரத்வாஜம் கூவிக்கொண்டிருந்து. அவன் கூ கூ என்று கூவ அவைகளும் திருப்பிக் கூவின. அவன் புன்னகைத்து மறுபடியும் உற்சாகமாய்க் கூவினான். அதுவும் கூவியது. மீண்டும் ஒரு முறை இவன் கூவும் முன் எதிர் திசையிலிருந்து ஒரு கூவல். இவன் மீண்டும் கூவினான். சில கணங்கள் பதில் இல்லை. இப்போது மீண்டும் கூவினான். பதிலுக்கு அதுவும் கூவியது. இவன் மனம் மெல்லிய பரபரப்படைந்தது. கூவல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே தாரு மரத்தடியே ஒரு மான் நின்றிருந்தது. அதன் கொம்பில் ஒரு விநோத மலர் ஹாரமாக சுற்றப்பட்டிருந்தது. பளிரென கண்பரிக்கும் நீலத்தில் வானம் ஒரு துண்டாய் விழுந்தது போல் என்ன மலர் இது நீலோத்பவமா? நிஷாகாந்தமா? தர்பைகள் அடந்த நிலத்தில் அந்த மானின் கொம்பு மட்டுமே இப்போது தெரிந்தது. அந்த கூவல் சத்தத்தைக் கேட்டான். மான் அந்த திசை நோக்கி ஓடியது. இவனும் ஓடினான். புல் அடர்ந்த ஒற்றையடிப்பாதை மரங்களுக்கு இடையே மேல் நோக்கிச் சென்று கொண்டேஇருந்தது. மான் தாவி தாவி அதில் ஓட இவனும் ஓடினான். திடீரென அந்த மான் காணாமல் போனது. அதைத் தேடிக்கொண்டே மலை உச்சிக்கு சென்றான். மலையின் உச்சியின் ஒரு செடியில் அந்தப் பூ இருப்பதைக் கண்டான். பரபரபாய் அதன் அருகே ஓடிச்சென்று அந்தப் பூவையே பார்த்துக்கொண்டிருந்தான். மெல்ல அதைப் பறித்து, முகர்ந்தவாறே, நிமிர்ந்து எதிரே இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்தவன் அதிர்ந்தான். அந்த பள்ளத்தாக்கெங்கும் கண்ணுக்கு எட்டிய வரை அந்த பூக்கூட்டம். வானம் சரிந்து பூமி எங்கும் மூடிக்கிடப்பதை போன்ற ஒரு மாயம்.
மனம் கசிய மண்டியிட்டு அமர்ந்து அழுதான். அவனுக்குப் பின்னால் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். கையில் ஒரு மலர் மாலையுடன் அவள் நின்றிருந்தாள். இதைத் தேடித்தானே வந்தீர்கள் என்றாள். அவன் தோற்றம் அவளுக்கு விநோதமாக இருந்தது. அவள் தோற்றம் அவனுக்கு அதைவிட விநோதமாக இருந்தது. அவள் அவனை அருகே அழைத்தாள். அவன் ஒரு கணம் மெல்ல பயந்து காலை பின் வைத்து செல்லப்பார்த்தான். அவள் சட்டென ஓடி வந்து அவன் கைகளை பிடித்துக் கொண்டாள். ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று புன்னகைத்தபடியே அவனைக் குறுகுறுப்பாய் பார்த்தாள். அவள் பார்வை அவனை என்னவோ செய்தது. கையிலிருந்த மாலையை அவன் தலையிலிருந்த கொம்புகளில் சுற்றினாள். அவன் மந்திரத்தில் கட்டுண்டவன் போல மனம் மயங்கி நின்றிருந்தான். அவள் குரல் அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. சற்று முன் கேட்ட கரிச்சானின் அதே குரல். உங்கள் குரல் ஏன் பரத்வாஜத்தின் குரல் போல் உள்ளது ரிஷியே என்றான். ஏனெனில் நான் பெண் என்றாள். ஓ பெண் என்றால் என்ன ரிஷியே என்றான். நான் ரிஷியல்ல பெண். அதிலும் தாசி.என்றாள். அவனுக்குப் புரியவில்லை. இந்த ஹேமகூடத்தைத் தாண்டி விநோதமான பழக்கங்கள் கொண்ட ரிஷிகளும் உள்ளார்கள் என்று அவன் தந்தை சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அவள் உடலையே வெறித்துப் பார்த்தான். அவள் குரல் குயில் போல இருந்தது. உடலோ மான் போல இருந்தது. நீங்கள் ஏன் இப்படி இருக்கறீர்கள் ரிஷியே.. உங்கள் மரவுரி விநோதமாக உள்ளது என்றான். அவள் ஒன்றும் சொல்லாமல் அவனையே ஆசையாகப் பார்த்துகொண்டிருந்தாள். அவன் கண்கள் இன்னமும் மருட்சியாக இருந்தது. அவள் மான்குட்டி... மான்குட்டி எனக் கொஞ்சினாள். அவன் ஏதோ கேட்க முற்பட அவள் தன் விரல்களால் அவன் உதடுகளை மூடி, மெல்ல அவன் தலையிலிருந்த மான் கொம்புகளை வருடியபடியே வந்து உச்சியில் கைவைத்து வருடினாள். அவன் கண் செருகி வசமிழந்தான். உங்கள் பெயர் என்ன ரிஷியே என்று குழறிக்கேட்டான். என் பெயர் விசாலி என்றாள். என் பெயர் என்று அவன் சொன்னதும். தெரியும் ரிஷ்யசிருங்க மகரிஷி என்றபடி அவனை இறுக்கி அணைத்தாள். இருவரும் கால்களை நிலத்தில் ஊன்றி நிற்கமுடியாமல், தடுமாறிச் சரிந்தனர். மேகங்கள் மெல்ல முழங்கிப் பொழியத் தயாராகின...