Friday, March 7, 2014

அகத்தியம் (நுண்கதை)

கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பினீஷிய கடலோடி ஒருவன் ஏடன் வளைகுடாவிலிருந்து கடல் மார்கமாக புறப்பட்டு யவனக் குதிரைகளுடன் புகார் நகரம் வந்து விற்றுச் செல்வதை தன் வழக்கமாக கொண்டிருந்தான். நாற்பதேழு முதல் ஐம்பது நாட்கள் வரை நீளும் அக்கடற் பயணத்தில் குதிரைச் சாணம் நாறும் தன் படுக்கையில் இருந்தபடி அரவம் பிங்கலம் பேசுவதைப் போன்ற குரலில் மென்மையாக பாடுவதும். சோம்பிப் படுத்துறங்குவதுமாய் இருப்பான். ஒரு முறை எட்டாவது நாள் பயணத்தில் வானில் விண்மீன்கள் நகர்ந்து கொண்டிருந்த நள்ளிரவில் காது கூசும் நிசப்தம் உணர்ந்து கலத்தின் முனைக்கு வந்து பார்த்தான். பெளர்ணமி சிறுத்தது போன்ற விண்மீன் ஒன்று வானில் தோன்றி பராகித்துக் கொண்டிருக்க பாலாடை மூடியது போன்ற கடல் நீர் துளியும் அசைவின்றி கட்டிக் கிடந்தது. தன் மொழி பேசும் கறி மிளகு போன்ற நிறமுடைய அடிமை ஒருவனிடம் அதைப்பற்றிக் கேட்க அவன் அவ்விண்மின் அகத்தியம் என்று உரைத்தான். அகத்தியம் தோன்றுவது அரசனுக்கு ஆகாது என்றும் அகத்தியம் தோன்றினால் கடல் அலைகள் கட்டப்படும் என்றும் தென்னாட்டார் நம்புவதாகவும். இது ஏதோ துர்நிமித்தம் என்றும் கலங்கியவாறு சொல்பவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே படுக்கைக்குச் சென்றான். அன்றிலிருந்து தினமும் வானில் அகத்தியம் தோன்றுவதும் அது மறையும் வரை அலைகள் அறையப்பட்டிருப்பதும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. கரை சேர்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு விடியலில் தொலைவில் நாவாய்கள் கூட்டம் கூட்டமாய் போவதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தவன். அவைகள் தீடீரென மறைவதைக் கண்டான். சூரியனை மறைத்துக் கொண்டு கடல் எழுந்து ஆங்காரமாய் ஓடிவர திகைத்து நின்றான். கண்காணா உயரத்திற்கு வானில் தூக்கி எறியபட்ட கடல் நீர் பெருமழை போல் கலம் வீழ அவன் கலம் பலகை பலகையாய் பெயர்ந்து மூழ்கியதில் போதம் இழந்தான். மூன்றாம் நாள் நினைவு திரும்பிய போது எங்கோ ஓர் வைத்திய சாலையில் இருந்தான். அருகிலிருந்த இளம் வைத்தியன் தன் அரும்பு தாடிக்குள் புன்னகைத்தபடியே நீ இங்க வந்த ஒரு நாள் ஆச்சு என பினீஷிய மொழியில் பேசினான். தன் தாய் மொழியை இந்தக் கருப்பன் பேசுகிறானே என்கிற ஆச்சர்யம் ஏதுமின்றி அவன் இவனைப் பார்த்தான். உன் தண்டுவடத்தில் ஆழமான வெட்டுக் காயம் இருக்கு நீ கொஞ்ச நாள் நடக்க முடியாது என்றவன் கண்களில் ஆர்வம் மின்ன அகத்தியம் தோணுச்சாமே கண்டோ என்றான். இவன் ஆம் என தலையசைத்தான். சரிதான்.. அதாக்கும் அங்க மதுரை பத்திக்கிட்டு எறியுது அறியுமோ என்றான்.

1 comment:

  1. அருமையான வித்தியாசமான கதை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete