Wednesday, August 27, 2014

இரண்டு கவிதைகள்வீட்டை விட்டு செல்லும் போது
கைப்பேசியை எடுத்துகொள்
கைக்குட்டையை
அப்புறம் சீப்பை
பர்ஸை
உறையில் வாள் இருக்கிறது தானே
கவனம்
நாய் குட்டி போல் கூடவே வரும்
இந்த முத்தத்தை
ஜாக்கிரதையாக வீட்டிலேயே விட்டு போ
முத்தங்கள் குறைந்த சூரிய ஒளியில் வளரும்
காட்டுத் தாவரங்கள்
வெயிலில் எரிந்து
மழையில் ஊறி
திரும்பத் தெரியாதவை


------


தன் வாழ்நாளில்
ஒரே ஒருமுறை மட்டுமே பூமிக்கு
வரும் பறவை ஒன்றை
காட்ட அழைத்து வந்தேன் உன்னை
இந்த பௌர்ணமி
மிக கவித்துமானதுதான்
நம் பேச்சு கூட அவ்வளவு அழகு இன்று
ஒரே ஒருமுறை பூமிக்கு வரும் பறவை
இன்று ஏன் வரவில்லை என்றாய்
அது எனக்கு தெரியாது
ஆனால் ஒரே ஒருமுறை பூமிக்கு வரும்
பறவைக்காக காத்திருந்த அந்த காலங்கள்
அழகானவை
ஒரே ஒருமுறை பூமிக்கு வரும் காலங்கள்

Friday, March 21, 2014

மாயா ஏஞ்சலோ - கவிதை


தாய், மனைவி, மகள், சகோதரிகள், தோழிகள் என என் வாழ்வை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்மைக்கும் மாயா ஏஞ்சலோவின் இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்...

நான் எழுந்து கொண்டிருக்கிறேன்

நீங்கள் எழுதுங்கள் வரலாற்றில் என்னைப் பற்றி
உங்கள் கசப்பான திரிக்கப்பட்ட பொய்களால்
நீங்கள் இட்டுச் செல்லுங்கள் என்னை
மோசமான அசுத்தங்களுக்கு
ஆனால் அப்போதும் நான் எழுவேன்
தூசைப் போல

என் மிடுக்கு உங்களை உறையச் செய்கிறதா?
ஏன் சோர்வில் பொதிந்தீர்கள்
ஏனெனில் நான் துள்ளித் திரிகிறேன்
வதியும் வீட்டில் எண்ணைக் கிணறு கிடைத்தவளாய்

பெளர்ணமியே போலவும் சூரியனே போலவும்
உறுதியாக அலைகளை உயரமாக கொதிக்கச் செய்ய
சிறப்பாக மலர்வதற்கான நம்பிக்கையே போலவும்
நான் எழுவேன்

நான் உடைந்து போவதை பார்க்க விரும்பனீர்களா?
குனிந்த தலையும் தாழ்ந்த கண்களுமாக?
கண்ணீர் துளி உதிர்வதை போன்ற தொங்கிய தோள்களோடு
ஆன்மாவில் நிறைந்த கண்ணீரால் துவண்டு போவதை?
என் பெருமிதம் உங்களை தொந்தரவு செய்கிறதா?
இதை துயரார்ந்த ஒன்றாக எடுத்துக் கொண்டீர்கள்தானே?
ஏனெனில் நான் சிரிக்கிறேன்
தங்கச்சுரங்கம் என் வீட்டு பின்கட்டில் இருப்பவளாக

நீங்கள் உங்கள் சொற்களால் எனை சுடுங்கள்
நீங்கள் உங்கள் கண்களால் எனை துண்டாடுங்கள்
நீங்கள் உங்கள் வெறுப்பால் எனை கொலை செய்யுங்கள்
ஆனால் அப்போதும் நான் எழுவேன்
காற்றைப்போல

என் நளினம் உங்களை எரிச்சலாக்குகிறதா
அது ஒரு ஆச்சர்யம் போல உங்களுக்கு தோன்றுகிறதா
ஏனெனில் நான் நடனமிடுகிறேன்
என் காற்சந்தியில் வைரங்கள் கிடைத்தவளைப் போல

வரலாற்றின் அவமானகரமான குடிசைகளிலிருந்து
நான் எழுகிறேன்
இறந்த காலத்தின் வலிகளுக்குச் செல்லும் வேர்களிலிருந்து
நான் எழுகிறேன்
நானொரு கருப்புக் கடல், நீளுகிறேன், அகலுகிறேன்
ஆழமாகிறேன், பருக்கிறேன் நான் சூறாவளிகளை கொண்டிருக்கிறேன்
கொடூரமும் அச்சமுமான இரவுகளிலிருந்து
நான் எழுகிறேன்
ஒரு விடியலுகளுக்குள் - அது அற்புதமான தெளிவுள்ளது-
நான் எழுகிறேன்
பரிசுகள் வழங்குகிறேன் அவை என் மூத்தோர் எனக்குத் தந்தவை
நான் தான் ஒரு அடிமையின் கனவு மற்றும் நம்பிக்கை
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்

- மாயா ஏஞ்சலோ, தமிழில்: இளங்கோ கிருஷ்ணன்

Friday, March 7, 2014

அகத்தியம் (நுண்கதை)

கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பினீஷிய கடலோடி ஒருவன் ஏடன் வளைகுடாவிலிருந்து கடல் மார்கமாக புறப்பட்டு யவனக் குதிரைகளுடன் புகார் நகரம் வந்து விற்றுச் செல்வதை தன் வழக்கமாக கொண்டிருந்தான். நாற்பதேழு முதல் ஐம்பது நாட்கள் வரை நீளும் அக்கடற் பயணத்தில் குதிரைச் சாணம் நாறும் தன் படுக்கையில் இருந்தபடி அரவம் பிங்கலம் பேசுவதைப் போன்ற குரலில் மென்மையாக பாடுவதும். சோம்பிப் படுத்துறங்குவதுமாய் இருப்பான். ஒரு முறை எட்டாவது நாள் பயணத்தில் வானில் விண்மீன்கள் நகர்ந்து கொண்டிருந்த நள்ளிரவில் காது கூசும் நிசப்தம் உணர்ந்து கலத்தின் முனைக்கு வந்து பார்த்தான். பெளர்ணமி சிறுத்தது போன்ற விண்மீன் ஒன்று வானில் தோன்றி பராகித்துக் கொண்டிருக்க பாலாடை மூடியது போன்ற கடல் நீர் துளியும் அசைவின்றி கட்டிக் கிடந்தது. தன் மொழி பேசும் கறி மிளகு போன்ற நிறமுடைய அடிமை ஒருவனிடம் அதைப்பற்றிக் கேட்க அவன் அவ்விண்மின் அகத்தியம் என்று உரைத்தான். அகத்தியம் தோன்றுவது அரசனுக்கு ஆகாது என்றும் அகத்தியம் தோன்றினால் கடல் அலைகள் கட்டப்படும் என்றும் தென்னாட்டார் நம்புவதாகவும். இது ஏதோ துர்நிமித்தம் என்றும் கலங்கியவாறு சொல்பவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே படுக்கைக்குச் சென்றான். அன்றிலிருந்து தினமும் வானில் அகத்தியம் தோன்றுவதும் அது மறையும் வரை அலைகள் அறையப்பட்டிருப்பதும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. கரை சேர்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு விடியலில் தொலைவில் நாவாய்கள் கூட்டம் கூட்டமாய் போவதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தவன். அவைகள் தீடீரென மறைவதைக் கண்டான். சூரியனை மறைத்துக் கொண்டு கடல் எழுந்து ஆங்காரமாய் ஓடிவர திகைத்து நின்றான். கண்காணா உயரத்திற்கு வானில் தூக்கி எறியபட்ட கடல் நீர் பெருமழை போல் கலம் வீழ அவன் கலம் பலகை பலகையாய் பெயர்ந்து மூழ்கியதில் போதம் இழந்தான். மூன்றாம் நாள் நினைவு திரும்பிய போது எங்கோ ஓர் வைத்திய சாலையில் இருந்தான். அருகிலிருந்த இளம் வைத்தியன் தன் அரும்பு தாடிக்குள் புன்னகைத்தபடியே நீ இங்க வந்த ஒரு நாள் ஆச்சு என பினீஷிய மொழியில் பேசினான். தன் தாய் மொழியை இந்தக் கருப்பன் பேசுகிறானே என்கிற ஆச்சர்யம் ஏதுமின்றி அவன் இவனைப் பார்த்தான். உன் தண்டுவடத்தில் ஆழமான வெட்டுக் காயம் இருக்கு நீ கொஞ்ச நாள் நடக்க முடியாது என்றவன் கண்களில் ஆர்வம் மின்ன அகத்தியம் தோணுச்சாமே கண்டோ என்றான். இவன் ஆம் என தலையசைத்தான். சரிதான்.. அதாக்கும் அங்க மதுரை பத்திக்கிட்டு எறியுது அறியுமோ என்றான்.

Monday, January 6, 2014

மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் - நூல் விமர்சனம்
ஒரு பின் நவீன பாணனின் சொல்லிலிருந்து முளைக்கும் நிலம் – ரமேஷ் பிரேதனின் தமிழ் அழகியல் கவிதைகள்

லிங்கரூபிணி, மனக்குகையில் சிறுத்தை எழும், மனநோயர் காப்பகத்தில் பின் காலனிய நாட்டின் கவிஞன் ஆகிய மூன்று தொகுப்புகளின் பெருந்தொகையாக வந்திருக்கும் ரமேஷ் பிரேதனின் இந்தத் தொகுப்பை (மனநோயர் காப்பகத்தில் பின் காலனிய நாட்டின் கவிஞன்) எவ்வாறு புரிந்து கொள்வது அல்லது இந்தத் தொகுப்பின் மைய இழையாக எது இருக்கிறது என்ற கேள்வி எழுமானால் அதற்கு என்னுடைய வாசிப்பின் பிரதியாக நான் என்ன சொல்வேனோ அதையே இக்கட்டுரையின் தலைப்பாக வைத்திருக்கிறேன்.
தமிழ் அறிவு மரபு, தமிழ் அழகியல் மரபு ஆகியவற்றிற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டத் தொடர்ச்சியான வரலாறு உண்டு. இன்றைய நிலையில் எது தமிழ் அறிவு மரபு என்று வகுத்துக் கொள்வது அவ்வளவு எளிதான பணி இல்லை. ஏனெனில் இந்த இரண்டாயிரம் வருட பிரம்மாண்ட வரலாறு என்பது தமிழ் அறிவு மரபு, தமிழ் அழகியல் என்பவைகளை எண்ணற்றப் போக்குகள் உடையவையாக உருவாக்கி இருக்கிறது. இந்த எண்ணற்ற போக்குகள் ஒன்றோடொன்று கூடிச் செல்வதாகவும் வெட்டிச்செல்வதாகவும் இருக்கின்றன. அந்தந்தக் காலத்திற்கான அரசியல் சொற்களோடு அந்தந்தக் காலத்திற்கான சித்தாந்தமாக காலந்தோறும் வேறு வேறாய் இது வடிவெடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்ற போதும் தமிழ் அறிவு மரபு என்பதற்கு இரண்டு பொதுவான வரையறைகளை நாம் சொல்லக் கூடும் 1. ஆரிய மரபிலிருந்து முற்றாய் தன்னைத் துண்டித்து தனித்துக் காட்டிக் கொள்வது 2. வைதீக சிந்தனைக்கு எதிரான தொடர்ச்சியான எதிர்ப்பை தன் இயல்பாய் வைத்திருப்பது ஆகியவற்றை சொல்லலாம்.
இந்திய பெருந்தேசிய விடுதலைக்குப் பிறகு எழுத வந்தவர்களில் தமிழ் அறிவு மரபு, தமிழ் அழகியல் மரபு குறித்த பிரக்ஞையோடு எழுத வந்தவர்கள் என பாரதிதாசன், சி.மணி, பிரமிள் போன்றவர்களை நாம் குறிப்பிடலாம். இவர்கள் மூவரும் முன் வைத்த தமிழ் அழகியல், தமிழ் அறிவு மரபு என்பதுமே கூட தம்மளவில் வேறு வேறு வகையான பார்வைகளை உடையது என்பதைப் போலவே இம்மரபில் வைத்து நோக்கக் கூடிய ரமேஷ் பிரேதனின் கவிதைகளும் முன்னவர்கள் பார்வையிலிருந்து சற்று வேறானதே என்று சொல்லலாம்.

ரமேஷ் பிரேதனின் தமிழ் அறிவு மரபு, தமிழ் அழகியல் நோக்கு ஒருவகை பின் நவீனத்தன்மை உடையது என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. பின் நவீனக் கருத்தியலின் இயல்புகளான பெருங்கதையாடல்களை மறுப்பது, லிங்க மையச் சொல்லடல்களை தகர்ப்பது, சகல விதமான அதிகாரங்களையும் மறுப்பது போன்றவைகளை இவரின் தமிழ் அறிவு மரபு தமது இயல்பாகக் கொண்டிருக்கிறது.
கவித்துவத்தின் அபோதமான மனநிலையில் மூன்று காலங்களுக்குள்ளும் ஊடுருவிச் செல்லும் இக்கவிதைகள் காலங்களை மாற்றி மாற்றி அடுக்கி நிலத்தை மறு கட்டமைப்புச் செய்வதன் வழியாக தனக்கானப் பிரத்யேகமானதொரு தமிழ் நிலத்தை தன் சொற்களில் உருவாக்கிக் கொள்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட அந்நிலம் ஏக காலத்தில் லெமூரியாவாகவும், சிந்து சமவெளியாகவும், ஈழமாகவும், பாண்டிச்சேரியாகவும் ஒரு மங்கிய தோற்றத்துடன் இருக்கிறது. அங்கு வசிக்கும் குடிகள் வேளிர்களாகவும் தாய் வழிச் சமூகத்தை பேணும் ஆதிப் பொதுவுடமைச் சமூகமாகவும் அந்நிலத்தின் கலைஞன் பாணனாகவும் இருக்கிறான். எதார்த்தத்தை புனைவின் வழியாக எதிர் கொள்ளும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் கவிஞனின் இலட்சியவாத தேசியத்திற்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள முரண்களை ஆற்றாமையாக குறிப்பிடுவதாகவும் தமது நெஞ்சில் உள்ள கனவை கண்கள் மின்ன பேசுவதாகவும் உள்ளன.

ரமேஷ் கூற்று
ஊரிலிருந்து
செத்த மாட்டைத் தூக்கி வந்து
தோலுரித்து விற்ற காசில்
சாரயம் வாங்கினோம்
பங்கு போட்டுப் பிரித்த கறியில்
தனதை வறுத்துக் கொண்டு வந்தான்
ஸ்ரீநிவாஸன்

தென்னந்தோப்பில்
மட்டைகளைப் பரப்பி
கூடி அமர்ந்து குடித்தோம்
எலும்பிலிருந்து கறியை
கடித்து இழுத்தோம்
(கெழ மாடு)

ஞானசம்மந்தன் கேட்டான்
மாடு சைவமா வைணவமா

நான் சொன்னேன்: இது
பாய் வீட்டு மாடு

இக்கவிதை கவிதை சொல்லியின் மனதில் உள்ள லட்சியவாத தேசியத்தின் இயல்பு என்ன என்றும் அந்நிலத்தில் யார் வதிய முடியும் என்றும் சொல்வதாகவே நான் புரிந்து கொள்கிறேன். செத்த மாட்டைத் தூக்கி வந்து உண்பது எனும் செயல் பெளத்தர்களுடையது. புத்தமதம் செத்த மாட்டை உண்ண மட்டுமே அனுமதிக்கிறது என்பதை நாம் அறிவோம். தோல் விற்ற காசில் சாரயம் வாங்குகிறார்கள். கறி வறுத்து வருபவன் ஸ்ரீநிவாஸன் அதாவது வைணவன். ஞானசம்பந்தன் எனும் சைவன் கேட்கிறான் மாடு சைவனுடையதா வைணவனுடையதா என ரமேஷ் சொல்கிறான்: இது பாய் வீட்டு மாடு.

கறுப்புத் தாமரை
அல்குல் என்னும்
ஒரு சொல் படிமம்

முகம் புதைத்து அழ
ஏற்ற இடம்
உலகில் வேறெது

காலையில் கண் விழித்ததும்
தொட்டு வணங்கிய பிறகு
வேறு காரியம் ஆற்றுக

மழிக்காத தூய அல்குல்
படித்தோரை மனம் பிறழ வைக்கும்
ஒரு சொல் படிமம்
கடவுள் தந்த கரிய மலர்

ரிஷிகளே அதன் புகழ் பாடுவோம்

இந்தக் கவிதை லிங்க மையவாத எதிர்ப்புணர்விலிருந்தும் தாய் வழிச் சமூக வழிபாட்டு மனதிலிருந்தும் தோன்றும் ஒரு அரசியல் பிரதி. ரிஷிகளே அதன் புகழ் பாடுவோம் என்ற இறுதி வரியில் உள்ள அறை கூவல் இதை அல்குல் மீதான பால் மயக்கம் உடைய ஓர் எளிய ஆண் மனதின் கவிதை என்பதிலிருந்து உயர்வாக்கம் (Sublimate) செய்கிறது.

ரூபினியிடம் வேண்டுதல்

நான்கு கோபுர வாசல்களும்
அடைக்கப்பட்ட பின்
நான் எப்படி தப்பிப்பது

ஒரே இடத்தில் வாழ்ந்து
அலுத்துவிட்ட நான்
அவனைக் கொத்திவிட்டு
உடம்பிலிருந்து வெளியேறினேன்

நாளை காலையில்
அடைக்கப்பட்ட கோயிலுக்குள்
அடைக்கப்பட்ட நான்
காவல் துறையினரிடம்
சிக்கிக் கொள்வேன்

நீலம் பாரித்த அவனது உடலில்
எனது கடிதடம் கண்டு
பூசாரி காவலரை அழைப்பார்
எங்கு பதுங்கினாலும்
கண்டுபிடித்து அடித்துக் கொல்லப்படப்போகும் நான்
பொற்றாமரைக் குளத்தில்
வீசப்படுவேனா

இந்த இரவு
விடியக்கூடது
எனது நஞ்சு கலந்து
அணைந்த அவனது நெற்றிக்கண்
இனிக் கிழக்கில் உதிக்கலாகாது

ரூபினி
லிங்கனைக் கொன்று விட்டேன்
அருளி அடைக்கலம் தா

நீ உணரும் அதே விடுதலை
எனக்கும் வேண்டும்

உன் புழைக்குள்
புகுந்து பதுங்க
ஏது செய் தேவி

நான் பாம்புமட்டுமல்ல என்பது
உனக்கு மட்டும்தான் தெரியும்

ரமேஷ் பிரேதனின் கவிதையில் சைவ மரபு ஒன்று தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அம்மரபு லிங்க மையச் சொல்லாடல்களை நீக்கம் செய்வதாகவும் உமையையும், காரைக்கால் அம்மையையும் பெண்ணுருக்களையும் கொண்டாடுவதாகவும் இருப்பதை நாம் கவனிக்கலாம். பெண்ணிய உரையாடல்கள் சார்ந்த இந்த போதம் தமிழ் அறிவு மரபிற்கு ரமேஷ் பிரேதனின் பின் நவீனச் சிந்தனையின் பங்களிப்பு எனலாம்.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் எளிமையான நேர் கோட்டுத்தன்மையுடன் வாசகனுடன் உரையாடும் தொனியிலோ வாசகனுக்கு தெரிவிக்கும் தொனியிலோ எழுதப்பட்டுள்ளன. ஒரு சில கவிதைகள் உரைநடைக் கவிதையின் பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒரு கவிதை பா வடிவில் எழுதப்பட்டுள்ளது. சொற்களை கையாள்வதில் ரமேஷ் பிரேதன் முன்னிலும் அதிக தாரளத்தை இத்தொகுப்பில் காட்டி உள்ளார். இது சில கவிதைகளுக்கு பாதமாக முடிந்திருந்த போதும் சொற்கட்டுமானத்திலும் கவிதையின் உள்ளடக்கத்திலும் உள்ள அபோதமும், உணர்வெழுச்சியும் அதை கவிதையாக்கி விடுகின்றன. அதே சமயம் ஒரு சில கவிதைகளில் அந்த அபோதமும் உணர்வெழுச்சியும் எளிய வெளிப்படுத்தல்களாக குறுகும் போது அந்தக் கவிதைகள் பரிதாபமாக தோற்று இருக்கின்றன. ரமேஷ் பிரேதன் அவ்வகைக் கவிதைகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் இயல்பென நான் கருதும் இன்னொரு விஷயம் இவைகளில் சில அரசியல் கவிதைகள் குறிப்பாக ஈழம் சார்ந்த அல்லது தமிழ் நிலம் சார்ந்த கவிதைகள் வேறு சில கவிதைகள் கவிதை சொல்லியின், கவிஞனின் தனிப்பட்ட அகம் சார்ந்த கவிதைகள் இன்னும் சில கவிதைகள் கவி மொழியின் பித்தில் கவிஞனின் சமூகமனமும் தனிமனிதமனமும் இணைந்திருக்கும் புள்ளியில் உருவாகி வருபவை. சமூகத்தின் சிக்கலை தன் சிக்கலாகவும் தன் சிக்கலை சமூகத்தின் சிக்கலாகவும் ஒன்றை இன்னொன்றில் பிரதியிட்டு பார்த்து குலறலாக வெளிப்படும் கவிதைகள். இதைத் தவிர அறிவார்ந்த மனதின் கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு. ”பின்னைக் காலனிய அறிவுத் தோற்றவியல்” போன்ற கவிதைகளை இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இக்கட்டுரையில் மேற்கோள் காட்டியதைத் தவிரவும் மீன் குழம்பி, நான் கொன்ற மகனுக்கும், ஈன்ற மகளுக்கும் சொல்லிக் கொள்வது, ஹலால் முறைப்படி, காலனிய மழை, பெளத்த சிந்தனைகள், மலைப்பிரசங்கம், தொலைந்து போன தீவு போன்ற கவிதைகள் இத்தொகுப்பின் மிக முக்கியமான கவிதைகள் என நான் கருதுகிறேன். இதில் தொலைந்து போன தீவு என்ற கவிதையை இக்கட்டுரையின் தலைப்பை நியாயப்படுத்தும் கவிதை என்றே சொல்வேன். உரையாடல் வடிவில் அமைந்த அக்கவிதையில் ‘நீ’ என்ற சொல்லால் முன்னிலையில் விளிக்கப்படுவது இலங்கை மட்டுமல்ல “தமிழ் அணங்கு” என்றே நான் புரிந்து கொள்கிறேன். அக்கவிதை கீழே:தொலைந்து போன தீவு

யாருமில்லை உனக்கு – ஒரு
நாடுமில்லை
நீருமில்லை – சக
உடம்புமில்லை
தேவையில்லை எனக்கு
ஒரு நாடும் – உன்
சிறு நீரும் – அந்
நீரின்றி அமைந்த உன் உடம்பும்

எல்லா இடங்களிலும் பிணங்கள்

யாருமில்லை உனக்கு
பிணங்களைத் தவிர

தின்ன ஏதுமில்லை எனக்கு
நீ ஈன்ற பிணங்களைத் தவிர

உனக்கு என்ன பிரச்சனை
என்னை புணர வேண்டுமா

இல்லை
எனக்குக் கைப்பிடியளவு தீவு வேண்டும்
உனது யோனி வடிவத்தில்

தயவு செய்து
எனது யோனியை
உனது கவிதை ஆக்காதே

நிறுத்திக்கொள்
உனதும் எனதும்
கவிதை இல்லை
மண்.