Tuesday, October 29, 2013பதினாறு அல்லது பதினேழு வயதில் பெயர் மறந்து போன இந்துமதியின் நாவல் ஒன்றின் வழியாக கல்யாண்ஜி எனக்கு அறிமுகமானார். அவரின் “நினைக்க ஆறு நடக்கத் தெரு” கவிதையைப் பற்றி வெகுவாக சிலாகித்து அந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும். தொடர்ந்து வேறொரு இதழில் வந்த தொடர்கதையில் யாரோ மீண்டும் கல்யாண்ஜியின் கவிதையைக் குறிப்பிட்டிருந்தார்கள். கவிதைகள் பெரும் வசீகரமான மாயப்பொருளாய் எனை ஈர்த்துக் கொண்டிருந்த அந்த வயதில் யார் இந்த மனிதன் என அறிய ஆர்வமானேன். ஒரு தமிழ் நாவலில் இவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால் வேறு மொழியைச் சேர்ந்த புகழ் பெற்ற கவிஞராய்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். வித்யாசமான அந்தப் பெயர் வேறு அப்படி நினைக்க ஏதுவாய் இருந்தது. அதுவும் அல்லாமல் அப்போது நான் கவிஞர் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் பாடல் எழுதிக் கொண்டிப்பவர்களாக மட்டுமே இருந்தார்கள்.

கவிதையின் மீதான என் பித்து அதிகரிக்கத் துவங்கிய பதினெட்டு வயதில் கலாப்ரியாவும் கல்யாண்ஜியும் என்னை வந்து சேர்ந்தார்கள். என்னால் விடுபடவே முடியாத மோசமான மாயவலைக்குள் நான் விழுந்தேன். கிட்டதட்ட ஒரு டைரி முழுக்க அவர்கள் சாயலிலான கவிதைகளை எழுதிக் குவித்தேன். (அந்த டைரி இப்போதும் தோழர் ந.முத்துவிடம் உள்ளது) என்னால் இவர்கள் இருவரையும் கடந்து எழுதவே இயலாது என்ற தற்சோர்வில் சில காலம் சென்றது. பிறகு வேறொரு காலம் வந்தது வாழ்க்கை என் கழுத்தை பிடித்து தரையில் அழுத்தி முகம் நிலமுரச இழுத்துச் சென்றது. அதுவரை நான் எதிர் கொள்ளாத வன்மங்களையும் காயங்களையும் வாழ்க்கை எனக்குத் தந்தபோது நான் அவைகளை என் கவிதைக்கு தந்தேன். தொடர்ந்து கடும் வாசிப்பின் வழியாக உருப்பெற்ற அறிவையும் கதறக் கதறப் புகட்டப்பட்ட அனுபவ ஞானத்தையும் கொண்டு எவரும் முற்றுகையிடவியலாத தத்துவக் கோட்டைகள் கட்டினேன். வாழ்வின் புதிர்மை சுமந்தலையும் தொன்மங்கள் புனைந்தேன். என் கவிதைகள் மெல்ல வேறொரு நிறம் அடையத் துவங்கின.

இந்த இடைப்பட்ட காலங்களில் கல்யாண்ஜியை மெல்ல மறந்துதான் போனேன். என் நெருங்கிய நண்பர்கள் சிலர் அவரிடம் கடிதத் தொடர்பில் இருந்த போதும் ஏனோ ஒரு தயக்கம் நான் ஒரு கடிதமும் எழுதியதில்லை அவருக்கு. சில வருடங்களுக்கு முன் கோவையில் ஒரு இலக்கிய நிகழ்வில் கல்யாண்ஜியை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்த போது மனம் சொல்ல இயலாத பரபரப்பை அடைந்தது. ஆனாலும் ஏதும் பேசாமலே திரும்பினேன். சென்ற வருடம் என நினைக்கிறேன். அவர் கோவை வந்திருந்த போது நானும் தென்பாண்டியனும் சென்று சந்தித்தோம். நான் என்னை யாரென வெளிப்படுத்திக் கொள்ளாமலே திரும்பினேன். நான் ஏன் அப்படி விநோதமாய் நடந்து கொண்டேன் என இப்போது வரை எனக்குப் புரியவில்லை. எத்தனை முறை ஒரு கவிதையை படிப்பதும் பின்னட்டையில் இருக்கும் அந்த முகத்தை பெருமிதம் பொங்க பார்த்துவிட்டு மீண்டும் இன்னொரு கவிதையைப் படிப்பதுமாய் இருந்திருக்கிறேன். தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னது போல மனித மனம் புரிந்து கொள்ள இயலாத இருட்டறைதான் போல.

இதழோரம் புன்னகை வழிய ஒரு முறை இசையிடம் சொன்னேன் “சிறு தவறு செய்ததால் வானுலகில் இருந்து மண்ணுக்கு அனுப்பட்ட தேவகுமாரன் போலவே அந்த மனிதர் இருக்கிறார்”. எனக்கு கல்யாண்ஜி இப்போதும் அப்படித்தான் தெரிகிறார். கல்யாண்ஜியை மீண்டும் என்னிடம் கொண்டு வந்தவர் அல்லது என்னை மீண்டும் கல்யாண்ஜியிடம் கொண்டு சேர்த்தவர் சாம்ராஜ்தான். இப்போது வரை என் முகம் கூட பார்த்திராமலேயே சாம்ரிஜடமும் இசையிடமும் லிபியிடமும் என் மீதான தன் பிரியத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். அன்று கோவையில் அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்ளாததற்காக இப்போது மிகவும் வெட்கப்படுகிறேன். நேற்று இளையநிலா ஜான் சுந்தர் திருநெல்வேலி சென்றுவிட்டு திரும்பிய போது கையில் ஒரு பார்சலுடன் என் அலுவலகத்திற்கு வந்தார் என்ன என்று கேட்டேன் “அல்வா.. கல்யாண்ஜி உங்களுக்கு கொடுக்கச் சொன்னார்” என்று சொல்லி கொடுத்துச் சென்றார். என் அறை சொற்களின் மீது நிற்க முடியாமல் தள்ளாடுகிறது.

2 comments:

  1. எனக்கும் வண்ணதாசனின் கவிதைகளைவிட கதைகளின் மீதான காதல் அதிகம். அவரது கதைகளை அடிக்கடி வாசித்துக் கொண்டேயிருப்பேன். வாழ்க்கையை வாழ கற்றுத்தருகிறது அவரது எழுத்து.

    ReplyDelete
  2. கல்யாண்ஜியைப் பற்றி எழுதும்போதுகூட அதில் கல்யாண்ஜித்தனம் வந்துவிடும்போலும்.
    தற்சோர்வு...இப்பத்தான் இப்படியொரு சொல்லைப் படிக்கிறேன். நல்லாயிருக்குதே !

    ReplyDelete