Friday, December 27, 2013

நூல் அறிமுகம் - 6

தென் இந்தியக் குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன், தமிழில்: க.ரத்தினம், மெய்யப்பன் தமிழாய்வகம்

அடிப்படையில் இது ஓர் துறை நூல் அதாவது துறை சார்ந்த நூல். பொதுவாக துறை நூல்கள் அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கே தேவைப்படுபவை. வெகுசில துறை நூல்களே அந்தத் துறைக்கு வெளியேயும் பயன்பாடும் தாக்கமும் உடையனவாக இருக்கும். அப்படியான நூல்கள் பெரும்பாலும் அந்தத் துறையின் ஆரம்ப நூல்களில் ஒன்றாகவும் அந்தத் துறைக்கான அடிப்படைகளை உருவாக்கிய நூல்களில் ஒன்றாகவும் இருக்கும். எட்கர் தர்ஸ்டனின் இந்நூலும் அப்படியானதொரு தனித்துவமான நூலாகும். இன்றும் இந்தியாவில் மானுடவியல், சமூகவியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கியமான தரவாக இந்நூல் உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் நூற்றாண்டுகள் கடந்த பிறகும் இன்றும் பேரளவு மாற்றமில்லாமல் இருப்பதைக் கொண்டே இது எவ்வளவு முக்கியமான ஆய்வு நூல் என்பதை அறியலாம்.

எட்கர் தர்ஸ்டன் சென்னை அருங்காட்சியகத்தை உருவாக்கி அதன் பொறுப்பாளராக பணியாற்றிவர். (அருங்காட்சியக நுழைவாயிலின் உட்புறம் இவர் படம் இன்றும் உள்ளது) தென் இந்தியாவில் உள்ள சாதிகள், பழங்குடிகள் மற்றும் இனக்குழுக்கள் பற்றிய முழுமையான ஆய்வொன்றை செய்யும் பணி ஆங்கிலேயே அரசால் இவருக்கு வழங்கப்பட்டது. மானுடவியலில் ஆர்வமுடைய தர்ஸ்டன் அத்துறை அவ்வளவாக வளர்ந்திராத அக்காலத்திலேயே திரு.ரங்காச்சாரி அவர்களுடன் இணைந்து மிகச் சிறப்பான ஆய்வொன்றைச் செய்து தென் இந்தியா முழுவதிலும் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடிகள் ஆகியோரை பற்றியும் அவர்களுக்கு இடையிலான சமூக- பொருளாதார உறவுகள் பற்றியும் பெருந் தொகுப்பு நூல் ஒன்றை ஏழு தொகுதிகளாக வெளியிட்டார்.

எட்கர் தர்ஸ்டனின் இந்நூல் 1900ங்களின் துவக்கத்தில் தென் இந்தியாவில் இருந்த சாதியக் கட்டுமானங்களையும் அவற்றிற்கு இடையிலான சமூக உறவுகள் குறித்தும், நூலாக்கம் பெற்ற காலத்தில் ஒவ்வொரு சாதிக்கும் இருந்த சமூக அந்தஸ்து குறித்தும் பேசுகிறது. இந்நூலில் உள்ள செய்திகள் கொண்டே இந்தியாவின் சாதிகளுக்கு இடையிலான மேல் கீழ் கட்டுமானமும் சமூக அந்தஸ்தும் எல்லாக் காலத்திலும் இவ்வாறுதான் இருந்தது என நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. கோசம்பி போன்ற ஆய்வாளர்கள் இந்திய நிலம் எண்ணற்ற இனக்குழுக்களின் வசிப்பிடமாக இருந்து பின்னர் வர்ணத் தொகுப்பின் வழியாக சாதிய அடையாளம் பூண்டவை என்கிறார்கள். அதிகாரத்திற்கான போட்டியில் வெல்லும் தோற்கும் ஒவ்வொரு இனக்குழுவும்/சாதியும் அதன் வெற்றி தோல்விகேற்ப சமூகத்தில் மேலும் கீழுமான இடத்திற்கு நகர்ந்து கொண்டேயிருந்தனர் என்பதே சாதிகள் பற்றிய இன்றைய புரிதலாய் இருக்கிறது. எட்கர் தர்ஸ்டனின் இந்நூல் எழுதப்பட்ட காலமான 20ம் நூற்றாண்டின் துவக்ககாலம் பற்றிய சித்திரத்தை மட்டுமே தருகிறது என்பதை மீண்டும் அழுத்தமாக இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

இந்நூலை மொழியாக்கம் செய்த க.ரத்தினம் அவர்கள் கோவைக்காரர். தன்னலமற்ற தமது கடும் உழைப்பின் வழியாக இந்நூலை 7 பெரும் தொகுதிகளாக மொழி பெயர்த்து உள்ளார். தமிழக பறவைகள் குறித்து இவர் தொகுத்த நூல் ஒன்றும் மிக முக்கியமானது. தமிழின் மானுடவியல் ஆய்வுத் துறைக்கும் தமிழக அரசியல், சமூக, பண்பாட்டு களச் செயல்பாட்டாளார்களுக்கும் மிகவும் பயனுடைய நூல் இது.

Monday, December 23, 2013

நூல் அறிமுகம் - 5

வளர்முக நாடுகளில் பாப்புலிசம் - வி.ஹோரெஸ்
(முன்னேற்றப் பதிப்பகம்)

இடது சாரிகளால் அதிகம் கண்டு கொள்ளப்படாத முக்கியமான இடது சாரி நூல்களில் இதுவும் ஒன்று. பாப்புலிசம் என்பதை வெகுமக்களியம் என்று தோராயமாக மொழி பெயர்க்கலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட வரலாற்று தருணத்தில் தோன்றும் ஒரு சமூக நெருக்கடியை எதிர் கொள்ள வெகுமக்கள் தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும் சமூக அமைப்புகளை பாப்புலிசம் என்று சொல்லலாம். பாப்புலிசம் உடனடியாக பரவக் கூடியது. ஆழமான தத்துவ பின்புலங்களோ வரலாறு மற்றும் சமூக அசைவியக்கங்கள் குறித்த இயங்கியல் புரிதல்களோ இல்லாதது.

முதலாளித்துவம் முழு வீச்சில் செயல்படாத தேசங்கள், நிலப்பிரபுத்துவம் உதிராத தேசங்கள், நிலப்பிரபுத்துவம் போதுமான அளவு வளர்ந்து தன்னியல்பாக முதலாளித்துவம் வராமல் காலனிய உறவுகளால் முதலாளித்துவம் அறிமுகப் படுத்தப்பட்ட தேசங்கள் போன்றவற்றில் பாப்புலிச இயக்கங்கள் தோன்றும் என்று இந்நூல் கூறுகிறது.

இந்தியாவில் சமீபத்தில் தோன்றிய பாப்புலிச இயக்கம் என்று ஆம் ஆத்மி கட்சியினரை குறிப்பிடலாம். காந்தியம், திராவிட இயங்கங்கள், அம்பேத்காரிய இயக்கங்கள், ஹிந்துத்துவா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் போன்றவற்றை இடது சாரி சிந்தனை முறையின் தத்துவார்த்த சொற்களின் படி பாப்புலிச அமைப்புகள் என்றே சொல்ல முடியும். அடையாள அரசியல் என்றோர் சொல்லை நவ மார்க்சியர்கள் பயன் படுத்துகின்றனர். அல்தூசரிய, கிராம்சிய உரையாடலகள் வழி பாப்புலிசத்தையும் அடையாள அரசியல் செயல்பாடுகளையும் இன்று புதிய வெளிச்சத்தில் பார்க்க வேண்டிய தேவை ஒன்று உள்ளது. நம்முடைய சம கால சிக்கல்களை புரிந்து கொள்ள பாப்புலிசம் என்ற கோட்பாட்டில் சில சாத்தியங்கள் உண்டு. மேலும் சென்ற நூற்றாண்டு சிந்தனை முறையான பாப்புலிசம் என்பதை இந்நூற்றாண்டுக்கு தகுந்தாற் போல வளர்தெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது.

Thursday, December 19, 2013

நூல் அறிமுகம் - 4

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்


- தேவி பிரசாத் சட்டோபாத்யாயா , தமிழில்: வெ.கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம், விலை ரூ.160/-

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா இந்தியாவில் தோன்றிய சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். மார்க்சிய இயங்கியல் அடிப்படையில் இந்தியவியல் ஆய்வுகளுக்கு இவர் செய்த பங்களிப்புகள் மிகச் சிறப்பானவை. குறிப்பாக இந்தியச் சிந்தனை மரபு மற்றும் இந்தியத் தத்துவத் துறைக்கு இவர் செய்த பங்களிப்புகள் இன்றும் முதன்மையானதும் முன்னோடியானதும் ஆகும். இந்திய நாத்திகம், இந்தியத் தத்துவத்தில் அழிந்தவையும் நிலைத்திருப்பவையும், லோகாயதம் போன்றவை இவர் எழுதிய பிற புகழ் பெற்ற நூல்களாகும்.

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் எனும் இந்நூலில் இந்தியாவின் புகழ் பெற்ற தத்துவங்கள் மற்றும் சிந்தனை முறைகள் போன்றவைகள் குறித்த நல்லதொரு அறிமுகத்தை இவர் வழங்கியுள்ளார். வேத மரபுகள், வேதம் சார்ந்த தரிசனங்கள் பற்றி மட்டுமல்லாது. அவைதீக மரபுகளான சாங்கியம், யோகம், நியாயம், வைஷேசிகம் போன்ற சிந்தனை முறைகள் குறித்தும் சிறப்பானதொரு அறிமுகம் இதில் உள்ளது. மேலும் வைதீக மற்றும் அவைதீக மரபுகள் எவ்வாறு ஒன்றோடு ஒன்று உரையாடி முரண் இயங்கியல் வழியாக தத்தம் மரபுகளை வளப்படுத்திக் கொள்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். பெளத்தம் சமணம் போன்ற மதங்கள் குறித்தும் லோகாயதம் குறித்தும் எளிய அறிமுகங்கள் இதில் உண்டு. சுருக்கமாக சொல்வதெனின் இந்தியச் தத்துவ மரபை அறிய விரும்புபவர்களுக்கு இது ஒரு பயன் மிக்க எளிய நூல்.

இந்நூலை தமிழாக்கிய வெ.கிருஷ்ண மூர்த்தி ஒரு சிறந்த மார்ச்சிய ஆய்வறிஞர். நா.வானமாமலை அவர்களின் நெருக்கமான மாணவரான இவர் சோழர் கால உற்பத்தி முறை , சோழர் கால வேத கலை, அல்தூசரின் சித்தாந்தம் போன்ற குறிப்பிடத்தக்க நூலகளை எழுதியிருக்கிறார்.

Saturday, December 14, 2013நூல் அறிமுகம் - 3

சோப்பியின் உலகம் - யொஸ்டைன் கார்ட்டர் ,

தமிழில்: ஆர்.சிவக்குமார், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.500.

உலகெங்கும் 80க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சுமார் 30 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கும் இந்நாவல் 1994ல் நார்வேஜிய மொழியில் வெளியிடப்பட்டது.
வகைமையில் பார்த்தால் இது ஒரு நாவல் ஆனால் இதை படித்து முடிக்கும் போது ஓட்டு மொத்த ஐரோப்பிய தத்துவ வரலாற்றை பற்றிய ஒரு முழுமையான எளிய சித்திரம் நமக்கு கிடைத்திருக்கும்.

நார்வேயில் வசித்து வரும் சோப்பி என்றொரு சிறுமிக்கு வினோதமான இரண்டு கடிதங்கள் முன் பின் தெரியாத ஒருவரால் அனுப்பப்படுகிறது. அக்கடிதங்களில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளால் சுவாரஸ்யம் அடையும் அவள் அதற்கு பதில் தேட முற்படுகிறாள் தொடர்ந்து தினமும் அவளுக்கு வரும் அனாமதேயக் கடிதங்களின் வழியாக ஐரோப்பிய தத்துவ வரலாறு சுவாரஸ்யமான எளிய மொழியில் சொல்லப்படுகிற்து. ஒரு சிறுமிக்கு சொல்லப்படும் எளிய மொழியில் இருப்பதாலும் கதை வடிவில் இருப்பதாலும் ஒரு தத்துவ நூலைப் படிக்கிறோம் என்கிற உணர்வே நமக்கு ஏற்படுவதில்லை. சாக்ரடீஸ்க்கு முந்தைய சிந்தனையாளர்களில் துவங்கி தற்கால பின் நவீன சிந்தனையாளர்கள் வரை பேசப்பட்டிருக்கிறது இந்நாவலில். மேலை தத்துவத்தை கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த கையேடு. மேலும் இந்த நாவலில் சிறு சிறு அழகான விஷயங்கள் ரசனையோடு செய்யப்பட்டு இருக்கிறது. (உதாரணமாக இந்நாவலின் தலைப்பை பாருங்கள் பிலாசபி என்ற சொல்லில் வரும் சோப்பி என்ற சொல்லிற்கு அறிவு என்று பொருள். அந்த வேர் சொல்லில் இருந்து நாயகிக்கும் நாவலுக்கும் பெயர் இடப்பட்டுள்ளது)

பொதுவாக இது போன்ற நூல்களை இரண்டு அல்லது மூன்று முறை வாசிப்பது நல்லது. முதல் வாசிப்பை கொஞ்சம் மெதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு அத்தியாயம் என்று படிக்கலாம். படித்ததை நினைவில் வைத்திருக்க யாராவது நண்பர்களிடம் சொல்லலாம் அல்லது எழுதிப் பார்க்கலாம்.

நூல் அறிமுகம் - 2இயங்கியல் பொருள் முதல்வாதம் என்றால் என்ன? - ராதுகா பதிப்பகம், நியூ செஞ்சுரி புத்தக நிலையம். விலை தெரியவில்லை அதிகபட்சம் 50 /- இருக்கக்கூடும். பக்கங்கள் சுமார் 250 இருக்கும்.

இது ஏதோ தத்துவ நூல் நமக்கு சம்பந்தம் இல்லாதது என நினைக்க வேண்டாம். மார்க்சியம் உலகிற்கு தந்த மாபெரும் கொடை அதன் சமூக ஆய்வு முறைமைதான். இதுவரையிலான சமூக வரலாற்று ஆய்வு முறைமைகளிலேயே மேலதிக விஞ்ஞானதன்மை கொண்டது மார்க்சிய ஆய்வு முறைதான். (இதுதான் இதன் பலமும் பலவீனமுமாக இருப்பது வேறு விஷயம்) இடதுசாரியோ வலதுசாரியோ மார்க்சியம் கூறும் தீர்வுகளில் நம்பிக்கை அற்றவர்கள் கூட இதன் இயங்கியல் அணுகு முறையை தவறு என மறுப்பதில்லை.உலகெங்கும் சிந்திக்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவரையும் மிகவும் பாதித்த சிந்தனை முறை இயங்கியல் வாதம் ஆகும். இன்றும் உலகெங்கும் உள்ள தலை சிறந்த சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்கள் இயங்கியல்வாதத்தின் அடிப்படையில் சிந்திக்கும் பழக்கம் உடையவர்களே என்று கூட சொல்லலாம். மிக சில புத்தகங்கள்தான் நாம் சிந்திக்கும் முறையையே மாற்றும் வலிமை உடையவையாக இருக்கும். ராதுகா பதிப்பகத்தின் இந்த நூல் அந்த வகையைச் சேர்ந்தது. புதிய வாசகர்களுக்கு நடை கொஞ்சம் கடினமாகதான் இருக்கும். ஆனால் ஆர்வத்தோடு வாசித்து முடிக்கும் போது ஒரு மிகச் சிறந்த சிந்தனை முறையை நாம் கற்று இருப்போம்.

நூல் அறிமுகம் -1


இன்று முதல் தினமும் ஒரு புத்தகம் பற்றி சிறு குறிப்பு ஒன்றை எழுத உள்ளேன்.. ஆர்வமற்றவர்கள் என் மொக்கை ஸ்டேடஸ்களுக்கு தாவிச் செல்லவும்:

“பிற்கால சோழர் சரித்தரம்” - தி. வை. சதாசிவ பண்டாரத்தார். பூம்புகார் பதிப்பகம். விலை 400 ரூபாய்

நவீன தமிழ் வரலாற்று ஆசிரியர்களில் முன்னோடிகளில் ஒருவரான தி. வை. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய இந்நூல் மூன்று தொகுதிகளாக 1940 களின் இறுதியில் வெளியிடப்பட்டது. இப்போது ஓரே நூலாகவும் கிடைக்கிறது. சங்க காலத்திற்கு பிறகான காலங்களில் தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்களை பிற்கால சோழர்கள் என்கிறார்கள். இவர்கள் தங்களை பழங்கால சோழர்களின் வாரிசுகள் என்றே குறிப்பிட்டு கொள்கிறார்கள் என்றாலும் சுமார் ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகள் இடைவெளியில் இவர்கள் வருவதால் இவர்களை பிற்கால சோழர்கள் என்கிறார்கள். சுவாரஸ்யமான, எளிய நடை வாசிப்பதற்கு இசைவான மன நிலையை தருகிறது. 700 பக்கங்கள் கொண்ட இந்நூலை தினமும் 2 மணி நேரம் ஒதுக்கி படித்தால், ஒரு வாரம் முடியும் போது தமிழக வரலாற்றின் முக்கியமான பக்கங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.


Tuesday, October 29, 2013பதினாறு அல்லது பதினேழு வயதில் பெயர் மறந்து போன இந்துமதியின் நாவல் ஒன்றின் வழியாக கல்யாண்ஜி எனக்கு அறிமுகமானார். அவரின் “நினைக்க ஆறு நடக்கத் தெரு” கவிதையைப் பற்றி வெகுவாக சிலாகித்து அந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும். தொடர்ந்து வேறொரு இதழில் வந்த தொடர்கதையில் யாரோ மீண்டும் கல்யாண்ஜியின் கவிதையைக் குறிப்பிட்டிருந்தார்கள். கவிதைகள் பெரும் வசீகரமான மாயப்பொருளாய் எனை ஈர்த்துக் கொண்டிருந்த அந்த வயதில் யார் இந்த மனிதன் என அறிய ஆர்வமானேன். ஒரு தமிழ் நாவலில் இவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால் வேறு மொழியைச் சேர்ந்த புகழ் பெற்ற கவிஞராய்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். வித்யாசமான அந்தப் பெயர் வேறு அப்படி நினைக்க ஏதுவாய் இருந்தது. அதுவும் அல்லாமல் அப்போது நான் கவிஞர் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் பாடல் எழுதிக் கொண்டிப்பவர்களாக மட்டுமே இருந்தார்கள்.

கவிதையின் மீதான என் பித்து அதிகரிக்கத் துவங்கிய பதினெட்டு வயதில் கலாப்ரியாவும் கல்யாண்ஜியும் என்னை வந்து சேர்ந்தார்கள். என்னால் விடுபடவே முடியாத மோசமான மாயவலைக்குள் நான் விழுந்தேன். கிட்டதட்ட ஒரு டைரி முழுக்க அவர்கள் சாயலிலான கவிதைகளை எழுதிக் குவித்தேன். (அந்த டைரி இப்போதும் தோழர் ந.முத்துவிடம் உள்ளது) என்னால் இவர்கள் இருவரையும் கடந்து எழுதவே இயலாது என்ற தற்சோர்வில் சில காலம் சென்றது. பிறகு வேறொரு காலம் வந்தது வாழ்க்கை என் கழுத்தை பிடித்து தரையில் அழுத்தி முகம் நிலமுரச இழுத்துச் சென்றது. அதுவரை நான் எதிர் கொள்ளாத வன்மங்களையும் காயங்களையும் வாழ்க்கை எனக்குத் தந்தபோது நான் அவைகளை என் கவிதைக்கு தந்தேன். தொடர்ந்து கடும் வாசிப்பின் வழியாக உருப்பெற்ற அறிவையும் கதறக் கதறப் புகட்டப்பட்ட அனுபவ ஞானத்தையும் கொண்டு எவரும் முற்றுகையிடவியலாத தத்துவக் கோட்டைகள் கட்டினேன். வாழ்வின் புதிர்மை சுமந்தலையும் தொன்மங்கள் புனைந்தேன். என் கவிதைகள் மெல்ல வேறொரு நிறம் அடையத் துவங்கின.

இந்த இடைப்பட்ட காலங்களில் கல்யாண்ஜியை மெல்ல மறந்துதான் போனேன். என் நெருங்கிய நண்பர்கள் சிலர் அவரிடம் கடிதத் தொடர்பில் இருந்த போதும் ஏனோ ஒரு தயக்கம் நான் ஒரு கடிதமும் எழுதியதில்லை அவருக்கு. சில வருடங்களுக்கு முன் கோவையில் ஒரு இலக்கிய நிகழ்வில் கல்யாண்ஜியை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்த போது மனம் சொல்ல இயலாத பரபரப்பை அடைந்தது. ஆனாலும் ஏதும் பேசாமலே திரும்பினேன். சென்ற வருடம் என நினைக்கிறேன். அவர் கோவை வந்திருந்த போது நானும் தென்பாண்டியனும் சென்று சந்தித்தோம். நான் என்னை யாரென வெளிப்படுத்திக் கொள்ளாமலே திரும்பினேன். நான் ஏன் அப்படி விநோதமாய் நடந்து கொண்டேன் என இப்போது வரை எனக்குப் புரியவில்லை. எத்தனை முறை ஒரு கவிதையை படிப்பதும் பின்னட்டையில் இருக்கும் அந்த முகத்தை பெருமிதம் பொங்க பார்த்துவிட்டு மீண்டும் இன்னொரு கவிதையைப் படிப்பதுமாய் இருந்திருக்கிறேன். தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னது போல மனித மனம் புரிந்து கொள்ள இயலாத இருட்டறைதான் போல.

இதழோரம் புன்னகை வழிய ஒரு முறை இசையிடம் சொன்னேன் “சிறு தவறு செய்ததால் வானுலகில் இருந்து மண்ணுக்கு அனுப்பட்ட தேவகுமாரன் போலவே அந்த மனிதர் இருக்கிறார்”. எனக்கு கல்யாண்ஜி இப்போதும் அப்படித்தான் தெரிகிறார். கல்யாண்ஜியை மீண்டும் என்னிடம் கொண்டு வந்தவர் அல்லது என்னை மீண்டும் கல்யாண்ஜியிடம் கொண்டு சேர்த்தவர் சாம்ராஜ்தான். இப்போது வரை என் முகம் கூட பார்த்திராமலேயே சாம்ரிஜடமும் இசையிடமும் லிபியிடமும் என் மீதான தன் பிரியத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். அன்று கோவையில் அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்ளாததற்காக இப்போது மிகவும் வெட்கப்படுகிறேன். நேற்று இளையநிலா ஜான் சுந்தர் திருநெல்வேலி சென்றுவிட்டு திரும்பிய போது கையில் ஒரு பார்சலுடன் என் அலுவலகத்திற்கு வந்தார் என்ன என்று கேட்டேன் “அல்வா.. கல்யாண்ஜி உங்களுக்கு கொடுக்கச் சொன்னார்” என்று சொல்லி கொடுத்துச் சென்றார். என் அறை சொற்களின் மீது நிற்க முடியாமல் தள்ளாடுகிறது.

Sunday, September 15, 2013

திருவாளர் பால் - கவிதை

திருவாளர் பால்
மண்ணுக்கு அடியில் என்ன செய்து கொண்டு இருக்கறீர்கள்
உலர்ந்த எலும்புகளில் என்ன இருக்கிறது
தொல்லியல் என நாக்கில் முடிச்சு விழும் சொல்லை
நம் குழந்தைகள் அறியார்
சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த தொல்லியலாளரும்
அத்துறையின் மிகப் பெரிய கிறுக்குமான
உங்களை யாருக்கு தெரியும்
இன்டியானா ஜோன்ஸ் தெரிந்த அளவிற்கு
அழிந்து போனவைகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வருபவர்கள் சாத்தான்கள் என பாட்டி
சொல்வாள் எவ்வளவு பெரிய சாத்தான் நீங்கள்
வரலாறு ஒரு பிணஅறை
அதற்குள் மூக்கை பொத்திக்கொண்டு உங்களுடன் இவ்வுலகம் வரவேண்டுமா
எவ்வளவு பெரிய கிறுக்குதான் நீங்கள்
திருவாளர் பால்
மண்ணுக்கு அடியில் என்ன செய்து கொண்டு இருக்கறீர்கள்