Wednesday, November 14, 2012

கவிதை - நம்புகிறேன்


நான் நம்புகிறேன் இங்குள்ள யாவும் பொய்தானென
ஒரு பைத்தியகார டைனோசர்குட்டியின்
எதிர்காலம் குறித்த துர்கனவென
ஓநாய் ஒன்று என் குரல்வளையை கவ்விக் கொண்டேகும்போது
என் காதலி வேறொருவனை முத்தமிடும்போது
என் நிலம் பிடுங்கப்படும்போது
என் இரத்தம் பேனாவில் நிரப்படும்போது
நான் நம்பத்தான் நம்புகிறேன்

Saturday, November 3, 2012

கவிதை - இந்த வாழ்வு குறித்துச் சொல்ல


இந்த வாழ்வு குறித்துச்
சொல்ல ஏதுமில்லை
அது ஒரு ஆப்பிளுக்கும்
ஏவாளுக்கும் ஆதாமுக்கும்
இடையே தோன்றும் முக்கோணத்தால் ஆனது

ஆனால் நீங்கள் கேட்கறீர்கள்
ஆனாலும் ஆனாலும்

இந்த வாழ்வு குறித்துச்
சொல்ல ஏதுமில்லை
அது உங்களுக்கும்
உங்கள் தந்தைக்கும் உங்கள் மகனுக்கும்
இடையே தோன்றும் நேர்கோட்டால் ஆனது

ஆனால் நீங்கள் கேட்கறீர்கள்
ஆனாலும் ஆனாலும்

இந்த வாழ்வு குறித்துச்
சொல்ல ஏதுமில்லை
அது உங்கள்
வயிற்றிற்கும் மனதுக்கும்
இடையே உள்ள பெரும்பாதாள
விளிம்புகளின் விட்டத்தால் ஆனது

ஆனால் நீங்கள் கேட்கறீர்கள்
ஆனாலும் ஆனாலும்

Saturday, September 22, 2012
சுமார் நாலு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு போல இந்தியா முழுதும் பழங்குடி கடவுள்கள் நாட்டார் தெய்வங்கள் தவிர ஆறு வகையான பெருமதங்கள் இருந்தன இதை ஷன்மார்கங்கள் என்பார்கள் சிவனை வழிபடும் சைவம், சக்தியை வழிபடும் சாக்தம், விஷ்ணுவை வழிபாடும் வைணவம், விநாயகனை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம். இதில் ஒவ்வொரு வழிபாடும் இந்தியாவின் ஒரு பகுதியில் சிறப்பாக இருந்தது.

அதாவது சைவம் தமிழ் நாடு, காஷ்மீர், உத்திரப்ரதேசம் போன்ற இடங்களிலும் சாக்தம் கேரளம், வங்காளம் போன்ற இடங்களிலும் வைணவம் பீகார், மத்தியப்ரதேசம் போன்ற இடங்களிலும் காணபத்தியம் மகாராஷ்டிரா, ஒரிசா, கர்நாடகம் போன்ற இடங்களிலும் கௌமாரம் தமிழ்நாட்டிலும், சௌரம் ஒரிஸ்ஸாவிலும் கால்கொண்டு வளர்ந்தன.
பிறகு பக்தி இயக்க காலகட்டத்தில் சைவம் அரச ஆதரவோடு வளர்ந்த போது சாக்தம், காணபத்யம், கௌமாரம் ஆகியவற்றை உட்செறித்து கொண்டது. அது போலவே வைணவம் சௌரவதை விழுங்கியது (சூர்ய நாராயணர்)

தொடர்ந்து வந்த ஓரிரு நூற்றாண்டுகளில் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு ஒரே வழிபாட்டு முறையாக மாற்றும் நோக்கோடு நூல்கள் எழுதப்பட்டன.

ஏழாம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் காலத்தில் பரஞ்சோதி சாளுக்கிய தேசம் மேல் (தற்போதைய ஒரிசா) படையெடுத்து போன போது வெற்றியின் அடையாளமாக அங்கிருந்து ஒரு பிள்ளையாரை கொண்டுவந்தார். அவர் பெயர் வாதாபி கணபதி (வாதாபி அவர்கள் தலைநகரம்) அவர்தான் இங்கு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் விநாயகர். பக்தி இயக்க காலகட்டம் உச்சம் அடைந்த 8 ,9 ,10 ம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுதும் அரச மரத்தடியில் இருந்த புத்த, சமண துறவிகளின் சிலைகள் அகற்றப்பட்டு பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன. பிறகு சைவம் காணபத்யத்தை உள்வாங்கி கொண்டது. முழு முதற்கடவுள் கடைசியாக தமிழனுக்கு வந்து சேர்ந்தார்.

Thursday, May 3, 2012

ஒரு பழைய கதை என் சொற்களில்..

கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான். அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான். அவள் பெயர் சிலம்பி ஊரிலேயே புகழ்பெற்ற தாசி. அவள் எதுக்கு வெறும்பயல் நம்மை சந்திக்க விருபுறா என்ற யோசனையோடே போகிறார் புலவர்.

”உங்க இராமாயணம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு. அதுல நீங்க சீதைய புகழ்ந்தும் வர்ணித்தும் எழுதினீங்களே அது போல என்னையும் எழுத முடியுமானு கேட்டா”

”கண்டாரோ.. மு... என்ன வார்த்தை சொல்லிட்டா.. சீதைய பாடின வாயால இவளை பாடணுமாம்” என மனசில் நினைச்சுட்டு.. “அதெல்லாம் சும்மா பாட முடியாது காசு வேணும்” என்றாராம்.

“யோவ்! புலவரே பயங்கரமான ஆளுய்யா நீர்.. தாசிகிட்டயே காசை புடுங்கபார்கறீரே.. இங்க வந்து கொடுத்துட்டு போனவன்தான் இருக்கிறான். வாங்கிட்டு போனவன் யாருமில்ல. சரி.. சரி நீர் வேறு வாயை திறந்து கேட்டுட்டீர்.. ரெண்டு காசுதான் தருவேன் சம்மதமா” என்றாள்.

சரி வந்தவரை லாபம்னு நினைத்துக் கொண்டு “ கையில காசு வாயில பாட்டு கொடு” என்றாராம்.

அவள் கொடுக்கவும். கரி கட்டைய எடுத்து அவள் வீட்டு சுவற்றில் வேகமா எழுதினார்.

”தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே”

ரெண்டு வரி எழுதிட்டு ரெண்டு காசுக்கு அம்புட்டுதானுட்டு வேகமா கிளம்பி போயிட்டார்.

சிலம்பியும் என்னடி இது இப்படி ஆயிடுச்சேனு நினைச்சுட்டு. ஊருல நாட்டுல இருக்கிற கவிஞர்களை எல்லாம் அழைச்சு மிச்ச வரிய எழுதக் கேட்டாள். கம்பனோட வரிக்கு மறுவரி எழுதற தைரியம் எவனுக்கு இருக்கு. ஒரு பயலும் முடியாதுனுட்டான்.

இப்படியே வருசங்கள் போச்சு. சிலம்பிக்கும் வயசாயிட்டிருக்கு. ஒரு நாள் ஒரு கிழவி அவள் வீட்டு வாசலில் வந்து தண்ணி கேட்டாள். அவளைப் பார்த்ததுமே சிலம்பிக்கு யாருன்னு தெரிஞ்சுடுச்சு.

அம்மா! நீங்க ஒளவைதானேனு உள்ளே வாங்க.. இந்த கவிதையின் மிச்ச வரிகளை நீங்க எழுதிட்டா. தண்ணி என்ன கூழே ஊத்தறேன் என்றாள்.

ஒளவை அந்த சுவற்றைப் பார்த்தாள்.

தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே
பெண்ணாவாள் பொன் சிலம்பி
அம்பொற் சிலம்பே சிலம்பு

என மிச்ச வரிகளை எழுதி முடித்தாள். தண்ணீர் என்றால் காவிரிதான்.. ராஜா என்றால் சோழந்தான்.. பெண் என்றால் சிலம்பிதான் (கம்பன் பாடிய சீதையும் பெண்ணில்லை.. இளங்கோ பாடிய கண்ணகியும் பெண்ணில்லை) அது போல அவள் காலில் உள்ளது தான் சிலம்பு (கண்ணகி போட்டதும் சிலம்பில்லை, பாண்டிமாதேவியதும் சிலம்பில்லை, இளங்கோ எழுதினதும் சிலம்பில்லை)

கம்பன் வந்து பார்த்தான். யப்பா என்ன ஒரு அர்த்தம்.. ஒரே அடியில கம்பனையும் இளங்கோவையும் காலை வாரி நிலத்துல அடிச்சு போட்டாளே இந்த பொம்பளை. அதுவும் யாரு முன்னால் ஒரு தாசி முன்னால.

பிரச்சனை சோழனிடம் போச்சு.. ”ஏன்மா நீ இப்படி எழுதலாமா அதுவும் கொஞ்சம் கூழுக்காக” என்று சோழன் கேட்டானாம்.

அதுக்கும் ஒரு பாட்டு சொன்னா கிழவி

கூழைப்பலா தழைக்கப் பாட -- குலமகளும்
மூழ அழாக்குத் திணை தந்தாள். சோழா கேள்
கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி
ஒப்பிக்கும் என் உள்ளம்.

என்றாள்.. அன்னைக்கு ஒரு நாள் உன் வம்சம் தழைக்க கூழைப்பலா தழைக்கனும்னு பாடினேன்.. உன் பொண்டாட்டி முழா அழாக்கு திணை கொடுத்தா.. இன்னைக்கு கூழுக்கு பாடினேன்.பாட சொன்னா பாடுறதுதான் என் குணம் கூழா உப்பா திணையானு பார்த்து பாட மாட்டேன். என்றாளாம்.

இந்த கதை என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளை சொல்வது கடினம். எனக்கு இப்போது இரு விஷயங்கள்தோன்றுகின்றன.

1.கம்பன் மனதில் யோசித்து வைத்திருந்த மிச்ச இரு வரிகள் என்னவாக இருக்கக் கூடும்?

2.எழுதப்பட்ட வரலாற்றின் அடுத்த பகுதியை பெண் எழுதிக் காட்டினால் ஆண் மனம்தான் எவ்வளவு அதிர்ச்சியடைகிறது.

Friday, April 27, 2012

டார்லிங் வில்ப்ரெட்

உன் வருகைக்காக இவ்வீடு தயாராகி விட்டது
அறையெங்கும் இறைந்து கிடக்கும் புத்தகங்கள்
அடுக்கப்பட்டாயிற்று
(உனக்குப் பிடித்த நகுலனும் பெசோவாவும் பார்வையில் படும்படி)
வெள்ளையடிக்கப்பட்ட - உருவங்கள் நெளியாத - சுவர்களில்
வரவேற்பு வாசகங்கள் தயாராகி விட்டன
பூந்தோட்டத்தை நோக்கிய குளிர்ச்சியான உனதறையில்
அனைத்தும் பார்த்து பார்த்து ஸ்திதபடுதப்பட்டாயிற்று
(ஒரு திரைச்சீலை அசைவதை கூட தாங்கவியலாதவன் அன்றோ நீ)
இரவுகளில் புறாக்களின் சிறகடிப்பும் மென்சூறையும்
காற்றில் அடரும் அத்தரின் வாசமும்
உன் வருகைக்கான நிமித்திகம் என
இளங்கோ கிருஷ்ணன் கூறினான்
அவனை உனக்கு நினைவுள்ளதா
சென்ற கோடையின் பௌர்ணமியில்
மொட்டை மாடியில் கடல் பார்த்தபடி
இலக்கியமும் குடியுமாய் கழிந்த அவ்விரவு
அன்று நான்
புத்தனை ஒரு அசிங்கமான சொல்லால் திட்டினேன்
பிறகு நீயும் நானும் கட்டி உருண்டோம்
அன்றைக்கு மீன் வறுவல் அவ்வளவு மோசமாக
இருந்திருக்க வேண்டாம் இல்லையா

டார்லிங் வில்ப்ரெட்
மூன்று மாதங்கள் உன் அருகிலேயே
கிடந்தேன் உனக்கும் சேர்த்தே சமைத்தேன்
உனக்கும் சேர்த்தே ஆடைகள் வாங்கி வந்தேன்
நீதான் அவைகளை தொடக்கூட இல்லை
துர்வாடை வீசும் உனதுடலை அத்தரால் கழுவினேன்
இரவெல்லாம் உன்னிடம் ஏதேதோ பேசினேன்
தாந்தேவையும் மில்டனையும் வாசித்துக்காட்டினேன்
ஞாயிறுகளில் நாம் செல்லும்
உன் அம்மாவின் கல்லறைக்கு கூட வர மறுத்து விட்டாய்
துப்பாகியால் எனை சுட போனேன்
உன் அம்மாதான் எனை தடுத்தாள்
பிறகு யார் யாரோ வந்தார்கள்
எனக்கு ஊசியிட்டு மயங்க செய்து
உனை கொண்டு சென்றார்கள்

டார்லிங் வில்ப்ரெட்
எத்தனை முறை உன் கல்லறையில்
வந்து இறைஞ்சுவது
அப்படி என்ன நான் செய்தேன்
அந்த பௌர்ணமி மோசமாக இருந்தது
மற்றும் அந்த மீன் வறுவல்
மற்றும் அந்த சொற்கள்
நான் துப்பாகியால் உனை சுடவில்லை
புததனையே சுட்டேன்
அல்லது அந்த குடியை அல்லது அந்த போதையை
அல்லது அவைகளை போன்ற ஒன்றை.

Saturday, January 21, 2012

சீசரை யார் கொன்றார்கள்

உன்முதுகில் முதல் குத்தை 
கடவுள் இறக்கினார் சீசர்
பிறகு ஒன்றை மிகுந்த பாசத்துடன் 
உன் தாய் தந்தாள் 
உன் காதலியும் 
உடன் பிறந்தவர்களும் 
வெறுக்கமுடியாத நண்பனும் 
வாள் எடுப்பதை பார்த்த பிறகே 
உன் எதிரி எடுத்தான் 
ஒரு முத்தத்திற்கு தயாராவதை போல 
நீ உன் வாளுக்கு தயாரானாய் 
"Et tu, Caesar,," (then Caesar die)

Thursday, January 12, 2012

வம்சம்

லேட்.அப்பாவுக்கு மூன்று மகன்கள் முதலில் ஒரு அணில் குஞ்சு அடுத்தவன் பொண்டாட்டியை காப்பாற்ற மண் சுமந்து தன் பொண்டாட்டிய தொலைச்ச கதை அடுத்ததோ ஒரு ஓட்டை பானை கிணறு முழுக்க தண்ணி இருந்தும் தவிச்ச வாய் நனைச்சதில்ல அப்புறந்தான் நான் வந்தேன் அழகான பாசிமணி பசிக்குதுன்னு மெல்ல முடியல படக்குன்னு எடுத்து வீச மனமில்லை