Monday, June 27, 2011

நீர் வழிப்படும் புணை நீங்கள் நான் மற்றும் மரணம்: எஸ்.செந்தில்குமாரின் நாவல் குறித்து

தமிழுக்கு நாவல் என்ற வடிவம் மேற்கிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் நாவல் வரலாற்றை மேற்கின் நாவல் வரலாற்றோடு இணைத்து பேசுவதும் தமிழ் நாவலின் அழகியலை மேற்கின் நாவல் அழகியலோடு இணைத்து பேசுவதும் சற்று சிரமமான காரியம் என்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது நாம் புதுக்கவிதையை போலவே நாவல் என்ற வடிவத்தையும் மேற்கிலிருந்து வாங்கி அதை இங்குள்ள சூழலுக்கு ஏற்றார் போல பிரதிபலித்துக் கொண்டோம். எனவே மேற்கின் நாவல் வரலாற்றை துவக்ககாலம், செவ்வியல் காலம், எதார்த்தபாணி காலம், நவீன காலம், பின் நவீன காலம் என மேற்கின் விமர்சகர்கள் பிரித்துக் கொள்வதைப் போல தமிழ் நாவல்களை பிரித்துப் பார்ப்பது இயலாததாக இருக்கிறது. இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதப்படும் தமிழ் நாவல்கள் பெரும்பாலும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சொல்லல் முறையிலும் எதார்த்தபாணி நாவல்களாகவே உள்ளன. இவைகளை நாம் நவீனத்துவத்திற்கு பிறகான எதார்த்தவாதம் எனலாம். மேற்கின் இருத்தலியம், அமைப்பியல்வாதம் போன்ற சிந்தனைகள் தமிழுக்கு அறிமுகமான போது இங்கு எதார்த்தவாத நாவல்களுக்கு மாற்றான நவீன நாவல்கள் எழுதப்பட்டன. நகுலனின் நினைவுப்பாதை, சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், ஆதவனின் இரவுக்கு முன் வருவது மாலை, எம்.வி வெங்கட்ராமின் காதுகள் போன்ற நாவல்கள் உடனடியாக நினைவுக்கு வருவன. தமிழில் நவீனத்துவ அலை ஒன்று வந்து சென்றிருந்தாலும் தமிழ் நாவல்களின் ஆகப்பெரும் சாதனைகள் எல்லாம் எதார்த்தபாணி நாவல்களாலேயே செய்யப்படன என்று துணிந்து கூறலாம். இப்படி நேர்ந்ததிற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. இவைகளில் பிரதானமானது தமிழ் எதார்த்தபாணி நாவல்களின் உள்வாங்கும் பண்பு எனலாம். அதாவது நவீனத்துவத்துக்குப் பிறகான எதார்த்தபாணி நாவல்கள் அதற்கு முன்பு எழுதப்பட்ட எதார்த்தபாணி நாவல்களில் இருந்து சற்று மாறுபட்டதாக இருக்கிறது. நவீனத்துவ நாவலின் சொல்லல் முறை அல்லது உள்ளடக்கம் அல்லது வடிவம் இவற்றில் எதாவது ஒன்றை உட்செறிந்து கொண்டு எதார்த்தவாத பாணியில் எழுதப்படுவதுதாக இத்தகைய நாவல்கள் உள்ளன. இதற்கு எவ்வளவோ உதாரணங்கள் இருந்தாலும் இந்தக் கட்டுரையின் மையமாக உள்ள ”நீங்கள் நான் மற்றும் மரணம்” எனும் இந்த நாவலையே கூட உதரணமாக கூற முடியும். நம் காலத்தில் நடக்கும் இந்த நாவலில் மகாபாரத திரெளபதியும், பாரதியை காதலித்த கண்ணம்மாவும், ஒளவையும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். முந்தைய எதார்த்தபாணி நாவல்களில் கதையின் களம், காலம் மீறிய வெளியில் கதாபாத்திரங்கள் வருவது சாத்தியமற்றது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் நான் மற்றும் மரணம் எனும் இந்த நாவல் தென்மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நம் சமகாலத்தில் நிகழ்வதாக சித்தரிக்கப்படுகிறது. பாலமுருகன், பாரிஜாதம், துரைசிங்கம், கோமதி என்ற நான்கு கதைமாந்தர்களும் பத்துக்கும் மேற்பட்ட துணைபாத்திரங்களுமாக விரியும் கதையில் விதி ஒரு அரூப பாத்திரமாக அனைவரையும் இயக்கும் ஒரு மையவிசையாக இருக்கிறது. இந்த நாவலின் ஓரிடத்தில் விதி நம் அனைவரையும் ஒரு நாயைப் போல் பின் தொடர்கிறது என்று ஒரு வரி வருகிறது. இதுவே இந்நாவலின் மையப்படிமம் என்று தோன்றுகிறது. இந்நாவலின் கதை மாந்தர்கள் அனைவரும் மிகச் சாதரணமானவர்கள் செட்டியாரின் அடகுக்கடையில் கணக்கு எழுதும் பாலமுருகன் சினிமா தியேட்டரில் சைக்கிளுக்கு டோக்கன் போடும் துரைசிங்கம் என விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை முன் வைத்து அவர்களின் வாழ்க்கைக்கு என்ன பொருள் என்ற தத்துவார்த்தமான தேடலை செய்திருக்கிறது இந்நாவல். இந்நாவலின் மையமான பேசு பொருள்களில் ஒன்றாக பெண்களின் வாழ்வு உள்ளது. இந்நாவல் முழுதும் இவ்வுலகில் உள்ள எல்லா பெண்களுக்குமான பிரதிநிதியாக நின்று திரெளபதி பேசுகிறாள். அவளின் கேள்விகள் ஒவ்வொன்றும் துயரத்தோடும் ஆங்காரத்தோடும் எரிச்சலோடும் வெளிப்படுன்றன. ஆண்களுக்கு இடையே சிக்கி பெண்கள் படும் துயரங்கள். பெண் மனதின் வலிகள் காயங்கள் துல்லியமாக இந்நாவலில் பதிவாகி உள்ளன. தாங்கள் வெறும் உடலாக மட்டுமே பார்க்கப்படும் சமூகத்தில் இயல்பாக தங்களுக்கு உள்ள காமம் மீதான விழைவு, அதனால் ஒரு ஆணை நெருங்கி பெறும் வாதைகள் என காமத்தை விரும்பியும் விரும்பாமலும் விட்டு விடமுடியாமலும் படும் பாடுகள் நாவல் முழுதும் பெரும்பாலான பெண்களால் சொல்லப்படுகின்றன. தன் சொந்த மகளையே வண்புணர்ச்சி செய்யும் கோமதியின் தந்தை கருப்பு, அடுத்தவன் மனைவியிடம் உறவு வைத்துக்கொளவதில் எந்தக் குற்றவுணர்ச்சியுமற்ற பாலமுருகன் தன் மனைவியின் கள்ள உறவு குறித்தறிந்தும் ஏதும் செய்யாத துரைசிங்கம் என மூன்று ஆண்கள் இந்நாவலில் வருகிறார்கள். இவர்களை தவிரவும் இளம் விதவையாக வேலைக்கு செல்லும் கோமதியிடம் ஆசைவார்த்தை பேசும் வேல்முருகன் மற்றும் எண்ணற்ற நபர்கள் என அனைத்து ஆண்களுமே பெண்ணை வெறும் உடலாக பார்ப்பவர்கள். தங்கள் உடலில் மிருகம் போல் வந்தடையும் காமத்தை வழித்து எறிவதற்காக கூச்சமின்றி எதையும் செய்பவர்கள் பாரிஜாதம் பால முருகனோடு கள்ள உறவு வைத்திருக்கிறாள். அவள் கணவன் துரைசிங்கமோ அவர்களின் அந்தரங்க உறவை அறிந்திருந்தும் தன் இயலாமை காரணமாக அவ்வுறவை கண்டு கொள்ளாதிருக்கிறான். நாவலின் துவக்கப் பகுதியில் துரைசிங்கம் பாலமுருகனை கொலை செய்யப் போவதாக கூறினாலும் அவன் அதைச் செய்யவில்லை மாறாக தனக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கோமதியை பாலமுருகனுக்கு கட்டி வைப்பதன் மூலம் பாலமுருகன் தன் பிடியை விட்டும் தன் மனைவி பிடியை விட்டும் செல்லாதிருப்பான் என்று கணக்கு போடுபவனாகவே இருக்கிறான். பாரிஜாதம் தன் கணவனுக்கு தெரியும் என்றறிந்தும் பாலமுருகனோடு உறவு வைத்திருக்கிறாள். இது குறித்து அவளிடம் குற்றவுணர்வுகள் ஏதும் இல்லை. இதற்கு நேர் எதிராக கோமதியோ தன் கணவன் பாலமுருகன் இறந்த பிறகும் அவன் நினைவாகவே வாழ்பவளாக இருக்கிறாள். வேலைக்கு செல்லும் இடத்தில் அவளை ஒருவன் திருமணம் செய்ய முன் வந்த போது கூட அவள் தன் உடலை இறந்த கணவனுக்கு மட்டுமே சொந்தமானது என கருதி அந்தக் காதலை மறுக்கிறாள். நீ வெறும் உடல் உடல் என பெண்ணிடம் திரும்ப திரும்ப சொல்லப்படும் போது அந்த உடல் மீதான முற்றுரிமையை ஆண் கோரும் போது அவள் மேலும் மூர்க்கமாக தன் உடலை பாதுகாத்துக் கொள்ளவோ அல்லது மேலும் மூர்க்கமாக உடலை துறந்து செல்லவோ முயல்கிறாள். அப்படி செல்லும் போது ஏற்படும் உறவுச் சிக்கல்கள் மனச்சிக்கல்கள் வாழ்வை எப்படி மாற்றுகின்றன என பாரிஜாதம் X கோமதி என்ற இரு எதிர்வுகள் வழியாக பேசுகிறது இந்நாவல். பாரிஜாதம் காமத்தை துய்ப்பதன் வழியாக உடலை துறந்து உடல் குறித்த தன்னுணர்வை துறந்து விடுதலையை அடைய முயல்கிறாள் எனில் கோமதியோ உடலைப் பாதுகாப்பதன் வழியாக கற்பை போற்றி சமூக பொதுபுத்தியின் உன்னதமாக்கல் வழியாக தன் விடுதலையை தேடுபவளாக இருக்கிறாள் என்று சொல்லலாம். மறுபுறம் கோமதியின் தங்கையான பொம்மியோ காமத்தை துறந்து உடலை ஒடுக்கி காரைக்கால் அம்மையாரைப் போல ஆண்டாளை போல sublimation வழியாக தன் விடுதலையை தேடுபவளாக இருக்கிறாள். எளிதாக நிகழும் சம்பவங்களுக்குள் எளிய மனிதர்கள் மிக எளிய முறையில் வினையாற்றுகிறார்கள் சம்பவங்கள் மெல்ல முறுகலாக மாறும் போது அனைவரும் ஒரு பொறிக்குள் சிக்கிக் கொண்டதைப் போல தவித்து விடுபட வேண்டும் என்ற படபடப்பில் சிக்கலை மேலும் பெரிதாக்குகிறார்கள். இறுதியில் பெரிய துயரமொன்று நிகழ்ந்து வெறுமை மட்டுமே எஞ்சுகிறது என்ற வழமையான எதார்த்தபாணி நாவலின் நேர்கோட்டு தன்மையில்தான் பயணிக்கிறது இந்நாவலும் என்றாலும் நாவலில் ஆங்காங்கே கேட்கப்படும் தத்துவார்த்தமான கேள்விகளும் நிகழ்த்தப்படும் தத்துவார்தமான உரையாடல்களும் விசைக்கொண்டு கொண்டு இயங்கும் கதையோட்டமும் இந்நாவலுக்கு ஒரு செவ்வியல் நாவலின் அந்தஸ்த்தை கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக விதியை மையமாக வைத்து கேட்கப்படும் கேள்விகளைச் சொல்லலாம். பாலமுருகன் இறந்ததும் பாரிஜாதம் கேட்டுக் கொள்கிறாள்: அவன் ஏன் என்னை ஸ்நேகித்தான்? அவன் என்னை சந்தித்தது. உறவு கொண்டது. எனக்கு உதவியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் சிக்கியது. எல்லாம் அவன் மரணமடைய வேண்டும் என்பதற்காகத்தானா? என்று. இங்கு சகலமும் மரணத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறதா? மனிதனுக்குள் காமம் இருப்பது மரணித்திற்குதானா? தன் நீட்சியாக ஒரு உயிரை உருவாக்குவதன் மூலம் மரணத்தை நாம் வெல்ல வேண்டும் என்பதற்காக காமம் இருக்கிறதா? அல்லது மரணத்தை நோக்கி அழைத்து செல்லத்தான் அது இருக்கிறதா? நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி தன்னை விட இளையவன் ஒருவனுடன் உறவு கொள்வதைப் பார்க்கும் திரெளபதியிடம் அவள் ஆழ்மனம் சொல்கிறது. ஐவருடன் கூடி பிள்ளை பெற வேண்டும் என்பது உன் விதி.. அதை போலவே அவளும் வேறொரு ஆணுடன் கூடி பிள்ளை பெற வேண்டும் என்பது அவளின் விதி அவ்வளவே என. அப்படியானால் தன் கணவன் அல்லாதவனோடு உறவு கொள்ள வேண்டும் என்பதுதான் பாரிஜாதத்தின் விதியா? பாரிஜாதத்தின் விதியால்தான் பாலமுருகனின் விதி நிர்ணயிக்கப்படுகிறாதா? எமனுக்கு காலன் என்றோர் பெயருண்டு எனில் ஒரு நாயைப் போல் நம்மை பின் தொடரும் விதிதான் காலபைரவனோ? காலத்திற்குள் ஒரு பந்தைப் போல் மிதந்து கொண்டிருக்கிறோமா நாம்? காலம் தான் மரணம் என்றால் இங்கு இருப்பது நீங்களும் நானும் மரணம் மட்டும் தானா? என பெருகிக் கொண்டே போகும் எண்ணற்ற கேள்விகளுக்கு சாத்தியமானதாக இருக்கிறது இந்தப் பிரதி. எஸ்.செந்தில்குமாருக்கு மூன்றாவது நாவல் இது. எந்த தடையுமின்றி மிக சரளமாக கதை சொல்ல வருகிறது இவருக்கு. வாசகனுக்கு எந்த இம்சையும் தராமல் மெளனிக்க வேண்டிய இடத்தில் மெளனித்து அழுந்தச் சொல்ல வேண்டிய இடத்தில் அழுந்தச் சொல்லி வெகு லாவகமாக கதையை நகர்த்திக் கொண்டு போகும் பக்குவமான மொழி வளம். ஒரு தேர்ந்த தூரிகைக்காரனின் கை போல வெகு வேகமாக ஒரு சில சொற்களிலேயே காட்சிகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். இது எல்லா எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிதான் என்றாலும் அதற்குள் தனக்கென ஒரு மொழியை உருவாக்கி கொள்வதென்பது முதிர்ந்த எழுத்தாளனுக்கு மட்டுமே வாய்க்கும். அது எஸ்.செந்தில்குமாருக்கு வாய்த்திருக்கிறது. சொல்லிச் சொல்லி சொல்லில் மயங்கி சொல்லும் சுகத்துக்காகவே சொல்வதல்ல இவர் மொழி, மேலும் வைரத்தை அறுத்து வைத்தது போன்ற தர்க்கக் கூர்மையுடன் வெளிப்படுவதுமல்ல, மேலும் கட்டற்ற உணர்ச்சியின் அபோதத்தில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதுமல்ல. மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட பிரிக்கப்படாத தங்கம் போன்று ஒளியும் ஒளியின்மையுமாய் மயங்கித் தெரியும் ஒரு விசித்திர மொழி எஸ்.செந்தில்குமாருடையது. இவரின் எழுத்து மொழியை யாருடனாவது ஒப்பிட முடியுமென்றால் நான் க.நா.சு வுடன் மட்டுமே ஒப்பிடுவேன். க.நா.சு ஒரு தேர்ந்த கை அவர் எழுத்தில் மொழி எனும் குதிரை எந்தச் சண்டித்தனமும் இன்றி சரளமாக ஓடுகிறது. எஸ்.செந்தில்குமார் சில இடங்களில் லகானை தவற விடுகிறார். தடுமாறுகிறார் ஆனால் பயணம் பாதுகாப்பாகவேயிருக்கிறது. மொதத்தில் ”நீங்கள் நான் மற்றும் மரணம்” எனும் நாவல் இந்த பதின்மத்தில் வெளிவந்த நாவல்களுள் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நாவலை எழுதியதன் மூலம் நம் நம்பிக்கையை மேலும் அதிமாக்கியிருக்கிறார் எஸ்.செந்தில்குமார். தமிழில் நாவல்கள் தரமானதாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் பேரிலக்கியம் என்று சொல்லும் மகத்தான படைப்புகள் எதையாவது நாம் எழுதியிருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்கு தகுதியான படைப்பாளிகள் இருந்தும் நம் மொழியில் இது நிகழவேயில்லை. நான் அறிவேன் எஸ்.செந்தில்குமார் நிச்சயம் அதை செய்யும் அளவிற்கு தகுதியான எழுத்தாளர்தான். அதற்காக அவர் இன்னமும் மெய்வருத்தம் கொள்ள வேண்டும். விமர்சகன் எப்போதுமே எழுதப்படாத நாவலின் வாசகன் என்று சொல்வார்கள். என்ன செய்ய கண்களில் கனவு மின்ன விமர்சகன் சொல்கிறான் அதோ அதோ அங்கே என. தொலைவில் தெரிகிறது இலக்கு. வழிகூட தெரியும் அவனுக்கு வண்டி ஓட்டத்தான் தெரியாது.