
வான்கா வரைந்து கொண்டிருக்கிறார்
பேச்சொலிகள்
அவர் காதுகளில் ததும்புகின்றன
நீதிகளும் சட்டங்களும் பேசிக் கொண்டிருக்கின்றன
வயிறுகளும் ரொட்டிகளும் பேசிக் கொண்டிருக்கின்றன
கலைகளும் தத்துவங்களும் பேசிக் கொண்டிருக்கின்றன
ஆலயங்களும் பிரார்தனைகளும் பேசிக் கொண்டிருக்கின்றன
வான்கா வரைந்து கொண்டிருக்கிறார்
பேச்சொலிகள்
அவர் காதுகளில் ததும்புகின்றன
கடவுளும் சாத்தானும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
விபச்சாரிகள், அதிகாரிகள்
மதபோதகர்கள், திருடர்கள்
வியாபாரிகள், அரசியல்வாதிகள்
வறியவர்கள், பிச்சைக்காரக்கள்
நோயாளிகள், மீட்பர்கள்
யாவரும் யாவரும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்
பேச்சுககள் கொட்டுகின்றன
வர்ணங்கள் கொட்டுகின்றன
இரத்தம் கொட்டுகிறது
வான்கா வரைந்து கொண்டேயிருக்கிறார்
•
இரவுகளில் பேச்சொலிகள்
இன்னும் நுட்பமாகின்றன
கிரிக்கெட் பூச்சிகள் பேசிக்கொண்டேயிருக்கின்றன
எலிகள், கரப்புகள்
கொசுக்கள் பேசுகின்றன
விண்கல் ஒன்று தன் கடைசிச் சொல்லை
அந்தகாரத்தில் கரைக்கிறது
இலைகள் முணுமுணுக்கின்றன
நதியெங்கும் குழம்பிய பேச்சொலிகள்
மிதந்து செல்கின்றன
•
வான்கா பேச்சொலிகளை ஆராய்கிறார்
பேச்சுக்கள் என்பவை
ஒருவர் மற்றவரிடம் கூறிய
எளிய சொற்கள் மட்டுமல்ல
அவைகளுக்கும் உருவம் உண்டு
ஆன்மாவும் உணர்வுகளும் உண்டு
பேச்சொலிகளும் சண்டையிடுகின்றன
காதல் கொள்கின்றன
எளிய பொறாமைகளால் மனம் பொங்குகின்றன
சிறிதும் பெரிதுமான புகார்களையும்
பெருமிதங்களையும் கொண்டிருக்கின்றன
சொல்லப்பட்ட பேச்சொலிகளைப் போலவே
சொல்லப்படாத பேச்சொலிகளும்
சொல்லற்ற பேச்சொலிகளும்
சொல்லுமை கடந்த பேச்சொலிகளும் உண்டு
காற்று சொல்லப்பட்ட பேச்சொலிகளை
மட்டுமே உண்கிறது
வான்கா தன் கித்தான்களில்
வர்ண கண்ணாடிகளை வரைந்து காட்டுகிறார்
வான்காவின் ஓவியங்களில்
தன் பிம்பங்களை கண்ட பேச்சொலிகள்
விம்முகின்றன
விம்மல் மெல்ல பெரும் அழுகுரலாகிறது
வான்கா ஓசைகளை சகிக்கவியலாமல்
ஒரு கத்தியை எடுத்து காதின் மேல் வைக்கிறார்
இரத்தம் கொட்டுகிறது
வர்ணங்கள் கொட்டுகின்றன
பேச்சுக்கள் கொட்டுகின்றன
வான்கா வரைந்து கொண்டிருக்கிறார்
நன்றி: 361° காலண்டிதழ்
சூப்பர்...
ReplyDeleteவான்காவின் ஓவியங்களில்
ReplyDeleteதன் பிம்பங்களை கண்ட பேச்சொலிகள்
விம்முகின்றன
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.