Monday, April 25, 2011

ஜெயமோகனின் ”இன்றைய காந்தி” குறித்து

என் பதினெட்டாவது வயதில் காந்தியின் ’சத்திய சோதனை’ என்ற நூலை வாசித்தேன். அப்போது நான் இடது சாரிகளின் தத்துவ நூட்களை தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலம். சத்திய சோதனையை வாசிக்கும் முன்பே தோழர்களின் நேரடிப் பேச்சின் வழியாகவும் ஒரிரு நூல்களின் வழியாகவும் காந்தி குறித்த எதிர்மறையான சிந்தனைகள் என்னுள் இருந்ததால் நான் சற்று விலகிய மனநிலையோடோ அந்த முதல் நூலின் வாசிப்பைச் செய்தேன். என்னுள் இருந்த எதிர் மனநிலையையும் கடந்து காந்தியின் அந்த நூல் என்னை வசிகரித்தது. அது முதல் தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் வாசித்து வருகிறேன். பாடதிட்டத்திற்கு வெளியே ஒரு மாணவனுக்கு இன்று காந்தி குறித்து வழங்கப்படும் சித்திரம் என்பதென்ன? பேரளவில் அவைகள் காந்திக்கு எதிரானவைகளே. எளிய பாலியல் நகைச்சுவைகளில் துவங்கி தத்துவ செறிவூட்டபட்ட தர்க்க பூர்வமான விவாதங்கள் வரை அவைகள் எண்ணற்று இருக்கின்றன. இந்திய அரசியல் தலைவர்களில் யாருக்காவது காந்தியின் அளவிற்கு வசைகளும் விதந்தோதல்களும் இருக்கிறதா என்றால் ஒப்பீட்டளவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒருபுறம் அவர் மகாத்மா என்று உன்னதப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்க; மறுபுறம் அவர் மிக மோசமான மனிதர் என்பதற்கான தரவுகள் தேடிக் கண்டுபிடித்து அடுக்கப்படுகின்றன. ஒரு நடுநிலையான மனம் இருபுறமும் குவிந்து கொண்டே செல்லும் இந்த விவாதங்கள் முழுதையும் படித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஆயுளே முடிந்துவிடும் என்று தோன்றுகிறது. நிலைமை இப்படி இருக்கும் போது காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவை கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும். தரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் மொழிவளமற்ற ஒரு ஆய்வாளனை விடவும் மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளால் உண்மையின் பக்கங்களை கண்டறிந்தபடியே கட்டற்ற மொழிவளத்தோடு உணர்வுப்பிரவாகமாய் பாய்ந்தோடும் ஒரு எழுத்தாளனாலேயே இந்த வகை அறிதல் முறை நோக்கி நகர முடியும். அந்த வகையில் ஜெயமோகனின் “இன்றைய காந்தி” என்ற இந்த நூல் காந்தி குறித்த முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியையும் அதற்கு முந்தைய நூற்றாண்டையும் தத்துவங்களின் நூற்றாண்டு என்று சொல்வோமானால் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியையும் இந்த நூற்றாண்டையும் தத்துவச் சரிவுகளின் நூற்றாண்டு அல்லது தத்துவங்கள் மீதான அவநம்பிக்கைகளின் நூற்றாண்டு எனச் சொல்லலாம். உன்னதமான லட்சியங்கள், மிகப்பெரிய கனவுகள், மகத்தான தியாகங்கள் எல்லாம் மண்ணில் சரிந்து விழுந்ததை, விழுவதை கையறு நிலையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றன இவ்வுலகின் மிகப்பெரிய மூளைகளும் மிகப்பெரிய மனங்களும். இவ்வாறான சூழலில் காந்தியின் இன்றைய தேவை என்ன? காந்தியச் சிந்தனைகளால் நம் சமகால வாழ்வுக்கு உபயோகமாக எதையாவது வழங்க இயலுமா என்பதை இந்நூல் விவாதிக்கிறது. இந்நூல் ஒரு நடுநிலையான வாசகன் மனதில் செய்வதென்ன? ஜெயமோகன் பாரிஸ்டர்.மோகந்தாஸீக்கு வக்கீலாக மாறி அவரின் எல்லா செயல்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்கிறாரா என்று கேட்டால். இல்லை என்பேன். நமது அறிவுச்சூழலில் நிலவும் காந்தி குறித்த கருத்துகள் ஒருசில சிந்தனைப் பள்ளிகளால் உருவாக்கப்பட்டவை காங்கிரஸ்காரகளும், அரசு பாடத்திட்டமும் உருவாக்கியவை இடதுசாரிகள் உருவாக்கியவை, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் உருவாக்கியவை. இதைத் தவிர தலித்திய அறிவுஜீவிகளும் நவீன காந்தியர்களும் உருவாக்கியவை. இந்நூல் மேற்கூரிய இந்த சிந்தனைப்பள்ளிகளின் காந்தி குறித்த வழக்கமான வாய்ப்பாடுகளை எல்லாம் வாசக மனதிலிருந்து தகர்க்கிறது. காந்தியை வரலாற்றிற்குள் வைத்து முன் முடிவகளற்று வரலாற்றின் முரணியங்கியல் பார்வையில் காந்தி குறித்த கருத்துகளை முன்வைக்கிறது. முன்முடிவுகளோடு இந்நூலை அணுகும் ஒரு வாசகன். தான் நிற்கும் புள்ளியை நோக்கி வரலாற்றை வளைத்து வரலாறு தன் வீட்டு வழியாக செல்வதான பாவனையோடு நடந்து கொள்ளும் போது இந்நூல் அதற்கு எதிராக செல்வதாக அதிர்ச்சியடைகிறான். எனில் காந்தி குறித்து இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துகளுமே சரியானதா என்று கேட்டால் அதைக் கண்டடைய வேண்டியது அந்த வாசகனின் கடமை என்றே சொல்வேன். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட நூல். எவ்வளவு தர்க்கபூர்வமாக சிந்தித்தாலும் ஒரு படைப்பாளியின் மனம் கலைபூர்வமாகவே செயல்படும். மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளின் வழியாக கண்டடையப்படும் தரிசனங்களை நம்பியபடியே முன்னேறும் படைப்பாளி அவரது மன அமைப்பிற்கேற்பவே விஷயங்களை கண்டடைவார். அவ்வாறு செய்யும் போது அவரது இயல்பான மனச்சாய்வின் பாதிப்புகள் அவர் கண்டடைந்த விஷயங்களிலும் இருக்கும். ஒரு நுட்பமான வாசகன் இந்த புள்ளியை மிகக் கவனமாக கடந்து விடுவான். லக்‌ஷ்மி மணிவண்ணன் என்னிடம் இந்த நூலை மிகவும் குறிப்பிட்டு பேசிவிட்டு சொன்னார். “அது முக்கிய நூல். ஆனால் அதில் உள்ள காந்தி ஜெயமோகனின் காந்தி”. இந்த புரிதல் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரு வரலாற்று ஆளுமையை புரிய வைக்க ஒரு எழுத்தாளைனைப் போல் வேறு யாராலும் முடியாது. ஆனால் அவனுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்கு பிறகு எழுத்தாளன் நின்று விடுகிறான். வாசகன் அந்த ஆளுமையோடு தனியாக உரையாடி உண்மையை நோக்கி நகர வேண்டியதிருக்கிறது. உதாரணமாக இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகளைச் சொல்லலாம். சேகுவோரா குறித்தும் அம்பேத்கார் குறித்தும் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்தும் உள்ள கட்டுரைகள் விவாத்திற்குரியவையாக உள்ளன. ”ஒரு கதாசிரியனுக்கு வேண்டுமானால் ஒரே ஒரு கதாநாயகன் மட்டும் தேவைப்படலாம். ஆனால் ஒரு வரலாற்றாசிரியனுக்கு அவ்வாறு இருக்கத் தேவையில்லை” என்ற இராமச்சந்திர குஹாவின் மேற்கோளை அம்பேத்காருக்கு எதிராக காந்திக்கு கோரும் போது மற்றவர்களுக்கு ஏன் கோரக்கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது. வெள்ளைகாரந்தான் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துட்டு போனான்; காந்தியா வாங்கிக் கொடுத்தார்? அவர் தனியாகவா வாங்கிக் கொடுத்தார்? என்பதில் துவங்கி அவர் தலித்துகளுக்கு என்ன செய்தார்? என்பது வரை கேட்கப்படும் சற்றும் வரலாற்று உணர்வற்ற கேள்விக்களுக்கு மிகுந்த பொறுப்போடும் தார்மீக கோபத்தோடும் நீண்ட விளக்கமான பதில்களை சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். மேலும் காந்தியின் சமகாலத்தில் இருந்த தலைவர்கள் குறித்தும் அவர்களுக்கிருந்த தத்துவ புரிதல்கள் வரலாற்று புரிதல்கள் குறித்தும் அவர்களின் மன அமைப்பு குறித்தும் அவர்கள் காந்தியை எதிர்கொண்ட போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் அவர்கள் விஷயத்தில் காந்தியின் செயல்பாடு குறித்தும் காந்தியின் குரலாக காந்தியின் ஆன்மாவாக நின்று பதில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். எப்படி காந்தியால் மக்களை ஒன்று திரட்ட முடிந்த்து? எப்படி காந்தி ஒரு மகத்தான தலைவர்? எப்படி அவர் அவரின் காலத்தில் இருந்த எந்த தலைவரை விடவும் மிகச்சிறந்த சிந்தனையாளர்? என நூல் முழுதும் காந்தியின் ஆளுமையை மிகச் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இதற்கு ஜெயமோகனின் அபாரமான மொழி வளமும், தத்துவ, வரலாற்று அறிவும் மிகவும் உதவியாய் இருந்திருக்கின்றன. ஆளுமை, அரசியல், தரிசனம் என மூன்று பெரும் பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள 20 கட்டுரைகள் வழியாக காந்தி என்ற வரலாற்று நாயகன் குறித்து உரையாடப்படுகிறது. காந்தியும் காமமும், காந்தியும் சாதியும், காந்தியும் தலித் அரசியலும், காந்தியும் பிற்படுத்தப்பட்டோரும் ஆகிய கட்டுரைகளும் பகுதி மூன்றில் உள்ள கட்டுரைகளும் மிகச்சிறப்பானவை. குறிப்பாக பகுதி மூன்றில் உள்ள காந்தியும் தொழில்நுட்பமும், காந்திய மருத்துவம், காந்திய தேசியம், காந்தியின் கிராம சுயராஜ்யம் போன்ற கட்டுரைகள் காந்திய உரையாடல்கள் எவ்வாறு நவீன உலகிற்கு தேவையானதாக உள்ளது என்று மிகுந்த அக்கறையோடு பேசுகின்றன. நம் சமகால அரசியல்-பொருளாதார-பண்பாட்டு வாழ்வுக்கு புதிய திறப்புகளை அளிக்க கூடிய சாத்தியமுள்ளவைகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் ஜெயமோகனை நவீன காந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவராக ஆக்குகின்றன. 2000 பிறகு தமிழ் அறிவுச் சூழலில் காந்தி குறித்து சில முக்கியமான நூல்கள் வந்திருக்கின்றன. அ.மார்க்ஸ், பிரேம், ஜெயமோகன் போன்ற வேறுபட்ட சிந்தனை முறை உடையவர்கள் காந்தி குறித்த உரையாடல்களை துவங்கியிருக்கிறார்கள். சற்று கூர்ந்து நோக்கினால் தமிழில் மட்டுமல்ல உலகம் முழுதுமே இன்று காந்தியம் குறித்த உரையாடல்கள் தீவிரமாகியிருப்பதை உணரலாம். இதன் பிண்ணனி என்ன என்பது குறித்தும். இன்றைய சூழலில் காந்தியின் தேவை என்ன என்பது குறித்தும் ஆழமான உரையாடல்கள் நம்மிடையே அவசியமாக இருக்கின்றன. இனியும் காந்தி ஒரு மனுவாதி என்றும் காந்தி ஒரு பாப்புலிச சிந்தனையாளர் என்றும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றுகிறது. ஏனெனில் காந்தி என்ற ஆளுமை வெறும் அரசியல் தலைவராக மட்டுமே செயல்பட்டவரல்ல. அரசியல், பொருளாதாரம், சூழலியம் போன்ற பல்வேறு துறைகளை நோக்கி நவீன காந்தியம் தன் கிளைகளை பரப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறது. காந்தியோ மார்க்ஸோ கொள்ள வேண்டியதை கொண்டு தள்ள வேண்டியதை தள்ளியபடியே வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது எனவே காந்தியம் சார்ந்த உரையாடல்களை முன் எடுக்க வேண்டிய தேவை ஒன்று இங்கு உருவாகியிருக்கிறது அதற்கான திறப்பை இந்நூல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

2 comments:

  1. காந்தி குறித்த எனது பதிவுகளை வாசிக்க அழைக்கிறேன்

    ReplyDelete