Monday, April 25, 2011

ஜெயமோகனின் ”இன்றைய காந்தி” குறித்து

என் பதினெட்டாவது வயதில் காந்தியின் ’சத்திய சோதனை’ என்ற நூலை வாசித்தேன். அப்போது நான் இடது சாரிகளின் தத்துவ நூட்களை தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலம். சத்திய சோதனையை வாசிக்கும் முன்பே தோழர்களின் நேரடிப் பேச்சின் வழியாகவும் ஒரிரு நூல்களின் வழியாகவும் காந்தி குறித்த எதிர்மறையான சிந்தனைகள் என்னுள் இருந்ததால் நான் சற்று விலகிய மனநிலையோடோ அந்த முதல் நூலின் வாசிப்பைச் செய்தேன். என்னுள் இருந்த எதிர் மனநிலையையும் கடந்து காந்தியின் அந்த நூல் என்னை வசிகரித்தது. அது முதல் தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் வாசித்து வருகிறேன். பாடதிட்டத்திற்கு வெளியே ஒரு மாணவனுக்கு இன்று காந்தி குறித்து வழங்கப்படும் சித்திரம் என்பதென்ன? பேரளவில் அவைகள் காந்திக்கு எதிரானவைகளே. எளிய பாலியல் நகைச்சுவைகளில் துவங்கி தத்துவ செறிவூட்டபட்ட தர்க்க பூர்வமான விவாதங்கள் வரை அவைகள் எண்ணற்று இருக்கின்றன. இந்திய அரசியல் தலைவர்களில் யாருக்காவது காந்தியின் அளவிற்கு வசைகளும் விதந்தோதல்களும் இருக்கிறதா என்றால் ஒப்பீட்டளவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒருபுறம் அவர் மகாத்மா என்று உன்னதப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்க; மறுபுறம் அவர் மிக மோசமான மனிதர் என்பதற்கான தரவுகள் தேடிக் கண்டுபிடித்து அடுக்கப்படுகின்றன. ஒரு நடுநிலையான மனம் இருபுறமும் குவிந்து கொண்டே செல்லும் இந்த விவாதங்கள் முழுதையும் படித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஆயுளே முடிந்துவிடும் என்று தோன்றுகிறது. நிலைமை இப்படி இருக்கும் போது காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவை கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும். தரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் மொழிவளமற்ற ஒரு ஆய்வாளனை விடவும் மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளால் உண்மையின் பக்கங்களை கண்டறிந்தபடியே கட்டற்ற மொழிவளத்தோடு உணர்வுப்பிரவாகமாய் பாய்ந்தோடும் ஒரு எழுத்தாளனாலேயே இந்த வகை அறிதல் முறை நோக்கி நகர முடியும். அந்த வகையில் ஜெயமோகனின் “இன்றைய காந்தி” என்ற இந்த நூல் காந்தி குறித்த முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியையும் அதற்கு முந்தைய நூற்றாண்டையும் தத்துவங்களின் நூற்றாண்டு என்று சொல்வோமானால் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியையும் இந்த நூற்றாண்டையும் தத்துவச் சரிவுகளின் நூற்றாண்டு அல்லது தத்துவங்கள் மீதான அவநம்பிக்கைகளின் நூற்றாண்டு எனச் சொல்லலாம். உன்னதமான லட்சியங்கள், மிகப்பெரிய கனவுகள், மகத்தான தியாகங்கள் எல்லாம் மண்ணில் சரிந்து விழுந்ததை, விழுவதை கையறு நிலையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றன இவ்வுலகின் மிகப்பெரிய மூளைகளும் மிகப்பெரிய மனங்களும். இவ்வாறான சூழலில் காந்தியின் இன்றைய தேவை என்ன? காந்தியச் சிந்தனைகளால் நம் சமகால வாழ்வுக்கு உபயோகமாக எதையாவது வழங்க இயலுமா என்பதை இந்நூல் விவாதிக்கிறது. இந்நூல் ஒரு நடுநிலையான வாசகன் மனதில் செய்வதென்ன? ஜெயமோகன் பாரிஸ்டர்.மோகந்தாஸீக்கு வக்கீலாக மாறி அவரின் எல்லா செயல்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்கிறாரா என்று கேட்டால். இல்லை என்பேன். நமது அறிவுச்சூழலில் நிலவும் காந்தி குறித்த கருத்துகள் ஒருசில சிந்தனைப் பள்ளிகளால் உருவாக்கப்பட்டவை காங்கிரஸ்காரகளும், அரசு பாடத்திட்டமும் உருவாக்கியவை இடதுசாரிகள் உருவாக்கியவை, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் உருவாக்கியவை. இதைத் தவிர தலித்திய அறிவுஜீவிகளும் நவீன காந்தியர்களும் உருவாக்கியவை. இந்நூல் மேற்கூரிய இந்த சிந்தனைப்பள்ளிகளின் காந்தி குறித்த வழக்கமான வாய்ப்பாடுகளை எல்லாம் வாசக மனதிலிருந்து தகர்க்கிறது. காந்தியை வரலாற்றிற்குள் வைத்து முன் முடிவகளற்று வரலாற்றின் முரணியங்கியல் பார்வையில் காந்தி குறித்த கருத்துகளை முன்வைக்கிறது. முன்முடிவுகளோடு இந்நூலை அணுகும் ஒரு வாசகன். தான் நிற்கும் புள்ளியை நோக்கி வரலாற்றை வளைத்து வரலாறு தன் வீட்டு வழியாக செல்வதான பாவனையோடு நடந்து கொள்ளும் போது இந்நூல் அதற்கு எதிராக செல்வதாக அதிர்ச்சியடைகிறான். எனில் காந்தி குறித்து இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துகளுமே சரியானதா என்று கேட்டால் அதைக் கண்டடைய வேண்டியது அந்த வாசகனின் கடமை என்றே சொல்வேன். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட நூல். எவ்வளவு தர்க்கபூர்வமாக சிந்தித்தாலும் ஒரு படைப்பாளியின் மனம் கலைபூர்வமாகவே செயல்படும். மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளின் வழியாக கண்டடையப்படும் தரிசனங்களை நம்பியபடியே முன்னேறும் படைப்பாளி அவரது மன அமைப்பிற்கேற்பவே விஷயங்களை கண்டடைவார். அவ்வாறு செய்யும் போது அவரது இயல்பான மனச்சாய்வின் பாதிப்புகள் அவர் கண்டடைந்த விஷயங்களிலும் இருக்கும். ஒரு நுட்பமான வாசகன் இந்த புள்ளியை மிகக் கவனமாக கடந்து விடுவான். லக்‌ஷ்மி மணிவண்ணன் என்னிடம் இந்த நூலை மிகவும் குறிப்பிட்டு பேசிவிட்டு சொன்னார். “அது முக்கிய நூல். ஆனால் அதில் உள்ள காந்தி ஜெயமோகனின் காந்தி”. இந்த புரிதல் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரு வரலாற்று ஆளுமையை புரிய வைக்க ஒரு எழுத்தாளைனைப் போல் வேறு யாராலும் முடியாது. ஆனால் அவனுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்கு பிறகு எழுத்தாளன் நின்று விடுகிறான். வாசகன் அந்த ஆளுமையோடு தனியாக உரையாடி உண்மையை நோக்கி நகர வேண்டியதிருக்கிறது. உதாரணமாக இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகளைச் சொல்லலாம். சேகுவோரா குறித்தும் அம்பேத்கார் குறித்தும் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்தும் உள்ள கட்டுரைகள் விவாத்திற்குரியவையாக உள்ளன. ”ஒரு கதாசிரியனுக்கு வேண்டுமானால் ஒரே ஒரு கதாநாயகன் மட்டும் தேவைப்படலாம். ஆனால் ஒரு வரலாற்றாசிரியனுக்கு அவ்வாறு இருக்கத் தேவையில்லை” என்ற இராமச்சந்திர குஹாவின் மேற்கோளை அம்பேத்காருக்கு எதிராக காந்திக்கு கோரும் போது மற்றவர்களுக்கு ஏன் கோரக்கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது. வெள்ளைகாரந்தான் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துட்டு போனான்; காந்தியா வாங்கிக் கொடுத்தார்? அவர் தனியாகவா வாங்கிக் கொடுத்தார்? என்பதில் துவங்கி அவர் தலித்துகளுக்கு என்ன செய்தார்? என்பது வரை கேட்கப்படும் சற்றும் வரலாற்று உணர்வற்ற கேள்விக்களுக்கு மிகுந்த பொறுப்போடும் தார்மீக கோபத்தோடும் நீண்ட விளக்கமான பதில்களை சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். மேலும் காந்தியின் சமகாலத்தில் இருந்த தலைவர்கள் குறித்தும் அவர்களுக்கிருந்த தத்துவ புரிதல்கள் வரலாற்று புரிதல்கள் குறித்தும் அவர்களின் மன அமைப்பு குறித்தும் அவர்கள் காந்தியை எதிர்கொண்ட போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் அவர்கள் விஷயத்தில் காந்தியின் செயல்பாடு குறித்தும் காந்தியின் குரலாக காந்தியின் ஆன்மாவாக நின்று பதில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். எப்படி காந்தியால் மக்களை ஒன்று திரட்ட முடிந்த்து? எப்படி காந்தி ஒரு மகத்தான தலைவர்? எப்படி அவர் அவரின் காலத்தில் இருந்த எந்த தலைவரை விடவும் மிகச்சிறந்த சிந்தனையாளர்? என நூல் முழுதும் காந்தியின் ஆளுமையை மிகச் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இதற்கு ஜெயமோகனின் அபாரமான மொழி வளமும், தத்துவ, வரலாற்று அறிவும் மிகவும் உதவியாய் இருந்திருக்கின்றன. ஆளுமை, அரசியல், தரிசனம் என மூன்று பெரும் பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள 20 கட்டுரைகள் வழியாக காந்தி என்ற வரலாற்று நாயகன் குறித்து உரையாடப்படுகிறது. காந்தியும் காமமும், காந்தியும் சாதியும், காந்தியும் தலித் அரசியலும், காந்தியும் பிற்படுத்தப்பட்டோரும் ஆகிய கட்டுரைகளும் பகுதி மூன்றில் உள்ள கட்டுரைகளும் மிகச்சிறப்பானவை. குறிப்பாக பகுதி மூன்றில் உள்ள காந்தியும் தொழில்நுட்பமும், காந்திய மருத்துவம், காந்திய தேசியம், காந்தியின் கிராம சுயராஜ்யம் போன்ற கட்டுரைகள் காந்திய உரையாடல்கள் எவ்வாறு நவீன உலகிற்கு தேவையானதாக உள்ளது என்று மிகுந்த அக்கறையோடு பேசுகின்றன. நம் சமகால அரசியல்-பொருளாதார-பண்பாட்டு வாழ்வுக்கு புதிய திறப்புகளை அளிக்க கூடிய சாத்தியமுள்ளவைகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் ஜெயமோகனை நவீன காந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவராக ஆக்குகின்றன. 2000 பிறகு தமிழ் அறிவுச் சூழலில் காந்தி குறித்து சில முக்கியமான நூல்கள் வந்திருக்கின்றன. அ.மார்க்ஸ், பிரேம், ஜெயமோகன் போன்ற வேறுபட்ட சிந்தனை முறை உடையவர்கள் காந்தி குறித்த உரையாடல்களை துவங்கியிருக்கிறார்கள். சற்று கூர்ந்து நோக்கினால் தமிழில் மட்டுமல்ல உலகம் முழுதுமே இன்று காந்தியம் குறித்த உரையாடல்கள் தீவிரமாகியிருப்பதை உணரலாம். இதன் பிண்ணனி என்ன என்பது குறித்தும். இன்றைய சூழலில் காந்தியின் தேவை என்ன என்பது குறித்தும் ஆழமான உரையாடல்கள் நம்மிடையே அவசியமாக இருக்கின்றன. இனியும் காந்தி ஒரு மனுவாதி என்றும் காந்தி ஒரு பாப்புலிச சிந்தனையாளர் என்றும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றுகிறது. ஏனெனில் காந்தி என்ற ஆளுமை வெறும் அரசியல் தலைவராக மட்டுமே செயல்பட்டவரல்ல. அரசியல், பொருளாதாரம், சூழலியம் போன்ற பல்வேறு துறைகளை நோக்கி நவீன காந்தியம் தன் கிளைகளை பரப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறது. காந்தியோ மார்க்ஸோ கொள்ள வேண்டியதை கொண்டு தள்ள வேண்டியதை தள்ளியபடியே வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது எனவே காந்தியம் சார்ந்த உரையாடல்களை முன் எடுக்க வேண்டிய தேவை ஒன்று இங்கு உருவாகியிருக்கிறது அதற்கான திறப்பை இந்நூல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

Thursday, April 21, 2011

நசீம் ஹிக்மத் கவிதைகள்

ஆங்கிலத்தில்: ரிச்சர்டு மெக்கனே 

வாதாமரம் 

என் தலை ஒரு மென்பஞ்சு மேகம், 
உள்ளும் புறமும் நான் கடல் 
நானொரு வாதாமரம் 
இஸ்தான்புல்லின் குல்ஹேன் பூங்காவில் உள்ள 
ஒரு வயதான, கிளைமுறிவு-அடையாளங்களும் 
தளும்புகளுமுள்ள வாதாமரம் 
உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது 
குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம் 
என் இலைகள் மின்னுகின்றன 
நீரில் மீன் என 
என் இலைகள் படபடக்கின்றன 
பட்டுக் கைக்குட்டையென 
அதில் ஒன்றைக் கிள்ளி என் அன்பே 
உன் கண்ணீரைத் துடைத்துக்கொள் 
என் இலைகள் என் கைகள், 
எனக்கு நூறு ஆயிரம் கைகளுண்டு 
இஸ்தான்புல்லே உனை நான் தொடுகிறேன் 
நூறு ஆயிரம் கைகளால் 
என் இலைகள் என் கண்கள் 
அதில் காண்பவைகளை கண்டு 
நான் அதிர்கிறேன் 
நான் உனைக் காண்கிறேன் 
இஸ்தான் புல்லே ஒரு நூறு ஆயிரம் கண்களால் 
என் இலைகள் துடிக்கின்றன, 
துடிக்கின்றன நூறு ஆயிரம் இதயங்களோடு 
குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம் 
உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது 
--


ஆங்கிலத்தில்: ராண்டி பிளாஸிங் & முட்லு கோனுக் 
என் கவிதை குறித்து 

என்னிடம் வெள்ளிப் பூணுள்ள குதிரை கிடையாது 
மூதாதையர் வழிச் செல்வம் கிடையாது 
வாழ பணக்காரனோ நிலச்சுவாந்தாரோ கிடையாது 
ஒரு பானைத் தேன் மட்டுமே உண்டு 
நெருப்பைப் போல் சிவந்த ஒரு பானைத் தேன் 
என் தேனே என் எல்லாமும் 
நான் பாதுகாக்கிறேன் என் செல்வத்தை, 
என் பெருநிலத்தை - என் தேன் பானையை- 
ஒவ்வொரு நுண் பூச்சிகளிடமிருந்தும் சகோதரா, 
பொறு எப்போது என் பானையில் தேனை நான் பெறுவேனோ 
அப்போது முதல் தேனிக்கள் வருகின்றன 
திம்புக்து நகரிலிருந்து 


--

நம்பிக்கைவாத மனிதன் 

ஒரு குழந்தையாக அவன் 
ஈக்களின் சிறகுகளை பிய்த்தெரிந்தவன் இல்லை 
பூனைகளின் வாலில் டின்களை கட்டிவிட்டதில்லை 
அல்லது வண்டுகளை தீப்பெட்டிகளில் அடைத்ததில்லை 
அல்லது பூச்சிகளின் மண்புற்றுகளை மிதித்தோடியதில்லை 
அவன் வளர்ந்தான் 
பிறகு இது அனைத்தும் அவனுக்குச் செய்யப்பட்டது 
அவன் இறக்கும் போது 
நான் அவன் முன் இருந்தேன் 
எனக்கொரு கவிதையை வாசி என்றான் 
சூரியனைப் பற்றியும் கடலைப் பற்றியும் 
அணுசக்தி பற்றியும் செயற்கை கோள்கள் பற்றியும் 
மேலும் மானுடத்தின் மகத்துவங்களைப் பற்றியும் 

--

உலகின் மிக விநோதமான ஜந்து 

நீ ஒரு தேளைப் போன்றவன், 
என் சகோதரனே ஒரு தேளைப்போல் 
கோழைத்தனத்தின் இருளில் வாழ்பவன் நீ 
ஒரு குருவியைப் போன்றவன், 
என் சகோதரனே எப்போதும் ஒரு குருவியைப் போல் 
படபடத்து பறந்து விடுபவன் நீ 
ஒரு மெளனத்தைப் போன்றவன், 
என் சகோதரனே மெளனத்தைப் போல் மூடுண்டவன் 
உள்ளுரைந்தவன் நீ நடுங்கிறாய், 
என் சகோதரனே விரைந்து உடையும் 
ஒரு எரிமலையின் வாயைப்போல் 
ஒன்றல்ல ஐந்தல்ல துரதிர்ஷ்டவசமாக 
நீ மில்லியன் கணக்கானவனாய் இருக்கிறாய் 
நீ ஒரு ஆட்டைப் போன்றவன், 
என் சகோதரனே இடையன் குச்சியை உயர்த்தியதும் 
நீ விரைந்து சென்று மந்தையுடன் இணைகிறாய் 
மேலும் ஓடுகிறாய், கிட்டதட்ட பெருமிதமாகவே ஓடுகிறாய், 
அறுப்பு ஆலைக்கு 
நீ இந்த உலகின் மிக விநோதமான ஜந்து 
மீனை விடவும் விநோதமான ஜந்து 
நீருக்காக அது கடலைத் தேடுவது இல்லை 
இவ்வுலகின் ஒடுக்குமுறைகள் எல்லாம் 
 உனக்கு நன்றி அறிவிக்கின்றன 
மேலும் நாம் பட்டினி கிடக்கிறோம், சோர்ந்திருக்கிறோம், 
இரத்தத்தால் தோய்ந்திருக்கிறோம் எனில் 
 அது உன்னுடைய தவறே 
நான் இதை சொல்வதற்கு சிரமமாக உள்ளது 
ஆனாலும், பெரும்பாலான தவறுகள் 
என் சகோதரனே, உன்னுடையதே 


--
 நான் உன்னைக் காதலிக்கிறேன் 

நான் உன்னைக் காதலிக்கிறேன் 
ரொட்டியை உப்பில் தொட்டு உண்பதைப் போல 
நள்ளிரவில், கொதிக்கும் காய்ச்சலில் கண் விழித்தல் போல 
குழாயில் வாய் பொருந்த நீர் பருகுதல் போல 
அஞ்சல்காரர் தந்த கனமான தபால் ஒன்றை 
அது என்னவென தெரியாமல் பிரித்தல் போல 
படபடப்புடன், மகிழ்ச்சியுடன், சந்தேகத்துடன் 
நான் உன்னைக் காதலிக்கிறேன் 
கடல் மேல் முதல் முறை விமானத்தில் பறத்தல் போல 
இஸ்தான்புல் மேல் இருள் மெல்லக் கவிகையில் 
என்னுள் ஏதோ ஊர்வது போல 
நான் உன்னைக் காதலிக்கிறேன் 
வாழ்வதன் பொருட்டு கடவுளுக்கு நன்றி சொல்லல் போல 


---

நான் உன்நினைவிலேயே இருக்கிறேன்
 
நான் உன்நினைவிலேயே இருக்கிறேன் 
மேலும் என் தாயின் வாசனையை உணர்கிறேன் 
என் தாய், எல்லோரை விடவும் மிக அழகிய என் தாய் 
என்னுள் நிகழும் 
திருவிழாவின் குடைராட்டினத்தில் நீ இருக்கிறாய் 
உன் துணிகளை, முடிக்கற்றைகளைச் சுழல விடுகிறாய் 
வெகுசில விநாடிகளே உள்ளன 
உன் முகம் எனக்கு கிடைப்பதற்கும் இழப்பதற்கும் 
என்ன காரணம், 
நான் ஏன் உன்னை நினைவு கொள்கிறேன்,
இதயத்தின் ஒரு காயம் என 
என்ன காரணம் நீ வெகு தொலைவில் இருக்கும் போதும் 
உன் குரலைக் கேட்கிறேன் 
மேலும் ஏன் என்னால் உற்சாகமாக இருக்க இயலவில்லை 
நான் மண்டியிட்டு உன் கரங்களைப் பார்க்கிறேன் 
உன் கரங்களை தொட விரும்புகிறேன் 
ஆனால் முடியவில்லை 
நீ கண்ணாடிக்கு பின்புறம் இருக்கிறாய் அன்பே, 
இந்த நாடகத்தின் மங்கலான வெளிச்சத்தில் 
 நடித்துக் கொண்டிருக்கும் நான் 
ஒரு குழம்பிய பார்வையாளன் 

---

வாழ்வு குறித்து 

வாழ்வதென்பது நகைப்பிற்குரிய விஷயம் அல்ல: 
நீங்கள் மிகவும் தீவிரமாக வாழ வேண்டும் 
உதரணமாக ஒரு அணிலைப் போல. 
அதாவது, வாழ்வதற்கு மேல், 
அதைக் கடந்து வேறொன்றையும் தேடாமல். 
அதாவது, வாழ்வது மட்டுமே 
உங்கள் அனைத்து கடமையாகவும் இருக்க வேண்டும். 
வாழ்வதென்பது நகைப்பிற்குரிய விஷயம் அல்ல: 
நீங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
மேலும் மேலும் எவ்வளவு முடியுமோ 
அவ்வளவு தீவிரமாக. உதரணமாக, 
உங்கள் கை பின்புறமாக கட்டப்பட்டு, 
நீங்கள் சுவற்றில் கட்டப்பட்டிருப்பதைப் போல. 
அல்லது ஆய்வுக்கூடத்தில் 
உங்கள் வெண்ணிற அங்கியுடனும் 
பாதுகாப்பு கண்ணாடிகளுடனும் இருப்பதைப் போல. 
உங்களால் மக்களுக்காக சாக முடியும், 
நீங்கள் ஒரு போதும் காணதவர்கள் அவர்கள் என்ற போதும், 
உங்களுக்கு தெரியும் வாழ்வது மட்டுமே மிக உண்மையானது, 
மிக அழகானது என்ற போதும் 
உங்களால் மக்களுக்காக சாக முடியும் என்பதைப் போல. 
அதாவது நீங்கள் வாழ்வதென்பதை 
மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் 
அதாவது உங்கள் எழுபதாவது வயதிலும், 
உதாரணமாக, நீங்கள் ஒரு ஆலிவ் மரத்தை நடலாம் 
அது உங்கள் குழந்தைகளுக்காக இருந்தாலும் 
இல்லாவிட்டலும். ஆனால் நீங்கள் அஞ்சுகிறீர்கள் 
மரணத்திற்கு, நீங்கள் அதை நம்பாவிட்டாலும் கூட. 
ஏனெனில் வாழ்வதென்பது 
அதை விடவும் மேலானது எனவே... 

---


 நீயே என் குடிபோதை 

நீயே என் குடிபோதை... 
நான் குடியை விடப்போவதில்லை, 
அது என்னால் முடியும் என்றாலும் 
எனக்கு வேறு எதுவும் வேண்டாம் 
எனக்கு தலைவலிக்கிறது, 
என் மூட்டுகள் எங்கும் தழும்புகளாக உள்ளன 
என்னை சுற்றிலும் சகதியாக உள்ளது 
நான் போராடிக்கொண்டிருக்கிறேன் 
உன் அசிரத்தையான ஒளியை நோக்கி வர

Friday, April 8, 2011

நூல் விமர்சனம்

நரனின் மீபொருண்மைவெளி - உப்பு நீர் முதலையுடன் ஒரு பயணம் யாருமற்ற இடத்தில் என்ன நடக்கிறது எல்லாம் நகுலனின் இந்த நவீன மீபொருண்மை கவிதையோடு இக்கட்டுரை துவங்குவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். மீபொருண்மை என்ற சொல் இந்தக் கட்டுரையில் Metaphysics என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்படுத்தப்படுகிறது. கிரேக்கத்தில் மெட்டா எனும் சொல்லிற்கு beyond (கடந்த) என்று பொருள் மெட்டாபிசிக்ஸ் என்பதை பெளதீகம் கடந்தது என்று தோராயமாக மொழிபெயர்க்கலாம். வரலாற்றின் துவக்க காலம் முதலே மீபொருண்மையியல் என்ற துறையானது தத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. பொருட்கள் அல்லது விஷயங்கள் எனப்படும் மேட்டர்ஸ் என்பதின் இருத்தல் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் அதன் பெளதீக இருப்பைப் கடந்து ஆராயும் ஒரு துறையாக மீபொருண்மையியல் இருந்து வருகிறது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் மானுட சேதன அறிவுக்கு அப்பாற்பட்டவகையில் சிக்கலானதாகவும், நுட்பமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்பற்றும் வேறு ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையதாகவும் இருப்பதாக மனித மனம் எண்ணிய கணத்தில் மீபொருண்மை பார்வைக்கான தேவை தோன்றியிருக்க கூடும். எந்தப் பண்பாடாக இருந்தாலும் மீபொருண்மை கோட்பாட்டுகான தரிசனம் என்பது ஒரு படிமமாகவே தோன்றியிருப்பதற்கான சாத்தியம் அதிகம். அப்படிப் பார்க்கும் போது மீபொருண்மை என்ற கோட்பாட்டு உருவாக்கத்திற்கான கருவியாக கவிதையே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. மேலே குறிப்பிட்ட நகுலனின் கவிதையை நவீன மீபொருண்மை கவிதை என்று நாம் சொல்வோமாயின் செவ்வியல் மீபொருண்மை என ஏதாவது உள்ளதா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. மீபொருண்மை பார்வை என்பது எந்த ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்கு மட்டும் சொந்தமானதல்ல. அது வரலாற்றின் துவக்ககாலம் முதலே எல்லா பண்பாட்டிலும் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் மனம் முழுதாய் சமைந்த எந்த ஒரு தொல்குடி சமூகத்திலும் மீபொருண்மை பார்வைதான் அதன் அடிப்படையான பண்பாட்டுக் கட்டமைப்புகளையே உருவாக்கியிருக்க கூடும் என்றே நாம் சொல்லிவிட முடியும். மேற்கில் மிகத்துவக்கத்தில் மீபொருண்மையியல் பேரளவில் தனிமனித ஆன்மீக சாதனைகளோடு தொடர்புடையதாகவே இருந்தது. அதனால் அது தவிர்க்கவியலாமல் மதங்களோடும் கடவுள்சார் கோட்பாடுகளோடும் அடையாளம் காணப்பட்டது. 17ம் நூற்றாண்டில் நவீனத்துவத்தின் வருகையும் தத்துவதளத்தில் தெகார்தேவின் கார்டீசிய ஆய்வுமுறைகளின் ஆதிக்கமும் மீபொருண்மையியலின் மீது கடுமையான தாக்குதலை ஏற்படுத்தின. பொருள் கடந்த உண்மை என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்த பொருள் முதல்வாதிகளின் நூற்றாண்டாக அது இருந்தது. தொடர்ந்து வந்த 18, 19ம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதிகளின் ஆதிக்கம் நீடித்த போதும் மீபொருண்மை சிந்தனைகள் மெல்ல நகர்ந்து புறவயமான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டன. ஹெகல், காண்ட், நீட்ஷே போன்ற சிந்தனையாளர்கள் இதைச் செய்தார்கள். இதைத் தொடர்ந்து பிரபஞ்ச மையம் என்ற இடத்தில் கடவுளை நீக்கி விட்டு இயற்கையை முன்வைத்த எமர்சன், தோரோ போன்ற சிந்தனையாளர்கள் வந்தார்கள். இதன் பிறகு உருவாகி வந்த மீபொருண்மை சிந்தனைகளையே நாம் நவீன மீபொருண்மையியல் என்கிறோம். நவீன மீபொருண்மை சிந்தனைக்கு மதத்தோடும் கடவுளோடும் நேரடியான உறவு என எதுவுமில்லை. அது விஞ்ஞான நிருபணவாதத்தை ஒரு எல்லை வரை ஏற்றுக் கொண்டு இறுதி உண்மையை நோக்கி நகர்கிற ஒரு பயணமாக உள்ளது. நவீன மீபொருண்மையியலாளர் என்கிற பதத்திற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி எனக்கு உடனடியாக தோன்றுகிற ஒரு சிறந்த உதாரணம். ஹெய்டெக்கர் ”மீபொருண்மை ஒரு அறிமுகம்” என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அவரும் அவரின் சகாவான சார்த்தரும் இருத்தலியம் பேசியவர்கள் அதாவது இருத்தலின் அபத்தம் பேசியவர்கள் என்ற வகையில் மீபொருண்மை சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் என்பது போல தோன்றினாலும் ஒருவகையில் அவர்கள் மீபொருண்மையியலை வேறு ஒரு கோணத்தில் அணுகியவர்கள் என்றே கொள்ள வேண்டும். சசூரின் நவீன மொழியியல் கோட்பாடுகள் அமைப்பியலாக வளர்ந்த போது அது மீபொருண்மையியலை கடுமையாக நிராகரித்தது. தொடர்ந்து வந்த பின் நவீனத்துவ சிந்தனைகளும் மீபொருண்மையியலை ஒரு பெருங்கதையாடல் எத்தனம் என நிராகரிக்கிறது. ஆனால் வேறொரு புறம் பகுத்தறிவின் வன்முறையைப் பேசும் அது வேறு பல நுட்பமான மற்றும் சிக்கலான மீபொருண்மை தளங்களை உருவாக்கிய படியே முன்னேறுகிறது என்ற வகையில் நவீன மீபொருண்மையியலின் சமகால சவால்களையும் சாத்தியங்களையும் வாசகர்களின் கணிப்புக்கு விட்டு விட்டு தமிழ் நவீன மீபொருண்மை கவிதைகளைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். அது நவீன கவிதைப் பரப்பில் நரனின் இடம் எது என நாம் கணிக்க உதவக்கூடும். தமிழ் நவீன கவிதை இயக்கத்தில் மீபொருண்மைக் கூறுகள் கொண்ட கவிதைகள் அதன் துவக்க முதலே எழுதப்பட்டு வருகின்றன. தமிழின் முதல் புதுக்கவிதையாளரான பிச்சமூர்த்தி கவிதைகளிலேயே மீபொருண்மை கூறுகள் நிறைய உண்டு. தமிழில் இவ்வகைக் கவிதை எழுதுபவர்களை புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீப்பொருண்மையாளர்கள் மற்றும் ஆன்மீக தேட்டம் உள் ஒடுங்கிய நிலையில் எழுதும் மீபொருண்மையாளர்கள் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள் என பிச்சமூர்த்தி, பிரமிள், தேவதேவன் போன்றவர்களை கொள்வோம் எனில் உள் ஒடுங்கிய ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள் என சி.மணி, நகுலன், ஆனந்த், தேவதச்சன், எம்.யுவன், குவளைக்கண்ணன் போன்றவர்களைச் சொல்லலாம். இந்தப் பட்டியல்களில் ஒருசில விடுபடல்களும் இருக்கக்கூடும். மேலும் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிஞர்களை மீபொருண்மையியல் என்ற தர்க்க எல்லைக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீபொருண்மையியல் கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகிறேன். விமர்சகன் எப்போதும் தன் தர்கத்தின் வழியாக கறாரான சில எல்லைகளை வகுத்துக்கொள்ளவே விரும்புகிறான். கவிஞனோ எந்தக் கறாரான எல்லைகளையும் கடந்து செல்லவே எப்போதும் விரும்புகிறான். இப்போது நாம் விவாதிக்க வேண்டியது இந்த இரண்டு பிரிவுகளுக்குமான வித்யாசம் என்ன என்பதையே. நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி நவீன காலத்திற்கு பின் கார்டீசிய ஆய்வின் அடிப்படையிலான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு மீபொருண்மையியல் செயல்படத் துவங்கிய போது மீபொருண்மையாளர்களிடம் இந்த இரண்டு வகையான போக்கு இயக்கம் பெறத்துவங்கியது. அதாவது இவர்களில் சிலர் மரபான இறையியல் அல்லது மெய்யியல் சிந்தனைகளை கைவிடாமலேயே நவீன அறிவியலின் சிந்தனைப் போக்குகளை உள்வாங்கியபடி அதை வளர்த்தெடுக்கத் தலைபட்டார்கள். பிரமிளின் e=mc2, மற்றும் தெற்கு வாசல் போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முதல் கவிதையான e=mc2, சக்தி என்ற கருத்தாக்கம் தொடர்பான மரபான சிந்தனைப் போக்கும் ஐன்ஸ்டைனின் சக்தி கோட்பாடும் சந்திக்க நேர்ந்த புள்ளியைப் பேசுகிறது எனில் காலம் மற்றும் வெளி குறித்த நவீன அறிவியலின் உரையாடல்களும் காலபைரவன் என்கிற மரபான தொன்மமும் சந்தித்தித்துக் கொள்ளும் புள்ளியில் இரண்டாவது கவிதை நிகழ்கிறது. இதன் மறுபுறம் நவீன அறிவியல் கோட்பாடுகள் கொடுத்த பிரக்ஞை வழியாக நிகழச் சாத்தியமான மீபொருண்மைக் கவிதைகளை மட்டும் எழுதியவர்கள் என இரண்டாம் வகை மீபொருண்மையாளர்களை கொள்ளலாம். இதற்கு உதரணமாக எம்.யுவனின் வேறொரு காலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையும் ஆனந்தின் கவிதைகளையும் சொல்லலாம். காலம் மற்றும் வெளி தொடர்பான மீபொருண்மை உரையாடல்களை ஒரு மழலையின் வியப்புணர்வோடும் புரியாதவனின் திகைப்போடும் பேசுகின்றன இவ்விருவரின் இவ்வகைக் கவிதைகள். இவ்விரு வகை மீபொருண்மையாளர்களில் நரன் எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை நாம் பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும். அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான இந்நூலில் இவ்விருவகைக்குமே சாத்தியமான கவிதைகள் நிறைந்திருக்கின்றன. முதல் வகைக்கு ஒரு கவிதையை நோக்குவோம்: பேரமைதி பேரமைதி நீரினடியில் ஓராயிரம் மீன்கள் நீந்திக் கொண்டுதானிருக்கின்றன காலை மாற்றி வைக்கும் கொக்கால் குளம் முழுக்கச் சலனம் வட்ட வட்டமாய் விரிந்து...விரிந்து.. குறுகி...குறுகி.. நீரினடியில் அலகை நுழைத்து ஓராயிரம் மீனில் ஒரு மீனைக் கவ்விப் பிடிக்கையில் துள்ளும் மீன் துள்ளி..துள்ளி நீரின் மேல் தெரியும் அகன்ற வெளியை சலனப்படுத்துகிறது விரிந்த சலனத்திற்கும் குறுகி நீண்ட பேரமைதிக்குமிடையே ஒரு தா ம ரைத் த ண் டு புத்தனிடமும் ஒரு குளமிருந்தது அதற்குள் ஓராயிரம் மீன்கள் ஓராயிரம் தாமரைகள் ஓராயிரம் கொக்குகள் நீரற்ற நீரால் தசையற்ற மீன்களால் இதழ்களற்ற தாமரைகளால் பறந்துவிட்ட கொக்குகளால் நிரம்பியிருக்கிறது அக்குளம் எப்போதும் வற்றாக் குளமது அதில் சலனிக்காத நீர் அது அவன் பேரமைதியில் மட்டுமே சலனிக்கிறது புத்தனின் முகத்தைப் பார் எவ்வளவு சலனம் எவ்வளாவு பேரமைதி இரண்டும் ஒன்றெனப் போல் நரனின் மிகச் சிறந்த கவிதைகளில் இது ஒன்று. குளம் சலனமற்றதைப் போல் இருக்கிறது. ஆனால் ஆழத்தில் எண்ணற்ற சலனங்களால் ஆனது. மேற்புரம் ஒரு சலனம் நிகழ்கிறது. ஒரு கொக்கு அலகு நுழைத்து ஆழத்து சலனத்திலிருந்து ஒரு மீனைப் பிடித்து வெளியில் தலை உயர்த்தியதும் சலனமற்று இருந்த வெளி சலம்புகிறது. வெளி சலனத்தில் விரிய குளத்தின் மேற்புரம் அமைத்திக்கு குறுகி நீள்கிறது இரண்டிற்குமிடையே ஒரு தாமரைத் தண்டு. இதுவரை கவித்துமாக இருந்த கவிதை சட்டென சரிந்து தத்துவத்திற்குள் நுழைகிறது. கவிஞனின் தர்க்க மனம் விழித்துக் கொள்கிறது. கவிஞன் கவித்துவ பித்து நிலையிலிருந்து இறங்கி அடைந்த தரிசனத்தின் உணர்வை அறிவாக பேச முனைகிறான். புத்தனிடமும் ஒரு குளமிருந்தது அதற்குள் ஓராயிரம் மீன்கள் என துவங்கி சலனமும் பேரமைதியும் ஒன்றென்று சொல்லி முடிகிறது கவிதை. இப்போது தெற்கு வாசல் என்ற பிரமிளின் கவிதையோடு இதனை நோக்குவோம். இரண்டுக்கும் கவித்துவ நிலையில் உள்ள ஒற்றுமை என்ன இரண்டுமே தத்துவார்த்த நிலையில் உள்ள கருத்தினை கவித்துவ போதத்தில் சொல்ல முயல்பவை. ஆனால் நரனின் கவிதையில் உள்ளதைப் போல பிரமிளின் கவிதையில் உணர்ச்சி சரிவு நிகழவில்லை. பிரமிளின் கவிதையில் தத்துவார்த்த போதம் கவித்துவ எழுச்சிக்கு ஒரு க்ரியா விசையாக இருந்து மொத்தக் கவிதையையும் உணர்வு பூர்வமாக செய்திருக்கிறது. நரனின் கவிதையில் கவித்துவ எழுச்சி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின் சட்டென வடிந்து போத மனத்திற்கு வந்து விடுகிறது. இனி நரனின் இன்னொரு கவிதையைப் பார்ப்போம் முதலை உப்புநீர் முதலையொன்று துயில்கிறது தலையை நீருக்குள்ளும் உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் கார்காலத்தில் தொடங்கி கோடைகாலம்வரை நீண்டிருந்தது. நீரில் பாதியும் மணலில் பாதியுமாய் கிடக்கும் முதலை ஒன்றைக் காட்சிப்படுத்தி வெண்மணலை கோடைகாலமாகவும் நீரைக் கார்காலமாகவும் உருவகித்துக் காட்டும் இக்கவிதை இடப்பொருண்மையை காலப்பொருண்மையாக பேசிக் காட்டுவதன் வழியாக காலவெளித் தொடர்மம் (Time and space Continioum) என்கிற கருத்து நிலையை வியப்புணர்வோடு சுட்டுகிறது. மேற்கூறிய இரண்டு கவிதைகளும் இரண்டு வகையானவை. முதல் கவிதையில் உணர்ச்சி போதத்தில் சற்று சரிவிருந்தாலும் அதில் ஒரு ஆன்மீகத் தேட்டம் உள்ளது. மேலும் நீர் என்பது நினைவிலி மனதின் குறியீடு என நவீன உளவியல் சொல்கிறது என்ற புரிதலோடு வேறொரு வாசிப்பு செய்யும் போது இந்தக் கவிதையின் அர்த்த தளம் இன்னும் விரிகிறது. இரண்டாவது கவிதையில் நவீன இயற்பியலின் எல்லைக்குள் மட்டுமே இயங்கச் சாத்தியமான கவித்துவம் செயல்படுகிறது. இப்படியாக நரன் இருவகை மீபொருண்மைக் கவிதைகளும் எழுதச் சாத்தியமானவராக இருக்கிறார். மேலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நரனும் வெறும் மீபொருண்மைக் கவிதைகள் மட்டுமே எழுதபவர் அல்ல என்பதற்கு இந்தத் தொகுப்பிலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. “உங்கள் பெயரென்ன?” , “உலகை அணுகுதல்” போன்ற எளிய மொழி விளையாட்டுகளால் ஆன கவிதைகளையும் எழுதுபவராக நரன் இருக்கிறார். வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பு என்ற கவிதை இந்தத் தொகுப்பில் உள்ள நல்ல கவிதைகளில் ஒன்று. அவரது மீபொருண்மையியல் கவிதைகளைத் தவிர அவர் இதைப் போன்ற கவிதைகளின் வழியாகத்தான் மிகச்சிறந்த கவிதைகளை நோக்கிச் செல்ல முடியும் என்று தோன்றுகிறது. நரன் கவிதைகளின் மையம் என்ன? அல்லது நரன் என்ன மாதிரியான கவிதைகளை எழுத தொடர்ந்து வசீகரிக்கப்படுகிறார் அல்லது என்ன மாதிரியான விஷயங்கள் நரனுக்கு கவிதை எழுதுவதற்கான மன உந்தத்தை தருகிறது என்று பார்ப்போம். நரன் கவிதைகள் மற்றும் கவிதை எழுதும் முறை போன்றவற்றை தீர்மானிப்பவையாக ஐந்து காரணிகள் அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன். 1. காலம் மற்றும் வெளி தொடர்பான சிந்தனைகள் அதாவது காலப் பொருண்மையில் நிகழும் ஒரு விஷயத்தை இடப் பொருண்மையில் சொல்லிப் பார்ப்பது இடப்பொருண்மையில் நிகழும் விஷயத்தைக் காலப்பொருண்மையில் சொல்லிப்பார்ப்பது. 2. நிலக் காட்சிகள், பொருட்கள் மற்றும் அதன் தோற்றம் போன்றவை குறித்து கண நேரம் மனதில் நிகழும் ஒரு குழப்பம், ஒரு தோற்ற மயக்கம் போன்ற உணர்வுகள் 3. சொற்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டச் சாத்தியமான எளிய மொழி விளையாட்டுகள். உதாரணமாக இருள் எனும் கவிதை 4. எண்கள்,சொற்கள் போன்ற தர்க்க சாத்தியம் நிறைய உள்ள விஷயங்களை ஒன்றின் தர்க்க சாத்தியத்தை வேறொரு தர்க்க சாத்தியமாக மாற்றி விட்டும் கலைத்துப் போட்டும் நிகழ்த்தும் தர்க்க மாயங்கள் (Logico – Magic) 5. கவிதைக்கான மையப்படிமம் அல்லது கருத்தை ஒரு கவிதையாக விரித்து எழுதுதல். தமிழ் நவீன கவிதை வெளியில் நரனின் சிறப்பு இடம் என்ன என்று பார்க்கலாம். சமகால தமிழ் நவீன கவிதை என்பதன் மையவிசையாக எது உள்ளது அதனோடு நரனுக்கு உள்ள உறவென்ன என்று பார்த்தால் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடும். சமகால நவீனக் கவிதையின் மைய விசையாக உள்ள எதனோடும் நரனின் கவிதைகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. குறிப்பாக நரனின் கவிதைகளில் அரசியல் நிலைபாடுகள் இல்லை. பெரும்பாலான நவீன கவிஞர்களின் கவிதைகளில் உள்ளதைப் போன்று இருத்தலின் சிக்கல்களால் ஆன அழுமூஞ்சித்தனம் இல்லை. நடன ஒத்திகை என்ற கவிதையும் ஷீ வின் வார்த்தைகளை கா பேசினாள் என்ற கவிதையும் வழக்கமான நரன் பாணியிலான கவிதைகள்தான் என்ற போதும் அந்தக் கவிதைகள் இயங்குகிற வாழ்வியல் வெளி அதை வழக்கமான நரன் கவிதைகள் என்ற தளத்திலிருந்து வேறொரு அனுபவதளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. நரனின் கவிதைகளில் எங்காவது கொஞ்சம் ஒரு விசும்பல் இருக்குமானால் அது இந்தக் கவிதைகளில் மட்டுமே. மற்றபடி நம் சூழலில் உள்ள கொந்தளிப்பான வெக்கைக் கவிதைகளுக்கு நடுவே நரனின் கவிதைகள் மிகுந்த குளிர்ச்சித் தன்மை நிரம்பியவையாக உள்ளன. சுகுமாரன் பின் அட்டையில் சொல்லியிருப்பதைப் போல கபடமற்ற மழலை வியப்பையும் குளிர்ச்சியான புன்னகை ததும்பும் தியான மனநிலையையும் தமிழ் கவிதை வெளியின் மேல் பரப்பியபடி இருக்கின்றன நரனின் கவிதைகள். இதனாலேயே நரனை நான் நம் சமகாலச் சூழலின் புறநடைக் கவிஞன் என்று கூறுவேன். உண்மையில் இதுவே அவரது பலம் மற்றும் பலவீனம் இரண்டும்.