Friday, September 2, 2011

சமயவேலின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பை முன்வைத்து

மனிதன், தன்னைப் படைத்த சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம் – ழான் பால் சார்த்தர் எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன போதிசத்துவர்களே காண்பவையும் காண்பவனும் எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன - தம்மபதம் i) Existentialism எனப்படும் இருத்தலியம் சார்ந்த உரையாடல்களின் போதெல்லாம் தமிழில் தவறாது குறிப்பிடப்படும் படைப்பாளிகளில் சமயவேலும் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவங்கி உலகப் போர்கள் வரை ஒரு பேரலையென மேற்கின் அறிவுலகை ஆதிக்கம் செலுத்திய இந்தக் கருத்தியலானது தமிழில் 1970களில்தான் ஒரு தத்துவ சொல்லாடலாக பிரபலமடைந்தது. ஆனால் எந்தவொரு நவீன சிந்தனையாயினும் அதன் எதாவது ஒரு சாரம்சமோ அல்லது முழுதுமோ எல்லாப் பண்பாடுகளிலும் வரலாற்றின் ஏதாவது ஒரு தருணதில் இருந்தே வந்திருக்கிறது என்பதற்கேற்ப தமிழிலும் இருத்தலியத்தின் சிந்தனைக் கூறுகளை நாம் சங்க இலக்கியங்களில் கூட காண முடியும். இருத்தலியம் என்ற நவீன கோட்பாட்டிற்கான இலக்கணத்தை மேற்கின் வரையறைகளில் வைத்து பேசுவோம் எனில் தமிழில் தனிப்பாடல் திரட்டுகளில் இருந்தே இருத்தலிய சிக்கல்களால் ஆன கவிதைகள் எழுதப்படத் துவங்கின எனலாம். வரலாற்றுரீதியாக தமிழில் தனிப்பாடல்களின் காலம் என்பது நவீனத்துவம் அறிமுகமாகத் துவங்கிய காலம். அதாவது ஆங்கிலேய அரசின் வழியாக இந்தியச் சமூகம் மேற்கின் நவீன சிந்தனைகளுக்குள் ஆற்றுப்படத்துவங்கிய காலம். இதை தமிழ் இருத்தலியத்தின் துவக்ககாலம் என்றே சொல்ல முடியும். இந்திய குடிமைச் சமூகம் நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கு மாற்றாக முதலாளித்துவ விழுமியகளுக்குள் பயணப்படத் துவங்கிய இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் கவிஞனின் ஆற்றாமையையும், வறுமையையும், சமூக ஒறுப்பையும் தங்கள் காலகட்டத்திற்குள் இருந்தே பேசின எனவே இதில் மேற்கின் இருத்தலியதின் அடிப்படைகூறுகளான நவீன விஞ்ஞானவாதம் உருவாக்கிய இருப்பு குறித்த அபத்தம், அந்நியமாதல் போன்ற சொல்லாடல்கள் இடம் பெற சாத்தியமில்லை. தனிப்பாடல் திரட்டுகள் முதல் பாரதிக்கு சற்று பிந்தைய காலக்கட்டம் வரை தமிழ் இருத்தலியமானது இவ்வாறே இருந்து வந்தது. விடுதலைக்கு பிறகான புதிய குடிமைச் சமூகதில் பிறந்த படைப்பாளிகள் எழுத வந்த போது இங்கு முதலாளித்துவம் நன்கு வேரூன்றியிருந்தது. ஒரு தலைமுறைக்கும் மேலாக இங்கு நடைபெற்ற முதலாளித்துவ-ஜனநாயகம் அறிவுச் சூழலில் ஆழமான அவநம்பிக்கைகளையும், மாற்றுச் சமூகத்திற்கான தேடலையும் உருவாக்கியது. தமிழில் மட்டுமல்ல இந்தியாவெங்குமே 70 மற்றும் 80 களின் தசமம் என்பது இலட்சியவாதங்களாலும், புதிய சமூக உருவாக்திற்கான கனவுகளாலும் நிறைந்திருந்தது. மறுபுறம் நவீன விஞ்ஞானம் உருவாக்கிய காலம் வெளி குறித்த கருத்துகள், பிரபஞ்சம் பற்றிய உண்மைகள் போன்றவை நவீன தமிழ் மனதை தனது இருப்பு குறித்த விசாரனைகளுக்குள் தள்ளியது. இதனால் நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற உணர்வுகளில் சிக்கித் தவித்த இளம்படைப்பாளிகள் மேற்கின் இருத்தலிய சிந்தனைகளால் கவரப்பட்டார்கள். உண்மையில் இந்தக் காலக்கட்டத்தையே தமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலம் என நாம் குறிப்பிட இயலும். இவ்விடத்தில் தமிழ் இருத்தலியம் எனும் போது அது தமிழ் சூழலில் குறிப்பாக இலக்கியத்தில் எப்படி உள்வாங்கப்பட்டது என நாம் பார்க்க வேண்டும். மேற்கை போலவே இங்கும் இருத்தலியம் என்பது நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற விஷயங்களை பேசினாலும் தமிழில் அது அரசியல் நீக்கம் உடையதாகவே இருந்தது. மேற்கில் சாத்தர் போன்றவர்கள் மனிதன் தன் இருப்புக்கும் செயலுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி நேரடி அரசியலோடு தங்களை இணைத்துக் கொண்ட போது தமிழில் நேரடி அரசியலோடு தொடர்பற்ற இருத்தலியமே இயங்கியது. விதிவிலக்காக ஆத்மாநாமின் சில கவிதைகளையும் சமயவேலின் சில கவிதைகளையும் சொல்லலாம். தமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலக்கட்டத்தை சேர்ந்த படைப்பாளியான சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று நான் சொல்வேன். அதாவது இப்படிச் சொல்லலாம் தமிழ் இருத்தலியமானது சமயவேலால் தனது உலகளாவிய செவ்வியல் பண்பை கவிதைகளில் எட்டியது. காலம் மற்றும் வெளி பற்றிய பிரக்ஞையே துவக்க கால சமயவேல் கவிதைகளின் அடிப்படையாக இருக்கின்றன. அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கே “அகாலம்” என்றுதான் பெயர். மனிதனின் அறிவின் முன் முடிவற்ற நேற்றும் முடிவற்ற நாளையுமாய் விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சம், விரிந்து கொண்டே போகும் அதன் வெளி, அவ்வளவு பெரிய பிரமாண்டத்தின் முன் இவ்வளவு சிறிதாய் இருக்கும் தனது இருப்பு, ஒரு எலுமிச்சை பழ அளவே இவ்வளவு பெரிய பிரபஞ்சம் ஒரு காலத்தில் இருந்தது.. ஒரு அரைகண நேர பெருவெடிப்பில் அது உருவானது என்ற உண்மை, இன்னொரு அரைக்கண நேரத்தில் அது இல்லாமல் போகவும் சாத்தியமுள்ளது என்ற தர்க்கம் ஏற்படுத்தும் பிரமிப்பு, அச்சம், அபத்தம், இது எதையும் உணராது இங்கு நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியனவே சமயவேலுக்கு எழுதுவதற்கான மன உந்தத்தை கொடுக்கின்றன. இவரது துவக்ககால கவிதைகளில் இருக்கும் இன்னொரு பண்பு நிலமின்மை. அதாவது சமயவேல் கவிதைகள் எந்தவொரு குறிப்பிட்ட பண்பாட்டு வெளிக்குள்ளும் கால வெளிக்குள்ளும் நின்று பேசுவன அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் கவிதையாக காலமற்ற காலத்தில் நின்று நிலமற்ற நிலத்தில் எல்லாக் காலத்துக்குமான எல்லா மனிதர்களுக்குமான ஒட்டுமொத்த இருத்தல் குறித்த உணர்வை நேரடியான மொழியில் பேசுபவை. உதாரணமாக ஒரு கவிதை என் பெயர் பூமியின் கோடிக் கணக்கான ஜீவன்களில் நானும் ஒன்று என் துக்கம் தாகம் சந்தோஷமென நானொரு பெரும் சமுத்திரம் என் அலைகளுக்குள் நானே மூழ்கும் சந்தோஷம் என் சிகரங்களை நானே படைக்கும் பரிதாபம் என்னில் நானும் நானில் என்னும் எரிந்து கலந்து கிளம்புகையில் வேரில் சுண்டும் பூமி உயிரில் குறி வைத்து அடிக்கும் பேருயிர் நானொரு இறந்து/வாழ்ந்து கொண்டிருப்பவன் என் பெயர் மியாக்கண்ணு இந்தக் கவிதையில் எந்தவொரு நிலமோ பண்பாடோ காலச்சூழலோ இல்லை. இது காலமற்ற காலத்தில் எல்லா மனிதனுக்குமான இன்னும் சொல்லப்போனால் எல்லா உயிருள்ள உயிரற்ற ஜடப் பொருட்களுக்குமான கவிதையாக எல்லாக் காலத்திலும் பொருளாகிறது. காற்றின் பாடல், அகாலம் ஆகிய இரு தொகுப்பிலும் இவ்வகை நிலமற்ற கவிதைகளே அதிகமாக உள்ளன. ஒரு சில கவிதைகளில் நிலமும் பண்பாட்டுச்சூழலும் இருக்கிறது ஆனால் அவைகளும் கூட கவிதையின் மையப் படிமத்துக்கு துணை செய்யும் அசைக்க இயலா சொற்களாக இல்லை உதரணமாக சமயவேலின் இன்னொரு புகழ் பெற்ற கவிதையைப் பார்க்கலாம்: அவன் பாடல் ஆறுமுகக் கிழவன் பாடிக் கொண்டிருக்கிறான் ராத்திரி முழுதும் விடிய விடிய பிள்ளைகள் இழந்தான் கிழவியும் இறந்தாள் சொத்தும் அற்றான் இரத்தம் உலர்ந்து தசைகள் கரைந்து எண்ண முடியாக் கோடுகளாகத் தோலும் சுருங்க மீதி உயிரையும் பாடலாக்கி இரவை நிரப்புகிறான் கைத்தடிச் சப்தம் தெருக்களில் எழுப்பி தட்டு நிரப்பி நாட்களைத் தொடர்கின்றான் கூடை பின்னலில் விறகு கீறலில் ஒயில் கும்மியில் சிலம்பக் கழிகளில் வாடிக் கள்ளில் கறுப்புப் பெண்களில் கடந்து முடிந்த வாழ்வு முழுதும் பாடலாகி வெளியை நிரப்ப காலியான நெஞ்சினோடு காற்றில் தூங்குகிறான் ஆறுமுகக் கிழவன் அனாதைதான் உலகு போல வானம் போல. இந்தக் கவிதையில் ஆறுமுகக் கிழவன் எனும் ஒரு பெயர் உள்ளது மேலும் ஒயில் கும்மியில், சிலம்பக் கழிகளில், வாடிக் கள்ளில் போன்ற சொற்கள் வழியாக ஒரு பண்பாட்டு காலச்சூழல் சுட்டப்படுகிறது. ஆனால் //ஆறுமுகக் கிழவன் அநாதைதான்/ உலகு போல வானம் போல// எனும் கவிதையின் இறுதி இரு வரிகள் வழியாக இந்தக் கவிதையின் மையம் கொடுக்கும் மன உணர்வு எந்த பண்பாட்டோடும், காலச்சூழலோடும் தொடர்புடையதல்ல. அது ஒட்டு மொத்த மானுடகுலத்தன்மை உடையது. இந்த வகைக் கவிதைகளே சமயவேலின் உச்சபட்ச சாதனை என்று நான் சொல்வேன். இந்த வகைக் கவிதைகள் வழியாகவே சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் முதன்மையான கவியாக ஆகிறார். ii) தமிழில் இருத்தலியத்தின் செல்வாக்கு 90களின் பிற்பகுதியில் மெல்ல மங்கத் துவங்கியது. இந்தக் காலக்கட்டத்தை நாம் தமிழ் இருத்தலியத்தின் மூன்றாவது காலக்கட்டம் எனலாம். இன்றும் கூட எழுதப்படும் கவிதைகளில் இருத்தலியச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும் 1970 அல்லது 80 களில் இருந்ததை போன்ற தத்துவார்த்தமான இருத்தலியல் மோகம் இப்போது இல்லை என்பதே உண்மை. மேற்கில் பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ கோட்பாடுகள் இருத்தலியத்தை அப்புறப்படுத்திய சூழலில்தான் இங்கு இருத்தலியம் செல்வாக்கோடு இருந்தது. தமிழிலும் அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம் தொடர்பான உரையாடல்கள் நிகழத்துவங்கிய காலத்தில் எழுத வந்த புதிய தலைமுறை ஒன்று தங்கள் இருத்தலிய அகமனச் சிக்கல்களை கடந்து அரசியல் பிரக்ஞையோடு எழுதத் துவங்கின. மேலும் பெண்ணியம் மற்றும் தலித்தியம் போன்ற எழுச்சியோடு கிளம்பிய விளிம்பு நிலை உரையாடல்களும் இருத்தலிய உரையாடல்களை சற்றுப் பின் நோக்கித் தள்ளின. இந்த மூன்றாவது காலகட்டத்தில் தமிழ் இருத்தலியமானது இரண்டாவது காலக்கட்டத்தை விடவும் அதிகமாக சமகால அரசியலை பேசுவதாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்தக் காலக்கட்டத்தை சேர்ந்த சமயவேலின் கவிதைகள் அவரின் முந்தைய கவிதைகளில் இருந்து சற்று மாறுபட்டவையாகவே இருக்கின்றன. காலம் மற்றும் வெளி உருவாக்கும் அபத்த உணர்விலிருந்து சற்று விடுபட்டதாக இருக்கின்றன. ”மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும்” என்ற தொகுப்பில் ஒரு கவிதை நானும் என் நிழலும் எந்த இடமென்று இல்லை என்னிலிருந்து என் நிழலை உருவி வீழ்த்துகின்றன ஒளிக்கற்றைகள் சாக்கடையிலும் குப்பைமேட்டிலும் கூட விழுகின்றன என் நிழல்கள் .......................... ......................... என் நிழல்தான் ஆனால் என் விருப்பம் என் சம்மதம் என்று எதையும் அது கேட்பதில்லை .......................... ......................... ........................ பெளதிக உலகில் ஒரு பெளதிகப் பண்டம் நீ நிழல் சொல்கிறது ஒளி சொல்கிறது ஏன் சுவரே சொல்கிறது பெளதிக உலகில் ஒரு பெளதிகப் பண்டம் நீ இல்லை இல்லை என அலறுகிறது எனக்குள் ஏதோ ஒன்று இவ்வாறு முடியும் இக்கவிதை இருத்தலிய அபத்தத்தை நம்ப மறுக்கிறது. அதைக் கடந்து போக விழைகிறது. மேலும் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் இவரது முந்தைய கவிதைகளை விடவும் நிலம் சார்ந்து இயங்குகின்றன. மின்னிப்புற்கள், மிதுக்கம் பழங்கள், முசுமுசுக்கைச் செடி, நுணாமரப்புதர், மயில் கழுத்து நீலம், மந்தைக் கருப்புசாமியின் ஆங்காரம் என மண்வாசம் நிறைந்த கவிதைகளாக இந்தத் தொகுப்பில் உள்ளன. அகாலம் என்று ஒரு தொகுப்புக்கு பெயரிட்டு காலமற்ற நிலமற்ற வெளியில் இயங்கும் கவிதைகளை எழுதிய கவிஞர் ”மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்” என்ற தொகுப்பின் வழியாக மண் சார்ந்த படிமங்களை பேசுபவராக மாறி இருக்கிறார். இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றான “இரவின் தீராப்பகை” எனும் நெடுங்கவிதை நம் கைவிட்டு போய்க்கொண்டிருக்கும் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் பற்றி கருப்பின் ஆங்காரமான குரலில் பேசுகிறது. சமயவேலின் கவிதைகள் அவரது முந்தைய கவிதைகளை விடவும் அரசியலாக்கம் பெற்றிருப்பதற்கு இந்த கவிதை ஒரு சான்று. iii)பிளைன் பொயட்டிரி எனப்படும் நேரடிக் கவிதைகள் அல்லது ஓருடல் கவிதைகளில் சமயவேல் ஒரு சாதனையாளர். தமிழில் இன்றும் சிறந்த முறையில் எழுதப்படும் நேரடி கவிதைகளுக்கான முன்னோடிகளில் சமயவேலும் ஆத்மாநாமும் சுகுமாரனும் முக்கியமானவர்கள். நேரடிக் கவிதைகள் எழுதும் ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு பாணி உள்ளது. பாசாங்கற்ற எளிய மொழியில் உள்ளார்ந்த இசைமையோடு நெஞ்சு கொப்பளித்து பெருகி வரும் இவரின் சொற்கள் வாசகனை முதல் வாசிப்பிலேயே சொக்க வைத்து விடும் வலிமை கொண்டவை. இந்தத் தொகுப்பில் நேரடிக் கவிதைகளைக் தவிரவும் ”குற்ற நிலவறை” “முள்ளில்” போன்ற உரைநடைத் தன்மை மிக்க கவிதைகளும் பார்மலஸ் பொயட்டிரி எனப்படும் உருவுமைகடந்த கவிதைகளும் சோதனை முயற்சியாக எழுதப்பட்டிருக்கிறது. இறுதியாக சொல்வதெனின், இவ்வளவுக்கும் பிறகும் இப்பூமியில் நான் இருக்க விரும்புகிறேன் அதுதான் என் சாரம்சம் என்று சொல்லும் சமயவேலின் கவிதைகள் மனித வாழ்வின் சாரம்சத்தை தத்துவங்களின் வியாக்கானங்கள் வாயிலாகவும் கவிதையின் உணர்வுபோதத்தின் வாயிலாகவும் புரிந்து கொள்ள முயல்பவை. புரிய இயலா சந்தர்பங்களில் சற்று அவநம்பிக்கை கொண்டாலும் புரிந்து கொள்வதற்கான முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பவை. ( 28.08.2011 கோவையில் நடந்த “அகத்துறவு” இலக்கிய நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Friday, August 26, 2011

மரணதண்டனைக்கு எதிராக மனு கொடுப்போம்

From ............. .............. .............. ............ To The Hon’ble Chief Minister Tamil Nadu Secretariat Fort St. George Chennai. 600 009 APPEAL TO THE HON’BLE CHIEF MINISTER OF TAMIL NADU TO SAVE THE LIFE OF MURUGAN, SANTHAN & PERARIVALAN, WHO WERE SENTENCED TO DEATH IN RAJIV GANDHI’S CASE AND WHOSE MERCY PETITIONS WERE RECENTLY REJECTED BY THE HON’BLE PRESIDENT OF INDIA Respected Madam: Mahatma Gandhi long ago wrote in the Harijan : “God Alone Can Take Life Because He Alone Gives It” In one of the most civilized countries of the world, it is saddening, death penalty still reigns. We are shocked beyond words that 3 youngsters, who have spent almost their entire life since their teens in solitary confinement, are condemned to face the gallows. Murugan, Santhan and Perarivalan who were sentenced to death in Rajiv Gandhi’s case appealed to the President of India for clemency under Article 72 of the Constitution on 26th April 2000. They have all along been hopeful that they would either be released from prison or their death sentence would be converted into life imprisonment by the President of India. They have been awaiting almost every dawn a news of relief from the President. Alas ! The President of India turned down their clemency petition after making them wait for more than eleven long years. The Supreme Court of India has in the past converted death sentence into imprisonment for life only on the ground that clemency petition of a convict was pending with the President of India for more than 2 years. A five Judge Bench of the Supreme Court of India has in Smt.Triveniben Vs. State of Gujarat held : “As between funeral fire and mental worry it is the latter which is more devastating, for, funeral fire burns only the dead body while the mental worry burns the living one.” The death sentence of these 3 persons were confirmed by the Supreme Court on 11 May 1999. It is more than 12 years since their death sentences were confirmed and it is more than eleven years since they made clemency petitions to the President of India. They have been under the shadow of death all these years suffering every moment in a condemned cell. There have been cases that even after the rejection of the clemency petition by the President of India, State Governments have considered afresh the need for clemency and converted the death sentence into imprisonment for life. As early as in February 1979, the Supreme Court of India speaking through Justice V.R.Krishna Iyer, while converting death sentence of a convict into life imprisonment, said: “Our culture is at stake, our karuna is threatened, our Constitution is brought into contempt by a cavalier indifference to the deep reverence for life and a superstitious offering of human sacrifice to propitiate the Goddess of Justice” It is submitted that the sovereign power under Article 161 of the Constitution can be exercised by the Hon’ble Governor on the advice of Council of Ministers for converting the death sentence of Murugan, Santhan and Perarivalan into imprisonment for life even after the rejection of their clemency petitions by the Hon’ble President of India under Article 72 of the Constitution. It is submitted that pendency of the clemency petitions of these 3 persons with the Hon’ble President of India for more than 11 years may be considered as a significant factor for exercising the sovereign power under Article 161 of the Constitution and for converting their death sentence into imprisonment for life. Their incarceration for more than 20 years may also be treated to be an important factor for commutation of their death sentence into life imprisonment. We earnestly appeal to the Hon’ble Chief Minister of Tamil Nadu to save the lives of these 3 persons by exercising the sovereign power of the State of Tamil Nadu under Article 161 of the Constitution, for which act the world Tamil community would ever be grateful. Yours sincerely,

Monday, June 27, 2011

நீர் வழிப்படும் புணை நீங்கள் நான் மற்றும் மரணம்: எஸ்.செந்தில்குமாரின் நாவல் குறித்து

தமிழுக்கு நாவல் என்ற வடிவம் மேற்கிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் நாவல் வரலாற்றை மேற்கின் நாவல் வரலாற்றோடு இணைத்து பேசுவதும் தமிழ் நாவலின் அழகியலை மேற்கின் நாவல் அழகியலோடு இணைத்து பேசுவதும் சற்று சிரமமான காரியம் என்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது நாம் புதுக்கவிதையை போலவே நாவல் என்ற வடிவத்தையும் மேற்கிலிருந்து வாங்கி அதை இங்குள்ள சூழலுக்கு ஏற்றார் போல பிரதிபலித்துக் கொண்டோம். எனவே மேற்கின் நாவல் வரலாற்றை துவக்ககாலம், செவ்வியல் காலம், எதார்த்தபாணி காலம், நவீன காலம், பின் நவீன காலம் என மேற்கின் விமர்சகர்கள் பிரித்துக் கொள்வதைப் போல தமிழ் நாவல்களை பிரித்துப் பார்ப்பது இயலாததாக இருக்கிறது. இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதப்படும் தமிழ் நாவல்கள் பெரும்பாலும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சொல்லல் முறையிலும் எதார்த்தபாணி நாவல்களாகவே உள்ளன. இவைகளை நாம் நவீனத்துவத்திற்கு பிறகான எதார்த்தவாதம் எனலாம். மேற்கின் இருத்தலியம், அமைப்பியல்வாதம் போன்ற சிந்தனைகள் தமிழுக்கு அறிமுகமான போது இங்கு எதார்த்தவாத நாவல்களுக்கு மாற்றான நவீன நாவல்கள் எழுதப்பட்டன. நகுலனின் நினைவுப்பாதை, சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், ஆதவனின் இரவுக்கு முன் வருவது மாலை, எம்.வி வெங்கட்ராமின் காதுகள் போன்ற நாவல்கள் உடனடியாக நினைவுக்கு வருவன. தமிழில் நவீனத்துவ அலை ஒன்று வந்து சென்றிருந்தாலும் தமிழ் நாவல்களின் ஆகப்பெரும் சாதனைகள் எல்லாம் எதார்த்தபாணி நாவல்களாலேயே செய்யப்படன என்று துணிந்து கூறலாம். இப்படி நேர்ந்ததிற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. இவைகளில் பிரதானமானது தமிழ் எதார்த்தபாணி நாவல்களின் உள்வாங்கும் பண்பு எனலாம். அதாவது நவீனத்துவத்துக்குப் பிறகான எதார்த்தபாணி நாவல்கள் அதற்கு முன்பு எழுதப்பட்ட எதார்த்தபாணி நாவல்களில் இருந்து சற்று மாறுபட்டதாக இருக்கிறது. நவீனத்துவ நாவலின் சொல்லல் முறை அல்லது உள்ளடக்கம் அல்லது வடிவம் இவற்றில் எதாவது ஒன்றை உட்செறிந்து கொண்டு எதார்த்தவாத பாணியில் எழுதப்படுவதுதாக இத்தகைய நாவல்கள் உள்ளன. இதற்கு எவ்வளவோ உதாரணங்கள் இருந்தாலும் இந்தக் கட்டுரையின் மையமாக உள்ள ”நீங்கள் நான் மற்றும் மரணம்” எனும் இந்த நாவலையே கூட உதரணமாக கூற முடியும். நம் காலத்தில் நடக்கும் இந்த நாவலில் மகாபாரத திரெளபதியும், பாரதியை காதலித்த கண்ணம்மாவும், ஒளவையும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். முந்தைய எதார்த்தபாணி நாவல்களில் கதையின் களம், காலம் மீறிய வெளியில் கதாபாத்திரங்கள் வருவது சாத்தியமற்றது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் நான் மற்றும் மரணம் எனும் இந்த நாவல் தென்மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நம் சமகாலத்தில் நிகழ்வதாக சித்தரிக்கப்படுகிறது. பாலமுருகன், பாரிஜாதம், துரைசிங்கம், கோமதி என்ற நான்கு கதைமாந்தர்களும் பத்துக்கும் மேற்பட்ட துணைபாத்திரங்களுமாக விரியும் கதையில் விதி ஒரு அரூப பாத்திரமாக அனைவரையும் இயக்கும் ஒரு மையவிசையாக இருக்கிறது. இந்த நாவலின் ஓரிடத்தில் விதி நம் அனைவரையும் ஒரு நாயைப் போல் பின் தொடர்கிறது என்று ஒரு வரி வருகிறது. இதுவே இந்நாவலின் மையப்படிமம் என்று தோன்றுகிறது. இந்நாவலின் கதை மாந்தர்கள் அனைவரும் மிகச் சாதரணமானவர்கள் செட்டியாரின் அடகுக்கடையில் கணக்கு எழுதும் பாலமுருகன் சினிமா தியேட்டரில் சைக்கிளுக்கு டோக்கன் போடும் துரைசிங்கம் என விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை முன் வைத்து அவர்களின் வாழ்க்கைக்கு என்ன பொருள் என்ற தத்துவார்த்தமான தேடலை செய்திருக்கிறது இந்நாவல். இந்நாவலின் மையமான பேசு பொருள்களில் ஒன்றாக பெண்களின் வாழ்வு உள்ளது. இந்நாவல் முழுதும் இவ்வுலகில் உள்ள எல்லா பெண்களுக்குமான பிரதிநிதியாக நின்று திரெளபதி பேசுகிறாள். அவளின் கேள்விகள் ஒவ்வொன்றும் துயரத்தோடும் ஆங்காரத்தோடும் எரிச்சலோடும் வெளிப்படுன்றன. ஆண்களுக்கு இடையே சிக்கி பெண்கள் படும் துயரங்கள். பெண் மனதின் வலிகள் காயங்கள் துல்லியமாக இந்நாவலில் பதிவாகி உள்ளன. தாங்கள் வெறும் உடலாக மட்டுமே பார்க்கப்படும் சமூகத்தில் இயல்பாக தங்களுக்கு உள்ள காமம் மீதான விழைவு, அதனால் ஒரு ஆணை நெருங்கி பெறும் வாதைகள் என காமத்தை விரும்பியும் விரும்பாமலும் விட்டு விடமுடியாமலும் படும் பாடுகள் நாவல் முழுதும் பெரும்பாலான பெண்களால் சொல்லப்படுகின்றன. தன் சொந்த மகளையே வண்புணர்ச்சி செய்யும் கோமதியின் தந்தை கருப்பு, அடுத்தவன் மனைவியிடம் உறவு வைத்துக்கொளவதில் எந்தக் குற்றவுணர்ச்சியுமற்ற பாலமுருகன் தன் மனைவியின் கள்ள உறவு குறித்தறிந்தும் ஏதும் செய்யாத துரைசிங்கம் என மூன்று ஆண்கள் இந்நாவலில் வருகிறார்கள். இவர்களை தவிரவும் இளம் விதவையாக வேலைக்கு செல்லும் கோமதியிடம் ஆசைவார்த்தை பேசும் வேல்முருகன் மற்றும் எண்ணற்ற நபர்கள் என அனைத்து ஆண்களுமே பெண்ணை வெறும் உடலாக பார்ப்பவர்கள். தங்கள் உடலில் மிருகம் போல் வந்தடையும் காமத்தை வழித்து எறிவதற்காக கூச்சமின்றி எதையும் செய்பவர்கள் பாரிஜாதம் பால முருகனோடு கள்ள உறவு வைத்திருக்கிறாள். அவள் கணவன் துரைசிங்கமோ அவர்களின் அந்தரங்க உறவை அறிந்திருந்தும் தன் இயலாமை காரணமாக அவ்வுறவை கண்டு கொள்ளாதிருக்கிறான். நாவலின் துவக்கப் பகுதியில் துரைசிங்கம் பாலமுருகனை கொலை செய்யப் போவதாக கூறினாலும் அவன் அதைச் செய்யவில்லை மாறாக தனக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கோமதியை பாலமுருகனுக்கு கட்டி வைப்பதன் மூலம் பாலமுருகன் தன் பிடியை விட்டும் தன் மனைவி பிடியை விட்டும் செல்லாதிருப்பான் என்று கணக்கு போடுபவனாகவே இருக்கிறான். பாரிஜாதம் தன் கணவனுக்கு தெரியும் என்றறிந்தும் பாலமுருகனோடு உறவு வைத்திருக்கிறாள். இது குறித்து அவளிடம் குற்றவுணர்வுகள் ஏதும் இல்லை. இதற்கு நேர் எதிராக கோமதியோ தன் கணவன் பாலமுருகன் இறந்த பிறகும் அவன் நினைவாகவே வாழ்பவளாக இருக்கிறாள். வேலைக்கு செல்லும் இடத்தில் அவளை ஒருவன் திருமணம் செய்ய முன் வந்த போது கூட அவள் தன் உடலை இறந்த கணவனுக்கு மட்டுமே சொந்தமானது என கருதி அந்தக் காதலை மறுக்கிறாள். நீ வெறும் உடல் உடல் என பெண்ணிடம் திரும்ப திரும்ப சொல்லப்படும் போது அந்த உடல் மீதான முற்றுரிமையை ஆண் கோரும் போது அவள் மேலும் மூர்க்கமாக தன் உடலை பாதுகாத்துக் கொள்ளவோ அல்லது மேலும் மூர்க்கமாக உடலை துறந்து செல்லவோ முயல்கிறாள். அப்படி செல்லும் போது ஏற்படும் உறவுச் சிக்கல்கள் மனச்சிக்கல்கள் வாழ்வை எப்படி மாற்றுகின்றன என பாரிஜாதம் X கோமதி என்ற இரு எதிர்வுகள் வழியாக பேசுகிறது இந்நாவல். பாரிஜாதம் காமத்தை துய்ப்பதன் வழியாக உடலை துறந்து உடல் குறித்த தன்னுணர்வை துறந்து விடுதலையை அடைய முயல்கிறாள் எனில் கோமதியோ உடலைப் பாதுகாப்பதன் வழியாக கற்பை போற்றி சமூக பொதுபுத்தியின் உன்னதமாக்கல் வழியாக தன் விடுதலையை தேடுபவளாக இருக்கிறாள் என்று சொல்லலாம். மறுபுறம் கோமதியின் தங்கையான பொம்மியோ காமத்தை துறந்து உடலை ஒடுக்கி காரைக்கால் அம்மையாரைப் போல ஆண்டாளை போல sublimation வழியாக தன் விடுதலையை தேடுபவளாக இருக்கிறாள். எளிதாக நிகழும் சம்பவங்களுக்குள் எளிய மனிதர்கள் மிக எளிய முறையில் வினையாற்றுகிறார்கள் சம்பவங்கள் மெல்ல முறுகலாக மாறும் போது அனைவரும் ஒரு பொறிக்குள் சிக்கிக் கொண்டதைப் போல தவித்து விடுபட வேண்டும் என்ற படபடப்பில் சிக்கலை மேலும் பெரிதாக்குகிறார்கள். இறுதியில் பெரிய துயரமொன்று நிகழ்ந்து வெறுமை மட்டுமே எஞ்சுகிறது என்ற வழமையான எதார்த்தபாணி நாவலின் நேர்கோட்டு தன்மையில்தான் பயணிக்கிறது இந்நாவலும் என்றாலும் நாவலில் ஆங்காங்கே கேட்கப்படும் தத்துவார்த்தமான கேள்விகளும் நிகழ்த்தப்படும் தத்துவார்தமான உரையாடல்களும் விசைக்கொண்டு கொண்டு இயங்கும் கதையோட்டமும் இந்நாவலுக்கு ஒரு செவ்வியல் நாவலின் அந்தஸ்த்தை கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக விதியை மையமாக வைத்து கேட்கப்படும் கேள்விகளைச் சொல்லலாம். பாலமுருகன் இறந்ததும் பாரிஜாதம் கேட்டுக் கொள்கிறாள்: அவன் ஏன் என்னை ஸ்நேகித்தான்? அவன் என்னை சந்தித்தது. உறவு கொண்டது. எனக்கு உதவியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் சிக்கியது. எல்லாம் அவன் மரணமடைய வேண்டும் என்பதற்காகத்தானா? என்று. இங்கு சகலமும் மரணத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறதா? மனிதனுக்குள் காமம் இருப்பது மரணித்திற்குதானா? தன் நீட்சியாக ஒரு உயிரை உருவாக்குவதன் மூலம் மரணத்தை நாம் வெல்ல வேண்டும் என்பதற்காக காமம் இருக்கிறதா? அல்லது மரணத்தை நோக்கி அழைத்து செல்லத்தான் அது இருக்கிறதா? நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி தன்னை விட இளையவன் ஒருவனுடன் உறவு கொள்வதைப் பார்க்கும் திரெளபதியிடம் அவள் ஆழ்மனம் சொல்கிறது. ஐவருடன் கூடி பிள்ளை பெற வேண்டும் என்பது உன் விதி.. அதை போலவே அவளும் வேறொரு ஆணுடன் கூடி பிள்ளை பெற வேண்டும் என்பது அவளின் விதி அவ்வளவே என. அப்படியானால் தன் கணவன் அல்லாதவனோடு உறவு கொள்ள வேண்டும் என்பதுதான் பாரிஜாதத்தின் விதியா? பாரிஜாதத்தின் விதியால்தான் பாலமுருகனின் விதி நிர்ணயிக்கப்படுகிறாதா? எமனுக்கு காலன் என்றோர் பெயருண்டு எனில் ஒரு நாயைப் போல் நம்மை பின் தொடரும் விதிதான் காலபைரவனோ? காலத்திற்குள் ஒரு பந்தைப் போல் மிதந்து கொண்டிருக்கிறோமா நாம்? காலம் தான் மரணம் என்றால் இங்கு இருப்பது நீங்களும் நானும் மரணம் மட்டும் தானா? என பெருகிக் கொண்டே போகும் எண்ணற்ற கேள்விகளுக்கு சாத்தியமானதாக இருக்கிறது இந்தப் பிரதி. எஸ்.செந்தில்குமாருக்கு மூன்றாவது நாவல் இது. எந்த தடையுமின்றி மிக சரளமாக கதை சொல்ல வருகிறது இவருக்கு. வாசகனுக்கு எந்த இம்சையும் தராமல் மெளனிக்க வேண்டிய இடத்தில் மெளனித்து அழுந்தச் சொல்ல வேண்டிய இடத்தில் அழுந்தச் சொல்லி வெகு லாவகமாக கதையை நகர்த்திக் கொண்டு போகும் பக்குவமான மொழி வளம். ஒரு தேர்ந்த தூரிகைக்காரனின் கை போல வெகு வேகமாக ஒரு சில சொற்களிலேயே காட்சிகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். இது எல்லா எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிதான் என்றாலும் அதற்குள் தனக்கென ஒரு மொழியை உருவாக்கி கொள்வதென்பது முதிர்ந்த எழுத்தாளனுக்கு மட்டுமே வாய்க்கும். அது எஸ்.செந்தில்குமாருக்கு வாய்த்திருக்கிறது. சொல்லிச் சொல்லி சொல்லில் மயங்கி சொல்லும் சுகத்துக்காகவே சொல்வதல்ல இவர் மொழி, மேலும் வைரத்தை அறுத்து வைத்தது போன்ற தர்க்கக் கூர்மையுடன் வெளிப்படுவதுமல்ல, மேலும் கட்டற்ற உணர்ச்சியின் அபோதத்தில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதுமல்ல. மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட பிரிக்கப்படாத தங்கம் போன்று ஒளியும் ஒளியின்மையுமாய் மயங்கித் தெரியும் ஒரு விசித்திர மொழி எஸ்.செந்தில்குமாருடையது. இவரின் எழுத்து மொழியை யாருடனாவது ஒப்பிட முடியுமென்றால் நான் க.நா.சு வுடன் மட்டுமே ஒப்பிடுவேன். க.நா.சு ஒரு தேர்ந்த கை அவர் எழுத்தில் மொழி எனும் குதிரை எந்தச் சண்டித்தனமும் இன்றி சரளமாக ஓடுகிறது. எஸ்.செந்தில்குமார் சில இடங்களில் லகானை தவற விடுகிறார். தடுமாறுகிறார் ஆனால் பயணம் பாதுகாப்பாகவேயிருக்கிறது. மொதத்தில் ”நீங்கள் நான் மற்றும் மரணம்” எனும் நாவல் இந்த பதின்மத்தில் வெளிவந்த நாவல்களுள் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நாவலை எழுதியதன் மூலம் நம் நம்பிக்கையை மேலும் அதிமாக்கியிருக்கிறார் எஸ்.செந்தில்குமார். தமிழில் நாவல்கள் தரமானதாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் பேரிலக்கியம் என்று சொல்லும் மகத்தான படைப்புகள் எதையாவது நாம் எழுதியிருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்கு தகுதியான படைப்பாளிகள் இருந்தும் நம் மொழியில் இது நிகழவேயில்லை. நான் அறிவேன் எஸ்.செந்தில்குமார் நிச்சயம் அதை செய்யும் அளவிற்கு தகுதியான எழுத்தாளர்தான். அதற்காக அவர் இன்னமும் மெய்வருத்தம் கொள்ள வேண்டும். விமர்சகன் எப்போதுமே எழுதப்படாத நாவலின் வாசகன் என்று சொல்வார்கள். என்ன செய்ய கண்களில் கனவு மின்ன விமர்சகன் சொல்கிறான் அதோ அதோ அங்கே என. தொலைவில் தெரிகிறது இலக்கு. வழிகூட தெரியும் அவனுக்கு வண்டி ஓட்டத்தான் தெரியாது.

Friday, May 20, 2011

361° காலண்டிதழை முன் வைத்து

தமிழ் அறிவுச் சூழலுக்கு சிற்றிதழ்கள் செய்துள்ள பணி குறிப்பிடத்தக்கது. புதிய கருத்தியல்கள், புதிய அழகியல்கள், புதிய தத்துவங்கள், புதிய சமூக-அரசியல் கோட்பாடுகள் போன்றவற்றை துறையார்ந்த ஆர்வலர்களிடம் உருவாக்கி தமிழை வளப்படுத்தும், தமிழ்ச் சூழலை உலக அரங்கிற்கு ஆற்றுப்படுத்தும் முண்ணனிப் படையாக செயல்பட்டு வருபவை சிற்றிதழ்கள். சமீபமாக தமிழ்ச் சிற்றிதழ் மரபு அதன் சாரமான சில குணங்களை இழந்து வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. இதைத் தமிழின் சென்ற தலைமுறை சிற்றிதழ்காரர்கள் ஒரு புகாராகவே சொல்லி வருகிறார்கள். எவ்வளவு இக்கட்டான சூழலிலும் விடாப்பிடியாக போர்குணத்தோடு, அர்பணிப்போடு இதழை தொடர்ந்து நடத்துதல், கொள்கைகளில் நிலைப்பாடுகளில் தீவிரமாக இருத்தல், நண்பர்கள் என்பதால் நிலைப்பாடுகளை கருத்தியல்களை வளைத்துக் கொள்ள தயாராக இல்லாமல் தன் சுயத்தை தக்க வைத்திருத்தல், நட்பு முறிவின் எல்லை வரையிலும் சென்று (சில சமயங்களில் நட்பையே முறித்துக் கொண்டு) கருத்தியல்களை வளர்த்தெடுத்தல், எந்த வகை அதிகார மையங்களோடும் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதிருத்தல்.. போன்ற சில விழுமியங்கள் சமீபத்தைய சிற்றிதழ்காரகளிடம் குறைவாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. இந்த மனநிலையை உருவாக்கியதில் இடைநிலை இதழ்களின் பங்கு முக்கியமானது. 90களுக்குப்பிறகான தமிழ் வாசக சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானித்து உருவான இவ்வகை இதழ்கள் தீவிர இலக்கிய வாசிப்பை பொதுவாசக வெளிக்கு எடுத்துச் சென்றன. இது தமிழ் சிற்றிதழ் சூழலை ஒரளவு ஜனரஞ்சகப்படுத்தியது. இதன் மறுபக்கமாக தமிழ்ச் சிற்றிதழின் உண்மையான பண்பு நலன்கள் என்னென்ன என்று தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகியது. அப்படி உருவாகி வந்த அந்த இளம் தலைமுறையை இடைநிலை இதழ்கள் தங்கள் குறுகிய அரசியல் செயல்திட்டங்களுக்காக பகடையாக பயன்படுத்த துவங்கின. அதிகார மையங்களை நோக்கி நகர்வது, தங்களையே ஒரு சிறிய அதிகார மையமாக கட்டமைத்துக் கொள்வது, சூழலில் இயங்கும் எல்லோரையும் தங்கள் அரசியலுக்கான நண்பன் அல்லது பகைவன் என்ற இருமைகளில் அடக்கி ஒன்று அவனை தன் செயல்பாடுகளுக்கு உடந்தையாக்குவது அல்லது அவனை இல்லாதொழிப்பது, புதிய கருத்தியல்கள் ,அழகியல்கள், சிந்தனைகள் போன்ற எதையும் சூழலுக்குள் கொண்டுவராதிருப்பது போன்ற செயல்பாடுகள் வழியாக நடுநிலை இதழ்கள் இந்த இளம் தலைமுறை சிற்றிதழ்காரனை கட்டுபடுத்துகின்றன. தமிழில் சிற்றிதழ்காரன் என்பவன் ஏதேனும் ஒருவகையில் படைப்பாளியாகவும் இருப்பதால் அவனும் சாவகாசமாக நடுநிலை இதழ்கள் உருவாக்கிய இந்த குறுகல் மனோபாவம் உடையவனாகவே தன்னையும் அறியாமல் உருவாகி விடுகிறான். தன் சக படைப்பாளிகளின் படைப்பின் மேல் எந்த வித விமர்சனமும் இல்லாதிருப்பது, அதிகார மையங்களை பூச்செறிந்தே வாழ்வது, தமிழ் இடைநிலை இதழ் அல்லது சிற்றிதழ் சூழலைத் தாண்டி உலக இலக்கிய வாசிப்போ புதிய அழகியல்களுக்கான தேடலோ இல்லாமல் மந்தைதனமான கருத்தியல்களை கொண்டிருப்பது. இடைநிலை இதழ்கள் உருவாக்கி வைத்திருக்கும் மந்தைதனத்தை கடந்து செயல்படாத அளவிற்கு மோசமாக அரசியல் நீக்கம் பெற்றிருப்பது போன்றவற்றை குறிப்பிடலாம். இப்படியான சூழலில் நாம் இடை நிலை இதழ்களுக்கு முன்பான சிற்றிதழ்களின் சமூக செயல்பாடுகள் குறித்தும் அந்த காலத்தைய சிற்றிதழ்களின் பண்புகள் குறித்தும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இப்போது நமக்கு தேவை அர்பணிப்பும் போர்குணமும் சுயமரியாதையும் நிறைந்த சிற்றிதழ்களே.. கூடவே அப்படி இயங்கி வரும் சிற்றிதழ்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நாம் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்ற எண்ணமும் படைப்பாளிகளுக்கு வேண்டும். சிற்றிதழை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல நமக்கு வேண்டியதெல்லாம் இதுவே. கவிஞர்கள் நரன் மற்றும் நிலாரசிகன் இருவரும் இணைந்து 361 என்ற சிற்றிதழை கொண்டு வந்திருக்கிறார்கள்.. அழகான வடிவமைப்பு, அழகான ஓவியங்கள், குறிப்பிடத்தக்க படைப்புகள் என இதழ் நிறைவாக உள்ளது. இவ்வளவு அழகான வடிவமைப்பும் செறிவான உள்ளடகமும் உள்ள பத்திரிக்கையில் 52 பக்கங்கள் என்பது மிகவும் குறைவோ என்று தோன்கிறது. குறைந்தது 100 பக்கங்களாவது கொண்டுவாருங்கள் நண்பர்களே. வாய்ப்பிருந்தால் தலையங்கம் எழுதலாம் அது இதழின் நிலைபாடுகளை புரிந்து கொள்ள உதவும். மேலும் வெறும் இலக்கியம் என்று இல்லாமல் அரசியல், பண்பாடு, தத்துவம் போன்ற துறைசார் விஷயங்களையும் இணைக்கலாம். குறைந்தபட்சம் ஓவியம், இசை,சினிமா, நாடகம் என வேறு கலைத்துறை சார்ந்த விஷயங்களையாவது இணைத்துக் கொள்ளுங்கள் என கேட்கத் தோன்றுகிறது. இந்த இதழில் எனக்கு மிகவும் பிடித்ததென நான் மனோஜின் சிறுகதையைச் சொல்வேன் (யாரவர்?) சிறந்த சிறுகதை. சொல்லல் முறையில் ஒருசில கிளிஷேவான விஷயங்கள் இருந்த போதும் அந்தக் கதையின் உக்கிரம் சகலத்தையும் அடித்துச் சென்று விடுகிறது.. சபரிநாதனின் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (சமீபமாக எனக்கு மிக நெருக்கமான கவிஞராக அவரை நான் உணர்கிறேன்). மற்றபடி பெரும்பாலான கவிதைகள் (என் கவிதை உட்பட) சிக்காகோ ஜீன்ஸ் வகையறாதான். ஆர்.அபிலாஷ் கவிதையை நன்றாக மொழி பெயர்த்திருக்கிறார் அந்த கவிதைதான் எனக்கு சுகிக்கவில்லை. ஜி.குப்புசாமி மொழி பெயர்த்த உருது சிறுகதை நன்றாக உள்ளது. நேசமித்ரன் கவிதையை வழக்கம் போல் முதல் இரண்டு வரிகள் மட்டுமே படித்து விட்டு ஓடி வந்து விட்டேன். இசை நல்லாதான் கட்டுரை எழுதாறானோ? (எங்கூட சேர்ந்து கவிதையை பற்றி அவனும் காங்கீரீட்ட பேசிப்பழகிட்டான்.. கன்றும் கெட்டது) செல்வபுவியரசன் சிறுகதை அழகாக உள்ளது. அவர் தொடர்ந்து எழுத வேண்டும். அ.முத்துலிங்கம் பசங்க ஏதோ கேக்கறாங்க எதாவது கொடுப்போம் என்று வலது கைக்கு தெரியாமல் இடது கையால் வழங்கியிருக்கிறார். (இந்த மனுஷனை ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரும் பூ போட்டே கொல்லப்போறாங்க) தேவதச்சன், லீனா மணிமேகலை கவிதைகளை எப்போதும் போல் ரசித்தேன். கணேசகுமாரனின் சிறுகதை நன்றாக உள்ளது. தமிழுக்கு இன்னொரு சிறுகதை எழுத்தாளர் கிடைத்திருக்கிறார். ஓவியங்கள் இதழில் மிக அழகாக உள்ளன தேவையான இடங்களில் அதை இடம் பெறச் செய்த டிசைனர் (அவர் பெயர் மறந்துடுச்சு) கலக்கீட்டீங்க தலைவா.. தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஆரோக்கியமான விஷயங்களை கொண்டு வந்த நல்ல சிற்றிதழ்கள் நிறைய உள்ளன.. குறிப்பாக இந்த இடை நிலை இதழின் வருகைக்குப் பிறகும் தங்கள் சுயத்தை தொலைத்து விடாமல் இயங்கிய/இயங்கும் கல்குதிரை, புது எழுத்து,ஆரண்யம், வனம், சிலேட்டு, புதுவிசை, தக்கை, இறக்கை, மணல்வீடு, சுகன், (இன்னும் சில இதழ்கள் விடுபட்டு போயின அது மறதியினால் மட்டுமே) போன்ற குறிப்பிடத்தக்க சிற்றிதழ்களின் வரிசையில் இடம் பிடிப்பதற்கான எல்லா சாத்தியமும் 361 இதழுக்கு உண்டு. அதற்காக நண்பர்கள் இருவரும் இன்னமும் நிறைய உழைக்க வேண்டியதிருக்கும் இன்னமும் நிறைய இழக்க வேண்டியதிருக்கும்.. மெய்வருத்தம் கொள்ளுங்கள் நண்பர்களே.. நமக்கு மீட்சி அதுவே. - கல்குதிரைக்கும், புது எழுத்துக்கும்

Tuesday, May 17, 2011

ஒரு கவிதை - வான்காவின் காது

வான்கா வரைந்து கொண்டிருக்கிறார் பேச்சொலிகள் அவர் காதுகளில் ததும்புகின்றன நீதிகளும் சட்டங்களும் பேசிக் கொண்டிருக்கின்றன வயிறுகளும் ரொட்டிகளும் பேசிக் கொண்டிருக்கின்றன கலைகளும் தத்துவங்களும் பேசிக் கொண்டிருக்கின்றன ஆலயங்களும் பிரார்தனைகளும் பேசிக் கொண்டிருக்கின்றன வான்கா வரைந்து கொண்டிருக்கிறார் பேச்சொலிகள் அவர் காதுகளில் ததும்புகின்றன கடவுளும் சாத்தானும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் விபச்சாரிகள், அதிகாரிகள் மதபோதகர்கள், திருடர்கள் வியாபாரிகள், அரசியல்வாதிகள் வறியவர்கள், பிச்சைக்காரக்கள் நோயாளிகள், மீட்பர்கள் யாவரும் யாவரும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் பேச்சுககள் கொட்டுகின்றன வர்ணங்கள் கொட்டுகின்றன இரத்தம் கொட்டுகிறது வான்கா வரைந்து கொண்டேயிருக்கிறார் • இரவுகளில் பேச்சொலிகள் இன்னும் நுட்பமாகின்றன கிரிக்கெட் பூச்சிகள் பேசிக்கொண்டேயிருக்கின்றன எலிகள், கரப்புகள் கொசுக்கள் பேசுகின்றன விண்கல் ஒன்று தன் கடைசிச் சொல்லை அந்தகாரத்தில் கரைக்கிறது இலைகள் முணுமுணுக்கின்றன நதியெங்கும் குழம்பிய பேச்சொலிகள் மிதந்து செல்கின்றன • வான்கா பேச்சொலிகளை ஆராய்கிறார் பேச்சுக்கள் என்பவை ஒருவர் மற்றவரிடம் கூறிய எளிய சொற்கள் மட்டுமல்ல அவைகளுக்கும் உருவம் உண்டு ஆன்மாவும் உணர்வுகளும் உண்டு பேச்சொலிகளும் சண்டையிடுகின்றன காதல் கொள்கின்றன எளிய பொறாமைகளால் மனம் பொங்குகின்றன சிறிதும் பெரிதுமான புகார்களையும் பெருமிதங்களையும் கொண்டிருக்கின்றன சொல்லப்பட்ட பேச்சொலிகளைப் போலவே சொல்லப்படாத பேச்சொலிகளும் சொல்லற்ற பேச்சொலிகளும் சொல்லுமை கடந்த பேச்சொலிகளும் உண்டு காற்று சொல்லப்பட்ட பேச்சொலிகளை மட்டுமே உண்கிறது வான்கா தன் கித்தான்களில் வர்ண கண்ணாடிகளை வரைந்து காட்டுகிறார் வான்காவின் ஓவியங்களில் தன் பிம்பங்களை கண்ட பேச்சொலிகள் விம்முகின்றன விம்மல் மெல்ல பெரும் அழுகுரலாகிறது வான்கா ஓசைகளை சகிக்கவியலாமல் ஒரு கத்தியை எடுத்து காதின் மேல் வைக்கிறார் இரத்தம் கொட்டுகிறது வர்ணங்கள் கொட்டுகின்றன பேச்சுக்கள் கொட்டுகின்றன வான்கா வரைந்து கொண்டிருக்கிறார் நன்றி: 361° காலண்டிதழ்

Monday, April 25, 2011

ஜெயமோகனின் ”இன்றைய காந்தி” குறித்து

என் பதினெட்டாவது வயதில் காந்தியின் ’சத்திய சோதனை’ என்ற நூலை வாசித்தேன். அப்போது நான் இடது சாரிகளின் தத்துவ நூட்களை தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலம். சத்திய சோதனையை வாசிக்கும் முன்பே தோழர்களின் நேரடிப் பேச்சின் வழியாகவும் ஒரிரு நூல்களின் வழியாகவும் காந்தி குறித்த எதிர்மறையான சிந்தனைகள் என்னுள் இருந்ததால் நான் சற்று விலகிய மனநிலையோடோ அந்த முதல் நூலின் வாசிப்பைச் செய்தேன். என்னுள் இருந்த எதிர் மனநிலையையும் கடந்து காந்தியின் அந்த நூல் என்னை வசிகரித்தது. அது முதல் தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் வாசித்து வருகிறேன். பாடதிட்டத்திற்கு வெளியே ஒரு மாணவனுக்கு இன்று காந்தி குறித்து வழங்கப்படும் சித்திரம் என்பதென்ன? பேரளவில் அவைகள் காந்திக்கு எதிரானவைகளே. எளிய பாலியல் நகைச்சுவைகளில் துவங்கி தத்துவ செறிவூட்டபட்ட தர்க்க பூர்வமான விவாதங்கள் வரை அவைகள் எண்ணற்று இருக்கின்றன. இந்திய அரசியல் தலைவர்களில் யாருக்காவது காந்தியின் அளவிற்கு வசைகளும் விதந்தோதல்களும் இருக்கிறதா என்றால் ஒப்பீட்டளவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒருபுறம் அவர் மகாத்மா என்று உன்னதப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்க; மறுபுறம் அவர் மிக மோசமான மனிதர் என்பதற்கான தரவுகள் தேடிக் கண்டுபிடித்து அடுக்கப்படுகின்றன. ஒரு நடுநிலையான மனம் இருபுறமும் குவிந்து கொண்டே செல்லும் இந்த விவாதங்கள் முழுதையும் படித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஆயுளே முடிந்துவிடும் என்று தோன்றுகிறது. நிலைமை இப்படி இருக்கும் போது காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவை கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும். தரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் மொழிவளமற்ற ஒரு ஆய்வாளனை விடவும் மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளால் உண்மையின் பக்கங்களை கண்டறிந்தபடியே கட்டற்ற மொழிவளத்தோடு உணர்வுப்பிரவாகமாய் பாய்ந்தோடும் ஒரு எழுத்தாளனாலேயே இந்த வகை அறிதல் முறை நோக்கி நகர முடியும். அந்த வகையில் ஜெயமோகனின் “இன்றைய காந்தி” என்ற இந்த நூல் காந்தி குறித்த முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியையும் அதற்கு முந்தைய நூற்றாண்டையும் தத்துவங்களின் நூற்றாண்டு என்று சொல்வோமானால் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியையும் இந்த நூற்றாண்டையும் தத்துவச் சரிவுகளின் நூற்றாண்டு அல்லது தத்துவங்கள் மீதான அவநம்பிக்கைகளின் நூற்றாண்டு எனச் சொல்லலாம். உன்னதமான லட்சியங்கள், மிகப்பெரிய கனவுகள், மகத்தான தியாகங்கள் எல்லாம் மண்ணில் சரிந்து விழுந்ததை, விழுவதை கையறு நிலையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றன இவ்வுலகின் மிகப்பெரிய மூளைகளும் மிகப்பெரிய மனங்களும். இவ்வாறான சூழலில் காந்தியின் இன்றைய தேவை என்ன? காந்தியச் சிந்தனைகளால் நம் சமகால வாழ்வுக்கு உபயோகமாக எதையாவது வழங்க இயலுமா என்பதை இந்நூல் விவாதிக்கிறது. இந்நூல் ஒரு நடுநிலையான வாசகன் மனதில் செய்வதென்ன? ஜெயமோகன் பாரிஸ்டர்.மோகந்தாஸீக்கு வக்கீலாக மாறி அவரின் எல்லா செயல்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்கிறாரா என்று கேட்டால். இல்லை என்பேன். நமது அறிவுச்சூழலில் நிலவும் காந்தி குறித்த கருத்துகள் ஒருசில சிந்தனைப் பள்ளிகளால் உருவாக்கப்பட்டவை காங்கிரஸ்காரகளும், அரசு பாடத்திட்டமும் உருவாக்கியவை இடதுசாரிகள் உருவாக்கியவை, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் உருவாக்கியவை. இதைத் தவிர தலித்திய அறிவுஜீவிகளும் நவீன காந்தியர்களும் உருவாக்கியவை. இந்நூல் மேற்கூரிய இந்த சிந்தனைப்பள்ளிகளின் காந்தி குறித்த வழக்கமான வாய்ப்பாடுகளை எல்லாம் வாசக மனதிலிருந்து தகர்க்கிறது. காந்தியை வரலாற்றிற்குள் வைத்து முன் முடிவகளற்று வரலாற்றின் முரணியங்கியல் பார்வையில் காந்தி குறித்த கருத்துகளை முன்வைக்கிறது. முன்முடிவுகளோடு இந்நூலை அணுகும் ஒரு வாசகன். தான் நிற்கும் புள்ளியை நோக்கி வரலாற்றை வளைத்து வரலாறு தன் வீட்டு வழியாக செல்வதான பாவனையோடு நடந்து கொள்ளும் போது இந்நூல் அதற்கு எதிராக செல்வதாக அதிர்ச்சியடைகிறான். எனில் காந்தி குறித்து இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துகளுமே சரியானதா என்று கேட்டால் அதைக் கண்டடைய வேண்டியது அந்த வாசகனின் கடமை என்றே சொல்வேன். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட நூல். எவ்வளவு தர்க்கபூர்வமாக சிந்தித்தாலும் ஒரு படைப்பாளியின் மனம் கலைபூர்வமாகவே செயல்படும். மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளின் வழியாக கண்டடையப்படும் தரிசனங்களை நம்பியபடியே முன்னேறும் படைப்பாளி அவரது மன அமைப்பிற்கேற்பவே விஷயங்களை கண்டடைவார். அவ்வாறு செய்யும் போது அவரது இயல்பான மனச்சாய்வின் பாதிப்புகள் அவர் கண்டடைந்த விஷயங்களிலும் இருக்கும். ஒரு நுட்பமான வாசகன் இந்த புள்ளியை மிகக் கவனமாக கடந்து விடுவான். லக்‌ஷ்மி மணிவண்ணன் என்னிடம் இந்த நூலை மிகவும் குறிப்பிட்டு பேசிவிட்டு சொன்னார். “அது முக்கிய நூல். ஆனால் அதில் உள்ள காந்தி ஜெயமோகனின் காந்தி”. இந்த புரிதல் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரு வரலாற்று ஆளுமையை புரிய வைக்க ஒரு எழுத்தாளைனைப் போல் வேறு யாராலும் முடியாது. ஆனால் அவனுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்கு பிறகு எழுத்தாளன் நின்று விடுகிறான். வாசகன் அந்த ஆளுமையோடு தனியாக உரையாடி உண்மையை நோக்கி நகர வேண்டியதிருக்கிறது. உதாரணமாக இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகளைச் சொல்லலாம். சேகுவோரா குறித்தும் அம்பேத்கார் குறித்தும் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்தும் உள்ள கட்டுரைகள் விவாத்திற்குரியவையாக உள்ளன. ”ஒரு கதாசிரியனுக்கு வேண்டுமானால் ஒரே ஒரு கதாநாயகன் மட்டும் தேவைப்படலாம். ஆனால் ஒரு வரலாற்றாசிரியனுக்கு அவ்வாறு இருக்கத் தேவையில்லை” என்ற இராமச்சந்திர குஹாவின் மேற்கோளை அம்பேத்காருக்கு எதிராக காந்திக்கு கோரும் போது மற்றவர்களுக்கு ஏன் கோரக்கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது. வெள்ளைகாரந்தான் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துட்டு போனான்; காந்தியா வாங்கிக் கொடுத்தார்? அவர் தனியாகவா வாங்கிக் கொடுத்தார்? என்பதில் துவங்கி அவர் தலித்துகளுக்கு என்ன செய்தார்? என்பது வரை கேட்கப்படும் சற்றும் வரலாற்று உணர்வற்ற கேள்விக்களுக்கு மிகுந்த பொறுப்போடும் தார்மீக கோபத்தோடும் நீண்ட விளக்கமான பதில்களை சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். மேலும் காந்தியின் சமகாலத்தில் இருந்த தலைவர்கள் குறித்தும் அவர்களுக்கிருந்த தத்துவ புரிதல்கள் வரலாற்று புரிதல்கள் குறித்தும் அவர்களின் மன அமைப்பு குறித்தும் அவர்கள் காந்தியை எதிர்கொண்ட போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் அவர்கள் விஷயத்தில் காந்தியின் செயல்பாடு குறித்தும் காந்தியின் குரலாக காந்தியின் ஆன்மாவாக நின்று பதில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். எப்படி காந்தியால் மக்களை ஒன்று திரட்ட முடிந்த்து? எப்படி காந்தி ஒரு மகத்தான தலைவர்? எப்படி அவர் அவரின் காலத்தில் இருந்த எந்த தலைவரை விடவும் மிகச்சிறந்த சிந்தனையாளர்? என நூல் முழுதும் காந்தியின் ஆளுமையை மிகச் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இதற்கு ஜெயமோகனின் அபாரமான மொழி வளமும், தத்துவ, வரலாற்று அறிவும் மிகவும் உதவியாய் இருந்திருக்கின்றன. ஆளுமை, அரசியல், தரிசனம் என மூன்று பெரும் பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள 20 கட்டுரைகள் வழியாக காந்தி என்ற வரலாற்று நாயகன் குறித்து உரையாடப்படுகிறது. காந்தியும் காமமும், காந்தியும் சாதியும், காந்தியும் தலித் அரசியலும், காந்தியும் பிற்படுத்தப்பட்டோரும் ஆகிய கட்டுரைகளும் பகுதி மூன்றில் உள்ள கட்டுரைகளும் மிகச்சிறப்பானவை. குறிப்பாக பகுதி மூன்றில் உள்ள காந்தியும் தொழில்நுட்பமும், காந்திய மருத்துவம், காந்திய தேசியம், காந்தியின் கிராம சுயராஜ்யம் போன்ற கட்டுரைகள் காந்திய உரையாடல்கள் எவ்வாறு நவீன உலகிற்கு தேவையானதாக உள்ளது என்று மிகுந்த அக்கறையோடு பேசுகின்றன. நம் சமகால அரசியல்-பொருளாதார-பண்பாட்டு வாழ்வுக்கு புதிய திறப்புகளை அளிக்க கூடிய சாத்தியமுள்ளவைகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் ஜெயமோகனை நவீன காந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவராக ஆக்குகின்றன. 2000 பிறகு தமிழ் அறிவுச் சூழலில் காந்தி குறித்து சில முக்கியமான நூல்கள் வந்திருக்கின்றன. அ.மார்க்ஸ், பிரேம், ஜெயமோகன் போன்ற வேறுபட்ட சிந்தனை முறை உடையவர்கள் காந்தி குறித்த உரையாடல்களை துவங்கியிருக்கிறார்கள். சற்று கூர்ந்து நோக்கினால் தமிழில் மட்டுமல்ல உலகம் முழுதுமே இன்று காந்தியம் குறித்த உரையாடல்கள் தீவிரமாகியிருப்பதை உணரலாம். இதன் பிண்ணனி என்ன என்பது குறித்தும். இன்றைய சூழலில் காந்தியின் தேவை என்ன என்பது குறித்தும் ஆழமான உரையாடல்கள் நம்மிடையே அவசியமாக இருக்கின்றன. இனியும் காந்தி ஒரு மனுவாதி என்றும் காந்தி ஒரு பாப்புலிச சிந்தனையாளர் என்றும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றுகிறது. ஏனெனில் காந்தி என்ற ஆளுமை வெறும் அரசியல் தலைவராக மட்டுமே செயல்பட்டவரல்ல. அரசியல், பொருளாதாரம், சூழலியம் போன்ற பல்வேறு துறைகளை நோக்கி நவீன காந்தியம் தன் கிளைகளை பரப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறது. காந்தியோ மார்க்ஸோ கொள்ள வேண்டியதை கொண்டு தள்ள வேண்டியதை தள்ளியபடியே வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது எனவே காந்தியம் சார்ந்த உரையாடல்களை முன் எடுக்க வேண்டிய தேவை ஒன்று இங்கு உருவாகியிருக்கிறது அதற்கான திறப்பை இந்நூல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

Thursday, April 21, 2011

நசீம் ஹிக்மத் கவிதைகள்

ஆங்கிலத்தில்: ரிச்சர்டு மெக்கனே 

வாதாமரம் 

என் தலை ஒரு மென்பஞ்சு மேகம், 
உள்ளும் புறமும் நான் கடல் 
நானொரு வாதாமரம் 
இஸ்தான்புல்லின் குல்ஹேன் பூங்காவில் உள்ள 
ஒரு வயதான, கிளைமுறிவு-அடையாளங்களும் 
தளும்புகளுமுள்ள வாதாமரம் 
உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது 
குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம் 
என் இலைகள் மின்னுகின்றன 
நீரில் மீன் என 
என் இலைகள் படபடக்கின்றன 
பட்டுக் கைக்குட்டையென 
அதில் ஒன்றைக் கிள்ளி என் அன்பே 
உன் கண்ணீரைத் துடைத்துக்கொள் 
என் இலைகள் என் கைகள், 
எனக்கு நூறு ஆயிரம் கைகளுண்டு 
இஸ்தான்புல்லே உனை நான் தொடுகிறேன் 
நூறு ஆயிரம் கைகளால் 
என் இலைகள் என் கண்கள் 
அதில் காண்பவைகளை கண்டு 
நான் அதிர்கிறேன் 
நான் உனைக் காண்கிறேன் 
இஸ்தான் புல்லே ஒரு நூறு ஆயிரம் கண்களால் 
என் இலைகள் துடிக்கின்றன, 
துடிக்கின்றன நூறு ஆயிரம் இதயங்களோடு 
குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம் 
உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது 
--


ஆங்கிலத்தில்: ராண்டி பிளாஸிங் & முட்லு கோனுக் 
என் கவிதை குறித்து 

என்னிடம் வெள்ளிப் பூணுள்ள குதிரை கிடையாது 
மூதாதையர் வழிச் செல்வம் கிடையாது 
வாழ பணக்காரனோ நிலச்சுவாந்தாரோ கிடையாது 
ஒரு பானைத் தேன் மட்டுமே உண்டு 
நெருப்பைப் போல் சிவந்த ஒரு பானைத் தேன் 
என் தேனே என் எல்லாமும் 
நான் பாதுகாக்கிறேன் என் செல்வத்தை, 
என் பெருநிலத்தை - என் தேன் பானையை- 
ஒவ்வொரு நுண் பூச்சிகளிடமிருந்தும் சகோதரா, 
பொறு எப்போது என் பானையில் தேனை நான் பெறுவேனோ 
அப்போது முதல் தேனிக்கள் வருகின்றன 
திம்புக்து நகரிலிருந்து 


--

நம்பிக்கைவாத மனிதன் 

ஒரு குழந்தையாக அவன் 
ஈக்களின் சிறகுகளை பிய்த்தெரிந்தவன் இல்லை 
பூனைகளின் வாலில் டின்களை கட்டிவிட்டதில்லை 
அல்லது வண்டுகளை தீப்பெட்டிகளில் அடைத்ததில்லை 
அல்லது பூச்சிகளின் மண்புற்றுகளை மிதித்தோடியதில்லை 
அவன் வளர்ந்தான் 
பிறகு இது அனைத்தும் அவனுக்குச் செய்யப்பட்டது 
அவன் இறக்கும் போது 
நான் அவன் முன் இருந்தேன் 
எனக்கொரு கவிதையை வாசி என்றான் 
சூரியனைப் பற்றியும் கடலைப் பற்றியும் 
அணுசக்தி பற்றியும் செயற்கை கோள்கள் பற்றியும் 
மேலும் மானுடத்தின் மகத்துவங்களைப் பற்றியும் 

--

உலகின் மிக விநோதமான ஜந்து 

நீ ஒரு தேளைப் போன்றவன், 
என் சகோதரனே ஒரு தேளைப்போல் 
கோழைத்தனத்தின் இருளில் வாழ்பவன் நீ 
ஒரு குருவியைப் போன்றவன், 
என் சகோதரனே எப்போதும் ஒரு குருவியைப் போல் 
படபடத்து பறந்து விடுபவன் நீ 
ஒரு மெளனத்தைப் போன்றவன், 
என் சகோதரனே மெளனத்தைப் போல் மூடுண்டவன் 
உள்ளுரைந்தவன் நீ நடுங்கிறாய், 
என் சகோதரனே விரைந்து உடையும் 
ஒரு எரிமலையின் வாயைப்போல் 
ஒன்றல்ல ஐந்தல்ல துரதிர்ஷ்டவசமாக 
நீ மில்லியன் கணக்கானவனாய் இருக்கிறாய் 
நீ ஒரு ஆட்டைப் போன்றவன், 
என் சகோதரனே இடையன் குச்சியை உயர்த்தியதும் 
நீ விரைந்து சென்று மந்தையுடன் இணைகிறாய் 
மேலும் ஓடுகிறாய், கிட்டதட்ட பெருமிதமாகவே ஓடுகிறாய், 
அறுப்பு ஆலைக்கு 
நீ இந்த உலகின் மிக விநோதமான ஜந்து 
மீனை விடவும் விநோதமான ஜந்து 
நீருக்காக அது கடலைத் தேடுவது இல்லை 
இவ்வுலகின் ஒடுக்குமுறைகள் எல்லாம் 
 உனக்கு நன்றி அறிவிக்கின்றன 
மேலும் நாம் பட்டினி கிடக்கிறோம், சோர்ந்திருக்கிறோம், 
இரத்தத்தால் தோய்ந்திருக்கிறோம் எனில் 
 அது உன்னுடைய தவறே 
நான் இதை சொல்வதற்கு சிரமமாக உள்ளது 
ஆனாலும், பெரும்பாலான தவறுகள் 
என் சகோதரனே, உன்னுடையதே 


--
 நான் உன்னைக் காதலிக்கிறேன் 

நான் உன்னைக் காதலிக்கிறேன் 
ரொட்டியை உப்பில் தொட்டு உண்பதைப் போல 
நள்ளிரவில், கொதிக்கும் காய்ச்சலில் கண் விழித்தல் போல 
குழாயில் வாய் பொருந்த நீர் பருகுதல் போல 
அஞ்சல்காரர் தந்த கனமான தபால் ஒன்றை 
அது என்னவென தெரியாமல் பிரித்தல் போல 
படபடப்புடன், மகிழ்ச்சியுடன், சந்தேகத்துடன் 
நான் உன்னைக் காதலிக்கிறேன் 
கடல் மேல் முதல் முறை விமானத்தில் பறத்தல் போல 
இஸ்தான்புல் மேல் இருள் மெல்லக் கவிகையில் 
என்னுள் ஏதோ ஊர்வது போல 
நான் உன்னைக் காதலிக்கிறேன் 
வாழ்வதன் பொருட்டு கடவுளுக்கு நன்றி சொல்லல் போல 


---

நான் உன்நினைவிலேயே இருக்கிறேன்
 
நான் உன்நினைவிலேயே இருக்கிறேன் 
மேலும் என் தாயின் வாசனையை உணர்கிறேன் 
என் தாய், எல்லோரை விடவும் மிக அழகிய என் தாய் 
என்னுள் நிகழும் 
திருவிழாவின் குடைராட்டினத்தில் நீ இருக்கிறாய் 
உன் துணிகளை, முடிக்கற்றைகளைச் சுழல விடுகிறாய் 
வெகுசில விநாடிகளே உள்ளன 
உன் முகம் எனக்கு கிடைப்பதற்கும் இழப்பதற்கும் 
என்ன காரணம், 
நான் ஏன் உன்னை நினைவு கொள்கிறேன்,
இதயத்தின் ஒரு காயம் என 
என்ன காரணம் நீ வெகு தொலைவில் இருக்கும் போதும் 
உன் குரலைக் கேட்கிறேன் 
மேலும் ஏன் என்னால் உற்சாகமாக இருக்க இயலவில்லை 
நான் மண்டியிட்டு உன் கரங்களைப் பார்க்கிறேன் 
உன் கரங்களை தொட விரும்புகிறேன் 
ஆனால் முடியவில்லை 
நீ கண்ணாடிக்கு பின்புறம் இருக்கிறாய் அன்பே, 
இந்த நாடகத்தின் மங்கலான வெளிச்சத்தில் 
 நடித்துக் கொண்டிருக்கும் நான் 
ஒரு குழம்பிய பார்வையாளன் 

---

வாழ்வு குறித்து 

வாழ்வதென்பது நகைப்பிற்குரிய விஷயம் அல்ல: 
நீங்கள் மிகவும் தீவிரமாக வாழ வேண்டும் 
உதரணமாக ஒரு அணிலைப் போல. 
அதாவது, வாழ்வதற்கு மேல், 
அதைக் கடந்து வேறொன்றையும் தேடாமல். 
அதாவது, வாழ்வது மட்டுமே 
உங்கள் அனைத்து கடமையாகவும் இருக்க வேண்டும். 
வாழ்வதென்பது நகைப்பிற்குரிய விஷயம் அல்ல: 
நீங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
மேலும் மேலும் எவ்வளவு முடியுமோ 
அவ்வளவு தீவிரமாக. உதரணமாக, 
உங்கள் கை பின்புறமாக கட்டப்பட்டு, 
நீங்கள் சுவற்றில் கட்டப்பட்டிருப்பதைப் போல. 
அல்லது ஆய்வுக்கூடத்தில் 
உங்கள் வெண்ணிற அங்கியுடனும் 
பாதுகாப்பு கண்ணாடிகளுடனும் இருப்பதைப் போல. 
உங்களால் மக்களுக்காக சாக முடியும், 
நீங்கள் ஒரு போதும் காணதவர்கள் அவர்கள் என்ற போதும், 
உங்களுக்கு தெரியும் வாழ்வது மட்டுமே மிக உண்மையானது, 
மிக அழகானது என்ற போதும் 
உங்களால் மக்களுக்காக சாக முடியும் என்பதைப் போல. 
அதாவது நீங்கள் வாழ்வதென்பதை 
மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் 
அதாவது உங்கள் எழுபதாவது வயதிலும், 
உதாரணமாக, நீங்கள் ஒரு ஆலிவ் மரத்தை நடலாம் 
அது உங்கள் குழந்தைகளுக்காக இருந்தாலும் 
இல்லாவிட்டலும். ஆனால் நீங்கள் அஞ்சுகிறீர்கள் 
மரணத்திற்கு, நீங்கள் அதை நம்பாவிட்டாலும் கூட. 
ஏனெனில் வாழ்வதென்பது 
அதை விடவும் மேலானது எனவே... 

---


 நீயே என் குடிபோதை 

நீயே என் குடிபோதை... 
நான் குடியை விடப்போவதில்லை, 
அது என்னால் முடியும் என்றாலும் 
எனக்கு வேறு எதுவும் வேண்டாம் 
எனக்கு தலைவலிக்கிறது, 
என் மூட்டுகள் எங்கும் தழும்புகளாக உள்ளன 
என்னை சுற்றிலும் சகதியாக உள்ளது 
நான் போராடிக்கொண்டிருக்கிறேன் 
உன் அசிரத்தையான ஒளியை நோக்கி வர

Friday, April 8, 2011

நூல் விமர்சனம்

நரனின் மீபொருண்மைவெளி - உப்பு நீர் முதலையுடன் ஒரு பயணம் யாருமற்ற இடத்தில் என்ன நடக்கிறது எல்லாம் நகுலனின் இந்த நவீன மீபொருண்மை கவிதையோடு இக்கட்டுரை துவங்குவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். மீபொருண்மை என்ற சொல் இந்தக் கட்டுரையில் Metaphysics என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்படுத்தப்படுகிறது. கிரேக்கத்தில் மெட்டா எனும் சொல்லிற்கு beyond (கடந்த) என்று பொருள் மெட்டாபிசிக்ஸ் என்பதை பெளதீகம் கடந்தது என்று தோராயமாக மொழிபெயர்க்கலாம். வரலாற்றின் துவக்க காலம் முதலே மீபொருண்மையியல் என்ற துறையானது தத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. பொருட்கள் அல்லது விஷயங்கள் எனப்படும் மேட்டர்ஸ் என்பதின் இருத்தல் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் அதன் பெளதீக இருப்பைப் கடந்து ஆராயும் ஒரு துறையாக மீபொருண்மையியல் இருந்து வருகிறது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் மானுட சேதன அறிவுக்கு அப்பாற்பட்டவகையில் சிக்கலானதாகவும், நுட்பமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்பற்றும் வேறு ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையதாகவும் இருப்பதாக மனித மனம் எண்ணிய கணத்தில் மீபொருண்மை பார்வைக்கான தேவை தோன்றியிருக்க கூடும். எந்தப் பண்பாடாக இருந்தாலும் மீபொருண்மை கோட்பாட்டுகான தரிசனம் என்பது ஒரு படிமமாகவே தோன்றியிருப்பதற்கான சாத்தியம் அதிகம். அப்படிப் பார்க்கும் போது மீபொருண்மை என்ற கோட்பாட்டு உருவாக்கத்திற்கான கருவியாக கவிதையே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. மேலே குறிப்பிட்ட நகுலனின் கவிதையை நவீன மீபொருண்மை கவிதை என்று நாம் சொல்வோமாயின் செவ்வியல் மீபொருண்மை என ஏதாவது உள்ளதா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. மீபொருண்மை பார்வை என்பது எந்த ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்கு மட்டும் சொந்தமானதல்ல. அது வரலாற்றின் துவக்ககாலம் முதலே எல்லா பண்பாட்டிலும் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் மனம் முழுதாய் சமைந்த எந்த ஒரு தொல்குடி சமூகத்திலும் மீபொருண்மை பார்வைதான் அதன் அடிப்படையான பண்பாட்டுக் கட்டமைப்புகளையே உருவாக்கியிருக்க கூடும் என்றே நாம் சொல்லிவிட முடியும். மேற்கில் மிகத்துவக்கத்தில் மீபொருண்மையியல் பேரளவில் தனிமனித ஆன்மீக சாதனைகளோடு தொடர்புடையதாகவே இருந்தது. அதனால் அது தவிர்க்கவியலாமல் மதங்களோடும் கடவுள்சார் கோட்பாடுகளோடும் அடையாளம் காணப்பட்டது. 17ம் நூற்றாண்டில் நவீனத்துவத்தின் வருகையும் தத்துவதளத்தில் தெகார்தேவின் கார்டீசிய ஆய்வுமுறைகளின் ஆதிக்கமும் மீபொருண்மையியலின் மீது கடுமையான தாக்குதலை ஏற்படுத்தின. பொருள் கடந்த உண்மை என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்த பொருள் முதல்வாதிகளின் நூற்றாண்டாக அது இருந்தது. தொடர்ந்து வந்த 18, 19ம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதிகளின் ஆதிக்கம் நீடித்த போதும் மீபொருண்மை சிந்தனைகள் மெல்ல நகர்ந்து புறவயமான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டன. ஹெகல், காண்ட், நீட்ஷே போன்ற சிந்தனையாளர்கள் இதைச் செய்தார்கள். இதைத் தொடர்ந்து பிரபஞ்ச மையம் என்ற இடத்தில் கடவுளை நீக்கி விட்டு இயற்கையை முன்வைத்த எமர்சன், தோரோ போன்ற சிந்தனையாளர்கள் வந்தார்கள். இதன் பிறகு உருவாகி வந்த மீபொருண்மை சிந்தனைகளையே நாம் நவீன மீபொருண்மையியல் என்கிறோம். நவீன மீபொருண்மை சிந்தனைக்கு மதத்தோடும் கடவுளோடும் நேரடியான உறவு என எதுவுமில்லை. அது விஞ்ஞான நிருபணவாதத்தை ஒரு எல்லை வரை ஏற்றுக் கொண்டு இறுதி உண்மையை நோக்கி நகர்கிற ஒரு பயணமாக உள்ளது. நவீன மீபொருண்மையியலாளர் என்கிற பதத்திற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி எனக்கு உடனடியாக தோன்றுகிற ஒரு சிறந்த உதாரணம். ஹெய்டெக்கர் ”மீபொருண்மை ஒரு அறிமுகம்” என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அவரும் அவரின் சகாவான சார்த்தரும் இருத்தலியம் பேசியவர்கள் அதாவது இருத்தலின் அபத்தம் பேசியவர்கள் என்ற வகையில் மீபொருண்மை சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் என்பது போல தோன்றினாலும் ஒருவகையில் அவர்கள் மீபொருண்மையியலை வேறு ஒரு கோணத்தில் அணுகியவர்கள் என்றே கொள்ள வேண்டும். சசூரின் நவீன மொழியியல் கோட்பாடுகள் அமைப்பியலாக வளர்ந்த போது அது மீபொருண்மையியலை கடுமையாக நிராகரித்தது. தொடர்ந்து வந்த பின் நவீனத்துவ சிந்தனைகளும் மீபொருண்மையியலை ஒரு பெருங்கதையாடல் எத்தனம் என நிராகரிக்கிறது. ஆனால் வேறொரு புறம் பகுத்தறிவின் வன்முறையைப் பேசும் அது வேறு பல நுட்பமான மற்றும் சிக்கலான மீபொருண்மை தளங்களை உருவாக்கிய படியே முன்னேறுகிறது என்ற வகையில் நவீன மீபொருண்மையியலின் சமகால சவால்களையும் சாத்தியங்களையும் வாசகர்களின் கணிப்புக்கு விட்டு விட்டு தமிழ் நவீன மீபொருண்மை கவிதைகளைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். அது நவீன கவிதைப் பரப்பில் நரனின் இடம் எது என நாம் கணிக்க உதவக்கூடும். தமிழ் நவீன கவிதை இயக்கத்தில் மீபொருண்மைக் கூறுகள் கொண்ட கவிதைகள் அதன் துவக்க முதலே எழுதப்பட்டு வருகின்றன. தமிழின் முதல் புதுக்கவிதையாளரான பிச்சமூர்த்தி கவிதைகளிலேயே மீபொருண்மை கூறுகள் நிறைய உண்டு. தமிழில் இவ்வகைக் கவிதை எழுதுபவர்களை புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீப்பொருண்மையாளர்கள் மற்றும் ஆன்மீக தேட்டம் உள் ஒடுங்கிய நிலையில் எழுதும் மீபொருண்மையாளர்கள் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள் என பிச்சமூர்த்தி, பிரமிள், தேவதேவன் போன்றவர்களை கொள்வோம் எனில் உள் ஒடுங்கிய ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள் என சி.மணி, நகுலன், ஆனந்த், தேவதச்சன், எம்.யுவன், குவளைக்கண்ணன் போன்றவர்களைச் சொல்லலாம். இந்தப் பட்டியல்களில் ஒருசில விடுபடல்களும் இருக்கக்கூடும். மேலும் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிஞர்களை மீபொருண்மையியல் என்ற தர்க்க எல்லைக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீபொருண்மையியல் கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகிறேன். விமர்சகன் எப்போதும் தன் தர்கத்தின் வழியாக கறாரான சில எல்லைகளை வகுத்துக்கொள்ளவே விரும்புகிறான். கவிஞனோ எந்தக் கறாரான எல்லைகளையும் கடந்து செல்லவே எப்போதும் விரும்புகிறான். இப்போது நாம் விவாதிக்க வேண்டியது இந்த இரண்டு பிரிவுகளுக்குமான வித்யாசம் என்ன என்பதையே. நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி நவீன காலத்திற்கு பின் கார்டீசிய ஆய்வின் அடிப்படையிலான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு மீபொருண்மையியல் செயல்படத் துவங்கிய போது மீபொருண்மையாளர்களிடம் இந்த இரண்டு வகையான போக்கு இயக்கம் பெறத்துவங்கியது. அதாவது இவர்களில் சிலர் மரபான இறையியல் அல்லது மெய்யியல் சிந்தனைகளை கைவிடாமலேயே நவீன அறிவியலின் சிந்தனைப் போக்குகளை உள்வாங்கியபடி அதை வளர்த்தெடுக்கத் தலைபட்டார்கள். பிரமிளின் e=mc2, மற்றும் தெற்கு வாசல் போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முதல் கவிதையான e=mc2, சக்தி என்ற கருத்தாக்கம் தொடர்பான மரபான சிந்தனைப் போக்கும் ஐன்ஸ்டைனின் சக்தி கோட்பாடும் சந்திக்க நேர்ந்த புள்ளியைப் பேசுகிறது எனில் காலம் மற்றும் வெளி குறித்த நவீன அறிவியலின் உரையாடல்களும் காலபைரவன் என்கிற மரபான தொன்மமும் சந்தித்தித்துக் கொள்ளும் புள்ளியில் இரண்டாவது கவிதை நிகழ்கிறது. இதன் மறுபுறம் நவீன அறிவியல் கோட்பாடுகள் கொடுத்த பிரக்ஞை வழியாக நிகழச் சாத்தியமான மீபொருண்மைக் கவிதைகளை மட்டும் எழுதியவர்கள் என இரண்டாம் வகை மீபொருண்மையாளர்களை கொள்ளலாம். இதற்கு உதரணமாக எம்.யுவனின் வேறொரு காலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையும் ஆனந்தின் கவிதைகளையும் சொல்லலாம். காலம் மற்றும் வெளி தொடர்பான மீபொருண்மை உரையாடல்களை ஒரு மழலையின் வியப்புணர்வோடும் புரியாதவனின் திகைப்போடும் பேசுகின்றன இவ்விருவரின் இவ்வகைக் கவிதைகள். இவ்விரு வகை மீபொருண்மையாளர்களில் நரன் எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை நாம் பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும். அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான இந்நூலில் இவ்விருவகைக்குமே சாத்தியமான கவிதைகள் நிறைந்திருக்கின்றன. முதல் வகைக்கு ஒரு கவிதையை நோக்குவோம்: பேரமைதி பேரமைதி நீரினடியில் ஓராயிரம் மீன்கள் நீந்திக் கொண்டுதானிருக்கின்றன காலை மாற்றி வைக்கும் கொக்கால் குளம் முழுக்கச் சலனம் வட்ட வட்டமாய் விரிந்து...விரிந்து.. குறுகி...குறுகி.. நீரினடியில் அலகை நுழைத்து ஓராயிரம் மீனில் ஒரு மீனைக் கவ்விப் பிடிக்கையில் துள்ளும் மீன் துள்ளி..துள்ளி நீரின் மேல் தெரியும் அகன்ற வெளியை சலனப்படுத்துகிறது விரிந்த சலனத்திற்கும் குறுகி நீண்ட பேரமைதிக்குமிடையே ஒரு தா ம ரைத் த ண் டு புத்தனிடமும் ஒரு குளமிருந்தது அதற்குள் ஓராயிரம் மீன்கள் ஓராயிரம் தாமரைகள் ஓராயிரம் கொக்குகள் நீரற்ற நீரால் தசையற்ற மீன்களால் இதழ்களற்ற தாமரைகளால் பறந்துவிட்ட கொக்குகளால் நிரம்பியிருக்கிறது அக்குளம் எப்போதும் வற்றாக் குளமது அதில் சலனிக்காத நீர் அது அவன் பேரமைதியில் மட்டுமே சலனிக்கிறது புத்தனின் முகத்தைப் பார் எவ்வளவு சலனம் எவ்வளாவு பேரமைதி இரண்டும் ஒன்றெனப் போல் நரனின் மிகச் சிறந்த கவிதைகளில் இது ஒன்று. குளம் சலனமற்றதைப் போல் இருக்கிறது. ஆனால் ஆழத்தில் எண்ணற்ற சலனங்களால் ஆனது. மேற்புரம் ஒரு சலனம் நிகழ்கிறது. ஒரு கொக்கு அலகு நுழைத்து ஆழத்து சலனத்திலிருந்து ஒரு மீனைப் பிடித்து வெளியில் தலை உயர்த்தியதும் சலனமற்று இருந்த வெளி சலம்புகிறது. வெளி சலனத்தில் விரிய குளத்தின் மேற்புரம் அமைத்திக்கு குறுகி நீள்கிறது இரண்டிற்குமிடையே ஒரு தாமரைத் தண்டு. இதுவரை கவித்துமாக இருந்த கவிதை சட்டென சரிந்து தத்துவத்திற்குள் நுழைகிறது. கவிஞனின் தர்க்க மனம் விழித்துக் கொள்கிறது. கவிஞன் கவித்துவ பித்து நிலையிலிருந்து இறங்கி அடைந்த தரிசனத்தின் உணர்வை அறிவாக பேச முனைகிறான். புத்தனிடமும் ஒரு குளமிருந்தது அதற்குள் ஓராயிரம் மீன்கள் என துவங்கி சலனமும் பேரமைதியும் ஒன்றென்று சொல்லி முடிகிறது கவிதை. இப்போது தெற்கு வாசல் என்ற பிரமிளின் கவிதையோடு இதனை நோக்குவோம். இரண்டுக்கும் கவித்துவ நிலையில் உள்ள ஒற்றுமை என்ன இரண்டுமே தத்துவார்த்த நிலையில் உள்ள கருத்தினை கவித்துவ போதத்தில் சொல்ல முயல்பவை. ஆனால் நரனின் கவிதையில் உள்ளதைப் போல பிரமிளின் கவிதையில் உணர்ச்சி சரிவு நிகழவில்லை. பிரமிளின் கவிதையில் தத்துவார்த்த போதம் கவித்துவ எழுச்சிக்கு ஒரு க்ரியா விசையாக இருந்து மொத்தக் கவிதையையும் உணர்வு பூர்வமாக செய்திருக்கிறது. நரனின் கவிதையில் கவித்துவ எழுச்சி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின் சட்டென வடிந்து போத மனத்திற்கு வந்து விடுகிறது. இனி நரனின் இன்னொரு கவிதையைப் பார்ப்போம் முதலை உப்புநீர் முதலையொன்று துயில்கிறது தலையை நீருக்குள்ளும் உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் கார்காலத்தில் தொடங்கி கோடைகாலம்வரை நீண்டிருந்தது. நீரில் பாதியும் மணலில் பாதியுமாய் கிடக்கும் முதலை ஒன்றைக் காட்சிப்படுத்தி வெண்மணலை கோடைகாலமாகவும் நீரைக் கார்காலமாகவும் உருவகித்துக் காட்டும் இக்கவிதை இடப்பொருண்மையை காலப்பொருண்மையாக பேசிக் காட்டுவதன் வழியாக காலவெளித் தொடர்மம் (Time and space Continioum) என்கிற கருத்து நிலையை வியப்புணர்வோடு சுட்டுகிறது. மேற்கூறிய இரண்டு கவிதைகளும் இரண்டு வகையானவை. முதல் கவிதையில் உணர்ச்சி போதத்தில் சற்று சரிவிருந்தாலும் அதில் ஒரு ஆன்மீகத் தேட்டம் உள்ளது. மேலும் நீர் என்பது நினைவிலி மனதின் குறியீடு என நவீன உளவியல் சொல்கிறது என்ற புரிதலோடு வேறொரு வாசிப்பு செய்யும் போது இந்தக் கவிதையின் அர்த்த தளம் இன்னும் விரிகிறது. இரண்டாவது கவிதையில் நவீன இயற்பியலின் எல்லைக்குள் மட்டுமே இயங்கச் சாத்தியமான கவித்துவம் செயல்படுகிறது. இப்படியாக நரன் இருவகை மீபொருண்மைக் கவிதைகளும் எழுதச் சாத்தியமானவராக இருக்கிறார். மேலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நரனும் வெறும் மீபொருண்மைக் கவிதைகள் மட்டுமே எழுதபவர் அல்ல என்பதற்கு இந்தத் தொகுப்பிலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. “உங்கள் பெயரென்ன?” , “உலகை அணுகுதல்” போன்ற எளிய மொழி விளையாட்டுகளால் ஆன கவிதைகளையும் எழுதுபவராக நரன் இருக்கிறார். வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பு என்ற கவிதை இந்தத் தொகுப்பில் உள்ள நல்ல கவிதைகளில் ஒன்று. அவரது மீபொருண்மையியல் கவிதைகளைத் தவிர அவர் இதைப் போன்ற கவிதைகளின் வழியாகத்தான் மிகச்சிறந்த கவிதைகளை நோக்கிச் செல்ல முடியும் என்று தோன்றுகிறது. நரன் கவிதைகளின் மையம் என்ன? அல்லது நரன் என்ன மாதிரியான கவிதைகளை எழுத தொடர்ந்து வசீகரிக்கப்படுகிறார் அல்லது என்ன மாதிரியான விஷயங்கள் நரனுக்கு கவிதை எழுதுவதற்கான மன உந்தத்தை தருகிறது என்று பார்ப்போம். நரன் கவிதைகள் மற்றும் கவிதை எழுதும் முறை போன்றவற்றை தீர்மானிப்பவையாக ஐந்து காரணிகள் அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன். 1. காலம் மற்றும் வெளி தொடர்பான சிந்தனைகள் அதாவது காலப் பொருண்மையில் நிகழும் ஒரு விஷயத்தை இடப் பொருண்மையில் சொல்லிப் பார்ப்பது இடப்பொருண்மையில் நிகழும் விஷயத்தைக் காலப்பொருண்மையில் சொல்லிப்பார்ப்பது. 2. நிலக் காட்சிகள், பொருட்கள் மற்றும் அதன் தோற்றம் போன்றவை குறித்து கண நேரம் மனதில் நிகழும் ஒரு குழப்பம், ஒரு தோற்ற மயக்கம் போன்ற உணர்வுகள் 3. சொற்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டச் சாத்தியமான எளிய மொழி விளையாட்டுகள். உதாரணமாக இருள் எனும் கவிதை 4. எண்கள்,சொற்கள் போன்ற தர்க்க சாத்தியம் நிறைய உள்ள விஷயங்களை ஒன்றின் தர்க்க சாத்தியத்தை வேறொரு தர்க்க சாத்தியமாக மாற்றி விட்டும் கலைத்துப் போட்டும் நிகழ்த்தும் தர்க்க மாயங்கள் (Logico – Magic) 5. கவிதைக்கான மையப்படிமம் அல்லது கருத்தை ஒரு கவிதையாக விரித்து எழுதுதல். தமிழ் நவீன கவிதை வெளியில் நரனின் சிறப்பு இடம் என்ன என்று பார்க்கலாம். சமகால தமிழ் நவீன கவிதை என்பதன் மையவிசையாக எது உள்ளது அதனோடு நரனுக்கு உள்ள உறவென்ன என்று பார்த்தால் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடும். சமகால நவீனக் கவிதையின் மைய விசையாக உள்ள எதனோடும் நரனின் கவிதைகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. குறிப்பாக நரனின் கவிதைகளில் அரசியல் நிலைபாடுகள் இல்லை. பெரும்பாலான நவீன கவிஞர்களின் கவிதைகளில் உள்ளதைப் போன்று இருத்தலின் சிக்கல்களால் ஆன அழுமூஞ்சித்தனம் இல்லை. நடன ஒத்திகை என்ற கவிதையும் ஷீ வின் வார்த்தைகளை கா பேசினாள் என்ற கவிதையும் வழக்கமான நரன் பாணியிலான கவிதைகள்தான் என்ற போதும் அந்தக் கவிதைகள் இயங்குகிற வாழ்வியல் வெளி அதை வழக்கமான நரன் கவிதைகள் என்ற தளத்திலிருந்து வேறொரு அனுபவதளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. நரனின் கவிதைகளில் எங்காவது கொஞ்சம் ஒரு விசும்பல் இருக்குமானால் அது இந்தக் கவிதைகளில் மட்டுமே. மற்றபடி நம் சூழலில் உள்ள கொந்தளிப்பான வெக்கைக் கவிதைகளுக்கு நடுவே நரனின் கவிதைகள் மிகுந்த குளிர்ச்சித் தன்மை நிரம்பியவையாக உள்ளன. சுகுமாரன் பின் அட்டையில் சொல்லியிருப்பதைப் போல கபடமற்ற மழலை வியப்பையும் குளிர்ச்சியான புன்னகை ததும்பும் தியான மனநிலையையும் தமிழ் கவிதை வெளியின் மேல் பரப்பியபடி இருக்கின்றன நரனின் கவிதைகள். இதனாலேயே நரனை நான் நம் சமகாலச் சூழலின் புறநடைக் கவிஞன் என்று கூறுவேன். உண்மையில் இதுவே அவரது பலம் மற்றும் பலவீனம் இரண்டும்.