Tuesday, May 11, 2010

லும்பினி.இன்

இன்று முதல் லும்பினி.இன் என்றொரு இணைய இதழ் துவங்கப்பட்டுள்ளது. பழைய ‘நிறப்பிரிகை’ இதழ்களை இந்த தளத்தில் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. www.lumpini.in என்ற முகவரியில் இதை வாசிக்கலாம். இந்த இதழ் கொண்டுவந்ததன் நோக்கங்களாக சொல்லப்பட்டுள்ளதாவது. அதிகாரம் எப்போதும் வரலாற்றில் எதிரிகளே இல்லாமல் இருந்ததில்லை. பென்னம்பெரிய சக்தியாய் அதிகாரங்கள் தங்களை நிலைநிறுத்தி நிறுவிக்கொண்டபோதிலும் அதற்கு எதிரான மறுப்புகளும் கலகக்குரல்கள், சின்னஞ்சிறு விசும்பல்கள், முனகல்கள் என பல்வேறு வடிவங்களிலாவது வரலாற்றின் இடுக்குகளிலிருந்து கசிந்து கொண்டு தானிருந்திருக்கின்றன. அத்தகைய எதிர்ப்புமரபைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதமும் நிம்மதியும் அடைகிறோம். குறிப்பாகத் தமிழ் பேசும் அடையாளம் கொண்ட மக்கட்பிரிவைச் சேர்ந்த நாங்கள் எமக்கான முன்னோடிகளாக புத்தர், மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற சமூகப்போராளிகளைத் தேர்ந்துகொள்வதிலும் மார்க்சியம், பெண்ணியம், பின்நவீனம், தலித்தியம், பவுத்தம், பெரியாரியம் போன்ற கோட்பாட்டு வெளிச்சங்களில் அதிகாரங்களை விசாரணை செய்வதிலும் அதீத ஆர்வமும் வேட்கையும் கொண்டவர்களாயுள்ளோம். அதிகாரங்கள் காலந்தோறும் புதிய புதிய பரிமாணங்களில் மாறிக்கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கான சிக்கல்களும் வெவ்வேறு வடிவமெடுத்துக்கொண்டிருக்கின்றன. மாற்று அரசியல், மாற்று சிந்தனை, மாற்று எழுத்துகளை முன்வைப்பவர்களுக்கான பணிகளும் கடப்பாடுச் சுமைகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இந்தியாவிலும் ஈழத்திலும், ஏன் புகலிடத்திலும் கூட சாதிய ஆதிக்கம், ஒடுக்குமுறை, வன்முறை என்பவை வெவ்வேறு முகங்களோடும் வெவ்வேறு தத்துவங்களோடும் தொழிற்படாமல் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நீளும் சாதியத்தின் கரங்கள் வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன. அவற்றிற்கு எதிரான எமது போராட்டங்களின் அவசியங்களும் ஓயப்போவதில்லை. மற்றொருபுறம் பெண்களுக்கான வெளிகளைச் சுருக்குவதிலும் கற்பு, கலாச்சாரம் மாதிரியான கட்டுத்தளைகளால் பெண்ணுடல் மற்றும் மனங்களை ஒடுக்கும் கருத்தியல்களுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்தியச் சாதியமும் கொடிய இந்துமதமும் நம்மைப் பாரமாய் அழுத்தும் வேளையிலேயே உலகமயமாக்கல் என்னும் மாயப்பிசாசும் நம்மேல் வந்து அழுந்துகிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை உற்பத்தி செய்வதிலும் பழங்குடிகள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் வளங்களைச் சுரண்டி வாழ்வாதாரத்தை மறுப்பதிலும் உலகமயமாக்கலின் பங்கு பிரதானமானது. வெறுமனே பொருளாதார மேலாண்மை நிறுவுவது என்பதைத் தாண்டி அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டல், உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பவற்றின் பேரால் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளாய்க் கட்டமைப்பதிலும் தனிமைப்படுத்தி ஒடுக்குவதிலும் இந்தியாவில் மாவோயிஸ்ட்கள், பழங்குடிப் போராட்ட இயங்கள் தொடங்கி உலகமெங்கும் எழும் எதிர்ப்புச் சக்திகளை இல்லாதொழிப்பதிலும் உலகமயச் சக்திகளுடன் உள்ளூர் அதிகாரபீடங்களும் கைகோர்த்துக்கொள்கின்றன. இத்தகைய இரட்டைச் சுமைகளை உணர்ந்தவர்களாய் இலக்கியம் பேசுவோரும் எழுதுவோரும் மாற்று அரசியலை முன்வைப்பதாய் நம்பும் சின்னஞ்சிறுக்குழுக்களும் இல்லை என்பது ஒரு வரலாற்றுச்சோகம்தான். பார்ப்பனர்களாலும் வெள்ளாளர் போன்ற ஆதிக்கச்சாதிகளாலும் கைக்கொள்ளப்பட்ட இலக்கியத்தை, அதன் அரசியலைக் கட்டவிழ்த்து ஒடுக்கப்பட்டோருக்கான இலக்கிய வடிவங்களான தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், விளிம்புநிலை ஆய்வுகள் குறித்த அறிமுகம் மற்றும் உரையாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றில் நிறப்பிரிகைக்கு ஒரு பிரதான பங்கு உண்டு. தொண்ணூறுகளில் வீச்சுடன் தொழிற்பட்ட நிறப்பிரிகையின் வீச்சு அமைப்பாகாத இயக்கமாகவே இருந்தது எனலாம். ஆனால் இடையில் ஏற்பட்ட பல்வேறு தளர்வுகளாலும் தொய்வுகளாலும் கோட்பாட்டு உரையாடல்களும் அரசியல் செயற்பாடுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு சிறுபத்திரிகைத் தளம் என்பதும் இலக்கியம் என்பதும் மீண்டும் ஒடுக்கப்பட்டோர் குறித்த கள்ள மவுனத்தைக் கடைப்பிடிக்கும் ரகசியத்தளமாகவும் அதிகாரத்திற்குத் தேவையான பணியாட்களை உற்பத்தி செய்யும் ஏஜென்சிகளாகவும் மாறிவிட்டதை அவதானிக்கிறோம். இப்போது பெரும்பாலும் இலக்கியம் என்பது நிறுவன உரிமையாளர்களால் ஒழுங்கு செய்யப்படுகிற கார்ப்பரேட் கம்பெனி நடைமுறைகளாக மாறிவிட்டன என்பதையும் உணர்ந்திருக்கிறோம். உலகமயச்சூழல் ஆதாயத்தையும் ‘வளர்ச்சி’யையும் மட்டுமே பிரதானமாகக் கொண்ட, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு தலைமுறையை உருவாக்கியதில் வெற்றிகண்டதைப் போலவே சிறுபத்திரிகை இலக்கியச்சூழலும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, அதிகாரங்களோடு உறவு கொண்ட ஒரு கூட்டத்தை உருவாக்கியுள்ளது. மற்றொருபுறம் இத்தகையச் சூழல் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தும் மக்களுக்கான போராட்டங்களைத் தொடர்ச்சியாகக் கட்டமைத்துப் போராடி அரசின் வன்முறையைச் சந்தித்து வரும் மார்க்சிய மற்றும் பெரியாரிய இயக்கங்களின் மீது எங்களுக்கு அளப்பரிய மரியாதை இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இவையும் கூட பெரும்பாலும் பன்மைத்துவ அடையாளங்களை மறுப்பதாய் தாங்கள் கட்டமைத்த ஒற்றை அடையாளச் செருப்பிற்காக கால்களை வெட்ட அலையும் ‘கொலைவெறி’யையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. பெண்ணெழுத்து, உடல் அரசியல், பன்மைத்துவ அரசியல் ஆகியவற்றை மறுப்பவையாகவும் எல்லாவற்றின் பின்னாலும் ‘ஏகாதிபத்தியச் சதியை’க் கண்டுபிடித்து விடக்கூடிய ஆண்களால் ஆண்களுக்காக நடத்தப்படுகிற புரட்சிகரக்கட்சிகளோடும் முரண்பட வேண்டியிருக்கிறது. மற்றொருபுறம் தேசிய மறுப்பாளனாகிய பெரியாரைப் புரிந்துகொள்ளாமல் தமிழ்த்தேசியத்தை முன்வைக்கும் இயக்கங்களாக பெரியாரிய அமைப்புகள் மாறிப்போனதும் சூழல் அவலம்தான். இந்திய அரசு, அதன் அதிகாரம், ராணுவம் என்னும் வன்முறை எந்திரம், மக்கள் இயக்கங்களின் மீது பாயும் அதன் ஒடுக்குமுறை என எவற்றினோடும் எங்களுக்குச் சிறுமணலளவும் ஒப்புதல் கிடையாது. ஆனால் அதற்கு மாற்றாய்க் கட்டமைக்கப்படும் தமிழ்த்தேசிய இயக்கங்கள், தான் எதிர்ப்பதாய்ச் சொல்லும் அதே இந்திய அரசின் அதிகாரங்களை தமக்குள் ஏற்றுக்கொண்ட நுண்களங்களாக விளங்குகின்றன. இந்திய தேசியத்தின் கருத்தியல் இந்துத்துவமாக இருக்கிறதென்றால் தமிழ்த்தேசியத்தின் கருத்தியல் தமிழ்க்கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ்ப்பாசிசமாக இருக்கிறது. முஸ்லீம்கள், பழங்குடிகள் போன்ற வித்தியாசங்களை முன்வைக்கும் மக்கள்குழுவினரை ஒதுக்கித் தனிமைப்படுத்துவதில் இவ்விரு பிரிவினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உலகமயமாக்கலின் ஆணைகளைக் கேள்விமுறையின்றி அமல்படுத்துவதில் இந்திய அரசுக்கு விருப்பம் அதிகம் எனில் தமிழ்த்தேசிய சக்திகளுக்கோ அதுகுறித்த எந்த மறுப்புமில்லை. ‘’எங்களோடு இல்லையென்றால் நீங்கள் பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்" என்றார் அங்கிள் புஷ். ‘’எங்களோடு இல்லையென்றால் நீங்கள் நக்சலைட்களோடு இருக்கிறீர்கள்" என்றார் மன்மோகன். ‘’எங்களோடு இல்லையென்றால் நீங்கள் ராஜபக்சேவோடு இருக்கிறீர்கள்" என்கிறார்கள் தமிழினவாதிகள். ஆக மொத்தம் இத்தகைய குரல்களின் எதிரொலியைக் கேட்டுக்கேட்டு கிறுக்குப்பிடித்து நிற்கிறோம். அடிப்படைவாதமும் பழமைவாதமும் உருவாக்கியுள்ள தடைகள் ஒருபுறம், நவீனம் என்ற பெயரில் நிகழும் மானுட அழிவுகள் மறுபுறமும் என ஒரு சிக்கலான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதில் எந்த சிக்கலுமில்லை. மாற்று அரசியலையும் எழுத்தையும் முன்வைப்பதற்கும் மறுக்கப்பட்டோரின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வெறுமனே காகிதங்கள் மட்டுமே போதுமானவையாக இல்லை என்பது நிதர்சனமாயுள்ளது. இணையம் என்பது இன்று உலகமெங்கிலும் தவிர்க்கமுடியாத இயங்குதளமாக மாறியுள்ளது. முற்போக்கு, பிற்போக்கு, வலதுசாரி, இடதுசாரி, ஒடுக்குபவர், ஒடுக்கப்படுபவர் என எல்லா அரசியல் சக்திகளும் இணையதளத்தில் இயங்குகின்றனர், தமக்கான கட்டமைப்புகளை உருவாக்குகின்றனர், தமக்கு உடன்பாடில்லாதவைகளோடு மல்லுக்கட்டுகின்றனர். தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் வெளிகளில் சிறிதளவேனும் அதிர்வுகளையும் தாக்கங்களையும் உண்டுபண்ணியவர்கள், உரையாடல்களைத் தொடங்கி வைத்தவர்கள் என்கிற நம்பிக்கையோடு இணையதளத்திலும் அத்தகைய தொடர்ச்சியைப் பேணும் முயற்சியே ‘லும்பனி’. நாங்கள் என்ன பேசுவோம், எழுதுவோம் என்பது யாருமறியா ரகசியங்கள் அல்ல. தலித்தியம், பார்ப்பன, பார்ப்பனிய, இந்துத்துவ எதிர்ப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் நிபந்தனையற்ற விடுதலையைக் கோரும் பெண்ணியம், பழங்குடிகள், திருநங்கைகள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் அரசியல், உலகமயத்தின் பொருளாதார, அரசியல் பின்னணிகளை அம்பலப்படுத்துவதும் அதற்கு எதிரான கிளர்ச்சிகளும், தேசியத்தின் மொத்தத்துவ வன்முறையைக் கேள்விகேட்டல், நிறுவப்பட்ட எல்லா பெருங்கதையாடல்களுக்கும் எதிரான உடைப்புகள் ஆகியவையே எமது பணி. கருத்து விலகல்களையும் வேறுபாடுகளையும் அங்கீகரிப்பையும் கறார்த்தன்மையில்லாத அரசியல் புள்ளிகள் ஒன்றிணைவையும் முன்வைக்கிறோம். இந்த புள்ளியிலிருந்து நம் உரையாடலைத் தொடங்குவோம்.

1 comment:

  1. லும்பினியில் பன்முக கருத்துக்களுக்கு வாய்ப்பு இல்லையே... பின்னூட்டம் இடுவதற்கு வசதியற்ற ஜனநாயகத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறார்களே... லும்பினிக்கு தாங்கள் வழங்கும் ஜனநாயகம் அவ்வளவுதானா... புத்தர் பாவம்

    ReplyDelete