Sunday, May 2, 2010

சாம்பல் சுவர் - நுண்கதை

நான் இந்த சந்திற்குள் எப்படி வந்து சிக்கிக் கொண்டேன் எனத் தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் முன்னும் பின்னும் நீண்டு கொண்டே செல்லும் ஒரே சீரான சந்து. உண்மையில் இது சந்துதானா என்றும் தெரியவில்லை. ஐந்தடி இடைவெளியில் ஒரே நேர்கோடாக நீண்டு செல்லும் சுவர்கள், இரண்டும் எவ்வளவு உயரம் என்றும் தெரியவில்லை. அண்ணாந்து பார்த்தால் வானத்தின் விளிம்பு வரை வளர்ந்திருக்கிறது இருபுறமும். வானம் நீலத் துண்டாக தெரிகிறது. சில சமயம் மேகங்கள் ஊர்ந்து செல்வதையும் எப்போதாவது பறவைகள் போவதையும் பார்க்கிறேன். நேரே நீண்டு கொண்டே செல்லும் சந்தின் இடப்பக்கமோ வலப்பக்கமோ வேறொரு பாதை கிளை பிரிகிறது. அந்த சந்தும் நீண்டு சென்று கொண்டே இருக்கிறது. முன்னும் பின்னும் எல்லா சந்துகளும் ஒன்று போலவே உள்ளன. சாம்பல் வண்ண சுவர்கள். எப்படி இங்கு வந்தேன்? என் சக மனிதர்கள் என்ன ஆனார்கள்? பூமியில் இது எங்குள்ளது? இறுதியாக நான் என்ன செய்துகொண்டிருந்தேன். எவ்வளவு யோசித்தும் பலனில்லை தலையில் நரம்பொன்று அறுந்து விழுவது போல் விண்ணென்று வலித்தது. ‘உதவி, உதவி....’ எனக் கத்துகிறேன் சற்று தொலைவில் எதிர்க்குரல் வருகிறது ‘உதவி, உதவி...’ சத்தம் வந்த திசை நோக்கி வெறி கொண்டவாறு ஓடுகிறேன். உடல் தளர ஓடி நின்று பார்க்கிறேன் யாரையும் காணவில்லை. ஒருவேளை அது எதிரொலியாய் இருக்குமோ? எனக்கு சோர்வாய் இருக்கிறது. ஓடி வந்ததில் உடல் வியர்த்துக் கொட்ட மூச்சிறைக்க மண்டியிட்டு அமர்கிறேன். மீண்டும் கத்துகிறேன். “உதவி, உதவி...” “உதவி, உதவி...” எதிர்குரல் வந்த திசை நோக்கி ஓடுகிறேன். மூச்சு வாங்க நிற்கிறேன். ஒருவேளை இடது பக்கமோ வலது பக்கமோ கிளை பிரியும் சந்துகளில் செல்ல வேண்டுமோ? எத்தனை கிளைச் சந்துகளை கடந்து வந்தேன் நினைவில்லையே. ஐயோ என்ன இழவு இது சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். சத்தம் வரும் திக்கை சரியாக குறித்துக் கொள்ள வேண்டும். “உதவி, உதவி...” கத்துகிறேன் உதவி, உதவி...” சரியாக இடது மேல் புறம் ஓடு.... ஓடு... கால் பின்ன நேரே ஓடி முதல் இடது சந்தில் நுழைந்து நேரே ஓடுகிறேன். இப்போது இடதா? நேரா? மீண்டும் இடதில் திரும்பி நேரே ஓடிக் கொண்டேயிருக்கிறேன். கால் துவள கீழே விழுகிறேன். கண்கள் இருள்கின்றன. எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் தெரியவில்லை. குதிகாலும், தொடையும் அசைக்கமுடியாதபடி வலிக்கின்றன. கடவுளே என்ன இது? இது ஒரு கனவாய் இருக்க கூடாதா? வெறுப்பாய் எழுந்து அமர்கிறேன். கால் மூட்டில் எரிகிறது. கால்சராய் கிழிந்து சாறுகாயத்தில் இரத்தம் துளிர்த்திருக்கிறது. தாகமாய் உள்ளது. உதடுகளை நாவால் ஈரமாக்கிக் கொள்கிறேன். ஒரு மோசமான புதிரில் வந்து மாட்டிக் கொண்டேன் என மனம் திகிலில் உறைகிறது. மீண்டும் மீண்டும் மனம் யோசித்து யோசித்து சோர்ந்தது எப்படி இங்கு வந்தேன். எப்படிச் செல்லப் போகிறேன். பின்னந்தலையில் இருந்து வலி கழுத்துப்பட்டைக்கு பரவ சுவரில் சாய்ந்து அமர்கிறேன். இப்போது மணி என்ன? இன்னும் இரவு வர எவ்வளவு நேரம் உள்ளது. அதற்குள்ளாக இதிலிருந்து வெளியேற வேண்டும். ச்சீ! எவ்வளவு பைத்தியகாரத்தனமாய் எதிரொலியை எதிர்க் குரல் என நம்பி ஏமாந்தேன். ஆனால் அது எதிரொலி போல ஒலிக்கவில்லையே. எவ்வளவு துல்லியமாய் ஒரு மானுடக் குரல் போலவேயிருந்தது. மீண்டும் கத்தலாமா? வேண்டாம் சோர்வாயிருக்கிறது. முட்டாளே கத்தித்தான் பாரேன். சும்மாயிருபதிலும் ஏதாகிலும் செய். இந்த நரகத்திலிருந்து வெளியேறியேயாகவேண்டும். “உதவி, உதவி...” “உதவி, உதவி...” இம்முறை வலது பக்கத்தில் சரி ஓடு... ம்... இன்னும் வேகம்....வேகம்....வேகம்...திரும்பு.....ஓடு...ஓடு...ஓடு... மூச்சிறைக்கிறது. அது எதிரொலிதான். இனி துணைக்கு ஆள் தேடி பலனில்லை. நாமாக போய்ச் சேர வேண்டியது தான் ஆனால் எந்த வழி? நேரே கொஞ்ச தூரம் போய் கொண்டேயிருக்கிறேன். மனம் சிந்திக்கும் திறனை இழந்து கொண்டிருக்கிறது. எண்ணங்கள் தாறுமாறாய் ஓடுகின்றன. என்ன இது... என்ன இது.... என அரற்றிக் கொண்டேயிருக்கிறேன். அது எதிரொலி என்றால் ஒரு முறை வலது பக்கமும் மற்றொரு முறை இடது பக்கமும் ஒலிப்பது எப்படி? மனம் தடுமாறுகிறது. மீண்டும் கத்து. கத்தினேன். இம்முறை பின் பக்கம் ஒலித்தது உன்மத்தம் பிடித்தவன் போல் நேரே ஓடிக் கொண்டேயிருந்தேன். எவ்வளவு தூரம் வந்து விட்டோம் போதும் நில். அது எதிரொலிதான். நீ எங்கிருந்து கத்தினாலும் ஒரே திசையிலிர்ந்துதான் எதிரொலி வருமாறு கட்டப்பட்டிருக்கிறது இந்த புதிர்ப்பாதை புரிந்ததா?. பைத்தியம் போல் இனி ஓடிப் பயனில்லை. முதலில் இந்தப் புதிரின் ஜியோமிந்திரியை புரிந்து கொள்ள முயற்சி செய். மொத்தம் எத்தனை சந்துகள் இருக்கக் கூடும்? ஒரு ஐந்து அல்லது ஆறு சந்துகளுக்குள்தா நான் திரும்ப திரும்ப அலைந்து கொண்டிருக்கிறேனா? இந்த சுவர் பாதை நீண்டு செல்லும் தூரம் பார்த்தால் அப்படி தோன்றவில்லை. சில நூற்றுக் கணக்கான சந்துகளாவது இருக்க வேண்டும். இதன் வடிவம் என்னவாக இருக்ககூடும்? நிச்சயம் சதுரம் அல்லது செவ்வகம்தான். வட்டம் என்றால் நேர்கோடுகள் வளைந்தாக வேண்டுமே? ஆனால் புதிர்பாதையின் இறுதி சந்து மட்டும் வளைவது போல் அமைக்கப்பட்டு உட்புறம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்குமோ? எதுவானாலும் நாம் இறுதி சந்திற்குள் இருந்தால்தான் சொல்ல முடியும். மேலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீளும் ஒரு சந்து வளைவதை கண்டுபிடிப்பது சிரமம் ஆயிறே. முட்டாளே போதும் நிறுத்து உன் ஜியோமிந்திரி ஆராய்சியை. பிதாகோரஸ் என்று நினைப்பா? எழுந்து ஓடு. ஓட்டம் ஒன்றே விடுதலையை தரும். உன் ஆன்ம சக்தியை ஓட்டத்திலன்றி வேறெதிலும் செலவிடாதே. எப்படி ஓட இது ஒரு நேர்கோடடென்றால் எவ்வளவு செளகர்யம். ஓடிக் கொண்டேயிருக்கலாம். நிச்சயம் ஏதாவது ஓர் புள்ளியில் வெளியே சென்று விடலாம். கத்தலாமா? தொண்டை வலிக்கிறது. நாக்கு உலர்ந்து விட்டது. தண்ணீருக்காக மனம் ஏங்கியது. நாவால் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டேன். ”உதவி, உதவி...” இம்முறை நேர் எதிர்திசையில் குரல் வருகிறது. உடல் துவள ஓடினேன். மூச்சிறைக்க சோர்ந்து மண்டியிட்டு நின்றேன். அது எதிரொலிதான் சந்தேகமே இல்லை. ஆனால் அதை நம்புவதைத் தவிற எனக்கு வேறு வழி தெரியவில்லை. பாம்போ பழுதோ கிடைப்பதை பிடித்து மேல் ஏறிச் செல்வதுதான் புத்திசாலித்தனம். ஒருவேளை அதுவும் ஒரு மனிதனாகயிருந்தால் எவ்வளவு பிரயோஜனப்படும். என்ன பிரயோஜனம்? இந்த நரகத்தில் ஒரு சகமனிதன் என்ன செய்து விட முடியும்? மேலும் அவனும் என்னைப் போலவே இதில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பவன். ஆனால் அப்படிச் சொல்லவிட முடியாது. அவன் நமக்கு முன்பிருந்தே இங்கே இருப்பவனாய் இருக்கக் கூடும். இந்த புதிர்ப்பாதையை பற்றி நமக்கு தெரியாத ஏதாவது ஒரு செய்தியை அவன் வைத்திருக்க கூடும். என்ன உளறுகிறாய்? இந்த இழவிலிருந்து வெளியேற பயன்படும் செய்தி அவனிடம் இருந்தால், அவன் வெளியேறியிருக்கமாட்டானா? இங்கு கிடந்து ஏன் லோல்படுகிறான். அப்படியும் சொல்லிவிடமுடியுமா? அந்த செய்தி முக்கியமற்றது என அவன் நினைத்திருக்கலாம் அல்லவா? சீசி! என்ன பித்துக்குளி எண்ணம் இன்னும் ஒருவனையும் பார்கவில்லை. யாரேனும் இருக்கிறார்களா இல்லையா தெரியவில்லை. இது என்ன வீண் நினைப்பு. அது எதிரொலிதான் சந்தேகமே இல்லை. சரி இறுதியாக ஒரு முறை கத்து. யாராவது தென்பட்டால் உன் அதிர்ஷ்டம். இல்லை எனில் இப்படி கிறுக்கனைப் போல் கத்துவதை நிறுத்தி விட்டு வேறு வழிமுறைகளைப் பார். “உதவி, உதவி...” “உதவி, உதவி...” சத்தம் வந்த திக்கை குறித்துக் கொண்டு வெறிகொண்டு ஓடினேன். மூச்சிறைக்கிறது. உடல் வேர்க்கிறது. கால்கள் பின்னுகின்றன. மனம் தளராதே ஓடு...நேராக ஓடிக்கொண்டேயிரு....நெஞ்சு வலிக்கிறது. மெல்ல ஓட்டத்தை தளர்த்தி நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்கிறேன். துயரம் தொண்டையை கவ்வுகிறது. அண்ணாந்து பார்க்கிறேன். மேகங்களின் கீழே சட்டென பறந்து கடந்தது ஒரு கறுநிறப் பறவை. இனி சாகும் வரை இப்படித் தானோ. இங்கேயே குடிக்க நீரின்றி உணவின்றி செத்து சுண்ணாம்பாக போகிறேனா? என்னவர்கள் எல்லோரும் எங்கிருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்? சற்று தொலைவில் ஏதோ சிரிப்புச் சத்தம் கேட்டது. அதிர்ந்து போய் அந்த திடை நோக்கி ஓடினேன். அங்கொரு சாம்பல் வண்ண சன்னல் இருந்தது. சாத்தப்பட்ட அதனுள்லிருந்து ஒரு ஆணும் பெண்ணும் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவளின் சிரிபொலிதான் அப்போது நான் கேட்டது. இதென்ன வீடா? விடுதியா? சன்னல் இருக்கிறதே...கதவு எங்கே இருக்கும். பலம் கொண்டு சன்னலை தட்டுகிறேன். உதவி..உதவி...யாரது அம்மா நானிங்கு மாட்டிக் கொண்டேன் காப்பாற்றுங்கள். இது எந்த இடம்? நீங்கள் யார்? உதவி...உதவி... எவ்வளவு நேரம் சன்னலை தட்டுவதும் கேட்பதுமாய் இருக்கிறேன். என் மன்றாடலோ, கேவலோ அவர்களின் செவியில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவர்கள் பேசிக்கொண்டேயிருந்தார்கள். அவள் கல கலவென சிரித்தாள். நான் கோபத்தில் கத்தினேன். வேசை மகளே கதவை திறடி. ஒருவேளை தொலைக்காட்சியாய் இருக்குமோ? அப்படியிருந்தாலும் பார்துக் கொண்டிருப்பவர்கள் இருப்பார்களே. இதற்கு கதவு ஒன்று இருக்குமே பார்த்து விடலாம். அந்த சன்னலிலிருந்து சுமார் கால் மணிநேரம் நடந்த பின் இடது புறம் ஒரு சந்து திரும்புகிறது. அதில் நுழைந்தேன். மீண்டும் ஒரு அரைமணி நேரமாவது நடந்திருப்பேன். அதுவும் இடது பக்கம் திரும்பியது. என்ன இது இவ்வளவு பெரிய கட்டிடமா? மீண்டும் கால் மணிநேரம் நடந்து இடது புறம் திரும்பி அரைமணி நேரம் நடந்தேன். மீண்டும் அந்த சன்னல் இருந்த இடத்திற்கே வந்து விட்டேன். என்ன இது கதவே இல்லையா? உள்ளே மனித சத்தம் கேட்கிறதே. அந்தப் பெண் சிரித்துக்கொண்டேயிருப்பதைக் கேட்டேன். தாயே கதவை திற கத்தினேன். பலம் கொண்ட மட்டும் சன்னலை தட்டினேன். ம்ஹிம். பிசாசுகள் என்ன சிரிப்போ? என்ன சரசமோ? யேய் கதவை திறடா நாயே. சோர்ந்து தரையில் அமர்ந்தேன். உடலில் உள்ள சக்தி முழுதும் திரட்டி கத்தினேன். உதவி...உதவி... நேர் இடது புறம் எதிரொலித்தது. வறட்சியாய் புன்னகைத்தேன். முட்டள் எதிரொலியே வாயை மூடு பைத்தியமே. மீண்டும் கத்தினேன். தொடர்ந்து கத்திக் கொண்டேயிருந்தேன். அட இதென்ன இம்முறை எதிரொலி வரவில்லை. அப்படியானால் அது எதிரொலி இல்லையா? பரபரபாய் கத்தினேன். நிசப்தம். மீண்டும் கத்தினேன் நிசப்தம். முட்டாளே இது வரை கேட்டுக் கொண்டிருந்தது எதிரொலி இல்லை. யாரோ இருக்கிறார்கள். ஆனால் அவன் ஏன் நான் கத்தும் போது மட்டும் பதில் குரல் கொடுக்கிறான். அவனாக கத்தினால் என்ன? மீண்டும் கத்தினேன். நிசப்தம். சில இடங்களில் எதிரொலி வருவது போன்றும் சில இடங்களில் எதிரொலி வராதது போன்றும் கட்டப்பட்டுள்ளதோ இது. சரி பார்கலாம் மறுமுறை எதிரொலி வரும் போது வேறு ஏதாவது சொற்களை கொண்டு கத்தலாம். ஒருவேளை எல்லாமே அமானுஷ்யமோ? சன்னல் பின்புறம் கேட்ட குரல், எதிரொலி எல்லாம் தன்னை குழப்புவதற்காக திட்டமிட்டு மாற்றி மாற்றி செய்யப்படுகிறதா? கதவற்ற சன்னல், பதிலற்ற பேச்சுக் குரல்கள் ஒருமுறை ஒலித்தும் மறுமுறை ஒலிக்காத எதிரொலி என்ன பயங்கரம் இது? பீதியில் உடல் வியர்க்கத்துவங்கியது. உடலும் மனமும் சோர்ந்திருக்கின்றன. இந்த பாதை இன்னும் எவ்வளவு தூரம் நீளும். படைப்பின் எந்த தர்க்கத்தில் இது இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சூட்சமத்தை நான் அறிவதெப்படி? அதை அறியாமல் நான் இதிலிருந்து விடுபடுவது எப்படி? அடிமனம் நம்பிக் கொண்டிருகிறது எல்லாம் சரியாகி விடுமென. ஆனால் எப்படி? என்னை கொஞ்சம் கொஞ்சமாக சிதறடித்துக் கொல்லத்தான் எனக்கு நம்பிக்கை ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் நம்பிக்கையையும் பிரயாசையையும் போல நம்மை காக்க வைத்து சிதறடிக்கிற பிசாசுகள் வேறு எதுவுமே இல்லை. நம்பாதே என் மனமே. ஆனால் இந் நரகத்தில் இருந்து என்னை ஆற்றுப்படுத்துகிற ஒரே விடயம் நம்பிக்கை மட்டும் தானே? ஆசுவாசமும் நிம்மதியும் கூடிய இடத்திற்கு எனை காவிச் செல்லும் சிறகுகளை அவைகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. அதையும் கைவிடுகிற கணம் நான் மரித்துதான் போயிருப்பேன். ஏன் மரித்தால்தான் என்ன? விடுதலையின் உண்மையான பொருள் மரணம் அல்லவா? நீ சொல்கிற ஆசுவாசமும் நிம்மதியும் கூடிய இடம் என்பதின் பொருள் மரணம் அல்லவா? ச்சீ! என்ன இது மரணத்தை பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும். இது எந்த இடமோ? என்ன ஏற்பாடோ? என் பிரக்ஞையின் அனுமதியோடா நானிங்கு வந்தேன். அது போலவே என்னையுமறியாமல் இங்கிருந்து சென்றிடுவேன். இதை ஒரு விளையாட்டு என நினைத்துக் கொள். நீ உன் குழந்தைகளிடம் விளையாடுவாயே அதைப் போல. அனைத்தும் சரியாகி விடும். என் மனதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. மணி என்ன இன்னுமா மாலை வரவில்லை? நானிங்கு வந்து பல மணி நேரம் ஆயிற்றே? மீண்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது எழுந்து தள்ளாடியபடியே நடந்தேன். சோர்வாக சன்னலை தட்டினேன் ஐயா... மீண்டும் ஒரு முறை தட்டினேன். அடப் போங்கடா. சோர்ந்து போய் நடக்கத்துவங்கினேன். கால்கள் அமரச் சொல்லி கெஞ்சின. மனதில் இனம் புரியாத வன்மம் பொங்கியது. நட அமராதே. அமராதே நடந்து கொண்டேயிருந்தேன். கால் குதிரை சதையில் நரம்பு வலித்தது. ம்ஹீம் அமரக் கூடாது நான் அமர மாட்டேன். நட..நட...நடக்காதே ஓடு...ஓடு... கால்கள் கதறின. முடியவில்லை வேண்டாம். நான் ஓடிக் கொண்டேயிருந்தேன். எவ்வளவு நேரம் எவ்வளவு தூரம் இரண்டு பக்கமும் சாம்பல் சுவர் நழுவிக் கொண்டே செல்கின்றன. நான் போதமிழந்தேன். கண்விழித்த போது கீழே விழுந்து கிடந்தேன். எப்போது மயக்கமானேன். இன்னும் சாகவில்லையா? சிறிது நேரம் அப்படியே அரைமயக்கமாய் கிடந்தேன். மனதில் எனென்னவோ தோன்றி மறைந்தன. மனைவியின் பேச்சுக் குரல் கேட்கிறது. அவள் யோனியின் அலர்வாடை நினைவுக்கு வருகிறது. ஏதோ சினிமா பாடல் மனதி ஓடுகிறது. இவ்வளவு பிரச்சனையிலும் ஒரு சினிமா பாட்டை மனம் ரசிக்கிறதா என்ன? எழுந்து உட்கார். வேண்டாம் இப்படியே கிட. எழுந்திரு போக வேண்டும் மனம் நச்சரித்துக் கொண்டேயிருக்கிறது. பரவாயில்லை கிட என்று ஒரு நினைவு. சிறிது நேரம் கழித்து எழுந்து நடந்தேன் எந்த புறம் போவது. எங்கு போனால் என்ன? மனம் போன போக்கில் போ. ஆனால் இது தவறு. இது நிச்சயம் ஏதாவது ஒரு முறைமையில்தான் அமைக்கப்பட்டிருக்கும். முறையாக பயணம் செய். மீண்டும் கத்தினேன். உதவி...உதவி.. ....... ........ பதில் குரலில்லை. உதவி...உதவி.. கத்திக்கொண்டே ஓடினேன். ஓடிக் கொண்டே கத்தினேன். போதும் நில். கண்களில் நீர் திரள சாம்பல் சுவரையே பார்த்தேன். மனதில் வெறி பொங்க சுவரை ஓங்கி குத்தினேன். எட்டி உதைத்தேன். மறந்து தொலை...மறந்து தொலை சைத்தானே. அதன் மேலேயே சாய்ந்து அழுதபடி அமர்ந்தேன். சட்டென மனதை உதறிக் கொண்டேன். ச்சீ. எவ்வளவு நாடகத்தன்மையோடு நடந்து கொள்கிறோம். மீண்டும் எழுந்து நடந்தேன். எட்டி உதைத்ததில் கால் விரல்களில் நல்ல அடி வலி பிடுங்கியது. நடந்து கொண்டேயிருந்தேன். ஏதோ பேச்சு சப்தம் கேட்டது. நேரே சிறிது தூரம் நடந்து போனேன். இடது பக்க சந்தில் எட்டிப்பார்த்தேன். யாருமில்லை. சில அடி நடந்ததும் இரண்டு சன்னல்கள் எதிர் எதிர் சுவரில் இருந்தன. இரண்டு பெண் குரல்கள் இரண்டிலிமிருந்து மாறி மாறி கேட்டன. ஆனால் அது என்ன மொழி புரியவில்லை. இரண்டு சன்னலின் பின்புறம் இருந்தும் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள். யாரது? என்றேன். பேச்சு சத்தம் சிறிது நின்றது. அம்மா... உதவி செய்யுங்கள் நானிங்கு மாட்டிக்கொண்டேன். ஒரு பெண் ஏதோ பேசினாள். புரியவில்லை. என்ன சொன்னீர்கள். மீண்டும் அவள் ஏதோ சொன்னாள். அம்மா புரியவில்லை...புரியவில்லை என்று கத்தினேன். அவளும் வேகமாக ஏதோ கத்தினாள். எதிர் ஜன்னலில் இருந்து ஒரு சிரிப்பொலி கேட்டது. நான் கோபமாய் அதைப் பார்த்தேன். சிரித்தவள் ஏதோ சொன்னாள். பதிலுக்கு அவளும் சொன்னாள் அவர்கள் உரையாடிக் கொண்டேயிருந்தார்கள். நான் கத்திச் சோர்ந்தேன். அடச்சீ! இந்த வீடுகளுக்காவது கதவு இருக்குமா? எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அதைச் செயவதைத் தவிற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நெடுநேரம் சுற்றிய பின் முதல் வீட்டின் ஜன்னலுக்கே வந்து சேர்ந்தேன். சரி எதிர்புற சுவரைப் பார்க்கலாம். இது சற்று விரைவாகவே முடிந்து விட்டது. ஆனால் என்ன அதுவும் ஜன்னலுக்கே வந்து சேர்ந்தது. இரண்டாவது வீட்டை சுற்றி வந்த போது வேறொரு சுவரில் ஒரு ஜன்னலைப் பார்த்தேன். அங்கே போகலாமா? மீண்டும் அங்கே போய்க் கத்தினேன். நிசப்தமாய் இருந்தது இனி ஜன்னலை நம்பிப் பயனில்லை. நேரே ஓடிக் கொண்டேயிருக்கலாமா? எப்படியும் இறுதி வந்துதானேயாக வேண்டும். புத்திசாலித்தனம் என்ற நினைப்பில் நமக்கு தெரிந்ததை நாம் செய்துகொண்டிருக்கிறோம் அவ்வளவுதான் உண்மை எங்கோ உள்ளது. சிறிது தூரம் நடந்தேன் சிறிது தூரம் ஓடினேன். மீண்டும் ஒரு ஜன்னல் வந்தது. தட்டினேன். எதிர்புறம் இருந்து ஒரு சிறுமி பேசினாள். ‘மகளே! எனைக் காப்பாற்று’ அவள் என்னவோ பதிலிருத்தாள் ஆனால் என்ன மொழி இவள் என்னுடந்தான் பேசுகிறாளா? குழப்பமாய் எதிர்திசை பார்த்தேன். ஜன்னல் இல்லை. மீண்டும் கதவைத் தட்டினேன். அச்சிறுமி ஏதோ பேசினாள். எனக்குப் புரியவே இல்லை. நான் ஏதேதோ சொல்லிப் புரிய வைக்கப்பார்த்தேன். அவள் ஏதோ ஒரு சொல்லை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். என்ன வார்த்தையது புரியவில்லை என தன் மொழியில் சொல்கிறாளா? ஒருவேளை இங்கிருந்து தப்பிப்பதற்கான மந்திர சொல்லா? ச்சீ மந்திரமாவது தந்திரமாவது. அது ஏன் ஒரு மந்திரச் சொல்லாய் இருக்கக் கூடாது. நான் மீண்டும் மகளே! மகளே என்றேன் அந்தக் குழந்தை அந்த சொல்லையே திரும்ப திரும்ப சொன்னது. நானும் அந்த குழந்தை சொன்னதையே சொல்லிக் காட்டினேன் பதிலுக்கு அது வேறு என்னவோ சொன்னது. இது என்ன மந்திரத்தின் அடுத்த வரியா? ச்சீ குழந்தைக்கு என்ன மந்திரம் தெரியும் உளராதே. ஒரு வேளை மந்திரச் சொல்லாக இருந்தால் கூட அதைச் சொன்னால் என்னவாகும் என்று உறுதியாக தெரியுமா? இந்த புதிரிலிருந்து தப்பிப்போமா? சிக்கல் அதிகமாகுமா? என யாருக்குத் தெரியும். அமைதியாய் இரு. இந்த வீட்டிற்காவது கதவு இருக்குமா? குழந்தை பதில் பேசுகிறதே இருந்தாலும் இருக்கக் கூடும். சொற்ப நிமிடங்களிலேயே அந்த சதுரத்தை சுற்றி முடித்துவிட்டேன். ஆனால் என்ன இது அந்த ஜன்னலை காணவில்லையே! மறைந்து விட்டதா என்ன? இந்த சுவரில் தானேயிருந்தது. சுவரை நன்கு உற்றுப் பார்த்தேன். ஜன்னல் இருந்த இடமே தெரியவில்லை. பயத்தில் கை, கால் நடுங்கத் துவங்கியது. ஐயோ! எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது. பீதியில் உடல் குலுங்க ஓடினேன். கொஞ்சம் தொலைவில் நிலத்தில் ஏதோ கிடப்பது போல் தெரிந்தது. பக்கம் போய் பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்தேன். அது ஒரு எலும்புக் கூடு. ஒரு மனிதனின் முழு எலும்புக் கூடு. நான் ஓவென கத்திக் கொண்டே பதறி ஓடுகிறேன். பயத்திலும் களைப்பிலும் வேர்த்துக் கொட்டுகிறது. யார் எலும்புக் கூடு அது. என்னைப் போலவே இங்கு வந்து மாட்டிக் கொண்டவன் எலும்புக் கூடா அது? கடவுளே நான் என்ன செய்ய? இந்த பேய் சுழலின் ஏதாவது ஒரு மூலையில் நானும் இப்படித்தான் எலும்புக் கூடாய் கிடப்பேனா? அதை மீண்டும் போய் பார்க்கலாமா? வேண்டாம் அந்த கோரத்தை பார்ப்பது கடினம். அட இதென்ன சற்று தள்ளி சுவரில் ஏதோ எழுதியிருக்கிறதே. என்ன அது பக்கம் சென்று பார்த்தேன். தமிழ்தான் கல்லில் மறைந்தது மாமதயானை கல்லை மறைத்தது மாமதயானை இது திருமூலர் சூத்திரமல்லவா? இதை யார் இங்கு எழுதி வைத்திருபார்கள். இது ஏன் இங்கு எழுதப்பட்டிருக்கிறது? இதை எழுதியவன்/எழுதியவள் இருக்கிறார்களா? அல்லது அங்கு பார்த்த எலும்புக் கூட்டுக்குச் சொந்தக்காரன் எழுதினானா? தலைபாராமாய் இருந்தது. சோர்வில் தூக்கம் பீடித்தது. தூங்கு தூங்கு. தூக்கம் மட்டும்தான் இந்த நரகத்தை ஒத்திப்போடுவதற்கான ஒரே சாதனம். கண்விழித்தேன். வானம் இருட்டவேயில்லை. ஒருவேளை விடிய விடிய தூங்கி விட்டேனோ. அப்படியிருக்கமுடியாது. மேலே அண்ணாந்து பார்த்தேன். வானத்துண்டு தெரிந்தது வெளிச்சம் அப்படியேயிருந்தது. ஒருவேளை மேலே தெரிவது வானம் இல்லையோ? இந்த புதிர்பாதையின் கூரைதான் வானத்தைப் போல் தத்ரூபமாய் அமைக்கப்பட்டிருக்கிறதா? பறவைகள் பறக்கின்றனவே? கதவற்ற வீட்டில் மனிதர்கள் வாழும் போது வானமற்ற கூரையில் பறவைகள் பறக்காதா என்ன? சாம்பல் வண்ண சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பழங்கால கருங்கல் கட்டிடங்களைப் போல் பெரிய கற்களால் கட்டப்பட்டிருந்தது. இதென்ன? ஒவ்வொரு கல்லிலும் ஓவியாமா? கிறுக்கலா? வரிசையாக எல்லா கற்களிலிலும் இருக்கிறதே. நன்கு உற்றுப் பார்த்தேன் கோட்டோவியம்தான். வரிசையாக ஒரு கதைபோல் நீண்டு செல்லும் கோட்டோவியங்கள். மனம் பரபரத்தது என்ன கதை இது? எங்கிருந்து துவங்குகிறது? எங்கு முடிகிறது? இந்த வரிசை சுவர்களில் மட்டும்தான் இருக்கிறதா? அங்கெல்லாம் பார்த்தது போல் நினைவில்லையே. குழப்பமாக இருந்தது. ஒருவேளை இந்த ஓவியங்களை கவனித்தால் இங்கிருந்து தப்பிப்பதைப் பற்றிய சமிக்ஞை கிடைக்கக்கூடுமோ? எதற்கும் கொஞ்ச தூரம் சென்று பார்க்கலாம். கோட்டோவியங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஒன்றும் புரியவில்லை. இடமிருந்து வலமாக செல்கிறதா? அல்லது வலமிருந்து இடமா? சரி இந்தக் கதையின் துவக்கத்தை கண்டுபிடிப்பதும் சுவரின் துவக்கத்தை கண்டு பிடிப்பதும் வேறு வேறு அல்ல. பாதியிலிருந்தே துவங்குவோம் ஏதாவது புரிகிறதா பார்க்கலாம். கதைதான். ஒரு மனிதனின் கதை, ஒரு சமூகத்தின் கதைகயாகவும் பல சமூகங்களின் கதைகளாகவும் ஒரே மனிதனின் பல கதைகளாகவும் ஒரே சமூகத்தின் பல கதைகளாகவும். காலத்தின் கதையாகவும், காலத்தின் கதைகளாகவும் விரிந்து கொண்டே போகும் கதையை தன்னிலை மறந்து வாசித்துக் கொண்டிருந்தேன். காலம், வெளி, இருப்பு எல்லாம் மறந்து கதையின் சுழலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். முடிவு..முடிவு..முடிவு.. எனக் கெஞ்சக் கெஞ்ச கதை நீண்டு கொண்டேயிருக்கிறது. திடிரென ஒரு கல் மட்டும் பெயர்ந்து எனை துரத்துகிறது. நான் கதையை படிக்க வேண்டும் நான் கதையை படிக்க வேண்டும் எனை விட்டு விடு எனக் கதறிக் கொண்டே ஓடிப்போய் ஒரு சந்தில் திரும்புகிறேன். நான் கடந்து வந்த சுவர் மறைகிறது. நான் ஓட ஓட ஒவ்வொரு சுவராய் மறைந்து கொண்டேயிருக்கிறது. சுவர்களே மறையாதீர்கள் மறையாதீர்கள் எனக் கதறிக் கொண்டே ஓடுகிறேன். ஏதோ தடுக்கி விட பாய்ந்து விழுகிறேன். மீண்டும் கண்விழித்த போது பெரிய வெளி சூன்யமாய் வியாபித்திருக்கிறது எனைச் சுற்றி. நன்றி: உயிர் எழுத்து

6 comments:

 1. மனப்பிறழ்வு, நசிவு, தோற்ற மயக்கம், அதீத புனைவு என்ற தளங்களில் இயங்கும் இந்த கதை, வாழ்வைப் பற்றிய ஒரு ஆதாரமான கேள்வியை முன் வைக்கிறது. வாழ்த்துக்கள் இளங்கோ. திருமூலர் வாசகத்தைப் பயன்படுத்தியிருந்தது இளங்கோவின் பிரதியென காட்டிக் கொடுக்கிறது. இளங்கோவின் கவிதைகள் போலவே தத்துவ டச்.

  ReplyDelete
 2. உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால், 'கதையின் சுழலில் தத்தளித்துக்கொண்டிருந்தேன்'கொஞ்சநேரம்...

  ReplyDelete
 3. good. climax thattaiyaga ullathu. but good attempt.

  ReplyDelete
 4. மிகச்சிறந்த எழுத்து. கதையின் வழியாக வாழ்வின் அடிப்படையை தேடிச்செல்லும் ஆழமான தேடல் மனம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். (உயிரெழுத்தில் வெளியான உங்களது நுண்கதைகளும் நன்றாக இருந்தன) வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. இன்னும் கொஞ்சம் செரிவான மொழியில், தத்துவர்த்தமான மொழிதலோடு வெளிப்பட்டிருப்பின் இது இன்னும் நல்ல கதையாக இருந்திருக்கும்.கவிஞரும், சிறுகதை ஆசிரியருமான இளங்கோ விற்கு வாழ்த்துக்கள்.லீனா, தழிழ்நதி, அனானி, அரூபன் ஆகியோருக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. முழுக்கதையுமே கவிதை தரும் பரவசத்தைத் தந்தது, இக்கதையின் எந்த ஒரு வரியும் நேரடி அர்த்தத்தை மீறி அதன் பொருள் பல தளங்களில் இந்தப் புதிர்ப்பாதைகள் போல் விரிந்து கொண்டேயிருந்தது. கதவுகளற்ற சன்னல் மட்டும் உள்ள சுவர்கள், வானம் போல் தத்ரூபமாய் அமைக்கப்பட்டிருக்கிறதோ என தோன்றும் வானவிளிம்பு வரை தொடும் புதிர்ப்பாதை சுவர்களின் மேற்கூரை, உதவிக்கான குரல் என எதிரொளி நோக்கி ஓடும் ஓட்டம், மனதின் பல அறிவுறுத்தல்கள், முடிவு தொடக்கம் தெரியாது எங்கிருந்தோ வாசிக்க ஆரம்பிக்கும் சுவரில் எழுதப்பட்டிருக்கும் கதை, சுழல் புதிர், ஆளரவமற்று தனித்து மீளமுடியாது தவிக்கும் தவிப்பு, இன்னும் irony ஆக இவற்றிலிருந்து இதுவரை மீளத்தவிப்பவன் சுவர் கதை படிப்பதில் ஸ்வாரஸ்யமாகி சுவர்களே மறையாதீர்கள் என கதறுவது, என இக்காட்சிகள் படிமங்களாக மாறி எனக்குள் பலப்பல காட்சிகளை உற்பத்தி செய்த வண்ணமிருக்கிறது. மனதின் பேயாட்டங்கள் பெண்டுலமாய் எதிரெதிர் திசைகளில் அலைவுறும் எண்ணங்கள் மிகமிக தத்ரூபமாய் பிரதியாக்கப்பட்டிருக்கிறது. ஆழமான அனுபவங்களை கிளர்த்திக் கொண்டேயிருக்கிறது

  ReplyDelete