Friday, January 29, 2010

என் இரண்டு கவிதைகள்

எங்கள் ஆறு எங்களுக்கும் ஒர் ஆறுண்டு வெறுமணல் பரப்பாய் விரிந்து கிடக்க ஒணான்கள் முட்டையிட கள்ளிகள் பிழைத்திருக்க பிள்ளைகள் விளையாட பெண்டுகள் ஒதுங்கிட பன்றிகள் மேய்ந்திருக்க வானத்தில் மேகமுண்டு சூரியனில் மழையுண்டு காகமோ குருவியோ நிழல் ஒதுங்க ஆறெங்கும் முள் மரமுண்டு எங்களுக்கும் ஒர் ஆறுண்டு ஆற்றுக்கோர் ஊருண்டு ஊருக்கோர் சனமுண்டு வாழ்வைப் போல் ஒன்றுண்டு குளம் நெற்றிப்பொட்டில் நினைவு நிறுத்தி நெஞ்சுக்குள் நிலவு வளர்க்கும் குளத்தின் ஆழத்தில் ஒயாது சலம்புகிறது ஒரே ஒரு மீன் பெளர்ணமியில் நீந்தும் வெறியில் பாய்ந்து ஒரு கணம் வானத்தில் நீச்சல் சரிந்து மறுகணம் நீருக்குள் பறத்தல் என ஒரு நொடியும் ஒயாத சலனம் தளும்பலில் கரையேறி கரையேறி திரும்பும் குளம் நீரெங்கும் சிதறி நிலவு-முகம் சேர்வதற்குள் மீண்டும் ஒரு பாய்தல் மீண்டும் ஒரு சரிதல்
நன்றி: 'உயிர்மை' இதழ்

Sunday, January 24, 2010

குறள் – ஓர் உரையாடல்

ஒரு முறை சேலத்தில் தங்கியிருந்த போது ஒரு இளம் கவிஞரிடம் திருக்குறள் நீதி நூலா? கவிதை நூலா? எனக் கேட்டேன் அவர் சற்றும் யோசிக்காமல் நீதி நூல் என்றார். நான் அவரிடம் “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்... “ என்ற குறளை குறிப்பிட்டு அதில் உள்ளது கவிதையில்லையா அந்த அறச்சீற்றம் கவிஞனுக்கானது இல்லையா என்றேன் அவர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். ஏதேனும் ஒன்றிரண்டு பாடல்களில் கவிதைத்தன்மை இருக்க கூடும் மற்றபடி ஒட்டு மொத்தமாக அது கவிதை நூல் எனக் கூறுவது கடினம் என்றார். வேறொரு சந்தர்ப்பத்தில் மகாகவிகள் பற்றி கோவை ஞானியிடம் உரையாடிக்கொண்டிருந்த போது அவரும் திருக்குறள் பற்றி இதைப்போலவே ஒரு கருத்து சொன்னார். கடந்த பதினைந்து ஆண்டுகளில் நான் திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கும் செவ்வியல் நூல்களில் திருக்குறள் பிரதானமானது. என்னுடைய இருபதாவது வயதில் நானும் திருக்குறள் ஒரு கவிதை நூல் அல்ல என்றே நம்பினேன். திருக்குறள் பற்றிய இந்த உரையாடல் காலகாலமாக தமிழ் சூழலில் நடந்து வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு குறளிலும் ஒரு கருத்து கூறப்படுவதுதான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. நவீன கவிதையியல் கருத்தாக மட்டுமே சொல்லப்படும் எதையும் கவிதை இல்லை என்றே பெரும்பாலும் வாதிடுகிறது. அதற்கு முன்வைக்கப்படும் தர்கங்களும் கூட நியாமானதே. கவிதை என்பது ஒரு போதும் அறிவார்ந்த ஒரு கூற்றை மேல்மனதிலிருந்து கூறுவதாக இருக்க முடியாது. ஒரு நல்ல கவிதையானது உணர்வுபூர்வமாக கதறுவதே அன்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு பிரசங்கம் அல்ல. அப்படியானால் கவிதையில் கருத்து சொல்லப்பட கூடாதா எனில் சொல்லப்படலாம் அதுவும் உணர்வுபூர்வமான ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டுமே அன்றியும் போதமனதின் சொல்லாக அல்ல. அடிப்படையில் எல்லா விஷயங்களையும் ஒரு தகவலாக ஒரு செய்தியாக அறிவார்த்தமான ஒரு நடவடிக்கை வழியாகவே சேகரித்துக் கொள்கிறோம். பின்பு மெல்ல எண்ணற்ற காரணங்களால் அந்த தகவல் அல்லது செய்தியானது உணர்வு பூர்வமாக மாறுகிறது. உதாரணம்: அம்மா, மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களை பற்றிய நம் மனப்பதிவுகளை சொல்லலாம். நமக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் மரணம் ஒரு செய்தியாகவே கிரகிக்கப்படுகிறது. பின்பு அவர்களைப்பற்றிய நினைவுகள் அவரது மரணத்தை பற்றிய அறிவார்த்தமான செய்தியால் தூண்டப்பட்டு உணர்வுப்பூர்வமாக நாம் மாறி விடுகிறோம். கவிதை என்பது உணர்வுபூர்வமாக நாம் மாறும் தருணத்தில் நிகழ்கிற ஒரு சமாச்சாரம் எனவே உணர்வுபூர்வமாக மாறிவிட்ட செய்தியின் அளவிற்கே ஒரு கருத்து அதில் நிற்க முடியும். ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம்’ என்கிறார் வள்ளுவர். இந்த குறளில் வள்ளுவர் கூற வந்தது என்ன ஏரின் பெருமையைதானே. ஆனால் இதில் ஒரு தகவலை நமக்கு சொல்லி விடுகிறார். உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை சொல்லி விடுகிறார். உண்மையில் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பது வாசிப்பு அல்லது கேட்டல் வழியாக ஒரு தகவலாகவே வள்ளுவரிடத்து வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஏரின் பெருமையை சொல்ல நேர்ந்த போது உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது எதன் பின் என்றால் ஏரின் பின் என்கிறார். ஒரு தகவல் ஒரு கவிதையில் இப்படித்தான் கவிஞனின் பிரக்ஞை இல்லாமல் வந்து சேரவேண்டும். திருக்குறள் என்ற நூலில் உள்ள எல்லா வெண்பாக்களுமே இப்படியான பிரக்ஞையின் அனுமதியற்ற கருத்துகளாகவே இருக்க ஏலும். அல்லது ஒரு கருத்தைப்பற்றிய உணர்வுபூர்வமான நிலைப்பாடுகளாக இருக்க கூடும். தன்னுள் தளும்பித் தத்தளிக்கும் கோடான கோடி கருத்தியல்களின் நீண்ட போரட்டமே திருக்குறள். ஒரு பல்லாக்கு போகிறது ஒருவன் அமர்ந்து செல்கிறான். நால்வர் தூக்கிச் செல்கிறார்கள். வள்ளுவனுக்கு மனம் பதைக்கிறது. இது பாவம் என்கிறான். இதெல்லாம் ஏன் என்று எண்ணுகிறான். இது அவர்கள் விதி, வினைப்பயன் என்று தர்க்கம் சொல்கிறது. என்ன விதியென்றாலும் மனிதர் நோக மனிதர் சுகிப்பதோ என மறுகுகிறான். காரண காரியங்களை புரிந்து கொள்ள முயன்று தோற்கிறான். அறம் எதுவென தவிக்கிறான். இதுதான் அறம் என சொல்ல நான் யார் நான் இதுதான் அறம் என ஒன்றை சொல்ல இறுதி உண்மை வேறொன்றாக இருந்தால் என்ன செய்வதென தயங்குகிறான். இனம் புரியாத குற்ற உணர்வில் “அறத்தாறு இதுவென வேண்டா” என தன் மனதிற்கு சொல்கிறான். இதை கவிதை இல்லை என நாம் சொல்ல முடியுமா? தத்துவமோ கலையோ கொதி நிலையில் செயல்படுகிற போது மனித மனம் ஒன்று போன்ற அனுபவத்தையே உணர்கிறது. தனித்தனி உடல்செல்களாக பிரிவதற்கு முன் அனைத்தும் ஸ்டெம் செல்களாக இருப்பது போலவே அறிவு உணர்வென பிரிவதற்கு முன் அனைத்து அனுபவங்களும் ஒன்றாக இருக்கிறது போலும். இப்படியான ஒரு மையப்புள்ளியில் இருந்து கிளம்பியே குறள் போன்ற படைப்புகள் வெளிப்படக்கூடும் என நம்புகிறேன். அனைத்து மத நூல்களும் கவிதைக்கு நெருக்கமான உரையாடல் மொழி கொண்டிருப்பதையும் இதனோடு இணைத்து நாம் யோசிக்கலாம்.
உலக இலக்கிய வரலாற்றில் இப்படி தத்துவங்களின் தர்கங்களுக்கும் கவிதைக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மேதைகள் நிறைய உள்ளனர் வள்ளுவர் முதல் நீட்ஷே வரை. யாருக்கு எப்படியோ நான் அவர்களை கவிஞன் என்றே அழைப்பேன்.