Tuesday, August 24, 2010

ஒரு நுண்கதை - கனவாட்டம்

ஃப்யூனஸ் அயர்ஸில் மந்திரவாதி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் மார்டின் சார்க்கோ. ஒருநாள் அவனைக் காண போர்ஹே சென்றிருந்தார். அவன் வீட்டில் தங்கிய போது அன்றிரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில், ஒரு வீட்டின் கண்ணாடி சுவற்றின் அருகே அமர்ந்தவாறு புலியைப் பற்றிய கதை ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. எதேச்சையாய் தெருவைப் பார்த்த போது யாருமற்ற வீதிகளில் புலி ஒன்று தனித்து அலைந்து கொண்டிருந்தது. புலியை தொடர்ந்தவாறு கருப்பு நிற உடையணிந்து அந்த மந்திரவாதி சென்று கொண்டிருந்தான். அவனின் கையில் உள்ள மந்திர கோலின் ஒவ்வொரு சொடுக்குக்கும் புலியின் உடலில் இருந்த ஒவ்வொரு வரியாக மறைந்து கொண்டு வந்தது. புலியின் கடைசி வரியும் மறைந்து அது வெறும் மஞ்சள் நிறத்திற்கு மாறிய போது மழை நின்று வெயில் காய்ந்து கொடிருந்தது. புலி அந்த வெயிலின் மஞ்சளுக்குள் நுழைந்து மறைந்தது. அந்த மந்திரவாதி தன் கருப்பு உடையுடன் இரவை நோக்கி நடக்கத் துவங்கினான். ஃப்யூனஸ் அயர்ஸில் மந்திரவாதி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் மார்டின் சார்க்கோ. ஒரு நாள் அவனைக் காண போர்ஹே சென்றிருந்தார். அவன் வீட்டில் அவர் தங்கிய போது அன்றிரவு சார்க்கோவுக்கு ஒரு கனவு வந்தது. நகரெங்கும் மழை கொட்டிக் கொண்டிருந்த போது அவனுக்கு வெயில் தேவைப்பட்டது. வெயிலின் மஞ்சளும் சீற்றமும் தீட்சண்யமும் எங்கு கிடைக்கும் என அவன் வீதியெங்கும் அலைந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டின் கண்ணாடி சுவருக்கு உட்புறம் போர்ஹே அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். வெயில் அவரின் பேனா நுனியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அந்தப் புலியை வீதிக்குள் வரவைத்தான். ஃப்யூனஸ் அயர்ஸின் கனவில் புலி ஒன்று வாழ்ந்து வந்தது. கனவின் விசித்திர புதிர்பாதைகளுக்குள் அலைந்த கொண்டிருந்த அது. வாழ்விலிருந்து கனவுக்குள் நுழைவதைப் போல். கனவிலிருந்து வாழ்வுக்குள் நுழைவதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தது. அப்போது போர்ஹே கண்ணாடி சுவருக்குள் அமர்ந்து எதையே எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டது. அவர் ஒரு புலியின் கனவைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய புலியின் கனவில் அது வாழ்விலிருந்து கனவுக்கு வருவதை பற்றி ஏங்கிக் கொண்டிருந்தது. வாழ்விலிருந்து கனவுக்கு வரும் வழியில் போர்ஹே அதை அனுப்பி வைத்தார். அந்த வழியாகவே இந்தப் புலி கனவிலிருந்து வாழ்வுக்கு வந்தது. போர்ஹேவின் பேனா நுனியில் ஒரு வெயிலென ஒளிர்ந்து கொண்டிருந்தது.

Monday, August 16, 2010

என் பழைய கவிதைகள் இரண்டு

கடல் விளையாட்டு 

நெடுநேரம் கடலில் விளையாடிய சிறுவன் 
கடலை வீட்டிற்கு கொண்டு செல்ல விரும்பினான் 
பிளாஸ்டிக்காகிதத்தில் 
கொஞ்சம் அடைத்துக் கொண்டு போனான் 
அலையும் 
 ஒசையும் 
 மணலும் 
நீலமும் 
விகாசிப்புமற்ற 
அந்தக்கடலில் உப்பு மட்டும் இருந்தது 
வெறும் உப்பு மட்டும் 


---



வேடன் 

கவை நிறைய அம்பிருந்தும் ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன் அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது செம்பூத்துப் பறவை ஒன்றை பார்த்தான்.பகலெல்லாம் அவன் விரட்டிய போதும் கிளை கிளையாய்த் தாவி மறைந்த அதனை தேடியவாறு காடெங்கும் அலைந்தான். வெறுங்காற்றில் புரண்டு படுக்க சரசரக்கும் சருகுகளுக்கிடையே தாழம்பூ வாசம் மிளிர நெளியும் நச்சரவங்கள் நிறைந்த மூங்கில் காட்டுக்குள் அவன் நுழைந்த போது வானில் முழுநிலவு வந்துவிட்டிருந்தது. அவன் விரட்டிய அப்பறவை நிலவில் அமர்ந்திருக்க கண்டவன் தன் வில்லில் நாணேற்றி ஒரு அம்பை எய்து விட்டு காத்திருக்கத் துவங்கினான். அந்த அம்போ அவனை ஏமாற்றிவிட்டு வெளியின் திக்கற்றத் திக்கில் பறந்து கொண்டிருக்கிறது ஒரு செம்பூத்தே போலும்.

Friday, June 18, 2010

மூன்று இந்தியக் கவிதைகள்

இந்த மூன்று கவிதைகளும் The Oxford Anthology of Modern Indian Poetry எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இந்நூலின் தொகுப்பாசிரியர்கள்: வினய் தார்வட்கெர் மற்றும் ஏ.கே.ராமானுஜம். 


அமல்கண்டி 
அமல்கண்டி என் நண்பன் 
பள்ளியில் என்னுடன் படித்தவன் 
அடிக்கடி பள்ளிக்குத் தாமதமாகவே வருவான் 
பாடங்களைக் கவனிக்க மாட்டான் 
வினைச்சொற்களை வேறுபடுத்தச் சொன்ன போது 
அவன் ஜன்னலுக்கு வெளியே 
வெறித்துக்கொண்டிருந்தான் புதிர்மையோடு 
எங்களில் சிலர் ஆசிரியராக விரும்பினோம் 
சிலர் மருத்துவராக, 
சிலர் வழக்குரைஞராக 
அமல்கண்டி இது எதுவாகவும் விரும்பவில்லை 
அவன் சூரிய ஒளியாக விரும்பினான் 
மழை நின்றதும் 
பின்மதியங்களில் 
காகங்களின் அழைப்பு கேட்டு 
நாவல்மர இலைகளில் 
ஒரு புன்னகை போல் வருகிற 
சூரிய ஒளியாக 
எங்களில் சிலர் ஆசிரியரானோம் 
சிலர் மருத்துவராக, 
சிலர் வழக்குரைஞராக 
அமல்கண்டி சூரிய ஒளியாகவில்லை 
மோசமான வெளிச்சமுள்ள அறையில் 
ஒரு அச்சுக் கோர்ப்பவனாக ஆனான் 
அடிக்கடி என்னைச் சந்திப்பான் 
ஒரு தேநீர் முடியும் வரை 
அதையும் இதையும் பேசுவான் 
பிறகு கிளம்பிச் செல்வான் 
நான் கதவருகே நின்று கவனிப்பேன் 
அவன் சென்று மறைவதை 
எங்களில் ஆசிரியராக விரும்பிய ஒருவன் 
மருத்துவரானான் 
மருத்துவராக விரும்பியவன் 
வழக்குரைஞரானான் 
அது ஒன்றும் அவ்வளவு மோசமில்லை 
அனைவருமே ஏறத்தாழ 
நாங்கள் விரும்பியபடி ஆனோம் 
 அமல்கண்டியைத் தவிர 
அவன் எப்போதும் 
சூரிய ஒளியையே நினைத்துக்கொண்டிருந்தான் 
அவன் சூரிய ஒளியாக விரும்பினான் 

- வங்காள மூலம் : நிரேந்திரநாத் சக்ரவர்த்தி ஆங்கிலத்தில்: சுஜித் முகர்ஜி & மீனாட்சி முகர்ஜி 



---
பரம்பரை 
என் பாட்டி ஒரு பைத்தியம் 
அவளின் உன்மத்தம் 
மரணத்திற்குக் கனிந்தது 
என் மாமா ஒரு கஞ்சன் 
அவளை முறியறையில்* 
அடைத்து வைக்கோலால் மூடி வைத்தான் 
என் பாட்டி உலர்ந்து வெடித்தாள் 
அவள் விதைகள் 
ஜன்னலுக்கு வெளியேத் தெறித்தன 
சூரியன் வந்தது, மழையும் வந்தது 
ஒரு விதை மரமானது 
அதன் காமம் என்னுள் துளைத்தது 
 கவிதை எழுத உனக்குச் சொல்லித்தரட்டுமா 
தங்கப்பற்களுடைய குரங்குகளைப் பற்றி? 

மலையாள மூலம்: கே.சச்சிதானந்தன் 
குறிப்பு: *முறியறை : ஸ்டோர் ரூம், பயனற்ற பொருட்களை வைத்திருக்கும் அறை. 

----

அரிப்பு 
எனக்கு முதல் அரிப்பு 
வலது முழங்கால் மடிப்பில் வந்தது 
கடைசி அரிப்பு 
இடது முழங்காலுக்குக் கீழே 
நாம் சொறிவோமா மக்களே 
நாம் சொறிவோமா .
சிலர் சொல்கிறார்கள் 
இந்த உலகம் ஒரு புனித அரிப்பில் வந்ததென 
சிலர் சொல்கிறார்கள் கடவுளே 
 ஒரு அரிப்பில் பிறந்தவரென 
வாதாடிகள் எனக்கு தெரிந்ததெல்லாம் 
அரிப்பை சொறிதலின் சுகம் மட்டுமே 
மற்றதெல்லாம் 
வெறும் கற்பனைகளாகவே இருக்கக்கூடும் 
இது மட்டுமே நித்யமான உண்மை 

  - மலையாள மூலம் – கே.அய்யப்ப பணிக்கர்

Monday, June 14, 2010

3 கவிதைகள்

இன்றை எதிர்கொள்ளல் சிறுகல் ஒன்றை எடுத்து பூமியை வீசுவது போல் வீசினேன் இன்றிலிருந்து இன்றின்மைக்கு அது இன்றில் விழுந்து இன்றில் உருண்டு இன்றில் நின்றது அவ்வளவு உருண்டும் ஒரு இலையும் உதிர்ந்திருக்கவில்லை இன்றிலிருந்து கோபத்தில் கத்தினேன் இன்றைவிட்டு வெளியேறுமாறு ஓங்கிமிதித்தேன் நெருஞ்சியாய் குத்தியது இன்றின் சூரியன் விரல் தொட்டு கடலை இழுத்து வந்து ஊருக்குள் விட்டேன் வெற்றுப்பள்ளங்களுக்கே பாய்ந்து கொண்டது மீண்டும் சிறு துளைகளில் ஒளிந்திருக்கும் இருளை ஊதி ஊதி இரவை கொண்டு வந்தேன் நிமிர்வதற்குள் விடிந்து கொண்டது இன்று மனம் சோர்ந்து அதனிடம் மன்றாடத் துவங்கினேன் கதியற்று அதன் பெருங்கைகளில் ஒப்புத்தந்தேன் எனை எல்லாம் முடிந்தது என் பிணத்தை பொறுக்கிக் கொண்டேன் கல்லை தூக்கி எறிந்தேன் விடுதலை பெற்று எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது ஒரு இரவல் காதல் கதை இந்த வானத்தில் ஒரு நிலவுண்டு பாதிநாள் வளர்வதும் பாதிநாள் தேய்வதுமாய் தன் பைத்தியத்தில் அலைகளுக்குப் பேய் பிடிக்கச் செய்யும் இந்த ஊரில் ஒரு அக்கக்கா குருவியுண்டு அக்கூ அக்கூ எனக் கதறி காகத்தையும் உறவு சொல்லி ஏமாந்து புலம்பும் இந்த நிலத்தில் ஒரு மரம் உண்டு கூடடையும் பறவைக்கு தன் சதை பறித்து கனி திரட்டி யாருமற்ற நேரத்தில் பாம்பிற்கு முட்டை தரும் இந்த நெஞ்சில் ஒரு முத்தமுண்டு நிகழ்ந்த கணத்தின் பரவசத்தில் மலர்ந்த பூக்களின் நறுமணத்தை கனவில் எண்ணி நீருலர்ந்த உதடுகளை வருடிக்கொள்ளும் ஒரு இரவல் காதல் கதை 2 என் காப்பிக் செடிகளின் வசந்தங்களை நீ எடுத்துக் கொள்வாய் எனில் காதலற்ற வாழ்வில் கருத்திடுவேன் உள்நாவில் ஒரு கசப்பென என் பாலைகளின் மழையை நீ எடுத்துக்கொள்வாய் எனில் செல்வமற்ற வாழ்வில் இளைத்திடுவேன் நிலமெங்கும் நகரும் உடலற்ற வேனல்குளமென என் காளான்களின் வெயிலை நீ எடுத்துக்கொள்வாய் எனில் சுகமற்ற வாழ்வில் வெளுத்திருப்பேன் அற்ப காலத்தில் வெளியேறுபவன் என என் ஊமத்தைகளின் பனியை நீ எடுத்துக்கொள்வாய் எனில் அறிவற்ற வாழ்வில் நஞ்சியிருப்பேன் மலங்காடுகளில் தன்னந்தனியனென

Sunday, June 6, 2010

’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம்

தேய்பிறை இரவுகளின் கதை – கீரனூர் ஜாகிர் ராஜாவின் ’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம் எதார்த்தவாத நாவல்கள் ஒரு பார்வை தமிழில் நாவல் என்ற கலைவடிவம் தோன்றி ஒன்றேகால் நூற்றாண்டுகள் கடந்து விட்டதாக நாம் பேசிக் கொண்டாலும் நாவல் என்பது குறித்து பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறைகளின் படி பார்க்கும் போது க.நா.சுவினுடைய “பொய்த்தேவு” நாவலையே நாம் தமிழின் முதல் செவ்வியல் நாவல் எனக் கொள்ளமுடியும். இது நடந்தது 1940களுக்குப்பிறகு இந்த காலகட்டமானது மேற்கில் நவீன நாவல்களின் காலமாக மாறத்துவங்கியிருந்த காலம் ஆகும். சுமார் 200 ஆண்டுகாலம் நாவல் வடிவத்தில் இயங்கி தன்னியல்பாக நவீன நாவல்களுக்குள் மேற்குலகம் சென்றிருந்த சூழலில்தான் நம்முடைய முதல் செவ்வியல் நாவல் எழுதப்பட்டது. உண்மையில் அதுவும் கூட ஒருவகை எதார்த்தவாத நாவல் என்றே கொள்ளமுடியும். செவ்வியல் நாவல் என்பதும் எதார்த்தவாத நாவல் என்பதும் வேறு வேறு அல்ல என்பதைப்போன்ற கருத்தியல் ஒன்று தமிழ்ச்சூழலில் உண்டு. ஒரு மேலோட்டமான பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் இரண்டும் வேறு வேறே. எவ்வாறு நவீன நாவல் என்பது செவ்வியல் நாவலில் இருந்து பிரிந்து போன கலைவடிவமோ. அப்படியே எதார்த்தவாத நாவல் என்பதும் செவ்வியல் நாவலில் இருந்து மலர்ந்த ஒரு வடிவமே. வடிவமைப்பிலும் மொழிதலிலும் எதார்த்தவாத நாவல்களுக்கும் செவ்வியல் நாவல்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஆனால் ஆன்மாவில் இரண்டும் வேறு பட்டன. ஒரு செவ்வியல் நாவல் என்பதன் இயங்குதளமானது ஒப்பீட்டளவில் எதார்த்தவாத நாவலை விடவும் விரிந்தது. உலக அளவில் மிக பரந்தபட்ட செவ்வியல் நாவல் வடிவங்களை உருவாகியதில் ரஷ்ய இலக்கியக்கங்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி, தாமஸ் மன், விக்டர் ஹீயூகோ போன்ற பெயர்களை நாம் இன்றளவும் பேசக்காரணம் அவர்கள் படைப்புகளில் இயங்கும் செவ்வியல்வாத பண்பே. அவர்கள் நாவல் என்பதை ஒட்டுமொத்த வாழ்வினுடைய சாரம் என்பதாக பார்த்தார்கள். தங்கள் படைப்புகளின் வழியாக வாழ்வை மொத்தமாக அள்ள முயன்றவர்கள் செவ்வியல் நாவல்காரகள் எனலாம். மாறாக எதார்த்தவாத நாவல்களோ அந்த எல்லையிலிருந்த சற்று குறுகியதாகவே இருந்தது. குறிப்பாக ரஷ்ய எதார்த்தவாத நாவல்கள். மார்க்சிய அழகியல் என்ற கோட்பாடு பின் நாட்களில் எதார்த்தவாத நாவல்களின் எல்லையை மேலும் சுருக்கி நாவல் என்பது மார்க்சிய கோட்பாடுகளை கதைகளனில் நிறுத்தி நிகழும் எல்லா விஷயங்களுக்கும் வார்க்க சாயல் பூச முயன்றது. இந்த வகை நாவல்களானது செவ்வியல் நாவல்களிலிருந்து மேலும் சுருங்கிய எல்லைகளை கொண்டதாகவே இருந்தது. நாவல் வரலாறு என்பது மொழிக்கு மொழி வேறானதே என்பதை சொல்லத்தேவை இல்லை. ஆனால் பொதுவாக இந்திய மொழிகளின் துவக்கால நாவல்களுக்கு ரஷ்ய நாவல்கள் பெரும் ஆதர்சமாக இருந்தது. க.நா.சு வைத் தவிற துவக்ககால தமிழ் நாவலாசிரியர்கள் ரஷ்ய நாவல்களின் தாக்கம் கொண்டவர்களே. குறிப்பாக ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றவர்களைச் சொல்லலாம். இந்த போக்கானது தமிழில் நாவல் என்ற வடிவத்தை எதார்த்தவாத நாவல் என்ற வடிவமாக ஊன்றச் செய்தது. இவ்வாறாக செவ்வியல் நாவல் என்ற வடிவத்தில் போதிய பரிச்சயம் நிகழாமலேயே நாம் எதார்த்தவாத நாவல்களை எழுதத் துவங்கினோம். அதுவும் குறிப்பாக ரஷ்ய வகை எதார்த்தவாத நாவல்களை எழுதத்துங்கினோம். எதார்த்தவாத நாவல்கள் ஒரு மொழியில் தொடர்ந்து வினையாற்றும் போது ஏற்படுகிற முக்கியமான விளைவுகளில் ஒன்று. அவைகள் அம்மொழியின் நாட்டார் கலை வடிவங்களில் இருந்து தனக்கான சாரத்தை எடுத்து கொள்கிற முறைமை ஆகும். தமிழில் அது கதை சொல்லி மரபை கிரகித்துக் கொண்டது முக்கியமான அம்சம் எனலாம். கி.ராஜநாரயணன், சண்முக சுந்தரம், பூமணி, நாஞ்சில் நாடன் முதல் இமையம், அ.முத்துலிங்கம், மேலாண்மை பொன்னுச்சாமி, ஜாகிர்ராஜா வரை எண்ணற்ற உதாரணங்கள் இதற்கு உண்டு. மேற்குறிப்பிட்ட பட்டியல் முழுமையானது அல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை. முன்னர் சொன்னது போல் செவ்வியல் நாவல் மரபு ஆழமாக ஊன்றாமல் எதார்த்தவாத நாவல்களுக்குள் நாம் ஈடுபட்டதென்பது சில சிக்கல்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து எதார்த்தவாத நாவல்களிலிருந்து நவீன நாவல்களை நாம் உருவாக்க முற்பட்டது சூழலை மேலும் சிக்கலாக்கியது. அவற்றில் பிரதானமானது என்னவெனில் எதார்த்தவாத நாவல்காரகள் எளிய கதை சொல்லிகளாக குறுகிக் கொண்டதுதான். இந்த நூலின் முன்னுரையில் எதார்த்தவாத நாவல்கள் என்றாலே நவீன நாவல்காரகளுக்கு இளக்காரம்தான் என்பதை போன்ற சொற்களை நாஞ்சில் நாடன் எழுதுவதற்கு இதுவே காரணம். நவீன நாவல்காரன் நாட்டார் மரபோடோ, எதார்த்தவாத மரபோடோ எந்த தொடர்பும் அற்றவன். அவன் செவ்வியல் நாவல்களின் வடிவப்போதமை மற்றும் கருத்தியல் போதமைகளின் வழி தனக்கான அழகியலை உருவாக்கிக் கொண்டவன் என்பதை போன்ற சூழல் ஒன்று நிகழ்ந்ததுவே இப்படி ஒரு உரையாடலுக்கான காரணம் என நாம் அவதானிக்கலாம். மேலும் கதைசொல்லி என்பவன் எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் அல்ல என்பதை போன்ற கருத்தியல் ஒன்றும் நமது சூழலில் நிலவுகிறது. இதற்கும் இந்த அடிப்படை கோளாறே காரணம் என நாம் கருத வேண்டியிருக்கிறது. நவீன நாவலின் பிதாமகன்கள் எனக் கருதப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், மிலரோட் பாவிச், ஓரான் பாமுக் போன்றவர்கள் தங்களை ஒரு கதை சொல்லி எனக் கூறிக் கொள்வதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும். பின் நவீன காலத்தின் செல்வாக்கு மிக்க கருத்தியல்களில் ஒன்று வேர்களை தேடிப்போதல் என்பதாகும். மேலும் நவீன கால கருத்தியல்களை மறுப்பது என்பதும் அதன் பண்புகளில் ஒன்று. அந்த வகையில் நம் சமகாலத்திய நாவலாசிரியன் ஒருவன் தன்னை கதைசொல்லி எனக் கூறிக்கொள்வதில் எந்த ஆச்சர்யமும் கிடையாதுதான். ஆனால் எழுத்தாளனையும் கதைசொல்லியையும் சமமாக பாவிக்கும் பண்பு ஒன்று மேற்கூறியவர்களிடம் காணப்படுவதையும் நாம் கவனிக்கவேண்டும். இந்த எழுத்தாளன் என்பவன் செவ்வியல் நாவலாசிரியனின் தொகுத்துக்கூறும் பண்பை பெற்றிருப்பவன். ஆனால் எதையும் நிறுவி விட முயலாத பின் நவீன மனம் உடையவன். நம்முடைய சமகால எழுத்தாளர்களிடம் அரிதாக காணப்படும் இந்த பண்பே இந்த பரஸ்பர பிளவுக்கு காரணமாக இருக்க கூடும். துருக்கித் தொப்பி ஒரு விமர்சகனின் வேலை நாவலின் கதைச்சுருக்கத்தை சொல்வதல்ல உண்மையில் நாவல் என்பதும் வெறும் கதை மட்டுமல்ல. துருக்கித் தொப்பி எல்லா அசாதாரண நாவல்களையும் போலவே சீரழிவைப் பேசும் நாவல். வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் துயரமான கதை. கே.பி.ஷே என்ற துருக்கித் தொப்பிக்காரர் குடும்பம் ஒன்று எப்படி வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்கி வக்கற்று போனது என்பதைப் பேசும் கதை. கே.பி.ஷே குடும்பம் என்கிற ஒரு குறியீட்டின் வழியாக எண்ணற்ற நவீன இஸ்லாமிய குடும்ப வாழ்வை, இன்னும் சொல்லப்போனால் தமிழ் வாழ்வை அவர்களின் உணர்வுகளை பேசும் நாவல். மிகவும் கட்டுக்கோப்போடும் ரசனையோடும் வலியோடும் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். இறுதியில் நிறமிழந்து போன துருக்கித் தொப்பி ஒன்று வேம்பின் கிளைகளில் ஆடும் சித்திரத்தை நாவலாசிரியர் நம் கண்முன் விரித்துக் காட்டும் போது நாம் மனம் பொங்கி போகிறோம். கனத்த மனதுடன் நாம் நன்றாக வாழ்ந்த காலத்தின் நாஸ்டால்ஜியாவுக்குள் மூழ்குகிறோம். கே.பி.ஷேவின் மனைவியான பட்டாமாளுக்கு தான் எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்காரி என்பதிலும் ஆட்டுகரி சாப்பிடும் மேலான இனம் என்பதிலும் பெருமை அதிகம். தன் மருமகள் மேற்கு தெருவை சார்ந்தவளென்றும் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் என்றும் இளக்காரம் பேசுகிறாள். நாவல் முழுவதும் வேறு வேறு சந்தர்பங்களில் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மிக நுட்பமாக பதிவு செய்யப்படுகிறது. தன் மருமகள் அயலான் ஒருவனோடு தன் வீட்டிற்குள் பேசிக்கொண்டிருப்பதைக் கூட அனர்த்தமாகவே பார்க்கிறாள் பட்டம்மாள். உண்மையில் பட்டாமாள் இந்த சமூகத்தின் சராசரி மனிதர்களில் ஒருத்தி என்று பார்க்கும் போது இச்சமூகம் பெண் உடல் மீதான கண்காணிப்புக்கு எவ்வளவு முக்கியதுவம் தருகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம்முடைய பண்பாடு கலாச்சாரம் என்பதெல்லாம் பெண் உடலை மையமாக வைத்தள்ளவா வரையறுக்கப்பட்டிருக்கிறது. மருமகள் பேரனுக்கு பால் கொடுப்பதை மறைந்து நின்று பார்க்கும் கே.பி.ஷே, தன்னை விட இளைய ரகமத்துல்லாவை யாருமற்ற போது முத்தமிடும் மல்லிகா, குளிக்கும், உடைமாற்றும் தாயை ரசிக்கும் ரகமத்துல்லா, கணவன் ஊரில் இல்லை எனத் தெரிந்து கொண்டு நூர்ஜகானிடம் பேச்சு வளர்க்கும் ரூபன், அதை அனுமதிக்கும் நூர்ஜகான். என காமம் பற்றிய நுட்பமான காட்சிப்படுத்தல்கள் நாவல் முழுதும் உள்ளது. இது குறித்து இன்னும் கூட விரிவாக ஜாகிர் எழுதியிருக்கலாம் என்று படுகிறது. ரகமத்துல்லாவின் வழியாக குழந்தைகளின் உளவியல் அழகாக பதிவாகிறது. தன் தாய் தன் மீது அன்பு செலுத்தாமல் போனதற்கு தன் தம்பீதான் காரணம் என நினைத்து ஒரு செங்கல்லை தம்பியென பாவித்து வன்மம் வளர்ப்பது. அந்த தம்பி காணமல் போய்விட்ட போது தன் மீது சந்தேகப்படும் அம்மாவை நினைத்து மனம் வெம்புவது என ரகமதுல்லாவின் உணர்வுகள் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் உளவியல், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை நுட்பமான மானுட உணர்வுகளின் வழியாக மிகுந்த வலியோடு பேசுகிறார் ஜாகிர் ராஜா. இந்த நாவலில் பயன்படுத்த பட்டிருக்கும் வட்டார மொழி இந்நாவலின் ஆகப்பெரிய பலம் எனலாம். நாவலோடு சேர்ந்து தமிழகத்தின் அரசியல் வரலாறு பேசப்படுகிறது. சுதந்திர காலம் துவங்கி தி.மு.க அதிகாரத்தை கைப்பற்றுவது வரையான அக்கட்சியின் வளர்ச்சி முகமும் தீவிர தி.மு.க காரனான அத்தாவுல்லா குடும்பம் நன்றாக வாழ்வதில் துவங்கி பிழைப்பு தேடி அவன் எங்கோ போவது வரை அவன் குடும்பத்தின் இறங்கு முகமும். எதிர் முரண்களாக கட்டமைந்து எதையோ உணர்த்த முயல்கின்றன. இதில் காட்டப்படும் உலகம் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் புதிது. இதில் சொல்லப்படும் தகவல்கள் வெகுமக்கள் நம்பிக்கைகள், பழமொழிகள், சொலவடைகள் போன்றவைகள் தமிழ் இலக்கியம் உலகம் இது வரை அறியாதது. அன்னமுகம்மதுவ பழிக்காதடா எனச் சொல்வது, பிறைபார்த்ததும் மனதுக்கு பிடித்தமானவரை பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை மாட்டுக்கறியை பெரியாட்டுக் கறி என்பது போன்றவற்றை உதரணமாக சொல்லலாம். ‘Novel is an art of data’ என மார்க்வெஸ் சொல்வதை இங்கு நான் நினைத்துக் கொள்கிறேன். அப்படிப் பார்க்கும் போது எண்ணற்ற நுட்பமான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் ஒரு சமூக ஆவணம் என நாம் இந்த நாவலை தாரளமாக சொல்ல முடியும். துருக்கித் தொப்பி எனும் நாவல் ஓர் உரையாடல் இந்த நாவல் மூன்று விதங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைசொல்லி கதையை சொல்வது போலவும் எழுத்தாளன் விவரிப்பது போலவும் கதாபாத்திரங்கள் தங்கள் மன உணர்வுகளை பேசுவது போலவுமாக மூன்று முனைகளில் இக்கதைகளின் சம்பவங்கள் மாறி மாறி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டமைப்பு நாவலுக்கு ஒரு சரளத்தன்மையை வழங்கியிருக்கிறது. எந்த ஒரு முறை வாசிப்பில் தொய்வு ஏற்படுத்த துவங்குகிறதோ அந்த முறை கைவிடப்பட்டு வேறொரு முறை கையாளப்படுவதன் மூலம் நாவல் தன்னை வேகமாக முன்னகர்த்திக் கொண்டே போகிறது. தன் முன்னுரையில் நாஞ்சில் நாடன் ஜாகிர் ஏன் இவ்வளவு சுருக்கமாக எழுதுகிறார் என ஆதங்கப்பட்டிருப்பதோடு எனக்கும் உடன்பாடு உண்டு. என்னுடைய இரண்டாம் வாசிப்பில் மிக விரிவாக எழுத வேண்டிய இடங்களை கூட சுருக்கமாக எழுதுகிறாரே என ஆதங்கத்தோடேயே வாசித்தேன். ஒவ்வொரு கலைவடிவத்திலும் உள்ள அடிப்படையான சிக்கல் என்பது அதில் மெளனத்தை எங்கு ஒளித்து வைப்பது என்பதுதான். இசையில் ஒவ்வொரு துடிப்புக்கும் அதாவது ஒவ்வொரு பல்ஸ்கும் இடையில் அதன் மெளனம் உள்ளது. கவிதையில் மெளனம் என்பது சொற்களின் இடையில் உள்ளது. சிறுகதையில் கதை முடிந்ததும் உள்ளது உண்மையில் நவீன சிறுகதைகளில் மெளனம் சொற்களின் இடையேயும் உள்ளது. அப்படிப்பார்க்கும் போது நாவல்களில் மெளனம் இரண்டு அத்தியாங்களுக்கான இடைவெளியில் அல்லது இரண்டு சம்பவத்துணுக்குகளுக்கான இடைவெளியில் உள்ளது எனலாம். மெளனத்தை கட்டமைப்பதிலும் காலத்தை தரிசனப்படுத்துவதிலும் வெற்றியடைந்த நாவல்களே மிகச்சிற்ந்த நாவல்களாக உள்ளன. துருக்கித் தொப்பி நாவலின் பலவீனமான பகுதி ஏதாவது இருக்குமானால் அது மெளனத்தை கட்டமைப்பதில் ஏற்பட்டிருக்கும் சிறு சரிவே ஆகும். ஏற்கனவே சொல்லி விட்டதை மீண்டும் சொல்வதை போன்ற நினைவுதரும் சொற்றொடர்கள். போதிய இடைவெளியின்றியும், அளவுக்கதிகமான இடைவெளிகளோடும் கோர்க்கப்பட்டிருக்கும் சம்பவக் கோர்வைகள் போன்றவை ஒரு தேர்ந்த வாசகனுக்கு சலிப்பு தருபவை. ஆனால் கதையை சில இடங்களில் முன்னுக்கு பின்னாக மாற்றி மாற்றி சொல்வதன் மூலம் தான் சொல்லவந்த காலத்தை மிகச் சரியாக தரிசனப்படுத்தி நாவலின் மையமான உணர்ச்சியை வாசக மனதில் அழுத்தமாக பதிய வைத்ததன் மூலம் நாவல் வெறும் சம்பவக் கோர்வையாக மாறிப்போகிற ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறது எனலாம். ஜாகிர்ராஜா எனும் கதைசொல்லி கி.ராஜநாரயனனை ஒரு கதைசொல்லி எனச் சொல்ல நமக்கு எந்த தயக்கமும் கிடையாது. அதுபோலவே சுந்தரராமசாமியை ஒரு எழுத்தாளர் என்று நாம் துணிந்து கூறலாம். ஆனால் ஜாகிர்ராஜாவை கதைசொல்லி என்றோ எழுத்தாளர் என்றோ எளிய சட்டகங்களுக்குள் அடக்கி விட முடியாது. இது அவரின் மிக முக்கியமான பலம் மற்றும் பலவீனம் எனலாம். உண்மையில் ஜாகிருக்கும் முந்தைய தலைமுறையை சேர்ந்த எதார்த்தவாத நாவலாசிரியர்கள் பலருக்கும் இந்த எடுகோள் பொருந்தும். ஆனால் எந்த ஒரு நாவலாசிரியனுக்குள்ளும் கதைசொல்லி, எழுத்தாளன் என்கிற இரண்டு ஆளுமைகளில் யாரேனும் ஒருவரே அழுத்தம் பெற்று இருக்க முடியும். அப்படிப் பார்க்கும் போது ஜாகிரை நாம் கதைசொல்லி என்றே கொள்ளமுடியும். துருக்கி தொப்பி நாவலை விடவும் முதலிரண்டு நாவல்களை பார்த்தால் இது உண்மை எனப்புரியும். ஆனால் அப்படியான எளிய தர்க்கப்படுத்தல்களுக்கெல்லாம் அடங்காத வீச்சு அவரின் எழுத்துகளுக்கு உண்டு என்பதற்கு துருக்கி தொப்பி நாவலே சாட்சி. இந்த நாவலில் எழுத்தாளனும் கதைசொல்லியும் நுட்பமாக இணைந்தும் முரண்பட்டும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டும் ஒரு அழகான நாவலை உருவாக்கிகாட்டியிருக்கிறார்கள். இந்த நாவலின் முன்னுரையில் இந்த நாவல் என்னுடைய முதல் இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டது என அவர் கூறுவதற்கு வடிவமைப்பில் செய்திருக்கும் இந்த மாற்றமே காரணம். ஜாகிர் ராஜா கதை சொல்லும் போது நாம் அந்த சொல்லலின் அழகில் மயங்கி அதை பின் தொடர்கிறோம். ஒரு கதை சொல்லிக்கு சொல்லப்படுவதின் முக்கியத்தை போலவே சொல்லும் முறையும் முக்கியமானது அல்லவா. எட்டுகல் பதிச்ச வீட்டின் அத்தாவுல்லா நூர்ஜஹான் திருமணம் பற்றி சொல்லும் விதமே மிக சிறந்த உதாரணம். அவ்வளவு ரசித்து ஒரு கதையை சொல்லிச்செல்ல சொல்லின் ருசியறிந்த ஒரு மனதாலேயே முடியும். ஆனால் அவரின் முதலிரண்டு நாவல்களோடு ஒப்பிடும் போது இதில் ஜாகிர் என்கிற கதை சொல்லியை அல்லது அவரது ஆளுமையை சற்று குறைவாகவே காண நேர்கிறது. உண்மையில் இதை நான் ஒரு சரிவாக பார்க்கவில்லை மாறாக மிக சரியான ஒரு ஆரோக்கியமான பயணமாகவே பார்க்கிறேன். ஒரு கதை சொல்லியாக இருந்து கொண்டு ஜாகிர்ராஜாவின் அளவிற்கு எழுத்தாள ஆளுமையை வளர்த்துக் கொண்டவர்கள் நாஞ்சில் நாடன், இமையம் போன்ற ஒரு சிலரே. ஜாகிர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்வேன். ஜாகிர்ராஜா எனும் ஓர் எழுத்தாளன் மேற்கின் நாவல் ரசனை மரபில் ஒரு நாவல் எப்படி துவங்கப்படுகிறது அல்லது எப்படி முடிகிறது என்பதை சிலாகித்து பேசும் வழக்கம் உண்டு. மகிழ்ச்சியான குடும்பங்களின் கதை ஒன்று போலவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியற்ற குடும்பங்களின் கதை ஒவ்வொன்றும் வேறு வேறு எனத் துவங்கும் அன்னாகரினீனாவின் துவக்கமும், நாளை மற்றுமொரு நாளே என முடியும் கான் வித் தி விண்ட் நாவலின் முடிவும். காலங்களில் அதுவே மிகச்சிறந்ததாக இருந்தது, காலங்களில் அதுவே மோசமாக இருந்தது என துவங்கும் டேல் ஆப் டூ சிட்டிஸ் நாவலின் துவக்கமும் ரசனை மரபை சேர்ந்த விமர்சகர்களால் இன்றும் கொண்டாடப்படுவது. நல்ல முறையில் துவங்கப்பட்ட ஒரு நாவலானது வாசகனை காந்தம் போல் உள் இழுக்கும் தன்மை கொண்டது. நல்ல முறையில் ஒரு நாவலை துவங்குவதற்கு ஒரு நாவலாசிரியன் வெறும் கதை சொல்லியாய் இருந்தால் போதாது அவன் ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும். ‘எட்டுகல் பதிச்ச வீட்டுக்கு குட்டி லெவை மகள் நூர்ஜஹான் பேகம் வாக்கப்பட்டு வந்த நாளில் தலைவாசலில் நின்றிருந்த வேம்புகள் இரண்டும் பூப்பூக்கத் துவங்கியிருந்தன’ என கச்சிதமாக, அழகாக துவங்குகிறது இந்நாவல். முதல் அத்தியாயத்தின் முதல் வரியில் பூப்பூக்க துவங்கிய அந்த வேப்பமரத்தில் ஒன்று இறுதி அத்தியாயத்தில் உதிரும் இலை கூட்டிப்பெருக்க மாட்டாமல் வெட்டி எறியப்படுகிறது. இந்த இரண்டு காட்சிகளும் நாவலின் மையத்திற்கு அழகான குறியீடாக மாறுகின்றன. அது போலவே நாவலின் துவக்கபகுதியில் கம்பீரமாக தொப்பி மாட்டியில் காட்டப்படும் துருக்கித்தொப்பி இறுதி பகுதியில் நிறம் வெளுத்து நைந்து இளைய வேம்பின் கிளைகளில் ஆடிக்கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. இது போன்ற அம்சங்களே ஜாகிரை ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற்றுகிறது. தான் உணர்ந்த சமூகம் சார்ந்த சிக்கல்களை, உறவுச்சிக்கல்களை வலிந்து திணிப்பதாக தெரியாமல் கதையின் போக்கில் நிகழ்வுகளின் போக்கில் வாசகனாக வந்தடையும் படி செய்திருப்பது இன்னொரு உதாரணம். ஜாகிர்ராஜா எனும் ஆளுமை எழுத்தின் எந்த வடிவத்தை சேர்ந்த கலைஞனாக இருந்தாலும் ஒரு ஆளுமையாக அவன் மலர வேண்டும். ஆளுமையாக மலர்தல் என்பது இலக்கிய பொது புத்தியால் அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளை தொடர்ந்து வழங்குதல் அல்ல. அது, ஒரு கலைஞன் தனது தொடர்ந்த தேடல்கள் வழியாக வாழ்வு பற்றிய தனது அவதானங்கள் தரிசனங்கள் தர்க்கங்கள் ஆகியவற்றை தன் மொழிக்குள் கொண்டுவருவதன் மூலம் அம் மொழியின் ஒட்டு மொத்த மானுட அறிவை மேம்படுத்துவது அல்லது விரிவுபடுத்துவது ஆகும். ஜாகிர்ராஜாவிடம் ஒரு ஆளுமைக்கான எல்லா பண்புகளும் உண்டு. இப்படிச் சொல்வதால் அவர் அனைத்தையும் சாதித்துவிட்டார் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் முன்பே சொன்னது போல எழுத்தாளனையும் கதை சொல்லியையும் சரியான விகிதத்தில் இணைக்கிற ஆளுமைத்திறன் அவரிடம் உண்டு. தொப்பம்பட்டி புளியம்பட்டித் தங்கமணலில் முளைத்த வேகவைத்த சுவைமிக்க பிஞ்சுக் கத்திரிக்காயும் நீலகிரிப் பனியில் தோண்டியெடுத்த உருளைக்கிழங்கும் சண்முக நதித்தீரத்தில் சொந்த தோப்பில் பறித்த நாட்டு மாங்காயும் மனுஷாளின் உயரத்துக்கு போட்டியாக வளர்ந்த சதைப்பற்றுள்ள முருங்கைகளுடன் குறும்பாட்டுக் கறியும் மசாலாக் குழுமமும் இணைத்துச் செய்கிற ஊர்குழம்பென்றால் அத்தனை இஷ்டம் பட்டமாளுக்கு என்ற வரிகளில் மேற்சொன்ன அந்த சரியான சேர்மானத்தை நாம் பார்க்கலாம். இந்த அசாதாரண சேர்மானமே மார்க்வெஸ் எனும் கலைஞனைத் தந்தது. பாமுக் எனும் ரஸவாதியை தந்தது. உலகின் மிகச்சிறந்த கதைசொல்லி என பாவிச்சை பெருமையடையச் செய்தது. இறுதியாக சொல்வதெனின், சில போதமைகள் இருந்தாலும் துருக்கித் தொப்பி ஒரு நல்ல நாவல். அதை விட முக்கியமான விஷயம் ஜாகிர்ராஜா துருக்கி தொப்பியை விட மிகச்சிறந்த நாவல்களை எல்லாம் எழுதும் அளவுக்கு ஆளுமை நிறைந்தவர். இதற்கு இவரது முதலிரண்டு நாவல்களுக்கும் இந்த நாவலுக்கு உள்ள வித்யாசமே சாட்சி. முன்னுரைத்த நாஞ்சில் நாடனை போலவே நாமும் இவரிடம் இருந்து நிறைய எதிர்ப்பார்ப்போம். நாம் குறித்து கொண்டுள்ளதை விட அதிகமாகவே ஜாகிர் செய்வார் என நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி: லும்பினி.இன்

Tuesday, May 25, 2010

மதமும் விஞ்ஞானமும் - ஐன்ஸ்டின்

(இந்தக் கட்டுரை ஐன்ஸ்டினால் 1930ல் எழுதப்பட்டு நியூயார்க் டைம்ஸ் வார இதழில் வெளிவந்தது. 1954 ல் ஐண்டினின் கருத்துக்கள் என்ற நூலில் மீண்டும் வெளியிடப்பட்டது. 2008ல் சிறந்த விஞ்ஞானிகள் சிறந்த எழுத்துக்கள் என்று ரிச்சர்டு ட்வாக்கின்ஸ் என்ற உயிரியல் விஞ்ஞானி தொகுத்த நூலில் இடம் பெற்றுள்ளது) ஆன்மீக இயக்கத்தையும் அதன் வளர்ச்சியையும் ஒருவர் புரிந்து கொள்ள விரும்பினால் மனித குலம் எதனைச் செய்தாலும் எதனைச் சிந்தித்தாலும் அவைகள் அனைத்தும் ஆழமாக உணர்கிற தேவைகளை நிறைவேற்றி திருப்தி பெறவும், வலியைப் போக்கி சுகத்தைப் பெறவும்தான் என்பதனை நிரந்தரமாக மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். மானுட படைப்புகளும் முயற்சிகளும் மனதைக் கிளர்ச்சியுறச் செய்தாலும் உணர்வுகள், ஆதங்கங்கள் ( Feeling and Longing) என்ற இரண்டுமே அந்த மானுட முயற்சிகளையும் படைப்புகளையும் உருவாக்குகிற உந்து சக்தியாகும். இப்போது கேள்வி என்னவெனில் மதச்சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அதனுடைய பரந்த பொருளில் எந்த உணர்வினால் அல்லது தேவையினால் மானுடம் கண்டது? சற்று யோசித்தாலே மதச்சிந்தனைகளும் அனுபவங்களும் பிறக்க பலவிதமான மன உணர்வுகளே காரணம் என்பது தெரியும். ஆதிகால மனிதனிடம் எல்லாவற்றிற்கும் மேலாக பயமே மத உணர்வுகளைத் தூண்டியது. பசி, காட்டுமிருகங்கள், நோய், மரணம் இவைகளினால் ஏற்படும் பயம் ஆதிகால மத உணர்வுகளுக்கு பிராதான காரணம். இந்த பயம் ஏனெனில் அன்றைய காலக்கட்டத்தில் மானுட சமூகத்திற்கு காரண காரியங்கள் பற்றிய ஞானம் சரிவர வளராமையே ஆகும். ஆதிகால மானுடன் துவக்கத்தில் உயிருடன் இருப்பதற்கான காரணத் தொடர்புகளை புரிகிற அளவிற்கு மன வளர்ச்சி பெறாத நிலையில் பசி, பயங்கர மிருகங்கள், மரணம் இவைகள் பற்றிய பயமே எல்லாவற்றிற்கும் மேலாக மத எண்ணங்களை தூண்டியிருக்கிறது. அந்தக் கட்டத்தில் மானுட மனம் சற்றேறக்குறைய தன்னை போன்ற ஒன்றை கற்பிதம் செய்திருக்கிறது. அதனுடைய விருப்பத்தினாலும், ஆற்றாலலும் இந்த பயங்கர நிகழ்வுகள் நடப்பதாக கருதியிருக்கிறது. சடங்குகள், பலிகள் இவைகளைச் செய்து அவைகளிடமிருந்து சலுகைகள் பெற முயற்சித்திருக்கின்றனர். அழிவுறாத அந்த சக்தியை திருப்திபடுத்தவும் சலுகைகள் பெறவும் எடுக்கும் இம் முயற்சிகள் பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கேற்ப பண்பாடுகள் தோறும் இருந்திருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது பயத்தினால் உருவாகும் மதத்தைப் பற்றியே. இங்கு மதம் என்ற ஒன்று உருவாகவில்லை என்றாலும் பூசாரி சாதி உருவாகி நிலைக்க இது முதல் படியாக இருந்திருக்கிறது. எதைக் கண்டு பயந்தனரோ அதற்கும் இவர்களுக்குமிடையே சமரசம் செய்பவர்களாகி வழி நடத்தும் நிலையை அந்த பூசாரி சாதி உருவாக்கிக் கொண்டது. பல சமூகங்களில் வேறு காரணிகளால் தலைவராகவோ ஆளுபவராகவோ அல்லது சலுகைகளை அனுபவிக்கும் ஆளும் வர்கமாக ஆனவர்கள் இகலோக நடவடிக்கைகளோடு இந்த பூசாரிக் கடமையையும் இணைத்து தங்களது பதவியை உறுதிப்படுத்தி வைத்திருபதைக் காணமுடியும். அந்த வகையில் ஆட்சியாளர்களும் பூசாரிசாதியும் தங்கள் நலன்களை காக்க இணைந்திருப்பதைக் காண முடியும். மதம் திரள இன்னொரு முகாந்திரமும் சமூக நிர்பந்தமாகும். தாய், தந்தை, பெரிய சமுகத்தலைவர்கல் எல்லோருமே தடுமாறுபவர்கள், மரணம் அடைபவர்களே. வழிகாட்டவும் அன்பு செலுத்தவும் ஆதரவு நல்கவும் ஒருவர் தேவை என்ற ஆதங்கம் அல்லது தார்மீக அடிப்படை கடவுள் பற்றிய கருத்துருவத்திற்கு மற்றொரு காரணியாகிறது. இந்தக் கடவுள் பரிவுகாட்டுபவர் தகுதிக்கேற்ப தண்டிக்கவும் பரிசு வழங்கவும் செய்பவர். நம்புகிறவர்களின் கண்ணோட்டத்திற்கேற்ப ஆற்றலுள்ள இந்தக் கடவுள் அவர்கள் குலத்தை அல்லது மனித ராசியை நேசிப்பவராகவும், பாதுகாப்பவராகவும் இருக்கிறார். உயிரையும் காப்பவராக, ஆறுதல் கூறுபவராக, நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுபவராக, இறந்தவர்களின் ஆன்மாவை போஷிப்பவராக இருக்கிறார். இது சமூக அல்லது தார்மீக அடிப்படையில் கடவுள் பற்றி உருவாகும் கருத்தாகும். மனித குலம் கடவுள் பற்றிய கோட்பாட்டிற்கு பய அடிப்படையிலிருந்து தார்மீக அடிப்படைக்கு வளர்ந்ததை வியக்கதக்க வகையில் விளக்குதாக இருக்கிறது யூத வேதம் உள்ளது. இந்த மாற்றம் புதிய ஏற்பாடு எனும் வேதத்திலும் தொடர்வதைக் காணமுடிகிறது. நாகரீகமடைந்த எல்லா மக்களின் குறிப்பாக கீழ் திசை மதங்கள் தார்மீக அடிப்படைகளை கொண்டவைகளே. மதங்கள் பய அடிப்படையிலிருந்து தார்மீக அடிப்படைக்கு வந்தது என்பது மக்களின் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றமாகும். இருந்தாலும் ஆதிகால மதங்கள் முழுவதும் பய அடிப்படையிலும் நாகரிகமடைந்த மதங்கள் சுத்தமான தார்மீக அடிப்படையிலும் இருப்பதாக ஒருதலைப்பட்சமான முடிவிற்கு வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உண்மையில் எல்லா மதங்களும் இவ்விரண்டின் கலவையாக இருக்கின்றன. இந்த வேறுபாட்டுடன் சமூக வாழ்வின் உயர் மட்டங்களில் தார்மீக அடிப்படையிலான மதமே மேலாதிக்கத்தில் உள்ளது. எல்லா வகையான மதங்களிலும் கடவுளின் அம்சங்கள் மானுட சாயலுடன் இருப்பது என்பது பொது அம்சமாகும். பொதுவாக சிறப்பாக உயர்ந்த மனப்பக்குவம் கொண்ட சமுகப்பிரிவில் உள்ள தனி நபர்களே இந்த உணர்வை தாண்டி உயர முடியும். ஆனால் மத உணர்வில் மூன்றாம் கட்டமாக ஒன்றை நான் கருதுவது உண்டு அது அபூர்வமாக சுத்தமான வடிவில் சிலரிடம் இருக்கும், அதனை நான் காஸ்மிக் ஆன்மீக உணர்வு (Cosmic Religious Feeling) என்று அழைக்கிறேன். இது கடவுள் பற்றிய மானுட சாயல் இல்லாத உணர்வாக இருப்பதால் முழுமையாக இந்த உணர்வு இல்லாதவர்களிடம் இதைப்பற்றி விளக்குவது கடினம். சிந்தனை உலகிலும் இயற்கையிலும் வெளிப்படுகிற விந்தைகளை உணர ஒருவனால் இயலாது போவதை அவன் உணர்கிறான். தனது வாழ்வு சிறைபடுத்தப்பட்டிருப்பதாக கருதுகிறான். அண்ட சராசரங்கள் அனைத்தையும் முழுமையாக கண்டு அனுபவிக்க விரும்புகிறான். இந்த காஸ்மிக் ஆன்மீக உணர்வானது மதங்கள் தோன்றியபோதே தோன்றிவிட்டது. இதற்கு டேவிடின் கூற்றுகள் இன்னும் சில ஞானிகளின் கருத்துக்கள் போன்றவற்றை உதாரணமாக கூறலாம். எல்லாக் காலக்கட்டத்திலும் மதத்தின் தன்மைகளில் இந்த வகையான சமய உணர்வுகள் தெளிவாக இருந்திருக்கிறது. இந்த உணர்வுகள் மானுடத் தோற்றத்தில் கடவுள் என்றோ வேதங்கள் என்றோ அறியவில்லை. அதனால் தேவாலயங்கள் அமைத்து அதன் மூலம் மையப்படுத்தப்பட்ட போதனைகள் என்று எதுவும் இருக்கவில்லை. எனவே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மத எதிர்ப்பாளர்களே இத்தகைய மேன்மையான சமய உணர்வுடன் இருந்தனர். அவர்கள் காலத்தில் அவர்கள் நாத்திகர்கள் என்றே கருதப்பட்டனர். சில சமயங்களில் ஞானிகளாகவும் கருதப்பட்டனர். இந்த வெளிச்சத்தில் டெமாகிரிட்டஸ், அசிசியின் பிரான்சிஸ், ஸ்பினோசா ஆகியோரைப் ஒன்று போலவே உணர்ந்தவர்கள் எனலாம். கடவுளைப்பற்றிய கருத்தும் இல்லாத வேதங்களும் இல்லாத காஸ்மிக் ஆன்மீக உணர்வை எப்படி பிறரோடு பகிர முடியும். எனது கருத்து என்னவெனில் கலை, விஞ்ஞானம் ஆகிய இரண்டும் மக்களிடம் இந்த உணர்வை எழுப்புவதையும் உயிரோட்டமாக வைப்பதையும் முக்கிய கடமையாக கொள்ள வேண்டும். இந்த வகையில் மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வழக்கத்திற்கு மாறான ஒரு உறவைப்பற்றிய கோட்பாட்டிற்கு வருகிறோம். வரலாற்று ரீதியாக பார்க்கும் போது விஞ்ஞானமும் மதமும் தீர்க்க முடியாத பகைமை முரண்பாட்டில் இருப்பதை ஒருவர் காண்பர். காரணகாரிய நியதிகளை சந்தேகத்திற்கிடமில்லாமல் ஏற்கும் ஒருவர் யாரோ தலையிட்டுதான் இது நடக்கிறது என்ற கருத்தை ஒரு நிமிடம் கூட ஏற்கமாட்டார். அவருக்கு பய அடிப்படையிலான மதமோ தார்மீக அடிப்படையிலான மதமோ இரண்டுமே தேவையில்லை. நல்லதுக்கு வரமும் கெட்டதுக்கு தண்டனையும் தரும் ஒரு கடவுளை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. ஏனெனில் ஒரு மனிதனின் செயலைத் தீர்மானிப்பது உள்ளார்ந்தோ அல்லது புறக்காரணிகளாலோ ஏற்படும் கட்டாயத் தேவைகளே. ஆகையினால் விஞ்ஞானம் மத உணர்வை மழுங்கடிக்கிறது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு அநீதியானது ஆகும். ஒரு மனிதனது அற நடவடிக்கைள் பரிவு, கல்வி, சமூக பந்தம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது மத அடிப்படை இதற்கு தேவையில்லை. செத்த பிறகு கிடைக்கும் தண்டனை அல்லது பரிசு என்ற நம்பிக்கை ஒருவனை நெறிபடுத்தவேண்டும் என்பது உண்மையில் மானுடத்தை கேவலப்படுத்துவதாகும். எனவே ஏன் மடாலயங்கள் விஞ்ஞானத்தை எதிர்த்து சண்டையிட்டன விஞ்ஞானிகளை வேட்டையாடின என்பதைக் காண முடிகிறது. மறுபக்கம் காஸ்மிக் ஆன்மீக உணர்வே விஞ்ஞானத் தேடலுக்கு உன்னதமானதும் வலுவானதுமான உந்து சக்தியாக இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மிகுந்த முயற்சியும் ஈடுபாடுமில்லாமல் துவக்ககால விஞ்ஞானத்தை அடைந்திருக்க முடியாது எனப்தை யார் உணர்கிறார்களோ அவர்கள் மட்டுமே உடனடி லெளகீக வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் இயற்கையின் பிரமாண்ட எதார்தத்தைக் காணும் ஆதங்கத்தின் வலுவைப் புரிய முடியும். வானத்தில் உலாவும் ஜடப்பொருட்களின் இயக்க இயல் நியதிகளை விண்டுரைக்க நியூட்டனும் கெப்லரும் தனிமையில் உழைப்பை வருடகணக்கில் செலவழித்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப்பார்த்தால் இது புரியும். நடைமுறையில் பெறும் முடிவுகளை வைத்து விஞ்ஞான ஆராய்சி செய்பவர்கள் எளிதில் தவறான கருத்துகளுக்கு ஆட்படும் நிலை உள்ளது. அதிலும் அவர்களைச் சுற்றி விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கையற்ற உலகமிருக்கிறது. அதிலும் இந்த நம்பிக்கை கொண்டோர்களே உலகெங்கும் நூற்றாண்டுகளாக இருந்து வருகிறார்கள். எண்ணற்ற தோல்விகளைச் சந்தித்த பிறகும் விஞ்ஞானிகள் உறுதியுடனும் தனது நோக்கங்களில் விசுவாசத்தோடும் இருப்பதற்கு காரணம் எது என உணர முடியும். அந்த காஸ்மிக் ஆன்மீக உணர்வே ஒருவனுக்கு இந்த பலத்தை தருகிறது. இன்றைய பொருள்முதவாத காலத்தில் ஒரு விஞ்ஞான ஆய்வாளனே உண்மையான முழுமையான ஆன்மீகவாதியாக இருக்கிறான். நன்றி: ’ மார்க்சிஸ்ட் ’ மாத இதழ் – ஏப்ரல் 2010 மொழிபெயர்ப்பு: வே.மீனாட்சி சுந்தரம் (சில சொற்றொடர்கள் என் புரிதலுகேற்ப மாற்றப்பட்டுள்ளன)

Friday, May 14, 2010

நீலப்பூ - நுண்கதை

அவன் மனம் குறுகுறுக்கத்துவங்கி விட்டது. இனி ஒரு வரியில் கூட மனம் செலுத்த முடியாதென உணர்ந்தான். சலிப்பாய் புத்தகத்தை மூடிவிட்டு அந்த நீல விளக்கையே வெறித்தான். அது நீல முட்டை போல் இருந்தது. எழுந்து போய் குழல் விளக்கை அணைத்து விட்டு அதன் ஸ்விட்சை தட்டினான். அறை நீலத்தில் ததும்பியது. மனம் சற்று பரபரப்படைந்தது. கட்டிலில் அமர்ந்து தலையணையை விலக்கிப் பார்த்தான். கட்டில் கம்பியில் மலர்ந்திருந்தது அது. அந்த நீல இருளில் தனியொரு நீலமாய் பளீரென ஒளிர்ந்தது. கொசுவலைக் கம்பிகள் சொருகும் இரும்பு குழலுக்குள் இருந்து நீண்டிருந்தது. கட்டிலின் அடர் பச்சை வண்ணத்தில் இரும்பு கம்பிபோல குளிர்ச்சியாய் இருந்தது அதன் காம்பு. மெல்ல அந்தப் பூவை வருடினான். டேபிள் ரோஸ் போல, நீல வண்ணத்தில் ஒளிர்ந்தது. அதன் வாசனையை முகர்ந்தான். சோர்வாய் படுக்கையில் சரிந்தான். இப்போது அறையெங்கும் தாழையின் வாசமும் உடலின் வாசமும் கலந்த அந்தப் பூவின் மணம் பரவியிருப்பதாய் உண்ர்ந்தான். அது வெறும் பிரம்மையோ என்று மனம் ஒரு கணம் குழம்பியது. ஆனால் அந்த வாசம் அவன் நெஞ்சில் நிறைந்திருந்தது. இப்போது அது நீண்டு தோள்பட்டை கழுத்தின் வழியே நெஞ்சில் படரத் துவங்கியது. “என்னை விடவே மாட்டியா”? என பலகீனமாய் முனகினான். அது கேட்டுவிட்டது போல் நிமிர்ந்து அவனைப் பார்த்து நின்றது. அவன் திகைத்தான். அதை மீண்டும் நெஞ்சோடு படுக்க வைக்க முயன்றான். முடியவில்லை. பிறகு அதுவாகவேப் படுத்து அவன் முகம் நோக்கிப் படர்ந்து வந்தது. மெல்ல அந்தப் பூவைத் தொட்டான், இப்போது அதில் உடலுக்கே உண்டான துடிப்பு ஒன்றிருந்தது. விரல்களால் அதை அளைந்தான். அதன் மைய இதழ்களைப் பிரித்துப் பார்த்தான். கடுகளவு சிறு கண் ஒன்று. கண்ணா? விதையா? கண்தான். கண்களுக்கே உண்டான நீர்மை நிறைந்திருந்தது அதில். அந்தக் கண் அவனையேப் பார்ப்பது போல் இருந்தது. ஏனோ அவன் மனம் நெகிழ்ந்தது ”என்னடா இப்படி பார்க்கிறே”? என்றான். அது அவன் கழுத்தை சுற்றிக் கொண்டு கட்டிலின் கீழே இறங்கியது. அவன் கண்களை மூடிக்கொண்டான். மனம் பர பரவென முகங்களை தேடியது. காட்சிகளை தேடியது. அனைத்தும் மிக வறட்சியாய் செயற்கையாய் இருப்பதாய் பட்டது. அது கட்டிலின் எதிர்புறத்திலிருந்து மேலேறி உடலில் படரத் துவங்கியது. உடை நெகிழ அவன் வெறி கொண்டு அதைக் களிக்கத் துவங்கினான். ஒரு பேரலையால் இழுத்துச் செல்லப்படுவது போல் வசமிழந்தான். மனம் ஒடுங்கியது, சிதறியது, ஓர் அலை அவனை வானத்தில் தூக்கி எறிந்தது. அவன் வயிற்றில் படீரென வலி துடித்தது. உடல் வில்லாய் வளைந்து வானத்தில் பறந்தான். மிக உயரே போய் சரிந்து வேகமாய் கடலுக்குள் விழுந்தான். தண்ணீர் உடலில் ஊசியாய் அறைந்தது. சட்டென குளிர்ச்சி உடலில் பரவ அமிழ்ந்து கொண்டேயிருந்தான். ஆழ்கடலின் நிச்சலனத்தில் சிறு துடிப்பாய் கிடந்தான். வெம்மையான கையொன்று அவன் உடலெங்கும் வருடிக் கொண்டிருந்தது. கண்களைப் பிரிக்கலாமா வேண்டாமா எனக் குழம்பி கனவில் கண்களைப் பிரித்தான். மீனின் உதடுகளை போன்ற உதடொன்று அவனை முகந்து கொண்டிருந்தது. நீலமும் பச்சையும் கலந்த விசித்திரமான நிறத்தில் ஒளிரும் கண்கள், பரபரத்து கண் விழித்தான், நீரில் கூந்தல் அளைய பின்பாதி மீனாய் சென்று கொண்டிருந்தது ஒரு உடல். கடல் கொடிகள் அவன் உடலை முறுக்கின. அதன் நீலம் விசிதிரமாயிருந்தது. அக்வாமறைன்...அக்வாமறைன் என முனகினான்.. அவன் போதம் விழித்தது. அவனுடலில் எதுவோ நெளிந்து கொண்டிருந்தது. உடல் கசகசத்தது, அவன் தன்னை அருவருப்பாய் உணர்ந்தான். ஈரமும் வெப்பமுமாய் தன்னை கவ்வும் மர்ம நாவுகளை உதறிட முயன்றான். சட்டென அந்த உடலை தூக்கி எறிந்தான். மெல்ல சுணங்கி அது மீண்டும் படரத் துவங்கியது. அவனுக்கு எரிச்சலாயிருந்தது. “என்னை கொல்லாம விட மாட்டியா”? என்றான். அது மெதுவாக ஆனால் மூர்கமாக அவனைச் சுற்றிப் படரத்துவங்கியது. “உனக்கு என்ன வேண்டும் ஏன் என்னை வதைக்கிறாய்” என்றான் கோபமாக. அந்த அறை விசித்திரமான வாசத்தில் ததும்பியது. திராவகத்தின் வீச்சமும் பூவின் வாசமும் மூச்சிறுக்க அவன் சுவாசம் திருகினான். திடீரென அதை கரப்பான் பூச்சியென உணர்ந்தான். கால்துவள ஒடுபவனை துரத்திக் கொண்டே வருகிறது ஒரு இராட்சச கரப்பான் பூச்சி. தடுக்கி கீழே விழுகிறான். உடலெங்கும் ரணமாய் எழுந்த போது எங்கும் நீலம் நிறம்பிக் கிடக்கிறது. நீல வண்ண தார்சாலையின் இருபுறமும் நீல வண்ண மரங்கள் நீல வன்ண வானத்தில் நீல வண்ண சூரியன், வெளியெங்கும் நீல வண்ண ஒளி அவனின் மிக பக்கத்தில் ஒரு மரமென, நிலத்தில் புதைந்து நின்று கொண்டிருக்கிறது ஐந்து தலை பாம்பொன்று. நீல நாக்கை நீட்டி காற்றை உண்டபடி, வன்மமும் குரோதமும் மிளிர புஸ்...புஸ் என சப்தித்து அவனையே பார்த்தது. சட்டென நெஞ்சில் கொட்ட சதை பிய்ந்து தொங்குகிறது நீல வண்ண சர்பம் போல. பீதியாய் ஓடுபவனுக்கு இரு புறமும் நின்று கொண்டிருக்கின்றன ஐந்து தலை சர்ப மரங்கள். முடிவற்ற பாதைகளில் ஓடிக் கொண்டேயிருக்கிறான். ஒரு குளம் வருகிறது. இறங்கி ஓடுகிறான், நீரில் மூழ்குகிறான். அவனுக்கு மூச்சு திணறுகிறது. உடல் குளிர்கிறது, கண் விழித்து பார்த்தான். போர்வை முகத்தை மட்டும் மூடியிக்க வெற்று உடல் மின் விசிறிக் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தது. தன் மீது கொடி போல் படர்ந்து கிடக்கும் அதனை பீதியுடன் பார்த்தான். இது பூவே அல்ல. இது நீலம், விஷம், விஷம் வயிற்றில் இறங்கி என்னை கொல்லாமலும், வாயில் வெளியேறி பிழைக்கவிடாமலும், தொண்டையில் நின்று வதைக்கும் ஆலகாலம். என் ஆக்ஞையை நசுக்கிக் கொண்டு தண்டுவடத்தில் பூத்திருக்கும் ஹைபோதாலமஸே உன்னை நான் நேசிப்பது போலவே வெறுக்கிறேன். ஒரு காப்பியின் சுவை போல நீ கசத்தினிக்கிறாய். காப்பி நதியின் கரையில் வளரும் இலைகளற்ற நீலப் பூவே உன் இராட்சச வேர்கள் என் நெருப்பை வற்றப் பருகாதிருக்கட்டும். அவன் உன்மத்தம் கொண்டவனாய் உளறிக் கொண்டிருந்தான். உறக்கமற்ற விழிகள் நெறுப்பென எரிந்தன. அவன் உதடை கவ்வியதொரு உதடு சிறுக அந்நெருப்பு உடலெங்கும் பரவியது. அவன் உடல் தகதகவென எரியத் துவங்கியது. நெருப்பின் ஆழத்திலும், நுனியிலும் எண்ணற்ற நீலப்பூக்கள் பூத்து உதிர்ந்து கொண்டிருந்தன. விர்ரென வான் நோக்கி பாயும் அதன் காம்பை பற்றினான் அது ஒரு சிறகுள்ள குதிரையாகி வானில் பறந்தது. தாவி அதில் ஏறினான். அவன் நீலமற்ற -4- நீலத்துக்குள் கரைந்தான். திடீரென அறையின் நீல வெளிச்சத்தில் மலர்ந்திருக்கும் நீலப் பூவை நினைத்தான். நீலத்தில் பூத்திருக்கும் தனியொரு நீலப் பூவாய் தனை உணர்ந்தான். மனம் லேசாகியது, கண்ணீர் பெருகியது. உடல் கனத்து விழுந்தான். விழுந்த இடம் நிலவு. தனியனாய் தனை உணர்ந்தான். தலைக்கு மேலே அவன் பூமி ஒரு நீலப் பூவென மிதக்கக் கண்டான். இலையும் காம்புகளுமற்ற நீலப்பூ. எதையோ புரிந்து கொண்டதைப் போல சிரித்தான். அவன் குதிரை சற்று தள்ளி நின்று கொண்டிருந்தது. அதன் பின்புறம் இவனை இம்சித்தது. வெறி கொண்டவனாய் தாவி அதன் மேல் அமர்ந்தான். வெளியெங்கும் நீல மீனகள் நிசப்தமாய் நீந்திக் கொண்டிருந்தன. நீலப்பூக்கள் மிதந்து போவது போல, மெல்ல கரம் வலுவிழந்தது. தோள்பட்டையின் பின்புறம் வலி எடுக்க துவண்டு விலகினான். தன் முகத்தை எதுவோ வெப்பமும் ஈரமுமாய் முகர்ந்து கொண்டிருப்பது போல் உணர்ந்தான். கண் விழித்துப் பார்தான். சட்டென அந்தப் பூ எதையோ உள்ளிழுத்துக் கொண்டது. அவன் உடலெங்கும் கம்பளி பூச்சிகள் ஊர்வதாய் உணர்ந்தான். அறையின் வீச்சம் அவன் குடலை குமட்டியது. அவனால் எழ முடியவில்லை. “என்னை விடு, நான் பலவீனமானவன்” அதனிடம் கெஞ்சினான். அது மேலும் இறுகியது. அந்த பூவை பிய்த்தெறிந்து விட வேண்டும் என் எண்ணினான். ஆனால் அதைத் தொட இப்போது பயமாகவுமிருந்தது. “நான் என்ன பண்ணுவேன்” என அரற்றினான். அவனுக்கே அவன் மேல் கழிவிரக்கம் வந்தது. கண்கல் கசிய தொண்டை அடைத்தது. சில கணங்கள் அப்படியே படுத்திருந்தான். அவன் அகங்காரம் விழித்தது. தன்னை சுற்றியுள்ள கொடியை பிய்ததெறிய பற்றி இழுத்தான். அது மேலும் மேலும் இறுகிக் கொண்டிருந்தது. “உன்னை கொல்லுவேன்” “உன்னை கொல்லுவேன்” என வெறி பிடித்தவனாய் பற்களை இறுக்கி அதைப் பிடித்து இழுத்தான். மீண்டும் உடைந்து அழுதான். அது அவன் உடலெங்கும் படர்ந்து கொண்டேயிருந்தது. இப்போது அவனை இறுக்கிய கொடிகளில் எண்ணற்ற நீலப் பூக்கள் மலர்ந்திருந்தன. அவ்வறையே நீல வெள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தது. மெல்ல அவன் நினைவிழந்தான். கண் விழித்த போது சுதந்திரமாய் தனை உணர்ந்தான். நன்கு விடிந்திருந்தது. அவசரமாய் தலையணையை விலக்கி கட்டில் கம்பியை பார்த்தான் அது வெறுமையாயிருந்தது. நன்றி : லும்பினி.இன்

Tuesday, May 11, 2010

லும்பினி.இன்

இன்று முதல் லும்பினி.இன் என்றொரு இணைய இதழ் துவங்கப்பட்டுள்ளது. பழைய ‘நிறப்பிரிகை’ இதழ்களை இந்த தளத்தில் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. www.lumpini.in என்ற முகவரியில் இதை வாசிக்கலாம். இந்த இதழ் கொண்டுவந்ததன் நோக்கங்களாக சொல்லப்பட்டுள்ளதாவது. அதிகாரம் எப்போதும் வரலாற்றில் எதிரிகளே இல்லாமல் இருந்ததில்லை. பென்னம்பெரிய சக்தியாய் அதிகாரங்கள் தங்களை நிலைநிறுத்தி நிறுவிக்கொண்டபோதிலும் அதற்கு எதிரான மறுப்புகளும் கலகக்குரல்கள், சின்னஞ்சிறு விசும்பல்கள், முனகல்கள் என பல்வேறு வடிவங்களிலாவது வரலாற்றின் இடுக்குகளிலிருந்து கசிந்து கொண்டு தானிருந்திருக்கின்றன. அத்தகைய எதிர்ப்புமரபைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதமும் நிம்மதியும் அடைகிறோம். குறிப்பாகத் தமிழ் பேசும் அடையாளம் கொண்ட மக்கட்பிரிவைச் சேர்ந்த நாங்கள் எமக்கான முன்னோடிகளாக புத்தர், மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற சமூகப்போராளிகளைத் தேர்ந்துகொள்வதிலும் மார்க்சியம், பெண்ணியம், பின்நவீனம், தலித்தியம், பவுத்தம், பெரியாரியம் போன்ற கோட்பாட்டு வெளிச்சங்களில் அதிகாரங்களை விசாரணை செய்வதிலும் அதீத ஆர்வமும் வேட்கையும் கொண்டவர்களாயுள்ளோம். அதிகாரங்கள் காலந்தோறும் புதிய புதிய பரிமாணங்களில் மாறிக்கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கான சிக்கல்களும் வெவ்வேறு வடிவமெடுத்துக்கொண்டிருக்கின்றன. மாற்று அரசியல், மாற்று சிந்தனை, மாற்று எழுத்துகளை முன்வைப்பவர்களுக்கான பணிகளும் கடப்பாடுச் சுமைகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இந்தியாவிலும் ஈழத்திலும், ஏன் புகலிடத்திலும் கூட சாதிய ஆதிக்கம், ஒடுக்குமுறை, வன்முறை என்பவை வெவ்வேறு முகங்களோடும் வெவ்வேறு தத்துவங்களோடும் தொழிற்படாமல் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நீளும் சாதியத்தின் கரங்கள் வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன. அவற்றிற்கு எதிரான எமது போராட்டங்களின் அவசியங்களும் ஓயப்போவதில்லை. மற்றொருபுறம் பெண்களுக்கான வெளிகளைச் சுருக்குவதிலும் கற்பு, கலாச்சாரம் மாதிரியான கட்டுத்தளைகளால் பெண்ணுடல் மற்றும் மனங்களை ஒடுக்கும் கருத்தியல்களுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்தியச் சாதியமும் கொடிய இந்துமதமும் நம்மைப் பாரமாய் அழுத்தும் வேளையிலேயே உலகமயமாக்கல் என்னும் மாயப்பிசாசும் நம்மேல் வந்து அழுந்துகிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை உற்பத்தி செய்வதிலும் பழங்குடிகள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் வளங்களைச் சுரண்டி வாழ்வாதாரத்தை மறுப்பதிலும் உலகமயமாக்கலின் பங்கு பிரதானமானது. வெறுமனே பொருளாதார மேலாண்மை நிறுவுவது என்பதைத் தாண்டி அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டல், உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பவற்றின் பேரால் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளாய்க் கட்டமைப்பதிலும் தனிமைப்படுத்தி ஒடுக்குவதிலும் இந்தியாவில் மாவோயிஸ்ட்கள், பழங்குடிப் போராட்ட இயங்கள் தொடங்கி உலகமெங்கும் எழும் எதிர்ப்புச் சக்திகளை இல்லாதொழிப்பதிலும் உலகமயச் சக்திகளுடன் உள்ளூர் அதிகாரபீடங்களும் கைகோர்த்துக்கொள்கின்றன. இத்தகைய இரட்டைச் சுமைகளை உணர்ந்தவர்களாய் இலக்கியம் பேசுவோரும் எழுதுவோரும் மாற்று அரசியலை முன்வைப்பதாய் நம்பும் சின்னஞ்சிறுக்குழுக்களும் இல்லை என்பது ஒரு வரலாற்றுச்சோகம்தான். பார்ப்பனர்களாலும் வெள்ளாளர் போன்ற ஆதிக்கச்சாதிகளாலும் கைக்கொள்ளப்பட்ட இலக்கியத்தை, அதன் அரசியலைக் கட்டவிழ்த்து ஒடுக்கப்பட்டோருக்கான இலக்கிய வடிவங்களான தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், விளிம்புநிலை ஆய்வுகள் குறித்த அறிமுகம் மற்றும் உரையாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றில் நிறப்பிரிகைக்கு ஒரு பிரதான பங்கு உண்டு. தொண்ணூறுகளில் வீச்சுடன் தொழிற்பட்ட நிறப்பிரிகையின் வீச்சு அமைப்பாகாத இயக்கமாகவே இருந்தது எனலாம். ஆனால் இடையில் ஏற்பட்ட பல்வேறு தளர்வுகளாலும் தொய்வுகளாலும் கோட்பாட்டு உரையாடல்களும் அரசியல் செயற்பாடுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு சிறுபத்திரிகைத் தளம் என்பதும் இலக்கியம் என்பதும் மீண்டும் ஒடுக்கப்பட்டோர் குறித்த கள்ள மவுனத்தைக் கடைப்பிடிக்கும் ரகசியத்தளமாகவும் அதிகாரத்திற்குத் தேவையான பணியாட்களை உற்பத்தி செய்யும் ஏஜென்சிகளாகவும் மாறிவிட்டதை அவதானிக்கிறோம். இப்போது பெரும்பாலும் இலக்கியம் என்பது நிறுவன உரிமையாளர்களால் ஒழுங்கு செய்யப்படுகிற கார்ப்பரேட் கம்பெனி நடைமுறைகளாக மாறிவிட்டன என்பதையும் உணர்ந்திருக்கிறோம். உலகமயச்சூழல் ஆதாயத்தையும் ‘வளர்ச்சி’யையும் மட்டுமே பிரதானமாகக் கொண்ட, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு தலைமுறையை உருவாக்கியதில் வெற்றிகண்டதைப் போலவே சிறுபத்திரிகை இலக்கியச்சூழலும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, அதிகாரங்களோடு உறவு கொண்ட ஒரு கூட்டத்தை உருவாக்கியுள்ளது. மற்றொருபுறம் இத்தகையச் சூழல் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தும் மக்களுக்கான போராட்டங்களைத் தொடர்ச்சியாகக் கட்டமைத்துப் போராடி அரசின் வன்முறையைச் சந்தித்து வரும் மார்க்சிய மற்றும் பெரியாரிய இயக்கங்களின் மீது எங்களுக்கு அளப்பரிய மரியாதை இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இவையும் கூட பெரும்பாலும் பன்மைத்துவ அடையாளங்களை மறுப்பதாய் தாங்கள் கட்டமைத்த ஒற்றை அடையாளச் செருப்பிற்காக கால்களை வெட்ட அலையும் ‘கொலைவெறி’யையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. பெண்ணெழுத்து, உடல் அரசியல், பன்மைத்துவ அரசியல் ஆகியவற்றை மறுப்பவையாகவும் எல்லாவற்றின் பின்னாலும் ‘ஏகாதிபத்தியச் சதியை’க் கண்டுபிடித்து விடக்கூடிய ஆண்களால் ஆண்களுக்காக நடத்தப்படுகிற புரட்சிகரக்கட்சிகளோடும் முரண்பட வேண்டியிருக்கிறது. மற்றொருபுறம் தேசிய மறுப்பாளனாகிய பெரியாரைப் புரிந்துகொள்ளாமல் தமிழ்த்தேசியத்தை முன்வைக்கும் இயக்கங்களாக பெரியாரிய அமைப்புகள் மாறிப்போனதும் சூழல் அவலம்தான். இந்திய அரசு, அதன் அதிகாரம், ராணுவம் என்னும் வன்முறை எந்திரம், மக்கள் இயக்கங்களின் மீது பாயும் அதன் ஒடுக்குமுறை என எவற்றினோடும் எங்களுக்குச் சிறுமணலளவும் ஒப்புதல் கிடையாது. ஆனால் அதற்கு மாற்றாய்க் கட்டமைக்கப்படும் தமிழ்த்தேசிய இயக்கங்கள், தான் எதிர்ப்பதாய்ச் சொல்லும் அதே இந்திய அரசின் அதிகாரங்களை தமக்குள் ஏற்றுக்கொண்ட நுண்களங்களாக விளங்குகின்றன. இந்திய தேசியத்தின் கருத்தியல் இந்துத்துவமாக இருக்கிறதென்றால் தமிழ்த்தேசியத்தின் கருத்தியல் தமிழ்க்கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ்ப்பாசிசமாக இருக்கிறது. முஸ்லீம்கள், பழங்குடிகள் போன்ற வித்தியாசங்களை முன்வைக்கும் மக்கள்குழுவினரை ஒதுக்கித் தனிமைப்படுத்துவதில் இவ்விரு பிரிவினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உலகமயமாக்கலின் ஆணைகளைக் கேள்விமுறையின்றி அமல்படுத்துவதில் இந்திய அரசுக்கு விருப்பம் அதிகம் எனில் தமிழ்த்தேசிய சக்திகளுக்கோ அதுகுறித்த எந்த மறுப்புமில்லை. ‘’எங்களோடு இல்லையென்றால் நீங்கள் பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்" என்றார் அங்கிள் புஷ். ‘’எங்களோடு இல்லையென்றால் நீங்கள் நக்சலைட்களோடு இருக்கிறீர்கள்" என்றார் மன்மோகன். ‘’எங்களோடு இல்லையென்றால் நீங்கள் ராஜபக்சேவோடு இருக்கிறீர்கள்" என்கிறார்கள் தமிழினவாதிகள். ஆக மொத்தம் இத்தகைய குரல்களின் எதிரொலியைக் கேட்டுக்கேட்டு கிறுக்குப்பிடித்து நிற்கிறோம். அடிப்படைவாதமும் பழமைவாதமும் உருவாக்கியுள்ள தடைகள் ஒருபுறம், நவீனம் என்ற பெயரில் நிகழும் மானுட அழிவுகள் மறுபுறமும் என ஒரு சிக்கலான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதில் எந்த சிக்கலுமில்லை. மாற்று அரசியலையும் எழுத்தையும் முன்வைப்பதற்கும் மறுக்கப்பட்டோரின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வெறுமனே காகிதங்கள் மட்டுமே போதுமானவையாக இல்லை என்பது நிதர்சனமாயுள்ளது. இணையம் என்பது இன்று உலகமெங்கிலும் தவிர்க்கமுடியாத இயங்குதளமாக மாறியுள்ளது. முற்போக்கு, பிற்போக்கு, வலதுசாரி, இடதுசாரி, ஒடுக்குபவர், ஒடுக்கப்படுபவர் என எல்லா அரசியல் சக்திகளும் இணையதளத்தில் இயங்குகின்றனர், தமக்கான கட்டமைப்புகளை உருவாக்குகின்றனர், தமக்கு உடன்பாடில்லாதவைகளோடு மல்லுக்கட்டுகின்றனர். தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் வெளிகளில் சிறிதளவேனும் அதிர்வுகளையும் தாக்கங்களையும் உண்டுபண்ணியவர்கள், உரையாடல்களைத் தொடங்கி வைத்தவர்கள் என்கிற நம்பிக்கையோடு இணையதளத்திலும் அத்தகைய தொடர்ச்சியைப் பேணும் முயற்சியே ‘லும்பனி’. நாங்கள் என்ன பேசுவோம், எழுதுவோம் என்பது யாருமறியா ரகசியங்கள் அல்ல. தலித்தியம், பார்ப்பன, பார்ப்பனிய, இந்துத்துவ எதிர்ப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் நிபந்தனையற்ற விடுதலையைக் கோரும் பெண்ணியம், பழங்குடிகள், திருநங்கைகள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் அரசியல், உலகமயத்தின் பொருளாதார, அரசியல் பின்னணிகளை அம்பலப்படுத்துவதும் அதற்கு எதிரான கிளர்ச்சிகளும், தேசியத்தின் மொத்தத்துவ வன்முறையைக் கேள்விகேட்டல், நிறுவப்பட்ட எல்லா பெருங்கதையாடல்களுக்கும் எதிரான உடைப்புகள் ஆகியவையே எமது பணி. கருத்து விலகல்களையும் வேறுபாடுகளையும் அங்கீகரிப்பையும் கறார்த்தன்மையில்லாத அரசியல் புள்ளிகள் ஒன்றிணைவையும் முன்வைக்கிறோம். இந்த புள்ளியிலிருந்து நம் உரையாடலைத் தொடங்குவோம்.

Sunday, May 2, 2010

சாம்பல் சுவர் - நுண்கதை

நான் இந்த சந்திற்குள் எப்படி வந்து சிக்கிக் கொண்டேன் எனத் தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் முன்னும் பின்னும் நீண்டு கொண்டே செல்லும் ஒரே சீரான சந்து. உண்மையில் இது சந்துதானா என்றும் தெரியவில்லை. ஐந்தடி இடைவெளியில் ஒரே நேர்கோடாக நீண்டு செல்லும் சுவர்கள், இரண்டும் எவ்வளவு உயரம் என்றும் தெரியவில்லை. அண்ணாந்து பார்த்தால் வானத்தின் விளிம்பு வரை வளர்ந்திருக்கிறது இருபுறமும். வானம் நீலத் துண்டாக தெரிகிறது. சில சமயம் மேகங்கள் ஊர்ந்து செல்வதையும் எப்போதாவது பறவைகள் போவதையும் பார்க்கிறேன். நேரே நீண்டு கொண்டே செல்லும் சந்தின் இடப்பக்கமோ வலப்பக்கமோ வேறொரு பாதை கிளை பிரிகிறது. அந்த சந்தும் நீண்டு சென்று கொண்டே இருக்கிறது. முன்னும் பின்னும் எல்லா சந்துகளும் ஒன்று போலவே உள்ளன. சாம்பல் வண்ண சுவர்கள். எப்படி இங்கு வந்தேன்? என் சக மனிதர்கள் என்ன ஆனார்கள்? பூமியில் இது எங்குள்ளது? இறுதியாக நான் என்ன செய்துகொண்டிருந்தேன். எவ்வளவு யோசித்தும் பலனில்லை தலையில் நரம்பொன்று அறுந்து விழுவது போல் விண்ணென்று வலித்தது. ‘உதவி, உதவி....’ எனக் கத்துகிறேன் சற்று தொலைவில் எதிர்க்குரல் வருகிறது ‘உதவி, உதவி...’ சத்தம் வந்த திசை நோக்கி வெறி கொண்டவாறு ஓடுகிறேன். உடல் தளர ஓடி நின்று பார்க்கிறேன் யாரையும் காணவில்லை. ஒருவேளை அது எதிரொலியாய் இருக்குமோ? எனக்கு சோர்வாய் இருக்கிறது. ஓடி வந்ததில் உடல் வியர்த்துக் கொட்ட மூச்சிறைக்க மண்டியிட்டு அமர்கிறேன். மீண்டும் கத்துகிறேன். “உதவி, உதவி...” “உதவி, உதவி...” எதிர்குரல் வந்த திசை நோக்கி ஓடுகிறேன். மூச்சு வாங்க நிற்கிறேன். ஒருவேளை இடது பக்கமோ வலது பக்கமோ கிளை பிரியும் சந்துகளில் செல்ல வேண்டுமோ? எத்தனை கிளைச் சந்துகளை கடந்து வந்தேன் நினைவில்லையே. ஐயோ என்ன இழவு இது சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். சத்தம் வரும் திக்கை சரியாக குறித்துக் கொள்ள வேண்டும். “உதவி, உதவி...” கத்துகிறேன் உதவி, உதவி...” சரியாக இடது மேல் புறம் ஓடு.... ஓடு... கால் பின்ன நேரே ஓடி முதல் இடது சந்தில் நுழைந்து நேரே ஓடுகிறேன். இப்போது இடதா? நேரா? மீண்டும் இடதில் திரும்பி நேரே ஓடிக் கொண்டேயிருக்கிறேன். கால் துவள கீழே விழுகிறேன். கண்கள் இருள்கின்றன. எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் தெரியவில்லை. குதிகாலும், தொடையும் அசைக்கமுடியாதபடி வலிக்கின்றன. கடவுளே என்ன இது? இது ஒரு கனவாய் இருக்க கூடாதா? வெறுப்பாய் எழுந்து அமர்கிறேன். கால் மூட்டில் எரிகிறது. கால்சராய் கிழிந்து சாறுகாயத்தில் இரத்தம் துளிர்த்திருக்கிறது. தாகமாய் உள்ளது. உதடுகளை நாவால் ஈரமாக்கிக் கொள்கிறேன். ஒரு மோசமான புதிரில் வந்து மாட்டிக் கொண்டேன் என மனம் திகிலில் உறைகிறது. மீண்டும் மீண்டும் மனம் யோசித்து யோசித்து சோர்ந்தது எப்படி இங்கு வந்தேன். எப்படிச் செல்லப் போகிறேன். பின்னந்தலையில் இருந்து வலி கழுத்துப்பட்டைக்கு பரவ சுவரில் சாய்ந்து அமர்கிறேன். இப்போது மணி என்ன? இன்னும் இரவு வர எவ்வளவு நேரம் உள்ளது. அதற்குள்ளாக இதிலிருந்து வெளியேற வேண்டும். ச்சீ! எவ்வளவு பைத்தியகாரத்தனமாய் எதிரொலியை எதிர்க் குரல் என நம்பி ஏமாந்தேன். ஆனால் அது எதிரொலி போல ஒலிக்கவில்லையே. எவ்வளவு துல்லியமாய் ஒரு மானுடக் குரல் போலவேயிருந்தது. மீண்டும் கத்தலாமா? வேண்டாம் சோர்வாயிருக்கிறது. முட்டாளே கத்தித்தான் பாரேன். சும்மாயிருபதிலும் ஏதாகிலும் செய். இந்த நரகத்திலிருந்து வெளியேறியேயாகவேண்டும். “உதவி, உதவி...” “உதவி, உதவி...” இம்முறை வலது பக்கத்தில் சரி ஓடு... ம்... இன்னும் வேகம்....வேகம்....வேகம்...திரும்பு.....ஓடு...ஓடு...ஓடு... மூச்சிறைக்கிறது. அது எதிரொலிதான். இனி துணைக்கு ஆள் தேடி பலனில்லை. நாமாக போய்ச் சேர வேண்டியது தான் ஆனால் எந்த வழி? நேரே கொஞ்ச தூரம் போய் கொண்டேயிருக்கிறேன். மனம் சிந்திக்கும் திறனை இழந்து கொண்டிருக்கிறது. எண்ணங்கள் தாறுமாறாய் ஓடுகின்றன. என்ன இது... என்ன இது.... என அரற்றிக் கொண்டேயிருக்கிறேன். அது எதிரொலி என்றால் ஒரு முறை வலது பக்கமும் மற்றொரு முறை இடது பக்கமும் ஒலிப்பது எப்படி? மனம் தடுமாறுகிறது. மீண்டும் கத்து. கத்தினேன். இம்முறை பின் பக்கம் ஒலித்தது உன்மத்தம் பிடித்தவன் போல் நேரே ஓடிக் கொண்டேயிருந்தேன். எவ்வளவு தூரம் வந்து விட்டோம் போதும் நில். அது எதிரொலிதான். நீ எங்கிருந்து கத்தினாலும் ஒரே திசையிலிர்ந்துதான் எதிரொலி வருமாறு கட்டப்பட்டிருக்கிறது இந்த புதிர்ப்பாதை புரிந்ததா?. பைத்தியம் போல் இனி ஓடிப் பயனில்லை. முதலில் இந்தப் புதிரின் ஜியோமிந்திரியை புரிந்து கொள்ள முயற்சி செய். மொத்தம் எத்தனை சந்துகள் இருக்கக் கூடும்? ஒரு ஐந்து அல்லது ஆறு சந்துகளுக்குள்தா நான் திரும்ப திரும்ப அலைந்து கொண்டிருக்கிறேனா? இந்த சுவர் பாதை நீண்டு செல்லும் தூரம் பார்த்தால் அப்படி தோன்றவில்லை. சில நூற்றுக் கணக்கான சந்துகளாவது இருக்க வேண்டும். இதன் வடிவம் என்னவாக இருக்ககூடும்? நிச்சயம் சதுரம் அல்லது செவ்வகம்தான். வட்டம் என்றால் நேர்கோடுகள் வளைந்தாக வேண்டுமே? ஆனால் புதிர்பாதையின் இறுதி சந்து மட்டும் வளைவது போல் அமைக்கப்பட்டு உட்புறம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்குமோ? எதுவானாலும் நாம் இறுதி சந்திற்குள் இருந்தால்தான் சொல்ல முடியும். மேலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீளும் ஒரு சந்து வளைவதை கண்டுபிடிப்பது சிரமம் ஆயிறே. முட்டாளே போதும் நிறுத்து உன் ஜியோமிந்திரி ஆராய்சியை. பிதாகோரஸ் என்று நினைப்பா? எழுந்து ஓடு. ஓட்டம் ஒன்றே விடுதலையை தரும். உன் ஆன்ம சக்தியை ஓட்டத்திலன்றி வேறெதிலும் செலவிடாதே. எப்படி ஓட இது ஒரு நேர்கோடடென்றால் எவ்வளவு செளகர்யம். ஓடிக் கொண்டேயிருக்கலாம். நிச்சயம் ஏதாவது ஓர் புள்ளியில் வெளியே சென்று விடலாம். கத்தலாமா? தொண்டை வலிக்கிறது. நாக்கு உலர்ந்து விட்டது. தண்ணீருக்காக மனம் ஏங்கியது. நாவால் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டேன். ”உதவி, உதவி...” இம்முறை நேர் எதிர்திசையில் குரல் வருகிறது. உடல் துவள ஓடினேன். மூச்சிறைக்க சோர்ந்து மண்டியிட்டு நின்றேன். அது எதிரொலிதான் சந்தேகமே இல்லை. ஆனால் அதை நம்புவதைத் தவிற எனக்கு வேறு வழி தெரியவில்லை. பாம்போ பழுதோ கிடைப்பதை பிடித்து மேல் ஏறிச் செல்வதுதான் புத்திசாலித்தனம். ஒருவேளை அதுவும் ஒரு மனிதனாகயிருந்தால் எவ்வளவு பிரயோஜனப்படும். என்ன பிரயோஜனம்? இந்த நரகத்தில் ஒரு சகமனிதன் என்ன செய்து விட முடியும்? மேலும் அவனும் என்னைப் போலவே இதில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பவன். ஆனால் அப்படிச் சொல்லவிட முடியாது. அவன் நமக்கு முன்பிருந்தே இங்கே இருப்பவனாய் இருக்கக் கூடும். இந்த புதிர்ப்பாதையை பற்றி நமக்கு தெரியாத ஏதாவது ஒரு செய்தியை அவன் வைத்திருக்க கூடும். என்ன உளறுகிறாய்? இந்த இழவிலிருந்து வெளியேற பயன்படும் செய்தி அவனிடம் இருந்தால், அவன் வெளியேறியிருக்கமாட்டானா? இங்கு கிடந்து ஏன் லோல்படுகிறான். அப்படியும் சொல்லிவிடமுடியுமா? அந்த செய்தி முக்கியமற்றது என அவன் நினைத்திருக்கலாம் அல்லவா? சீசி! என்ன பித்துக்குளி எண்ணம் இன்னும் ஒருவனையும் பார்கவில்லை. யாரேனும் இருக்கிறார்களா இல்லையா தெரியவில்லை. இது என்ன வீண் நினைப்பு. அது எதிரொலிதான் சந்தேகமே இல்லை. சரி இறுதியாக ஒரு முறை கத்து. யாராவது தென்பட்டால் உன் அதிர்ஷ்டம். இல்லை எனில் இப்படி கிறுக்கனைப் போல் கத்துவதை நிறுத்தி விட்டு வேறு வழிமுறைகளைப் பார். “உதவி, உதவி...” “உதவி, உதவி...” சத்தம் வந்த திக்கை குறித்துக் கொண்டு வெறிகொண்டு ஓடினேன். மூச்சிறைக்கிறது. உடல் வேர்க்கிறது. கால்கள் பின்னுகின்றன. மனம் தளராதே ஓடு...நேராக ஓடிக்கொண்டேயிரு....நெஞ்சு வலிக்கிறது. மெல்ல ஓட்டத்தை தளர்த்தி நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்கிறேன். துயரம் தொண்டையை கவ்வுகிறது. அண்ணாந்து பார்க்கிறேன். மேகங்களின் கீழே சட்டென பறந்து கடந்தது ஒரு கறுநிறப் பறவை. இனி சாகும் வரை இப்படித் தானோ. இங்கேயே குடிக்க நீரின்றி உணவின்றி செத்து சுண்ணாம்பாக போகிறேனா? என்னவர்கள் எல்லோரும் எங்கிருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்? சற்று தொலைவில் ஏதோ சிரிப்புச் சத்தம் கேட்டது. அதிர்ந்து போய் அந்த திடை நோக்கி ஓடினேன். அங்கொரு சாம்பல் வண்ண சன்னல் இருந்தது. சாத்தப்பட்ட அதனுள்லிருந்து ஒரு ஆணும் பெண்ணும் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவளின் சிரிபொலிதான் அப்போது நான் கேட்டது. இதென்ன வீடா? விடுதியா? சன்னல் இருக்கிறதே...கதவு எங்கே இருக்கும். பலம் கொண்டு சன்னலை தட்டுகிறேன். உதவி..உதவி...யாரது அம்மா நானிங்கு மாட்டிக் கொண்டேன் காப்பாற்றுங்கள். இது எந்த இடம்? நீங்கள் யார்? உதவி...உதவி... எவ்வளவு நேரம் சன்னலை தட்டுவதும் கேட்பதுமாய் இருக்கிறேன். என் மன்றாடலோ, கேவலோ அவர்களின் செவியில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவர்கள் பேசிக்கொண்டேயிருந்தார்கள். அவள் கல கலவென சிரித்தாள். நான் கோபத்தில் கத்தினேன். வேசை மகளே கதவை திறடி. ஒருவேளை தொலைக்காட்சியாய் இருக்குமோ? அப்படியிருந்தாலும் பார்துக் கொண்டிருப்பவர்கள் இருப்பார்களே. இதற்கு கதவு ஒன்று இருக்குமே பார்த்து விடலாம். அந்த சன்னலிலிருந்து சுமார் கால் மணிநேரம் நடந்த பின் இடது புறம் ஒரு சந்து திரும்புகிறது. அதில் நுழைந்தேன். மீண்டும் ஒரு அரைமணி நேரமாவது நடந்திருப்பேன். அதுவும் இடது பக்கம் திரும்பியது. என்ன இது இவ்வளவு பெரிய கட்டிடமா? மீண்டும் கால் மணிநேரம் நடந்து இடது புறம் திரும்பி அரைமணி நேரம் நடந்தேன். மீண்டும் அந்த சன்னல் இருந்த இடத்திற்கே வந்து விட்டேன். என்ன இது கதவே இல்லையா? உள்ளே மனித சத்தம் கேட்கிறதே. அந்தப் பெண் சிரித்துக்கொண்டேயிருப்பதைக் கேட்டேன். தாயே கதவை திற கத்தினேன். பலம் கொண்ட மட்டும் சன்னலை தட்டினேன். ம்ஹிம். பிசாசுகள் என்ன சிரிப்போ? என்ன சரசமோ? யேய் கதவை திறடா நாயே. சோர்ந்து தரையில் அமர்ந்தேன். உடலில் உள்ள சக்தி முழுதும் திரட்டி கத்தினேன். உதவி...உதவி... நேர் இடது புறம் எதிரொலித்தது. வறட்சியாய் புன்னகைத்தேன். முட்டள் எதிரொலியே வாயை மூடு பைத்தியமே. மீண்டும் கத்தினேன். தொடர்ந்து கத்திக் கொண்டேயிருந்தேன். அட இதென்ன இம்முறை எதிரொலி வரவில்லை. அப்படியானால் அது எதிரொலி இல்லையா? பரபரபாய் கத்தினேன். நிசப்தம். மீண்டும் கத்தினேன் நிசப்தம். முட்டாளே இது வரை கேட்டுக் கொண்டிருந்தது எதிரொலி இல்லை. யாரோ இருக்கிறார்கள். ஆனால் அவன் ஏன் நான் கத்தும் போது மட்டும் பதில் குரல் கொடுக்கிறான். அவனாக கத்தினால் என்ன? மீண்டும் கத்தினேன். நிசப்தம். சில இடங்களில் எதிரொலி வருவது போன்றும் சில இடங்களில் எதிரொலி வராதது போன்றும் கட்டப்பட்டுள்ளதோ இது. சரி பார்கலாம் மறுமுறை எதிரொலி வரும் போது வேறு ஏதாவது சொற்களை கொண்டு கத்தலாம். ஒருவேளை எல்லாமே அமானுஷ்யமோ? சன்னல் பின்புறம் கேட்ட குரல், எதிரொலி எல்லாம் தன்னை குழப்புவதற்காக திட்டமிட்டு மாற்றி மாற்றி செய்யப்படுகிறதா? கதவற்ற சன்னல், பதிலற்ற பேச்சுக் குரல்கள் ஒருமுறை ஒலித்தும் மறுமுறை ஒலிக்காத எதிரொலி என்ன பயங்கரம் இது? பீதியில் உடல் வியர்க்கத்துவங்கியது. உடலும் மனமும் சோர்ந்திருக்கின்றன. இந்த பாதை இன்னும் எவ்வளவு தூரம் நீளும். படைப்பின் எந்த தர்க்கத்தில் இது இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சூட்சமத்தை நான் அறிவதெப்படி? அதை அறியாமல் நான் இதிலிருந்து விடுபடுவது எப்படி? அடிமனம் நம்பிக் கொண்டிருகிறது எல்லாம் சரியாகி விடுமென. ஆனால் எப்படி? என்னை கொஞ்சம் கொஞ்சமாக சிதறடித்துக் கொல்லத்தான் எனக்கு நம்பிக்கை ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் நம்பிக்கையையும் பிரயாசையையும் போல நம்மை காக்க வைத்து சிதறடிக்கிற பிசாசுகள் வேறு எதுவுமே இல்லை. நம்பாதே என் மனமே. ஆனால் இந் நரகத்தில் இருந்து என்னை ஆற்றுப்படுத்துகிற ஒரே விடயம் நம்பிக்கை மட்டும் தானே? ஆசுவாசமும் நிம்மதியும் கூடிய இடத்திற்கு எனை காவிச் செல்லும் சிறகுகளை அவைகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. அதையும் கைவிடுகிற கணம் நான் மரித்துதான் போயிருப்பேன். ஏன் மரித்தால்தான் என்ன? விடுதலையின் உண்மையான பொருள் மரணம் அல்லவா? நீ சொல்கிற ஆசுவாசமும் நிம்மதியும் கூடிய இடம் என்பதின் பொருள் மரணம் அல்லவா? ச்சீ! என்ன இது மரணத்தை பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும். இது எந்த இடமோ? என்ன ஏற்பாடோ? என் பிரக்ஞையின் அனுமதியோடா நானிங்கு வந்தேன். அது போலவே என்னையுமறியாமல் இங்கிருந்து சென்றிடுவேன். இதை ஒரு விளையாட்டு என நினைத்துக் கொள். நீ உன் குழந்தைகளிடம் விளையாடுவாயே அதைப் போல. அனைத்தும் சரியாகி விடும். என் மனதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. மணி என்ன இன்னுமா மாலை வரவில்லை? நானிங்கு வந்து பல மணி நேரம் ஆயிற்றே? மீண்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது எழுந்து தள்ளாடியபடியே நடந்தேன். சோர்வாக சன்னலை தட்டினேன் ஐயா... மீண்டும் ஒரு முறை தட்டினேன். அடப் போங்கடா. சோர்ந்து போய் நடக்கத்துவங்கினேன். கால்கள் அமரச் சொல்லி கெஞ்சின. மனதில் இனம் புரியாத வன்மம் பொங்கியது. நட அமராதே. அமராதே நடந்து கொண்டேயிருந்தேன். கால் குதிரை சதையில் நரம்பு வலித்தது. ம்ஹீம் அமரக் கூடாது நான் அமர மாட்டேன். நட..நட...நடக்காதே ஓடு...ஓடு... கால்கள் கதறின. முடியவில்லை வேண்டாம். நான் ஓடிக் கொண்டேயிருந்தேன். எவ்வளவு நேரம் எவ்வளவு தூரம் இரண்டு பக்கமும் சாம்பல் சுவர் நழுவிக் கொண்டே செல்கின்றன. நான் போதமிழந்தேன். கண்விழித்த போது கீழே விழுந்து கிடந்தேன். எப்போது மயக்கமானேன். இன்னும் சாகவில்லையா? சிறிது நேரம் அப்படியே அரைமயக்கமாய் கிடந்தேன். மனதில் எனென்னவோ தோன்றி மறைந்தன. மனைவியின் பேச்சுக் குரல் கேட்கிறது. அவள் யோனியின் அலர்வாடை நினைவுக்கு வருகிறது. ஏதோ சினிமா பாடல் மனதி ஓடுகிறது. இவ்வளவு பிரச்சனையிலும் ஒரு சினிமா பாட்டை மனம் ரசிக்கிறதா என்ன? எழுந்து உட்கார். வேண்டாம் இப்படியே கிட. எழுந்திரு போக வேண்டும் மனம் நச்சரித்துக் கொண்டேயிருக்கிறது. பரவாயில்லை கிட என்று ஒரு நினைவு. சிறிது நேரம் கழித்து எழுந்து நடந்தேன் எந்த புறம் போவது. எங்கு போனால் என்ன? மனம் போன போக்கில் போ. ஆனால் இது தவறு. இது நிச்சயம் ஏதாவது ஒரு முறைமையில்தான் அமைக்கப்பட்டிருக்கும். முறையாக பயணம் செய். மீண்டும் கத்தினேன். உதவி...உதவி.. ....... ........ பதில் குரலில்லை. உதவி...உதவி.. கத்திக்கொண்டே ஓடினேன். ஓடிக் கொண்டே கத்தினேன். போதும் நில். கண்களில் நீர் திரள சாம்பல் சுவரையே பார்த்தேன். மனதில் வெறி பொங்க சுவரை ஓங்கி குத்தினேன். எட்டி உதைத்தேன். மறந்து தொலை...மறந்து தொலை சைத்தானே. அதன் மேலேயே சாய்ந்து அழுதபடி அமர்ந்தேன். சட்டென மனதை உதறிக் கொண்டேன். ச்சீ. எவ்வளவு நாடகத்தன்மையோடு நடந்து கொள்கிறோம். மீண்டும் எழுந்து நடந்தேன். எட்டி உதைத்ததில் கால் விரல்களில் நல்ல அடி வலி பிடுங்கியது. நடந்து கொண்டேயிருந்தேன். ஏதோ பேச்சு சப்தம் கேட்டது. நேரே சிறிது தூரம் நடந்து போனேன். இடது பக்க சந்தில் எட்டிப்பார்த்தேன். யாருமில்லை. சில அடி நடந்ததும் இரண்டு சன்னல்கள் எதிர் எதிர் சுவரில் இருந்தன. இரண்டு பெண் குரல்கள் இரண்டிலிமிருந்து மாறி மாறி கேட்டன. ஆனால் அது என்ன மொழி புரியவில்லை. இரண்டு சன்னலின் பின்புறம் இருந்தும் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள். யாரது? என்றேன். பேச்சு சத்தம் சிறிது நின்றது. அம்மா... உதவி செய்யுங்கள் நானிங்கு மாட்டிக்கொண்டேன். ஒரு பெண் ஏதோ பேசினாள். புரியவில்லை. என்ன சொன்னீர்கள். மீண்டும் அவள் ஏதோ சொன்னாள். அம்மா புரியவில்லை...புரியவில்லை என்று கத்தினேன். அவளும் வேகமாக ஏதோ கத்தினாள். எதிர் ஜன்னலில் இருந்து ஒரு சிரிப்பொலி கேட்டது. நான் கோபமாய் அதைப் பார்த்தேன். சிரித்தவள் ஏதோ சொன்னாள். பதிலுக்கு அவளும் சொன்னாள் அவர்கள் உரையாடிக் கொண்டேயிருந்தார்கள். நான் கத்திச் சோர்ந்தேன். அடச்சீ! இந்த வீடுகளுக்காவது கதவு இருக்குமா? எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அதைச் செயவதைத் தவிற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நெடுநேரம் சுற்றிய பின் முதல் வீட்டின் ஜன்னலுக்கே வந்து சேர்ந்தேன். சரி எதிர்புற சுவரைப் பார்க்கலாம். இது சற்று விரைவாகவே முடிந்து விட்டது. ஆனால் என்ன அதுவும் ஜன்னலுக்கே வந்து சேர்ந்தது. இரண்டாவது வீட்டை சுற்றி வந்த போது வேறொரு சுவரில் ஒரு ஜன்னலைப் பார்த்தேன். அங்கே போகலாமா? மீண்டும் அங்கே போய்க் கத்தினேன். நிசப்தமாய் இருந்தது இனி ஜன்னலை நம்பிப் பயனில்லை. நேரே ஓடிக் கொண்டேயிருக்கலாமா? எப்படியும் இறுதி வந்துதானேயாக வேண்டும். புத்திசாலித்தனம் என்ற நினைப்பில் நமக்கு தெரிந்ததை நாம் செய்துகொண்டிருக்கிறோம் அவ்வளவுதான் உண்மை எங்கோ உள்ளது. சிறிது தூரம் நடந்தேன் சிறிது தூரம் ஓடினேன். மீண்டும் ஒரு ஜன்னல் வந்தது. தட்டினேன். எதிர்புறம் இருந்து ஒரு சிறுமி பேசினாள். ‘மகளே! எனைக் காப்பாற்று’ அவள் என்னவோ பதிலிருத்தாள் ஆனால் என்ன மொழி இவள் என்னுடந்தான் பேசுகிறாளா? குழப்பமாய் எதிர்திசை பார்த்தேன். ஜன்னல் இல்லை. மீண்டும் கதவைத் தட்டினேன். அச்சிறுமி ஏதோ பேசினாள். எனக்குப் புரியவே இல்லை. நான் ஏதேதோ சொல்லிப் புரிய வைக்கப்பார்த்தேன். அவள் ஏதோ ஒரு சொல்லை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். என்ன வார்த்தையது புரியவில்லை என தன் மொழியில் சொல்கிறாளா? ஒருவேளை இங்கிருந்து தப்பிப்பதற்கான மந்திர சொல்லா? ச்சீ மந்திரமாவது தந்திரமாவது. அது ஏன் ஒரு மந்திரச் சொல்லாய் இருக்கக் கூடாது. நான் மீண்டும் மகளே! மகளே என்றேன் அந்தக் குழந்தை அந்த சொல்லையே திரும்ப திரும்ப சொன்னது. நானும் அந்த குழந்தை சொன்னதையே சொல்லிக் காட்டினேன் பதிலுக்கு அது வேறு என்னவோ சொன்னது. இது என்ன மந்திரத்தின் அடுத்த வரியா? ச்சீ குழந்தைக்கு என்ன மந்திரம் தெரியும் உளராதே. ஒரு வேளை மந்திரச் சொல்லாக இருந்தால் கூட அதைச் சொன்னால் என்னவாகும் என்று உறுதியாக தெரியுமா? இந்த புதிரிலிருந்து தப்பிப்போமா? சிக்கல் அதிகமாகுமா? என யாருக்குத் தெரியும். அமைதியாய் இரு. இந்த வீட்டிற்காவது கதவு இருக்குமா? குழந்தை பதில் பேசுகிறதே இருந்தாலும் இருக்கக் கூடும். சொற்ப நிமிடங்களிலேயே அந்த சதுரத்தை சுற்றி முடித்துவிட்டேன். ஆனால் என்ன இது அந்த ஜன்னலை காணவில்லையே! மறைந்து விட்டதா என்ன? இந்த சுவரில் தானேயிருந்தது. சுவரை நன்கு உற்றுப் பார்த்தேன். ஜன்னல் இருந்த இடமே தெரியவில்லை. பயத்தில் கை, கால் நடுங்கத் துவங்கியது. ஐயோ! எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது. பீதியில் உடல் குலுங்க ஓடினேன். கொஞ்சம் தொலைவில் நிலத்தில் ஏதோ கிடப்பது போல் தெரிந்தது. பக்கம் போய் பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்தேன். அது ஒரு எலும்புக் கூடு. ஒரு மனிதனின் முழு எலும்புக் கூடு. நான் ஓவென கத்திக் கொண்டே பதறி ஓடுகிறேன். பயத்திலும் களைப்பிலும் வேர்த்துக் கொட்டுகிறது. யார் எலும்புக் கூடு அது. என்னைப் போலவே இங்கு வந்து மாட்டிக் கொண்டவன் எலும்புக் கூடா அது? கடவுளே நான் என்ன செய்ய? இந்த பேய் சுழலின் ஏதாவது ஒரு மூலையில் நானும் இப்படித்தான் எலும்புக் கூடாய் கிடப்பேனா? அதை மீண்டும் போய் பார்க்கலாமா? வேண்டாம் அந்த கோரத்தை பார்ப்பது கடினம். அட இதென்ன சற்று தள்ளி சுவரில் ஏதோ எழுதியிருக்கிறதே. என்ன அது பக்கம் சென்று பார்த்தேன். தமிழ்தான் கல்லில் மறைந்தது மாமதயானை கல்லை மறைத்தது மாமதயானை இது திருமூலர் சூத்திரமல்லவா? இதை யார் இங்கு எழுதி வைத்திருபார்கள். இது ஏன் இங்கு எழுதப்பட்டிருக்கிறது? இதை எழுதியவன்/எழுதியவள் இருக்கிறார்களா? அல்லது அங்கு பார்த்த எலும்புக் கூட்டுக்குச் சொந்தக்காரன் எழுதினானா? தலைபாராமாய் இருந்தது. சோர்வில் தூக்கம் பீடித்தது. தூங்கு தூங்கு. தூக்கம் மட்டும்தான் இந்த நரகத்தை ஒத்திப்போடுவதற்கான ஒரே சாதனம். கண்விழித்தேன். வானம் இருட்டவேயில்லை. ஒருவேளை விடிய விடிய தூங்கி விட்டேனோ. அப்படியிருக்கமுடியாது. மேலே அண்ணாந்து பார்த்தேன். வானத்துண்டு தெரிந்தது வெளிச்சம் அப்படியேயிருந்தது. ஒருவேளை மேலே தெரிவது வானம் இல்லையோ? இந்த புதிர்பாதையின் கூரைதான் வானத்தைப் போல் தத்ரூபமாய் அமைக்கப்பட்டிருக்கிறதா? பறவைகள் பறக்கின்றனவே? கதவற்ற வீட்டில் மனிதர்கள் வாழும் போது வானமற்ற கூரையில் பறவைகள் பறக்காதா என்ன? சாம்பல் வண்ண சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பழங்கால கருங்கல் கட்டிடங்களைப் போல் பெரிய கற்களால் கட்டப்பட்டிருந்தது. இதென்ன? ஒவ்வொரு கல்லிலும் ஓவியாமா? கிறுக்கலா? வரிசையாக எல்லா கற்களிலிலும் இருக்கிறதே. நன்கு உற்றுப் பார்த்தேன் கோட்டோவியம்தான். வரிசையாக ஒரு கதைபோல் நீண்டு செல்லும் கோட்டோவியங்கள். மனம் பரபரத்தது என்ன கதை இது? எங்கிருந்து துவங்குகிறது? எங்கு முடிகிறது? இந்த வரிசை சுவர்களில் மட்டும்தான் இருக்கிறதா? அங்கெல்லாம் பார்த்தது போல் நினைவில்லையே. குழப்பமாக இருந்தது. ஒருவேளை இந்த ஓவியங்களை கவனித்தால் இங்கிருந்து தப்பிப்பதைப் பற்றிய சமிக்ஞை கிடைக்கக்கூடுமோ? எதற்கும் கொஞ்ச தூரம் சென்று பார்க்கலாம். கோட்டோவியங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஒன்றும் புரியவில்லை. இடமிருந்து வலமாக செல்கிறதா? அல்லது வலமிருந்து இடமா? சரி இந்தக் கதையின் துவக்கத்தை கண்டுபிடிப்பதும் சுவரின் துவக்கத்தை கண்டு பிடிப்பதும் வேறு வேறு அல்ல. பாதியிலிருந்தே துவங்குவோம் ஏதாவது புரிகிறதா பார்க்கலாம். கதைதான். ஒரு மனிதனின் கதை, ஒரு சமூகத்தின் கதைகயாகவும் பல சமூகங்களின் கதைகளாகவும் ஒரே மனிதனின் பல கதைகளாகவும் ஒரே சமூகத்தின் பல கதைகளாகவும். காலத்தின் கதையாகவும், காலத்தின் கதைகளாகவும் விரிந்து கொண்டே போகும் கதையை தன்னிலை மறந்து வாசித்துக் கொண்டிருந்தேன். காலம், வெளி, இருப்பு எல்லாம் மறந்து கதையின் சுழலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். முடிவு..முடிவு..முடிவு.. எனக் கெஞ்சக் கெஞ்ச கதை நீண்டு கொண்டேயிருக்கிறது. திடிரென ஒரு கல் மட்டும் பெயர்ந்து எனை துரத்துகிறது. நான் கதையை படிக்க வேண்டும் நான் கதையை படிக்க வேண்டும் எனை விட்டு விடு எனக் கதறிக் கொண்டே ஓடிப்போய் ஒரு சந்தில் திரும்புகிறேன். நான் கடந்து வந்த சுவர் மறைகிறது. நான் ஓட ஓட ஒவ்வொரு சுவராய் மறைந்து கொண்டேயிருக்கிறது. சுவர்களே மறையாதீர்கள் மறையாதீர்கள் எனக் கதறிக் கொண்டே ஓடுகிறேன். ஏதோ தடுக்கி விட பாய்ந்து விழுகிறேன். மீண்டும் கண்விழித்த போது பெரிய வெளி சூன்யமாய் வியாபித்திருக்கிறது எனைச் சுற்றி. நன்றி: உயிர் எழுத்து

Sunday, March 21, 2010

சுழியத்தின் நகரம் - குறுநாவல் எச்சங்கள்

பீடிகை தனது செய்கைகளில் விநேதத்தைக் கொண்டிருக்கும் சித்திரக்குள்ளன் ஒருவன் எங்கள் நகரத்தில் வாழ்ந்தான். எவரும் நுழையத்துணியாத தனது அறையில் அந்தரத்தில் அமர்ந்தபடி காற்றிJustify Fullல் எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கும் அவன் ஜாலங்கள் நகரெங்கும் பிரசித்தம். இரவுகளில் ஊரே திரண்டிருக்க அவன் சொல்லும் கதைகள் அவனிலும் விநோதமானவை. அவனின் ஒவ்வொரு சொல்லும் கேட்கும் ஒவ்வொருவருக்கும் வேறு வேறாய் ஒலிக்கும். அதனால் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கதையைக் கேட்டுப் புத்தி சொக்கிக்கிடப்பார்கள். விடுமுறைக்கு முந்தைய தினங்களில் அக்கதைகள் விடியும் வரை நீளும். இரவு முழுதும் கதை கேட்டு திரும்பும் போது தாங்கள் கேட்ட கதைகளை பகிர்ந்து கொண்டு அதன் விசித்திரத்தை எண்ணி வியந்து கொள்வோம். இவ்வாறு ஒரே நேரத்தில் பல்லாயிரம் கதைகளை கூறும் அவன் பல ஆண்டுகள் கழித்து தனது வசிப்பிடத்திற்கு திரும்பிய காலரூபனுக்கு சொன்னதாக நம்பப்படும் இக்கதையை கேட்போரும் வாசிப்போரும் இது தனது நகரத்தின் கதை எனக் கருதுவார்கள். உண்மையில் இவைகள் சுழியத்தின் கதையே என்றும் சில பெளராணிகர்கள் கூறுவார்கள். சுழியம் என்பது எண்களின் ஆதியில் பிறந்து இறுதி எண்ணுக்கு பிறகு மீண்டும் வருவது என ஒரு கணிதவியலாளன் கூறினான். சுழியம் என்பது சூன்யம் அது கணிதத்திலும் தர்கத்திலும் அன்றி வேறு எங்கும் எப்போதும் இருந்ததில்லை என்பதைப் போலவே இந்நகரம் தாரணையிலும் கனவிலும் அன்றி வேறெப்போதும் இருந்ததில்லை என்பது அவர்கள் வாதம். அதனால் இது சுழியத்தின் கதை என்றும் இக்கதையில் வரும் நகரம் சுழியத்தின் நகரம் என்றும் கூறுவார்கள். இந்தக் கதை கி.பி.21ம் நூற்றாண்டை சேர்ததென்றும் இளங்கோ கிருஷ்ணன் தனது 30ம் வயதில் எழுதியதென்றும் இந்தக் கதை வழியாக விரியும் நகரம் அவர் வாழ்ந்த கோவை நகரமே என்றும் ஒரு உரையாடல் உண்டு. இப்படியாக எண்ணற்ற மயக்கங்களும், குழப்பங்களும், முரண்களும் நிறைந்த ஒரு விநோதத்திற்கு நீங்கள் உங்களை ஒப்புக் கொடுத்திருக்கிறீர்கள் என உங்களுக்குச் சொல்லப்படுகிறது. பீடிகை 2 காலரூபனே, நகரம் என்பதென்ன? நகரங்களுக்கு மனிதர்களைப் போலவே ஆன்மா உண்டா? எனில் ஒவ்வொரு நகரத்திற்கும் மரணம் நேர்வதேன்? ஒரு நகரம் எப்போது பிறக்கிறது? எப்போது அழிகிறது. அதன் குடிகள் எப்படி அங்கு வந்து சேர்கிறார்கள்? அவர்களுக்கும் அதற்குமான தொடர்பு என்பதென்ன? ஒரு நகரத்தில் என்ன வகை தாவரங்கள் ஜீவிக்கின்றன? என்ன வகை மிருகங்கள் வாழ்கின்றன? உன்னுடைய நகரம் நூலைத் தன் ஆன்மாவாக எப்படிக் கொண்டது? பஞ்சுக்கும் உன் நகரத்திற்கும் உள்ள உறவென்ன? நூல் காற்றில் துடிப்பது போல் உன் நகரம் காலத்தில் நெளிவதைப் பார்த்தேன். ஏன் உன் நகரின் ஆன்மா நூலைப் போல் இருக்கிறது? தறி ஓடுவது போல் உன் மக்களின் பேச்சில் ஓர் சீரான இசைக்குறிப்பைக் கவனித்தாயா? ஏன் உன் மக்களின் ஆன்மா ஒரு நூலாக இருக்கிறது. நகரங்கள் தங்கள் மக்களை தாங்களே தெரிவு செய்து கொள்கின்றனவா? எல்லா நகரங்களுக்கும் இப்படியான ஒரு தனி இயல்பு உண்டா? ஏன் நகரங்கள் எரிந்து கொண்டேயிருக்கின்றன? எத்தனை முறை எரிந்தாலும் அது மீண்டும் மீண்டும் வேறு வேறாக பிறந்து கொண்டேயிருக்கின்றன? ஒரு நகரத்தின் கதை என்பது அந்நகரத்தின் கதை மட்டுமா? எண்ணற்ற காலத்தைச் சேர்ந்த எண்ணற்ற நகரங்களின் கதை ஒன்று போலவே தோன்றுவதை நீ கவனித்தாயா? எல்லா நகரங்களும் எப்போதும் எவ்வளவோ கதைகளை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. அவைகளில் அந்த பழமையின் புளித்த வாடையை கவனித்தாயா? ஒரு கதையே திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக சொல்லப்படுகிறது. நகரங்களின் கதைகளைப் பேசும் போது ஏன் கதைகளின் கதைகளைப் பேசுகிறோம். கதைகளின் தூல வடிவங்களாக நகரங்கள் இருக்கின்றனவா? அல்லது நகரங்களின் உள்ளுயிராக கதைகள் இருக்கின்றனவா? கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன அதன் வேறு வேறு வடிவங்கள் மீண்டும் மீண்டும் கண்டடையப்படுகின்றன. நகரங்களும் கூட மீண்டும் மீண்டும் பிறந்தும் மீண்டும் மீண்டும் மரித்துக் கொண்டுமேயிருக்கின்றன. பிறந்து, வளர்ந்து, தேய்கிற எதுவும் சுழியத்தின் இயல்பாய் இருக்கிறது. இந்த சுழியத்தின் இயல்பே நகரங்களின் இயல்பாகவும் அதன் கதைகளின் இயல்பாகவும் இருக்கிறது. இங்கு சுழியத்தின் இயல்புள்ள கதைகள் எதுவும் சுழியத்தின் கதைகளே. அக்கதைகள் கொண்ட எல்லா நகரங்களும் சுழியத்தின் நகரங்களே. நகரங்களும் ஓசைகளும் ஒரு நகரம் அதன் ஓசைகளால் தீர்மானிக்கப்படுகிறது. நகரத்திற்கும் ஓசைகளுக்குமான தொடர்பு புரியாத ஆதியின் தன்மையினது. இவ்வுலகில் உள்ள எல்லா நகரங்களும் ஒரே ஓசையின் தன்மையிலேயே அதிர்கின்றன போலும். அந்த ஓசை ஒற்றைப் பெருங்குரலாய் எல்லாக் காலங்களின் எல்லா நகரங்களுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது. நகரங்களுக்கும் ஓசைகளுக்கும் உள்ள உறவைப் புரியாமல் உன் நகரத்தின் கதையை நீ அறிவதெப்படி? ஓசைகளின் கதை நகரங்களின் கதையை விடவும் சிக்கலானது. எல்லா திசைகளிலும் அதிர்கிற ஒற்றைப் பேரோசை தனியாய் மாறுகிற இடமும் எல்லாக் காலங்களுக்குமான எல்லா நகரங்களுக்குள்ளும் தனித்தன்மை கூடுகிற இடமும் ஒரே விதியால் கட்டப்பட்டிருக்கிறதோ என நான் ஐயுறுகிறேன். எல்லா ஓசைகளும், , , , எனத் துவங்கிம்என முடிவதாக சொல்கிறது ஒரு பாடம். ‘ம்ல் துவங்கிம்ல் முடிகிறது சுழியத்தின் ஓசை. சுழியத்தின் ஓசையே நகரத்தின் ஓசை. ஏனெனில் எல்லா நகரங்களும் சுழியத்தின் நகரங்களே. நகரங்களும் வாசனைகளும் வாசனைகள் ஒரு நகரத்தின் இயப்பூக்கமாக இருக்கிறது. நகரத்தின் மர்மங்களை அடைவதற்கான நல்ல கதவுகளில் அதன் வாசனையும் ஒன்று. உண்மையில் வாசனைகளின் கதை என்பது காதல்களின் கதையே. நகரங்களின் வாசனைகள் என்பது நகரங்களின் காதல்களே. நகரங்களின் காதல் என்பது மனிதர்களின் காதலைப் போலவே சுயநலமும் ஆதிக்க மனோபாவமும் கொண்டவை. ஒரு நகரம் எப்போதும் காதலித்துக் கொண்டேயிருக்கிறது. அது எதைக் காதலிக்கிறது என்பதற்கு அதன் வாசனைகளே சாட்சி. நகரத்தின் காதல் வேறு அதன் குடிகளின் காதல் வேறு என்று சொல்வதற்கில்லை. ஒரு நகரம் அதன் குடிகளை தேர்தெடுப்பது போலவே குடிகளும் தங்களின் நகரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது ஒரு பரஸ்பர சம்மதம். எனில் எது நகரத்தின் காதலோ அதுவே அதன் மக்களின் காதல். வாசனைகளின் கதை என்பது காதல்களின் கதை மட்டுமல்ல. காதலின்மைகளின் கதையும், வெறுப்புகளின் கதையும்தான். காதல்களும் காதலின்மைகளும் வெறுப்புகளும் சேர்ந்தே வாசனைகளின் கதையை தீர்மானிக்கின்றன. தன் ஆன்மாவில் மோசமான வாசனையுடைய ஒரு நகரம் எப்போதும் வசீகரமாகவே இருக்கும். ஏனெனில் நகரங்களும் குடிகளும் வாசனைகளின் அடிமைகள். வாசனையோ காதல்களின் அடிமை. தொடரும்...

Monday, February 1, 2010

ஜெயமோகனின் கோவை சந்திப்பு

கடந்த 23.01.2010 அன்று மாலை கோவை சன்மார்க்க சங்க கட்டிடத்தில் வாசகர் சந்திப்புக்காக ஜெயமோகன் வந்திருந்தார். அங்கு அவரிடம் நான் கேட்ட கேள்வியையும் தொடர்ந்து நடந்த இணையவழி உரையாடாலையும் இங்கு பதிந்திருக்கிறேன். அன்புள்ள ஜெ, நலமா? கோவையில் உங்களை தனியாக சந்தித்து பேச ஆசைப்பட்டேன் முடியவில்லை. அந்த கூட்டத்தில் நீங்கள் பேசிய விஷயங்கள் தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன நேரமிருந்தால் பதில் எழுதுங்கள் மகிழ்வேன். 1. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் “ ஒரு சமூக அசைவியக்கத்தின் உள்ளார்ந்த கூறுகள்தான் அந்த சமூகத்தின் மேல்தள அரசியலை (ground Politics) தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. மேல்தள அரசியலானது அச்சமூகத்தின் உள்ளார்ந்த கூறுகளை (கலை, பண்பாடு போன்ற அனைத்தையும்) ஓர் எல்லை வரை பாதிக்கவே செய்கிறது. இவை பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்தும் முரண்பட்டும் இயங்கும் சக்திகளாக இருக்கும் போது ஒரு கலைஞன் மேல்தள அரசியலை பேசமாட்டேன் எனச் சொல்வது எந்த அளவிற்கு சரி? “ என்று கேட்டேன் அதற்கு நீங்கள் அளித்த பதிலானது ஏற்கனவே உங்களது கட்டுரைகளில் நீங்கள் கூறியதாகவே இருந்தது. மேல்தள அரசியலின் போக்குகள் பற்றி ஒரு அரசியல்வாதி, ஒரு சமூக விஞ்ஞானி போன்றோர் கூறும் கருத்துகள் போலத்தான் ஒரு விளைந்த கலைஞனாலும் சொல்ல இயலுமா? ஒருசமூகத்தின் உள்ளார்ந்த ஆன்மாவை மேல் தள அரசியல் எவ்வளவு பாதிக்கிறது என்பதை ஒரு கலைஞனை விட யார் அறிந்து கொள்ள முடியும்? அவ்வாறு தன்னை பாதிக்கும் விஷயத்தின் இயல்பை பற்றி பேச வேண்டியது ஒரு கலைஞனாக நமது கடமையல்லவா? 2.தனக்கு தெரியாத விஷயங்களைக் கூட கலைஞனால் எழுதி விட முடியும் என்று கூறினீர்கள். என் அனுபவத்திலும் நான் உணர்ந்திருக்கிறேன் அது உண்மை. ஆனால் ஒரு கலைஞன் தன் கற்பனையால் (கற்பனை அல்லது தாரணை எது சரி?) எழுதுகிற அனைத்தும் உண்மையே என்று சொல்லிவிட முடியுமா? அல்லது நாம் இப்படி சொல்லிப்பார்க்கலாம் ஒரு இயற்பியல் விஞ்ஞானி கூறுகிற அனைத்தும் சரியாக இருக்க இயலுமா? ஆரியபட்டர், காளிதாசன் இருவர் சொல்வதில் யார் சொல்வது சரி எனில் காளிதாசன் சொல்வது சரி என்றீர்கள். அது ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்ப்பாக வேண்டுமானால் இருக்க இயலும். காளிதாசன்கள் சொல்வதெல்லாம் உண்மை, ஆரிய பட்டர்கள் சொல்வதெல்லாம் தவறு என இருக்க முடியுமா? கலை, அறிவியல் என்ற இரண்டு மானுட அறிதல் முறைகளும் சமபலமானவை என்றே நான் கருதுகிறேன். நவீன இயற்பியல் 50+50=99.99 என்றே கூறுகிறது. இறுதி உண்மை என்பதை அவ்வளவு தீர்க்கமாக தர்க்கத்தாலோ தாரணையாலோ நெருங்க முடியுமா? 3.கடந்த பத்து ஆண்டுகளில் என்னை பாதிக்கும் கவிதைகள் ஏதும் வரவில்லை என்றும் முகுந்த் நாகராஜன் என்னை கவர்ந்த கவிஞர் என்றும் கூறினீர்கள். எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் கவிதை சில முக்கியமான மாற்றங்களை அடைந்திருக்கிறது. அது விரிவான பொறுப்பான ஒரு ஆய்வுக்குப்பின் பேசப்பட வேண்டிய விஷயம். தமிழ்க் கவிதை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பன்மைதுவத்தால் நிரம்பி வழிவது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான். அதில் முகுந்த் நாகராஜன் ஒரு முகம் அவ்வளவே. அது போல எண்ணற்ற முகங்கள் தற்போதைய நவீன தமிழ் கவிதைக்கு உண்டு. தற்போதைய தமிழ் சூழலின் பலமாகவும் பலவீனமாகவும் இந்த பன்மைத்துவமே உள்ளது. உண்மையில் எல்லா தசமங்களைப் போலவே இந்த தசமத்திலும் சில நல்ல கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். உங்களைப் போன்ற ஒரு மூத்த எழுத்தாளர் சூழலை சற்று அவதானித்து ஒரு கட்டுரை எழுதுவது எங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். வணக்கத்துடன் இளங்கோ கிருஷ்ணன் அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன், உங்கள் கேள்விகளுக்கு என் நோக்கில் பதில் சொல்ல முனைகிறேன். 1. 'எனது அரசியல்' என்ற கட்டுரையில் நீங்கள் கேட்ட இக்கேள்விக்கான என் பதிலை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். பிறிதொரு கேள்விக்குப் பதிலாக கோவையிலும் அதையே சொன்னேன். எழுத்தாளன் அவன் எழுத்தாளன் ஆனதனால், அவனைக் கவனிப்போர் இருப்பதனால், எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லவேண்டுமென்பதில்லை. அது ஒருவகை அதிகப்பிரசங்கித்தனம். ஓர் எழுத்தாளானக நின்று மட்டுமே அவன் பேசவேண்டும். குடிமகனாக அவன் பேசும் விஷயங்கள் எல்லா குடிமக்களும் பேசும் சாதாரண விஷயங்களாகவே இருக்கும். அவற்றை அவன் எழுத்தாளன் என்ற அடையாளத்துடன் சொல்ல வேண்டியதில்லை. அத்துடன் எழுத்தாளன் உணர்ச்சிகரமானவனாக, சஞ்சலங்கள் கொண்டவனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பல தளங்களில் ஐயங்கள் அல்லது தடுமாற்றங்கள் கொண்டவனாக அவன் இருக்கலாம். அந்நிலையில் அவன் மௌனமாக இருப்பதே நல்லது. அன்றாட அரசியல் சார்ந்த தளங்களில் ஓர் அரசியல்விமரிசகன் சொல்லும் விஷயங்களுக்கு சீரான ஒரு வளர்ச்சிப்போக்கும் முழுமையும் இருக்கும். அந்த அரசியல்விமரிசகனின் தரப்பு இன்னது என நீங்கள் வகுத்துக்கொள்ள முடியும். எழுத்தாளன் அவ்வப்போது நிகழ்பவற்றுக்கு தன் ஆன்மாவை திறந்து வைப்பவனாகவே இருப்பான். அவனது எழுத்து உடனடியாக நிகழ வேண்டிய ஒன்று. ஆகவே அவனிடம் முரண்பாடுகள் அதிகம் இருக்கலாம். அனைத்தையும் விட முக்கியமாக ஒன்றுண்டு. எழுத்தாளன் எழுதும்போது அந்தப் படைப்பூக்கக் கணத்தில் அடையும் உச்சமே அவன். மற்ற நேரத்தில் அவன் சாமானியன். அந்தச் சாமானியன் அரசியல் குறித்தெல்லாம் சொல்லும் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. உதாரணமாக தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான அனைவருமே நெருக்கடிநிலையை ஆதரித்தார்கள் -சுந்தர ராமசாமியைத் தவிர. ஆக, அரசியல் போன்றவற்றில் எழுத்தாளன் ஈடுபடச் சாத்தியமான இடம் மிகக்குறைவான ஒன்று. அரசியலில் உள்ள விழுமியங்கள் குறித்து அவன் பேசலாம். அது பண்பாட்டுத்தளத்தை தீண்டும் இடங்களைப்பற்றிப் பேசலாம். அப்போதுகூட அவனை ஒருவிஷயம் சீண்டி உணர்வெழுச்சி பெறச்செய்யுமென்றால் மட்டுமே அவன் பேச வேண்டும். அதையே எழுத்தாளனின் அரசியல் என்கிறேன். எழுத்தாளனாக மட்டுமே நின்று கொள்ளும் தரப்பு அது. அது உறுதியான கோட்பாடுகள் அல்லது நிலைபாடுகளை நம்பியது அல்ல. ஒரு நல்ல கதையை எழுதும்போது ஏற்படும் அதே மன எழுச்சியுடன் ஓர் அரசியல் சிக்கலை அவன் எதிர்கொள்ளும்போது உருவாகும் அரசியல் அது. படைப்பைப்போலவே அங்கும் தன் மனசாட்சியை, ஆழ்மனதையே அவன் திறந்து வைக்கவேண்டும். அவ்வாறு அவன் சொல்லும் கருத்துக்கள் அரசியல் ஆய்வாளர்கள், இதழாளர்கள் சொல்லும் கருத்துக்கள் நிரப்பாத ஓர் இடத்தை நிரப்பக்கூடியனவாக இருக்கும். அவற்றுக்கென ஒரு தனித்தன்மை இருக்கும். சமயங்களில் தர்க்கமற்ற ,அபத்தமான கருத்துக்களாகவும் அவை இருக்கலாம். ஆனாலும் அவை முக்கியமானவை. அப்படி அரசியலை எழுதிய மலையாள எழுத்தாளர்களான 'ஆனந்த்' 'ஓ.வி.விஜயன்' போன்றவர்களையே நான் எனக்கு முன்னுதாரணமாகக் கொண்டு வருகிறேன். அந்த வழியில் தொடர்ச்சியாக அரசியலைப்பற்றி எழுதியும் வருகிறேன். 2 .கலைஞன் சொல்வதே சரி, பிறர் சொல்வது அல்ல என்று நான் சொல்லவில்லை. காவியகர்த்தனுக்கும் சாஸ்திர ஆசிரியனுக்கும் இடையே முரண்பாடு தெரிந்தால் காவியகர்த்தனையே பிரமாணமாகக் கொள்ளவேண்டும் என்று நம் மரபு சொன்னதென்றால் காவியகர்த்தனை வெறுமே கற்பனாவாதி என்று அது பார்க்கவில்லை என்றே பொருள். அதற்காகவே கோவையில் அதைச் சொன்னேன். காவியகர்த்தன் இருஅம்சங்களால் சாஸ்திர ஆசிரியனுடன் வேறுபடுகிறான். 1. தன் ஆழ்மனதை அவன் கருவியாக்குகிறான். பழைய மொழியில் சொல்வதானால் ஆன்மாவால் அறிகிறான் 2. அவன் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறான். பகுப்பாய்வுசெய்வதில்லை. அதாவது அவனுடையது ஆய்வுண்மை அல்ல தரிசன உண்மை. இதை இப்படிச் சொல்லலாம், ·ப்ராய்டா தஸ்தாயெவ்ஸ்கியா என்றால் எவரை நான் நம்புவேன்? கண்டிப்பாக தஸ்தாயெவ்ஸ்கியைத்தான். ஆனால் இது அறிவியலை நிராகரிப்பதாகாது. அறிவியல் செயல்படும் தளங்கள் வேறு. அங்கே அதன் கொடைகளும் வேறு. நல்ல இலக்கியம் சமகால அறிவியலின் சாரத்தை தன்னுள் வாங்கித்தான் முன்னேற முடியும். அறிவியல் அறிவது அறிவியலுண்மை. இலக்கியம் அறிவது இலக்கிய உண்மை என்று சொல்லலாம். உண்மைகள் எப்போதும் ஒன்றல்ல. அவற்றின் தன்மைகள் பல. முதல்முழு உண்மை என்ற ஒன்று உண்டா? உண்டு என நம்புகிறவன் நான். An Absolutist. அது முழுமையான அறிதல் மூலம் சாத்தியமாவது. அந்த முழுமை நோக்கிய பயணத்தில் அறிவியலும் இலக்கியமும் துணைவரலாம். இலக்கியம் ஒருபடி மேலாக. ஏனென்றால் அதில் உள்ள முழுமைசார் அணுகுமுறை இன்றைய அறிவியலில் இல்லை. 3 இலக்கியம் குறித்து, அல்லது இந்திய தத்துவம் குறித்து ஓர் நான் ஒரு கருத்தை எங்கு எப்படிச் சொன்னாலும் அதற்குப்பின்னால் 'பொறுப்பான' பல ஆண்டுக்கால அவதானிப்புகளும் ஆய்வும் உண்டு என நம்புங்கள். கவிதை குறித்தும் அப்படியே. என்னளவுக்கு தமிழ்க்கவிதையை வேறு யாரும் கவனிக்கிறார்கள் என்பதற்கு எழுத்தில் ஆதாரமில்ல்லை கடந்த பத்தாண்டுகளில் என்னைப்பாதிக்கும் கவிதை ஏதும் வரவில்லை என்று நான் சொல்லவில்லை. பல கவிதைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். கவிஞர் என எவரும் வரவில்லை என்றே சொல்கிறேன். அதற்கான விளக்கங்கள் பல. ஒன்றைமட்டும் சொல்கிறேன். கவிதையின் ஆதாரமான செயல்பாடுகளில் ஒன்று பரிச்சயமழிப்பு. சொல்லும் விஷயங்களில் அது உருவாக்கும் பரிச்சயமழிப்பே கவிதையனுபவத்தின் முதல் மனஎழுச்சியை அளிக்கிறது. அதேபோல கவிமொழியில், கவி வடிவில் உள்ள பரிச்சயமழிப்பும் முக்கியமானது. சென்ற பத்தாண்டுகளில் வந்த கவிதைகள் எதுவும் மன எழுச்சியூட்டுமளவுக்கு புதுமொழியுடன், புது வெளிப்பாட்டுடன் அமையவில்லை என்பதே உண்மை. இதை விமர்சன மொழியறியா வாசகன் அத்தனை கவிதைகளும் ஒன்றுபோலிருக்கின்றன என்று , சரியாகத்தான், குறிப்பிடுவான். கலாப்ரியா வந்தபோது, தேவதேவன் நுழைந்தபோது, சுகுமாரன் அறியப்பட்டபோது, ஏன் மனுஷ்யபுத்திரன் ஆரம்பித்தபோது புதியகவிமொழியின் ஒளியால்தான் அவர்கள் கவனம்பெற்றார்கள். இன்று கவிதைமொழியின் தனித்துவத்தால் தன்னை அடையாளம் காட்டும் எந்த இளம்கவிஞரும் இல்லை. ஆகவேதான் முகுந்த் நாகராஜன் முக்கியமானவராக ஆகிறார். அவரது கவிதைகளின் முதல் இயல்பே அவற்றின் புத்தம் புதிய தன்மை. அதுகொடுக்கும் பிரகாசம். அவரது மொழியில் இருக்கும் சரளம் இன்றைய கவிதைகளின் சவால்களில் ஒன்று. நவீனக் கவிதை உலகமெங்கும் படிமங்களை விட்டு விலகி நுண்சித்தரிப்புகளால் ஆனதாக ஆகிக்கொண்டிருக்கிறது. தமிழில் அழகிய நுண்சித்தரிப்புகள் கொண்ட கவிதைகள் முகுந்த் நாகராஜன் எழுதுபவை. இந்தப் புதுமொழியை செயற்கையாக உருவாக்கிக் கொள்ள முடியாது. இது கவிதையின் பாடுபொருளுடன் இணைந்திருக்கிறது. நம்முடைய கவிதை இன்றும் நவீனத்துவ யுகத்திலேயே நின்றுகொண்டிருக்கிறது. 'தனிமனிதனின் அந்தரங்க சிந்தனைகள்' என்ற ஒரு பொத்தாம்பொதுவான வரையறைக்குள் ஏறத்தாழ எல்லா கவிதைகளையும் அடக்கிவிடலாம். அதற்குள் படிம உருவாக்கம், உருவக மொழி என கவிதை உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கவிதை வாசிப்பவன் நான். இருபத்தைந்தாண்டுகளாக! பெரும்பாலான கவிதைகள் சலிப்பையே அளிக்கின்றன. முன்னரே வாசித்தவையாக , வேறு ஒருவர் எழுதி விட்டவையாக தோற்றம் அளிக்கின்றன. ஒருபோதும் கவிதை அந்த உணர்வை அளிக்கக்கூடாது. அதன் முதல் இயல்பே பிறிதொன்றிலாததன்மை -- அல்லது அந்த உணர்வை ஏற்படுத்தும் தன்மைதான். [அனன்யத என்று அதை பழைய இலக்கணம் சொல்லும்] அதுவே முதல் பரவசத்தை உருவாக்குகிறது. தமிழின் மிகப்பெரும்பாலான நவீனக்கவிதைகள் செயற்கையான இறுக்கம் கொண்டவையாக, மொழிச்சிடுக்குகள் கொண்டவையாக, போலியான தத்துவத்தோரணையுடன் [அதே இருத்த்லியல் சோகம்] உள்ளன. விதிவிலக்குகள் கூட சிறிய அளவில்தான் விதிவிலக்காகின்றன. தமிழில் நல்ல கவிதைகள் வருகின்றனவா? ஆம். ஆனால் அவை பெரும்பாலும் சிறு வேறுபாடுகளை, சிறு நுட்பங்களை மட்டுமே கொண்டுள்ளன. ஒருகவிஞனுக்கும் இன்னொரு கவிஞனுக்கும் இடையே உள்ளது சிறிய வேறுபாடு. அவனுடைய ஒருகவிதைக்கும் இன்னொன்றுக்கும் இடையே உள்ளதும் அதேபோல சிறிய வேறுபாடே. நான் கவிஞனிடம் அதிகமாக எதிர்பார்ப்பவன். அவன் மொழியின் முன்னோடி விசை என எண்ணுபவன். சில்லறை நுட்பங்களை உருவாக்குபவனாக அவனைக் கண்டு திருப்தி கொள்பவனல்ல. இந்த விஷயங்களைப்பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறேன். 'உள்ளுணர்வின் தடத்தில்', 'நவீனத்துவத்திற்குப் பின் கவிதை- தேவதேவனை முன்வைத்து' 'ஈழ இலக்கியம்' போன்ற விமரிசன நூல்களில். துரதிருஷ்டவசமாக பெரும்பாலான கவிஞர்கள் எதையுமே வாசிப்பதில்லை. ஆகவே அவர்களின் எல்லைகளும் பலவீனங்களும் அவர்களுக்கே தெரிவதில்லை. விமரிசகனின் நிராகரிப்பை எதிர்பார்ப்பாக விளங்கிக் கொள்ளுங்கள். அது ஒர் அறைகூவலும்கூட ஜெ அன்புள்ள ஜெ, உங்கள் பதிலுக்கு நன்றி!. உண்மையில் உங்கள் பதில் என்னைச் சற்று பதற்றமடையச் செய்திருக்கிறது. ஆனால் நிச்சயம் சோர்வடையவில்லை. நான் சோர்வடையவும் மாட்டேன் ஏனெனில் நான் உங்கள் மாணவன். உங்களை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு விமர்சகனாக ஒரு கவிதையியல் மாணவனாக நீங்கள் குறிப்பிடுகிற விஷயங்களை நான் ஓர் எல்லை வரை உடன்படுகிறேன். தமிழில் தற்போது எழுதப்படும் கவிதைகளில் (என் கவிதைகள் உட்பட) இருத்தலிய சிக்கல்களே எழுதுவதற்கான மன உந்தத்தை அதிகமும் வழங்கி வருகிறது. ஆனால் மீண்டும் சொல்கிறேன். அதிலிருந்து விடுபடுவதற்கான திமிறல்கள் நிறைந்த இளங்கவிஞர்கள் இருக்கவே செய்கிறார்கள். (என் கவிதை உலகமோ, இசை, நரன், செல்மா பிரியதர்ஸன் போன்றோர் கவிதை உலகமோ வெறும் இருத்தலிய சிக்கல்களால் நிறைந்தது அல்ல அதனாலேயே அவைகள் புதிய சொல்லாடகள் புதிய வடிவம் போன்றவற்றை கொண்டிருக்கிறது என்பதும் உண்மை) நீங்கள் சொல்கிற விஷங்களை பற்றிய புரிதல் நிரம்பிய இளைஞர்கள் தமிழில் இப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். வணக்கத்துடன் -- elango krishnan அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன் வற்றாத ஊக்கமே கவிஞனை உருவாக்குகிறது. நீங்கள் சோர்வடையவில்லை என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் சொன்ன கருத்துக்கள் விவாதத்துக்காகவே. இன்றைய உலகக் கவிதையின் போக்குகள் குறித்து, இன்று வடிவரீதியாக கவிதை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து என் கட்டுரைகளில் நிறையவே எழுதியிருக்கிறேன். புதிய கவிஞர்களிடமிருந்து எனக்கு எதிர்வினைகளே வந்ததில்லை. சிறு உதாரணம், எம்.டி.வி போன்ற ஓர் காட்சி ஊடகம் படிமங்கள் என்ற வடிவையே ஓர் அன்றாடப்பொருளாக ஆக்கி , மிதமிஞ்சிப் பெருக்கி, அர்த்தமிழக்கச் செய்துவிட்டது. அதற்கு எதிராகவே உலகமெங்கும் வெற்றுக்கவிதை [பிளெயின் பொயட்ரி]என்ற வடிவம் உருவாகி வந்தது. சட்டென்று அதுவும் சலித்து நுண் சித்தரிப்புகளினாலான கவிதை நோக்கி கவிதை நகர்ந்தது... இதைப்பற்றிய கவனமெல்லாம் நம் கவிஞர்களிடம் இருக்கிறதா என்ற ஆழமான ஐயம் என்னிடம் இருக்கிறது.. நான் தொடர்ச்சியாக கவிதை குறித்த உரையாடல் அரங்குகள் நிகழ்த்தியிருக்கிறேந்- அவை விரிவாக பதிவாகியும் உள்ளன. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இவற்றைப்பற்றிப் பேசலாம். என்ன பிரச்சினை என்றால், நம் கவிஞர்களில் பெரும்பாலானவர்கள் குடித்துவிட்டு பேசுவதையே கவிதைவிவாதம் என நினைக்கிறார்கள். கவிதை குறித்த விவாதம் என்பது மிகுந்த பிரக்ஞைவிழிப்பு நிலையில், பயன்படுத்தப்படும் சொற்களைப்பற்றிய அபாரமான கவனத்துடன் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்று. சொல்லப்போனால் ஒருமுழுநாள் பேசிய பிரகே ஒருவர் சொல்ல வருவதென்ன என்று இன்னொருவருக்குப் புரியும். தப்பான ஒரு நபர் இடையே புகுந்துவிட்டால் மொத்த விவாதமும் சீரழியும். அந்நிலையில் ஆரம்பிக்கும்போதே முழுப்போதையில் இருந்தால் என்ன பேச்சு நிகழும்? நான் பல அராங்குகளில் அந்த கேலிக்கூத்தைக் கண்டிருக்கிறேன். பின்னர் தோன்றியது தங்கள் இயலாமையைத்தான் நம் சில்லறைக் கவிஞர்கள் குடியில் மறைக்கிறார்கள் என... ஏதேனும் ஒரு தருணத்தில் தெளிவுடன் அமர்ந்து நாம் விவாதிக்கலாம் ஜெ

Friday, January 29, 2010

என் இரண்டு கவிதைகள்

எங்கள் ஆறு எங்களுக்கும் ஒர் ஆறுண்டு வெறுமணல் பரப்பாய் விரிந்து கிடக்க ஒணான்கள் முட்டையிட கள்ளிகள் பிழைத்திருக்க பிள்ளைகள் விளையாட பெண்டுகள் ஒதுங்கிட பன்றிகள் மேய்ந்திருக்க வானத்தில் மேகமுண்டு சூரியனில் மழையுண்டு காகமோ குருவியோ நிழல் ஒதுங்க ஆறெங்கும் முள் மரமுண்டு எங்களுக்கும் ஒர் ஆறுண்டு ஆற்றுக்கோர் ஊருண்டு ஊருக்கோர் சனமுண்டு வாழ்வைப் போல் ஒன்றுண்டு குளம் நெற்றிப்பொட்டில் நினைவு நிறுத்தி நெஞ்சுக்குள் நிலவு வளர்க்கும் குளத்தின் ஆழத்தில் ஒயாது சலம்புகிறது ஒரே ஒரு மீன் பெளர்ணமியில் நீந்தும் வெறியில் பாய்ந்து ஒரு கணம் வானத்தில் நீச்சல் சரிந்து மறுகணம் நீருக்குள் பறத்தல் என ஒரு நொடியும் ஒயாத சலனம் தளும்பலில் கரையேறி கரையேறி திரும்பும் குளம் நீரெங்கும் சிதறி நிலவு-முகம் சேர்வதற்குள் மீண்டும் ஒரு பாய்தல் மீண்டும் ஒரு சரிதல்
நன்றி: 'உயிர்மை' இதழ்

Sunday, January 24, 2010

குறள் – ஓர் உரையாடல்

ஒரு முறை சேலத்தில் தங்கியிருந்த போது ஒரு இளம் கவிஞரிடம் திருக்குறள் நீதி நூலா? கவிதை நூலா? எனக் கேட்டேன் அவர் சற்றும் யோசிக்காமல் நீதி நூல் என்றார். நான் அவரிடம் “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்... “ என்ற குறளை குறிப்பிட்டு அதில் உள்ளது கவிதையில்லையா அந்த அறச்சீற்றம் கவிஞனுக்கானது இல்லையா என்றேன் அவர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். ஏதேனும் ஒன்றிரண்டு பாடல்களில் கவிதைத்தன்மை இருக்க கூடும் மற்றபடி ஒட்டு மொத்தமாக அது கவிதை நூல் எனக் கூறுவது கடினம் என்றார். வேறொரு சந்தர்ப்பத்தில் மகாகவிகள் பற்றி கோவை ஞானியிடம் உரையாடிக்கொண்டிருந்த போது அவரும் திருக்குறள் பற்றி இதைப்போலவே ஒரு கருத்து சொன்னார். கடந்த பதினைந்து ஆண்டுகளில் நான் திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கும் செவ்வியல் நூல்களில் திருக்குறள் பிரதானமானது. என்னுடைய இருபதாவது வயதில் நானும் திருக்குறள் ஒரு கவிதை நூல் அல்ல என்றே நம்பினேன். திருக்குறள் பற்றிய இந்த உரையாடல் காலகாலமாக தமிழ் சூழலில் நடந்து வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு குறளிலும் ஒரு கருத்து கூறப்படுவதுதான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. நவீன கவிதையியல் கருத்தாக மட்டுமே சொல்லப்படும் எதையும் கவிதை இல்லை என்றே பெரும்பாலும் வாதிடுகிறது. அதற்கு முன்வைக்கப்படும் தர்கங்களும் கூட நியாமானதே. கவிதை என்பது ஒரு போதும் அறிவார்ந்த ஒரு கூற்றை மேல்மனதிலிருந்து கூறுவதாக இருக்க முடியாது. ஒரு நல்ல கவிதையானது உணர்வுபூர்வமாக கதறுவதே அன்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு பிரசங்கம் அல்ல. அப்படியானால் கவிதையில் கருத்து சொல்லப்பட கூடாதா எனில் சொல்லப்படலாம் அதுவும் உணர்வுபூர்வமான ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டுமே அன்றியும் போதமனதின் சொல்லாக அல்ல. அடிப்படையில் எல்லா விஷயங்களையும் ஒரு தகவலாக ஒரு செய்தியாக அறிவார்த்தமான ஒரு நடவடிக்கை வழியாகவே சேகரித்துக் கொள்கிறோம். பின்பு மெல்ல எண்ணற்ற காரணங்களால் அந்த தகவல் அல்லது செய்தியானது உணர்வு பூர்வமாக மாறுகிறது. உதாரணம்: அம்மா, மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களை பற்றிய நம் மனப்பதிவுகளை சொல்லலாம். நமக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் மரணம் ஒரு செய்தியாகவே கிரகிக்கப்படுகிறது. பின்பு அவர்களைப்பற்றிய நினைவுகள் அவரது மரணத்தை பற்றிய அறிவார்த்தமான செய்தியால் தூண்டப்பட்டு உணர்வுப்பூர்வமாக நாம் மாறி விடுகிறோம். கவிதை என்பது உணர்வுபூர்வமாக நாம் மாறும் தருணத்தில் நிகழ்கிற ஒரு சமாச்சாரம் எனவே உணர்வுபூர்வமாக மாறிவிட்ட செய்தியின் அளவிற்கே ஒரு கருத்து அதில் நிற்க முடியும். ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம்’ என்கிறார் வள்ளுவர். இந்த குறளில் வள்ளுவர் கூற வந்தது என்ன ஏரின் பெருமையைதானே. ஆனால் இதில் ஒரு தகவலை நமக்கு சொல்லி விடுகிறார். உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை சொல்லி விடுகிறார். உண்மையில் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பது வாசிப்பு அல்லது கேட்டல் வழியாக ஒரு தகவலாகவே வள்ளுவரிடத்து வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஏரின் பெருமையை சொல்ல நேர்ந்த போது உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது எதன் பின் என்றால் ஏரின் பின் என்கிறார். ஒரு தகவல் ஒரு கவிதையில் இப்படித்தான் கவிஞனின் பிரக்ஞை இல்லாமல் வந்து சேரவேண்டும். திருக்குறள் என்ற நூலில் உள்ள எல்லா வெண்பாக்களுமே இப்படியான பிரக்ஞையின் அனுமதியற்ற கருத்துகளாகவே இருக்க ஏலும். அல்லது ஒரு கருத்தைப்பற்றிய உணர்வுபூர்வமான நிலைப்பாடுகளாக இருக்க கூடும். தன்னுள் தளும்பித் தத்தளிக்கும் கோடான கோடி கருத்தியல்களின் நீண்ட போரட்டமே திருக்குறள். ஒரு பல்லாக்கு போகிறது ஒருவன் அமர்ந்து செல்கிறான். நால்வர் தூக்கிச் செல்கிறார்கள். வள்ளுவனுக்கு மனம் பதைக்கிறது. இது பாவம் என்கிறான். இதெல்லாம் ஏன் என்று எண்ணுகிறான். இது அவர்கள் விதி, வினைப்பயன் என்று தர்க்கம் சொல்கிறது. என்ன விதியென்றாலும் மனிதர் நோக மனிதர் சுகிப்பதோ என மறுகுகிறான். காரண காரியங்களை புரிந்து கொள்ள முயன்று தோற்கிறான். அறம் எதுவென தவிக்கிறான். இதுதான் அறம் என சொல்ல நான் யார் நான் இதுதான் அறம் என ஒன்றை சொல்ல இறுதி உண்மை வேறொன்றாக இருந்தால் என்ன செய்வதென தயங்குகிறான். இனம் புரியாத குற்ற உணர்வில் “அறத்தாறு இதுவென வேண்டா” என தன் மனதிற்கு சொல்கிறான். இதை கவிதை இல்லை என நாம் சொல்ல முடியுமா? தத்துவமோ கலையோ கொதி நிலையில் செயல்படுகிற போது மனித மனம் ஒன்று போன்ற அனுபவத்தையே உணர்கிறது. தனித்தனி உடல்செல்களாக பிரிவதற்கு முன் அனைத்தும் ஸ்டெம் செல்களாக இருப்பது போலவே அறிவு உணர்வென பிரிவதற்கு முன் அனைத்து அனுபவங்களும் ஒன்றாக இருக்கிறது போலும். இப்படியான ஒரு மையப்புள்ளியில் இருந்து கிளம்பியே குறள் போன்ற படைப்புகள் வெளிப்படக்கூடும் என நம்புகிறேன். அனைத்து மத நூல்களும் கவிதைக்கு நெருக்கமான உரையாடல் மொழி கொண்டிருப்பதையும் இதனோடு இணைத்து நாம் யோசிக்கலாம்.
உலக இலக்கிய வரலாற்றில் இப்படி தத்துவங்களின் தர்கங்களுக்கும் கவிதைக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மேதைகள் நிறைய உள்ளனர் வள்ளுவர் முதல் நீட்ஷே வரை. யாருக்கு எப்படியோ நான் அவர்களை கவிஞன் என்றே அழைப்பேன்.