
அதற்கே
ஒரே ஒரு மதுப்போத்தல்
அதற்கே நான் வந்தேன்
நகரெங்கும் படுகளம்
ஊரே பிணக் காடு
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
நிலமெங்கும் கொடுநாகம்
நீளும் வழி பாதாளம்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
குன்றெங்கும் எரிமலை
குறும்புதரில் கொள்ளிவாய்கள்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
கடலெங்கும் பேய் அலைகள்
கரையெல்லாம் முதலை
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
வனமெல்லாம் புலிக்கூட்டம்
மரந்தோறும் வேதாளம்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்
வானெங்கும் விஷக்காற்று
திசையெல்லாம் மின்னல்
ஆனாலும் வந்தேன்
ஒரே ஒரு மதுப்போத்தல்
அதற்கே நான் வந்தேன்
காப்பி நதி
காப்பி நதியின்
கரையில்
அமைந்துள்ளது
உன் நகரம்
கரையெங்கும்
கிளைக்கும் தாவரங்கள்
காய்ந்தபின்
காப்பி நிறத்திற்கே
திரும்புகின்றன
காப்பி வாடை வீசும்
மனிதர் உதடுகளில்
உருள்வது
காப்பியின் மொழி
காப்பி வண்ண மண்ணில்
அனைத்தும்
காப்பியின் ரூபம்
சந்திர சூர்யர் ஒளியில்
காப்பியின் பிசுப்பு
மின்னலின் ருசியில்
காப்பியின் கசப்பு
காப்பி நதி குடிக்க வயிறு உண்டோ யயாதி
காப்பி நதி கடக்க தோணி உண்டோ யயாதி
காப்பி நதி கடந்தால் காலம் உண்டோ யயாதி
19ம் நாள் யுத்தம்
இரவு வெகுநேரம்
கதவு தட்டப்பட
திறந்தேன்
நின்றிருந்தது
என் பிரேதம்
இன்றைய யுத்தத்தின்
வரவு செலவு அறிக்கையை
விவாதிக்கத் துவங்கினோம்
இறுதியில் எஞ்சியிருந்தன
மாலை சூரியனும்
கொஞ்சம் கையெறி குண்டுகளும்
குற்றுயிரான நம்பிக்கையும்
சில முளைக்காத சொற்களும்
தீக்கிரையான நகரத்தில்
பிணங்களின் சென்செக்ஸ்
இன்று சரிந்திருந்தது
இன்றைய புகாரின் சூத்திரம்
என்ன என்றேன்
நமது திருவிழாக்களை
வழிப்பறி செய்யும்
ஆரலைக் கள்வர்கள்
என் மதுக்குடுவையை
பிடுங்கிக்கொண்டார்கள் என்றது
பிறகு யுத்தத்தின் முடிவைப் பற்றி
வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்
நான் இறக்கும் வரை
" பிறகு யுத்தத்தின் முடிவைப் பற்றி
ReplyDeleteவெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்
நான் இறக்கும் வரை "
INTHA VARIKKUL AAYIRAM KATHAIKAL IRUKKAKKOODUM.