Saturday, November 14, 2009

லெவி-ஸ்டிராஸின் மரணம்

உலகின் தலைசிறந்த மானுடவியல் ஆய்வாளரும் நவீன மானுடவியலின் தந்தை எனப் போற்றபடுபவரும் 3 தலைமுறைகளாக ஐரோபிய அறிவுச் சூழலை பெரிதும் பாதித்திருப்பவருமான கிளோது லெவி-ஸ்டிராஸ் கடந்த 3ம் தேதி தனது 101 வயதில் பிரான்சில் காலமானார். லெவிஸ்டிராஸ் என்ற பெயர் எனக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது. எங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு’ என்ற நூலை படித்திருந்த சமயம் அது என்னை மிகவும் பாதித்திருந்தது. சமூகம் சார்ந்த என் பார்வைகளை கூர்மையாக்கிய முக்கியமான நூல்களில் அதுவும் ஒன்று. அந்த நூலை படித்தது முதல் மானுடவியல் எனக்கு மிகவும் ஈர்ப்புடைய துறைகளில் ஒன்றாகிப் போனது. தொடர்ந்து அது சார்ந்த நூல்களை தேடத் தொடங்கிய போது நான் லெவிஸ்டிராஸிடம் வந்து சேர்ந்தேன். லெவிஸ்டிராஸ் தொன்மவியல் பற்றி பேசிய விஷயங்கள் எனக்கு தொன்மங்களின் மேல் அளவுகடந்த காதலை உருவாக்கியது. இன்று வரை என்னால் தொன்மங்களின் மீதான வசீகரத்திலிருந்தும் லெவிஸ்டிராஸிடமிருந்தும் முழுதாக வெளிவர முடியவில்லை. அவர் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவராக இருந்ததிற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு என நான் கருதுகிறேன். எனக்குள்ள பைத்தியங்களில் சில அவருக்கும் உண்டு. அதாவது: தத்துவம், வரலாறு, இலக்கியம், இசை. இலக்கியம், இசை போன்ற கலை சார்ந்த வடிவங்கள் அவருள் ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகள் தத்துவ ஆர்வம் அவருக்கு வழங்கிய தர்க்கம் ஆகியவையால் அவரால் தொன்மங்களை மிக அழகாக விளக்க முடிந்தது. ஒவ்வொரு தொன்மமும் ஒரு மொழியின் அமைப்பை கொண்டது எனச்சொல்லும் லெவிஸ்டிராஸ் வரலாறு என்பதே ஒரு புனைவுதான் என்கிறார். பழங்குடி வாழ்வின் மீது அவருக்கிருந்த ஆழமான அவதானம் மானுடவியல் சார்ந்த பல முக்கியமான தெளிவுகளை வழங்கியது. அவரது பல நிலைபாடுகள் மானுடவியலாளர்களை மட்டுமல்லாது. தத்துவம், வரலாற்றியல், சமூகவியல் போன்ற பல துறைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சார்த்தருக்கும் அவருக்கும் நடந்த கருத்து யுத்தம் வரலாற்று புகழ் பெற்றது. உலகம் முழுதையும் இருத்தலியம் பிசாசை போல் உலுக்கி கொண்டிருந்த போது ஒரு மதங்கொண்ட பசித்த யானை காட்டுக்குள் நுழைவதைப்போல் தத்துவத்துக்குள் நுழைந்தன அவரின் அமைப்பியல்வாத கருத்துக்கள். ‘என்ன இருந்தாலும் அவர் ஒரு எதிர்-மார்க்சியர் தானே?’ என்று கேட்டார் ஒரு தோழர். உண்மைதான். மார்க்சியத்தின் வரலாற்று வாதம் போன்ற விஷயங்களை லெவிஸ்டிராஸ் கடுமையாக மறுத்தார் என்ற போதும் அடிப்படையில் அவர் ஒரு இடதுசாரி சுபாவம் உடையவர். ஆனால் பெரும்பாலான இடதுசாரிகளைப் போல வறட்டு கார்டீசிய அணுகுமுறைகளோ பேகனிய பார்வைகளோ அவரிடத்தில் இல்லை. தத்துவங்களுள் உள்ள கலையார்ந்த அம்சங்களையும், கலைப்படைப்புகளுள் உள்ள தத்துவார்த்தமான பகுதிகளையும் பற்றிய ஒரு தெளிவான புரிதலோடுதான் இயங்கினார். மனிதன் என்ற ஜீவராசியை ஒரு அல்ஜீப்ரா போல விளக்கிவிட முடியும் என்று அவர் நம்பினார். அதற்கான வழியை வெறும் தர்க்க-கணிதமுறைமைகளில் அவர் தேடவில்லை மாறாக கலையின் தன்மை மிகுந்த முறைமைகளை கையாண்டார். தத்துவார்த்தமான சாரம்சத்தோடு கலைநடவடிக்கைகளில் ஈடுபட்டவர் சார்த்தர் எனில் கலையார்தமான சாரம்த்தோடு தத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் லெவிஸ்டிராஸ் என நான் புரிந்து கொள்கிறேன். சென்ற வருடம் நவம்பர் மாதம் லெவிஸ்டிராஸ் இறந்து விட்டது போலவும் அச்செய்தியை நான் நாளிதழில் படிப்பது போலவும் ஒரு கனவு வந்தது. என் நண்பர்கள் ந.முத்துவிடமும், இசையிடமும் இன்னும் ஒரு வருடமாவது இருந்திருக்கலாம் 100 வயதை பார்த்திருப்பார் என்று அங்கலாய்துக் கொண்டிருந்தேன். நான் கண்ட அந்தக் கனவு அவருக்கு எப்படி தெரிந்ததோ சரியாக ஒராண்டுகள் கழித்து இந்த நவம்பரில் இறந்திருக்கிறார். ஒரு நேர்காணலில் அவரே சொன்னது போல லெவிஸ்டிராஸ்தான் இறந்திருக்கிறார் அவர் பயணம் இன்னும் உள்ளது. மானுடகுலத்தின் ரகசியங்களை குறியீடுகளாக மினுக்கியபடி பண்பாடுகள் தோறும் உறைந்துள்ளன எண்ணற்ற தொன்மங்கள். தன் முதிர்ந்த அனுபவத்தாலும் மேதமையாலும் அவைகளை வாசித்து விளக்க அந்த மனிதர்தான் இல்லை. “ஆசுஆகு எந்தை யாண்டுளன் கொல்லோ”.