Thursday, October 1, 2009

கவிதை

அகவன் குறிப்புகள் ஒன்று பைத்தியம்! ஒரு தாழம்பூவைப் போல மின்னலை நக்க விரும்பினாயோ என் அதிகுரங்கே, மனிதனே? அரவத்தின் வாயிலிருந்தோர் பிளவுச் செம்மின்னல் மின்னி மறைந்து கொண்டேயிருக்கிறது பச்சைக் குளமாய் காற்றில் ததும்பும் தாவரமே எப்போது கண்விழிக்கும் என் தாழை? இது ஒரு விதியாய் இருக்கக்கூடும்: ஒரு பைத்தியத்தின் கையிலுள்ள துப்பாக்கி பத்து எண்ணும் போது உங்களைச் சுடட்டும் 1,3,8,9,2,1,5,3... இன்னொன்று இந்தச் சொல் சூனியக்காரி, உன்மத்தி, நேசகி, ஆயுதம், முத்தம் பிறந்த குழந்தையின் முதல் எண்ணம் வீறிடல், தன் மலர்தல், பவித்ர மலர், ஆதியின் பரமுடிச்சு, முதல் சலனம், உயிர்த்துவம், துர்நாற்றம் நிறதேவதை, மனப்புயல் நெருப்பின் பின் பக்கக் குளிர்மை வலி, பரமசுகம், எல்லாமும், எதுவும் இல்லை - உண்டின்மை. மற்றொன்று
வெயிலின் மஞ்சள் வண்ண கடலில் திமிங்கலம் இந்த தேசம் மின்மினிகளை கொல்லும் பேய் வெளிச்சம் களையெடுப்பு வயற்பாடலின் இடைகமறல் நிலவிலிருந்து நிலவுக்கு செல்லும் பாதையில் பறக்கும் இரு மைனாக் குருவிகள் கண்மூட உன்னில் பறக்கும் சுடுவதற்கு துப்பாக்கி எடுக்கும் குருவிக்காரன் காலை கடிக்காமல் இருக்கும் எறும்பிற்கு அறவுணர்வு என்று பெயர் வைத்தவன் நீயா போமோயிஸ்ட் ஒரு பின் நவீன கலைஞனின் கல்லறை வாசகம்: இங்கு சிறுநீர் கழிக்கதீர்கள்
வேறொன்று
பசியே நான் செய்தவைகளில் மிகப்பெரிய தவறென்பேன் பசியே என் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்ததென்பேன் நீங்கள் நினைப்பது போல் பசி என்பது ஒன்றல்ல உண்மையில் ஒன்றிற்கு மேலுமல்ல பசியை ஒரு கொடூர மிருகமாய் உருவகித்து படம் வரைந்த தாடிக்காரனை வரைந்ததும் அது இறங்கி வந்து தின்றது அதை கொல்வதற்காக அவன் சகாக்கள் வேறொரு மிருகத்தை செய்ய அது பசியை தவிற அனைத்தையும் தின்றது பசியின் கதை ஒரு கதையல்ல உண்மையில் அது ஒன்றிற்கு மேலுமல்ல ஒரு பைத்தியத்தின் உறக்க நேர உளறல்: வாழ்வு தத்துவங்களின் மொழியில் வியாக்கியானப் படுத்தப்படுகிறது கித்துவங்களின் மொழியில் நிகழ்கிறது.
- நன்றி: கருக்கல்

பின் குறிப்பு: மேலே உள்ள படம் “மார்க் டான்சே” எனும் ஓவியர் வரைந்தது. யாராலும் செல்லவியலாத சென்றவர்கள் திரும்பவியலாத மலை உச்சியின் நுனியில் நின்றவாறு தெரிதாவும் பால் டி மானும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தத்துவங்களின் போதாமையை பேசும் இக்கவிதைக்கு இப்படம் பொருத்தமானது எனத் தோன்றியதால் இதை இணைத்துள்ளேன்.

2 comments:

  1. உங்கள் படிமங்களும் சொல்தேர்வும் நன்றாக இருக்கின்றன. சில கவிதைகள் வாசிப்பை மிஞ்சிச் செல்கின்றன. அந்த ஓவியம் உண்மையில் பயங்கரமானது. பைத்தியநிலையும்கூட... உங்கள் வார்த்தைகளில் ஒரு பிறழ்மனதை இனங்காண்கிறேன். பிறழ்விலிருந்து கலை உதிக்கிறது எனலாமா?

    ReplyDelete
  2. இளங்கோ ஓவியம் பெரிய அதிர்வு.
    ஒன்று,இன்னொன்று,மற்றொன்று,வேறொன்று என
    பயணிக்கும் கவிதை நம்மை பிறிதொன்றுக்கு தள்ளுவது நுட்பம்.

    ReplyDelete