Tuesday, October 6, 2009

கோவை ஞானி – நேர் காணல் – 2.

தமிழும் தமிழ் நிமித்தமும்... தற்காலத் தமிழிலக்கியத்தின் சாதனையாளர்களில் வலதுசாரிகளைப் பாராட்டிய அளவுக்கு இடதுசாரிப் படைப்பளிகளை ஞானி பாராட்டுவதில்லை என்கிற சிலரின் விமர்சனம் குறித்து உங்கள் பதில் என்ன? யாரோ கிளப்பி விட்ட ஊன்மையில்லாத ஒரு குற்றச்சாட்டு இது என்றே நான் கருதுகிறேன். க.நா.சு., ந.பிச்சமூர்த்தி, மெளனி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், லா.ச.ரா, கல்யாண்ஜி, பிரபஞ்சன், ஜெயமோகன் முதலிய தமிழின் சிறந்த படைப்பளிகளை நான் வலதுசாரிகள் எனக் கருதுவதில்லை. இவர்களின் சமூக உணர்விலிருந்து அல்லது புரிதலிலிருந்து மார்க்சியர் வேறுபடலாம். இதன் காரணமாகவே இவர்களைச் சமூக உணர்வு அற்றவர் என்றோ மார்க்சியரின் புரிதல்தான் மிகத் துல்லியமானது என்றோ நான் கருதவில்லை. இவர்களிடமிருந்து கலையுணர்வை கலைநேர்த்தியை இடதுசாரிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் என் இடையறாத வற்புறுத்தல். மற்றபடி மார்க்சியர் வற்புறுத்தும் வர்க்கப் பார்வை என்பதனுள் அவர்களின் அரசியல் பார்வை மட்டுமே மேலோங்கி இருப்பது எனக்கு உடன்பாடில்லை. கூடியவரை மனித வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களும் இலக்கியப் படைப்பின் கருப்பொருள் ஆவதை நான் பெரிதும் மதிக்கிறேன். டி.செல்வராசின் மலரும் சருகும், தேனீர் ஆகிய நாவல்களைப் பெரிதும் பாராட்டினேன். மூலதனம் நாவலை என்னால் பாராட்ட முடியவில்லை. சின்னப்ப பாரதியின் தாகம் நாவலின் படைப்புத் திறன் அவரது பிற நாவல்களில் இல்லை. சங்கம் நாவலின் படைப்புச் செழுமை நாவலின் இறுதியில் சீர்குலைந்து விடுகிறது. பொன்னீலனின் கரிசல் நாவலை விட படைப்புத் தரத்தில் மேலோங்கியது அவரின் கொள்ளைகாரர் நாவல். அவரது புதிய தரிசனங்கள் நாவலை நான் மதித்துப் பாராட்டிய அளவுக்கு கட்சி மார்க்சியர் எவரும் பாராட்டவில்லை. புதுக் கவிதையின் எழுச்சியில் வானம்பாடிகள் பங்கு பெற்றதை காலம் கழித்தே கட்சி மார்க்சியர் ஒப்புக்கொண்டனர். முற்றான வர்க்க வரையறைகளில் மனித வாழ்வை குறுக்க முடியாது. வர்கப் போராட்டம் இல்லாமல் வரலாற்றில் இயக்கம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டுதான் இவ்வாறு கூறுகிறேன். கலையுணர்வு என்பது மனித ஆளுமையின் ஒரு முக்கியக் கூறு. கலை, இலக்கியங்கள் முதலியனவெல்லாம் மேல் கட்டுமானத்தின் கூறுகள் மட்டுமே எனச் சொல்லி மனித வாழ்விலிருந்து இவற்றின் முக்கியத்துவத்தை குறைத்துப் பேசமுடியாது. சிந்தனை மனிதனை ஆட்கொள்ளும் போது அதுவே ஒரு பொருளாதாய சக்தியாக மாறுகிறது என்று மார்க்ஸ் கூறுவதை நாம் மறுக்க முடியாது. இலக்கியம் முதலியனவற்றின் தனி ஆளுமை குறித்து ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். சில சந்தர்பங்களில் கலாச்சாரம் முதலிய மேல் கட்டுமானத்தின் கூறுகள் அடித்தளத்தையும் பாதிக்கும் என்ற கூற்றையும் நாம் மறுப்பதற்கில்லை. கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்ற கூற்றுகள் ஒன்றை ஒன்று மறுப்பன அல்ல. க.நா.சு முதலிய மாபெரும் படைபாளிகள் நவீனத் தமிழிலக்கியத்தின் ஆற்றல் மிக்க ஒரு பகுதியை உருவாக்கியவர்கள். தலித்தியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் முதலிய கருத்தியல்களிலிருந்து மார்க்சியர் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. தாஸ்தாயெவ்ஸ்கியை மறுத்து விட்டு டால்ஸ்டாயை கார்க்கி முதலியவர்களை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. கட்சியின் இறுக்கமான பார்வையிலிருந்து விடுபட்டதன் காரணமாகவே இன்று மார்க்சிய வட்டாரத்திலும் மிகச் சிறந்த படைப்பாளிகளை நாம் பெற்றிருக்கிறோம். வரலாறு இத்தகைய பார்வையை நமக்குக் கற்பிக்கிறது. கலை இலக்கியத்தில் தத்துவப் பார்வையை நீங்கள் தொடர்ந்து வற்புறுத்துவதன் தேவை என்ன? மனித வாழ்வை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்வதன் மூலமே சிறந்த கலை இலக்கியப் படைப்புகள் எழ முடியும். இவ்வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பேரிலக்கியங்களை நாம் பொருள் படுத்துகிறோம். சிலப்பதிகாரத்தின் இறுதி காட்சி. எல்லாம் முடிந்த பிறது கண்ணகி காட்சி கொடுத்து ஒன்றைச் சொல்கிறாள். தென்னவன் தீதிலன் தேவர்கோன் நல் விருந்தாயினன். நான் அவன் மகள் என்கிறாள். கோவலன் கொலைக்கு காரணமானவன் என கருதப்பட்டவன் பாண்டியன். குறிப்பிட்ட சூழலின் அழுத்தம் காரணமாக அவன் தவறு செய்தான். அவன் செய்த தவறுக்கு முதற்காரணம் அவன் சூழல் ஒருவகையில் அச்சூழலே அவனைத் தண்டித்திருக்கிறது. அவன் இப்போது குற்றவாளியில்லை. தான் செய்த தீமையை உணர்ந்து கொண்ட பாண்டியன் அத்தீமையிலிருந்து விடுபட்டவனாகிறான். ஆன் இப்போது தேவர் கோனாகிய இந்திரனின் விருந்தினன். இதைப் போலத்தான் போர்க்களத்தில் ராமனின் அம்பு துளைத்துச் செத்த போதே ராவணண் நெஞ்சிலிருந்த தீமை அழிந்தது. ராவணன் முகம் செந்தாமரை மலர் போல திகழ்ந்தது என்கிறார் கம்பர். இந்த அளவுக்கு இலக்கியம் மனித வாழ்வை தோண்டித் துருவி ஆராய வேண்டும். வாழ்வின் இறுதித் தளம் மெய்யியல். பெரும் கவிஞர்கள் கலைஞர்கள் என்பவர்கள் அவர்களின் ஆழத்தில் மெய்யியலாளர்கள். சமயம் எனபது கூட வாழ்வின் இறுதித் தளமன்று. மெய்யியல் பார்வைதான் இறுதித் தளம்.
தொல்காப்பியர் முதல், கரு, உரி என இலக்கியம் படைப்பின் மூன்று தளங்கள் பற்றிப் பேசுகிறார். நிலமும் பொழுதும் முதல் தளம். இடத்திலிருந்தும் காலத்திலிருந்தும் தோன்றும் அல்லது இடத்தோடும் காலத்தோடும் இயங்குகிற மனித நாகரிகம், அரசியல், பொருளியல், என்ற ஆக்கங்கள், இவற்றின் பரிமாணங்கள், சிக்கல்கள், முரண்பாடுகள் இவற்றுக்கு எதிராக மனிதனின் போராட்டங்கள் இவை அனைத்தும் இரண்டாவது தளம். மூன்றாவது தளம் மனித வாழ்வுக்கு அர்த்தம் என்ன? அழகு என்ன? வாழ்வின் மேன்மை என்ன? தரம் என்ன? என்பது பற்றிய பார்வை. சுருக்கமாக சொன்னால் சமத்துவம், சமதர்மம் பேரிலக்கியத்திற்கு இந்த இறுதித் தளம் இல்லாமல் முடியாது. இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து கலைகளுக்கும் இந்த உண்மை பொருந்தும் என்றே நம்புகிறேன். இங்கு டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி, சேக்ஸ்பியர், பாரதி, டி.எஸ். எலியட், பிக்காசோ, முதலியவர்களை நினைத்துக் கொள்ளலாம். நவீன இலக்கியத்திலிருந்தும் இங்கு சிலவற்றை நாம் சொல்ல முடியும். க.நா.சு பொய்த்தேவு நாவலின் இறுதியில் சோமு என்னவாகிறார். வாழ்வின் மேடு பள்ளங்கள் மான அவமானங்கள், செல்வம், வறுமை ஏமாற்று தண்டனை எல்லாவற்றையும் விலக்கி பண்டாரமாகிறார். நாவலின் இறுதியில் இடம் பெறுகிற தத்துவ தரிசனம் இது. ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் நாவலில் ஷென்றி அடிப்படையில் ஒரு சித்தன். செல்வம் முதலிய அனைத்துப் பற்றுகளையும் இவன் துறந்த நிலையில் இவன் பார்வை பட்ட போது வைத்தியகாரி ஒரு நல்ல பெண்ணாகிறாள். ஜெயகாந்தனின் கங்காவின் இறுதி கதி என்னவென்பது நமக்குத் தெரியும். விகாரமும் வெறியும் கலந்த சமூகச் சூழல் கங்காவைத் துரத்திச் செல்ல இறுதியில் கங்கை ஆற்றில் அவள் தன் விடுதலையை தேடிக் கொள்கிறாள். தி.ஜானகிராமனின் படைப்புகளும் இத்தகைய மெய்யியல் பார்வையின் ஊடுறுவலோடு நடைபெறுகின்றன. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் ஆதிக்கங்களை கனமாக உருவாக்கிய பார்ப்பனியம் அழிந்தொழிய இறுதியில் இயற்கையோடு இணைந்து வாழ்கிற ஆதிவாசிகள் தட்டிச் செல்கின்றனர். மெய்யியல் தளம் இல்லாமல் பேரிலக்கியங்கள் இல்லை. மேலைத் தத்துவ மரபுக்கும் கீழைத் தத்துவ மரபுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள் என்ன? இவ்விரு மரபுகளும் இன்று ஒத்துச் செல்ல இயலுமா? கீழைத் தத்துவ மரபில் சீன தத்துவ மரபு உட்பட பல இருந்த போதிலும் இந்திய தத்துவ மரபு பற்றி பேசுவது மட்டுமே இங்கு நாம் பேசுவது பொருந்தும். இந்தியாவில் மதத்திற்கு சேவை செய்யதான் தத்துவம் இருந்திருக்கிறது. அதாவது மனிதன் என்ற வகையில் வாழ்வின் துயரங்களிலிருந்து விடுபட்டு இறைவனோடு நாம் கலந்து கொள்ள வேண்டும். அல்லது மனிதப் பிறப்பிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும். இறைவனை ஒப்புக்கொள்கிற இந்திய மதங்களும் ஒப்புக் கொள்ளாமல் ஆன்மா என்றும் பிறப்பிலிருந்து விடுதலை பெற்றுப் பிறவா நிலை வேண்டும் என்னும் புத்த, சமண சமயங்களும் மண்ணுலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெறுவதைத் தான் முதன்மையாக பேசின. இதனை ஒட்டியே பாவம் புண்ணியம் மேலுகம் நரகம் முன்வினை தீவினை விதி, பல்வகைப் பிறப்பு, மாயை, மலம், என்பவை பற்றிப் பேசின. இத்தகைய அணுகல் முறை காரணமாக மண்ணுலக வாழ்வு வரலாறு பொருளியல் ஏற்றத் தாழ்வு முதலியவை பற்றி இவர்கள் ஆராயவில்லை. ஆணுக்குத்தான் துறவு, மோட்சம், தத்துவ ஆராய்சி முதலியன தேவை பெண்ணுக்கு இவை இல்லை காமம், பொருளோடு உறவு முதலியன தீமையானவை. ஆன்மா முற்றிலும் தூய்மையானது. இறைவனோடு ஒன்றியது புலன்கள் பொய்யானவை. தர்க்கம் முதலிய அறிவு தேவை. இவ்வகை அறிவால் இறைவனை, ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டும் முன்வினை பயனாக இப்பிறப்பில் ஒருவன் சாதி அமைப்புக்குள் மேல் நிலையிலோ அல்லது கீழ் நிலையிலோ பிறக்கிறான். மண்ணுலக வாழ்வு என்பது ஒரு உயிர் தீவினைகளிலிருந்து விலகிக் கொள்ளும் முயற்சி மேற்கொள்கிற ஓர் இடைக்கால உறைவிடம். பொதுவாக தத்துவம் பற்றிய பாடநூல்கள் இப்படித்தான் இந்தியத் தத்துவம் பற்றிச் சொல்ல முற்படுகின்றன. இவ்வகை போக்குக்கு எதிராக சார்வாகம், சாங்கியம்., வைஷேடிகம் முதலிய தரிசனங்களும் தொடக்கம் முதலே இருந்தன. என்றாலும் கி.பி. 8ம் நூற்றாண்டு வாக்கில் மதவாதத்திற்கு இடம் கொடுத்து மேன்மையிழந்தன. மேற்குலகிலும் கிரிஸ்துவம் போன்ற மதத்தின் ஆதிக்கம் தொடக்க காலத்தில் இருந்த போதும் கி.பி 12, 13ம் நூற்றாண்டுக்குப் பிறகு கடல் பயணங்கள், அறிவியல் ஆய்வுகள், தொழிற்புரட்சி முதலியன ஏற்பட்ட நிலையில் மதவாதம் என்பது தத்துவ ஆய்வுக்கு இடம் கொடுத்து தன் இடத்தை இழந்தது. மண்ணுலகம், பிரபஞ்சம், தாவரங்கள், உயிர்வகைகள், அரசதிகாரம்,பொருளியல் உறவுகள் ,வரலாறு,கலை, இலக்கியம் முதலியவை பற்றிய அறிவு வகைப்பட்ட ஆய்வுகள் முதன்மை பெற்றன. அறிவியல் ஆய்வுக்கான கருவிகள் கண்டறியபட்டன. மனிதன் தன் புலன்களைக் கொண்டு, கருவிகளைக்கொண்டு, தன் அறிவைக்கொண்டு, தர்க்கத்தின் மூலம் எந்த அளவுக்கு உண்மைகளை பெறமுடியும் என்ற முறையில் உலகியல் சார்ந்த ஆய்வுகள் முதன்மை பெற்றன. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று தொடங்கி வகை வகையான ஆய்வுகள் நடை பெற்றன. பரிணாம கோட்பாடுகள் உட்பட எத்தனையோ கண்டுபிடிப்புகள் நடைபெற்றன நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன் என்றார் தெகார்த்தே நிகழ்வுகள் தான் உண்மையானவை, அதற்கப்பால் எவை உள்ளன என்பது எனக்கு தெரியாது என்றார் ஹியும். அனுபவங்களுக்கு அப்பால் எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றனர் சில ஆய்வறிஞர்கள். கடவுள் உயிர்களை படைக்கவில்லை. உயிர்கள் பரிணாம முறையில் வளர்ச்சி பெற்றுள்ளன. பிரபஞ்ச இயக்கமும் இப்படித்தான் நடைபெறுகிறது. மத குருவவை நம்ப வேண்டியதில்லை. நாமே கடவுளோடு உறவுகொள்ள முடியும். கடவுள் இல்லாமல் மனிதன் வாழ்ந்து விட முடியும். அரசன்,மதகுரு, நிலப்பிரபு, முதலாளி இல்லாமலும் மக்கள் தமக்கான வாழ்வை படைத்துக் கொள்ள முடியும் வரலாற்றின் வழியேதான் மனிதன் நாகரிகத்தை பெற்றான். மேற்குலகம் இப்படித்தான் மதங்களை ஒதுக்கிவிட்டு தத்துவ ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. ஹெகலுக்கு பிரம்மம் வேண்டியிருந்தது. காண்டைப் பொறுத்தவரை புற உலகம் என ஒன்று. அக, உலகம் என்பது இன்னொன்று. ஆக, இருவகை உலகங்கள் தேவைப்பட்டன நீட்ஷேக்குக் கடவுள் இல்லை. இருத்தலியல் வாதிகளை பொருத்தவரை பிரபஞ்சத்திற்கு, மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை, எல்லாமே தற்செயல் நிகழ்ச்சிகள். வாழ்வுக்கு அர்த்தம் என ஏதாவது ஒன்றை தனி மனிதன்தான் வைத்துக்கொல்கிறான். புலன்களின் நீட்சிதான் கருவிகள். மனிதர் தமக்கான உலகை படைத்துக்கொள்ள முடியும். மனிதத்துயரங்கள் தனியுடைமை, அரசதிகாரம் முதலியவற்றின் விளைவுகள் சமதர்மம் என்ற உலகில் இவற்றுக்கு இடமில்லை என மார்க்ஸ் கூறினார். தத்துவங்கள் இதுவரை உலகத்தை விளக்கின இப்போது தேவைப்படுவது உலகை மாற்றி அமைப்பதுதான். மார்க்ஸ் கருத்துப்படி தத்துவத்திற்கும் தேவையில்லாத உலகம் என ஒன்று உருவாக முடியும். மேலைத் தத்துவ இயலின் ஆய்வு முறைகளில் இந்திய மதங்களையும் சாங்கியம் முதலிய தரிசனங்களையும் நாம் இன்று ஆய்வுக்கு உட்படுத்த முடியும் கடவுள், ஆன்மா முதலியவை வரலற்றுச் சூழலில் மனிதர் படைத்துக் கொண்ட கருத்தாக்கங்கள் மண்ணூலகம்தான் நமக்கான உலகம். மனிதத் துயரங்களூக்கு எவை காரணங்கள் என்பவை இப்பொழுது நமக்குத் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளன. சமதர்மம்தான்,சமத்துவம்தான் மனிதர் வாழ்வுக்கு ஆதாரமாக முடியும். புத்தரரோ, சங்கரரோ தம் வரலாற்றுச் சூழலுக்கு, வர்க்க ஏற்றத் தாழ்வுகளூக்கு தம் கால மாயைகளுக்குக் கைட்டுபட்டுத் தான் இருந்தனர். இன்றும் புதியவகை மாயைகள் நமக்குள் திணீக்கப்படுகின்றன. தேசம், உலகமயம், அணு ஆயுதம், நாகரிகம் என்று எத்தனையோ வகை வகையான திரைகளோடுதான் நாம் வாழ்கிறோம். பழைய உலகத்தை, ஆதிக்க உலகத்தை மீண்டும் தோற்றுவிக்கிற சக்திகளுக்கு இன்றும் மதங்களும் பலவகைக் கருத்தியல்களும் ஆதிக்கங்களும் ஒத்துழைக்கின்றன. இவற்றோடு போராடி இவற்றை வென்று நமக்கான உலகத்தைப் படைத்துக் கொள்வதற்குத்தான் மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் நமக்குள்ளூம் நாம் புதுப்பித்துக் கொள்கிறோம்.
தொடரும்...

No comments:

Post a Comment