Tuesday, October 13, 2009

கோவை ஞானி – நேர் காணல் -4

இந்தியாவில் மார்க்சியம் பெரும் சரிவை சந்தித்ததிற்கு முக்கிய காரணம் என்ன? காரணங்கள் மிக விரிவானவை. எனினும் சிலவற்றை இங்கு சொல்ல முடியும். இந்தியாவிற்கு சோசலிசம் இன்றியமையாதது. என்று நம்பிய நேரு இக்கொள்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இடம் பெறச் செய்தவர். இந்துத்துவ சார்புடைய வல்லபாய் படேல், கோவிந்த் வல்லவ பந்த், டான்சன் முதலியவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் கம்யூனிச எதிர்ப்பாளர்களாகவும் வலிமை பெற்றவர்களாகவும் இருந்த காரணத்தால் காங்கிரஸ் இயக்கத்தை சோசலிசம் நோக்கி நடத்த நேருவால் இயலவில்லை. இந்திய-சீன எல்லைச் சிக்கலை தீர்ப்பதில் சீனாவை போலவே நேருவுக்கும் இருந்த அக்கறை படேல் முதலியவர்களுக்கு உடன்பாடில்லை. ஆகவே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட மோதலை கம்யூனிச எதிர்ப்பாக இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். சீனாவோடு பகை வளர்த்துக் கொண்ட ரஷ்யா சீன எதிர்ப்புக்கு இந்தியாவை தூண்டியது. இந்தியாவில் முதலாளிய சக்திகளுக்கு இவையாவும் தேவையாகவும் இருந்தது. இந்தியாவை அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவம் என்றும் இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் என்றும் இந்தியாவை வர்க்க வரையறை செய்து ஆயுதப்போராட்டத்தை தொடங்கிய நக்சல்பாரி இயக்கத்தையும் பின்னர் இன்று வரை இந்தியாவின் பல மாநிலங்களில் உறுதியாக செயல்படுகின்ற மார்க்சிய லெனினிய இயக்கங்களை கடுமையாக ஒடுக்குவதிலும் மைய, மாநில அரசுகளோடு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் குரூரமாக செயல்படுகின்றன. கம்யூனிச பாதையை மக்கள் கடைபிடிக்கக் கூடாது என்பதில் இவர்களுகிருக்கிற அக்கறை சொல்லி முடியாது. அரசியல் அதிகாரதில் இடம் பெறவும் தொழிற்சங்கவாதம், பொருளாதார வாதம் ஆகியற்றை கடை பிடிப்பதிலும் விடாப்பிடியாக இருக்கிற மார்க்சியக் கட்சிகளின் மக்கள் விரோதக் கொள்கை இன்னும் ஒரு காரணம். இந்தியாவின் வர்க்க வரையறை முதலிய ஆய்வுகளை கறாராக செய்வதில் மார்க்சியர் எப்போதுமே தவறி வந்தனர். சுய சிந்தனையோடு இவர்களது ஆய்வுகள் இல்லை. மார்க்ஸ் முன்வைத்த ஆசிய உற்பத்தி முறை என்பதை இவர்கள் இன்று வரை புறக்கணிக்கின்றனர். தொடக்கத்தில் தேசிய இனம் என்று பேசிய மார்க்சியர் பின் முற்றாக இக் கொள்கையை கைவிட்டதோடு இந்திய தேசியத்தைப் பேசுவதிலும் முனைப்பாக உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை திராவிட இயக்கம் மற்றும் தமிழ் இயக்கங்களோடு இவர்கள் முரண்பட்டுச் செயல்படுவதன் மூலம் தமிழ் மக்களின் நலன்களைப் புறக்கணிக்கின்றனர். தமிழீழ மக்களின் விடுதலை இவர்களுக்கு கசப்பதன் காரணம் புதிராகத்தான் இருக்கிறது. காவிரிச் சிக்கல், முல்லை பெரியாறு அணைச்சிக்கல் ஆகியவற்றிலும் தமிழர்களின் நலன்கள் இவர்களுக்கு முதன்மையாகப் படுவதில்லை. தொகுத்துச் சொன்னால் மார்க்சியத்தை இந்தியமயப்படுத்துவதிலும், தமிழ்மயப்படுத்துவதிலும் இவர்கள் மக்கள் நெஞ்சைக் கவரவில்லை. மக்களுக்கான விடுதலை என்பதை மார்க்சியம்தான் சாதிக்கும் என்பதில் எனக்கு மாறுபாடு இல்லை. உலகமயமாதல் முதலிய இன்றைய சூழலில் மார்க்சியத்திற்கு இனி என்ன எதிர்காலம் இருக்க முடியும்? உண்மைதான். அமெரிக்கா முதலிய மேற்கத்தியர் தம் பொருளியல் ஆதிக்கத்தோடு அரசியல் ஆதிக்கத்தையும் தெற்கு மற்றும் கிழக்கு நாடுகள் மீது தொடர்ந்து திணிப்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். இவர்களின் நவீன அறிவியலும் தொழிநுட்பமும் இவற்றோடு அவர்களின் மூலதனமும் இல்லாமல் மூன்றாம் உலக நாடுகள் தம்மை வாழ்வித்துக் கொள்ள இயலாது என்று சொல்கிறார்கள். நம் தேசத்து அரசியல்வாதிகளும் படிப்பாளிகலும் இதை நம்பி நமக்கு பாடம் சொல்கிறார்கள். மேற்கத்தியரோடு நம் முதலாளிகள் கை கோர்த்துக் கொள்கிறார்கல். நம்மவர்களுக்கு இதனால் எத்தனையோ வகையான ஆதாயங்கள் கிடைக்கின்றன. ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் கிடைக்கின்றன. அரசியல்வாதிகள் தம் அதிகாரத்தை அவர்கள் உதவி கொண்டு தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் சொல்கிறபடி தொழில், ஆயுள் காப்பீடு, விமானம், தகவல் தொடர்பு முதலிய எல்லாவற்றையும் மைய அரசு தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதன் மூலம் முதலாளிகளுக்கு கூடுதலான லாபம் கிடைக்கிறது. அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டங்களுக்கு அவர்கள் சொல்கிற மாதிரி பயங்கிரவாதமென்று பேர் வைத்து அவர்கள் ஒத்துழைப்பையும் பெற்று நம் மக்களை ஒடுக்கவும் முடியும். மக்களிடமிருந்து தொழில் தேவை என்பதற்காக நிலத்தை பறிக்க முடியும். நீரை வசப்படுத்தி வணிகம் செய்ய முடியும். காடுகளை அழிக்க முடியும். கடல் வளத்தைக் கொள்ளையடிக்க முடியும். அரசு வங்கிகளையும் அரசியல்வாதிகளும் முதலாளிகளும் கொள்ளையடிக்கலாம். நீதிமன்றங்களும் இவர்களோடு ஒத்துழைக்கலாம். வழக்கறிஞர், மருத்துவர், விஞ்ஞானி முதலிய அனைவரும் தமக்கு கிடைக்கும் காசுக்காகவும் விருதுகளுக்காகவும் தன்மானம் இழந்து அவர்களோடு பணிபுரிந்து தம்மை அழித்துக் கொள்கிறார்கள். மேற்கத்தியரின் அறிவியல் ஆய்வுக்கு நம் தேசத்தை நமது அரசு திறந்து விடுகிறது. காடுகள், பயிர் வகைகள், மனிதர் உடம்பு, மூலிகைகள் முதலிய எல்லாவற்றையும் ஆராய்ந்து நுட்பங்களை சேகரித்து இவற்றை எங்கள் அறிவு ஆராய்ச்சி மூலமே சேகரித்தோம் என்பதால் இவற்றின் மீது எங்களுக்குத்தான் உரிமை. நீங்கள் வெறும் கச்சாப் பொருட்கல். உங்கள் மீது எங்களுக்கு ஆதிக்கம் உண்டு என சட்டம் செய்கிறார்கள். உங்களுக்கு இறையாண்மை இல்லை என்கிறார்கள். உலகில் மேற்கத்தியரின் மக்கள் தொகை 20% மட்டுமே. உலகளவிலான சொத்துக்களில் இயற்கை வளங்களில் 80% மீது எங்களுக்குத்தான் உரிமையுண்டு என்கிறார்கள். வெட்கம் இல்லாத ஆட்சியாளர்கள், அரசரிகாதிகள், படிபாளிகள் இத்தகைய பெரும் பொய்யை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. எல்லாவற்றுக்கும் இவர்களுக்கு கூலி கிடைக்கிறது. பதவி கிடைக்கிறது. வாழ்க்கை வசதிள் கிடைக்கின்றன. அதிகாரமும் கிடைகிறது. இந்த உண்மைகளை எல்லாம் இன்று மார்க்சியம் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது. மார்க்சியம் உழைக்கும் மக்களுக்குத்தான் தேசம் சொந்தம் என்கிறது. இயற்கை சொந்தம் என்கிறது. பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக பல கோடி மக்களின் உழைப்பின் மூலம், தேடலின் மூலம் சேகரித்துக் கொண்ட தேடலின் உச்சம்தான் இன்றைய அறிவியலும் தொழில்நுட்பங்களும். இந்த அறிவுத் தொகுப்பை ஆதிக்கவாதிகள் வசப்படுத்திக் கொள்வதை நம்மால் ஏற்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகள் மக்களின் கடுமையான உழைப்பின் மூலம் உருவான வளங்களை அந்நியர் வசப்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்க முடியாது. அரசதிகாரம் என்பது மக்களைக் கொண்டு, மக்களை வசப்படுத்திக் கொண்டு, மக்களைக் கருவியாக்கி மக்களுக்கு வஞ்சகம் செய்து உருவான அதிகார பீடம் எல்லாச் சொத்துக்களுக்கும் மூலம் மக்களின் உழைப்புத் திறம்தான் என்பதால் அவற்றை திரும்ப எடுத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்குண்டு இப்படியெல்லாம் மார்க்சியம் நமக்கு கற்பிக்கின்றது. ஆதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் உரிமை இயற்கையாகவே நமக்கு இருக்கிறது. நடுத்தரமக்கள் பல நூறு ஆண்டுகளாக உழைக்கும் மக்களுக்குத் துரோகம் செய்ததை இன்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயுதங்களை நம்மாலும் பயன்படுத்த முடியும். நம் வரலாற்றை நம்மால் மீட்டுக் கொள்ள முடியும். அழிவு இல்லாமல் ஆகம் என்பதில்லை. அந்நியர்களோடு நம்மவரின் ஆதிக்கத்தையும் தொடர்ந்து நாம் ஒப்புக் கொள்வோம் என்றால் இவர்கள் நம் வாழ்வுக்காதாரமான இயற்கை வளங்கள் முதலியவற்றை முற்றாக அழிப்பார்கள் தேசத்தை நஞ்சாக்குவார்கள். இறுதியில் அழிவது இவர்களும்தான் என்ற போதிலும் இந்த உண்மையை புரிந்து கொள்ளும் திறனற்ற இவர்கள் நம்மையழிக்க தொடங்கியிருக்கிறார்கள். இயற்கை முதலியவற்றை இவர்களிடமிருந்து மீட்பதன் மூலமே இவர்களையும் மனிதர்களாக்கி வாழ வைக்க முடியும். இவர்கள் ஆதிக்கத்தை நம் படிப்பாளிகள் சொல்வது போல நாம் ஒப்புக்கொண்டு இவர்களோடு ஒத்துழைத்து வாழ்வோமானால் நம் அனைவருக்குமான வரலாறு, வாழ்க்கை, நாகரிகம் முதலியன இல்லமல் போய்விடும். இறுதியில் உலகமே ஒரு மயான பூமியாகிவிடும். இந்த உலகத்தை மயானமாக்கிவிட்டுதான் போவார்கள் என்றால் அதற்கு முன் இக்கூட்டத்தை நாம் அடியோடு ஒழிக்க வேண்டும். இப்படியெல்லாம் நமக்குள் சிந்தனைகளை கிளறுவது மார்க்சியம்தான். கொஞ்ச காலம் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதிக்கத்தோடு சமரசம் செய்து கொள்வதாகிய மதமோ, கலாச்சாரமோ நமக்குத் தேவையில்லை. சமரசவாதிகள் தம் அழிவைப் பற்றி சிந்திக்காமல் நாமும் அழிவதற்கு வழி சொல்பவர்கள். இவர்களோடு நமக்கு உறவு வேண்டியதில்லை. தமிழில் ஸ்டாலினியம் பற்றிய உரையாடல்களை முதலில் துவங்கியவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கறீர்கள். தற்போதைய புது-முதலாளிய மற்றும் பின் நவீனச் சூழலில் ஸ்டாலினை எப்படிப் பார்கறீர்கள்? தோழர் ஸ்டாலின் அவர்களைப் பற்றி தமிழகத்தில் பரிமாணம் தனி இதழ் ஒன்றில் விரிவான உலக அளவிலான விமர்சனங்களை நாங்கள் (நானும் எஸ்.வி.ராஜதுரையும்) தொகுத்துத் தந்தோம் என்பது உண்மைதான். கட்சி அமைப்புக்குள் ஸ்டாலினியப் போக்கால் நாங்களும்தான் பாதிக்கப் பட்டிருந்தோம் என்பது கூட ஒரு முதற்காரணமல்ல. ஸ்டாலினின் சாதனைகள் மரியாதைக்குறியவை எனபதில் எங்களுக்கு மாறுபாடு இல்லை. சோவியத் கட்சிக்குள் ஸ்டாலியப் போக்கு மேலோங்கியதற்கு அவரை மட்டுமே குற்றம் சொல்வதிலும் உண்மையில்லை. எனினும் கட்சிக்குள்ளும் அரசு அதிகாரத்திற்குள்ளும் தோழர் ஸ்டாலினால் நேர்ந்த தீங்குகளுக்கும் அளவில்லை. இவையெல்லாம் எப்படி நேர்ந்தன என்பது அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி தீவிரமான ஆய்வுக்குறிய தீராத சிக்கல் என்பதிலும் ஐயமில்லை. யாரிடத்தில் ஸ்டாலினியம் இல்லை என்று கூட நாம் கேட்டுக் கொள்ளலாம். சோவியத் சமூகத்தில் மட்டுமல்ல எந்தவொரு சமூகத்திலும் காலங்காலமாக தொடர்ந்து நிலவும் கோளாறுகள், குரூரங்கள், அறியாமை, ஆத்திரம், அவசரக்கோலம் முதலிய குறைபாடுகளிலிருந்துதான் ஸ்டாலினியம் எனப்படும் கடும்போக்கு உருவாகியது. தோழர் மாவோ சுட்டிக்காட்டியபடி உற்பத்திச் சக்திகளுக்கு முதன்மை தரும் போக்கின் ஒரு விளைவாக ஸ்டாலினியம் எழ முடியும். தோழர். எஸ்.ஏன். நாகராசன் அவர்களும் தொடர்ந்து விளக்குவது போலவே மார்க்சிடமே இந்த தவற்றுகான இடம் உண்டு. பகை முரண்பாட்டுக்கு அழுத்தம் தருவது மேற்கத்திய மார்க்சியம் என்கிறார் நாகராசன். சில மாதங்களுக்கு முன்பு தோழர்.வீரபாண்டியன் தான் விரிவாக எழுதிய ஸ்டாலின் பற்றிய கட்டுரைகளுக்கு என்னிடம் முன்னுரை கேட்ட போது நான் தோழர் ஸ்டாலின் பற்றி எனக்குள் மறு ஆய்வு செய்தேன். உலகமயமாக்கல், உலகெங்கும் பயங்கரவாதம், அமெரிக்க அதிக்கம் பரவி வரும் சூழலில் ஸ்டாலியத்திற்கு என்ன இடம் என நீங்கள் கேட்பது போன்றே நானும் கேட்டுக் கொண்டேன். இன்று அமெரிக்க அதிபரை இன்னொரு ஹிட்லர் என்றுதான் நாம் கருத முடியும். ஹிட்லரோடு ஸ்டாலினால் எந்த சூழலிலும் கை கோர்த்துக் கொள்ள முடியாது. இரண்டாம் உலகப் போரின் போது உங்களுக்கு ஆதரவாக நாங்களும் வருகிறோம் என்று சொல்லிக் கொண்டே முதலில் ஸ்டாலின் ஹிட்லரை ஒழிக்கட்டும். பிறகு ஸ்டாலினை நாம் அழிக்க வேண்டும் என்று மேற்கத்தியர் காத்திருந்ததை நாம் இப்போதும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு இன்னொரு ஸ்டாலின் தோன்ற வாய்பில்லை. இன்னொரு மாவோவுக்கும் வாய்ப்பிருப்பதாக கருத முடியவில்லை. தோழர் வீரபாண்டியன் தன் கட்டுரையில் சுட்டிக் காட்டியது போல ஸ்டாலினிய சர்வாதிகாரம் குறித்து இன்றைக்கும் பேசுபவர்கள் யார் என்பது பற்றி நாம் அசட்டையாக இருக்க முடியாது. பொதுவுடைமைவாதிகளை இன்றைக்கும் தாக்குவதற்கு ஸ்டாலினை பற்றி அத்வானி பேசுகிறார். அத்வானி போன்றவர்கள் உள்ளும் புறமும் சர்வாதிகாரிகள். இவர்கள் இந்திய முதலாளிகளோடும் அமெரிக்க ஆதிகத்தோடும் கைகோர்த்துக் கொள்வதில் தயக்கம் கொள்ளாதவர்கள். இவர்கள் ஹிட்லரின் வாரிசுகள். இவர்கள் ஸ்டாலினை சுட்டிக் காட்டுவதன் மூலம் தம்மை மறைத்துக் கொள்பவர்கள். இறுதியாக இப்படிச் சொல்லலாம். வரலாற்றின் ஒரு கோரமான திரிபு ஸ்டாலின். மார்க்சியரின் சொற்களில் இடசாரித் திரிபு. ஏகாதிபத்யக் கொடுங்கோண்மைக்கு ஓர் எதிர் விளைவு ஸ்டாலின். அவர் ஒருவகையில் தேசத்தின் நன்னை எனக்கருதி தன்னைத் தானே தண்டித்துக் கொண்டவர். இன்றைய வல்லரசிய ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு இன்னொரு ஸ்டாலினை முன் நிறுத்த முடியாது. இதற்கு வேறு வழி காண வேண்டும். முற்றிலும் புதிய வழி- நெறி ஒன்று இன்று தேவை. அந்த நெறி இன்று தென்னமெரிக்காவில் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது.

Friday, October 9, 2009

கோவை ஞானி – நேர் காணல் - 3

தமிழும் தமிழ் நிமித்தமும்... பெரியாரியமும் திராவிட இயக்கமும் அடைந்திருக்கிற தத்துவச் சரிவுக்கு என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
மார்க்சியத்தை நான் ஏற்றுக் கொண்ட புதிதில் பெரியாரியத்தோடு பெரிதும் முரண்படத்தான் செய்தேன். ஆனால் நாளடைவில் தமிழகச் சூழலில் பெரியாரியத்தின் இன்றியமையாமையை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெரியாரியமும் மார்க்சியமும் கை கோத்துக் கொள்ள இயலாதென்றால் தமிழக மக்களின் விடுதலைக்கு சாத்தியமில்லை என்பதில் உறுதி கொண்டுள்ளேன். வட இந்தியாவில் நடைபெறுகிற மதக் கலவரங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் இல்லை என்பதற்கு பெரியாரியத்தின் தாக்கமே முதன்மையான காரணம். இந்தியாவில் பார்ப்பனியத்தின் ஆதிக்கம் தமிழகத்தில் தான் இன்று வரை ஓங்கியிருக்கிறது என்பதால் பெரியாரியத்தின் தேவையை இங்கு மறுப்பதற்கில்லை. சாதி, மதம், பார்பனியம் ஆகியவற்றின் எதிர்ப்பையே பெரியாரியத்தின் மையம் என திராவிட இயக்கம் இன்று வரை நம்பிச் செயல்படுவது பெரியாரியம் என்று நம்மால் கருத முடியவில்லை. பெரியாரியத்தின் மையம் சமதர்மமாகத்தான் இருக்க முடியும். பெரியாரே நம் இயக்கம் பிராமண எதிர்ப்பு, புராண எதிர்ப்பு முதலியவற்றை முதன்மைப்படுத்துற சீர்திருத்த இயக்கமாக இருக்க முடியாது என்றும் நம் இயக்கம் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர இயக்கமே என்றும் வற்புறுத்திச் சொல்லி இறுக்கிறார். முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட திராவிட இயக்கம்தான் சாதி, மதம் முதலிய எதிர்ப்பை முதன்மைப் படுத்த முடியும். வகுப்பு வாரி உரிமை, இட ஒதுக்கீடு ஆகியவை இந்தியாவில் குறைந்த அளவுகேனும் தொடர்ந்து செயல்படுகிறது என்றால் இதற்கான இயக்கம் பெரியாரிய திராவிட இயக்கம் தான் என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தியச் சமூகம் சாதியச் சமூகம் தான், வர்க்கச் சமூகம் அல்ல என்பதில் அழுத்தம் கொண்டதன் மூலம் திராவிட இயக்கமும் மார்க்சிய இயக்கமும் தமக்குள் முரண்பட்டு எதிர் நிலைக்கு சென்றன என்பது ஒரு வருத்தம் தரக்கூடிய நிகழ்வு. அண்மைகாலத்தில் தமிழ்த் தேசியத்தையும் மார்க்சியத்தையும் இணைத்துப் பார்க்க முடியும் என்பவர்கள் சாதி என்பது வடிவம், வர்க்கம் என்பது உள்ளடக்கம் என்ற முறையில் பேசுவது நம் சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. சாதி, மதம் ஆகியவற்றின் தோற்றம், தீர்வு , வளர்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்ட வரலாறு , பொருளியல் சூழலில் வைத்துத்தான் பார்க்கவேண்டும் என்ற மார்க்சியத்தின் வரலாற்றுப் பார்வை ஏனோ இன்று வரை திராவிட இயக்கத்திற்கு உடன்பாடாக இல்லை. மதம் மக்களுக்கான அபின் என்ற மார்க்சின் ஒரு வாசகத்தை மட்டுமே பெரியாரிஸ்டுகள் ஏற்கின்றனர். இதயமற்ற உலகின் இதயம் என்றும் ஆன்மா அற்ற உலகின் ஆன்மா என்றும் சமயத்தைப் பொருள் படுத்திய மார்க்ஸ் சமூகத்தில் நிலவும் பொருளியல் ஏற்றத் தாழ்வு முற்றாக அகலும் பொழுதே சமயத்தின் ஆதிக்கம் ஒழியும் என்றும் கூறியிருப்பதை பெரியாரிஸ்டுகள் கவனிக்கத் தவறுகின்றனர். சமயம், புராணம் குறித்த சிக்கல்களில் மட்டுமில்லாமல் இலக்கியம் மெய்யியல் குறித்த பார்வையிலும் பெரியார் சரியாகவோ வளமாகவோ இல்லை என்பது பற்றி விடாப்பிடியாக நான் எழுதி வருகிறேன். கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம்தான் என்ற முறையில் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். இந்துத்துவம் என்பதும், இந்துமதம் என்பதும் ஒன்றல்ல என்பதையும் நான் விளக்கி வருகிறேன். சமய உணர்வை முற்றாக மறுப்பதன் மூலம் மத நம்பிக்கையுடைய நம் மக்களை இந்துத்துவம் நோக்கித் தள்ள வேண்டாம் என்றும் எழுதி வருகிறேன். பார்பனியத்தினுள்ளும் இடதுசாரிப் பார்பனியம் என்ற ஒன்று உண்டு என்ற முறையில் விவேகானந்தர், பாரதியார் முதலியவற்றை நம்மால் ஏற்க முடியும் என்று நான் நம்புகிறேன். சமதர்மத்தில் ஊன்றி நிற்கும் இவர்கள் வருணாசிரம முறைக்கு எதிரானவர்கள் என்பது உறுதி. சுய மரியாதை, தன்மானம் என்பதுதான் பெரியாரியத்தின் மெய்யியல். பெரியாரே விளக்கியபடி தொழிலாளிக்குத் தன்மானம் என்பது ஆணாதிக்கத்திலிருந்து விடுபடுவது. எந்த வகையான ஆதிக்கமும் மனிதருக்குத் தேவையில்லை என்றவர் பெரியார். பகுத்தறிவுவாதம் என்பது ஒரு ஆய்வு முறை மட்டுமே. கலை, இலக்கியம்,இசை முதலியன இல்லாமல் மனிதருக்கு வாழ்வில்லை. மனிதரைப் புரிந்து கொள்ள அறிவுவாதம், பகுத்தறிவு வாதம் போதாது மனிதருக்குள் உள்ளுணர்வு, கற்பனைத்தின், படைப்பியக்கம் முதலியன இல்லாமல் மனிதரில்லை வெறும் அறிவு வாதம் சிலப்பதிகாரம், மணீமேகலை ஆகிய காப்பியங்களை ஏற்காது. கண்ணகி எப்படி மதுரையை எரித்து அழிக்க முடியும் என்றுதான் இவர்கள் கேட்பார்கள். நீதியற்ற அரசை அழிப்பது அறம் என்ற இளங்கோவடிகளின் உணர்வு கவிஞரின் அறம். கம்பர் காவியத்தை ஆரியர் திராவிடர் போராட்டம் எனக் காண்பது ஒருவகை ஆய்வு. இலக்கியம் என காப்பியம் என இதைக் காண்பது இன்னொரு வகை ஆய்வு. கொடுங்கோன்மையை அழிக்க ஒருவன் அரசைத் துறந்து ஏழைகளைத் தோழமை கொண்டால் மட்டுமே சாத்தியம் என்று காண்பது இவ்வகை ஆய்வு. இவ்வாறேல்லாம் பெரியாரியம் தன்னை விரிவு படுத்திக் கொள்ள வேண்டும். மார்க்சியத்தின் வழியே பெரியாரியம் தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியும். தனியுடைமை அரசதிகாரம் ஆகியவற்றோடு ஒத்து இயங்குவதன் மூலம் பெரியாரியம் தன்னை மேம்படுத்திக் கொள்ள இயலாது. நவீன அறிவியல், ஏகாதிபத்தியம், உலகமயமாதல் ஆகியவற்றையும் எதிர்த்து ஒதுக்கினால் ஒழிய தமிழ் மக்கள் வாழ்வு மேம்படாது. இயற்கை வேளாண்மை, பசுமை இயக்கம், தமிழியக்கம் ஆகியவற்றோடும் ஒத்தியங்குவது பெரியாரியக்கம். தலித் அறிவு ஜீவிகள் பெரியாரை விமர்சிப்பதையும் பெண்ணியவாதிகள் மார்க்சை விமர்சிப்பதையும் எப்படிபார்க்கிறீர்கள்? அறிவு ஜீவிகள் என்ற சொல்லை பெரும்பாலும் நான் பயன்படுத்துவதில்லை. அறிவை வைத்து படிப்பை வைத்து அரசு ஊழியம் முதலியவற்றை வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அறீவு ஜீவிகள். அறிவை வைத்துப் பிழைப்பவர்கள் என்று நான் கருதுகிறேன். அறிவாளிகள் என்பவர்கள் இவர்களிலிருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் அறிவை படிப்பை ஆள்பவர்கள். பல திசைகளிலும் தேடித்தேடி அறிவைத் திரட்டுபவர்கள். வாழ்வியல் அனுபவங்களில் இருந்து அறிவை திரட்டுபவர்கள். வரலாற்று இயக்கத்தோடு தம்மைக் கரைத்துக் கொண்டார்கள். இவர்களைத் தான் ஆங்கிலத்தில் Intellectuals என்று கூறுகிறார்கள். இத்தகையவரால் பெரியாரை இகழ முடியாது, புரிந்து கொள்ள முடியும், பெரியார் அளவுக்கு மக்களை நேசித்தவர் என, மக்களை புரிந்துகொண்டவர் என இன்னொருவரைக் கூற முடியாது.இன்னொரு புத்தர் என அறிவை மதிப்பிடுவதில் தவறில்லை. காந்தியைப்போல என்று அவரைச் சொல்லவும் முடியும். பெரியார் ஒரு வகையில் சொன்னால் ஆறு கோடித்தமிழ் மக்களுக்கும் அவரைத் தந்தை என்று மிகுந்த மரியாதையுடன் சொல்ல முடியும். அவரை எல்லம் தெரிந்தவர் என்றோ Intellectual என்று கூட நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அண்மைக் காலத்து தலித் வட்டாரத்து அறிவு ஜீவிகள் சிலர் அவரை கடுமையாக விமர்சனம் செய்வதை என்னால் ஏற்க முடியவில்லை. வகுப்பு வாரி உரிமை இந்திய அரசியல் சட்டத்தில் கடுமையாக போராடியதன் பின்னர் இடம் பெற வைத்தவர் பெரியார். இட ஒதுக்கீடு இல்லாமல் நம் மக்கள் கல்வி முதலிய பல துறைகளிலும் முன்னேறிய சமூகத்திற்கு நிகரானவர்களாக வாழ முடியாது. இதற்கான முன் முயற்சியை முழு அளவில் செய்தவர் பெரியார். தலித் மக்களுக்காக அவர் தனி இயக்கம் காணவில்லை என்பது உண்மைதான். அறிஞர் அம்பேத்கர்தான் இத்தகைய இயக்கத்தை தோற்றுவித்தவர். இவரது இயக்கத்தின் தூண்டுதலின் பேரில்தான் தமிழ்நாட்டிலும் தலித் மக்களுக்கென தனி இயக்கங்கள் தோன்றின. தலித் மக்களுக்கு தனி இயக்கம் தேவை என்பதையும் நம்மால் ஒப்புக்கொள்ள முடியும். பெரியாரே அதை செய்திருக்க முடியாது. சாதி அமைப்பை கடுமையாக தாக்கியதில் பெரியாரையும் அம்பேத்கரையும் ஒரு நிகரானவர்களாகவே சொல்ல முடியும். திராவிட இயக்கத்தினுள்ளும் பலதரப்பட்ட சமூகப்பிரிவினர் இருக்கத்தான் செய்தனர். சாதி உணர்விலிருந்து அல்லது வர்க்க அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு உணர்விலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபட்டவர் எனப் பெரியாரும் கருதியிருக்க முடியாது. ஆனால் பெரியாரை இப்படி யாரும் சொல்லவும் முடியாது. இயக்கத்திலுள்ள பிற்படுத்தப்பட்டவர் தலித் மக்களை தமக்கு எல்லா வகையிலும் நிகரானவர் எனக் கருதி திருமணம் முதலிய உறவுகளை வைத்துக்கொள்ள முற்றான விருப்பம் கொண்டிருக்க மாட்டார்கள். இயக்கத்தினுள்ளும் இந்த வகையில் பேசிக்கொள்ளாத ஒரு மவுனம் இருந்திருக்க முடியும். பின்னர் தலித் மக்கள் இவர்களிடமிருந்து தம்மை வெட்டிக் கொண்டு தமக்கான ஒரு இயக்கம் காண்பதிலும் தவறு சொல்ல முடியாது. ஆனால் இதிலிரிந்து பகையுணர்வை வளர்த்துக் கொள்வது தேவையில்லை. இத்தகைய பகையுணர்விலிருந்துதான் பெரியாரைச் சாடுவதும் தொடர்கிறது. அறிவு ஜீவிதான் இதை செய்வார்கள். மக்கள் வாழ்வோடு தம்மைக் கரைத்துக் கொண்டவர் இதைச் செய்ய முடியாது. எந்தவகை ஆதிக்கத்திற்கும் மார்க்சியம் எதிரானதாகத்தான் இருக்கிறது. ஆணாதிக்கம் எந்த வடிவில் இருந்தாலும் அது மார்க்சியத்திற்கு உடன்பாடானதாக இருக்க முடியாது. மார்க்சியக் கட்சிக்குள்ளும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் இவர்களூக்குள்ளும் ஆணாதிக்கம் செயல்படும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சோசலிசம் வந்துவிட்டால் மக்கள் அனைவரும் சரி நிகரானவர்களாக மாறி விட முடியும். அப்போது ஆணாதிக்கம் இருப்பதற்கும் வாய்ப்பில்லை. நிலவும் சமூகத்தில் உடமை வர்க்கத்திற்கெதிரான வர்க்கப்போராட்டத்தில் தொழிலாளிகள் மட்டுமல்லாமல் பெண்ணூரிமை இயக்கத்தினரும் ஈடுபட வேண்டும் என்பது மார்க்சியக் கட்சியினரின் கருத்து. இடையில் ஆணாதிக்கத்திற்கெதிராகப் போராட வேண்டும் என்ற முறையில் கட்சி அமைப்புக்குள் தொழிற்சங்க அமைப்புக்குள் பிளவை ஏற்படுத்த வேண்டாம். இப்படித்தான் கட்சி மார்க்சியர் கருதுகின்றனர். சோசலிசம் வரும்வரை ஆணாதிக்கத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமா என்று பிற பெண்ணியவாதிகள் கேட்க முடியும். குறைந்த அளவுக்கு சோசலிசப் பெண்ணியத்தை ஏற்காத பிற பெண்ணியவாதிகள் முன்வைக்கும் கருத்தென்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். மார்க்சியம் என்னதான் மக்கள் விடுதலை என்று இறுதி நோக்கமாகப் பேசினாலும் மார்க்சியத்தின் உள்ளே அதிகாரம் என்பது ஆழமாகப் பதிந்திருக்கிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த தாய்மை சமூகத்தை கடுமையாக ஒடுக்கியதன் விளைவாகவே ஆணாதிக்க சமூகம் ஏற்பட்டது. பெண்ணின் மீதான இத்தகைய ஒடுக்குமுறை இன்றளாவும் தொடர்கிறது. வரலாற்றில் நிகழ்ந்த முதல் வர்க்கப்போர் இதுதான் என்பதை மார்க்சியம் ஏற்பதில்லை. மார்க்‌ஸ் முதலிய மார்க்சிய முன்னோடிகளும் தம் வாழ்வில் ஆணாதிக்க வாதிகளாகத்தான் இருந்தார்கள். உடமை வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டும் என்ற ஆதாரத்தில்தான் மார்க்சியம் அமைந்திருக்கிறது. மார்க்சியருக்குக் குடும்பம், குழந்தைகள், பெண்கள் குறித்துத் தனிக் கருத்தில்லை. சோசலிசம் வரும்வரை இவர்களோடு ஒத்து இவர்களின் அதிகாரத்தை நிறுவ எங்களால் போராட முடியாது என்று இந்தப் பெண்ணிய வாதிகள் கருதுகிறார்கள். இவர்களின் விமர்சனங்கள் ஒதுக்கத்தக்கவையல்ல. தனியுடைமை, அரசதிகாரம், மதபீடங்கள், இவற்றோடு இராணூவம், அதிகார நிறுவனங்கள் என்ற பல்வேறு வடிவங்களில் செயல்படுகிற ஆதிக்கங்களை முற்றாக அழித்தொழிப்பதன் மூலம் தான் மனித சமூகம் தனக்கான விடுதலையை சாதிக்க முடியும் அதிகார அமைப்புகளை உள்வாங்கிக் கொள்கிற ஆண் மட்டுமல்லாமல் இவற்றோடு ஒத்துச் செயல்படுகிற பெண்ணும் ஆதிக்கத்திற்கு சேவை செய்கிற அமைப்பாகத்தான் இருக்க முடியும். ஆதிக்கத்தை இப்படிப் புரிந்து கொள்ள இயலுமானால் முற்றாக மனித விடுதலைகாக பாடுபடும் தாய்மைப் பண்புதான் உண்மையில் மார்க்சியமாகப் பெண்ணியமாக இருக்க முடியும். எல்லாவகையான ஆதிக்கங்களையும் தனக்குள்ளிலிருந்து வெளியேற்றிக் கொள்கிற மார்க்சியம்தான் அசலான மார்க்சியம், எல்லாவகையான ஆதிக்கங்களையும் தனக்குள்ளிலிருந்து வெளியேற்றிக் கொள்கிற பெண்ணியம்தான் அசலான பெண்ணியம் நாம் அனைவரும் இதைப் புரிந்துகொள்ளூம்போதுதான் இப்பிரச்சனை தீரும். தொடரும்

Tuesday, October 6, 2009

கோவை ஞானி – நேர் காணல் – 2.

தமிழும் தமிழ் நிமித்தமும்... தற்காலத் தமிழிலக்கியத்தின் சாதனையாளர்களில் வலதுசாரிகளைப் பாராட்டிய அளவுக்கு இடதுசாரிப் படைப்பளிகளை ஞானி பாராட்டுவதில்லை என்கிற சிலரின் விமர்சனம் குறித்து உங்கள் பதில் என்ன? யாரோ கிளப்பி விட்ட ஊன்மையில்லாத ஒரு குற்றச்சாட்டு இது என்றே நான் கருதுகிறேன். க.நா.சு., ந.பிச்சமூர்த்தி, மெளனி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், லா.ச.ரா, கல்யாண்ஜி, பிரபஞ்சன், ஜெயமோகன் முதலிய தமிழின் சிறந்த படைப்பளிகளை நான் வலதுசாரிகள் எனக் கருதுவதில்லை. இவர்களின் சமூக உணர்விலிருந்து அல்லது புரிதலிலிருந்து மார்க்சியர் வேறுபடலாம். இதன் காரணமாகவே இவர்களைச் சமூக உணர்வு அற்றவர் என்றோ மார்க்சியரின் புரிதல்தான் மிகத் துல்லியமானது என்றோ நான் கருதவில்லை. இவர்களிடமிருந்து கலையுணர்வை கலைநேர்த்தியை இடதுசாரிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் என் இடையறாத வற்புறுத்தல். மற்றபடி மார்க்சியர் வற்புறுத்தும் வர்க்கப் பார்வை என்பதனுள் அவர்களின் அரசியல் பார்வை மட்டுமே மேலோங்கி இருப்பது எனக்கு உடன்பாடில்லை. கூடியவரை மனித வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களும் இலக்கியப் படைப்பின் கருப்பொருள் ஆவதை நான் பெரிதும் மதிக்கிறேன். டி.செல்வராசின் மலரும் சருகும், தேனீர் ஆகிய நாவல்களைப் பெரிதும் பாராட்டினேன். மூலதனம் நாவலை என்னால் பாராட்ட முடியவில்லை. சின்னப்ப பாரதியின் தாகம் நாவலின் படைப்புத் திறன் அவரது பிற நாவல்களில் இல்லை. சங்கம் நாவலின் படைப்புச் செழுமை நாவலின் இறுதியில் சீர்குலைந்து விடுகிறது. பொன்னீலனின் கரிசல் நாவலை விட படைப்புத் தரத்தில் மேலோங்கியது அவரின் கொள்ளைகாரர் நாவல். அவரது புதிய தரிசனங்கள் நாவலை நான் மதித்துப் பாராட்டிய அளவுக்கு கட்சி மார்க்சியர் எவரும் பாராட்டவில்லை. புதுக் கவிதையின் எழுச்சியில் வானம்பாடிகள் பங்கு பெற்றதை காலம் கழித்தே கட்சி மார்க்சியர் ஒப்புக்கொண்டனர். முற்றான வர்க்க வரையறைகளில் மனித வாழ்வை குறுக்க முடியாது. வர்கப் போராட்டம் இல்லாமல் வரலாற்றில் இயக்கம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டுதான் இவ்வாறு கூறுகிறேன். கலையுணர்வு என்பது மனித ஆளுமையின் ஒரு முக்கியக் கூறு. கலை, இலக்கியங்கள் முதலியனவெல்லாம் மேல் கட்டுமானத்தின் கூறுகள் மட்டுமே எனச் சொல்லி மனித வாழ்விலிருந்து இவற்றின் முக்கியத்துவத்தை குறைத்துப் பேசமுடியாது. சிந்தனை மனிதனை ஆட்கொள்ளும் போது அதுவே ஒரு பொருளாதாய சக்தியாக மாறுகிறது என்று மார்க்ஸ் கூறுவதை நாம் மறுக்க முடியாது. இலக்கியம் முதலியனவற்றின் தனி ஆளுமை குறித்து ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். சில சந்தர்பங்களில் கலாச்சாரம் முதலிய மேல் கட்டுமானத்தின் கூறுகள் அடித்தளத்தையும் பாதிக்கும் என்ற கூற்றையும் நாம் மறுப்பதற்கில்லை. கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்ற கூற்றுகள் ஒன்றை ஒன்று மறுப்பன அல்ல. க.நா.சு முதலிய மாபெரும் படைபாளிகள் நவீனத் தமிழிலக்கியத்தின் ஆற்றல் மிக்க ஒரு பகுதியை உருவாக்கியவர்கள். தலித்தியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் முதலிய கருத்தியல்களிலிருந்து மார்க்சியர் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. தாஸ்தாயெவ்ஸ்கியை மறுத்து விட்டு டால்ஸ்டாயை கார்க்கி முதலியவர்களை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. கட்சியின் இறுக்கமான பார்வையிலிருந்து விடுபட்டதன் காரணமாகவே இன்று மார்க்சிய வட்டாரத்திலும் மிகச் சிறந்த படைப்பாளிகளை நாம் பெற்றிருக்கிறோம். வரலாறு இத்தகைய பார்வையை நமக்குக் கற்பிக்கிறது. கலை இலக்கியத்தில் தத்துவப் பார்வையை நீங்கள் தொடர்ந்து வற்புறுத்துவதன் தேவை என்ன? மனித வாழ்வை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்வதன் மூலமே சிறந்த கலை இலக்கியப் படைப்புகள் எழ முடியும். இவ்வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பேரிலக்கியங்களை நாம் பொருள் படுத்துகிறோம். சிலப்பதிகாரத்தின் இறுதி காட்சி. எல்லாம் முடிந்த பிறது கண்ணகி காட்சி கொடுத்து ஒன்றைச் சொல்கிறாள். தென்னவன் தீதிலன் தேவர்கோன் நல் விருந்தாயினன். நான் அவன் மகள் என்கிறாள். கோவலன் கொலைக்கு காரணமானவன் என கருதப்பட்டவன் பாண்டியன். குறிப்பிட்ட சூழலின் அழுத்தம் காரணமாக அவன் தவறு செய்தான். அவன் செய்த தவறுக்கு முதற்காரணம் அவன் சூழல் ஒருவகையில் அச்சூழலே அவனைத் தண்டித்திருக்கிறது. அவன் இப்போது குற்றவாளியில்லை. தான் செய்த தீமையை உணர்ந்து கொண்ட பாண்டியன் அத்தீமையிலிருந்து விடுபட்டவனாகிறான். ஆன் இப்போது தேவர் கோனாகிய இந்திரனின் விருந்தினன். இதைப் போலத்தான் போர்க்களத்தில் ராமனின் அம்பு துளைத்துச் செத்த போதே ராவணண் நெஞ்சிலிருந்த தீமை அழிந்தது. ராவணன் முகம் செந்தாமரை மலர் போல திகழ்ந்தது என்கிறார் கம்பர். இந்த அளவுக்கு இலக்கியம் மனித வாழ்வை தோண்டித் துருவி ஆராய வேண்டும். வாழ்வின் இறுதித் தளம் மெய்யியல். பெரும் கவிஞர்கள் கலைஞர்கள் என்பவர்கள் அவர்களின் ஆழத்தில் மெய்யியலாளர்கள். சமயம் எனபது கூட வாழ்வின் இறுதித் தளமன்று. மெய்யியல் பார்வைதான் இறுதித் தளம்.
தொல்காப்பியர் முதல், கரு, உரி என இலக்கியம் படைப்பின் மூன்று தளங்கள் பற்றிப் பேசுகிறார். நிலமும் பொழுதும் முதல் தளம். இடத்திலிருந்தும் காலத்திலிருந்தும் தோன்றும் அல்லது இடத்தோடும் காலத்தோடும் இயங்குகிற மனித நாகரிகம், அரசியல், பொருளியல், என்ற ஆக்கங்கள், இவற்றின் பரிமாணங்கள், சிக்கல்கள், முரண்பாடுகள் இவற்றுக்கு எதிராக மனிதனின் போராட்டங்கள் இவை அனைத்தும் இரண்டாவது தளம். மூன்றாவது தளம் மனித வாழ்வுக்கு அர்த்தம் என்ன? அழகு என்ன? வாழ்வின் மேன்மை என்ன? தரம் என்ன? என்பது பற்றிய பார்வை. சுருக்கமாக சொன்னால் சமத்துவம், சமதர்மம் பேரிலக்கியத்திற்கு இந்த இறுதித் தளம் இல்லாமல் முடியாது. இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து கலைகளுக்கும் இந்த உண்மை பொருந்தும் என்றே நம்புகிறேன். இங்கு டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி, சேக்ஸ்பியர், பாரதி, டி.எஸ். எலியட், பிக்காசோ, முதலியவர்களை நினைத்துக் கொள்ளலாம். நவீன இலக்கியத்திலிருந்தும் இங்கு சிலவற்றை நாம் சொல்ல முடியும். க.நா.சு பொய்த்தேவு நாவலின் இறுதியில் சோமு என்னவாகிறார். வாழ்வின் மேடு பள்ளங்கள் மான அவமானங்கள், செல்வம், வறுமை ஏமாற்று தண்டனை எல்லாவற்றையும் விலக்கி பண்டாரமாகிறார். நாவலின் இறுதியில் இடம் பெறுகிற தத்துவ தரிசனம் இது. ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் நாவலில் ஷென்றி அடிப்படையில் ஒரு சித்தன். செல்வம் முதலிய அனைத்துப் பற்றுகளையும் இவன் துறந்த நிலையில் இவன் பார்வை பட்ட போது வைத்தியகாரி ஒரு நல்ல பெண்ணாகிறாள். ஜெயகாந்தனின் கங்காவின் இறுதி கதி என்னவென்பது நமக்குத் தெரியும். விகாரமும் வெறியும் கலந்த சமூகச் சூழல் கங்காவைத் துரத்திச் செல்ல இறுதியில் கங்கை ஆற்றில் அவள் தன் விடுதலையை தேடிக் கொள்கிறாள். தி.ஜானகிராமனின் படைப்புகளும் இத்தகைய மெய்யியல் பார்வையின் ஊடுறுவலோடு நடைபெறுகின்றன. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் ஆதிக்கங்களை கனமாக உருவாக்கிய பார்ப்பனியம் அழிந்தொழிய இறுதியில் இயற்கையோடு இணைந்து வாழ்கிற ஆதிவாசிகள் தட்டிச் செல்கின்றனர். மெய்யியல் தளம் இல்லாமல் பேரிலக்கியங்கள் இல்லை. மேலைத் தத்துவ மரபுக்கும் கீழைத் தத்துவ மரபுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள் என்ன? இவ்விரு மரபுகளும் இன்று ஒத்துச் செல்ல இயலுமா? கீழைத் தத்துவ மரபில் சீன தத்துவ மரபு உட்பட பல இருந்த போதிலும் இந்திய தத்துவ மரபு பற்றி பேசுவது மட்டுமே இங்கு நாம் பேசுவது பொருந்தும். இந்தியாவில் மதத்திற்கு சேவை செய்யதான் தத்துவம் இருந்திருக்கிறது. அதாவது மனிதன் என்ற வகையில் வாழ்வின் துயரங்களிலிருந்து விடுபட்டு இறைவனோடு நாம் கலந்து கொள்ள வேண்டும். அல்லது மனிதப் பிறப்பிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும். இறைவனை ஒப்புக்கொள்கிற இந்திய மதங்களும் ஒப்புக் கொள்ளாமல் ஆன்மா என்றும் பிறப்பிலிருந்து விடுதலை பெற்றுப் பிறவா நிலை வேண்டும் என்னும் புத்த, சமண சமயங்களும் மண்ணுலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெறுவதைத் தான் முதன்மையாக பேசின. இதனை ஒட்டியே பாவம் புண்ணியம் மேலுகம் நரகம் முன்வினை தீவினை விதி, பல்வகைப் பிறப்பு, மாயை, மலம், என்பவை பற்றிப் பேசின. இத்தகைய அணுகல் முறை காரணமாக மண்ணுலக வாழ்வு வரலாறு பொருளியல் ஏற்றத் தாழ்வு முதலியவை பற்றி இவர்கள் ஆராயவில்லை. ஆணுக்குத்தான் துறவு, மோட்சம், தத்துவ ஆராய்சி முதலியன தேவை பெண்ணுக்கு இவை இல்லை காமம், பொருளோடு உறவு முதலியன தீமையானவை. ஆன்மா முற்றிலும் தூய்மையானது. இறைவனோடு ஒன்றியது புலன்கள் பொய்யானவை. தர்க்கம் முதலிய அறிவு தேவை. இவ்வகை அறிவால் இறைவனை, ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டும் முன்வினை பயனாக இப்பிறப்பில் ஒருவன் சாதி அமைப்புக்குள் மேல் நிலையிலோ அல்லது கீழ் நிலையிலோ பிறக்கிறான். மண்ணுலக வாழ்வு என்பது ஒரு உயிர் தீவினைகளிலிருந்து விலகிக் கொள்ளும் முயற்சி மேற்கொள்கிற ஓர் இடைக்கால உறைவிடம். பொதுவாக தத்துவம் பற்றிய பாடநூல்கள் இப்படித்தான் இந்தியத் தத்துவம் பற்றிச் சொல்ல முற்படுகின்றன. இவ்வகை போக்குக்கு எதிராக சார்வாகம், சாங்கியம்., வைஷேடிகம் முதலிய தரிசனங்களும் தொடக்கம் முதலே இருந்தன. என்றாலும் கி.பி. 8ம் நூற்றாண்டு வாக்கில் மதவாதத்திற்கு இடம் கொடுத்து மேன்மையிழந்தன. மேற்குலகிலும் கிரிஸ்துவம் போன்ற மதத்தின் ஆதிக்கம் தொடக்க காலத்தில் இருந்த போதும் கி.பி 12, 13ம் நூற்றாண்டுக்குப் பிறகு கடல் பயணங்கள், அறிவியல் ஆய்வுகள், தொழிற்புரட்சி முதலியன ஏற்பட்ட நிலையில் மதவாதம் என்பது தத்துவ ஆய்வுக்கு இடம் கொடுத்து தன் இடத்தை இழந்தது. மண்ணுலகம், பிரபஞ்சம், தாவரங்கள், உயிர்வகைகள், அரசதிகாரம்,பொருளியல் உறவுகள் ,வரலாறு,கலை, இலக்கியம் முதலியவை பற்றிய அறிவு வகைப்பட்ட ஆய்வுகள் முதன்மை பெற்றன. அறிவியல் ஆய்வுக்கான கருவிகள் கண்டறியபட்டன. மனிதன் தன் புலன்களைக் கொண்டு, கருவிகளைக்கொண்டு, தன் அறிவைக்கொண்டு, தர்க்கத்தின் மூலம் எந்த அளவுக்கு உண்மைகளை பெறமுடியும் என்ற முறையில் உலகியல் சார்ந்த ஆய்வுகள் முதன்மை பெற்றன. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று தொடங்கி வகை வகையான ஆய்வுகள் நடை பெற்றன. பரிணாம கோட்பாடுகள் உட்பட எத்தனையோ கண்டுபிடிப்புகள் நடைபெற்றன நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன் என்றார் தெகார்த்தே நிகழ்வுகள் தான் உண்மையானவை, அதற்கப்பால் எவை உள்ளன என்பது எனக்கு தெரியாது என்றார் ஹியும். அனுபவங்களுக்கு அப்பால் எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றனர் சில ஆய்வறிஞர்கள். கடவுள் உயிர்களை படைக்கவில்லை. உயிர்கள் பரிணாம முறையில் வளர்ச்சி பெற்றுள்ளன. பிரபஞ்ச இயக்கமும் இப்படித்தான் நடைபெறுகிறது. மத குருவவை நம்ப வேண்டியதில்லை. நாமே கடவுளோடு உறவுகொள்ள முடியும். கடவுள் இல்லாமல் மனிதன் வாழ்ந்து விட முடியும். அரசன்,மதகுரு, நிலப்பிரபு, முதலாளி இல்லாமலும் மக்கள் தமக்கான வாழ்வை படைத்துக் கொள்ள முடியும் வரலாற்றின் வழியேதான் மனிதன் நாகரிகத்தை பெற்றான். மேற்குலகம் இப்படித்தான் மதங்களை ஒதுக்கிவிட்டு தத்துவ ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. ஹெகலுக்கு பிரம்மம் வேண்டியிருந்தது. காண்டைப் பொறுத்தவரை புற உலகம் என ஒன்று. அக, உலகம் என்பது இன்னொன்று. ஆக, இருவகை உலகங்கள் தேவைப்பட்டன நீட்ஷேக்குக் கடவுள் இல்லை. இருத்தலியல் வாதிகளை பொருத்தவரை பிரபஞ்சத்திற்கு, மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை, எல்லாமே தற்செயல் நிகழ்ச்சிகள். வாழ்வுக்கு அர்த்தம் என ஏதாவது ஒன்றை தனி மனிதன்தான் வைத்துக்கொல்கிறான். புலன்களின் நீட்சிதான் கருவிகள். மனிதர் தமக்கான உலகை படைத்துக்கொள்ள முடியும். மனிதத்துயரங்கள் தனியுடைமை, அரசதிகாரம் முதலியவற்றின் விளைவுகள் சமதர்மம் என்ற உலகில் இவற்றுக்கு இடமில்லை என மார்க்ஸ் கூறினார். தத்துவங்கள் இதுவரை உலகத்தை விளக்கின இப்போது தேவைப்படுவது உலகை மாற்றி அமைப்பதுதான். மார்க்ஸ் கருத்துப்படி தத்துவத்திற்கும் தேவையில்லாத உலகம் என ஒன்று உருவாக முடியும். மேலைத் தத்துவ இயலின் ஆய்வு முறைகளில் இந்திய மதங்களையும் சாங்கியம் முதலிய தரிசனங்களையும் நாம் இன்று ஆய்வுக்கு உட்படுத்த முடியும் கடவுள், ஆன்மா முதலியவை வரலற்றுச் சூழலில் மனிதர் படைத்துக் கொண்ட கருத்தாக்கங்கள் மண்ணூலகம்தான் நமக்கான உலகம். மனிதத் துயரங்களூக்கு எவை காரணங்கள் என்பவை இப்பொழுது நமக்குத் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளன. சமதர்மம்தான்,சமத்துவம்தான் மனிதர் வாழ்வுக்கு ஆதாரமாக முடியும். புத்தரரோ, சங்கரரோ தம் வரலாற்றுச் சூழலுக்கு, வர்க்க ஏற்றத் தாழ்வுகளூக்கு தம் கால மாயைகளுக்குக் கைட்டுபட்டுத் தான் இருந்தனர். இன்றும் புதியவகை மாயைகள் நமக்குள் திணீக்கப்படுகின்றன. தேசம், உலகமயம், அணு ஆயுதம், நாகரிகம் என்று எத்தனையோ வகை வகையான திரைகளோடுதான் நாம் வாழ்கிறோம். பழைய உலகத்தை, ஆதிக்க உலகத்தை மீண்டும் தோற்றுவிக்கிற சக்திகளுக்கு இன்றும் மதங்களும் பலவகைக் கருத்தியல்களும் ஆதிக்கங்களும் ஒத்துழைக்கின்றன. இவற்றோடு போராடி இவற்றை வென்று நமக்கான உலகத்தைப் படைத்துக் கொள்வதற்குத்தான் மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் நமக்குள்ளூம் நாம் புதுப்பித்துக் கொள்கிறோம்.
தொடரும்...

Sunday, October 4, 2009

கோவை ஞானி – நேர் காணல்

தமிழும் தமிழ் நிமித்தமும்... சந்திப்பு: இளங்கோ கிருஷ்ணன், இசை, சுரேஷ்வரன் கோவை ஞானி என்ற பெயரில் எழுதி வரும் திரு.பழனிச்சாமி அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த 40 ஆண்டு காலமாக தமிழின் அறிவுச் சூழலில் தீவிரமாக இயங்கி வருபவர். தமிழாசிரியர், மார்க்சியர், கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், இதழியலாளர், சமூக விஞ்ஞானி, தத்துவ ஆர்வலர், சித்தாந்த விமர்சகர், அரசியல் போராளி எனும் பன்முக ஆளுமைகளோடு வினையாற்றிக் கொண்டிருக்கும் இவரின் கருத்துகள் தனித்துவமானவை மட்டுமல்ல தமிழ் சூழலிலும் உலக அரங்கிலும் மிக முக்கியமானவையும் ஆகும். கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல் போன்ற துறைகளில் இவரது ஆழமான அவதானங்கள் பல முக்கிய திறப்புகளை நமக்கு அளிக்க வல்லவை. கண் பார்வையற்ற நிலையிலும் இன்னமும் அதே தீவிரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் அவரை நமது ‘கருக்கல்’ ‘இதழ் 6’க்காக கோவையின் புறநகரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியது... இலக்கிய விமர்சனத்தை தங்கள் துறையாக தேர்வு செய்து கொண்டதன் காரணம், அதன் பின்னணி என்ன? எந்த ஒரு மனிதனும் தன் வாழ்வை, தன் சூழலை, தன் உறவுகளை தான் கற்பதை, தனக்கும் கற்பிக்கபடுவதை ஆய்வு செய்யாமல் இருக்க முடியாது. வாழ்க்கை நமக்குள் எத்தனையோ கேள்விகளை ஒவ்வொரு நாளும் எழுப்புகிறது. இவற்றுக்கு முகம் கொடுக்காமல் தான் கற்பதைம் தனக்கு கற்பிக்கபடுவதை அப்படியே நம்புகிறவன் வாழ்க்கை செறிவு பெறாது. அர்த்தம் உடையதாகாது. சிறு வயதிலிருந்தே எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்தன. நான் கிராமத்தில் வாழ்ந்தேன். உழவர்களும் நெசவாளிகளும் எங்களைச் சூழ இருந்தார்கள். வறுமை எங்களைச் சூழ இருந்தது. இரண்டாவது உலகப் போர் முடிந்த காலம். தேசத்தில் எத்தனையோ பிரச்சனைகள். இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள வாழ்க்கையை கற்க வேண்டும். வரலாறு கற்க வேண்டும். தத்துவம் என்றும் அறிவியல் என்றும் பலவற்றை தேடிக் தேடிக் கற்க வேண்டும். நான் தொடர்ந்து கற்றேன். மேற்கல்வி கற்க எனக்கு கிடைத்த வாய்ப்பை பெருமளவு பயன்படுத்திக் கொண்டேன். தமிழோடு ஆங்கிலமும் சிறப்பாக கற்றேன். கடவுளைப் பற்றி எனக்கு நிறையக் கேள்விகள் தியானத்திலும் ஈடுபட்டேன். இறுதியில் கடவுள் என்பது ஒரு செறிவான கருத்தாக்கம் என்று புரிந்து கொண்டேன். நான் தமிழிலக்கிய மாணவன். எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் என்றும் என் வணக்கத்திற்குரியவர்கள். மார்க்சியம் கற்கவும் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. தொடக்கத்தில் நானும் கவிதை எழுதினேன். சிறுகதை, நாவல் என்றும் சில முயற்சிகளைச் செய்தேன். உணர்வுக் கொந்தளிப்பில் என்னால் வாழ முடியாது. வாழ்வின் அடிப்படை உண்மைகளை தேடித் தேடி கற்பதில்தான், புரிந்து கொள்வதில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. இந்த அளவுக்கு நான் வரலாறு முதலியவற்றை ஆழமாக கற்றேன். இறுதியில் திறனாய்வில்தான் என் முழு ஆற்றலையும் ஈடுபடுத்த வேண்டும் என முடிவு செய்தேன். தமிழக் சூழலில் சி.சு.செல்லப்பா தொடங்கி எத்தனையோ பெரியவர்களோடு நல்லுறவு கொண்டேன். எனக்கு வாய்த்த நண்பர்களிடமிருந்தும் நிறையக் கற்றேன். மனதை எப்போதும் திறந்து வைத்திருக்கிறேன். இலக்கியம் என்று தொடங்கினால் வரலாறு என்றும் தத்துவம் என்றும் கற்பதன் மூலமே இலக்கியத்தை புரிந்து கொள்ள முடியும். தன்முனைப்பு அறிவுத்தேடலுக்கு எவ்வகையிலும் உதவாது. எனக்குள் வரும் அறிவு என்பது காலங்காலமாக பலகோடி மனிதர்கள் பலதுறைகளில் சேகரித்த அனுபவங்களின் ஒரு சிறு துளி. கற்றது கைமண்ணளவு என்றாலும் கைக்குள் அடங்கும் மணல் துகளையும் எண்ணி முடிக்க முடியாது. என் அறிவு என்பது என்னிடம் இடம் பெற்றுள்ள சமூகத்தின் அறிவு. நான் தனியனில்லை. மார்க்சியம்தான் எனக்கு வாழ்க்கை, வரலாறு முதலிய எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து பார்க்கிற பார்வையை அது தந்திருக்கிறது. எனக்கான திறனாய்வுப் பார்வை எனபது இதுதான். கா.நா.சு. ரசனை அடிப்படையில் சில முடிவுக்ளை முன் வைத்தார். வானமாமலை ஆய்வின் அடிப்படையில் இலக்கியம் சார்ந்த சில முடிவுகளை முன் வைத்தார். இந்த இரு வகை இலக்கிய ஆக்கம் பற்றி உங்கள் கருத்தென்ன? இவர்களுக்கு பின் வந்த இலக்கிய போக்கு என நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்? கா.நா.சு அவர்களை ஒரு குறியீடு எனக் கொண்டு அவர் சார்ந்த இலக்கிய போக்கு பற்றியும் பேசலாம். அதே போல வானமாமலை அவர்களை ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு முற்போக்கு இலக்கியம் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும். கா.நா.சுவும் அவர்களைச் சார்ந்தவர்களும் இலக்கியத்தில் ரசனை, கலை நேர்த்தி முதலியவற்றுக்கு அழுத்தம் தந்தார்கள். இவர்களது படைப்புகளில் தனி மனிதருக்கு முக்கியதுவம் இருந்தது எனச் சொல்லலாம். குடும்பச் சூழலில் ஆண், பெண் உறவு இவர்களுக்கு முக்கியம். இவர்களது படைப்புகளில் சமூகப் பிண்ணனி பற்றி விவரங்கள் தரப்படும். இவர்களது படைப்புகளின் வழியே பாத்திரங்கள் உலவும் வரலாற்றுச் சூழல் பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடியும். ஆண், பெண் உறவில் காதலும், தியாகமும் சிறப்பான இடம் பெறுவதைப் போலவே காமத்திற்கும் இடம் உண்டு. கலை நேர்த்தி இவர்களைப் பொறுத்த வரை முதன்மையானது. இவர்களுக்கு முற்பட்ட இலக்கியவாதிகளோடு ஒப்பிடும் போது இவர்களின் படைப்புகளில் சமகாலச் சிக்கல் கூடுதலாக இடம் பெற்றன. மனித நேயத்தை இவர்கள் மதித்தார்கள். அரசு, முதலாளியம், உடமை ஆகியவை பற்றி விமர்சனம் இல்லை. சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றை இவர்கள் கண்டு கொள்ளவில்லை எனினும் இவர்களது படைப்புகள் நவீன இலக்கியம் என்ற முறையில் மரியாதைக்குரியவை. வானமாமலை முதலிய மார்க்சியரைப் பொறுத்தவரை மனித வாழ்வின் சிக்கல்கள், போராட்டங்கள் முதலியவற்றை, சமகால அரசியல், பொருளியல் முதலியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுச்சூழலில் வைத்துப் பார்ப்பதில் துல்லியமான விவரிப்புகள் தேவை. அரசு ஆதிக்கம், நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஆகியவர்களின் சுரண்டல் இவற்றுக்கு எதிராக உழைக்கும் மக்களின் போராட்டம் இவை குறித்து படைப்பாளிகளுக்கு அக்கறை தேவை. மனித மனதின் சிக்கல் என்று தனியாக எதுவும் இல்லை. போராட்டங்கள் மூலமே மனிதச் சிக்கல் தீர முடியும். இலக்கியம் என்பது ரசனைக்கானதாக மட்டும் இருக்க முடியாது. மனித விடுதலைதான் இலக்கியத்தின் கருப்பொருளாக இருக்க முடியும். காமம் முதலிய உளவியல் சிக்கலுக்கு அழுத்தம் தருவதன் மூலம் வரலாற்றுச் சுழலில் மனித இருப்புக்கான முக்கியத்தை குறைக்க நேரிடும். தேச விடுதலை இயக்கத்தில் பின்னடைவு நேர்ந்த 1930 காலச் சூழலில் நவீன இலக்கிய ஆக்கத்திற்கான தேவையை முன்னிறுத்தி மணிக்கொடி தோன்றியது. மணிக்கொடி இயக்கதின் வீச்சு கா.நா.சு முதலியவர்கள் மூலம் சில 10 ஆண்டுகளுக்கு உறுதியாக தொடர்ந்தது. எழுத்து, கசடதபற – புதுக்கவிதை, நவீன ஓவியம், நவீன நாடகங்கள் முதலியவற்றை உள்ளடக்கிய இயக்கமென இதை வரையறுக்க முடியும். இவர்களில் பலர் பிராமணர்களாகவும் ஆங்கில இலக்கியதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்தார்கள். நவீன உலகப்பார்வை ஓரளவுக்கேனும் இவர்களுக்கு இருந்தது. திராவிட இயக்கத்தோடும் மார்க்சியத்தோடும் இவர்கள் உடன்பாடு கொண்டவர்களாக இல்லை. இவர்களுக்கு மனதின் விடுதலைதான் முதன்மையான பிரச்சனை. இவர்களோடு ஒப்பிடும் போது மார்க்சியரைப் பொறுத்தவரை மனித விடுதலைக்கே முக்கியத்துவம் தந்தனர். 1980க்குப் பிறகு, இலக்கியப் போக்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன சமூக வாழ்வில் சாதியத்தின் ஆதிக்ககத்தை தகர்க்க வேண்டும் என்ற நோக்கில் தலித்தியமும் ஆணாதிக்கத்தை தக்ர்க்கும் நோக்கில் பெண்ணியமும் படைப்பிலக்கியத்தில் முன்னுக்கு வந்தன. அரசியல், பொருளியல் சமூகம் ஆகியவற்றின் மையத்தில் இயங்கும் அதிகாரத்தை தகர்க்கும் நோக்கில் பின் நவீனத்துவ கருத்தியல் முன்னுக்கு வந்தது. தற்கால தமிழிலக்கியத்தில் இது மூன்றாவது முக்கியப் போக்கு. முதல் இரு வகைப் போக்கிஉகளிலிருந்தும் இப்போக்கு பெரிதும் முரண்படுவதோடு முந்திய இருவகை இலக்கியத்துள்ளும் செயல்படும் மையங்களை இந்தப் புதிய போக்கு தகர்க்கவும் செய்கிறது. தற்கால தமிழிலக்கியப் படைப்பாளிகள் மற்றும் திறனாய்வாளர்கள் செய்யவேண்டிய முதன்மையான பணி என எதைக் கருதுகிறீர்கள். எந்தப் ஒரு படைப்பாளியும் தன் சமகால வாழ்கையிலிருந்தும் வரலாறு, பொருளியல் முதலிய சூழலிலிருந்தும் தன்னை வேறுபட்டவனாக கருத முடியாது. தனக்கன வாழ்வையும் படைப்பாளி இந்த சூழலிலிருந்துதான் பெறுகிறான். தனக்கன சூழல் என்று தேடிச் செல்கிற போது தன் குடும்பம், கல்வி, தனைச் சூழ இருக்கிற தொழில்வகை, உயிரினங்கள், இயற்கை, தன காலச் சமூகம் இப்படித் தொடர்ந்து தேடிச் செல்கிற போது நெடுங்கால வரலாறு இறுதியில் பிரபஞ்சம் அளவுக்குத் தன் தேடலை தொடர்ந்தாக வேண்டும். வாழ்வின் முரண்பாடுகளுக்குள் இவனும் இருக்கிறான். வாழ்வின் வரலாற்றின் சிக்கல்கள் இவனுக்குள்ளும்தான் மோதுகின்றன. இவை அவனுக்கு தருவது வேதனை. இவற்றிலிருந்து இவனுக்கு விடுதலை தேவை. இவனுக்கான விடுதலை என்பது இறுதியில் சமூகத்தின் விடுதலை. உலக அளவில் விரிவு பெற்றுள்ள ஆதிக்கங்கள், தன் ஆதிக்கத்திற்குள் அகப்பட மனிதர்களை ஒடுக்கி, சுரண்டி, பிளவுபடுத்தி, நொறுக்கி, மாயைகளில் போதைகளில் ஆழ்த்தி, இப்படி அவர்களை பலவீனர்களாக ஆக்குவதன் மூலம் ஆதிக்கங்கள் தம்மை வலுப்படுத்திக் கொள்கின்றன. இவற்றின் தகர்வின் மூலமே மனித விடுதலை, பேரன்பு, பரவசம், சமத்துவம், சமதர்மம், முதலியவை சாத்தியம். இத்தகைய பெருவாழ்வை தனக்குள் தாங்கித்தான் ஒரு படைப்பாளி தன்னையும் கலை இலக்கியங்களையும் படைக்கிறான். இன்றைய தமிழ்சூழலிலும் இத்தகையவன்தான் நமக்கான படைப்பாளி, இலக்கியவாதி. இன்றைய தமிழ் மக்களின் வாழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட நெருக்கடிகள், சிக்கல்கள் என்பன இருப்பது குறித்து தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறையுடைய அனைவரும் சிந்திக்க வேண்டும். உடனடியாக எனக்குத் தோன்றுகிற சிலவற்றைக் குறித்து இங்கு சொல்ல விரும்புகிறேன். திருப்பூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சாயாப்பட்டறைக்ளின் இரசாயனக் கழிவு நீரால் சுற்றுப் பகுதியிலுள்ள உழவர்களுக்கும் திருப்பூரில் வாழ்கிற மக்களுக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கடுமையானவை. தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திருப்பூருக்கு வந்து வசதி குறைவான மற்றும் மாசு மிக்க சூழலில் 10, 12 மணி நேரம் –வயிற்றை நிரப்ப வேண்டி- நிர்வாகத்தினரின் கெடுபிடிகளுக்கு உட்பட்டு தன்மானம் இழந்து, மனித மாண்பு எது எனத்தெரியாமல் பலவகையான மனக்கோளாறுகளுக்கு உள்ளாகி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். திருப்பூர் நகரத்தில் குடி தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற பொறுப்புக்ளை நிறைவேற்றவும் நகரத்தை நிர்வாகம் செய்வதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட மார்வாடிகள் முதலியவர்கள் உள்நுழைவுக்கும் உட்பட்டு மக்கள் வாழ வேண்டியிருக்கிறது. அந்நியச் செலவாணி கிடைக்கிறது என்பதற்காக மைய அரசும் மாநில அரசும் திருப்பூரை போன்ற பொருளியல், நிர்வாகம் முதலிய சூழலை இன்னும் எத்தனையோ பகுதிகளில் ஏற்படுத்தவும் தீர்மானித்திருக்கிறது. இத்தகைய சூழலில் பெண்கள், குழந்தைகள், உழவர்கள், இளைஞர்கள் முதலியவர்கள் வாழ்க்கை என்னாவது? உலகமயமாதல் என்ற கொடுமையின் விளைவுக்குத் திருப்பூர் ஒரு நல்ல சான்று. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதற்கும் இத்தகைய வாழ்வியல் நெருக்கடிக்குத் திருப்பூர் ஒரு குறியீடு. திருப்பூரை வைத்து ஆயிரக்கணக்கான சிறுகதைகள், நூற்றுக் கணக்கான நாவல்கள், வாழ்வியல் நெருக்கடிகள் குறித்து எண்ணற்ற ஆய்வுகளைச் செய்ய முடியும். நம் தொன்மையான வரலாறு என்னவாயிற்று? நமக்கு என்ன எதிர்காலம் விதிக்கப்பட்டிருக்கிறது. என்பது பற்றியெல்லாம் இங்கு எவ்வளவோ செய்ய முடியும். இத்தகைய நெருக்கடி மிக்க சூழலில் தான் ஜெய்வாபாய் என்ற மாபெரும் அற்புதமான பள்ளி நடைபெறுகிறது. தாய்த்தமிழ்ப்பள்ளி நடைப்பெறுகிறது. சில இலக்கிய அமைப்புகள் விடாப்பிடியாக செயல்படுகின்றன. தொழிற்சங்க இயக்கங்கள் எப்படியெல்லாமோ தங்களைத் தக்கவைத்துக் கொள்கின்றன. திருப்பூரின் கதையை ஒரு மகாபாரதம் போல் விரிவாக எழுத முடியும். நொய்யல், ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு என்று எவ்வளோ சொல்லமுடியும். நம் கால வாழ்வுக்குத் திருப்பூர் ஒரு குறியீடு. இன்னும் இங்கு ஒன்றை நான் சொல்ல வேண்டும் தமிழகத்தில் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கு இடையில் மாபெரும் வளர்ச்சி கண்டு பிறகு தமக்குள்ளேயே முரண்பாடுகள் அதிகரித்து மக்கள் வாழ்வியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் வெறு வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு இன்னும் மிதப்போடு வாழ்கின்ற இயக்கங்கள் சிலவற்றை சொல்லமுடியும். இவற்றில் ஒன்று திராவிட இயக்கம். இன்னொன்று மார்க்சிய இயக்கம். ஒவ்வொன்றிலும் எத்தனையோ பிரிவுகள், குழுக்கள். இவற்றோடு தம் வாழ்வை முற்றாக இணைத்துக் கொண்ட தோழர்கள். முன்பு சாதனை செய்து இன்று மனச்சுமையோடு வாழ்கிறவர்கள். இவர்களின் வாழ்க்கைக் கதைகள் நம்கால வரலாற்றுக்கு மிக முக்கியமான ஆவணங்களாக திகழ முடியும். இவர்கள் வாழ்க்கை குறித்து வெளிப்படையான கதைகள், நாவல்கள் படைக்கப்படவேண்டும். மூடி மறைத்துப் பயனில்லை. தமிழ் எழுத்தாளர்களுக்கு இப்படியொரு பெரும் களம் திறந்து கிடக்கிறது. இன்னும் ஒன்றைச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். தொமையான நாகரிகத்தைப் படைத்த தமிழன் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கிடையில் எவ்வாறு சீரழிந்தான் என்பது பற்றிய வரலாற்று நாவல்கல் நமக்கு வேண்டும். மன்னர்கள், படையெடுப்புகள், ஜமீந்தார்கள், பாளையக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று எத்தனையோ நிகழ்வுகள். கிராம சபைகள் அழிந்தன. சாதிகள், மதங்கள், ஊழல்கள் என்று எவ்வளவோ நடந்தன. இவற்றுக்கிடையில் தமிழன் தன்னை இழந்த கதை நமக்குத் தேவை. எதிரிகள் நம்மை அழித்தனர் என்று எழுதிப் பயனில்லை. எதிர்க்கு நாம் எப்படி விட்டுக் கொடுத்தோம் நம்மை நாமே அழித்துக் கொண்டோம், வாழ்வின் மையம் நமக்குள் எப்படித் தகர்ந்தது? இன்றைய தமிழன் எத்தனை வகைகளில் தனக்குள் முரண்பட்டுள்ளான், தனக்குள் பிளவுபட்டுள்ளான். இவன் யாருக்கெல்லாம் இடம் கொடுத்துத் தன்னை இழந்தான்? தன் மண்ணை தன் தொழில்களை, தன் கலைகளை தன் பெண்களை எப்படி இவன் கைவிட்டான். எதை இவன் இன்னும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான். இவனை மீட்டெடுக்க என்ன வழி? இந்தக் கதை நமக்கு வேண்டும். பார்ப்பனர் மட்டுமல்லாமல் அந்நியர்கள் நமக்குள் இன்னும் வாழ்கின்றனர். நம்மை ஆழத்தோண்டிப் பார்க்க வேண்டும். ஏனோ தானோ என்று கண்ட கதை, கேட்ட கதை என்று எழுதிப் பயனில்லை. நம் வரலாற்றை நாமே தோண்டிப்பார்த்து எழுத வேண்டும். தமிழ் தேசியம்தான் நமக்கான ஒரே அரசியல் என்று நான் நம்புகிறேன். தமிழ் மக்களின் வாழ்வும் மேன்மையும்தான் படைப்பளியின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு படிப்பும் உழைப்பும் தேவை. தமிழ் எழுத்தாளர்கள் குறைந்தது 20,30 பேர்களாவது ஓரிடத்தில் அமர்ந்து இவை பற்றியெல்லாம் முதலில் பேச வேண்டும். தமிழ் மக்கள் வாழ்வும் வரலாறும் எந்தப்புள்ளியில் இணைந்திருக்கின்றன அல்லது முரண்படுகின்றன எனக் கண்டு கொள்ள வேண்டும். இந்த வரலாற்றுக் கதையை தமிழகச் சூழலில் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு என்னவெல்லாம் படிக்க வேண்டும், யாரோடு உறவு கொள்ள வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதுவரையிலான தமிழ்ப்படைப்புகள் இந்த நோக்கில் என்ன செய்துள்ளன என்றும் ஆராய வேண்டும். தொடரும்....

Thursday, October 1, 2009

கவிதை

அகவன் குறிப்புகள் ஒன்று பைத்தியம்! ஒரு தாழம்பூவைப் போல மின்னலை நக்க விரும்பினாயோ என் அதிகுரங்கே, மனிதனே? அரவத்தின் வாயிலிருந்தோர் பிளவுச் செம்மின்னல் மின்னி மறைந்து கொண்டேயிருக்கிறது பச்சைக் குளமாய் காற்றில் ததும்பும் தாவரமே எப்போது கண்விழிக்கும் என் தாழை? இது ஒரு விதியாய் இருக்கக்கூடும்: ஒரு பைத்தியத்தின் கையிலுள்ள துப்பாக்கி பத்து எண்ணும் போது உங்களைச் சுடட்டும் 1,3,8,9,2,1,5,3... இன்னொன்று இந்தச் சொல் சூனியக்காரி, உன்மத்தி, நேசகி, ஆயுதம், முத்தம் பிறந்த குழந்தையின் முதல் எண்ணம் வீறிடல், தன் மலர்தல், பவித்ர மலர், ஆதியின் பரமுடிச்சு, முதல் சலனம், உயிர்த்துவம், துர்நாற்றம் நிறதேவதை, மனப்புயல் நெருப்பின் பின் பக்கக் குளிர்மை வலி, பரமசுகம், எல்லாமும், எதுவும் இல்லை - உண்டின்மை. மற்றொன்று
வெயிலின் மஞ்சள் வண்ண கடலில் திமிங்கலம் இந்த தேசம் மின்மினிகளை கொல்லும் பேய் வெளிச்சம் களையெடுப்பு வயற்பாடலின் இடைகமறல் நிலவிலிருந்து நிலவுக்கு செல்லும் பாதையில் பறக்கும் இரு மைனாக் குருவிகள் கண்மூட உன்னில் பறக்கும் சுடுவதற்கு துப்பாக்கி எடுக்கும் குருவிக்காரன் காலை கடிக்காமல் இருக்கும் எறும்பிற்கு அறவுணர்வு என்று பெயர் வைத்தவன் நீயா போமோயிஸ்ட் ஒரு பின் நவீன கலைஞனின் கல்லறை வாசகம்: இங்கு சிறுநீர் கழிக்கதீர்கள்
வேறொன்று
பசியே நான் செய்தவைகளில் மிகப்பெரிய தவறென்பேன் பசியே என் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்ததென்பேன் நீங்கள் நினைப்பது போல் பசி என்பது ஒன்றல்ல உண்மையில் ஒன்றிற்கு மேலுமல்ல பசியை ஒரு கொடூர மிருகமாய் உருவகித்து படம் வரைந்த தாடிக்காரனை வரைந்ததும் அது இறங்கி வந்து தின்றது அதை கொல்வதற்காக அவன் சகாக்கள் வேறொரு மிருகத்தை செய்ய அது பசியை தவிற அனைத்தையும் தின்றது பசியின் கதை ஒரு கதையல்ல உண்மையில் அது ஒன்றிற்கு மேலுமல்ல ஒரு பைத்தியத்தின் உறக்க நேர உளறல்: வாழ்வு தத்துவங்களின் மொழியில் வியாக்கியானப் படுத்தப்படுகிறது கித்துவங்களின் மொழியில் நிகழ்கிறது.
- நன்றி: கருக்கல்

பின் குறிப்பு: மேலே உள்ள படம் “மார்க் டான்சே” எனும் ஓவியர் வரைந்தது. யாராலும் செல்லவியலாத சென்றவர்கள் திரும்பவியலாத மலை உச்சியின் நுனியில் நின்றவாறு தெரிதாவும் பால் டி மானும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தத்துவங்களின் போதாமையை பேசும் இக்கவிதைக்கு இப்படம் பொருத்தமானது எனத் தோன்றியதால் இதை இணைத்துள்ளேன்.