Monday, September 14, 2009

நுண் கதைகள்


‘உயிர் எழுத்து’ செப்டம்பர் 2009 இதழில் வெளியான எனது நுண் கதைகள் நான்கையும் பிரசுரமாகாத ஒன்றையும் இங்கு பதிந்துள்ளேன். கவிதைக்கு மிக நெருக்கமான அல்லது கவிதை தன்மை நிறைந்த கதைகள் இவை என்பதால் இவைகளை நுண் கதைகள் என நான் அழைக்கிறேன். ‘பெர்ணாண்டோ சொராண்டினோ’ எனும் லத்தின் அமெரிக்க எழுதாளரின் கதைகளை படித்த போது இவ்வடிவத்தை நான் உணர்ந்தேன். அவரின் சில கதைகள் “ஆட்டுக் குட்டிகள் அளிக்கும் தண்டனை” எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இதை தமிழில் மொழிபெயர்த்தவர்: எம்.எஸ், பதிப்பகம்: காலச்சுவடு.


கீதாரி

பொலிகாளை போல் சீற்ற வெய்யில் வன்மம் கொண்டலையும் வெம்புழுதித் தரிசுகளில் தன் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்தாள் ஒரு கீதாரி. நெருஞ்சிப் பூக்களில் சிறு தேன் பருக வரும் பொடிப் பூச்சிகள் புதர்களில் நிழல் தேடும் கொடுவெய்யிலில் நீர் நிலைகள் யாவும் வற்றிவிட பேய் போல் அகாலத்தில் விரல் விரித்திருக்கும் மொட்டை வேல மரக் கிளைகளில் அமர்ந்திருக்கிறது பறவையற்றக் கூடொன்று. ஒற்றைப் பனை மர நிழலில் புளுந்தண்ணிக் கரைசல் பருகித்தன் உலர்ந்த உதடுகளை நனைத்துக் கொண்டாள். நாரைக் கூட்டமொன்று தெற்கிலிருந்து வடக்காக பறந்து போகக் கண்டவள் வடக்கே எங்கேனும் மழை பெய்கிறதோ என்றெண்ணி வானம் பார்த்தாள். வடக்கு மூலையில் வானம் ஈயத்தகடு போல இறுகிக் கிடந்தது. பெயருக்கும் ஒரு மேகமில்லை. ஆனால் அவளது நாசிகளில் ஒயாது மண் வாசனையடிதுக் கொண்டிருந்தது. வெய்யிலின் கடுமையோ சற்றும் குறைந்த பாடில்லை. திடீரென அவளது ஆநிரைகள் கத்தத் துவங்கிவிட்டன. சில மகிழ்சியில் துள்ளின. மண்வாசனை முன்னிலும் காட்டமாய்த் தன் நாசியில் படிவதையுணர்ந்தாள். பனைமர நிழல் காணாது போயிருக்க அருகிருந்த புற்றுக்குள் சுள்ளெரும்புகள் சாரை சாரையாய் அடையக் கண்டாள். மழையின் நிமித்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்க முன்னிலும் அதிகமாய் வெக்கை கூடுவதை புரிய முடியாதவள் பயத்திலும் வெப்பத்திலும் தொண்டையுலர தண்ணீர் தண்ணீர் என முனகினாள். மிகத்தொலைவில் வேனல்குளம் போல் தெரிந்த இடத்தில் சில ஆநிரைகள் நீர் பருகிக் கொண்டிருக்கப் பார்த்து வெறி பிடித்தவள் போல் அதை நோக்கி ஒடினாள். நாயுருவிச் செடிகள் கால்களைக் கிழிக்க அவள் செல்லச் செல்ல அந்தக் கானல் நீரோடு சேர்ந்து ஆநிரைகளும் நகர்ந்து கொண்டே சென்றன தன்னிலை மறந்து ஒடி மூச்சிரைக்க மயங்கிக் கீழே விழுந்தாள். கண் விழித்த போது தன் முகத்தில் பாலின் வாடையும் ஈரப் பிசுபிசுப்பும் நிறைந்திருக்க தன் ஆநிரைகள் தன்னை சுற்றி நின்றிருக்க கண்டாள். இதற்குள்ளாக பொழுது சாய்ந்திருந்தது. ஆநிரைகளைக் கூட்டிக் கொண்டு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது கீழ்வானத்தில் தொங்கிக் கொண்டிருந்த சூரியப் பழத்தையுண்ண மிக வேகமாய் மேற்கு நோக்கி ஒடத்துவங்கியது எவ்வளவு மேய்ந்தும் வயிறு நிறையாத ஒரு கன்றுக் குட்டி.


ஒற்றைக் குரல்

அவன் பாணன் செவியே மனமாய் வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒலியின் உதடுகள் பேசும் மர்ம மொழியின் வசீகரத்தில் புத்திசொக்கி திரிபவன். திசையெங்கும் ஒரு வானம்பாடியாய் சுற்றி அலைபவன். அலைதலின் வெம்மையில் நா வரள அவள் வீட்டு வாசலில் போய் நின்றான். தாயே தாகமாய் உள்ளது சிறிது நீர்க் கொடுங்கள் என்றவன் அவள் உள்ளே செல்லும் போதுதான் அந்த வினோதத்தை கவனித்தான். திரும்பி வந்தவளிடம் இரண்டு கால்களையும் நன்றாகவூன்றித்தானே நடக்கறீர்கள் என்று கேட்டான் பிறகு அவளின் கால் சிலம்புகளை வாங்கி காதருகே கொண்டுபோய் ஆட்டியாட்டி சோதித்தான். அவன் செய்கையின் காரணம் புரியாதவள் அவை மாணிக்கப் பரல்களால் ஆனவை என்றாள். அறிவேன் தாயே இவை மாணிக்க அரிகள் என ஜதி சொல்கிறது ஆனால் இரண்டிற்கும் ஒசை வேறுபடுகிறது இரண்டிலுமுள்ள பரல்களில் ஒன்றே ஒன்று மட்டும் ஒசை எழுப்புவதே இல்லை அந்த ஒன்றே ஒன்று மட்டும் தான் என்று ஆச்சர்யப்பட்டவன் அதை அவளிடமே திருப்பித் தர கை நழுவியது. அது தரையில் மோதிய போது அந்த நகரம் ஒரு முறை நடுங்கியது.


பத்ம வனம்

ரதத்தின் சகட ஒசை நிலமதிர அவன் அவ்வனத்தை அடைந்தான். அங்கிருந்த தாவரங்கள் ஆர்ப்பரித்தன. ஒரு மரம் சொன்னது மலய மாருதம் வீசும் போது வைரம் பாய்ந்த மரங்கள்தான் சந்தனவிருட்சமாகும் தங்கள் வரவால் இந்த வனமே சந்தனவனமானது வாருங்கள் வெற்றி வீரரே தங்களுக்கு வேண்டியதை வேட்டையாடுங்கள். அவன் பெருமிதம் விம்ம வனத்துள் சென்றான். தொலைவில் ஒரு மான் மருட்சியாய் ஒட அதைத் துரத்தினான் விடாதே முன்னேறு விடாதே முன்னேறு எல்லா மரங்களும் கூச்சலிட்டன. அவன் வனத்தின் ஆழத்துள் சென்று கொண்டே இருந்தான். திடிரென அந்த மான் ஒரு நரியாகியது. அவன் அதிர்ந்து சுற்றும் பார்த்தான் மொத்த வனமும் பெருங்குரலெடுத்து சிரித்த படி இருக்க மரங்கள் அவனை நோக்கி நெருங்கி வந்து வேர் கால்களால் நெரித்தன. அவன் ஒடத்துவங்கினான். திசைகள் தங்களைப் பூட்டிக் கொண்டன. வழி வழி என மனது பதைத்தது. வெளியேறும் வழி தெரியவில்லை. பீதியில் உடல் வியர்க்க கண்விழித்தான். மறுநாள் தன் மாமனிடம் அந்தக் கனவை சொன்னான். மாமன் எந்த சலனமும் இன்றி சொன்னான். அது பத்ம வனம். நான் அங்கு போக முடியுமா மாமா. அந்தக் கருத்த முகம் அதே நிச்சலனத்துடன் சொன்னது ஒரு நாள் போவாய் அபிமன்யு.


யாரோ என் சிகரெட்டை திருடிக்கொண்டேயிருக்கிறார்கள்

யாரோ என் சிகரெட்டைத் திருடிக் கொண்டேயிருக்கிறார்கள். அதனை வாயில் வைத்து தீக்குச்சியை கொழுத்தும் போது எங்கிருந்தோ ஒரு கரம் வந்து பறித்து மறைகிறது. அந்தக் கரத்தை நான் அறியேன். என் எதிரிலும் யாரும் இருப்பதில்லை. முதல் முறை இப்படி நிகழும் போது நான் ஒரு கடற்கரையில் நின்றிருந்தேன். கைவசமிருந்த சிகரெட் பெட்டி காலியாகும் வரை முயன்றேன். ஒவ்வொரு முறையும் திருடப்பட்டன என் சிகரெட்கள். சுற்றிலுமிருந்தவர்கள் ஏளனமாய் சிரித்தார்கள். எனக்கு அவமானமாய்போயிற்று.
‘நாயே தில் இருந்தால் நேரில் வாடா' - கோபமாய் கத்தினேன்.
அன்று முதல் வீடு, பணியிடம், பொது இடம் என எங்கு சிகரெட் பற்ற வைக்க முயன்றாலும் திருடப்படுகிறது. தீக்குச்சி கொழுத்தினால் தானே பிரச்சனை என்று சிகர்லைட்டர் கொண்டு முயன்றேன். வாயில் வைத்த சிகரெட்டை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் லைட்டரை கொழுத்துவேன். சரியாக சிகரெட்டை நெருங்கும் போது ஊதியனைக்கப்படுகிறது நான் சிகரெட்டை பற்ற வைக்க முயலும் ஒவ்வொரு வழிமுறைகளும் எப்படியோ முறியடிக்கப் படுகிறது யாராலோ. நண்பனது சிகரெட்டை பகிர்ந்து கொள்ளலாம் என்றால் அவன் எனது கையும் வாயும் அவனுக்கே சொந்தம் என்கிறான். எனக்கு இப்போது தேவை ஒரு சிகரெட். நான் கேட்பது யாருடைய சிகரெட்டோ அல்ல. நான் கேட்பது என் சிகரெட். சிகரெட்களை நான் நேசிக்கிறேன். என்னிடமிருந்து திருடப்படும் என் சிகரெட்களை யார் புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெட்கம் இல்லையா? என் ருசியை சுவைக்கும் ஏகபோகத்தை யார் அவர்களுக்குத் தந்தது. அவர்களை போலவே நானும் சிகரெட் பிடிக்கவே இங்கு வந்தேன். சிகரெட்கள் இல்லையென்றால் சுருட்டுகள், பீடிகள், ஹுக்கா ஆகியன உண்டென்று சொல்லும் முட்டள் நண்பனிடம் என்ன சொல்ல. சிகரெட்களை போலவே அவைகளும் மனிதனால் படைக்கபட்டவைதான் நண்பா. என் பிரச்சனை சிகரெட் அல்ல. சிகரெட் பிடிக்க இயலாமையே. குளிர் என் எலும்புகளை நொருக்குகிறது. தலைபாரம் கணக்கிறது. எனக்கு தேவை சிகரெட். நான் பிடிக்க விரும்பிய என் சிகரெட்.


அந்தி

முதியவர் பழனிச்சாமிக்கு இந்த வாழ்வைப் பற்றியப் பெரும் புகார்கள் ஏதும் இல்லை. சென்ற வருடம் இறந்து போன அவர் மனைவியின் பராமரிப்பில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இப்போதும். சமீபமாக அவருக்கு நினைவு தப்பி விட்டதென மகன்கள் குறைபடும் போதெல்லாம் அவர் மனைவியின் சொற்கள்தான் பெரும் ஆறுதலாய் இருக்கிறது அவருக்கு. வாதநாராயண மரம் ஆஸ்துமாவை அதிகப்படுத்துமென யாரோ சொல்லக் கேட்டு முற்றத்திலிருந்த அதனை வெட்டிச் சாய்த்த தினத்தில் கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளானவர் அதுமுதலாய் படுத்த படுக்கையனார். தினமும் மாலை நேரத்தில் உரையாட வரும் அவரின் பால்ய நண்பர் இப்போதெல்லாம் ஏன் வருவதில்லை என கேட்டுக்கொண்டே இருக்கிறார். சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்துக் குளிக்கும் வழக்கமுடையவர் ஆதலால் இன்று என்ன கிழமையென மணிக்கொருதரம் கேட்பவரிடம் இன்று வேறு கிழமையென திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பதில்களால் ஏக்கத்தோடு சனிக்கிழமைக்காக காத்துக் கொண்டிருகிறார் பல மாதங்களாக.

5 comments:

 1. இளங்கோ
  அந்தி அசைக்கிறது மனதை.

  ReplyDelete
 2. வார்த்தைகளின் செறிவும், கருத்தின் ஆழமும் வாசித்து உணர்ந்த பிறகும் லயிக்கிறது. நல்ல பதிவுகள் இளங்கோ.

  ReplyDelete
 3. இளங்கோ,

  உங்கள் எழுத்து வித்தியாசமாக இருக்கிறது. ஏதோவொரு ஆழத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதுபோல... உங்கள் வாசிப்புத் தளம் வேறொன்றாக இருக்கக்கூடும். மனதைக் கேள்வி கேட்க வைக்கிற எழுத்து.. சுயவிசாரணை நல்ல பிரதிகளைப் படைக்க உதவும்.

  ReplyDelete
 4. முற்றிலும் புதுமையான வாசிப்பு அனுபவத்தை உணர்ந்தேன். உங்கள் வலைக்கு இதுவே என் முதல் வருகை.

  Simply Superb. வேறு என்ன சொல்ல முடியும்...

  வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி..

  ReplyDelete
 5. கதைகளின் நடை புதிதாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete