Friday, September 11, 2009

எது கவிதை? ஏன் கவிதை? - இளங்கோ கிருஷ்ணன்

ஆகஸ்ட் 15, 2009 அன்று ‘கோவை மாவட்டத்தமிழ்ப் பேரவை’ நடத்திய “கொங்கு வட்டாரக் கவிதை திருவிழா” எனும் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை. எது கவிதை என்கிற கேள்விக்கான எந்த பதிலும் திட்டவட்டமானதல்ல. அது மிகுந்த சார்புடையதும் புறவயமானதும் ஆகும். அதாவது இது கவிதை என ஒருவர் எதைக் குறிப்பிடுகிறாரோ அந்த பதில் அவர் அளவில் மட்டுமே சரியானது. அந்த பதிலும் கூட மிகவும் புறவயமான ஒரு கூற்று மட்டுமே. உண்மையில் எது கவிதை என நாம் கண்டடைந்தோமோ அந்த உள்ளார்ந்த உண்மையின் புறவயமான சில அம்சங்களை மட்டுமே சொற்களால் நாம் விளக்க முற்படுகிறோம். ஒருவேளை கவிதை என்பது புறவயமான அபிப்ராய-சொற்களின் உள்ளார்ந்த உரையாடல்களில் ஒருமை கொண்டிருக்கிறதோ என நாம் ஐயுற வேண்டியிருக்கிறது. கவிதை மட்டுமல்ல எல்லா வகைக் கலைகளை பற்றிய விளக்கங்களும் இப்படித்தான் பன்முக சாத்தியத்தோடு இருக்கிறது. இதுவே கலையின் அடிப்படை பண்புகளுள் ஒன்றாகவும் இருக்கிறது. மானுட அறிதலின் பெருந்திரட்டுகளை (Canon of Conscience) கலை மற்றும் அறிவியல் என இரு பெரும் பிரிவுகளாக தொகுப்போம் எனில் அறிவியலானது தர்க்கம் மற்றும் கணித முறைமையில் தனக்கான சட்டகங்களை வகுத்துக் கொண்டு விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது எனில் கலையானது தாரணை அல்லது கற்பனை மற்றும் பாவனை முறைமையில் விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது எனலாம். இவ்வாறு அதர்க்க முறையில் இயங்கும் போது ஒன்றிற்கு மேற்பட்ட ஆதார புள்ளிகளிலிருந்து விசிறியடிக்கப்படும் படிம முறையிலான கருத்துகளின் வழியே உண்மையை கண்டடைய வேண்டிய நிர்பந்தம் கலைக்கு ஏற்படுகிறது. இதுவே கலையின் சகலவிதமான குழப்பமான வியாக்கானங்களுக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட அழகியல் கோட்பாடுகளுக்கும் அடிப்படை காரணமாக அமைகிறது. எது கவிதை என்கிற கேள்வியானது ஏன் கவிதை என்கிற கேள்வியோடு சார்புடையதாய் இருக்கிறது. நாம் ஏன் கவிதை என ஒன்றை குறிப்பிடுகிறோமோ அந்த பதிலால் அது கவிதை என நிறுவப்பட்டிருக்கும். விளக்கலாம்: மார்க்சிய அழகியல் கோட்பாட்டின்படி முற்போக்கு கருத்துகளை கொண்டிருக்கும் ஒரு பிரதியை கவிதை என நாம் குறிப்பிடுவோம் எனில்; அந்த காரணத்திற்காகவே அதை கவிதை என நாம் வாதிடுகிறோம். வெறும் முற்போக்கு கருத்துகளின் தொகுப்பு மட்டுமே கவிதையாகாது என்போம் எனில் நாம் மேலே குறிப்பிட்ட அந்த பிரதி கவிதையாகாது என்கிற பதிலுக்கு வந்து சேர்வோம். எனவே எது கவிதை என்பதும் ஏன் கவிதை என்பதும் வேறு வேறு கேள்விகளாக இருக்க முடியாது அல்லது ஒரே பதிலுக்கான இரண்டு கேள்விகளாகவே இருக்க முடியும் என நாம் சொல்லலாம். காலகாலமாக கவிதை என்கிற கலைவடிவம் மனித குலத்திற்கு செய்து வந்திருக்கிற பங்களிப்பு என்பதென்ன? கவிதை மந்திரங்களாக, சடங்கு பாடல்களாக, வழிபாட்டு பாடல்களாக, ஆன்மிக மெய்மைகளை கண்டடையும் தரிசனங்களாக பண்டை காலந்தொட்டு புழங்கும் மொழிகளில் இருந்திருகிறது. நவீன காலத்தில் மானுட விடுதலையை அதன் லெளகீக வெளிகளிலும் பிரகடனப்படுத்தும் பண்பாட்டு-அரசியல்-பொருளாதார விடுதலைக்கான கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது. இன்றைய சூழலில் கவிதை ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணி என்பதென்ன? என நாம் கேட்போமானால் இதற்கான பதில் அதை சொல்பவரின் மனவிரிவுக்கு ஏற்பவே அமையும். கவிதை மானுட வாழ்வின் பொருளை, பிரபஞ்ச இருப்பை, மனித மனதை புரிந்து கொள்வதற்கான ஒரு எத்தனம் என்பது எவ்வளவு உண்மையோ அதற்கிணையான மற்றொரு உண்மை அது மானுட வாழ்வை மேம்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பை கொண்டிருக்கிறது. மனித மனதை மேலும் பண்படுத்த வேண்டிய பொறுப்பையும் கொண்டிருக்கிறது. இவ்விரு வகைப்பட்ட உண்மைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதே நமக்கு ஆக்கமுடையதாக இருக்கும். கவிதை பற்றிய எல்லா பேச்சுகளும் கவிதையியல் பற்றிய பேச்சுகளே என நான் உறுதியாக நம்புகிறேன். கவிதையியலின் எந்த முன்முடிபும் கவிதையை எக்காலத்திலும் தீர்மானித்து விடுவதில்லை. மாறாக கவிதை பற்றிய நம்முடைய முன் முடிபுகளே கவிதையியலை தீர்மானிக்கின்றன. நாம் 100 கவிதை எழுதியதிலிருந்து பெற்ற அனுபவம் 101வது கவிதை எழுத எவ்வகையிலும் பயன்படுவதில்லை. இப்படி நான் சொல்வதால் கவிதையை செம்மையாக்கம் செய்வதில் நமக்குள்ள மொழிப் பாண்டித்தியத்தை குறிப்பிடுவதாக புரிந்து கொள்ள வேண்டாம். புலமை, சமத்காரம், பாண்டித்யம் என்பவைகள் வேறு. கவித்துவம் என்பது வேறு. ஒரு கவிதை எழுதுவதற்கான அடிப்படையான மன-உந்தம் கவித்துவத்தால் தீர்மானிக்க படுவதே அன்றியும் சமத்காரத்தால் அல்ல. அப்படி சமத்காரத்தால் எழுதப்படும் போது அது வெறும் செய்யுளாக தட்டையான சொற்கூட்டமாக செயற்கையாக போய்விடுகிறது. ஒரு நல்ல கவிதையானது அடிமனதில் பொங்கியெழும் ஆழமான உணர்வின் சொற்கட்டுமானமே அன்றி ஒரு கூற்றோ, கருத்தோ, செய்தியோ அல்ல. அப்படி ஆத்மார்த்தமாக பொங்கியெழும் உணர்வில் ஒரு கூற்று இருக்கலாம். கருத்து இருக்கலாம். ஆனால் விஷயத்தை முன் தீர்மானித்து விட்டு அதை அப்பியாசத்தால் கவிதையாக மாற்ற முடியாது. அப்படியானால் ஒரு நல்ல கருத்தை கூறும் பிரதி கவிதை இல்லையா? நிச்சயமாக இல்லை. அறிவார்த்தமான போத மனதில் எழும் திட்டவட்டமான ஒரு கருத்து வெறும் பிரச்சாரமே. நமது அறிவார்த்தம் உணர்வுபூர்வமாக மாறும் மனநிலையிலிருந்து எழுதப்படுவதே நல்ல கவிதை. இதற்கு உதாரணமாக திருக்குறளைக் கூறலாம். அதை வெறும் நீதி நூல் எனச் சொல்பவர்களே இன்று அதிகம். ஆனால் திருக்குறள் அறிவார்த்தமான ஒரு கூற்றை ஒரு உண்மையை ஒரு செய்தியை மிகுந்த உணர்வுபூர்வமான மன எழுச்சியோடு பேசுகிற ஒரு அற்புதமான கலைப்படைப்பு என நான் உறுதியாக நம்புகிறேன். “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” என்ற குறளில் ஒரு நீதி பேசப்படுகிறது என்பது உண்மையே ஆனால் அந்த குறளில் உள்ள அறச்சீற்றம் கோபம் ஒரு கவிதைக்குறியதன்றோ? கலை என்பது தத்துவம் போலவே தனித்துவமானதொரு அணுகல் முறை. தத்துவங்களைப் போலவே கலை தனக்கான பிரத்யேகமான வழிமுறைகளில் விஷயங்களை தொகுத்துக் கொள்கிறது. வியாக்கானப்படுத்துகிறது. எனவே எந்த தத்துவத்திற்கும் முன் விசாரணையின்றி தன்னை ஒப்புக் கொடுக்கவேண்டிய அவசியம் கலைக்கு கிடையாது. ஒரு தத்துவக் கட்டுமானத்தின் உள்ளார்ந்த மீபொருண்மையில் (Meta-physical) கூறுகள் தன்னியல்பாக கலைக்குள் ஊடுருவி கலை அதை தனக்கான தனித்துவமான அழகியல் தன்மை வாயிலாக வெளிப்படுத்தும் போதுதான் இரண்டு அறிதல் முறைகளும் ஒன்றையொன்று வளப்படுத்திக் கொண்டு சிறப்பாக இயங்க முடியும். “கலைஞனும் தத்துவவாதியும் ஒரே மனிதனுக்குள் இயங்கும் போது கலைஞன் தத்துவவாதியை விஞ்சிக் கொண்டு இயங்க வேண்டும்” என்ற ஹீலீயோ கொர்த்தஸாரின் பொன்வாசகம் ஒன்றோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.

1 comment:

  1. கவிதை குறித்த பல கேள்விகள் மற்றும் தீராத தேடல்களுக்கு ஒருவித தெளிவை அளித்தது இந்தக் கட்டுரை, போலவே முன்பு நண்பர் இசை அவர்களின் கட்டுரையும். பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete