Monday, June 15, 2009

பித்தென்றும் போதையென்றும் இரு மன நிலைகள்: ரமேஷ் பிரேதனின் சாரயக்கடை-விமர்சனம்

தமிழ் நவீன கவிதை பல புதிய குரல்களால் நிரம்பத்துவங்கியிருக்கும் சூழலில் வெளிவந்திருக்கிறது ரமேஷ் பிரேதனின் “சாரயக்கடை” எனும் இத்தொகுப்பு. தமிழில் பின் நவீனத்துவம் சார் உரையாடல்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய படைப்பாளி என்ற வகையில், இவரது இத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது எனலாம். இத் தொகுப்பில் உள்ள கவிதைகளை பின் நவீனத்துவக் கவிதைகள் என்பதை விடவும் பின் நவீனக் கவிதைகள் என்று அழைப்பதே கோட்பாட்டு அளவில் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். (நான் ஒரு கோட்பாட்டு விமர்சகன் அல்ல என் விமர்சனப் பார்வை என்பது முழுதும் என் படைப்பு மனதின் ரசனை சார்ந்தது என்பதையும் இங்கே அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுக் கொள்கிறேன்)

பின் நவீனக் கவிதைகளுக்கும் பின் நவீனத்துவக் கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடு என்பது பின் நவீன மனிதனுக்கும் பின் நவீனத்துவ மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டை ஒத்தது. விளக்குவோமாயின் இரண்டாம் உலகப் போருக்குப் பின் உள்ள காலத்தை பின் நவீன காலம் என பொதுவாக கூறுகிறோம். இந்த காலத்தில் வாழ நேர்கிற ஒவ்வொரு மனிதனும் பின் நவீன மனிதனே. ஆனால் பின் நவீனத்துவம் என்ற தத்துவார்த்த எடுகோளின் வியாக்கானங்களை தனது நிலைப்பாடாக கொண்டு இயங்கி வருகிற ஒருவன் பின் நவீனத்துவ மனிதன் ஆவான். ஒரு கோணத்தில் தமிழில் பின் நவீனத்துவ கவிதைகளை விடவும் பின் நவீனக் கவிதைகளே அதிகம் எழுதப்பட்டுள்ளன எனலாம்.

மேலும், தமிழின் நவீன கவிதை என்பது நவீனத்துவக் கவிதையாகவே மலர்ந்தது என்று பொதுவான ஒரு கூற்று உண்டு. சற்று கூர்ந்து நோக்குவோமாயின் மேற்கின் நவீனத்துவத்தை ஒரு எல்லை வரையே நாம் பின்பற்றினோம் எனலாம். படிம உடல், சுண்டக்காய்ச்சிய சொற்கள், மனச்சமன் தவறாத மொழி ஆளுமை போன்ற நவீனத்துவக் கவிதைகளின் வடிவம் சார்ந்த விடயங்களை நாம் உள்வாங்கிக் கொண்ட அளவுக்கு, அதன் தத்துவார்த்த மற்றும் அரசியல் கூறுகளை நாம் பேரளவு பின்பற்றவில்லை. டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட் போன்ற நவீனர்கள் புதுச் செவ்வியல்வாத உரையாடல்களோடு அழகியல்களில் மரபின் வேர்களுக்கு திரும்புவதை தங்களது படைப்பரசியலின் ஆதார மூச்சசாக கொண்டு இயங்கினார்கள். ஆனால் அவர்களால் முன்மொழியப்பட்ட கவிமொழியை பின்பற்றிய தமிழின் துவக்ககால மற்றும் இரண்டாம் தலைமுறைக் கவிகளில் பெரும்பாலானவர்கள் வடிவ அளவில் மட்டுமே மேலை மரபை பின்பற்றினார்கள். இதற்கான காரணம் எளிது ஒரு பண்பாட்டு மரபு இன்னொரு மரபை பின்பற்ற முயலும் போது அது தனது மரபுக்கும் அந்த பிராய்ந்தியச் சூழலுக்கும் ஏற்பவே புதியவற்றை உள்வாங்குகிறது எனலாம்.

---

பின் நவீனத்துவம் என்ற சொல் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி முழுதும் அறிவுசார் துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது. ஒவ்வொரு துறையிலும் அதற்கேயான பிரத்யேகமான பல புதிய சிக்கல்களை அது ஏற்படுத்தியது போலவே மொழியோடு தொடர்புடைய இலக்கியத்துறையிலும் சில சிக்கல்களை ஏற்படுத்தியது. குறிப்பாக எது பின் நவீனத்துவ எழுத்து என வரையறை செய்வதில் ஏற்பட்ட சிக்கலைச் சொல்லலாம். பின் நவீனத்துவத்தின் சுவையை பழிப்புச் சுவை அல்லது அங்கதம் எனக் கொள்வோமாயின் அதன் மனநிலையை அபத்த மனநிலை எனலாம். மொழியியல் ரீதியாக பின் நவீனத்துவத்தின் நிலைபாடென்பது சொல் மற்றும் சொல்லின் அர்த்தம் பற்றிய மைய-விளிம்பு சிக்கல்களை கட்டுடைப்பது. அதாவது சொல் அர்த்தத்தின் மீது அதிகாரம் செலுத்துவதையும் அர்த்தம் சொல்லின் மீது அதிகாரம் செலுத்துவதையும் கட்டுடைப்பதாக இருக்கிறது. இவ்வகையான எழுத்தையே பின் நவீனத்துவ எழுத்தென அமெரிக்க பின் நவீனத்துவம் முன்மொழிந்தது.

நம்மை போன்ற பாரிய ஏற்ற தாழ்வுகள் நிறைந்த பின் காலனிய கலைஞனுக்கு சமூகத்தின் மைய-விளிம்பு சிக்கல்களை கட்டுடைக்க வேண்டிய கூடுதல் நிர்பந்தத்தில் எதை தன் பின் நவீன எழுத்தாக கொள்ள வேண்டும் என்று ஒரு சிக்கல் வருகிறது. ரமேஷ் பிரேம் போன்ற பின் நவீனத்துவர்கள் இந்த இடத்தில் மேற்கின் பின் நவீனத்துவ தொழிற்நுட்ப சிக்கல்களை பிரச்சனை படுத்தாமல், கீழைத்தேயத்திற்கு ஏற்றாற் போல தங்களது படைப்பு மொழியை உருவாக்கி கொண்டார்கள் எனலாம். ரமேஷ்-பிரேமின் கறுப்பு வெள்ளைக் கவிதைகள் முதல் ரமேஷ் பிரேதனின் இதுவரையிலான தொகுப்பை வாசிப்பவர்கள் இதை உணரலாம். கறுப்பு வெள்ளை கவிதைகள் தொகுப்புக்கும் இந்த தொகுப்புக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம் கவிமொழியில் புளங்கும் எளிமை. முதல் தொகுப்பானது மிக அறிவார்த்தமான அல்லது முற்றிலும் அறிவார்த்தமற்ற கட்டுப்பாடற்ற மொழிப் பிரயோகத்தால் மனதில் ஏறபடும் கவித்துவத்தை கடகடவென கொட்டிச் செல்வதாக இருக்கிறது. இது கவிதைக்கு மிகுந்த இருண்மையும் எண்ணற்ற படிமச் சாத்தியத்தையும் அளிக்கிறது.(உண்மையில் அவைகள் படிமச் சரங்கள் அல்ல அபோத மனதின் தொடர் ஓட்டங்களே ஆகும். படிமச்சரங்களாக கவிதைகளை பார்த்தது நவீனத்துவ பார்வையாகும்) ஆனால் சக்கரவாளக் கோட்டம் முதலான தொகுப்பிலிருந்து இந்த தொகுப்பு வரை உள்ள கவிதைகள் பெரும்பாலும் ஒருடல் கொண்டிருக்கின்றன அல்லது அதிகபட்சம் குறியீட்டு தன்மை மிக்கதாகவே இருக்கின்றன. படிமத்தை கவிதையின் அடிப்படை பண்பாக கொள்வது நவீனத்துவப் பார்வை என்பதை இணைத்துப் பார்க்கும் போது ரமேஷ் பிரேதனின் கவிதைகள் தமிழுக்கே உண்டான தனித்துவமான பின் நவீனத்துவப் பண்பை கண்டடைந்திருக்கின்றன எனலாம்.


---
ஒரு நல்ல கவிதைத் தொகுப்பானது தனது வாசகனை கவர்வதற்கான வேலையை தன் தலைப்பிலிருந்தே துவங்கி விடுகிறது. அவ்வகையில் இந்த தொகுப்புக்கு ‘சாரயக்கடை’ என்ற பெயர் பான்சியான, தமிழ் இலக்கிய பொது புத்தியை வசீகரிக்கிற தலைப்பாக உள்ளது. இந்த தொகுப்பு முழுவதுமாக வாசித்து முடித்து போது பித்து, போதை, கவித்துவம் எனும் மூன்று சொற்கள் என் மனதில் திரும்ப திரும்ப ஒலித்தன. இந்த தொகுப்பு முழுவதும் உள்ள கவிதைகள் போதைமனதின் பித்தாலும், பித்தின் போதையாலும் தங்களின் கவித்துவத்தை கண்டடைந்தவை. போதையும் பித்தும் கவிதையும் மாறி மாறி சந்தித்து முயங்கியும், விலகியும் தோன்றும் எண்ணற்ற சித்திரங்களால் இந்த தொகுப்பு நிறைந்துள்ளது.

மேலும் இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளை இரண்டு வகையாக பிரிக்கக் கூடும் என்று கருதுகிறேன். ரமேஷ் பிரேதன் என்ற மனிதன் தன் இதுவரையிலான வாழ்வினூடாக கண்டடைந்த தத்துவார்த்தமான நிலைப்பாடுகளின் கவித்துவ வடிவங்கள் ஒருவகை எனில். ரமேஷ் பிரேதன் என்ற மனிதனின் அகமனச் சிக்கல்களால் ஆன கவிதை வடிவங்கள் வேறொரு வகை. இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான நவீன கவிஞர்களின் கவிதைகளையும் இப்படி பிரிக்க முடியும் என்றே எண்ணுகிறேன். கவிதைகள் வலி நிவாரணிகளாகவும் வலி கடத்திகளாகவும் இருப்பதுண்டு. குறிப்பிட்ட ஒரு மனச்சூழலின் மோசமான சிதைவுகளிலிருந்து தப்புவதற்காக கவிஞன் அவ்வகைக் கவிதைகளை எழுதுகிறான். தோற்கடிக்கப்பட்டவனின் வன்மத்தோடும், புறக்கணிக்கப்பட்டவனின் குரோதத்தோடும் கொல்லப்பட்டவனின் புகாரோடும் பேசும் அவ்வகைக் கவிதைகள் இந்தத் தொகுப்பிலும் உண்டு.


கவிமொழியை கையாள்வதில் ரமேஷ் பிரேதன் கற்றுக் கொண்டுள்ள நுட்பம் வியப்புக்குறியது. ஒரு சொல், ஒரு வரி, ஒரு பத்தியை திரும்பச் சொல்வதின் மூலமாக ஏற்படும் சிறு திறப்பையும் கவிதையாக மாற்றும் உத்தியும் ஒன்றிரண்டு சொற்களை மாற்றி மாற்றி எழுதியும் கூட்டிப் பிரித்து எழுதியும் அதன் வழியாக கவிதையை உருவாக்கும் உத்தியையும் இதற்கு உதாரணமாக கூறலாம். நடைபயிற்சி, தெய்வமழை போன்ற இத்தொகுப்பின் கவிதைகள் இவ்வகையிலானவை.

‘குழவி யிறப்பினும் ஈன்றடி பிறப்பினும்” எனும் சங்கப்பாடலின் தொனியில் துவங்கும் ‘மாமது போற்றுதும்’ என்ற கவிதை முதல் துவக்கத்தில் கவிதை வடிவிலும் எஞ்சிய பகுதி உரைநடை வடிவிலும் எழுதப்பட்டுள்ள “என் மகளின் அம்மாவுக்கு” என்ற கவிதை வரை பல்வேறு வடிவங்களிலும் தொனிகளிலும் சொல்லல் முறைகளிலும் பன்முகத் தன்மையோடு இத்தொகுப்பு உள்ளது.

இந்த கவிதைகளின் இன்னொரு சிறப்பம்சம் இவைகளின் திணைத்தன்மை. தமிழின் பெரும்பாலான நவீன கவிதைகள் நிலமற்ற வெளியில் உலவிக் கொண்டுடிருக்கும் சூழலில் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் பாண்டிச்சேரியை
மிக அழுத்தமாக பதிவு செய்கிறது. நெய்தலின் உவர்ப்புச் சுவை மிகுந்த கவிதைகளாக இவை இருக்கின்றன.

தொகுத்துக் கொள்வோம் எனில் “சாரயக்கடை” எனும் விளிம்பு நிலை பெயரைக் கொண்டுள்ள இத்தொகுப்பு விளிம்பு நிலை சமூகத்தில் வாழும் விளிம்பு நிலை மனிதன் ஒருவனது குரலாக பித்தமும் போதையுமாய் ஒலிக்கிறது.
- 13.06.2009 அன்று வால்பாறையில் தமிழ் கவிஞர்கள் இயக்கம் நடத்திய விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

1 comment:

 1. நட்புக்குரிய இளங்கோவுக்கு,
  வால்பாறையில் வாசிக்கப்பட்ட தங்கள் கட்டுரை பற்றி கரிகாலன் ஏற்கனவே சொல்லியிருந்தார் . கீற்று இதழில் வேறு ஏதோ படிக்கும்போது உங்கள் வலைப் பக்கம் படிக்கக் கிடைத்தது . நீங்கள் வாசித்த தருணத்தில் அது நன்றாக இருந்ததாகக் கரிகாலன் சொல்லியிருந்தார் . அது அப்படியே இருந்தது . ரமேஷ் பிரேதனுடைய கவிமனத்தின் உயிர்மூலத்தைத் தொட்டிருந்தது . அதே சமயம் நான் ரமேஷ் பிரேமின் நண்பன் என்ற முறையிலும் ரமேஷ் பிரேமின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையிலும் சிலவற்றைக் சொல்ல உரிமை உண்டு என நினைக்கிறேன் .

  நீங்கள் ரமேஷ் பிரேதனின் கவிதைகளை இரண்டு வகைகளில் பிரித்திருந்தது உங்கள் கவனிப்பையும் பகுத்தறியும் நுண்மையையும் புலப்படுத்தியது . அதே சமயம் புதுச்சேரி பிரஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர் அதனுள் பின்காலனிய வாசம் வீசுவதையும் அதிலிருந்து பூர்வ அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டிய எத்தனிப்பையும் பேசும் கவிதைகளாகவும் அவற்றை வாசிக்க இடமுண்டு . சாராயக் கடை என்ற தலைப்பு வெறும் பான்சியானதாக மட்டும் நின்றுவிட முடியுமா என்று தெரிய வில்லை. புதுச்சேரி பெரும்பான்மையும் அடையாளப் படுத்தப் படுவதே சாராயத்தின் மூலம் தான் என்பதைத் தமிழ்நாட்டில் இருக்கிற உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இருக்காதென்று நம்புகிறேன் . கூடுதலாக ஒரு செய்தி . ரமேஷ் பிரேமின் முதல் தொகுப்பு 'இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் ' என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை . எனினும் அதனால் எந்தப் பாதிப்புமில்லை .
  (இது கூடுதல் தகவல் தானே தவிர குறை அல்ல .)

  நட்பை வளர்ப்போம்
  நன்றி

  மனோ .மோகன்
  manomohan1982@yahoo.com

  ReplyDelete