Monday, February 9, 2009

ஒரு கவிதையும் ஒரு விமர்சனமும்...


உருளைக்கிழங்கு பொடிமாஸ்

இந்த முறை நீங்கள் ஒரு சமையற்கலைஞர்

கலாச்சார மற்றும் மாற்றுக் கலாச்சார உணவுகளை தயாரிப்பதில் நிபுணர்

(குறிப்பாக அந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ்)

மிகுந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும்

சிக்கல் ஒன்றை எதிர்கொள்வதற்காக அழைக்கப்படுகறீர்கள்

நாம் பயணம் செய்து கொண்டிருக்கிற கப்பலை

புயலில் இருந்து காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும்

அப்பாவியாய் அவர்கள் முகத்தை பார்கறீர்கள்

அவர்கள் இன்னமும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்

கண்களை இறுக்க மூடி உங்கள் கடவுளிடம் பிரார்திக்கிறீர்கள்

அவர் இரண்டு உருளைக்கிழங்குகளை வழங்குகிறார்

(எதைக் கேட்டாலும் உருளைக்கிழங்குகளையே வழங்குகிற

உங்கள் கடவுள் ஒரு மனநோயாளி என்பது உங்களுக்கு அப்போதுதான் புரிகிறது)

கப்பலை பற்றி உங்களுக்கு தெரிந்த சொற்ப அறிவையும் பயன்படுத்ததுகிறீர்கள்

நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது

படுத்திருக்கும் கடல் எழுந்து நடப்பதைப் போன்று

ஒரு பெரிய அலை வான் மறைத்து வருகிறது

அநேகமாய்

இன்று உங்களுக்கு நிறைய உருளைக்கிழங்குகள் கிடைக்கக்கூடும் பிழைத்திருந்தால்.

-----


தமிழ்க் கவிதையின் புதிய திசைவழி - காயசண்டிகை கரிகாலன் 

சமீபகாலமாகத் தமிழ்க் கவிதைத்துறையில் இளைஞர்கள் நிகழ்த்திவரக் கூடிய சாதனை மகத்தானவை. அவ்வகையில் கோவையிலிருந்து இயங்கி வரும் இளங்கோ கிருஷ்ணன், இசை, மரகதமணி இவர்களது கவிதை இயக்கம் புத்துணர்வு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவர்களது சிந்தனைப்போக்கு, கூறுமுறை, மொழி ஆளுமை அனைத்துமே எவ்வித பின்பற்றல்களுமின்றி முற்றிலுமான புத்துருவாக்கங்களாகத் திகழ்வது தமிழ்க் கவிதையின் ஆரோக்கியமிகு புதிய திசைவழியைக் காட்டுவதாக இருக்கிறது. நவீன தமிழ்க்கவிதை எட்டியிருக்கிற உயரங்களுக்கு சான்றாக நாம் இளங்கோ கிருஷ்ணனின் ‘காயசண்டிகை' தொகுப்பிலிருந்து எந்தவொரு கவிதையையும் தயக்கமின்றிக் கூறமுடியும். அபத்தமும்,வன்முறையும்,குரூரமும் நிரம்பிய கருணையற்ற நம் காலத்தைய வாழ்வை எள்ளி நகையாடும் இக்கவிதைகள் தமக்குள் தீரா நெருப்பின் கங்குகளை கொண்டுள்ளன. ‘சொற்களின் மீது அப்படியென்ன மோகம்/அதுவுன் வாழ்வையே பருகிப் பெருக்கிறது' எனும் இளங்கோ தன் வாழ்வு பருகப்பட்டாலும் பரவாயில்லை தன் கவிதை அர்த்தங்களால் பெருகட்டும் என எண்ணுகிறார். இந்த வேள்வியும் அர்ப்பணிப்பும்தான் அவரது கவிதைக்குள் தீயைக் கொண்டு வந்திருக்கிறது. மிகச் சொற்பமான அதேவேளை தீவிரமான சொற்களைக் கொண்டு இவர் உருவாக்கும் கவிதைகள் நம் இதயத்தை நெகிழவும்,அதிர்வுறவும்,துயரடையவும்,பீதியுறவும் செய்கின்றன. இக்கவிதைகளை ஏன் படித்தோம் என நிம்மதியிழக்கச் செய்கிறது. இந்நிம்மதியிழப்புதான் ஒரு படைப்பு ஏற்படுத்தக் கூடிய ஆக முக்கியமான விளைவு. உதாரணத்திற்கு ‘ ஈரசாட்சி ' எனும் கவிதை. மழையை துல்லியமாக காட்சிப்படுத்துகிறது இக்கவிதை. ‘இலை இலையாய் மரங்களையும்/துகள் துகளாய் மண்னையும்/ஜீவிதக் குளிர்மை பொங்க/வாரி அணைத்துக் கொண்டிருந்தது அது' மழைக்காட்சிதான் எவ்வளவு அழகும்,குளிர்ச்சியும் நிரம்பியது. மழைதான் இம்மண்ணுக்கு உயிர் தந்து அதை பசுமையால் மலர்த்துகிறது. அதனால்தான் ஆதியின் காருண்யத்தோடு பெய்து கொண்டிருக்கிறது மழை என்கிறார் கவிஞர். வெளியேயும் உள்ளேயும் புழுக்கத்தால் நிரம்பிக்கிடக்கும் மனிதனுக்கு இந்த மழைதான் எத்தகைய ஆறுதலைத் தந்திருக்க வேண்டும். ஆனால் இளங்கோ காட்டும் மழைக் காட்சியோ நம் நெஞ்சை துணுக்குறச் செய்து நமது ஆறுதலைக் குலைத்து விடுகிறது. ‘தாய்மையின் பிரவாகம்/மதர்த்த அந்நிசியில்/ஈரசாட்சியாய் சன்னல் வழி/ பார்த்துக் கொண்டிருந்தது/தூக்கு மாட்டும் ஒருவனை' மழையின் ஈரமும் கருணையும் சிறிதும் பாதிக்காமல் ஒரு மனிதனை இவ்வுலகிலிருந்து விடைபெற துரத்துவது எது? இந்தக் கேள்வியை நம் மனதின் மென்மையான ஒரு மூலையில் ஒயாமல் எழுப்பிக்கொண்டிருக்கிறது இக்கவிதை. இளங்கோவின் கவிதைகள் பெருமளவில் இத்தகைய தீவிரத்தன்மையுடைய காட்சிகளை நமக்குக் காட்டுகின்றன. கவிதையில் சாசுவதமாகும் இக்காட்சிகளின் பல்வேறு பரிமாணங்களை யூகிப்பதற்கு இடம் கொடுக்கும் வகையில் கவிதைகளை வார்த்தெடுப்பதில்தான் இவரது தேர்ச்சி வெளிபடுகிறது. நிச வாழ்வில் நாம் கணப்பொழுதில் கடக்க நேர்கிற காட்சிகளில் உள்ள அவலத்தை, துயரை, மூர்கத்தை நாம் நமது அவசரத்தின் நிமித்தம் தவற விடுகிறோம். ஆனால் கவிஞனோ இத்தகைய தரிசனங்களில் உள்ள தீவிர்த்¨யுணர்ந்து தன்னுடைய லெளகீகப் பணியை மறந்து விடுகிறான். இக்காட்சிகளை வெளிப்படுத்துவதற்கு ‘வாழ்வைப் பருகும் சொற்களிடம்' புகலடைகிறான். இதைப் போன்றே ‘வீடு திரும்பல்' ‘கிறிச்..கிறிச்' ‘நெய்தல்' போன்ற கவிதைகள் காட்சிமயமாக்கல் வகைமையைச் சார்ந்த கவிதைகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. இவரது கவிதைகள் வாசகனை முன்னிலையில் வைத்து விளித்து உரையாடும் தொனியில் நகரக்கூடியதாக பெருமளவில் இருக்கின்றன. இக்கவிதைகள் வாசகனை ஒரு பாத்திரமாக தமக்குள் இயங்க அனுமதிப்பவை. இத்தகைய உத்தி கவிஞன், வாசகன், கவிதை இடையே இணக்கத்தையும் நெருக்கத்தையும் அளிக்கிறது. இளங்கோவின் கவிதைகளில் ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துபவை அவற்றின் புனைவுத்தன்மை (ஃபாண்டசி) ஆகும். பொதுவாக ஒரு படைப்பிற்கு பலமூட்டக் கூடிய கூறுகளில் ஒன்று கற்பனை. யதார்த்தத்தின் போதாமையே படைப்பாளியை கற்பனையை நோக்கி பயணிக்க வைகிறது. யதார்த்தத்தின் மீதான விமர்ச்னத்தைதான் அவன் மாயயதார்த்தத்தின் வழி கட்ட முனைகிறான். அவ்வகையில் ‘சிங்காதி சிங்கம்' ‘மிருக மொழி பேசுபவன் சரிதை' ‘பொம்மைகள் விற்பவன்' ‘காணுறை வேங்கை' போன்ற கவிதைகள் புனைவு (ஃபாண்டசி) நிறைந்தவை. இத்தகைய புனைவுகள் நம் நிகழ்கால நுண் அரசியலின் நுட்பமான கூறுகளை குறியீடுகளாக மாற்றிவிடும் திறம் கொண்டிருக்கின்றன. மரபுக்கவி¨யின் ஒசை ஒழுங்கையும் சந்த நயத்தையும் உள்செரிந்து வெளிபட்டிருக்கும் ‘கையறு நிலை' எனும் கவிதை இளங்கோ கிருஷ்ணனுக்கு செம்மொழித்தமிழின் மீதுள்ள ஆழ்ந்த பரிச்சயத்தைக் காட்டுகிறது. ‘நீல வான் நிலவே நீல வான் நிலவே/நீலியின் முலை போல் சுரந்திடும் அமுதே' போன்ற வரிகளைப் படிக்கும் போது தமிழை எழுதி எழுதிப் பழகித் தேர்ச்சியுற்ற ஒரு முதிர்ந்த கரத்தை கொடையாக பெற்றிருக்கும் இளைஞராகத் தோன்றுகிறார் இளங்கோ. ‘காலரூபணி' ‘பிடாரன்' ‘காயசண்டிகை' போன்ற கவிதைகள் தொன்மையும் அமானுஷ்யமும் இணையப் பெற்று இத்தொகுப்பின் பன்முகத்தன்மைக்கு மேலும் மெருகூட்டுகிறது. இயற்கை நிகழ்வுகளில் தனது கற்பனையைக் குறுக்கீடு செய்யும் கவிஞர் மிக அற்புதமான சில தரிசனங்களை நமக்குக் காட்டுகிறார். ‘நிலாக்கனி' கவிதை. இவற்றின் உச்சம். இயற்கை தர்க்கத்தின் வழி அணுகாமல் ஒரு குழந்தையின் கனவுவயப்பட்ட மனநிலையில் அணுகியிருக்கும் கவிஞனுக்கு சித்திக்ககூடிய காட்சிகள் இவை. காலச்சுவடு பதிப்பகம் வழக்கம் போல நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் ‘காயசண்டிகை' தொகுப்பு தமிழ்க்கவிதையின் புதிய வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறது. நவீன தமிழ் ஆளுமைகளுள் ஒருவராக இளங்கோ கிருஷ்ணன் மலர்வார் எனும் நம்பிக்கையையும் இத்தொகுப்பு உறுதி செய்திருக்கிறது.

குறிப்பு: இவ்விமர்சனம் எந்த இதழிலிம் பிரசுரமாகவில்லை.