Thursday, December 17, 2009

இரண்டு இந்தியக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு

அய்யப்ப பணிக்கர் நான்கு கம்பீரக் குதிரைகள் பாய்ந்தோடிக் கொண்டிருந்தன ஒன்று வெள்ளை நிறத்தது, ஒன்று கருப்பு ஒன்று சிவப்பு, ஒன்று பழுப்பு ஒன்றிற்கு நான்கு கால்கள் ஒன்றிற்கு மூன்று ஒன்றிற்கு இரண்டு நான்காவதிற்கு ஒரு கால் ஒற்றைக்கால் குதிரை சொன்னது: இது நடனத்திற்கான நேரம் இனிய நண்பர்களே ஒற்றைக்காலில் நடனமிடுவோம் அனைத்தும் ஒப்புக் கொண்டன நடனம் துவங்கியது நான்கு கால் குதிரை தளர்ந்து வெளியேறியது மூன்று கால் குதிரை தடுமாறி விழுந்தது இரண்டு கால் குதிரை நிலைகுலைந்து விழப்போனது ஒற்றைகால் குதிரை மட்டுமே நடனமாடிக்கொண்டிருக்கிறது. ஆடிக்கொண்டே இருக்கிறது. நாரயண ரெட்டி நான் உனக்கொரு சமுத்திரத்தை தருவேன் நான் உனக்கொரு சமுத்திரத்தை தருவேன் அதை உடலெங்கும் போர்த்திக் கொள் பிறகு பார் அடி ஆழமற்ற சிந்தையாக நீ இருப்பாய் மிகுந்த நம்பிக்கையாளனாகவும் நான் உனக்கொரு சாலையை தருவேன் அதை கால்களில் அணிந்து கொள் பிறகு பார் கோபத்தின் முஷ்டியாக நீ இருப்பாய் பசி நோக்கி அணிவகுக்கும் ஒரு கூட்டமாகவும் நான் உனக்கொரு வானத்தை தருவேன் மடித்து அதை உன் தலைக்குள் செருகிக் கொள் பிறகு பார் கோள்கள் பூம் பூம் மாடென உன் இசைக்கு ஆடும் விண்மீன்கள் வெண்ணைத் துண்டென உன் கைகளுக்கு வரும் நான் உனக்கொரு கொடியை தருவேன் விரித்து அதை உன் சுவாசத்தில் நிறைத்துக் கொள் பிறகு பார் கம்பங்கள் ஜோதியென ஊர்வலம் போகும் குடிசைகள் குகைகளாக பிரதிபலிக்கும்
(கே.சச்சிதானந்தன் தொகுத்த ‘GESTURES’ Poetries of SAARC Countries என்ற நூலில் இருந்து தமிழாக்கம் இளங்கோ கிருஷ்ணன்)

Tuesday, December 1, 2009

கவிதைகள்

அதற்கே ஒரே ஒரு மதுப்போத்தல் அதற்கே நான் வந்தேன் நகரெங்கும் படுகளம் ஊரே பிணக் காடு ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் நிலமெங்கும் கொடுநாகம் நீளும் வழி பாதாளம் ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் குன்றெங்கும் எரிமலை குறும்புதரில் கொள்ளிவாய்கள் ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் கடலெங்கும் பேய் அலைகள் கரையெல்லாம் முதலை ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் வனமெல்லாம் புலிக்கூட்டம் மரந்தோறும் வேதாளம் ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் வானெங்கும் விஷக்காற்று திசையெல்லாம் மின்னல் ஆனாலும் வந்தேன் ஒரே ஒரு மதுப்போத்தல் அதற்கே நான் வந்தேன் காப்பி நதி காப்பி நதியின் கரையில் அமைந்துள்ளது உன் நகரம் கரையெங்கும் கிளைக்கும் தாவரங்கள் காய்ந்தபின் காப்பி நிறத்திற்கே திரும்புகின்றன காப்பி வாடை வீசும் மனிதர் உதடுகளில் உருள்வது காப்பியின் மொழி காப்பி வண்ண மண்ணில் அனைத்தும் காப்பியின் ரூபம் சந்திர சூர்யர் ஒளியில் காப்பியின் பிசுப்பு மின்னலின் ருசியில் காப்பியின் கசப்பு காப்பி நதி குடிக்க வயிறு உண்டோ யயாதி காப்பி நதி கடக்க தோணி உண்டோ யயாதி காப்பி நதி கடந்தால் காலம் உண்டோ யயாதி 19ம் நாள் யுத்தம் இரவு வெகுநேரம் கதவு தட்டப்பட திறந்தேன் நின்றிருந்தது என் பிரேதம் இன்றைய யுத்தத்தின் வரவு செலவு அறிக்கையை விவாதிக்கத் துவங்கினோம் இறுதியில் எஞ்சியிருந்தன மாலை சூரியனும் கொஞ்சம் கையெறி குண்டுகளும் குற்றுயிரான நம்பிக்கையும் சில முளைக்காத சொற்களும் தீக்கிரையான நகரத்தில் பிணங்களின் சென்செக்ஸ் இன்று சரிந்திருந்தது இன்றைய புகாரின் சூத்திரம் என்ன என்றேன் நமது திருவிழாக்களை வழிப்பறி செய்யும் ஆரலைக் கள்வர்கள் என் மதுக்குடுவையை பிடுங்கிக்கொண்டார்கள் என்றது பிறகு யுத்தத்தின் முடிவைப் பற்றி வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம் நான் இறக்கும் வரை

Saturday, November 14, 2009

லெவி-ஸ்டிராஸின் மரணம்

உலகின் தலைசிறந்த மானுடவியல் ஆய்வாளரும் நவீன மானுடவியலின் தந்தை எனப் போற்றபடுபவரும் 3 தலைமுறைகளாக ஐரோபிய அறிவுச் சூழலை பெரிதும் பாதித்திருப்பவருமான கிளோது லெவி-ஸ்டிராஸ் கடந்த 3ம் தேதி தனது 101 வயதில் பிரான்சில் காலமானார். லெவிஸ்டிராஸ் என்ற பெயர் எனக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது. எங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு’ என்ற நூலை படித்திருந்த சமயம் அது என்னை மிகவும் பாதித்திருந்தது. சமூகம் சார்ந்த என் பார்வைகளை கூர்மையாக்கிய முக்கியமான நூல்களில் அதுவும் ஒன்று. அந்த நூலை படித்தது முதல் மானுடவியல் எனக்கு மிகவும் ஈர்ப்புடைய துறைகளில் ஒன்றாகிப் போனது. தொடர்ந்து அது சார்ந்த நூல்களை தேடத் தொடங்கிய போது நான் லெவிஸ்டிராஸிடம் வந்து சேர்ந்தேன். லெவிஸ்டிராஸ் தொன்மவியல் பற்றி பேசிய விஷயங்கள் எனக்கு தொன்மங்களின் மேல் அளவுகடந்த காதலை உருவாக்கியது. இன்று வரை என்னால் தொன்மங்களின் மீதான வசீகரத்திலிருந்தும் லெவிஸ்டிராஸிடமிருந்தும் முழுதாக வெளிவர முடியவில்லை. அவர் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவராக இருந்ததிற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு என நான் கருதுகிறேன். எனக்குள்ள பைத்தியங்களில் சில அவருக்கும் உண்டு. அதாவது: தத்துவம், வரலாறு, இலக்கியம், இசை. இலக்கியம், இசை போன்ற கலை சார்ந்த வடிவங்கள் அவருள் ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகள் தத்துவ ஆர்வம் அவருக்கு வழங்கிய தர்க்கம் ஆகியவையால் அவரால் தொன்மங்களை மிக அழகாக விளக்க முடிந்தது. ஒவ்வொரு தொன்மமும் ஒரு மொழியின் அமைப்பை கொண்டது எனச்சொல்லும் லெவிஸ்டிராஸ் வரலாறு என்பதே ஒரு புனைவுதான் என்கிறார். பழங்குடி வாழ்வின் மீது அவருக்கிருந்த ஆழமான அவதானம் மானுடவியல் சார்ந்த பல முக்கியமான தெளிவுகளை வழங்கியது. அவரது பல நிலைபாடுகள் மானுடவியலாளர்களை மட்டுமல்லாது. தத்துவம், வரலாற்றியல், சமூகவியல் போன்ற பல துறைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சார்த்தருக்கும் அவருக்கும் நடந்த கருத்து யுத்தம் வரலாற்று புகழ் பெற்றது. உலகம் முழுதையும் இருத்தலியம் பிசாசை போல் உலுக்கி கொண்டிருந்த போது ஒரு மதங்கொண்ட பசித்த யானை காட்டுக்குள் நுழைவதைப்போல் தத்துவத்துக்குள் நுழைந்தன அவரின் அமைப்பியல்வாத கருத்துக்கள். ‘என்ன இருந்தாலும் அவர் ஒரு எதிர்-மார்க்சியர் தானே?’ என்று கேட்டார் ஒரு தோழர். உண்மைதான். மார்க்சியத்தின் வரலாற்று வாதம் போன்ற விஷயங்களை லெவிஸ்டிராஸ் கடுமையாக மறுத்தார் என்ற போதும் அடிப்படையில் அவர் ஒரு இடதுசாரி சுபாவம் உடையவர். ஆனால் பெரும்பாலான இடதுசாரிகளைப் போல வறட்டு கார்டீசிய அணுகுமுறைகளோ பேகனிய பார்வைகளோ அவரிடத்தில் இல்லை. தத்துவங்களுள் உள்ள கலையார்ந்த அம்சங்களையும், கலைப்படைப்புகளுள் உள்ள தத்துவார்த்தமான பகுதிகளையும் பற்றிய ஒரு தெளிவான புரிதலோடுதான் இயங்கினார். மனிதன் என்ற ஜீவராசியை ஒரு அல்ஜீப்ரா போல விளக்கிவிட முடியும் என்று அவர் நம்பினார். அதற்கான வழியை வெறும் தர்க்க-கணிதமுறைமைகளில் அவர் தேடவில்லை மாறாக கலையின் தன்மை மிகுந்த முறைமைகளை கையாண்டார். தத்துவார்த்தமான சாரம்சத்தோடு கலைநடவடிக்கைகளில் ஈடுபட்டவர் சார்த்தர் எனில் கலையார்தமான சாரம்த்தோடு தத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் லெவிஸ்டிராஸ் என நான் புரிந்து கொள்கிறேன். சென்ற வருடம் நவம்பர் மாதம் லெவிஸ்டிராஸ் இறந்து விட்டது போலவும் அச்செய்தியை நான் நாளிதழில் படிப்பது போலவும் ஒரு கனவு வந்தது. என் நண்பர்கள் ந.முத்துவிடமும், இசையிடமும் இன்னும் ஒரு வருடமாவது இருந்திருக்கலாம் 100 வயதை பார்த்திருப்பார் என்று அங்கலாய்துக் கொண்டிருந்தேன். நான் கண்ட அந்தக் கனவு அவருக்கு எப்படி தெரிந்ததோ சரியாக ஒராண்டுகள் கழித்து இந்த நவம்பரில் இறந்திருக்கிறார். ஒரு நேர்காணலில் அவரே சொன்னது போல லெவிஸ்டிராஸ்தான் இறந்திருக்கிறார் அவர் பயணம் இன்னும் உள்ளது. மானுடகுலத்தின் ரகசியங்களை குறியீடுகளாக மினுக்கியபடி பண்பாடுகள் தோறும் உறைந்துள்ளன எண்ணற்ற தொன்மங்கள். தன் முதிர்ந்த அனுபவத்தாலும் மேதமையாலும் அவைகளை வாசித்து விளக்க அந்த மனிதர்தான் இல்லை. “ஆசுஆகு எந்தை யாண்டுளன் கொல்லோ”.

Tuesday, October 13, 2009

கோவை ஞானி – நேர் காணல் -4

இந்தியாவில் மார்க்சியம் பெரும் சரிவை சந்தித்ததிற்கு முக்கிய காரணம் என்ன? காரணங்கள் மிக விரிவானவை. எனினும் சிலவற்றை இங்கு சொல்ல முடியும். இந்தியாவிற்கு சோசலிசம் இன்றியமையாதது. என்று நம்பிய நேரு இக்கொள்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இடம் பெறச் செய்தவர். இந்துத்துவ சார்புடைய வல்லபாய் படேல், கோவிந்த் வல்லவ பந்த், டான்சன் முதலியவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் கம்யூனிச எதிர்ப்பாளர்களாகவும் வலிமை பெற்றவர்களாகவும் இருந்த காரணத்தால் காங்கிரஸ் இயக்கத்தை சோசலிசம் நோக்கி நடத்த நேருவால் இயலவில்லை. இந்திய-சீன எல்லைச் சிக்கலை தீர்ப்பதில் சீனாவை போலவே நேருவுக்கும் இருந்த அக்கறை படேல் முதலியவர்களுக்கு உடன்பாடில்லை. ஆகவே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட மோதலை கம்யூனிச எதிர்ப்பாக இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். சீனாவோடு பகை வளர்த்துக் கொண்ட ரஷ்யா சீன எதிர்ப்புக்கு இந்தியாவை தூண்டியது. இந்தியாவில் முதலாளிய சக்திகளுக்கு இவையாவும் தேவையாகவும் இருந்தது. இந்தியாவை அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவம் என்றும் இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் என்றும் இந்தியாவை வர்க்க வரையறை செய்து ஆயுதப்போராட்டத்தை தொடங்கிய நக்சல்பாரி இயக்கத்தையும் பின்னர் இன்று வரை இந்தியாவின் பல மாநிலங்களில் உறுதியாக செயல்படுகின்ற மார்க்சிய லெனினிய இயக்கங்களை கடுமையாக ஒடுக்குவதிலும் மைய, மாநில அரசுகளோடு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் குரூரமாக செயல்படுகின்றன. கம்யூனிச பாதையை மக்கள் கடைபிடிக்கக் கூடாது என்பதில் இவர்களுகிருக்கிற அக்கறை சொல்லி முடியாது. அரசியல் அதிகாரதில் இடம் பெறவும் தொழிற்சங்கவாதம், பொருளாதார வாதம் ஆகியற்றை கடை பிடிப்பதிலும் விடாப்பிடியாக இருக்கிற மார்க்சியக் கட்சிகளின் மக்கள் விரோதக் கொள்கை இன்னும் ஒரு காரணம். இந்தியாவின் வர்க்க வரையறை முதலிய ஆய்வுகளை கறாராக செய்வதில் மார்க்சியர் எப்போதுமே தவறி வந்தனர். சுய சிந்தனையோடு இவர்களது ஆய்வுகள் இல்லை. மார்க்ஸ் முன்வைத்த ஆசிய உற்பத்தி முறை என்பதை இவர்கள் இன்று வரை புறக்கணிக்கின்றனர். தொடக்கத்தில் தேசிய இனம் என்று பேசிய மார்க்சியர் பின் முற்றாக இக் கொள்கையை கைவிட்டதோடு இந்திய தேசியத்தைப் பேசுவதிலும் முனைப்பாக உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை திராவிட இயக்கம் மற்றும் தமிழ் இயக்கங்களோடு இவர்கள் முரண்பட்டுச் செயல்படுவதன் மூலம் தமிழ் மக்களின் நலன்களைப் புறக்கணிக்கின்றனர். தமிழீழ மக்களின் விடுதலை இவர்களுக்கு கசப்பதன் காரணம் புதிராகத்தான் இருக்கிறது. காவிரிச் சிக்கல், முல்லை பெரியாறு அணைச்சிக்கல் ஆகியவற்றிலும் தமிழர்களின் நலன்கள் இவர்களுக்கு முதன்மையாகப் படுவதில்லை. தொகுத்துச் சொன்னால் மார்க்சியத்தை இந்தியமயப்படுத்துவதிலும், தமிழ்மயப்படுத்துவதிலும் இவர்கள் மக்கள் நெஞ்சைக் கவரவில்லை. மக்களுக்கான விடுதலை என்பதை மார்க்சியம்தான் சாதிக்கும் என்பதில் எனக்கு மாறுபாடு இல்லை. உலகமயமாதல் முதலிய இன்றைய சூழலில் மார்க்சியத்திற்கு இனி என்ன எதிர்காலம் இருக்க முடியும்? உண்மைதான். அமெரிக்கா முதலிய மேற்கத்தியர் தம் பொருளியல் ஆதிக்கத்தோடு அரசியல் ஆதிக்கத்தையும் தெற்கு மற்றும் கிழக்கு நாடுகள் மீது தொடர்ந்து திணிப்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். இவர்களின் நவீன அறிவியலும் தொழிநுட்பமும் இவற்றோடு அவர்களின் மூலதனமும் இல்லாமல் மூன்றாம் உலக நாடுகள் தம்மை வாழ்வித்துக் கொள்ள இயலாது என்று சொல்கிறார்கள். நம் தேசத்து அரசியல்வாதிகளும் படிப்பாளிகலும் இதை நம்பி நமக்கு பாடம் சொல்கிறார்கள். மேற்கத்தியரோடு நம் முதலாளிகள் கை கோர்த்துக் கொள்கிறார்கல். நம்மவர்களுக்கு இதனால் எத்தனையோ வகையான ஆதாயங்கள் கிடைக்கின்றன. ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் கிடைக்கின்றன. அரசியல்வாதிகள் தம் அதிகாரத்தை அவர்கள் உதவி கொண்டு தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் சொல்கிறபடி தொழில், ஆயுள் காப்பீடு, விமானம், தகவல் தொடர்பு முதலிய எல்லாவற்றையும் மைய அரசு தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதன் மூலம் முதலாளிகளுக்கு கூடுதலான லாபம் கிடைக்கிறது. அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டங்களுக்கு அவர்கள் சொல்கிற மாதிரி பயங்கிரவாதமென்று பேர் வைத்து அவர்கள் ஒத்துழைப்பையும் பெற்று நம் மக்களை ஒடுக்கவும் முடியும். மக்களிடமிருந்து தொழில் தேவை என்பதற்காக நிலத்தை பறிக்க முடியும். நீரை வசப்படுத்தி வணிகம் செய்ய முடியும். காடுகளை அழிக்க முடியும். கடல் வளத்தைக் கொள்ளையடிக்க முடியும். அரசு வங்கிகளையும் அரசியல்வாதிகளும் முதலாளிகளும் கொள்ளையடிக்கலாம். நீதிமன்றங்களும் இவர்களோடு ஒத்துழைக்கலாம். வழக்கறிஞர், மருத்துவர், விஞ்ஞானி முதலிய அனைவரும் தமக்கு கிடைக்கும் காசுக்காகவும் விருதுகளுக்காகவும் தன்மானம் இழந்து அவர்களோடு பணிபுரிந்து தம்மை அழித்துக் கொள்கிறார்கள். மேற்கத்தியரின் அறிவியல் ஆய்வுக்கு நம் தேசத்தை நமது அரசு திறந்து விடுகிறது. காடுகள், பயிர் வகைகள், மனிதர் உடம்பு, மூலிகைகள் முதலிய எல்லாவற்றையும் ஆராய்ந்து நுட்பங்களை சேகரித்து இவற்றை எங்கள் அறிவு ஆராய்ச்சி மூலமே சேகரித்தோம் என்பதால் இவற்றின் மீது எங்களுக்குத்தான் உரிமை. நீங்கள் வெறும் கச்சாப் பொருட்கல். உங்கள் மீது எங்களுக்கு ஆதிக்கம் உண்டு என சட்டம் செய்கிறார்கள். உங்களுக்கு இறையாண்மை இல்லை என்கிறார்கள். உலகில் மேற்கத்தியரின் மக்கள் தொகை 20% மட்டுமே. உலகளவிலான சொத்துக்களில் இயற்கை வளங்களில் 80% மீது எங்களுக்குத்தான் உரிமையுண்டு என்கிறார்கள். வெட்கம் இல்லாத ஆட்சியாளர்கள், அரசரிகாதிகள், படிபாளிகள் இத்தகைய பெரும் பொய்யை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. எல்லாவற்றுக்கும் இவர்களுக்கு கூலி கிடைக்கிறது. பதவி கிடைக்கிறது. வாழ்க்கை வசதிள் கிடைக்கின்றன. அதிகாரமும் கிடைகிறது. இந்த உண்மைகளை எல்லாம் இன்று மார்க்சியம் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது. மார்க்சியம் உழைக்கும் மக்களுக்குத்தான் தேசம் சொந்தம் என்கிறது. இயற்கை சொந்தம் என்கிறது. பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக பல கோடி மக்களின் உழைப்பின் மூலம், தேடலின் மூலம் சேகரித்துக் கொண்ட தேடலின் உச்சம்தான் இன்றைய அறிவியலும் தொழில்நுட்பங்களும். இந்த அறிவுத் தொகுப்பை ஆதிக்கவாதிகள் வசப்படுத்திக் கொள்வதை நம்மால் ஏற்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகள் மக்களின் கடுமையான உழைப்பின் மூலம் உருவான வளங்களை அந்நியர் வசப்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்க முடியாது. அரசதிகாரம் என்பது மக்களைக் கொண்டு, மக்களை வசப்படுத்திக் கொண்டு, மக்களைக் கருவியாக்கி மக்களுக்கு வஞ்சகம் செய்து உருவான அதிகார பீடம் எல்லாச் சொத்துக்களுக்கும் மூலம் மக்களின் உழைப்புத் திறம்தான் என்பதால் அவற்றை திரும்ப எடுத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்குண்டு இப்படியெல்லாம் மார்க்சியம் நமக்கு கற்பிக்கின்றது. ஆதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் உரிமை இயற்கையாகவே நமக்கு இருக்கிறது. நடுத்தரமக்கள் பல நூறு ஆண்டுகளாக உழைக்கும் மக்களுக்குத் துரோகம் செய்ததை இன்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயுதங்களை நம்மாலும் பயன்படுத்த முடியும். நம் வரலாற்றை நம்மால் மீட்டுக் கொள்ள முடியும். அழிவு இல்லாமல் ஆகம் என்பதில்லை. அந்நியர்களோடு நம்மவரின் ஆதிக்கத்தையும் தொடர்ந்து நாம் ஒப்புக் கொள்வோம் என்றால் இவர்கள் நம் வாழ்வுக்காதாரமான இயற்கை வளங்கள் முதலியவற்றை முற்றாக அழிப்பார்கள் தேசத்தை நஞ்சாக்குவார்கள். இறுதியில் அழிவது இவர்களும்தான் என்ற போதிலும் இந்த உண்மையை புரிந்து கொள்ளும் திறனற்ற இவர்கள் நம்மையழிக்க தொடங்கியிருக்கிறார்கள். இயற்கை முதலியவற்றை இவர்களிடமிருந்து மீட்பதன் மூலமே இவர்களையும் மனிதர்களாக்கி வாழ வைக்க முடியும். இவர்கள் ஆதிக்கத்தை நம் படிப்பாளிகள் சொல்வது போல நாம் ஒப்புக்கொண்டு இவர்களோடு ஒத்துழைத்து வாழ்வோமானால் நம் அனைவருக்குமான வரலாறு, வாழ்க்கை, நாகரிகம் முதலியன இல்லமல் போய்விடும். இறுதியில் உலகமே ஒரு மயான பூமியாகிவிடும். இந்த உலகத்தை மயானமாக்கிவிட்டுதான் போவார்கள் என்றால் அதற்கு முன் இக்கூட்டத்தை நாம் அடியோடு ஒழிக்க வேண்டும். இப்படியெல்லாம் நமக்குள் சிந்தனைகளை கிளறுவது மார்க்சியம்தான். கொஞ்ச காலம் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதிக்கத்தோடு சமரசம் செய்து கொள்வதாகிய மதமோ, கலாச்சாரமோ நமக்குத் தேவையில்லை. சமரசவாதிகள் தம் அழிவைப் பற்றி சிந்திக்காமல் நாமும் அழிவதற்கு வழி சொல்பவர்கள். இவர்களோடு நமக்கு உறவு வேண்டியதில்லை. தமிழில் ஸ்டாலினியம் பற்றிய உரையாடல்களை முதலில் துவங்கியவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கறீர்கள். தற்போதைய புது-முதலாளிய மற்றும் பின் நவீனச் சூழலில் ஸ்டாலினை எப்படிப் பார்கறீர்கள்? தோழர் ஸ்டாலின் அவர்களைப் பற்றி தமிழகத்தில் பரிமாணம் தனி இதழ் ஒன்றில் விரிவான உலக அளவிலான விமர்சனங்களை நாங்கள் (நானும் எஸ்.வி.ராஜதுரையும்) தொகுத்துத் தந்தோம் என்பது உண்மைதான். கட்சி அமைப்புக்குள் ஸ்டாலினியப் போக்கால் நாங்களும்தான் பாதிக்கப் பட்டிருந்தோம் என்பது கூட ஒரு முதற்காரணமல்ல. ஸ்டாலினின் சாதனைகள் மரியாதைக்குறியவை எனபதில் எங்களுக்கு மாறுபாடு இல்லை. சோவியத் கட்சிக்குள் ஸ்டாலியப் போக்கு மேலோங்கியதற்கு அவரை மட்டுமே குற்றம் சொல்வதிலும் உண்மையில்லை. எனினும் கட்சிக்குள்ளும் அரசு அதிகாரத்திற்குள்ளும் தோழர் ஸ்டாலினால் நேர்ந்த தீங்குகளுக்கும் அளவில்லை. இவையெல்லாம் எப்படி நேர்ந்தன என்பது அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி தீவிரமான ஆய்வுக்குறிய தீராத சிக்கல் என்பதிலும் ஐயமில்லை. யாரிடத்தில் ஸ்டாலினியம் இல்லை என்று கூட நாம் கேட்டுக் கொள்ளலாம். சோவியத் சமூகத்தில் மட்டுமல்ல எந்தவொரு சமூகத்திலும் காலங்காலமாக தொடர்ந்து நிலவும் கோளாறுகள், குரூரங்கள், அறியாமை, ஆத்திரம், அவசரக்கோலம் முதலிய குறைபாடுகளிலிருந்துதான் ஸ்டாலினியம் எனப்படும் கடும்போக்கு உருவாகியது. தோழர் மாவோ சுட்டிக்காட்டியபடி உற்பத்திச் சக்திகளுக்கு முதன்மை தரும் போக்கின் ஒரு விளைவாக ஸ்டாலினியம் எழ முடியும். தோழர். எஸ்.ஏன். நாகராசன் அவர்களும் தொடர்ந்து விளக்குவது போலவே மார்க்சிடமே இந்த தவற்றுகான இடம் உண்டு. பகை முரண்பாட்டுக்கு அழுத்தம் தருவது மேற்கத்திய மார்க்சியம் என்கிறார் நாகராசன். சில மாதங்களுக்கு முன்பு தோழர்.வீரபாண்டியன் தான் விரிவாக எழுதிய ஸ்டாலின் பற்றிய கட்டுரைகளுக்கு என்னிடம் முன்னுரை கேட்ட போது நான் தோழர் ஸ்டாலின் பற்றி எனக்குள் மறு ஆய்வு செய்தேன். உலகமயமாக்கல், உலகெங்கும் பயங்கரவாதம், அமெரிக்க அதிக்கம் பரவி வரும் சூழலில் ஸ்டாலியத்திற்கு என்ன இடம் என நீங்கள் கேட்பது போன்றே நானும் கேட்டுக் கொண்டேன். இன்று அமெரிக்க அதிபரை இன்னொரு ஹிட்லர் என்றுதான் நாம் கருத முடியும். ஹிட்லரோடு ஸ்டாலினால் எந்த சூழலிலும் கை கோர்த்துக் கொள்ள முடியாது. இரண்டாம் உலகப் போரின் போது உங்களுக்கு ஆதரவாக நாங்களும் வருகிறோம் என்று சொல்லிக் கொண்டே முதலில் ஸ்டாலின் ஹிட்லரை ஒழிக்கட்டும். பிறகு ஸ்டாலினை நாம் அழிக்க வேண்டும் என்று மேற்கத்தியர் காத்திருந்ததை நாம் இப்போதும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு இன்னொரு ஸ்டாலின் தோன்ற வாய்பில்லை. இன்னொரு மாவோவுக்கும் வாய்ப்பிருப்பதாக கருத முடியவில்லை. தோழர் வீரபாண்டியன் தன் கட்டுரையில் சுட்டிக் காட்டியது போல ஸ்டாலினிய சர்வாதிகாரம் குறித்து இன்றைக்கும் பேசுபவர்கள் யார் என்பது பற்றி நாம் அசட்டையாக இருக்க முடியாது. பொதுவுடைமைவாதிகளை இன்றைக்கும் தாக்குவதற்கு ஸ்டாலினை பற்றி அத்வானி பேசுகிறார். அத்வானி போன்றவர்கள் உள்ளும் புறமும் சர்வாதிகாரிகள். இவர்கள் இந்திய முதலாளிகளோடும் அமெரிக்க ஆதிகத்தோடும் கைகோர்த்துக் கொள்வதில் தயக்கம் கொள்ளாதவர்கள். இவர்கள் ஹிட்லரின் வாரிசுகள். இவர்கள் ஸ்டாலினை சுட்டிக் காட்டுவதன் மூலம் தம்மை மறைத்துக் கொள்பவர்கள். இறுதியாக இப்படிச் சொல்லலாம். வரலாற்றின் ஒரு கோரமான திரிபு ஸ்டாலின். மார்க்சியரின் சொற்களில் இடசாரித் திரிபு. ஏகாதிபத்யக் கொடுங்கோண்மைக்கு ஓர் எதிர் விளைவு ஸ்டாலின். அவர் ஒருவகையில் தேசத்தின் நன்னை எனக்கருதி தன்னைத் தானே தண்டித்துக் கொண்டவர். இன்றைய வல்லரசிய ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு இன்னொரு ஸ்டாலினை முன் நிறுத்த முடியாது. இதற்கு வேறு வழி காண வேண்டும். முற்றிலும் புதிய வழி- நெறி ஒன்று இன்று தேவை. அந்த நெறி இன்று தென்னமெரிக்காவில் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது.

Friday, October 9, 2009

கோவை ஞானி – நேர் காணல் - 3

தமிழும் தமிழ் நிமித்தமும்... பெரியாரியமும் திராவிட இயக்கமும் அடைந்திருக்கிற தத்துவச் சரிவுக்கு என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
மார்க்சியத்தை நான் ஏற்றுக் கொண்ட புதிதில் பெரியாரியத்தோடு பெரிதும் முரண்படத்தான் செய்தேன். ஆனால் நாளடைவில் தமிழகச் சூழலில் பெரியாரியத்தின் இன்றியமையாமையை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெரியாரியமும் மார்க்சியமும் கை கோத்துக் கொள்ள இயலாதென்றால் தமிழக மக்களின் விடுதலைக்கு சாத்தியமில்லை என்பதில் உறுதி கொண்டுள்ளேன். வட இந்தியாவில் நடைபெறுகிற மதக் கலவரங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் இல்லை என்பதற்கு பெரியாரியத்தின் தாக்கமே முதன்மையான காரணம். இந்தியாவில் பார்ப்பனியத்தின் ஆதிக்கம் தமிழகத்தில் தான் இன்று வரை ஓங்கியிருக்கிறது என்பதால் பெரியாரியத்தின் தேவையை இங்கு மறுப்பதற்கில்லை. சாதி, மதம், பார்பனியம் ஆகியவற்றின் எதிர்ப்பையே பெரியாரியத்தின் மையம் என திராவிட இயக்கம் இன்று வரை நம்பிச் செயல்படுவது பெரியாரியம் என்று நம்மால் கருத முடியவில்லை. பெரியாரியத்தின் மையம் சமதர்மமாகத்தான் இருக்க முடியும். பெரியாரே நம் இயக்கம் பிராமண எதிர்ப்பு, புராண எதிர்ப்பு முதலியவற்றை முதன்மைப்படுத்துற சீர்திருத்த இயக்கமாக இருக்க முடியாது என்றும் நம் இயக்கம் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர இயக்கமே என்றும் வற்புறுத்திச் சொல்லி இறுக்கிறார். முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட திராவிட இயக்கம்தான் சாதி, மதம் முதலிய எதிர்ப்பை முதன்மைப் படுத்த முடியும். வகுப்பு வாரி உரிமை, இட ஒதுக்கீடு ஆகியவை இந்தியாவில் குறைந்த அளவுகேனும் தொடர்ந்து செயல்படுகிறது என்றால் இதற்கான இயக்கம் பெரியாரிய திராவிட இயக்கம் தான் என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தியச் சமூகம் சாதியச் சமூகம் தான், வர்க்கச் சமூகம் அல்ல என்பதில் அழுத்தம் கொண்டதன் மூலம் திராவிட இயக்கமும் மார்க்சிய இயக்கமும் தமக்குள் முரண்பட்டு எதிர் நிலைக்கு சென்றன என்பது ஒரு வருத்தம் தரக்கூடிய நிகழ்வு. அண்மைகாலத்தில் தமிழ்த் தேசியத்தையும் மார்க்சியத்தையும் இணைத்துப் பார்க்க முடியும் என்பவர்கள் சாதி என்பது வடிவம், வர்க்கம் என்பது உள்ளடக்கம் என்ற முறையில் பேசுவது நம் சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. சாதி, மதம் ஆகியவற்றின் தோற்றம், தீர்வு , வளர்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்ட வரலாறு , பொருளியல் சூழலில் வைத்துத்தான் பார்க்கவேண்டும் என்ற மார்க்சியத்தின் வரலாற்றுப் பார்வை ஏனோ இன்று வரை திராவிட இயக்கத்திற்கு உடன்பாடாக இல்லை. மதம் மக்களுக்கான அபின் என்ற மார்க்சின் ஒரு வாசகத்தை மட்டுமே பெரியாரிஸ்டுகள் ஏற்கின்றனர். இதயமற்ற உலகின் இதயம் என்றும் ஆன்மா அற்ற உலகின் ஆன்மா என்றும் சமயத்தைப் பொருள் படுத்திய மார்க்ஸ் சமூகத்தில் நிலவும் பொருளியல் ஏற்றத் தாழ்வு முற்றாக அகலும் பொழுதே சமயத்தின் ஆதிக்கம் ஒழியும் என்றும் கூறியிருப்பதை பெரியாரிஸ்டுகள் கவனிக்கத் தவறுகின்றனர். சமயம், புராணம் குறித்த சிக்கல்களில் மட்டுமில்லாமல் இலக்கியம் மெய்யியல் குறித்த பார்வையிலும் பெரியார் சரியாகவோ வளமாகவோ இல்லை என்பது பற்றி விடாப்பிடியாக நான் எழுதி வருகிறேன். கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம்தான் என்ற முறையில் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். இந்துத்துவம் என்பதும், இந்துமதம் என்பதும் ஒன்றல்ல என்பதையும் நான் விளக்கி வருகிறேன். சமய உணர்வை முற்றாக மறுப்பதன் மூலம் மத நம்பிக்கையுடைய நம் மக்களை இந்துத்துவம் நோக்கித் தள்ள வேண்டாம் என்றும் எழுதி வருகிறேன். பார்பனியத்தினுள்ளும் இடதுசாரிப் பார்பனியம் என்ற ஒன்று உண்டு என்ற முறையில் விவேகானந்தர், பாரதியார் முதலியவற்றை நம்மால் ஏற்க முடியும் என்று நான் நம்புகிறேன். சமதர்மத்தில் ஊன்றி நிற்கும் இவர்கள் வருணாசிரம முறைக்கு எதிரானவர்கள் என்பது உறுதி. சுய மரியாதை, தன்மானம் என்பதுதான் பெரியாரியத்தின் மெய்யியல். பெரியாரே விளக்கியபடி தொழிலாளிக்குத் தன்மானம் என்பது ஆணாதிக்கத்திலிருந்து விடுபடுவது. எந்த வகையான ஆதிக்கமும் மனிதருக்குத் தேவையில்லை என்றவர் பெரியார். பகுத்தறிவுவாதம் என்பது ஒரு ஆய்வு முறை மட்டுமே. கலை, இலக்கியம்,இசை முதலியன இல்லாமல் மனிதருக்கு வாழ்வில்லை. மனிதரைப் புரிந்து கொள்ள அறிவுவாதம், பகுத்தறிவு வாதம் போதாது மனிதருக்குள் உள்ளுணர்வு, கற்பனைத்தின், படைப்பியக்கம் முதலியன இல்லாமல் மனிதரில்லை வெறும் அறிவு வாதம் சிலப்பதிகாரம், மணீமேகலை ஆகிய காப்பியங்களை ஏற்காது. கண்ணகி எப்படி மதுரையை எரித்து அழிக்க முடியும் என்றுதான் இவர்கள் கேட்பார்கள். நீதியற்ற அரசை அழிப்பது அறம் என்ற இளங்கோவடிகளின் உணர்வு கவிஞரின் அறம். கம்பர் காவியத்தை ஆரியர் திராவிடர் போராட்டம் எனக் காண்பது ஒருவகை ஆய்வு. இலக்கியம் என காப்பியம் என இதைக் காண்பது இன்னொரு வகை ஆய்வு. கொடுங்கோன்மையை அழிக்க ஒருவன் அரசைத் துறந்து ஏழைகளைத் தோழமை கொண்டால் மட்டுமே சாத்தியம் என்று காண்பது இவ்வகை ஆய்வு. இவ்வாறேல்லாம் பெரியாரியம் தன்னை விரிவு படுத்திக் கொள்ள வேண்டும். மார்க்சியத்தின் வழியே பெரியாரியம் தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியும். தனியுடைமை அரசதிகாரம் ஆகியவற்றோடு ஒத்து இயங்குவதன் மூலம் பெரியாரியம் தன்னை மேம்படுத்திக் கொள்ள இயலாது. நவீன அறிவியல், ஏகாதிபத்தியம், உலகமயமாதல் ஆகியவற்றையும் எதிர்த்து ஒதுக்கினால் ஒழிய தமிழ் மக்கள் வாழ்வு மேம்படாது. இயற்கை வேளாண்மை, பசுமை இயக்கம், தமிழியக்கம் ஆகியவற்றோடும் ஒத்தியங்குவது பெரியாரியக்கம். தலித் அறிவு ஜீவிகள் பெரியாரை விமர்சிப்பதையும் பெண்ணியவாதிகள் மார்க்சை விமர்சிப்பதையும் எப்படிபார்க்கிறீர்கள்? அறிவு ஜீவிகள் என்ற சொல்லை பெரும்பாலும் நான் பயன்படுத்துவதில்லை. அறிவை வைத்து படிப்பை வைத்து அரசு ஊழியம் முதலியவற்றை வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அறீவு ஜீவிகள். அறிவை வைத்துப் பிழைப்பவர்கள் என்று நான் கருதுகிறேன். அறிவாளிகள் என்பவர்கள் இவர்களிலிருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் அறிவை படிப்பை ஆள்பவர்கள். பல திசைகளிலும் தேடித்தேடி அறிவைத் திரட்டுபவர்கள். வாழ்வியல் அனுபவங்களில் இருந்து அறிவை திரட்டுபவர்கள். வரலாற்று இயக்கத்தோடு தம்மைக் கரைத்துக் கொண்டார்கள். இவர்களைத் தான் ஆங்கிலத்தில் Intellectuals என்று கூறுகிறார்கள். இத்தகையவரால் பெரியாரை இகழ முடியாது, புரிந்து கொள்ள முடியும், பெரியார் அளவுக்கு மக்களை நேசித்தவர் என, மக்களை புரிந்துகொண்டவர் என இன்னொருவரைக் கூற முடியாது.இன்னொரு புத்தர் என அறிவை மதிப்பிடுவதில் தவறில்லை. காந்தியைப்போல என்று அவரைச் சொல்லவும் முடியும். பெரியார் ஒரு வகையில் சொன்னால் ஆறு கோடித்தமிழ் மக்களுக்கும் அவரைத் தந்தை என்று மிகுந்த மரியாதையுடன் சொல்ல முடியும். அவரை எல்லம் தெரிந்தவர் என்றோ Intellectual என்று கூட நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அண்மைக் காலத்து தலித் வட்டாரத்து அறிவு ஜீவிகள் சிலர் அவரை கடுமையாக விமர்சனம் செய்வதை என்னால் ஏற்க முடியவில்லை. வகுப்பு வாரி உரிமை இந்திய அரசியல் சட்டத்தில் கடுமையாக போராடியதன் பின்னர் இடம் பெற வைத்தவர் பெரியார். இட ஒதுக்கீடு இல்லாமல் நம் மக்கள் கல்வி முதலிய பல துறைகளிலும் முன்னேறிய சமூகத்திற்கு நிகரானவர்களாக வாழ முடியாது. இதற்கான முன் முயற்சியை முழு அளவில் செய்தவர் பெரியார். தலித் மக்களுக்காக அவர் தனி இயக்கம் காணவில்லை என்பது உண்மைதான். அறிஞர் அம்பேத்கர்தான் இத்தகைய இயக்கத்தை தோற்றுவித்தவர். இவரது இயக்கத்தின் தூண்டுதலின் பேரில்தான் தமிழ்நாட்டிலும் தலித் மக்களுக்கென தனி இயக்கங்கள் தோன்றின. தலித் மக்களுக்கு தனி இயக்கம் தேவை என்பதையும் நம்மால் ஒப்புக்கொள்ள முடியும். பெரியாரே அதை செய்திருக்க முடியாது. சாதி அமைப்பை கடுமையாக தாக்கியதில் பெரியாரையும் அம்பேத்கரையும் ஒரு நிகரானவர்களாகவே சொல்ல முடியும். திராவிட இயக்கத்தினுள்ளும் பலதரப்பட்ட சமூகப்பிரிவினர் இருக்கத்தான் செய்தனர். சாதி உணர்விலிருந்து அல்லது வர்க்க அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு உணர்விலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபட்டவர் எனப் பெரியாரும் கருதியிருக்க முடியாது. ஆனால் பெரியாரை இப்படி யாரும் சொல்லவும் முடியாது. இயக்கத்திலுள்ள பிற்படுத்தப்பட்டவர் தலித் மக்களை தமக்கு எல்லா வகையிலும் நிகரானவர் எனக் கருதி திருமணம் முதலிய உறவுகளை வைத்துக்கொள்ள முற்றான விருப்பம் கொண்டிருக்க மாட்டார்கள். இயக்கத்தினுள்ளும் இந்த வகையில் பேசிக்கொள்ளாத ஒரு மவுனம் இருந்திருக்க முடியும். பின்னர் தலித் மக்கள் இவர்களிடமிருந்து தம்மை வெட்டிக் கொண்டு தமக்கான ஒரு இயக்கம் காண்பதிலும் தவறு சொல்ல முடியாது. ஆனால் இதிலிரிந்து பகையுணர்வை வளர்த்துக் கொள்வது தேவையில்லை. இத்தகைய பகையுணர்விலிருந்துதான் பெரியாரைச் சாடுவதும் தொடர்கிறது. அறிவு ஜீவிதான் இதை செய்வார்கள். மக்கள் வாழ்வோடு தம்மைக் கரைத்துக் கொண்டவர் இதைச் செய்ய முடியாது. எந்தவகை ஆதிக்கத்திற்கும் மார்க்சியம் எதிரானதாகத்தான் இருக்கிறது. ஆணாதிக்கம் எந்த வடிவில் இருந்தாலும் அது மார்க்சியத்திற்கு உடன்பாடானதாக இருக்க முடியாது. மார்க்சியக் கட்சிக்குள்ளும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் இவர்களூக்குள்ளும் ஆணாதிக்கம் செயல்படும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சோசலிசம் வந்துவிட்டால் மக்கள் அனைவரும் சரி நிகரானவர்களாக மாறி விட முடியும். அப்போது ஆணாதிக்கம் இருப்பதற்கும் வாய்ப்பில்லை. நிலவும் சமூகத்தில் உடமை வர்க்கத்திற்கெதிரான வர்க்கப்போராட்டத்தில் தொழிலாளிகள் மட்டுமல்லாமல் பெண்ணூரிமை இயக்கத்தினரும் ஈடுபட வேண்டும் என்பது மார்க்சியக் கட்சியினரின் கருத்து. இடையில் ஆணாதிக்கத்திற்கெதிராகப் போராட வேண்டும் என்ற முறையில் கட்சி அமைப்புக்குள் தொழிற்சங்க அமைப்புக்குள் பிளவை ஏற்படுத்த வேண்டாம். இப்படித்தான் கட்சி மார்க்சியர் கருதுகின்றனர். சோசலிசம் வரும்வரை ஆணாதிக்கத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமா என்று பிற பெண்ணியவாதிகள் கேட்க முடியும். குறைந்த அளவுக்கு சோசலிசப் பெண்ணியத்தை ஏற்காத பிற பெண்ணியவாதிகள் முன்வைக்கும் கருத்தென்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். மார்க்சியம் என்னதான் மக்கள் விடுதலை என்று இறுதி நோக்கமாகப் பேசினாலும் மார்க்சியத்தின் உள்ளே அதிகாரம் என்பது ஆழமாகப் பதிந்திருக்கிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த தாய்மை சமூகத்தை கடுமையாக ஒடுக்கியதன் விளைவாகவே ஆணாதிக்க சமூகம் ஏற்பட்டது. பெண்ணின் மீதான இத்தகைய ஒடுக்குமுறை இன்றளாவும் தொடர்கிறது. வரலாற்றில் நிகழ்ந்த முதல் வர்க்கப்போர் இதுதான் என்பதை மார்க்சியம் ஏற்பதில்லை. மார்க்‌ஸ் முதலிய மார்க்சிய முன்னோடிகளும் தம் வாழ்வில் ஆணாதிக்க வாதிகளாகத்தான் இருந்தார்கள். உடமை வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டும் என்ற ஆதாரத்தில்தான் மார்க்சியம் அமைந்திருக்கிறது. மார்க்சியருக்குக் குடும்பம், குழந்தைகள், பெண்கள் குறித்துத் தனிக் கருத்தில்லை. சோசலிசம் வரும்வரை இவர்களோடு ஒத்து இவர்களின் அதிகாரத்தை நிறுவ எங்களால் போராட முடியாது என்று இந்தப் பெண்ணிய வாதிகள் கருதுகிறார்கள். இவர்களின் விமர்சனங்கள் ஒதுக்கத்தக்கவையல்ல. தனியுடைமை, அரசதிகாரம், மதபீடங்கள், இவற்றோடு இராணூவம், அதிகார நிறுவனங்கள் என்ற பல்வேறு வடிவங்களில் செயல்படுகிற ஆதிக்கங்களை முற்றாக அழித்தொழிப்பதன் மூலம் தான் மனித சமூகம் தனக்கான விடுதலையை சாதிக்க முடியும் அதிகார அமைப்புகளை உள்வாங்கிக் கொள்கிற ஆண் மட்டுமல்லாமல் இவற்றோடு ஒத்துச் செயல்படுகிற பெண்ணும் ஆதிக்கத்திற்கு சேவை செய்கிற அமைப்பாகத்தான் இருக்க முடியும். ஆதிக்கத்தை இப்படிப் புரிந்து கொள்ள இயலுமானால் முற்றாக மனித விடுதலைகாக பாடுபடும் தாய்மைப் பண்புதான் உண்மையில் மார்க்சியமாகப் பெண்ணியமாக இருக்க முடியும். எல்லாவகையான ஆதிக்கங்களையும் தனக்குள்ளிலிருந்து வெளியேற்றிக் கொள்கிற மார்க்சியம்தான் அசலான மார்க்சியம், எல்லாவகையான ஆதிக்கங்களையும் தனக்குள்ளிலிருந்து வெளியேற்றிக் கொள்கிற பெண்ணியம்தான் அசலான பெண்ணியம் நாம் அனைவரும் இதைப் புரிந்துகொள்ளூம்போதுதான் இப்பிரச்சனை தீரும். தொடரும்

Tuesday, October 6, 2009

கோவை ஞானி – நேர் காணல் – 2.

தமிழும் தமிழ் நிமித்தமும்... தற்காலத் தமிழிலக்கியத்தின் சாதனையாளர்களில் வலதுசாரிகளைப் பாராட்டிய அளவுக்கு இடதுசாரிப் படைப்பளிகளை ஞானி பாராட்டுவதில்லை என்கிற சிலரின் விமர்சனம் குறித்து உங்கள் பதில் என்ன? யாரோ கிளப்பி விட்ட ஊன்மையில்லாத ஒரு குற்றச்சாட்டு இது என்றே நான் கருதுகிறேன். க.நா.சு., ந.பிச்சமூர்த்தி, மெளனி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், லா.ச.ரா, கல்யாண்ஜி, பிரபஞ்சன், ஜெயமோகன் முதலிய தமிழின் சிறந்த படைப்பளிகளை நான் வலதுசாரிகள் எனக் கருதுவதில்லை. இவர்களின் சமூக உணர்விலிருந்து அல்லது புரிதலிலிருந்து மார்க்சியர் வேறுபடலாம். இதன் காரணமாகவே இவர்களைச் சமூக உணர்வு அற்றவர் என்றோ மார்க்சியரின் புரிதல்தான் மிகத் துல்லியமானது என்றோ நான் கருதவில்லை. இவர்களிடமிருந்து கலையுணர்வை கலைநேர்த்தியை இடதுசாரிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் என் இடையறாத வற்புறுத்தல். மற்றபடி மார்க்சியர் வற்புறுத்தும் வர்க்கப் பார்வை என்பதனுள் அவர்களின் அரசியல் பார்வை மட்டுமே மேலோங்கி இருப்பது எனக்கு உடன்பாடில்லை. கூடியவரை மனித வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களும் இலக்கியப் படைப்பின் கருப்பொருள் ஆவதை நான் பெரிதும் மதிக்கிறேன். டி.செல்வராசின் மலரும் சருகும், தேனீர் ஆகிய நாவல்களைப் பெரிதும் பாராட்டினேன். மூலதனம் நாவலை என்னால் பாராட்ட முடியவில்லை. சின்னப்ப பாரதியின் தாகம் நாவலின் படைப்புத் திறன் அவரது பிற நாவல்களில் இல்லை. சங்கம் நாவலின் படைப்புச் செழுமை நாவலின் இறுதியில் சீர்குலைந்து விடுகிறது. பொன்னீலனின் கரிசல் நாவலை விட படைப்புத் தரத்தில் மேலோங்கியது அவரின் கொள்ளைகாரர் நாவல். அவரது புதிய தரிசனங்கள் நாவலை நான் மதித்துப் பாராட்டிய அளவுக்கு கட்சி மார்க்சியர் எவரும் பாராட்டவில்லை. புதுக் கவிதையின் எழுச்சியில் வானம்பாடிகள் பங்கு பெற்றதை காலம் கழித்தே கட்சி மார்க்சியர் ஒப்புக்கொண்டனர். முற்றான வர்க்க வரையறைகளில் மனித வாழ்வை குறுக்க முடியாது. வர்கப் போராட்டம் இல்லாமல் வரலாற்றில் இயக்கம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டுதான் இவ்வாறு கூறுகிறேன். கலையுணர்வு என்பது மனித ஆளுமையின் ஒரு முக்கியக் கூறு. கலை, இலக்கியங்கள் முதலியனவெல்லாம் மேல் கட்டுமானத்தின் கூறுகள் மட்டுமே எனச் சொல்லி மனித வாழ்விலிருந்து இவற்றின் முக்கியத்துவத்தை குறைத்துப் பேசமுடியாது. சிந்தனை மனிதனை ஆட்கொள்ளும் போது அதுவே ஒரு பொருளாதாய சக்தியாக மாறுகிறது என்று மார்க்ஸ் கூறுவதை நாம் மறுக்க முடியாது. இலக்கியம் முதலியனவற்றின் தனி ஆளுமை குறித்து ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். சில சந்தர்பங்களில் கலாச்சாரம் முதலிய மேல் கட்டுமானத்தின் கூறுகள் அடித்தளத்தையும் பாதிக்கும் என்ற கூற்றையும் நாம் மறுப்பதற்கில்லை. கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்ற கூற்றுகள் ஒன்றை ஒன்று மறுப்பன அல்ல. க.நா.சு முதலிய மாபெரும் படைபாளிகள் நவீனத் தமிழிலக்கியத்தின் ஆற்றல் மிக்க ஒரு பகுதியை உருவாக்கியவர்கள். தலித்தியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் முதலிய கருத்தியல்களிலிருந்து மார்க்சியர் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. தாஸ்தாயெவ்ஸ்கியை மறுத்து விட்டு டால்ஸ்டாயை கார்க்கி முதலியவர்களை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. கட்சியின் இறுக்கமான பார்வையிலிருந்து விடுபட்டதன் காரணமாகவே இன்று மார்க்சிய வட்டாரத்திலும் மிகச் சிறந்த படைப்பாளிகளை நாம் பெற்றிருக்கிறோம். வரலாறு இத்தகைய பார்வையை நமக்குக் கற்பிக்கிறது. கலை இலக்கியத்தில் தத்துவப் பார்வையை நீங்கள் தொடர்ந்து வற்புறுத்துவதன் தேவை என்ன? மனித வாழ்வை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்வதன் மூலமே சிறந்த கலை இலக்கியப் படைப்புகள் எழ முடியும். இவ்வகையில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பேரிலக்கியங்களை நாம் பொருள் படுத்துகிறோம். சிலப்பதிகாரத்தின் இறுதி காட்சி. எல்லாம் முடிந்த பிறது கண்ணகி காட்சி கொடுத்து ஒன்றைச் சொல்கிறாள். தென்னவன் தீதிலன் தேவர்கோன் நல் விருந்தாயினன். நான் அவன் மகள் என்கிறாள். கோவலன் கொலைக்கு காரணமானவன் என கருதப்பட்டவன் பாண்டியன். குறிப்பிட்ட சூழலின் அழுத்தம் காரணமாக அவன் தவறு செய்தான். அவன் செய்த தவறுக்கு முதற்காரணம் அவன் சூழல் ஒருவகையில் அச்சூழலே அவனைத் தண்டித்திருக்கிறது. அவன் இப்போது குற்றவாளியில்லை. தான் செய்த தீமையை உணர்ந்து கொண்ட பாண்டியன் அத்தீமையிலிருந்து விடுபட்டவனாகிறான். ஆன் இப்போது தேவர் கோனாகிய இந்திரனின் விருந்தினன். இதைப் போலத்தான் போர்க்களத்தில் ராமனின் அம்பு துளைத்துச் செத்த போதே ராவணண் நெஞ்சிலிருந்த தீமை அழிந்தது. ராவணன் முகம் செந்தாமரை மலர் போல திகழ்ந்தது என்கிறார் கம்பர். இந்த அளவுக்கு இலக்கியம் மனித வாழ்வை தோண்டித் துருவி ஆராய வேண்டும். வாழ்வின் இறுதித் தளம் மெய்யியல். பெரும் கவிஞர்கள் கலைஞர்கள் என்பவர்கள் அவர்களின் ஆழத்தில் மெய்யியலாளர்கள். சமயம் எனபது கூட வாழ்வின் இறுதித் தளமன்று. மெய்யியல் பார்வைதான் இறுதித் தளம்.
தொல்காப்பியர் முதல், கரு, உரி என இலக்கியம் படைப்பின் மூன்று தளங்கள் பற்றிப் பேசுகிறார். நிலமும் பொழுதும் முதல் தளம். இடத்திலிருந்தும் காலத்திலிருந்தும் தோன்றும் அல்லது இடத்தோடும் காலத்தோடும் இயங்குகிற மனித நாகரிகம், அரசியல், பொருளியல், என்ற ஆக்கங்கள், இவற்றின் பரிமாணங்கள், சிக்கல்கள், முரண்பாடுகள் இவற்றுக்கு எதிராக மனிதனின் போராட்டங்கள் இவை அனைத்தும் இரண்டாவது தளம். மூன்றாவது தளம் மனித வாழ்வுக்கு அர்த்தம் என்ன? அழகு என்ன? வாழ்வின் மேன்மை என்ன? தரம் என்ன? என்பது பற்றிய பார்வை. சுருக்கமாக சொன்னால் சமத்துவம், சமதர்மம் பேரிலக்கியத்திற்கு இந்த இறுதித் தளம் இல்லாமல் முடியாது. இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து கலைகளுக்கும் இந்த உண்மை பொருந்தும் என்றே நம்புகிறேன். இங்கு டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி, சேக்ஸ்பியர், பாரதி, டி.எஸ். எலியட், பிக்காசோ, முதலியவர்களை நினைத்துக் கொள்ளலாம். நவீன இலக்கியத்திலிருந்தும் இங்கு சிலவற்றை நாம் சொல்ல முடியும். க.நா.சு பொய்த்தேவு நாவலின் இறுதியில் சோமு என்னவாகிறார். வாழ்வின் மேடு பள்ளங்கள் மான அவமானங்கள், செல்வம், வறுமை ஏமாற்று தண்டனை எல்லாவற்றையும் விலக்கி பண்டாரமாகிறார். நாவலின் இறுதியில் இடம் பெறுகிற தத்துவ தரிசனம் இது. ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் நாவலில் ஷென்றி அடிப்படையில் ஒரு சித்தன். செல்வம் முதலிய அனைத்துப் பற்றுகளையும் இவன் துறந்த நிலையில் இவன் பார்வை பட்ட போது வைத்தியகாரி ஒரு நல்ல பெண்ணாகிறாள். ஜெயகாந்தனின் கங்காவின் இறுதி கதி என்னவென்பது நமக்குத் தெரியும். விகாரமும் வெறியும் கலந்த சமூகச் சூழல் கங்காவைத் துரத்திச் செல்ல இறுதியில் கங்கை ஆற்றில் அவள் தன் விடுதலையை தேடிக் கொள்கிறாள். தி.ஜானகிராமனின் படைப்புகளும் இத்தகைய மெய்யியல் பார்வையின் ஊடுறுவலோடு நடைபெறுகின்றன. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் ஆதிக்கங்களை கனமாக உருவாக்கிய பார்ப்பனியம் அழிந்தொழிய இறுதியில் இயற்கையோடு இணைந்து வாழ்கிற ஆதிவாசிகள் தட்டிச் செல்கின்றனர். மெய்யியல் தளம் இல்லாமல் பேரிலக்கியங்கள் இல்லை. மேலைத் தத்துவ மரபுக்கும் கீழைத் தத்துவ மரபுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள் என்ன? இவ்விரு மரபுகளும் இன்று ஒத்துச் செல்ல இயலுமா? கீழைத் தத்துவ மரபில் சீன தத்துவ மரபு உட்பட பல இருந்த போதிலும் இந்திய தத்துவ மரபு பற்றி பேசுவது மட்டுமே இங்கு நாம் பேசுவது பொருந்தும். இந்தியாவில் மதத்திற்கு சேவை செய்யதான் தத்துவம் இருந்திருக்கிறது. அதாவது மனிதன் என்ற வகையில் வாழ்வின் துயரங்களிலிருந்து விடுபட்டு இறைவனோடு நாம் கலந்து கொள்ள வேண்டும். அல்லது மனிதப் பிறப்பிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும். இறைவனை ஒப்புக்கொள்கிற இந்திய மதங்களும் ஒப்புக் கொள்ளாமல் ஆன்மா என்றும் பிறப்பிலிருந்து விடுதலை பெற்றுப் பிறவா நிலை வேண்டும் என்னும் புத்த, சமண சமயங்களும் மண்ணுலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெறுவதைத் தான் முதன்மையாக பேசின. இதனை ஒட்டியே பாவம் புண்ணியம் மேலுகம் நரகம் முன்வினை தீவினை விதி, பல்வகைப் பிறப்பு, மாயை, மலம், என்பவை பற்றிப் பேசின. இத்தகைய அணுகல் முறை காரணமாக மண்ணுலக வாழ்வு வரலாறு பொருளியல் ஏற்றத் தாழ்வு முதலியவை பற்றி இவர்கள் ஆராயவில்லை. ஆணுக்குத்தான் துறவு, மோட்சம், தத்துவ ஆராய்சி முதலியன தேவை பெண்ணுக்கு இவை இல்லை காமம், பொருளோடு உறவு முதலியன தீமையானவை. ஆன்மா முற்றிலும் தூய்மையானது. இறைவனோடு ஒன்றியது புலன்கள் பொய்யானவை. தர்க்கம் முதலிய அறிவு தேவை. இவ்வகை அறிவால் இறைவனை, ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டும் முன்வினை பயனாக இப்பிறப்பில் ஒருவன் சாதி அமைப்புக்குள் மேல் நிலையிலோ அல்லது கீழ் நிலையிலோ பிறக்கிறான். மண்ணுலக வாழ்வு என்பது ஒரு உயிர் தீவினைகளிலிருந்து விலகிக் கொள்ளும் முயற்சி மேற்கொள்கிற ஓர் இடைக்கால உறைவிடம். பொதுவாக தத்துவம் பற்றிய பாடநூல்கள் இப்படித்தான் இந்தியத் தத்துவம் பற்றிச் சொல்ல முற்படுகின்றன. இவ்வகை போக்குக்கு எதிராக சார்வாகம், சாங்கியம்., வைஷேடிகம் முதலிய தரிசனங்களும் தொடக்கம் முதலே இருந்தன. என்றாலும் கி.பி. 8ம் நூற்றாண்டு வாக்கில் மதவாதத்திற்கு இடம் கொடுத்து மேன்மையிழந்தன. மேற்குலகிலும் கிரிஸ்துவம் போன்ற மதத்தின் ஆதிக்கம் தொடக்க காலத்தில் இருந்த போதும் கி.பி 12, 13ம் நூற்றாண்டுக்குப் பிறகு கடல் பயணங்கள், அறிவியல் ஆய்வுகள், தொழிற்புரட்சி முதலியன ஏற்பட்ட நிலையில் மதவாதம் என்பது தத்துவ ஆய்வுக்கு இடம் கொடுத்து தன் இடத்தை இழந்தது. மண்ணுலகம், பிரபஞ்சம், தாவரங்கள், உயிர்வகைகள், அரசதிகாரம்,பொருளியல் உறவுகள் ,வரலாறு,கலை, இலக்கியம் முதலியவை பற்றிய அறிவு வகைப்பட்ட ஆய்வுகள் முதன்மை பெற்றன. அறிவியல் ஆய்வுக்கான கருவிகள் கண்டறியபட்டன. மனிதன் தன் புலன்களைக் கொண்டு, கருவிகளைக்கொண்டு, தன் அறிவைக்கொண்டு, தர்க்கத்தின் மூலம் எந்த அளவுக்கு உண்மைகளை பெறமுடியும் என்ற முறையில் உலகியல் சார்ந்த ஆய்வுகள் முதன்மை பெற்றன. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று தொடங்கி வகை வகையான ஆய்வுகள் நடை பெற்றன. பரிணாம கோட்பாடுகள் உட்பட எத்தனையோ கண்டுபிடிப்புகள் நடைபெற்றன நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன் என்றார் தெகார்த்தே நிகழ்வுகள் தான் உண்மையானவை, அதற்கப்பால் எவை உள்ளன என்பது எனக்கு தெரியாது என்றார் ஹியும். அனுபவங்களுக்கு அப்பால் எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றனர் சில ஆய்வறிஞர்கள். கடவுள் உயிர்களை படைக்கவில்லை. உயிர்கள் பரிணாம முறையில் வளர்ச்சி பெற்றுள்ளன. பிரபஞ்ச இயக்கமும் இப்படித்தான் நடைபெறுகிறது. மத குருவவை நம்ப வேண்டியதில்லை. நாமே கடவுளோடு உறவுகொள்ள முடியும். கடவுள் இல்லாமல் மனிதன் வாழ்ந்து விட முடியும். அரசன்,மதகுரு, நிலப்பிரபு, முதலாளி இல்லாமலும் மக்கள் தமக்கான வாழ்வை படைத்துக் கொள்ள முடியும் வரலாற்றின் வழியேதான் மனிதன் நாகரிகத்தை பெற்றான். மேற்குலகம் இப்படித்தான் மதங்களை ஒதுக்கிவிட்டு தத்துவ ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. ஹெகலுக்கு பிரம்மம் வேண்டியிருந்தது. காண்டைப் பொறுத்தவரை புற உலகம் என ஒன்று. அக, உலகம் என்பது இன்னொன்று. ஆக, இருவகை உலகங்கள் தேவைப்பட்டன நீட்ஷேக்குக் கடவுள் இல்லை. இருத்தலியல் வாதிகளை பொருத்தவரை பிரபஞ்சத்திற்கு, மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை, எல்லாமே தற்செயல் நிகழ்ச்சிகள். வாழ்வுக்கு அர்த்தம் என ஏதாவது ஒன்றை தனி மனிதன்தான் வைத்துக்கொல்கிறான். புலன்களின் நீட்சிதான் கருவிகள். மனிதர் தமக்கான உலகை படைத்துக்கொள்ள முடியும். மனிதத்துயரங்கள் தனியுடைமை, அரசதிகாரம் முதலியவற்றின் விளைவுகள் சமதர்மம் என்ற உலகில் இவற்றுக்கு இடமில்லை என மார்க்ஸ் கூறினார். தத்துவங்கள் இதுவரை உலகத்தை விளக்கின இப்போது தேவைப்படுவது உலகை மாற்றி அமைப்பதுதான். மார்க்ஸ் கருத்துப்படி தத்துவத்திற்கும் தேவையில்லாத உலகம் என ஒன்று உருவாக முடியும். மேலைத் தத்துவ இயலின் ஆய்வு முறைகளில் இந்திய மதங்களையும் சாங்கியம் முதலிய தரிசனங்களையும் நாம் இன்று ஆய்வுக்கு உட்படுத்த முடியும் கடவுள், ஆன்மா முதலியவை வரலற்றுச் சூழலில் மனிதர் படைத்துக் கொண்ட கருத்தாக்கங்கள் மண்ணூலகம்தான் நமக்கான உலகம். மனிதத் துயரங்களூக்கு எவை காரணங்கள் என்பவை இப்பொழுது நமக்குத் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளன. சமதர்மம்தான்,சமத்துவம்தான் மனிதர் வாழ்வுக்கு ஆதாரமாக முடியும். புத்தரரோ, சங்கரரோ தம் வரலாற்றுச் சூழலுக்கு, வர்க்க ஏற்றத் தாழ்வுகளூக்கு தம் கால மாயைகளுக்குக் கைட்டுபட்டுத் தான் இருந்தனர். இன்றும் புதியவகை மாயைகள் நமக்குள் திணீக்கப்படுகின்றன. தேசம், உலகமயம், அணு ஆயுதம், நாகரிகம் என்று எத்தனையோ வகை வகையான திரைகளோடுதான் நாம் வாழ்கிறோம். பழைய உலகத்தை, ஆதிக்க உலகத்தை மீண்டும் தோற்றுவிக்கிற சக்திகளுக்கு இன்றும் மதங்களும் பலவகைக் கருத்தியல்களும் ஆதிக்கங்களும் ஒத்துழைக்கின்றன. இவற்றோடு போராடி இவற்றை வென்று நமக்கான உலகத்தைப் படைத்துக் கொள்வதற்குத்தான் மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் நமக்குள்ளூம் நாம் புதுப்பித்துக் கொள்கிறோம்.
தொடரும்...

Sunday, October 4, 2009

கோவை ஞானி – நேர் காணல்

தமிழும் தமிழ் நிமித்தமும்... சந்திப்பு: இளங்கோ கிருஷ்ணன், இசை, சுரேஷ்வரன் கோவை ஞானி என்ற பெயரில் எழுதி வரும் திரு.பழனிச்சாமி அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த 40 ஆண்டு காலமாக தமிழின் அறிவுச் சூழலில் தீவிரமாக இயங்கி வருபவர். தமிழாசிரியர், மார்க்சியர், கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், இதழியலாளர், சமூக விஞ்ஞானி, தத்துவ ஆர்வலர், சித்தாந்த விமர்சகர், அரசியல் போராளி எனும் பன்முக ஆளுமைகளோடு வினையாற்றிக் கொண்டிருக்கும் இவரின் கருத்துகள் தனித்துவமானவை மட்டுமல்ல தமிழ் சூழலிலும் உலக அரங்கிலும் மிக முக்கியமானவையும் ஆகும். கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல் போன்ற துறைகளில் இவரது ஆழமான அவதானங்கள் பல முக்கிய திறப்புகளை நமக்கு அளிக்க வல்லவை. கண் பார்வையற்ற நிலையிலும் இன்னமும் அதே தீவிரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் அவரை நமது ‘கருக்கல்’ ‘இதழ் 6’க்காக கோவையின் புறநகரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியது... இலக்கிய விமர்சனத்தை தங்கள் துறையாக தேர்வு செய்து கொண்டதன் காரணம், அதன் பின்னணி என்ன? எந்த ஒரு மனிதனும் தன் வாழ்வை, தன் சூழலை, தன் உறவுகளை தான் கற்பதை, தனக்கும் கற்பிக்கபடுவதை ஆய்வு செய்யாமல் இருக்க முடியாது. வாழ்க்கை நமக்குள் எத்தனையோ கேள்விகளை ஒவ்வொரு நாளும் எழுப்புகிறது. இவற்றுக்கு முகம் கொடுக்காமல் தான் கற்பதைம் தனக்கு கற்பிக்கபடுவதை அப்படியே நம்புகிறவன் வாழ்க்கை செறிவு பெறாது. அர்த்தம் உடையதாகாது. சிறு வயதிலிருந்தே எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்தன. நான் கிராமத்தில் வாழ்ந்தேன். உழவர்களும் நெசவாளிகளும் எங்களைச் சூழ இருந்தார்கள். வறுமை எங்களைச் சூழ இருந்தது. இரண்டாவது உலகப் போர் முடிந்த காலம். தேசத்தில் எத்தனையோ பிரச்சனைகள். இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள வாழ்க்கையை கற்க வேண்டும். வரலாறு கற்க வேண்டும். தத்துவம் என்றும் அறிவியல் என்றும் பலவற்றை தேடிக் தேடிக் கற்க வேண்டும். நான் தொடர்ந்து கற்றேன். மேற்கல்வி கற்க எனக்கு கிடைத்த வாய்ப்பை பெருமளவு பயன்படுத்திக் கொண்டேன். தமிழோடு ஆங்கிலமும் சிறப்பாக கற்றேன். கடவுளைப் பற்றி எனக்கு நிறையக் கேள்விகள் தியானத்திலும் ஈடுபட்டேன். இறுதியில் கடவுள் என்பது ஒரு செறிவான கருத்தாக்கம் என்று புரிந்து கொண்டேன். நான் தமிழிலக்கிய மாணவன். எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் என்றும் என் வணக்கத்திற்குரியவர்கள். மார்க்சியம் கற்கவும் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. தொடக்கத்தில் நானும் கவிதை எழுதினேன். சிறுகதை, நாவல் என்றும் சில முயற்சிகளைச் செய்தேன். உணர்வுக் கொந்தளிப்பில் என்னால் வாழ முடியாது. வாழ்வின் அடிப்படை உண்மைகளை தேடித் தேடி கற்பதில்தான், புரிந்து கொள்வதில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. இந்த அளவுக்கு நான் வரலாறு முதலியவற்றை ஆழமாக கற்றேன். இறுதியில் திறனாய்வில்தான் என் முழு ஆற்றலையும் ஈடுபடுத்த வேண்டும் என முடிவு செய்தேன். தமிழக் சூழலில் சி.சு.செல்லப்பா தொடங்கி எத்தனையோ பெரியவர்களோடு நல்லுறவு கொண்டேன். எனக்கு வாய்த்த நண்பர்களிடமிருந்தும் நிறையக் கற்றேன். மனதை எப்போதும் திறந்து வைத்திருக்கிறேன். இலக்கியம் என்று தொடங்கினால் வரலாறு என்றும் தத்துவம் என்றும் கற்பதன் மூலமே இலக்கியத்தை புரிந்து கொள்ள முடியும். தன்முனைப்பு அறிவுத்தேடலுக்கு எவ்வகையிலும் உதவாது. எனக்குள் வரும் அறிவு என்பது காலங்காலமாக பலகோடி மனிதர்கள் பலதுறைகளில் சேகரித்த அனுபவங்களின் ஒரு சிறு துளி. கற்றது கைமண்ணளவு என்றாலும் கைக்குள் அடங்கும் மணல் துகளையும் எண்ணி முடிக்க முடியாது. என் அறிவு என்பது என்னிடம் இடம் பெற்றுள்ள சமூகத்தின் அறிவு. நான் தனியனில்லை. மார்க்சியம்தான் எனக்கு வாழ்க்கை, வரலாறு முதலிய எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து பார்க்கிற பார்வையை அது தந்திருக்கிறது. எனக்கான திறனாய்வுப் பார்வை எனபது இதுதான். கா.நா.சு. ரசனை அடிப்படையில் சில முடிவுக்ளை முன் வைத்தார். வானமாமலை ஆய்வின் அடிப்படையில் இலக்கியம் சார்ந்த சில முடிவுகளை முன் வைத்தார். இந்த இரு வகை இலக்கிய ஆக்கம் பற்றி உங்கள் கருத்தென்ன? இவர்களுக்கு பின் வந்த இலக்கிய போக்கு என நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்? கா.நா.சு அவர்களை ஒரு குறியீடு எனக் கொண்டு அவர் சார்ந்த இலக்கிய போக்கு பற்றியும் பேசலாம். அதே போல வானமாமலை அவர்களை ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு முற்போக்கு இலக்கியம் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும். கா.நா.சுவும் அவர்களைச் சார்ந்தவர்களும் இலக்கியத்தில் ரசனை, கலை நேர்த்தி முதலியவற்றுக்கு அழுத்தம் தந்தார்கள். இவர்களது படைப்புகளில் தனி மனிதருக்கு முக்கியதுவம் இருந்தது எனச் சொல்லலாம். குடும்பச் சூழலில் ஆண், பெண் உறவு இவர்களுக்கு முக்கியம். இவர்களது படைப்புகளில் சமூகப் பிண்ணனி பற்றி விவரங்கள் தரப்படும். இவர்களது படைப்புகளின் வழியே பாத்திரங்கள் உலவும் வரலாற்றுச் சூழல் பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடியும். ஆண், பெண் உறவில் காதலும், தியாகமும் சிறப்பான இடம் பெறுவதைப் போலவே காமத்திற்கும் இடம் உண்டு. கலை நேர்த்தி இவர்களைப் பொறுத்த வரை முதன்மையானது. இவர்களுக்கு முற்பட்ட இலக்கியவாதிகளோடு ஒப்பிடும் போது இவர்களின் படைப்புகளில் சமகாலச் சிக்கல் கூடுதலாக இடம் பெற்றன. மனித நேயத்தை இவர்கள் மதித்தார்கள். அரசு, முதலாளியம், உடமை ஆகியவை பற்றி விமர்சனம் இல்லை. சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றை இவர்கள் கண்டு கொள்ளவில்லை எனினும் இவர்களது படைப்புகள் நவீன இலக்கியம் என்ற முறையில் மரியாதைக்குரியவை. வானமாமலை முதலிய மார்க்சியரைப் பொறுத்தவரை மனித வாழ்வின் சிக்கல்கள், போராட்டங்கள் முதலியவற்றை, சமகால அரசியல், பொருளியல் முதலியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுச்சூழலில் வைத்துப் பார்ப்பதில் துல்லியமான விவரிப்புகள் தேவை. அரசு ஆதிக்கம், நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஆகியவர்களின் சுரண்டல் இவற்றுக்கு எதிராக உழைக்கும் மக்களின் போராட்டம் இவை குறித்து படைப்பாளிகளுக்கு அக்கறை தேவை. மனித மனதின் சிக்கல் என்று தனியாக எதுவும் இல்லை. போராட்டங்கள் மூலமே மனிதச் சிக்கல் தீர முடியும். இலக்கியம் என்பது ரசனைக்கானதாக மட்டும் இருக்க முடியாது. மனித விடுதலைதான் இலக்கியத்தின் கருப்பொருளாக இருக்க முடியும். காமம் முதலிய உளவியல் சிக்கலுக்கு அழுத்தம் தருவதன் மூலம் வரலாற்றுச் சுழலில் மனித இருப்புக்கான முக்கியத்தை குறைக்க நேரிடும். தேச விடுதலை இயக்கத்தில் பின்னடைவு நேர்ந்த 1930 காலச் சூழலில் நவீன இலக்கிய ஆக்கத்திற்கான தேவையை முன்னிறுத்தி மணிக்கொடி தோன்றியது. மணிக்கொடி இயக்கதின் வீச்சு கா.நா.சு முதலியவர்கள் மூலம் சில 10 ஆண்டுகளுக்கு உறுதியாக தொடர்ந்தது. எழுத்து, கசடதபற – புதுக்கவிதை, நவீன ஓவியம், நவீன நாடகங்கள் முதலியவற்றை உள்ளடக்கிய இயக்கமென இதை வரையறுக்க முடியும். இவர்களில் பலர் பிராமணர்களாகவும் ஆங்கில இலக்கியதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்தார்கள். நவீன உலகப்பார்வை ஓரளவுக்கேனும் இவர்களுக்கு இருந்தது. திராவிட இயக்கத்தோடும் மார்க்சியத்தோடும் இவர்கள் உடன்பாடு கொண்டவர்களாக இல்லை. இவர்களுக்கு மனதின் விடுதலைதான் முதன்மையான பிரச்சனை. இவர்களோடு ஒப்பிடும் போது மார்க்சியரைப் பொறுத்தவரை மனித விடுதலைக்கே முக்கியத்துவம் தந்தனர். 1980க்குப் பிறகு, இலக்கியப் போக்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன சமூக வாழ்வில் சாதியத்தின் ஆதிக்ககத்தை தகர்க்க வேண்டும் என்ற நோக்கில் தலித்தியமும் ஆணாதிக்கத்தை தக்ர்க்கும் நோக்கில் பெண்ணியமும் படைப்பிலக்கியத்தில் முன்னுக்கு வந்தன. அரசியல், பொருளியல் சமூகம் ஆகியவற்றின் மையத்தில் இயங்கும் அதிகாரத்தை தகர்க்கும் நோக்கில் பின் நவீனத்துவ கருத்தியல் முன்னுக்கு வந்தது. தற்கால தமிழிலக்கியத்தில் இது மூன்றாவது முக்கியப் போக்கு. முதல் இரு வகைப் போக்கிஉகளிலிருந்தும் இப்போக்கு பெரிதும் முரண்படுவதோடு முந்திய இருவகை இலக்கியத்துள்ளும் செயல்படும் மையங்களை இந்தப் புதிய போக்கு தகர்க்கவும் செய்கிறது. தற்கால தமிழிலக்கியப் படைப்பாளிகள் மற்றும் திறனாய்வாளர்கள் செய்யவேண்டிய முதன்மையான பணி என எதைக் கருதுகிறீர்கள். எந்தப் ஒரு படைப்பாளியும் தன் சமகால வாழ்கையிலிருந்தும் வரலாறு, பொருளியல் முதலிய சூழலிலிருந்தும் தன்னை வேறுபட்டவனாக கருத முடியாது. தனக்கன வாழ்வையும் படைப்பாளி இந்த சூழலிலிருந்துதான் பெறுகிறான். தனக்கன சூழல் என்று தேடிச் செல்கிற போது தன் குடும்பம், கல்வி, தனைச் சூழ இருக்கிற தொழில்வகை, உயிரினங்கள், இயற்கை, தன காலச் சமூகம் இப்படித் தொடர்ந்து தேடிச் செல்கிற போது நெடுங்கால வரலாறு இறுதியில் பிரபஞ்சம் அளவுக்குத் தன் தேடலை தொடர்ந்தாக வேண்டும். வாழ்வின் முரண்பாடுகளுக்குள் இவனும் இருக்கிறான். வாழ்வின் வரலாற்றின் சிக்கல்கள் இவனுக்குள்ளும்தான் மோதுகின்றன. இவை அவனுக்கு தருவது வேதனை. இவற்றிலிருந்து இவனுக்கு விடுதலை தேவை. இவனுக்கான விடுதலை என்பது இறுதியில் சமூகத்தின் விடுதலை. உலக அளவில் விரிவு பெற்றுள்ள ஆதிக்கங்கள், தன் ஆதிக்கத்திற்குள் அகப்பட மனிதர்களை ஒடுக்கி, சுரண்டி, பிளவுபடுத்தி, நொறுக்கி, மாயைகளில் போதைகளில் ஆழ்த்தி, இப்படி அவர்களை பலவீனர்களாக ஆக்குவதன் மூலம் ஆதிக்கங்கள் தம்மை வலுப்படுத்திக் கொள்கின்றன. இவற்றின் தகர்வின் மூலமே மனித விடுதலை, பேரன்பு, பரவசம், சமத்துவம், சமதர்மம், முதலியவை சாத்தியம். இத்தகைய பெருவாழ்வை தனக்குள் தாங்கித்தான் ஒரு படைப்பாளி தன்னையும் கலை இலக்கியங்களையும் படைக்கிறான். இன்றைய தமிழ்சூழலிலும் இத்தகையவன்தான் நமக்கான படைப்பாளி, இலக்கியவாதி. இன்றைய தமிழ் மக்களின் வாழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட நெருக்கடிகள், சிக்கல்கள் என்பன இருப்பது குறித்து தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறையுடைய அனைவரும் சிந்திக்க வேண்டும். உடனடியாக எனக்குத் தோன்றுகிற சிலவற்றைக் குறித்து இங்கு சொல்ல விரும்புகிறேன். திருப்பூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சாயாப்பட்டறைக்ளின் இரசாயனக் கழிவு நீரால் சுற்றுப் பகுதியிலுள்ள உழவர்களுக்கும் திருப்பூரில் வாழ்கிற மக்களுக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கடுமையானவை. தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திருப்பூருக்கு வந்து வசதி குறைவான மற்றும் மாசு மிக்க சூழலில் 10, 12 மணி நேரம் –வயிற்றை நிரப்ப வேண்டி- நிர்வாகத்தினரின் கெடுபிடிகளுக்கு உட்பட்டு தன்மானம் இழந்து, மனித மாண்பு எது எனத்தெரியாமல் பலவகையான மனக்கோளாறுகளுக்கு உள்ளாகி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். திருப்பூர் நகரத்தில் குடி தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற பொறுப்புக்ளை நிறைவேற்றவும் நகரத்தை நிர்வாகம் செய்வதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட மார்வாடிகள் முதலியவர்கள் உள்நுழைவுக்கும் உட்பட்டு மக்கள் வாழ வேண்டியிருக்கிறது. அந்நியச் செலவாணி கிடைக்கிறது என்பதற்காக மைய அரசும் மாநில அரசும் திருப்பூரை போன்ற பொருளியல், நிர்வாகம் முதலிய சூழலை இன்னும் எத்தனையோ பகுதிகளில் ஏற்படுத்தவும் தீர்மானித்திருக்கிறது. இத்தகைய சூழலில் பெண்கள், குழந்தைகள், உழவர்கள், இளைஞர்கள் முதலியவர்கள் வாழ்க்கை என்னாவது? உலகமயமாதல் என்ற கொடுமையின் விளைவுக்குத் திருப்பூர் ஒரு நல்ல சான்று. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதற்கும் இத்தகைய வாழ்வியல் நெருக்கடிக்குத் திருப்பூர் ஒரு குறியீடு. திருப்பூரை வைத்து ஆயிரக்கணக்கான சிறுகதைகள், நூற்றுக் கணக்கான நாவல்கள், வாழ்வியல் நெருக்கடிகள் குறித்து எண்ணற்ற ஆய்வுகளைச் செய்ய முடியும். நம் தொன்மையான வரலாறு என்னவாயிற்று? நமக்கு என்ன எதிர்காலம் விதிக்கப்பட்டிருக்கிறது. என்பது பற்றியெல்லாம் இங்கு எவ்வளவோ செய்ய முடியும். இத்தகைய நெருக்கடி மிக்க சூழலில் தான் ஜெய்வாபாய் என்ற மாபெரும் அற்புதமான பள்ளி நடைபெறுகிறது. தாய்த்தமிழ்ப்பள்ளி நடைப்பெறுகிறது. சில இலக்கிய அமைப்புகள் விடாப்பிடியாக செயல்படுகின்றன. தொழிற்சங்க இயக்கங்கள் எப்படியெல்லாமோ தங்களைத் தக்கவைத்துக் கொள்கின்றன. திருப்பூரின் கதையை ஒரு மகாபாரதம் போல் விரிவாக எழுத முடியும். நொய்யல், ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு என்று எவ்வளோ சொல்லமுடியும். நம் கால வாழ்வுக்குத் திருப்பூர் ஒரு குறியீடு. இன்னும் இங்கு ஒன்றை நான் சொல்ல வேண்டும் தமிழகத்தில் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கு இடையில் மாபெரும் வளர்ச்சி கண்டு பிறகு தமக்குள்ளேயே முரண்பாடுகள் அதிகரித்து மக்கள் வாழ்வியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் வெறு வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு இன்னும் மிதப்போடு வாழ்கின்ற இயக்கங்கள் சிலவற்றை சொல்லமுடியும். இவற்றில் ஒன்று திராவிட இயக்கம். இன்னொன்று மார்க்சிய இயக்கம். ஒவ்வொன்றிலும் எத்தனையோ பிரிவுகள், குழுக்கள். இவற்றோடு தம் வாழ்வை முற்றாக இணைத்துக் கொண்ட தோழர்கள். முன்பு சாதனை செய்து இன்று மனச்சுமையோடு வாழ்கிறவர்கள். இவர்களின் வாழ்க்கைக் கதைகள் நம்கால வரலாற்றுக்கு மிக முக்கியமான ஆவணங்களாக திகழ முடியும். இவர்கள் வாழ்க்கை குறித்து வெளிப்படையான கதைகள், நாவல்கள் படைக்கப்படவேண்டும். மூடி மறைத்துப் பயனில்லை. தமிழ் எழுத்தாளர்களுக்கு இப்படியொரு பெரும் களம் திறந்து கிடக்கிறது. இன்னும் ஒன்றைச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். தொமையான நாகரிகத்தைப் படைத்த தமிழன் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கிடையில் எவ்வாறு சீரழிந்தான் என்பது பற்றிய வரலாற்று நாவல்கல் நமக்கு வேண்டும். மன்னர்கள், படையெடுப்புகள், ஜமீந்தார்கள், பாளையக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று எத்தனையோ நிகழ்வுகள். கிராம சபைகள் அழிந்தன. சாதிகள், மதங்கள், ஊழல்கள் என்று எவ்வளவோ நடந்தன. இவற்றுக்கிடையில் தமிழன் தன்னை இழந்த கதை நமக்குத் தேவை. எதிரிகள் நம்மை அழித்தனர் என்று எழுதிப் பயனில்லை. எதிர்க்கு நாம் எப்படி விட்டுக் கொடுத்தோம் நம்மை நாமே அழித்துக் கொண்டோம், வாழ்வின் மையம் நமக்குள் எப்படித் தகர்ந்தது? இன்றைய தமிழன் எத்தனை வகைகளில் தனக்குள் முரண்பட்டுள்ளான், தனக்குள் பிளவுபட்டுள்ளான். இவன் யாருக்கெல்லாம் இடம் கொடுத்துத் தன்னை இழந்தான்? தன் மண்ணை தன் தொழில்களை, தன் கலைகளை தன் பெண்களை எப்படி இவன் கைவிட்டான். எதை இவன் இன்னும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான். இவனை மீட்டெடுக்க என்ன வழி? இந்தக் கதை நமக்கு வேண்டும். பார்ப்பனர் மட்டுமல்லாமல் அந்நியர்கள் நமக்குள் இன்னும் வாழ்கின்றனர். நம்மை ஆழத்தோண்டிப் பார்க்க வேண்டும். ஏனோ தானோ என்று கண்ட கதை, கேட்ட கதை என்று எழுதிப் பயனில்லை. நம் வரலாற்றை நாமே தோண்டிப்பார்த்து எழுத வேண்டும். தமிழ் தேசியம்தான் நமக்கான ஒரே அரசியல் என்று நான் நம்புகிறேன். தமிழ் மக்களின் வாழ்வும் மேன்மையும்தான் படைப்பளியின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு படிப்பும் உழைப்பும் தேவை. தமிழ் எழுத்தாளர்கள் குறைந்தது 20,30 பேர்களாவது ஓரிடத்தில் அமர்ந்து இவை பற்றியெல்லாம் முதலில் பேச வேண்டும். தமிழ் மக்கள் வாழ்வும் வரலாறும் எந்தப்புள்ளியில் இணைந்திருக்கின்றன அல்லது முரண்படுகின்றன எனக் கண்டு கொள்ள வேண்டும். இந்த வரலாற்றுக் கதையை தமிழகச் சூழலில் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு என்னவெல்லாம் படிக்க வேண்டும், யாரோடு உறவு கொள்ள வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதுவரையிலான தமிழ்ப்படைப்புகள் இந்த நோக்கில் என்ன செய்துள்ளன என்றும் ஆராய வேண்டும். தொடரும்....

Thursday, October 1, 2009

கவிதை

அகவன் குறிப்புகள் ஒன்று பைத்தியம்! ஒரு தாழம்பூவைப் போல மின்னலை நக்க விரும்பினாயோ என் அதிகுரங்கே, மனிதனே? அரவத்தின் வாயிலிருந்தோர் பிளவுச் செம்மின்னல் மின்னி மறைந்து கொண்டேயிருக்கிறது பச்சைக் குளமாய் காற்றில் ததும்பும் தாவரமே எப்போது கண்விழிக்கும் என் தாழை? இது ஒரு விதியாய் இருக்கக்கூடும்: ஒரு பைத்தியத்தின் கையிலுள்ள துப்பாக்கி பத்து எண்ணும் போது உங்களைச் சுடட்டும் 1,3,8,9,2,1,5,3... இன்னொன்று இந்தச் சொல் சூனியக்காரி, உன்மத்தி, நேசகி, ஆயுதம், முத்தம் பிறந்த குழந்தையின் முதல் எண்ணம் வீறிடல், தன் மலர்தல், பவித்ர மலர், ஆதியின் பரமுடிச்சு, முதல் சலனம், உயிர்த்துவம், துர்நாற்றம் நிறதேவதை, மனப்புயல் நெருப்பின் பின் பக்கக் குளிர்மை வலி, பரமசுகம், எல்லாமும், எதுவும் இல்லை - உண்டின்மை. மற்றொன்று
வெயிலின் மஞ்சள் வண்ண கடலில் திமிங்கலம் இந்த தேசம் மின்மினிகளை கொல்லும் பேய் வெளிச்சம் களையெடுப்பு வயற்பாடலின் இடைகமறல் நிலவிலிருந்து நிலவுக்கு செல்லும் பாதையில் பறக்கும் இரு மைனாக் குருவிகள் கண்மூட உன்னில் பறக்கும் சுடுவதற்கு துப்பாக்கி எடுக்கும் குருவிக்காரன் காலை கடிக்காமல் இருக்கும் எறும்பிற்கு அறவுணர்வு என்று பெயர் வைத்தவன் நீயா போமோயிஸ்ட் ஒரு பின் நவீன கலைஞனின் கல்லறை வாசகம்: இங்கு சிறுநீர் கழிக்கதீர்கள்
வேறொன்று
பசியே நான் செய்தவைகளில் மிகப்பெரிய தவறென்பேன் பசியே என் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்ததென்பேன் நீங்கள் நினைப்பது போல் பசி என்பது ஒன்றல்ல உண்மையில் ஒன்றிற்கு மேலுமல்ல பசியை ஒரு கொடூர மிருகமாய் உருவகித்து படம் வரைந்த தாடிக்காரனை வரைந்ததும் அது இறங்கி வந்து தின்றது அதை கொல்வதற்காக அவன் சகாக்கள் வேறொரு மிருகத்தை செய்ய அது பசியை தவிற அனைத்தையும் தின்றது பசியின் கதை ஒரு கதையல்ல உண்மையில் அது ஒன்றிற்கு மேலுமல்ல ஒரு பைத்தியத்தின் உறக்க நேர உளறல்: வாழ்வு தத்துவங்களின் மொழியில் வியாக்கியானப் படுத்தப்படுகிறது கித்துவங்களின் மொழியில் நிகழ்கிறது.
- நன்றி: கருக்கல்

பின் குறிப்பு: மேலே உள்ள படம் “மார்க் டான்சே” எனும் ஓவியர் வரைந்தது. யாராலும் செல்லவியலாத சென்றவர்கள் திரும்பவியலாத மலை உச்சியின் நுனியில் நின்றவாறு தெரிதாவும் பால் டி மானும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தத்துவங்களின் போதாமையை பேசும் இக்கவிதைக்கு இப்படம் பொருத்தமானது எனத் தோன்றியதால் இதை இணைத்துள்ளேன்.

Monday, September 14, 2009

நுண் கதைகள்


‘உயிர் எழுத்து’ செப்டம்பர் 2009 இதழில் வெளியான எனது நுண் கதைகள் நான்கையும் பிரசுரமாகாத ஒன்றையும் இங்கு பதிந்துள்ளேன். கவிதைக்கு மிக நெருக்கமான அல்லது கவிதை தன்மை நிறைந்த கதைகள் இவை என்பதால் இவைகளை நுண் கதைகள் என நான் அழைக்கிறேன். ‘பெர்ணாண்டோ சொராண்டினோ’ எனும் லத்தின் அமெரிக்க எழுதாளரின் கதைகளை படித்த போது இவ்வடிவத்தை நான் உணர்ந்தேன். அவரின் சில கதைகள் “ஆட்டுக் குட்டிகள் அளிக்கும் தண்டனை” எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இதை தமிழில் மொழிபெயர்த்தவர்: எம்.எஸ், பதிப்பகம்: காலச்சுவடு.


கீதாரி

பொலிகாளை போல் சீற்ற வெய்யில் வன்மம் கொண்டலையும் வெம்புழுதித் தரிசுகளில் தன் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்தாள் ஒரு கீதாரி. நெருஞ்சிப் பூக்களில் சிறு தேன் பருக வரும் பொடிப் பூச்சிகள் புதர்களில் நிழல் தேடும் கொடுவெய்யிலில் நீர் நிலைகள் யாவும் வற்றிவிட பேய் போல் அகாலத்தில் விரல் விரித்திருக்கும் மொட்டை வேல மரக் கிளைகளில் அமர்ந்திருக்கிறது பறவையற்றக் கூடொன்று. ஒற்றைப் பனை மர நிழலில் புளுந்தண்ணிக் கரைசல் பருகித்தன் உலர்ந்த உதடுகளை நனைத்துக் கொண்டாள். நாரைக் கூட்டமொன்று தெற்கிலிருந்து வடக்காக பறந்து போகக் கண்டவள் வடக்கே எங்கேனும் மழை பெய்கிறதோ என்றெண்ணி வானம் பார்த்தாள். வடக்கு மூலையில் வானம் ஈயத்தகடு போல இறுகிக் கிடந்தது. பெயருக்கும் ஒரு மேகமில்லை. ஆனால் அவளது நாசிகளில் ஒயாது மண் வாசனையடிதுக் கொண்டிருந்தது. வெய்யிலின் கடுமையோ சற்றும் குறைந்த பாடில்லை. திடீரென அவளது ஆநிரைகள் கத்தத் துவங்கிவிட்டன. சில மகிழ்சியில் துள்ளின. மண்வாசனை முன்னிலும் காட்டமாய்த் தன் நாசியில் படிவதையுணர்ந்தாள். பனைமர நிழல் காணாது போயிருக்க அருகிருந்த புற்றுக்குள் சுள்ளெரும்புகள் சாரை சாரையாய் அடையக் கண்டாள். மழையின் நிமித்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்க முன்னிலும் அதிகமாய் வெக்கை கூடுவதை புரிய முடியாதவள் பயத்திலும் வெப்பத்திலும் தொண்டையுலர தண்ணீர் தண்ணீர் என முனகினாள். மிகத்தொலைவில் வேனல்குளம் போல் தெரிந்த இடத்தில் சில ஆநிரைகள் நீர் பருகிக் கொண்டிருக்கப் பார்த்து வெறி பிடித்தவள் போல் அதை நோக்கி ஒடினாள். நாயுருவிச் செடிகள் கால்களைக் கிழிக்க அவள் செல்லச் செல்ல அந்தக் கானல் நீரோடு சேர்ந்து ஆநிரைகளும் நகர்ந்து கொண்டே சென்றன தன்னிலை மறந்து ஒடி மூச்சிரைக்க மயங்கிக் கீழே விழுந்தாள். கண் விழித்த போது தன் முகத்தில் பாலின் வாடையும் ஈரப் பிசுபிசுப்பும் நிறைந்திருக்க தன் ஆநிரைகள் தன்னை சுற்றி நின்றிருக்க கண்டாள். இதற்குள்ளாக பொழுது சாய்ந்திருந்தது. ஆநிரைகளைக் கூட்டிக் கொண்டு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது கீழ்வானத்தில் தொங்கிக் கொண்டிருந்த சூரியப் பழத்தையுண்ண மிக வேகமாய் மேற்கு நோக்கி ஒடத்துவங்கியது எவ்வளவு மேய்ந்தும் வயிறு நிறையாத ஒரு கன்றுக் குட்டி.


ஒற்றைக் குரல்

அவன் பாணன் செவியே மனமாய் வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒலியின் உதடுகள் பேசும் மர்ம மொழியின் வசீகரத்தில் புத்திசொக்கி திரிபவன். திசையெங்கும் ஒரு வானம்பாடியாய் சுற்றி அலைபவன். அலைதலின் வெம்மையில் நா வரள அவள் வீட்டு வாசலில் போய் நின்றான். தாயே தாகமாய் உள்ளது சிறிது நீர்க் கொடுங்கள் என்றவன் அவள் உள்ளே செல்லும் போதுதான் அந்த வினோதத்தை கவனித்தான். திரும்பி வந்தவளிடம் இரண்டு கால்களையும் நன்றாகவூன்றித்தானே நடக்கறீர்கள் என்று கேட்டான் பிறகு அவளின் கால் சிலம்புகளை வாங்கி காதருகே கொண்டுபோய் ஆட்டியாட்டி சோதித்தான். அவன் செய்கையின் காரணம் புரியாதவள் அவை மாணிக்கப் பரல்களால் ஆனவை என்றாள். அறிவேன் தாயே இவை மாணிக்க அரிகள் என ஜதி சொல்கிறது ஆனால் இரண்டிற்கும் ஒசை வேறுபடுகிறது இரண்டிலுமுள்ள பரல்களில் ஒன்றே ஒன்று மட்டும் ஒசை எழுப்புவதே இல்லை அந்த ஒன்றே ஒன்று மட்டும் தான் என்று ஆச்சர்யப்பட்டவன் அதை அவளிடமே திருப்பித் தர கை நழுவியது. அது தரையில் மோதிய போது அந்த நகரம் ஒரு முறை நடுங்கியது.


பத்ம வனம்

ரதத்தின் சகட ஒசை நிலமதிர அவன் அவ்வனத்தை அடைந்தான். அங்கிருந்த தாவரங்கள் ஆர்ப்பரித்தன. ஒரு மரம் சொன்னது மலய மாருதம் வீசும் போது வைரம் பாய்ந்த மரங்கள்தான் சந்தனவிருட்சமாகும் தங்கள் வரவால் இந்த வனமே சந்தனவனமானது வாருங்கள் வெற்றி வீரரே தங்களுக்கு வேண்டியதை வேட்டையாடுங்கள். அவன் பெருமிதம் விம்ம வனத்துள் சென்றான். தொலைவில் ஒரு மான் மருட்சியாய் ஒட அதைத் துரத்தினான் விடாதே முன்னேறு விடாதே முன்னேறு எல்லா மரங்களும் கூச்சலிட்டன. அவன் வனத்தின் ஆழத்துள் சென்று கொண்டே இருந்தான். திடிரென அந்த மான் ஒரு நரியாகியது. அவன் அதிர்ந்து சுற்றும் பார்த்தான் மொத்த வனமும் பெருங்குரலெடுத்து சிரித்த படி இருக்க மரங்கள் அவனை நோக்கி நெருங்கி வந்து வேர் கால்களால் நெரித்தன. அவன் ஒடத்துவங்கினான். திசைகள் தங்களைப் பூட்டிக் கொண்டன. வழி வழி என மனது பதைத்தது. வெளியேறும் வழி தெரியவில்லை. பீதியில் உடல் வியர்க்க கண்விழித்தான். மறுநாள் தன் மாமனிடம் அந்தக் கனவை சொன்னான். மாமன் எந்த சலனமும் இன்றி சொன்னான். அது பத்ம வனம். நான் அங்கு போக முடியுமா மாமா. அந்தக் கருத்த முகம் அதே நிச்சலனத்துடன் சொன்னது ஒரு நாள் போவாய் அபிமன்யு.


யாரோ என் சிகரெட்டை திருடிக்கொண்டேயிருக்கிறார்கள்

யாரோ என் சிகரெட்டைத் திருடிக் கொண்டேயிருக்கிறார்கள். அதனை வாயில் வைத்து தீக்குச்சியை கொழுத்தும் போது எங்கிருந்தோ ஒரு கரம் வந்து பறித்து மறைகிறது. அந்தக் கரத்தை நான் அறியேன். என் எதிரிலும் யாரும் இருப்பதில்லை. முதல் முறை இப்படி நிகழும் போது நான் ஒரு கடற்கரையில் நின்றிருந்தேன். கைவசமிருந்த சிகரெட் பெட்டி காலியாகும் வரை முயன்றேன். ஒவ்வொரு முறையும் திருடப்பட்டன என் சிகரெட்கள். சுற்றிலுமிருந்தவர்கள் ஏளனமாய் சிரித்தார்கள். எனக்கு அவமானமாய்போயிற்று.
‘நாயே தில் இருந்தால் நேரில் வாடா' - கோபமாய் கத்தினேன்.
அன்று முதல் வீடு, பணியிடம், பொது இடம் என எங்கு சிகரெட் பற்ற வைக்க முயன்றாலும் திருடப்படுகிறது. தீக்குச்சி கொழுத்தினால் தானே பிரச்சனை என்று சிகர்லைட்டர் கொண்டு முயன்றேன். வாயில் வைத்த சிகரெட்டை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் லைட்டரை கொழுத்துவேன். சரியாக சிகரெட்டை நெருங்கும் போது ஊதியனைக்கப்படுகிறது நான் சிகரெட்டை பற்ற வைக்க முயலும் ஒவ்வொரு வழிமுறைகளும் எப்படியோ முறியடிக்கப் படுகிறது யாராலோ. நண்பனது சிகரெட்டை பகிர்ந்து கொள்ளலாம் என்றால் அவன் எனது கையும் வாயும் அவனுக்கே சொந்தம் என்கிறான். எனக்கு இப்போது தேவை ஒரு சிகரெட். நான் கேட்பது யாருடைய சிகரெட்டோ அல்ல. நான் கேட்பது என் சிகரெட். சிகரெட்களை நான் நேசிக்கிறேன். என்னிடமிருந்து திருடப்படும் என் சிகரெட்களை யார் புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெட்கம் இல்லையா? என் ருசியை சுவைக்கும் ஏகபோகத்தை யார் அவர்களுக்குத் தந்தது. அவர்களை போலவே நானும் சிகரெட் பிடிக்கவே இங்கு வந்தேன். சிகரெட்கள் இல்லையென்றால் சுருட்டுகள், பீடிகள், ஹுக்கா ஆகியன உண்டென்று சொல்லும் முட்டள் நண்பனிடம் என்ன சொல்ல. சிகரெட்களை போலவே அவைகளும் மனிதனால் படைக்கபட்டவைதான் நண்பா. என் பிரச்சனை சிகரெட் அல்ல. சிகரெட் பிடிக்க இயலாமையே. குளிர் என் எலும்புகளை நொருக்குகிறது. தலைபாரம் கணக்கிறது. எனக்கு தேவை சிகரெட். நான் பிடிக்க விரும்பிய என் சிகரெட்.


அந்தி

முதியவர் பழனிச்சாமிக்கு இந்த வாழ்வைப் பற்றியப் பெரும் புகார்கள் ஏதும் இல்லை. சென்ற வருடம் இறந்து போன அவர் மனைவியின் பராமரிப்பில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இப்போதும். சமீபமாக அவருக்கு நினைவு தப்பி விட்டதென மகன்கள் குறைபடும் போதெல்லாம் அவர் மனைவியின் சொற்கள்தான் பெரும் ஆறுதலாய் இருக்கிறது அவருக்கு. வாதநாராயண மரம் ஆஸ்துமாவை அதிகப்படுத்துமென யாரோ சொல்லக் கேட்டு முற்றத்திலிருந்த அதனை வெட்டிச் சாய்த்த தினத்தில் கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளானவர் அதுமுதலாய் படுத்த படுக்கையனார். தினமும் மாலை நேரத்தில் உரையாட வரும் அவரின் பால்ய நண்பர் இப்போதெல்லாம் ஏன் வருவதில்லை என கேட்டுக்கொண்டே இருக்கிறார். சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்துக் குளிக்கும் வழக்கமுடையவர் ஆதலால் இன்று என்ன கிழமையென மணிக்கொருதரம் கேட்பவரிடம் இன்று வேறு கிழமையென திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பதில்களால் ஏக்கத்தோடு சனிக்கிழமைக்காக காத்துக் கொண்டிருகிறார் பல மாதங்களாக.

Friday, September 11, 2009

எது கவிதை? ஏன் கவிதை? - இளங்கோ கிருஷ்ணன்

ஆகஸ்ட் 15, 2009 அன்று ‘கோவை மாவட்டத்தமிழ்ப் பேரவை’ நடத்திய “கொங்கு வட்டாரக் கவிதை திருவிழா” எனும் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை. எது கவிதை என்கிற கேள்விக்கான எந்த பதிலும் திட்டவட்டமானதல்ல. அது மிகுந்த சார்புடையதும் புறவயமானதும் ஆகும். அதாவது இது கவிதை என ஒருவர் எதைக் குறிப்பிடுகிறாரோ அந்த பதில் அவர் அளவில் மட்டுமே சரியானது. அந்த பதிலும் கூட மிகவும் புறவயமான ஒரு கூற்று மட்டுமே. உண்மையில் எது கவிதை என நாம் கண்டடைந்தோமோ அந்த உள்ளார்ந்த உண்மையின் புறவயமான சில அம்சங்களை மட்டுமே சொற்களால் நாம் விளக்க முற்படுகிறோம். ஒருவேளை கவிதை என்பது புறவயமான அபிப்ராய-சொற்களின் உள்ளார்ந்த உரையாடல்களில் ஒருமை கொண்டிருக்கிறதோ என நாம் ஐயுற வேண்டியிருக்கிறது. கவிதை மட்டுமல்ல எல்லா வகைக் கலைகளை பற்றிய விளக்கங்களும் இப்படித்தான் பன்முக சாத்தியத்தோடு இருக்கிறது. இதுவே கலையின் அடிப்படை பண்புகளுள் ஒன்றாகவும் இருக்கிறது. மானுட அறிதலின் பெருந்திரட்டுகளை (Canon of Conscience) கலை மற்றும் அறிவியல் என இரு பெரும் பிரிவுகளாக தொகுப்போம் எனில் அறிவியலானது தர்க்கம் மற்றும் கணித முறைமையில் தனக்கான சட்டகங்களை வகுத்துக் கொண்டு விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது எனில் கலையானது தாரணை அல்லது கற்பனை மற்றும் பாவனை முறைமையில் விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது எனலாம். இவ்வாறு அதர்க்க முறையில் இயங்கும் போது ஒன்றிற்கு மேற்பட்ட ஆதார புள்ளிகளிலிருந்து விசிறியடிக்கப்படும் படிம முறையிலான கருத்துகளின் வழியே உண்மையை கண்டடைய வேண்டிய நிர்பந்தம் கலைக்கு ஏற்படுகிறது. இதுவே கலையின் சகலவிதமான குழப்பமான வியாக்கானங்களுக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட அழகியல் கோட்பாடுகளுக்கும் அடிப்படை காரணமாக அமைகிறது. எது கவிதை என்கிற கேள்வியானது ஏன் கவிதை என்கிற கேள்வியோடு சார்புடையதாய் இருக்கிறது. நாம் ஏன் கவிதை என ஒன்றை குறிப்பிடுகிறோமோ அந்த பதிலால் அது கவிதை என நிறுவப்பட்டிருக்கும். விளக்கலாம்: மார்க்சிய அழகியல் கோட்பாட்டின்படி முற்போக்கு கருத்துகளை கொண்டிருக்கும் ஒரு பிரதியை கவிதை என நாம் குறிப்பிடுவோம் எனில்; அந்த காரணத்திற்காகவே அதை கவிதை என நாம் வாதிடுகிறோம். வெறும் முற்போக்கு கருத்துகளின் தொகுப்பு மட்டுமே கவிதையாகாது என்போம் எனில் நாம் மேலே குறிப்பிட்ட அந்த பிரதி கவிதையாகாது என்கிற பதிலுக்கு வந்து சேர்வோம். எனவே எது கவிதை என்பதும் ஏன் கவிதை என்பதும் வேறு வேறு கேள்விகளாக இருக்க முடியாது அல்லது ஒரே பதிலுக்கான இரண்டு கேள்விகளாகவே இருக்க முடியும் என நாம் சொல்லலாம். காலகாலமாக கவிதை என்கிற கலைவடிவம் மனித குலத்திற்கு செய்து வந்திருக்கிற பங்களிப்பு என்பதென்ன? கவிதை மந்திரங்களாக, சடங்கு பாடல்களாக, வழிபாட்டு பாடல்களாக, ஆன்மிக மெய்மைகளை கண்டடையும் தரிசனங்களாக பண்டை காலந்தொட்டு புழங்கும் மொழிகளில் இருந்திருகிறது. நவீன காலத்தில் மானுட விடுதலையை அதன் லெளகீக வெளிகளிலும் பிரகடனப்படுத்தும் பண்பாட்டு-அரசியல்-பொருளாதார விடுதலைக்கான கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது. இன்றைய சூழலில் கவிதை ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணி என்பதென்ன? என நாம் கேட்போமானால் இதற்கான பதில் அதை சொல்பவரின் மனவிரிவுக்கு ஏற்பவே அமையும். கவிதை மானுட வாழ்வின் பொருளை, பிரபஞ்ச இருப்பை, மனித மனதை புரிந்து கொள்வதற்கான ஒரு எத்தனம் என்பது எவ்வளவு உண்மையோ அதற்கிணையான மற்றொரு உண்மை அது மானுட வாழ்வை மேம்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பை கொண்டிருக்கிறது. மனித மனதை மேலும் பண்படுத்த வேண்டிய பொறுப்பையும் கொண்டிருக்கிறது. இவ்விரு வகைப்பட்ட உண்மைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதே நமக்கு ஆக்கமுடையதாக இருக்கும். கவிதை பற்றிய எல்லா பேச்சுகளும் கவிதையியல் பற்றிய பேச்சுகளே என நான் உறுதியாக நம்புகிறேன். கவிதையியலின் எந்த முன்முடிபும் கவிதையை எக்காலத்திலும் தீர்மானித்து விடுவதில்லை. மாறாக கவிதை பற்றிய நம்முடைய முன் முடிபுகளே கவிதையியலை தீர்மானிக்கின்றன. நாம் 100 கவிதை எழுதியதிலிருந்து பெற்ற அனுபவம் 101வது கவிதை எழுத எவ்வகையிலும் பயன்படுவதில்லை. இப்படி நான் சொல்வதால் கவிதையை செம்மையாக்கம் செய்வதில் நமக்குள்ள மொழிப் பாண்டித்தியத்தை குறிப்பிடுவதாக புரிந்து கொள்ள வேண்டாம். புலமை, சமத்காரம், பாண்டித்யம் என்பவைகள் வேறு. கவித்துவம் என்பது வேறு. ஒரு கவிதை எழுதுவதற்கான அடிப்படையான மன-உந்தம் கவித்துவத்தால் தீர்மானிக்க படுவதே அன்றியும் சமத்காரத்தால் அல்ல. அப்படி சமத்காரத்தால் எழுதப்படும் போது அது வெறும் செய்யுளாக தட்டையான சொற்கூட்டமாக செயற்கையாக போய்விடுகிறது. ஒரு நல்ல கவிதையானது அடிமனதில் பொங்கியெழும் ஆழமான உணர்வின் சொற்கட்டுமானமே அன்றி ஒரு கூற்றோ, கருத்தோ, செய்தியோ அல்ல. அப்படி ஆத்மார்த்தமாக பொங்கியெழும் உணர்வில் ஒரு கூற்று இருக்கலாம். கருத்து இருக்கலாம். ஆனால் விஷயத்தை முன் தீர்மானித்து விட்டு அதை அப்பியாசத்தால் கவிதையாக மாற்ற முடியாது. அப்படியானால் ஒரு நல்ல கருத்தை கூறும் பிரதி கவிதை இல்லையா? நிச்சயமாக இல்லை. அறிவார்த்தமான போத மனதில் எழும் திட்டவட்டமான ஒரு கருத்து வெறும் பிரச்சாரமே. நமது அறிவார்த்தம் உணர்வுபூர்வமாக மாறும் மனநிலையிலிருந்து எழுதப்படுவதே நல்ல கவிதை. இதற்கு உதாரணமாக திருக்குறளைக் கூறலாம். அதை வெறும் நீதி நூல் எனச் சொல்பவர்களே இன்று அதிகம். ஆனால் திருக்குறள் அறிவார்த்தமான ஒரு கூற்றை ஒரு உண்மையை ஒரு செய்தியை மிகுந்த உணர்வுபூர்வமான மன எழுச்சியோடு பேசுகிற ஒரு அற்புதமான கலைப்படைப்பு என நான் உறுதியாக நம்புகிறேன். “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” என்ற குறளில் ஒரு நீதி பேசப்படுகிறது என்பது உண்மையே ஆனால் அந்த குறளில் உள்ள அறச்சீற்றம் கோபம் ஒரு கவிதைக்குறியதன்றோ? கலை என்பது தத்துவம் போலவே தனித்துவமானதொரு அணுகல் முறை. தத்துவங்களைப் போலவே கலை தனக்கான பிரத்யேகமான வழிமுறைகளில் விஷயங்களை தொகுத்துக் கொள்கிறது. வியாக்கானப்படுத்துகிறது. எனவே எந்த தத்துவத்திற்கும் முன் விசாரணையின்றி தன்னை ஒப்புக் கொடுக்கவேண்டிய அவசியம் கலைக்கு கிடையாது. ஒரு தத்துவக் கட்டுமானத்தின் உள்ளார்ந்த மீபொருண்மையில் (Meta-physical) கூறுகள் தன்னியல்பாக கலைக்குள் ஊடுருவி கலை அதை தனக்கான தனித்துவமான அழகியல் தன்மை வாயிலாக வெளிப்படுத்தும் போதுதான் இரண்டு அறிதல் முறைகளும் ஒன்றையொன்று வளப்படுத்திக் கொண்டு சிறப்பாக இயங்க முடியும். “கலைஞனும் தத்துவவாதியும் ஒரே மனிதனுக்குள் இயங்கும் போது கலைஞன் தத்துவவாதியை விஞ்சிக் கொண்டு இயங்க வேண்டும்” என்ற ஹீலீயோ கொர்த்தஸாரின் பொன்வாசகம் ஒன்றோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.

Saturday, August 8, 2009

“காயசண்டிகை” கவிதை நூல் விமர்சனம் - பாவண்ணன்

பசியும் பரிவும்
பாவண்ணன் இளங்கோ கிருஷ்ணனின் “காயசண்டிகை” கவிதை நூல் விமர்சனம்
இளங்கோ கிருஷ்ணன் முக்கியமான இளங்கவிஞர்களில் ஒருவர். இவர் கவிதைகளில் காணப்படும் வசீகரமான சொற்செட்டும் ஒரு கதைத்துணுக்குபோல அமைந்துவிடுகிற வடிவமைப்பும் வாசகர்களை உடனடியாகக் கவனிக்கத் துண்டும் கூறுகள். கவிதையின் பொருள் எழுத்துத்தளத்திலிருந்து மிக இயல்பாக வாழ்க்கைத்தளத்தை நோக்கி நகர்பவையாக உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்ட “காயசண்டிகை” தொகுப்பில் நல்ல கவிதைகள் பல உள்ளன. “திறக்கப்படாத கதவின்முன் நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்” என்று தொடங்கி அதே வரிகளோடு முடிவடையும் கதவு கவிதை குறிப்பிடத்தக்க ஒன்று. மூடிய கதவுக்குப் பின்னால் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது காத்திருப்பவருக்கு முதலில் ஐயமாக உள்ளது. பின்னர், அவ்வப்போது காதில் விழுகிற உரையாடல் சத்தங்களும் மற்றும் வேறு சில ஓசைகளும் உள்நடமாட்டத்தை உறுதிப்படுத்தி ஐயத்தைப் போக்குகிறது. அதுவே காத்திருப்பதற்கு முதன்மையான காரணம். திறப்பதற்காக வருவதுபோல கதவுவரை வேகமாக நடந்துவந்து மறைந்துவிடுகிற காலடியோசைகள் அதற்கடுத்த காரணம். முதல் முறை திறக்காதவர்கள் இரண்டாவது முறை வரும்போது திறந்துவிடலாம். இரண்டாவது முறையும் திறக்காதவர்கள் மூன்றாவது முறையிலாவது திறந்துவிடலாம் என்று நம்பிக்கை நீண்டுகொண்டே செல்கிறது. காத்திருப்பின் நீட்சியில் கதவு அழகான ஒரு படிமமாக மாற்றமடைகிறது. கதவுக்கு மறுபுறம் இருப்பது ஒரு வாய்ப்பு. நம் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் தீராத துயரங்களிலிருந்து ஒரு விடியலையும் தரக்கூடும் என்று நம்பிக்கையூட்டுகிற வாய்ப்பு. அல்லது ஒரு துணை. நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று வேறொரு திசையில் செலுத்தத்தக்க ஒரு சக்தி. இத்திசையில் எண்ணங்கள் விரிவடையும்போது கவிதையின் தளம் விரிவாகிறது. உலகில் எல்லாருமே ஒருவகையில் ஏதேனும் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் அல்லவா? கல்விக்காக, உணவுக்காக, வேலைக்காக, நல்ல துணிமணிகளுக்காக, ஊதியத்துக்காக, காதலுக்காக என காத்திருப்பதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கதவு கவிதையின் நீட்சியாக விளைந்திருக்கும் “குழந்தை” கவிதையும் முக்கியமான ஒன்று. தவறான வழிகாட்டலின் அடிப்படையில் பிழையான ஒரு கடையின்முன்னால் நிற்கிறது ஒரு குழந்தை. அது தேடிவந்த பொருள் அக்கடையில் இல்லை அல்லது அப்பொருளுக்குத் தரவேண்டிய அளவுக்குப் போதுமான தொகை தன்னிடம் இல்லை என்பதை அங்கு வந்த பின்புதான் புரிந்துகொள்கிறது. சலனமின்மையும் நிராகரிப்பும் அடர்ந்த கடைக்காரரின் முகத்தை ஒருவிதமான இயலாமையோடு கண்திரளப் பார்க்கிறது. வேறு வழியில்லை. திரும்பிச் செல்லத்தான் வேண்டும். குழந்தையை முன்வைத்துச் சொல்லப்பட்டாலும் கவிதை குழந்தையைப்பற்றியது மட்டுமல்ல. நம்பிக்கையை வழங்கக்கூடிய ஒரு வாய்ப்பு அல்லது வெளிச்சத்துக்கான ஒரு சுடர் எந்த மூலையிலிருந்து உதிக்கக்கூடும் என்று அடர்ந்த இருளில் நித்தமும் தடுமாறி உழல்கிற, ஏமாற்றத்தில் துவண்டுபோகிற மனிதர்களைப் பற்றியதாகவும் விரிவுபடுத்திப் பார்க்கலாம். கவிதையில் அதன் பிரச்சனை திரும்பிச் செல்வதல்ல, வெறும்கைகளோடு திரும்பிச் செல்வதே என்னும் வரிகள் முக்கியமானவை. இதை இப்படிச் சொல்லிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. “கும்பல் கூடுகிற ஏதோ ஒரு இடத்தில் நிறைய தேநீர் விற்கும், போ..” என்று விவரம் சொல்லி நடமாடும் விற்பனையாளனாக உள்ள தன் நண்பனை அனுப்பிவைக்கிறார் ஒருவர் என்று எடுத்துக்கொள்வோம். எதிர்பார்ப்போடு போன இடத்தில் கூட்டம் இருந்ததென்னமோ உண்மை. அந்தக் கூட்டத்தில் சாதாரணமாகவே ஐம்பது தேநீர் விற்கமுடியும் என்பதுவும் உண்மை. துரதிருஷ்டவசமாக, அந்த அளவுக்கு விற்பனை நிகழவில்லை. நினைத்ததில் கால்பங்கு அளவே விற்பனையாகிறது. விற்ற தொகையோடு திரும்பச் செல்லவேண்டியிருக்கிறது. இது ஒருவகையான திரும்புதல். பல மணிநேரங்கள் அலைந்து திரிந்தாலும் ஒரு தேநீர்கூட விற்பனையாகாமல் வெறும்கையோடு திரும்புதல் என்பது இன்னொரு வகை. வழிகாட்டல் சில சமயங்களில் நல்ல பயன் தருகிறது. சிலசமயங்களில் பயனில்லாமல் போய்விடுகிறது. இதற்காக வழிகாட்டியவரை நொந்துகொள்ள முடியாது. வழிகாட்டி இல்லாமல் இருக்கவும் முடியாது. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார்கள். அதன் பிரச்சனை திரும்பிச் செல்வதல்ல, வெறும்கைகளோடு திரும்பிச் செல்வதே என்னும் வரியை மறுபடியும் நினைத்துக்கொள்ளலாம். திரும்பிச் செல்வது ஏன் அந்த அளவுக்கு உக்கிரமான பிரச்சனையாக இல்லை என்பதற்குக் காரணம், மீண்டும் இன்னொரு இடத்தைநாடி அல்லது அந்த இடமும் ஏமாற்றமளிக்கும் நிலையில் மற்றுமொரு இடத்தை நாடிச் செல்கிற வாய்ப்புக்கு அத்தருணத்தில் வழியிருக்கிறது என்பதுதான். வெறும்கையோடு செல்லாத அளவுக்கு அந்த வாய்ப்புகள் வழிவகுத்துக்கொடுக்கக்கூடும் என்பதால் அது பிரச்சனையாக அமைவதில்லை. ஆனால் வெறும்கையோடு திரும்புவது என்பது எல்லா வாய்ப்புகளும் ஏமாற்றத்தில் முடிவுற்றதால் விளைகிற இறுதிக்கணம். அடுத்து என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. ஆகவே அது பிரச்சனையாக அமைந்துவிடுகிறது. வெறும்கையோடு திரும்புகிற ஒருவரைப்பற்றிய சித்திரமொன்றும் இத்தொகுப்பில் இறுதியாக வீடுதிரும்புதல் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அது எவ்வகையில் பிரச்சனையாகிறது என்பதற்கு இக்கவிதையில் இன்னும் அழுத்தமான காரணங்கள் உள்ளன. ஒரு குடும்பத்தலைவனாக இருப்பவன் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டதுமே, வீட்டில் உள்ள மற்றவர்கள் ஒருவித எதிர்பார்ப்பை தேக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். எளிய உலகியல் உண்மை இது. தேவைகளைமுன்னிட்டு அந்த எதிர்பார்ப்புகள் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. பசிக்கான உணவு என்பதுதான் முதல் தேவை. வேட்டைக்குக் கிளம்பிய குடும்பத்தலைவன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் எந்த வேட்டையும் கிட்டாமல் கவிதையில் வெறும்கையோடு திரும்புகிறான். கவிதையை சுவாரசியப்படுத்துவதற்காக, கவிதை முன்னிலைத்தன்மையில் சொல்லப்படுகிறது. ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல தொடர்ந்து ஐந்தாவது நாளாக அவனுக்கு எந்த வேட்டையும் அமையால் போய்விடுகிறது. ஐந்து நாட்களாக பட்டினி என்பது எவ்வளவு பெரிய கொடுமை. வயதான பெற்றோர், மனைவி, பிள்ளைகள் எல்லாருடைய வதங்கிய முகங்களையும் ஒருகணம் நினைத்துப் பார்த்துக் கொள்கிறான். வெறும்கைக்கோலம் அவர்களுடைய உயிரை பலிவாங்க உள்ளது. அதனால் அவர்களுக்காக வழியில் மரத்தடிகளில் கிட்டுகிற நாவற்பழங்களையும் மரவள்ளிக்கிழங்குகளையும் சேகரித்துக்கொள்கிறான். வறுமையென்னும் இருளிலிருந்து மீட்சியில்லாத வாழ்க்கையை அன்றைய பொழுதின் இருள் சூழ்ந்துகொள்கிறது. மீண்டும் ஒரு விடியல் வரும். மீண்டும் அவன் காட்டுக்குள் செல்லக்கூடும். அன்றாவது அவனுடைய வேட்டைக்குப் பலன் கிடைக்குமா? பொம்மைகளின் சாகசங்களையெல்லாம் செய்து காட்டியும் ஒரே ஒரு பொம்மையைக்கூட விற்பனை செய்ய இயலாமல் வெறும்கையோடு பாதையோர அட்டைப்பெட்டிக் கடையை மூடத்தொடங்குகிறவனைச் சித்தரிக்கிற “பொம்மைகள் விற்பவன்” கவிதையும் கிட்டத்தட்ட வேறொரு திசையில் இதே அனுபவத்தை வழங்குகிறது. உப்புக்காற்றுபோல பசியால் அரிக்கப்படுகிற ஒருவனைப்பற்றிய காட்சி “நெய்தல்” என்னும் கவிதையில் இடம்பெறுகிறது. உரைநடைச் சொல்லோவியம் போல எழுதப்பட்ட கவிதை. எவ்வளவு இட்டாலும் நிறையவே நிறையாத கடலைவிட பெரிய வயிறு உள்ளவன் கட்டுமரமேறி கடலில் மீன்பிடிக்கச் செல்கிறான். ஒருமுறையும் மீன் கிடைப்பதில்லை அவனுக்கு. குழந்தையின் அழுகிய சடலம் அல்லது வேறு ஏதாவது வந்து வலையில் சிக்கிக்கொள்கிறதே தவிர, கிடைக்கவேண்டிய மீன் கிடைப்பதே இல்லை. பசிநெருப்போ அவனை வாட்டுகிறது. இறுதியில் வலைகளின்மீது நம்பிக்கை இழந்து ஒரு தூண்டிலை வீசிவிட்டு ஒரே இடத்தில் காத்திருக்கிறான். முள்ளில் புழுவுக்குப் பதிலாக தன் இதயத்தையே மாட்டிவைத்துவிட்டு மீனின் வரவுக்காகக் காத்திருக்கிறான். வாய்ப்புக்காகக் காலமெல்லாம் காத்திருக்கும் வாழ்க்கையின் தகிப்பும் கசப்பும் ஒவ்வொரு சொல்லிலும் இறங்கியிருப்பதைக் காணலாம். காத்திருப்பின் கசப்பு படர்ந்திருக்கும் இன்னொரு கவிதை “பிடாரன்”. கதவுக்கு மறுபுறம் நிற்பவன், வெறும்கையோடு திரும்பிச் செல்வதை பிரச்சனையாக நிராசையோடு நினைத்துக்கொள்கிற குழந்தை, வேட்டையே கிடைக்காமல் ஏமாற்றத்தோடும் ஐந்துநாள் பட்டினியோடும் திரும்புகிற வேட்டைக்காரன், கூவிக்கூவி விற்றாலும் ஒரு பொம்மையைக்கூட விற்கமுடியாத பொம்மைக்காரன், வலைவிரித்தாலும் மீன பிடிக்கமுடியாதவன், ஒரேஒரு உடலத்துக்காக காலமெல்லாம் காத்திருக்கும் பிடாரன் என தொகுப்பில் நிறைந்திருக்கும் ஏராளமான சித்திரங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வலியை வெவ்வேறு குரலில் அல்லது வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்துகின்றன. காத்திருப்பின் கசப்பு ஒருகணம் மூர்க்கமாக வெளிப்படுகிறது. இன்னொரு கணம் முனகலாக வெளிப்படுகிறது. தலைப்புக் கவிதையான “காயசண்டிகை” அன்பின் ஆழத்தையும் தாய்மையையும் உணர்த்தக்கூடிய ஒரு கவிதை. இந்த உலகத்தின் பசிப்பிணியை அறுத்த தாய் காயசண்டிகை. முகவாட்டத்தின் வழியாகவே மற்றவர்கள் பசியை அறிந்து அமுதூட்டியவள். மனிதர்களை விலங்காக மாற்றக்கூடிய சக்திமிக்கது பசி. பசி வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பது உலகவாக்கு. பசியைத் தணிப்பதொன்றே மனிதர்களை மனிதர்களாக நடமாடவைக்கக்கூடிய செயல். காயசண்டிகையின் பசிதணிக்கும் பணி மனிதகுலம் மனிதகுலமாகவே தொடர வழிவகுத்த மாபெரும் காரியம். தாய்மைக்கும் கனிவுக்கும் அவள் பெயர் ஒரு படிமமாக வரலாற்றின் நினைவில் படிந்திருக்கிறது. இளங்கோ கிருஷ்ணன் காயசண்டிகையின் படிமத்தை மனப்பிறழ்வுள்ள ஒரு பெண்ணின்மீது படியவைக்கிறார். இந்த உலகம்பற்றிய ஞானமே அவளுக்கில்லை. இருளோ பகலோ தௌiவில்லை. தன்னைச் சூழ மனிதர்களின் இருப்போ, இன்மையோ தெரிவதுமில்லை. தன் பிச்சைப் பாத்திரத்தை நீர்த்தொட்டியில் அமிழ்த்தெடுத்து, ஏதோ அமுதசுரபியை நிரப்பிக்கொண்டதுபோல, அமுதமுண்ணுங்கள் அமுதமுண்ணுங்கள் என யாருமில்லாத வெட்டவெளியில் சுற்றியுள்ள தரைமீது வாரியிறைக்கிறாள். யாராலும் கையேந்தி வாங்கப்படாத அந்த அமுதத்துளிகள் தரைமுழுக்க இறைந்துகிடக்கின்றன. மனிதர்கள் அருந்தாத அந்த அமுதத்துளிகளை வானத்திலிருந்து இறங்கிவந்த நிலா பருகுகிறது. புறஉலகம்பற்றிய பிரக்ஞையே இல்லாத ஒரு பித்துமனத்தில் தளும்பத்தளும்ப நிறைந்திருக்கிற தாய்மையுணர்வையும் பரிவையும் உணர்த்துகிறார் இளங்கோ கிருஷ்ணன். மிகச்சிறந்த இக்கவிதை மிகச்சிறந்த ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. சுயபிரக்ஞையே இல்லாத ஒருவரிடம் மிகஇயல்பாக இருக்கிற தாய்மையுணர்வை சுயஉணர்வுள்ள நாம் எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் அக்கேள்வி. (காய சண்டிகை. இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள். காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோயில்-1. விலை.ரூ45) நன்றி: solvanam.com மற்றும் பாவண்ணன்.

Sunday, July 19, 2009

கவிதைகள்

இன்றின் வேங்கை மரத்தில் சீற்றம் அறவே இல்லை
தினமும் ஒவ்வொரு வேங்கை மரம்
கிளைத்து உதிரும் என் அறையில்
இன்று சீதோஷ்ணம் குளிர்ச்சியாய் இருக்கிறது
காற்றும் நெருங்க அஞ்சும் அம்மிருக மலர்களில்
இன்று அவ்வளவு புன்னகை
நாள்தோறும் முட்டி முட்டி சண்டையிடும்
யானைக்கன்றோடு மலைகாடெங்கும் சுற்றித் திரிகிறது
இன்றின் வேங்கை
எப்போதும் என் அறைக்கு வரத் தயங்கும்
அணில் குஞ்சுகள் அதன் கிளைகளில் விளையாடுகின்றன
நான் தவறவிட்ட இரவு ஒன்று
காகமாய் வந்து அமர்ந்திருக்கிறது அதன் உச்சியில்
கா...கா.. என்று ஒரு பாட்டு
அதன் கடலில் அலைகள் பெளர்ணமிக்கு துள்ளுகின்றன
என் அறை சொற்களின் மேல் நிற்க முடியாமல்
தடுமாறுகிறது இனம் புரியாத போதையில்
பட்சியன் சரிதம்
பீடிகை
நான் நினைத்திருக்கவில்லை
விரும்பிய இடத்திற்கு
எனை அழைத்துச் செல்லும் சிறகுகள்
எனக்கு முளைக்கும் என்று.
எனக்குத் தெரியாது
நான் ஒரு பறவை ஆகிக் கொண்டிருந்தேன் என்று.
இது ஒரு மந்திரக்கிணறு
என்பது தெரியாமலே இதன் நீரைப் பருகினேன்.
சூதுரை காதை
இந்நீரின் ருசியில் மூளை இனிக்கிறது.
நாக்கு உன்மத்தம் கொள்கிறது.
பசி முற்றும் போதெல்லாம் இதைப் பருகுகிறேன்.
என் மிருகன் விழித்துக் கொள்கிறான்
கனவின் முட்டைகளை அடைகாக்கும்
பறவையின் இதயம் அவன்
நான் கேட்டதெல்லாம் தருவான்.
கண்டு கேட்டு உண்டு உற்றறியும் புலன்கள்
அரூபத்தின் போதையில் கண் செருகி விம்ம
அவன் தருவதில் என் இரத்தத்தின் வாசம் வீசும்.
மனமுரை காதை
இந்த சாலைகளை நான் நேசிக்கிறேன்.
கரிய பெரும் பாம்புகள் ஊர்ந்து செல்லும் சாலைகள்.
இதில் மனம் காலில் பதிய நடந்து செல்ல விரும்புகிறேன்.
இந்த மண் இந்த பூமி
இந்தக் களி உருண்டையை முழுதாய்
உண்டுவிட பசிக்கிறேன்
மண்ணை உண்டு மண்ணில் உண்டு
விண்ணில் கிளை பறக்கும் மரங்களைப் போல
அலருரை காதை - முதல் காண்டம்
என் சிறகுகளோ எனை வானில் காவித் திரிகின்றன.
என் சக்கரங்கள் காற்றில் உருளமுடியாமல் திணறுகின்றன.
வண்டியின் பாரம் எனை கீழே இழுக்கிறது.
அலருரை காதை - இரண்டாம் காண்டம்
தரையில் விழுந்து புழுதி பறக்க
சகடமிட்டுப் போகிறதென் வண்டி.
கரும்பழுப்புச் சிறகுகள் நிலமுரசிக் கிழிகின்றன.
அந்தம்
ரணம் பொறுக்காமல்
மீண்டும் சடசடக்கிறதென் சிறகுகள்.
வானத்திலேறி
மேகங்களை பிழிந்து குடிப்பதாய்
ஒரு கனவு
விடாய் தணிந்த பறவை
மேகங்களுக்கு மேல் பறக்கிறது.

Wednesday, July 15, 2009

கன்னட பக்திக் கவிதைகள்

கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த, கன்னட பக்தி இயக்கத்தின் முக்கிய கவிகள் மூவரின் 5 கவிதைகளை மொழி பெயர்த்து இதில் பதிந்துள்ளேன். கன்னட மூலத்திலிருந்து இதை ஆங்கிலத்தில் பெயர்த்தவர் பிரபல இந்திய-ஆங்கில கவிஞரும், தமிழின் சங்க நூல்களை மேற்குலகம் அறியச் செய்தவருமான ஏ.கே.ராமனுஜம். மத்திய கால இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் பல் வேறு காலக்கட்டங்களில் பல பக்தி இயக்கங்கள் தோன்றி அந்தந்த மொழிகளின் இலக்கியத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றன. இந்த பக்தி இயக்கங்களின் பொதுவான போக்கு என கடவுளை விதந்தோதுதல், சரணாகதி, மன்றாடுதல், தங்களது இறைக் கோட்பாடை நிறுவுதல் போன்றவற்றை சொல்லலாம். இந்த சுபாவங்களையும் மீறி எல்லாக் காலத்திற்குமான கவிதைகளாக இருக்கும் ஒரு நான்கு கன்னடக் கவிதைகளை மட்டுமே இங்கு நான் மொழி பெயர்த்துள்ளேன். தமிழில் இவ்வாறு பக்தி இலக்கிய மரபுக்குள்ளேயே புறநடையாக இயங்கி, கவிதைகளில் சாதனைகள் செய்தவர்களென ஆண்டாளையும், பாரதியையும் மட்டுமே குறிப்பிட முடியும். பாரதியின் இவ்வகைக் கவிதைகள் (கண்ணன் பாட்டு, கண்ணம்மா பாட்டு) தமிழ், இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பெரும் சாதனைகள் என இப்போது மதிப்பிடப்படுகின்றன. இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதும் திட்டம் உண்டு. பார்க்கலாம். மகாதேவியக்கா கவிதைகள் தாயே! சுடரே இல்லாத இல்லாத தீயில் எரிந்தேன் இரத்தம் இல்லாத காயத்தால் வாடினேன் தாயே! ஒரு மகிழ்சியுமற்று உழன்றேன் மெய்யற்ற உலகங்களில் அலைந்தேன் என் அன்பே மல்லிகையின் வெண்மையே! -- பிச்சை பாத்திரமேந்தி வீடு வீடாக எனை அலைய வைத்தாய் இரந்து கேட்டால் அவர்களை மறுக்க வைத்தாய் அவர்கள் வழங்கினால் மண்ணில் வீழச் செய்தாய் தவறியதை எடுக்க முயன்றால் ஒரு நாயால் அதை கவ்வ வைத்தாய் என் அருமை மல்லிகார்சுனரே! -- கணவ! நீ வா இன்னே வா இன்னென்ன இவ்வே வா. நங்காய்! மலர் நாறும் மேனியன் மாலை என் இல் வரவை நிலைவாயில் பொருந்திக் காண்மீண். பசவன்னா குழந்தையுடன் ஒரு வேசி தொழிலுக்கு போவாள் எனில் குழந்தையை ஒரு முறை அணைப்பாள் வந்தவனோடு அரை மனதாய் படுப்பாள் குழந்தைக்கோ வந்தவனுக்கோ திருப்தி இல்லை இருவருக்கும் இங்கும் இல்லை அங்கும் இல்லை லெளகீகத்தின் நேசம் விட முடியாதது என் தலைவா! நதிகள் சங்கமிக்கும் இறைவனே. அல்லம்மா பிரபு ஓடும் ஆற்றிற்கு எங்கும் கால் உண்டு. எரியும் நெருப்புக்கு எங்கும் வாய் உண்டு. வீசும் காற்றுக்கு எங்கும் கை உண்டு.

Saturday, July 11, 2009

நீட்ஷே கவிதைகள்

கனியும் மின்னலும் அதிமனிதனே மிருகமே, நான் வளர்ந்தேன் மிக உயரமாய்; இப்போது யாருமே இல்லை - நான் பேசிட. நான் வளர்ந்தேன் மிக உயரமானவனாய் மிகத் தனியனாய் - நான் காத்திருக்கிறேன்: எந்த ஒன்றிற்காக மட்டும்? அருகில், மேகங்கள் அமர்ந்துள்ளன: நான் காத்திருப்பது முதல் மின்னலுக்கு. விடுதலையடைந்த ஆன்மா விடைபெறுங்கள் காகங்கள் கரைகின்றன சிறகடித்துப் பறக்கின்றன நகரத்திற்கு: விரைவில் பனி பெய்யும்- மகிழ்ச்சியே-வீடுள்ளவனுக்கு. விரைத்து நில், திரும்பி கவனி, துயரமே! எவ்வளவு தூரம்! ஏன், முட்டாளே, உலகின் குளிர்காலத்திற்கு நீ திருடப்பட்டாயோ? உலகம்-ஒரு கதவு ஆயிரம் பாழ்நிலங்களின் நிசப்தத்திற்கும் குளிருக்கும்! எவர் இழந்தாலும் எதை இழந்தாலும், நிற்பதில்லை எங்கும் எப்போதும். குளிர்காலத்தின் அலைவுறுதலுக்கு சபிக்கப்பட்டவனாய் இப்போது நீ வெளிரிப்போ அந்த பனிப்புகை போல அது எப்போதும் குளிர்ந்த வானத்தையே தேடுகிறது. பற, பறவையே பாழ்வெளியின் பாடலான பறவையே! அலறிப்பாடு உன்பாடலை ஒளித்துக் கொள், முட்டாளே கசியும் உன் இருதயத்தை பனியிலும், கடுப்பிலும்! காகங்கள் கரைகின்றன சிறகடித்துப் பறக்கின்றன நகரத்திற்கு விரைவில் பனி பெய்யும் வீடற்றவனுக்கு துயரம் கவியும்!” வெட்கங்கெட்ட மெளனம் ஐந்து காதுகள் - எந்த ஓசையும் இல்லை அவைகளில்! உலகம் ஊமையானது... நான் கேட்டேன் என் ஆர்வத்தின் காதுகளால்: ஐந்து முறை நான் என்னுள்ளே வலை எறிந்தேன் ஐந்து முறையும் மீனற்ற வலையே வந்தது நான் கேட்டேன் - எந்த பதிலும் இல்லை என் வலையிடம் நான் அவதானித்தேன் என் அன்பின் காதுகளால். - HUMAN ALL TOO HUMAN என்ற நூலுக்கான குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள். தமிழ் மொழி பெயர்ப்பு: இளங்கோ கிருஷ்ணன்

Wednesday, June 17, 2009

என் சொல்லால் உனக்கொரு முத்தம்

101 நான் இங்கு வந்திருக்கவே கூடாது உனக்காகவே வந்தேன் ஜெனீபர் எங்குள்ளாய்? ஒரு மொட்டைப் பனைமரத்தின் அடியில் புதைத்துச் சென்றேன் உன்னை நமது குழந்தைகள் ரோஜா பதியன்கள் அவைகளை இந்தக் கரத்திலிலேயே குருதி வடிய இரவு முழுவதும் சுமந்தலைந்தேன் பிணம் என்பதறியாமல் உன்னை நானிங்கு விட்டுச் சென்றிருக்கக் கூடாது இது சுடுகாடு நாய்களும் நரிகளும் பொறுக்கி உண்ணும் படுகளம் பேய்களும் பிணந்திண்ணிகளும் பறந்தலையும் பாழ்நிலம் உன்னை நானிங்கு விட்டுச் சென்றிருக்கக் கூடாது ஒநாய்களை பார்த்திருக்கிறாயா ஜெனீபர் அதுவே உனை தின்றது உன் குரல்வளையை கவ்வி இழுத்துச் சென்றது எச்சில் ஒழுக நாக்கு தொங்கி அலையும் அம்மிருகத்தின் கோரைப்பற்களும் துர்நாற்றமும் கொடூரம் 202. நீ திரும்பி வந்து எனை அழைத்துச் செல்வாய் என எதிர்பார்தேன் ஜெனீபர் குதிரையை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்த அம்மீசைக்காரன் சொன்னான் சிலுவைகளை வீணாக்காதே என்று உனை விட்டுச் சென்றதாலேயே எனைக் கைவிட்டாய் நான் என்ன செய்ய பார் இந்த நரகம் எப்படி எரிகிறதென சாத்தானின் இதயம் இதை என் கைகளால் கொல்ல விரும்புகிறேன் அழுத்தி இதை கடலுக்குள் மூழ்கடிப்பேன் பிணம் பிணம் பிணமூறும் சாக்கடை 303. அந்த குரங்கு அந்த பீடை அதை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் ஜெனீபர் அது இன்னமும் இங்குதான் சுற்றித் திரிகிறது போலும் பிறகந்த யட்சி அவளை வெட்டி எறிய வேண்டும் வேசை இந்த மண் இந்த பூமி பார்த்தீனியம் ஷெல்களும் குண்டுகளும் மேய்ந்தழிக்கட்டும் இதை 404. எனை சிலுவையிலிருந்து இறக்கி விடு என் குருதியை ஆணி உறிஞ்ச எந்த நியாயமும் இல்லை முட்டாள்கள் எனை சிலுவையில் அறைந்திருப்பது என் விடுதலைக்காகவாம் வெடிகுண்டுகளும் சிலுவைகளும் நண்பர்கள் ஜெனீபர் இரண்டையுமே நான் வெறுக்கிறேன் 505. நேற்று நினைவுள்ளதா அந்த மாம்பழ வண்ண புடவை அதைக் கட்டிக் கொண்டு எங்கோ வேகமாய் சென்று கொண்டிருந்தாய் நான் தொடர்ந்து வந்து உன் கைப்பிடித்து நிறுத்தினேன் (அப்பாடா எங்கெல்லாம் தேடுவது உன்னை) சட்டென நீ திரும்பினாய் வேறு யாரோ “உனக்கு என்ன ஆச்சுஏன் இப்படி இருக்கிறாய் ஜெனீபர்” என்றேன் நீ கத்திக் கொண்டே ஒடி விட்டாய் ஜெனீபர் நான் என்ன தவறு செய்தேன் எனை மன்னிக்க மாட்டாயா? 606 நான் இங்கு வந்திருக்கவே கூடாது உனக்காகவே வந்தேன் ஷெல்களின் அலறலும் குழந்தைகளின் அலறலும் ஒன்று போலவே இருக்கின்றன பிறகிந்த மூடர்கள் இருவரும் கூட உனை ஒநாய்கள்தின்றன என்றல்லவா கூறினேன் உண்மையில் கழுதைப்புலிகளும்தான் தின்றன கால்களை இழுத்து இழுத்துநடக்கும் அந்த பிசாசு எச்சில் பிணங்களை விரும்பி உண்பவை பிறகு கழுகளும் நரிகளும் கூடத்தான் உனை தின்றன நான் தனியன் பலவீனன் பார்துக் கொண்டிருந்தேன் உதடு துடிக்க உடல் நடுங்க வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன் ஜெனீபர் என்னை மன்னித்து விடு உன்னை நானிங்கு விட்டுச் சென்றிருக்கக் கூடாது நாமிங்கு வந்திருக்கவே கூடாது

Monday, June 15, 2009

பித்தென்றும் போதையென்றும் இரு மன நிலைகள்: ரமேஷ் பிரேதனின் சாரயக்கடை-விமர்சனம்

தமிழ் நவீன கவிதை பல புதிய குரல்களால் நிரம்பத்துவங்கியிருக்கும் சூழலில் வெளிவந்திருக்கிறது ரமேஷ் பிரேதனின் “சாரயக்கடை” எனும் இத்தொகுப்பு. தமிழில் பின் நவீனத்துவம் சார் உரையாடல்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய படைப்பாளி என்ற வகையில், இவரது இத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது எனலாம். இத் தொகுப்பில் உள்ள கவிதைகளை பின் நவீனத்துவக் கவிதைகள் என்பதை விடவும் பின் நவீனக் கவிதைகள் என்று அழைப்பதே கோட்பாட்டு அளவில் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். (நான் ஒரு கோட்பாட்டு விமர்சகன் அல்ல என் விமர்சனப் பார்வை என்பது முழுதும் என் படைப்பு மனதின் ரசனை சார்ந்தது என்பதையும் இங்கே அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுக் கொள்கிறேன்)

பின் நவீனக் கவிதைகளுக்கும் பின் நவீனத்துவக் கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடு என்பது பின் நவீன மனிதனுக்கும் பின் நவீனத்துவ மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டை ஒத்தது. விளக்குவோமாயின் இரண்டாம் உலகப் போருக்குப் பின் உள்ள காலத்தை பின் நவீன காலம் என பொதுவாக கூறுகிறோம். இந்த காலத்தில் வாழ நேர்கிற ஒவ்வொரு மனிதனும் பின் நவீன மனிதனே. ஆனால் பின் நவீனத்துவம் என்ற தத்துவார்த்த எடுகோளின் வியாக்கானங்களை தனது நிலைப்பாடாக கொண்டு இயங்கி வருகிற ஒருவன் பின் நவீனத்துவ மனிதன் ஆவான். ஒரு கோணத்தில் தமிழில் பின் நவீனத்துவ கவிதைகளை விடவும் பின் நவீனக் கவிதைகளே அதிகம் எழுதப்பட்டுள்ளன எனலாம்.

மேலும், தமிழின் நவீன கவிதை என்பது நவீனத்துவக் கவிதையாகவே மலர்ந்தது என்று பொதுவான ஒரு கூற்று உண்டு. சற்று கூர்ந்து நோக்குவோமாயின் மேற்கின் நவீனத்துவத்தை ஒரு எல்லை வரையே நாம் பின்பற்றினோம் எனலாம். படிம உடல், சுண்டக்காய்ச்சிய சொற்கள், மனச்சமன் தவறாத மொழி ஆளுமை போன்ற நவீனத்துவக் கவிதைகளின் வடிவம் சார்ந்த விடயங்களை நாம் உள்வாங்கிக் கொண்ட அளவுக்கு, அதன் தத்துவார்த்த மற்றும் அரசியல் கூறுகளை நாம் பேரளவு பின்பற்றவில்லை. டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட் போன்ற நவீனர்கள் புதுச் செவ்வியல்வாத உரையாடல்களோடு அழகியல்களில் மரபின் வேர்களுக்கு திரும்புவதை தங்களது படைப்பரசியலின் ஆதார மூச்சசாக கொண்டு இயங்கினார்கள். ஆனால் அவர்களால் முன்மொழியப்பட்ட கவிமொழியை பின்பற்றிய தமிழின் துவக்ககால மற்றும் இரண்டாம் தலைமுறைக் கவிகளில் பெரும்பாலானவர்கள் வடிவ அளவில் மட்டுமே மேலை மரபை பின்பற்றினார்கள். இதற்கான காரணம் எளிது ஒரு பண்பாட்டு மரபு இன்னொரு மரபை பின்பற்ற முயலும் போது அது தனது மரபுக்கும் அந்த பிராய்ந்தியச் சூழலுக்கும் ஏற்பவே புதியவற்றை உள்வாங்குகிறது எனலாம்.

---

பின் நவீனத்துவம் என்ற சொல் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி முழுதும் அறிவுசார் துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது. ஒவ்வொரு துறையிலும் அதற்கேயான பிரத்யேகமான பல புதிய சிக்கல்களை அது ஏற்படுத்தியது போலவே மொழியோடு தொடர்புடைய இலக்கியத்துறையிலும் சில சிக்கல்களை ஏற்படுத்தியது. குறிப்பாக எது பின் நவீனத்துவ எழுத்து என வரையறை செய்வதில் ஏற்பட்ட சிக்கலைச் சொல்லலாம். பின் நவீனத்துவத்தின் சுவையை பழிப்புச் சுவை அல்லது அங்கதம் எனக் கொள்வோமாயின் அதன் மனநிலையை அபத்த மனநிலை எனலாம். மொழியியல் ரீதியாக பின் நவீனத்துவத்தின் நிலைபாடென்பது சொல் மற்றும் சொல்லின் அர்த்தம் பற்றிய மைய-விளிம்பு சிக்கல்களை கட்டுடைப்பது. அதாவது சொல் அர்த்தத்தின் மீது அதிகாரம் செலுத்துவதையும் அர்த்தம் சொல்லின் மீது அதிகாரம் செலுத்துவதையும் கட்டுடைப்பதாக இருக்கிறது. இவ்வகையான எழுத்தையே பின் நவீனத்துவ எழுத்தென அமெரிக்க பின் நவீனத்துவம் முன்மொழிந்தது.

நம்மை போன்ற பாரிய ஏற்ற தாழ்வுகள் நிறைந்த பின் காலனிய கலைஞனுக்கு சமூகத்தின் மைய-விளிம்பு சிக்கல்களை கட்டுடைக்க வேண்டிய கூடுதல் நிர்பந்தத்தில் எதை தன் பின் நவீன எழுத்தாக கொள்ள வேண்டும் என்று ஒரு சிக்கல் வருகிறது. ரமேஷ் பிரேம் போன்ற பின் நவீனத்துவர்கள் இந்த இடத்தில் மேற்கின் பின் நவீனத்துவ தொழிற்நுட்ப சிக்கல்களை பிரச்சனை படுத்தாமல், கீழைத்தேயத்திற்கு ஏற்றாற் போல தங்களது படைப்பு மொழியை உருவாக்கி கொண்டார்கள் எனலாம். ரமேஷ்-பிரேமின் கறுப்பு வெள்ளைக் கவிதைகள் முதல் ரமேஷ் பிரேதனின் இதுவரையிலான தொகுப்பை வாசிப்பவர்கள் இதை உணரலாம். கறுப்பு வெள்ளை கவிதைகள் தொகுப்புக்கும் இந்த தொகுப்புக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம் கவிமொழியில் புளங்கும் எளிமை. முதல் தொகுப்பானது மிக அறிவார்த்தமான அல்லது முற்றிலும் அறிவார்த்தமற்ற கட்டுப்பாடற்ற மொழிப் பிரயோகத்தால் மனதில் ஏறபடும் கவித்துவத்தை கடகடவென கொட்டிச் செல்வதாக இருக்கிறது. இது கவிதைக்கு மிகுந்த இருண்மையும் எண்ணற்ற படிமச் சாத்தியத்தையும் அளிக்கிறது.(உண்மையில் அவைகள் படிமச் சரங்கள் அல்ல அபோத மனதின் தொடர் ஓட்டங்களே ஆகும். படிமச்சரங்களாக கவிதைகளை பார்த்தது நவீனத்துவ பார்வையாகும்) ஆனால் சக்கரவாளக் கோட்டம் முதலான தொகுப்பிலிருந்து இந்த தொகுப்பு வரை உள்ள கவிதைகள் பெரும்பாலும் ஒருடல் கொண்டிருக்கின்றன அல்லது அதிகபட்சம் குறியீட்டு தன்மை மிக்கதாகவே இருக்கின்றன. படிமத்தை கவிதையின் அடிப்படை பண்பாக கொள்வது நவீனத்துவப் பார்வை என்பதை இணைத்துப் பார்க்கும் போது ரமேஷ் பிரேதனின் கவிதைகள் தமிழுக்கே உண்டான தனித்துவமான பின் நவீனத்துவப் பண்பை கண்டடைந்திருக்கின்றன எனலாம்.


---
ஒரு நல்ல கவிதைத் தொகுப்பானது தனது வாசகனை கவர்வதற்கான வேலையை தன் தலைப்பிலிருந்தே துவங்கி விடுகிறது. அவ்வகையில் இந்த தொகுப்புக்கு ‘சாரயக்கடை’ என்ற பெயர் பான்சியான, தமிழ் இலக்கிய பொது புத்தியை வசீகரிக்கிற தலைப்பாக உள்ளது. இந்த தொகுப்பு முழுவதுமாக வாசித்து முடித்து போது பித்து, போதை, கவித்துவம் எனும் மூன்று சொற்கள் என் மனதில் திரும்ப திரும்ப ஒலித்தன. இந்த தொகுப்பு முழுவதும் உள்ள கவிதைகள் போதைமனதின் பித்தாலும், பித்தின் போதையாலும் தங்களின் கவித்துவத்தை கண்டடைந்தவை. போதையும் பித்தும் கவிதையும் மாறி மாறி சந்தித்து முயங்கியும், விலகியும் தோன்றும் எண்ணற்ற சித்திரங்களால் இந்த தொகுப்பு நிறைந்துள்ளது.

மேலும் இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளை இரண்டு வகையாக பிரிக்கக் கூடும் என்று கருதுகிறேன். ரமேஷ் பிரேதன் என்ற மனிதன் தன் இதுவரையிலான வாழ்வினூடாக கண்டடைந்த தத்துவார்த்தமான நிலைப்பாடுகளின் கவித்துவ வடிவங்கள் ஒருவகை எனில். ரமேஷ் பிரேதன் என்ற மனிதனின் அகமனச் சிக்கல்களால் ஆன கவிதை வடிவங்கள் வேறொரு வகை. இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான நவீன கவிஞர்களின் கவிதைகளையும் இப்படி பிரிக்க முடியும் என்றே எண்ணுகிறேன். கவிதைகள் வலி நிவாரணிகளாகவும் வலி கடத்திகளாகவும் இருப்பதுண்டு. குறிப்பிட்ட ஒரு மனச்சூழலின் மோசமான சிதைவுகளிலிருந்து தப்புவதற்காக கவிஞன் அவ்வகைக் கவிதைகளை எழுதுகிறான். தோற்கடிக்கப்பட்டவனின் வன்மத்தோடும், புறக்கணிக்கப்பட்டவனின் குரோதத்தோடும் கொல்லப்பட்டவனின் புகாரோடும் பேசும் அவ்வகைக் கவிதைகள் இந்தத் தொகுப்பிலும் உண்டு.


கவிமொழியை கையாள்வதில் ரமேஷ் பிரேதன் கற்றுக் கொண்டுள்ள நுட்பம் வியப்புக்குறியது. ஒரு சொல், ஒரு வரி, ஒரு பத்தியை திரும்பச் சொல்வதின் மூலமாக ஏற்படும் சிறு திறப்பையும் கவிதையாக மாற்றும் உத்தியும் ஒன்றிரண்டு சொற்களை மாற்றி மாற்றி எழுதியும் கூட்டிப் பிரித்து எழுதியும் அதன் வழியாக கவிதையை உருவாக்கும் உத்தியையும் இதற்கு உதாரணமாக கூறலாம். நடைபயிற்சி, தெய்வமழை போன்ற இத்தொகுப்பின் கவிதைகள் இவ்வகையிலானவை.

‘குழவி யிறப்பினும் ஈன்றடி பிறப்பினும்” எனும் சங்கப்பாடலின் தொனியில் துவங்கும் ‘மாமது போற்றுதும்’ என்ற கவிதை முதல் துவக்கத்தில் கவிதை வடிவிலும் எஞ்சிய பகுதி உரைநடை வடிவிலும் எழுதப்பட்டுள்ள “என் மகளின் அம்மாவுக்கு” என்ற கவிதை வரை பல்வேறு வடிவங்களிலும் தொனிகளிலும் சொல்லல் முறைகளிலும் பன்முகத் தன்மையோடு இத்தொகுப்பு உள்ளது.

இந்த கவிதைகளின் இன்னொரு சிறப்பம்சம் இவைகளின் திணைத்தன்மை. தமிழின் பெரும்பாலான நவீன கவிதைகள் நிலமற்ற வெளியில் உலவிக் கொண்டுடிருக்கும் சூழலில் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் பாண்டிச்சேரியை
மிக அழுத்தமாக பதிவு செய்கிறது. நெய்தலின் உவர்ப்புச் சுவை மிகுந்த கவிதைகளாக இவை இருக்கின்றன.

தொகுத்துக் கொள்வோம் எனில் “சாரயக்கடை” எனும் விளிம்பு நிலை பெயரைக் கொண்டுள்ள இத்தொகுப்பு விளிம்பு நிலை சமூகத்தில் வாழும் விளிம்பு நிலை மனிதன் ஒருவனது குரலாக பித்தமும் போதையுமாய் ஒலிக்கிறது.
- 13.06.2009 அன்று வால்பாறையில் தமிழ் கவிஞர்கள் இயக்கம் நடத்திய விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

Monday, February 9, 2009

ஒரு கவிதையும் ஒரு விமர்சனமும்...


உருளைக்கிழங்கு பொடிமாஸ்

இந்த முறை நீங்கள் ஒரு சமையற்கலைஞர்

கலாச்சார மற்றும் மாற்றுக் கலாச்சார உணவுகளை தயாரிப்பதில் நிபுணர்

(குறிப்பாக அந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ்)

மிகுந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும்

சிக்கல் ஒன்றை எதிர்கொள்வதற்காக அழைக்கப்படுகறீர்கள்

நாம் பயணம் செய்து கொண்டிருக்கிற கப்பலை

புயலில் இருந்து காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும்

அப்பாவியாய் அவர்கள் முகத்தை பார்கறீர்கள்

அவர்கள் இன்னமும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்

கண்களை இறுக்க மூடி உங்கள் கடவுளிடம் பிரார்திக்கிறீர்கள்

அவர் இரண்டு உருளைக்கிழங்குகளை வழங்குகிறார்

(எதைக் கேட்டாலும் உருளைக்கிழங்குகளையே வழங்குகிற

உங்கள் கடவுள் ஒரு மனநோயாளி என்பது உங்களுக்கு அப்போதுதான் புரிகிறது)

கப்பலை பற்றி உங்களுக்கு தெரிந்த சொற்ப அறிவையும் பயன்படுத்ததுகிறீர்கள்

நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது

படுத்திருக்கும் கடல் எழுந்து நடப்பதைப் போன்று

ஒரு பெரிய அலை வான் மறைத்து வருகிறது

அநேகமாய்

இன்று உங்களுக்கு நிறைய உருளைக்கிழங்குகள் கிடைக்கக்கூடும் பிழைத்திருந்தால்.

-----


தமிழ்க் கவிதையின் புதிய திசைவழி - காயசண்டிகை கரிகாலன் 

சமீபகாலமாகத் தமிழ்க் கவிதைத்துறையில் இளைஞர்கள் நிகழ்த்திவரக் கூடிய சாதனை மகத்தானவை. அவ்வகையில் கோவையிலிருந்து இயங்கி வரும் இளங்கோ கிருஷ்ணன், இசை, மரகதமணி இவர்களது கவிதை இயக்கம் புத்துணர்வு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவர்களது சிந்தனைப்போக்கு, கூறுமுறை, மொழி ஆளுமை அனைத்துமே எவ்வித பின்பற்றல்களுமின்றி முற்றிலுமான புத்துருவாக்கங்களாகத் திகழ்வது தமிழ்க் கவிதையின் ஆரோக்கியமிகு புதிய திசைவழியைக் காட்டுவதாக இருக்கிறது. நவீன தமிழ்க்கவிதை எட்டியிருக்கிற உயரங்களுக்கு சான்றாக நாம் இளங்கோ கிருஷ்ணனின் ‘காயசண்டிகை' தொகுப்பிலிருந்து எந்தவொரு கவிதையையும் தயக்கமின்றிக் கூறமுடியும். அபத்தமும்,வன்முறையும்,குரூரமும் நிரம்பிய கருணையற்ற நம் காலத்தைய வாழ்வை எள்ளி நகையாடும் இக்கவிதைகள் தமக்குள் தீரா நெருப்பின் கங்குகளை கொண்டுள்ளன. ‘சொற்களின் மீது அப்படியென்ன மோகம்/அதுவுன் வாழ்வையே பருகிப் பெருக்கிறது' எனும் இளங்கோ தன் வாழ்வு பருகப்பட்டாலும் பரவாயில்லை தன் கவிதை அர்த்தங்களால் பெருகட்டும் என எண்ணுகிறார். இந்த வேள்வியும் அர்ப்பணிப்பும்தான் அவரது கவிதைக்குள் தீயைக் கொண்டு வந்திருக்கிறது. மிகச் சொற்பமான அதேவேளை தீவிரமான சொற்களைக் கொண்டு இவர் உருவாக்கும் கவிதைகள் நம் இதயத்தை நெகிழவும்,அதிர்வுறவும்,துயரடையவும்,பீதியுறவும் செய்கின்றன. இக்கவிதைகளை ஏன் படித்தோம் என நிம்மதியிழக்கச் செய்கிறது. இந்நிம்மதியிழப்புதான் ஒரு படைப்பு ஏற்படுத்தக் கூடிய ஆக முக்கியமான விளைவு. உதாரணத்திற்கு ‘ ஈரசாட்சி ' எனும் கவிதை. மழையை துல்லியமாக காட்சிப்படுத்துகிறது இக்கவிதை. ‘இலை இலையாய் மரங்களையும்/துகள் துகளாய் மண்னையும்/ஜீவிதக் குளிர்மை பொங்க/வாரி அணைத்துக் கொண்டிருந்தது அது' மழைக்காட்சிதான் எவ்வளவு அழகும்,குளிர்ச்சியும் நிரம்பியது. மழைதான் இம்மண்ணுக்கு உயிர் தந்து அதை பசுமையால் மலர்த்துகிறது. அதனால்தான் ஆதியின் காருண்யத்தோடு பெய்து கொண்டிருக்கிறது மழை என்கிறார் கவிஞர். வெளியேயும் உள்ளேயும் புழுக்கத்தால் நிரம்பிக்கிடக்கும் மனிதனுக்கு இந்த மழைதான் எத்தகைய ஆறுதலைத் தந்திருக்க வேண்டும். ஆனால் இளங்கோ காட்டும் மழைக் காட்சியோ நம் நெஞ்சை துணுக்குறச் செய்து நமது ஆறுதலைக் குலைத்து விடுகிறது. ‘தாய்மையின் பிரவாகம்/மதர்த்த அந்நிசியில்/ஈரசாட்சியாய் சன்னல் வழி/ பார்த்துக் கொண்டிருந்தது/தூக்கு மாட்டும் ஒருவனை' மழையின் ஈரமும் கருணையும் சிறிதும் பாதிக்காமல் ஒரு மனிதனை இவ்வுலகிலிருந்து விடைபெற துரத்துவது எது? இந்தக் கேள்வியை நம் மனதின் மென்மையான ஒரு மூலையில் ஒயாமல் எழுப்பிக்கொண்டிருக்கிறது இக்கவிதை. இளங்கோவின் கவிதைகள் பெருமளவில் இத்தகைய தீவிரத்தன்மையுடைய காட்சிகளை நமக்குக் காட்டுகின்றன. கவிதையில் சாசுவதமாகும் இக்காட்சிகளின் பல்வேறு பரிமாணங்களை யூகிப்பதற்கு இடம் கொடுக்கும் வகையில் கவிதைகளை வார்த்தெடுப்பதில்தான் இவரது தேர்ச்சி வெளிபடுகிறது. நிச வாழ்வில் நாம் கணப்பொழுதில் கடக்க நேர்கிற காட்சிகளில் உள்ள அவலத்தை, துயரை, மூர்கத்தை நாம் நமது அவசரத்தின் நிமித்தம் தவற விடுகிறோம். ஆனால் கவிஞனோ இத்தகைய தரிசனங்களில் உள்ள தீவிர்த்¨யுணர்ந்து தன்னுடைய லெளகீகப் பணியை மறந்து விடுகிறான். இக்காட்சிகளை வெளிப்படுத்துவதற்கு ‘வாழ்வைப் பருகும் சொற்களிடம்' புகலடைகிறான். இதைப் போன்றே ‘வீடு திரும்பல்' ‘கிறிச்..கிறிச்' ‘நெய்தல்' போன்ற கவிதைகள் காட்சிமயமாக்கல் வகைமையைச் சார்ந்த கவிதைகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. இவரது கவிதைகள் வாசகனை முன்னிலையில் வைத்து விளித்து உரையாடும் தொனியில் நகரக்கூடியதாக பெருமளவில் இருக்கின்றன. இக்கவிதைகள் வாசகனை ஒரு பாத்திரமாக தமக்குள் இயங்க அனுமதிப்பவை. இத்தகைய உத்தி கவிஞன், வாசகன், கவிதை இடையே இணக்கத்தையும் நெருக்கத்தையும் அளிக்கிறது. இளங்கோவின் கவிதைகளில் ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துபவை அவற்றின் புனைவுத்தன்மை (ஃபாண்டசி) ஆகும். பொதுவாக ஒரு படைப்பிற்கு பலமூட்டக் கூடிய கூறுகளில் ஒன்று கற்பனை. யதார்த்தத்தின் போதாமையே படைப்பாளியை கற்பனையை நோக்கி பயணிக்க வைகிறது. யதார்த்தத்தின் மீதான விமர்ச்னத்தைதான் அவன் மாயயதார்த்தத்தின் வழி கட்ட முனைகிறான். அவ்வகையில் ‘சிங்காதி சிங்கம்' ‘மிருக மொழி பேசுபவன் சரிதை' ‘பொம்மைகள் விற்பவன்' ‘காணுறை வேங்கை' போன்ற கவிதைகள் புனைவு (ஃபாண்டசி) நிறைந்தவை. இத்தகைய புனைவுகள் நம் நிகழ்கால நுண் அரசியலின் நுட்பமான கூறுகளை குறியீடுகளாக மாற்றிவிடும் திறம் கொண்டிருக்கின்றன. மரபுக்கவி¨யின் ஒசை ஒழுங்கையும் சந்த நயத்தையும் உள்செரிந்து வெளிபட்டிருக்கும் ‘கையறு நிலை' எனும் கவிதை இளங்கோ கிருஷ்ணனுக்கு செம்மொழித்தமிழின் மீதுள்ள ஆழ்ந்த பரிச்சயத்தைக் காட்டுகிறது. ‘நீல வான் நிலவே நீல வான் நிலவே/நீலியின் முலை போல் சுரந்திடும் அமுதே' போன்ற வரிகளைப் படிக்கும் போது தமிழை எழுதி எழுதிப் பழகித் தேர்ச்சியுற்ற ஒரு முதிர்ந்த கரத்தை கொடையாக பெற்றிருக்கும் இளைஞராகத் தோன்றுகிறார் இளங்கோ. ‘காலரூபணி' ‘பிடாரன்' ‘காயசண்டிகை' போன்ற கவிதைகள் தொன்மையும் அமானுஷ்யமும் இணையப் பெற்று இத்தொகுப்பின் பன்முகத்தன்மைக்கு மேலும் மெருகூட்டுகிறது. இயற்கை நிகழ்வுகளில் தனது கற்பனையைக் குறுக்கீடு செய்யும் கவிஞர் மிக அற்புதமான சில தரிசனங்களை நமக்குக் காட்டுகிறார். ‘நிலாக்கனி' கவிதை. இவற்றின் உச்சம். இயற்கை தர்க்கத்தின் வழி அணுகாமல் ஒரு குழந்தையின் கனவுவயப்பட்ட மனநிலையில் அணுகியிருக்கும் கவிஞனுக்கு சித்திக்ககூடிய காட்சிகள் இவை. காலச்சுவடு பதிப்பகம் வழக்கம் போல நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் ‘காயசண்டிகை' தொகுப்பு தமிழ்க்கவிதையின் புதிய வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறது. நவீன தமிழ் ஆளுமைகளுள் ஒருவராக இளங்கோ கிருஷ்ணன் மலர்வார் எனும் நம்பிக்கையையும் இத்தொகுப்பு உறுதி செய்திருக்கிறது.

குறிப்பு: இவ்விமர்சனம் எந்த இதழிலிம் பிரசுரமாகவில்லை.