விகடனில் பணியாற்றிய காலங்களில் ‘தடம்‘ இதழுக்காக நானும் எழுத்தாளர் தமிழ்மகனும் பாளையங்கோட்டை போய் தொ.பரமசிவன் அவர்களிடம் உரையாடி ஒரு நேர்காணல் எடுத்தோம். அதன் எழுத்து வடிவம் இது. சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேல் நீண்ட ஒரு பெரிய உரையாடலின் சில பகுதிகள்தான் இவை... அன்று இதழில் பிரசுரிக்க அவ்வளவு இடம்தான் இருந்தது. இதன் முழுமையான உரையாடல் வடிவம் சேகரிக்கப்படாமலே போனது வருத்தம்தான்.
தொ.பரமசிவன். தமிழ்ப் பண்பாட்டியலின்
ஆய்வு முகம். ஆய்வாளர்கள் புத்தகங்களுக்குள் முகம்புதைத்து ஆய்வுசெய்து வந்த காலகட்டத்தில்,
ஆய்வு என்பது மக்களின் வாழ்வில் இருந்தும் பேச்சில் இருந்தும் பெறப்படவேண்டியது எனத்
தெருவில் இறங்கியவர். கடந்த 40 வருடங்களாக, தமிழ் அறிவுச்சூழலுக்கு தொ.ப., அளித்த பங்களிப்புகள்
சமகால சரித்திரம். மனிதருடன் உரையாடுவதே ஓர் அலாதியான அனுபவம். ஒரு குதிரைவீரனைப்போல
விசைகொண்டு பயணித்தபடி செல்லும் பேச்சில், பண்பாட்டு அவதானங்கள் சட்டென மின்னலடிக்கும்.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், தமிழக வரலாறு, அரசியல், மதம், பண்பாடு என நீண்ட ஒரு
மாலை நேரத்தில், பாளையங்கோட்டையில் அவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து...
“உங்கள் குடும்பம், நீங்கள் பிறந்து
வளர்ந்த சூழல் பற்றிச் சொல்லுங்கள்?”
‘‘நான் இதே தெருவிலேதான் பிறந்து
வளர்ந்தேன். பத்து தலைமுறைகளாக என் முன்னோர் இதே இடத்திலேதான் வாழ்ந்து வந்தார்கள்.
நான் என் வீட்டின் மூலப்பத்திரத்தின் அடிப்படையிலேயே 10 தலைமுறைகள் என்று சொல்கிறேன்.
நான் வசிக்கும் இந்தப் பகுதிதான் நகரின் மையப் பகுதி. பாளையங்கோட்டை, ஒன்பதாம் நூற்றாண்டைச்
சேர்ந்த ஒரு கோட்டை நகரம். என் தாய்-தந்தை படிக்காதவர்கள். தந்தைக்கு கையெழுத்து மட்டும்
போடத் தெரியும். பிற்பட்ட வகுப்பு, அதற்கு ஏற்ற சகல பலவீனங்களும் என் வீட்டில் இருந்தன.
நான்தான் என் வீட்டின் முதல் பட்டதாரி.”
“உங்கள் கல்லூரிக்கால நினைவுகளைப்
பகிர்ந்துகொள்ள முடியுமா?”
“நான் படித்த காலம் என்பது தமிழகத்தில்
அரசியல் கொந்தளிப்புகள் இருந்த காலம். காங்கிரஸ் என்ற ஆலமரம் மெள்ள சரிந்துகொண்டிருந்த
காலமாகவும், தி.மு.க என்ற திராவிட இயக்கத்தின் அமைப்பு வளர்ந்துகொண்டிருந்த காலமாகவும்
இருந்தது. அப்போது இருந்த மாணவர்களில் பெரும்பகுதி தி.மு.க-காரர்களாகவும், சிலர் காங்கிரஸ்காரர்களாகவும்,
வெகுசிலர் இந்திய கம்யூனிஸ்ட்காரர்களாகவும் இருந்தார்கள். அப்போது இருந்த அரசியல் சூழலால்
எங்களுக்கு தினமும் உரையாடவும் சண்டையிடவும் விவாதிக்கவும் ஆனந்த விகடனிலும் குமுதத்திலும்
துக்ளக்கிலும் செய்திகள் இருந்தன. நாங்கள் அனைவருமே அதில் அவரவர்க்கு என ஒரு தரப்பை
எடுத்துக்கொண்டு விவாதித்தோம். அந்த விவாதங்கள் என்னை ஒரு பொறுப்புள்ள சமூக மனிதனாக
மாற்றின. நான் ஒரு பெரியாரிஸ்ட்டாக, திராவிட இயக்கத்தவனாக மாற அந்த விவாதங்களும் பயன்பட்டன.’’
“அழகர்கோயில் ஆய்வு என்ற நூலை எழுத
உங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது எது?’’
‘‘என் முனைவர் பட்ட ஆய்வுக்காக
நான் ‘புதுமைப்பித்தன் படைப்புகளில் சமூக மாற்றமும் மதிப்பீடு மாற்றமும்’ என்ற தலைப்பில்தான்
ஆய்வு செய்வதாக இருந்தேன். என்னுடைய நெறியாளர் பேராசிரியர் சண்முகம் பிள்ளை அவர்கள்
என் மீது மிகுந்த மதிப்புக்கொண்டவர். அவர் `நீ ஏன் சமூகவியல் சார்ந்து ஏதேனும் ஆய்வுசெய்யக்
கூடாது?’ என்று கேட்டார். `என்ன ஆய்வு செய்வது?’ எனக் கேட்டபோது, `கோயில்கள் சார்ந்து
ஏதாவது ஆய்வுசெய். அழகர்கோயில் பற்றி ஆய்வுசெய்’ என்று பட்டெனச் சொன்னார். அன்றும்
நான் பெரியாரிஸ்ட்தான் என்றாலும் மறுக்காமல், ‘சரி... நான் கோயிலுக்குப் போய் பார்த்துவிட்டுச்
சொல்கிறேன்’ என்றேன். மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து அந்த ஆய்வைச் செய்தேன். ஓர்
ஆண்டு கள ஆய்வும் செய்தேன். குடும்பத்தைப் பிரிந்துசென்று வெளியில் தங்கிக் கள ஆய்வு
செய்தேன். கையில் பெரிதாகக் காசு இல்லை. அப்போது பேருந்துக் கட்டணம் 25 பைசா. நான்
25 ரூபாயை நாணயங்களாக மாற்றிவைத்துக்கொள்வேன்.
என்னிடம் தகவலாளிகளின் ஊரும் பேரும் மட்டுமே இருக்கும். பேருந்து நிலையத்துக்குப் போய்
எந்த ஊருக்குப் பேருந்து கிடைக்கிறதோ, அந்த ஊருக்குச் சென்று ஏதேனும் ஒரு தகவலாளியைப்
பிடித்து, தகவல் சேகரிப்பேன். நான் சந்தித்த தகவலாளிகள் ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும்.
பதிவு செய்தது ஒரு நூறு பேர்தான். வைணவ இலக்கியங்களைப் படிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.
வைணவத்தைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதமும் தேவைப்பட்டது.
எனவே, மாலைக் கல்லூரியில் சமஸ்கிருத
வகுப்பில் சேர்ந்தேன். சமஸ்கிருதத்தில் டிப்ளமோ படித்தேன். மதுரைப் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியர் சுந்தரமூர்த்தி என ஒருவர் இருந்தார். சிறந்த ஆசிரியர் அவர். அவரிடம்தான்
கற்றேன். வைணவத்தில் ஜனநாயகத்தன்மை இருப்பதைக் குறித்து பேசத் தொடங்கினேன். `தென்கலை
வைணவத்தில் ஒரு கலகக் குரல்’ என்ற கட்டுரையை எழுதினேன். வைணவம் எனக்கான சால்வேஷன் எனப்
பேசாது. அதில் கோஷ்டி என ஒரு கோட்பாடு உண்டு. அது நமக்கான தீர்வு எனப் பேசுவது. என்
குருநாதர் சி.சு.மணி அவர்கள், ‘சைவ சித்தாந்தவாதியாக இருந்தாலும், எனக்கு வைணவத்தில்
ஈடுபாடு வந்தது இந்த இடத்தில்தான்’ என்கிறார். வைணவம் சார்ந்து ஒரு நான்கைந்து கட்டுரைகள்
எழுதியுள்ளேன். அந்தக் காலம்தான் நல்ல வாசிப்புக்கான காலம். 1976-79 காலகட்டம். அப்போது
ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தேன். நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்தினேன். அப்போது நாகமலை
புதுக்கோட்டை நூலகத்தைவிட்டு கடைசியாக வெளியேறுகிற ஆள் நான்தான். வெறி பிடித்ததுபோல்
வாசித்தேன். அதுதான் என் எல்லா ஆய்வுகளுக்கும் அடிப்படை.”
“அழகர்கோயில் நூலுக்குக் கிடைத்த
வரவேற்பு எப்படி இருந்தது?”
“என் ஆய்வை பல்கலைக்கழகமே நூலாக வெளியிட முன்வந்தது.
அவர்களுக்கு உரிமை உள்ளதால், என்னிடம் கேட்காமலேயே வெளியிட்டார்கள். முதல் பதிப்பை
35 ரூபாய்க்குப் போட்டார்கள். இரண்டாம் பதிப்பை 200 ரூபாய்க்குப் போட்டார்கள். பொதுவாக,
பல்கலைக்கழக நூல் என்றால் விற்காது. ஆனால், என் புத்தகம் உடனடியாக முதல் பதிப்பு விற்றுத்
தீர்ந்து, இரண்டாம் பதிப்பும் விற்றது. பல்கலைக்கழகமே வெளியிட்டதால் உலகம் முழுதும்
அந்த நூல் பிரபலம் ஆயிற்று. அமெரிக்கா உட்பட உலகின் முக்கியமான நாடுகளில் உள்ள அனைத்துப்
பல்கலைக்கழகங்களிலும் அந்த நூல் உள்ளது. அப்படி ஒரு நூலை அதற்குப் பிறகு என்னால் எழுத
முடியவில்லை. இந்த உடல்நிலையை வைத்துக்கொண்டு இனியும் என்னால் எழுத முடியாது.”
“நாட்டார் வழக்காற்றியல் என்ற துறை
நீங்கள் வந்தபோது எப்படி இருந்தது? அப்போது இருந்த முன்னோடிகளுடனான உங்களது அனுபவம்
பற்றிச் சொல்லுங்கள்.”
‘‘இந்தத் துறைக்குள் வந்தபோதுதான்
பேராசிரியர் தே.லூர்து அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. அவர் எங்களை மாணவனாகவே
நடத்த மாட்டார். ஒரு தோழனைப்போல நடத்துவார். மிக இயல்பாக, எங்களுடன் சிகரெட் பிடிப்பார்.
அவருடன் சிகரெட் பிடித்துக்கொண்டே விவாதிக்க முடியும். அவ்வளவு தோழமையோடு எங்களை நடத்தினார்.
கெட்ட வார்த்தை பழமொழிகளைப் பற்றிச் சொல்வார். அந்தப் பழமொழிகள் ஏன் உருவாகின என்று
விளக்குவார். இப்படி அவர் இயல்பாக இருந்தார். பிறகு, நாட்டார் தெய்வங்கள் பற்றியும்
ஆய்வுசெய்யத் தொடங்கியபோது, கருப்பசாமி பற்றிய என் ஆய்வு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
என்னை அவர் மிகவும் ஊக்கப்படுத்தினார்.’’
“சிறுதெய்வக் கோயில்கள் மெள்ள பிராமணியத்துக்குள்ளும்
ஆகம விதிகளுக்குள்ளும் உட்செரிக்கப்படும் இன்றையச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“பெரு தெய்வ நெறி, சிறு தெய்வ நெறியை
விழுங்கப்பார்க்கிறது என்பது உண்மைதான். ஆனால், அவற்றால் சிறு தெய்வங்களை முழுமையாக
விழுங்க முடியாது. இப்போது, கோயிலில் ஆடு வெட்டுவதைத் தடுக்க முடியுமா? சிறு தெய்வங்களை,
பெரு தெய்வங்கள்போல ஓரளவு தோற்றம்கொள்ள வைக்கலாமே தவிர, அவற்றை முழுமையாக பெரு தெய்வங்களாக
மாற்ற முடியாது. ஏனெனில், சிறு தெய்வங்கள் எளிய மக்களின் தெய்வங்கள். அவற்றுக்கான சடங்குகள்
எளிய மனிதர்களின் சடங்குகள். அவற்றை முழுமையாக மாற்ற முடியாது என்பதே என் துணிபு.”
“ஆனால், மேல் நிலையாக்கம் என்ற
ஒன்று தொடர்ந்து நடந்துகொண்டுதானே இருக்கிறது?”
‘‘இருக்கலாம். அது எல்லாம் நாட்டார்
மரபை உட்செரிக்கச் செய்யும் பிராமணியத்தின் அர்த்தமற்றப் பிரயத்தனங்கள். அது தோற்றுப்போகும்.
பெருந்தெய்வங்களில் பெண் தெய்வத்துக்கு ஆண் தெய்வத்துணை வைக்கப்படுகிறது. அப்படி சிறு
தெய்வத்திற்கு வைப்பதில்லை அல்லவா? மாரியம்மன் கையில் இருந்து சூலாயுதத்தை எடுத்துவிட்டால்,
அது எப்படி அம்மனாக இருக்கும்? எனவே, இது ஒரு தற்காலிக நிலை. இந்துத்துவத்தின் தற்காலிக
எழுச்சி இது என்றே கருதுகிறேன். நிச்சயம் பிராமணியத்தால், நாட்டார் மரபை ஒன்றும் செய்ய
முடியாது.”
“சிறு தெய்வங்கள் என்பவை ஒருவகையில்
சாதியம் என்ற கோட்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் பேணுவதற்கும் உதவுகின்றன என்பதை,
ஒரு பண்பாட்டு ஆய்வாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“தேர்தலைவிடவும் சாதியை தக்கவைத்துக்கொள்ளும்
ஒரு சமூக ஏற்பாடு இங்கு இருக்கிறதா? அதற்காக அதை நாம் வேண்டாம் எனச் சொல்ல முடியுமா?
சாதி என்பது உண்மையும் இல்லை... பொய்யும் இல்லை. அதற்கு என ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி,
ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்கிறதுதானே? தெய்வம்தான் சாதியைக் காப்பாற்றுகிறது என்று
இல்லை. தெய்வமும் அதைக் காப்பாற்றுகிறது. உண்மையில் சாதிதான் தெய்வத்தைக் காப்பாற்றுகிறதே
தவிர, தெய்வம் சாதியைக் காப்பற்றவில்லை.”
“அப்படி என்றால் சாதி ஒழிப்பு என்கிற
விஷயம் சாத்தியம் இல்லாத கருத்தியலா?”
‘‘சாதி ஒழிப்பு என்பதை, ஏதோ கொசு
ஒழிப்புபோல சுலபமாகப் பேச முடியாது. சாதி என்ற அமைப்பு அவ்வளவு எளிமையானது கிடையாது.
சாதியை ஒழிக்க முடியாது. ஆனால், சாதியைக் கரைக்க முடியும். சாம்பாரில் உப்பைக் கரைப்பது
போல. சாதி என்பது தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்துகொள்ளும். சாதி தோன்றியதற்கு எண்ணற்ற
தியரி சொல்ல முடியும். நீங்கள் எந்தக் காரணம் சொன்னாலும் அதில் சிறிது உண்மை இருக்கும்.
எனவே, இப்படித்தான் இதனால்தான் சாதி தோன்றியது என்பதை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படிக் கண்டுபிடிக்க முடியாததாலேயே அது அழிக்க முடியாததாக இருக்கிறது.’’
``இந்தச் சாதியக் கட்டுமானத்தை
எப்படி தகர்ப்பது... எதைத் தீர்வாக நீங்கள் நினைக்கிறீர்கள்?’’
``இதைத் தகர்க்க வேண்டுமெனில் அகமண
உறவை உடைத்தாக வேண்டும். அதுதான் ஆதாரத் தீர்வு. சொத்துரிமைச் சட்டம் சீர்திருத்தப்பட
வேண்டும். தந்தையின் சாதிதான் மகனுக்கு என்பது திருத்தப்பட வேண்டும். சாதிகளை
Re-shuffle பண்ண வேண்டும்.’’
``அப்படி ஒரே நாளில் செய்தால்,
பெரிய சாதியக் கலவரமாகிவிடுமே?’’
``ஆமாம். `சாதிகெட்ட அரசாங்கம்’
என்று சொல்லுவான். விருப்பப்பட்ட சாதிப்பட்டத்தை பெயருக்குப் பின் போட்டுக்கொள்ள அரசு
அனுமதிக்க வேண்டும். இதை ஒரு `கல்ச்சராக’ மாற்ற வேண்டும்.’’
``இது மேலும் பிரச்னைகளுக்கு வழிவகுக்காதா?’’
``ஆமாம். பிரச்னைகள் அதிகரிக்கும்.
என்னுடைய நம்பிக்கை இதுதான். சாதிமுறைகளை வரையறை இன்றி முற்றிலுமாகச் சீரழிக்க வேண்டும்.
எல்லாம் குழம்பட்டும். அப்போதுதான் தெளிவு உண்டாகும்.
இப்படியான இடத்தில்தான் பெரியாரின்
தேவை இருக்கிறது. கெட்டிதட்டிப்போன சாதியைக்கூட அசைத்துப்பார்த்ததுதான் பெரியாரின்
சாதனை.
நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது
சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு, வீடு வாடகைக்குத் தர மாட்டார்கள். இப்போது
ஓரளவு நிலைமை மாறியிருக்கிறது தானே? இப்போதும் சென்னை மாதிரியான நகரங்களில்கூட `வெஜிடேரியன்
ஒன்லி’ என டூலெட் போர்டுகள் இருக்கின்றனதான். ஆனால், `பிராமின்ஸ் ஒன்லி’ எனப் போட முடியவில்லை
அல்லவா? வெளிப்படையாக சாதியை விசாரிப்பது, பேசுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதுதானே?
இதுதான் பெரியாரின் பங்களிப்பு.”
“`பெரியார் சாதியை அசைத்துப்பார்த்தார்’
என்று சொன்னீர்கள். ஆனால், தற்போது திராவிட இயக்கம் வீழ்ச்சியை நோக்கித்தானே சென்று
கொண்டிருக்கிறது? இப்போதும் திராவிடக் கட்சிகளின் தேவை இருக்கிறது என நினைக்கிறீர்களா?”
“திராவிடக் கட்சிகள் நைந்துபோய்விட்டன;
நீர்த்துப் போய்விட்டன. இவர்கள் அழிந்த பிறகு அங்கு இருந்து இனி புதிதாக உருவாகிவருகிற
ஓர் இயக்கத்தால்தான் பெரியாரின் கொள்கைகளை மேலெடுத்துப் போக முடியும். பெரியாரின் கொள்கைகளை
மேலெடுத்துச் செல்வதற்கான சக்தி இவர்களுக்குக் கிடையாது. ஆனால், பெரியார் கொள்கைகள்
ஒருபோதும் சாகாது. மானுட விடுதலை ஒன்றுதான் பெரியாரின் நோக்கம். அதற்கு எதிரான அத்தனை
அம்சங்களையும் அவர் எதிர்த்தார். அதனால், யாரெல்லாம் மானுட விடுதலையை முன்னெடுக்கிறார்களோ,
அவர்களுக்கு எல்லாம் பெரியாரிடம் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு. அவரின் பல கோட்பாடுகள்
அதிரடியானவைதான். ஆனால், அவை எல்லாம் அந்தக் காலத்தின் தேவையால் உருவானவை. அதன் பின்னிருந்த
அடிநாதம் என்பது மானுட விடுதலைதான்.
இப்போது உள்ள திராவிட இயக்கங்களையும்
திராவிடம் எனும் கருத்தியலையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. திராவிடக் கட்சிகள்
தோற்றுள்ளன என்பது உண்மைதான். என்னைக் கேட்டால் காந்தி, `காங்கிரஸைக் கலைத்துவிடலாம்’
என்று சொன்னதுபோல, `திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட்டு புது இயக்கங்கள் செய்யலாம்’
என்று சொல்வேன்.’’
“இன்று இந்துத்துவ அறிவுஜீவிகள்
அம்பேத்கரைக் கொண்டாடுவதன் மூலமாக உட்செரிக்கப் பார்க்கிறார்கள். சுப்பிரமணியன் சுவாமி
போன்றவர்கள் அம்பேத்கரை ஒரு ரிஷி என வர்ணிக்கிறார்கள். இப்படியான சூழலில் திராவிட இயக்கத்தைக்
கலைப்பது என்பது மாதிரியான உரையாடல்கள் சரியாக இருக்குமா?”
“இல்லை... நான் பெரியார் தேவை இல்லை
எனச் சொல்லவில்லை. பெரியார் முன்னிலும் அதிகமாகத் தேவை என்கிறேன். எனவே, பெரியாரை ஆக்கபூர்வமாகப்
பயன்படுத்தும் இயக்கங்கள் வேண்டும் என்கிறேன். அருண்சோரி போன்ற பார்ப்பனிய அறிவுஜீவிகள்,
`ஒர்ஷிப்பிங் ஃபால்ஸ் காட்’ போன்ற நூல்களை எழுதி, அம்பேத்கர் மேல் அவதூறுசெய்யப்பார்த்தார்கள்.
இன்று அவரைக் கொண்டாடுவதன் மூலமாக அவரை அழிக்க முடியும் என நினைக்கிறார்கள். பெரியார்,
அம்பேத்கர் என்ற கட்டுமானம் பிராமணியத்தின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால், அம்பேத்கரை
அவர்களால் உட்செரிக்க முடிந்தால்கூட, பெரியாரை ஒருபோதும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
ஆகவேதான் அழிக்க வேண்டும் எனத் துடிக்கிறார்கள். பெரியார் - அம்பேத்கர் என்ற பைண்டிங்கில்
பெரியாரை உடைப்பது என்ற வேலையையும் செய்துவருகிறார்கள். அம்பேத்கரை பெரியாரிடம் இருந்து
தனிமைப்படுத்தினால், வேலை சுலபம் ஆகும் என நினைக்கிறார்கள். அதற்கு இங்கு உள்ள சில
அறிவுஜீவிகள் பலியாகிறார்கள்.
பெரியாரை விமர்சிப்பது ஒரு மோஸ்தர்
என, சில அறிவுஜீவிகள் நினைக்கிறார்கள். அவர்களால் ஒருபோதும் பெரியாரை அழிக்க முடியாது.
தலித் மக்கள் பெரியாருடன்தான் இருக்கிறார்கள். தங்களது அடையாளச் சிக்கலுக்காக சிலர்
இப்படிச் செய்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்கள் சோர்ந்துபோவார்கள். பெரியாரின் அரசியலில்
எதிர்ப்பு இருந்ததே தவிர, வெறுப்பு இருந்தது இல்லை. இவர்களிடம் வெறுப்புதான் இருக்கிறது.
இந்த அரசியல் மக்களை வென்றெடுக்கப் போதாது.”
“ஆனால், `பெரியார் வெறுப்பு அரசியல்
செய்தார்’ என்றுதானே ஜெயமோகன் போன்றவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். கேரளத்தின் நாராயணகுரு
போன்றவர்களைச் சொல்லும்போது அவர்கள் வெறுப்பு அரசியலை மேற்கொள்ளாமல் சாத்வீகமான முறையில்
பிராமணியத்துடன் போராடித்தான் அதிகாரத்தை வென்றார்கள், திராவிட இயக்கங்கள் வெறுப்பு
அரசியல் செய்துதான் முன்வந்தன என விமர்சிக்கப்படுகிறதே?”
“இல்லை... இது அபாண்டமான பொய்.
பெரியாரிடம் பிராமணத் துவேஷம் கிடையவே கிடையாது. எதிர்ப்பு மட்டுமே தீவிரமாக இருந்தது.
அவருடைய நட்பு வட்டத்திலேயேகூட நிறைய பிராமணர்கள் இருந்தார்கள்தானே? அவர்களிடம் எல்லாம்
துவேஷமுடன் நடந்துகொள்ளவில்லையே. நாராயண குரு போன்றவர்கள் பணிசெய்த கேரளத்தில்தான்
இன்று ஆர்.எஸ்.எஸ் வலிமையாக இருக்கிறது. ஈழவச் சமுதாயத்தினர் முழுக்க இந்துக்களாக மாறிப்போனார்கள்.
ஆனால், பெரியார் வேலைசெய்த இங்கு ஆர்.எஸ்.எஸ்
இன்னும் வலுவடைய முடியவில்லைதானே? தமிழர்களை முழுமையாக இந்துக்களாக இன்னும் மாற்ற முடியவில்லையே.
வெறுப்பு அரசியலால் மக்களை வென்றெடுக்க முடியாது. இன்று ஜெயமோகனும் ரவிக்குமாரும் ஸ்டாலின்
ராஜாங்கமும் சில அறிவுஜீவிகளும் செய்துகொண்டிருப்பதுதான் வெறுப்பு அரசியல்.”
“பெண்கள் மற்றும் தலித்துகள் அதிகமாக
எழுத வந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“நிச்சயமாக வரவேற்கப்படவேண்டிய
விஷயம். பெண்கள் நிறையப் பேர் எழுத வந்திருப்பது, குறிப்பாக, கவிதைத் துறையில் ஏற்பட்டுள்ள
எழுச்சி குறிப்பிடத்தக்கது. தலித்துகள் எழுத வந்திருப்பதும் வரவேற்கத்தக்கதே. ஆனால்,
அவர்கள் பெரியார் மேல் காரணமற்ற வெறுப்புடன் நடந்துகொள்ளத் தேவை இல்லை என்றே கருதுகிறேன்.
பெரியார் முன்வைத்தது மானுட விடுதலை, ஒட்டுமொத்த மானுட விடுதலை எனும்போது அதில் தலித்
விடுதலையும் அடக்கம்தான்.”
“தற்போது உள்ள தமிழ்த் தேசியர்கள்கூட
பெரியாரை விமர்சிக்கிறார்களே? உதாரணமாக, சீமான் போன்றவர்கள் தொடக்கத்தில் தன்னை `பெரியாரின்
மாணவன்’ என்றுதான் சொன்னார். இப்போது `முப்பாட்டன் முருகன்’ எனச் சொல்லிக்கொண்டு திராவிட
இயக்கத்தை விமர்சிக்கிறாரே?”
“சீமான் எனக்கும் மாணவர்தான்.
(சிரிக்கிறார்). ஆனால், அவர் தடம்புரண்டுபோனார். முப்பாட்டன் முருகன் எனச் சொன்னால்,
மற்ற கடவுள்கள் என்ன உறவு எனச் சொல்ல வேண்டுமே? யார் எல்லாம் நம் உறவு இல்லை எனச் சொல்லிவிட்டுத்தானே,
யார் நமது உறவு என்று சொல்ல வேண்டும். ஏன் அவர் அதைச் சொல்வது இல்லை. அவருக்கு அவை
எல்லாம் தெரியாது. தத்துவார்த்தப் புரிதல் அற்ற வெறும் அரசியல் காரணங்கள் அவை. திராவிடம்
என்ற கருத்தாக்கம் வேறு. தமிழ்த் தேசியம் வேறு.
பெரியார், `தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோஷத்தை 1938-ம் ஆண்டிலேயே முன்வைத்தார்.
தெ.பொ.மீ., சி.பா.ஆதித்தனார், கருமுத்து தியாகராச செட்டியார் போன்றவர்கள் கட்சிகளைக்
கடந்து, திருச்சியில் நடந்த அந்தக் கூட்டத்தில் கையெழுத்து இட்டார்கள். ஆகவே, பெரியார்
தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர் அல்ல.”
“நீங்கள் தமிழ்த் தேசியம் என்ற
கருத்தியலை நம்புகிறீர்களா?”
“ஆமாம்... நான் தமிழ்த் தேசியம்
என்ற கருத்தியலை நம்புகிறேன். நான் தமிழ்த் தேசியர்தான்.”
“அப்படியானால், தமிழ்த் தேசிய மதமாக
எது இருக்க முடியும்... இங்குள்ள சைவம், வைணவம் போன்ற மார்க்கங்கள் எல்லாம் ஏற்கெனவே
இந்துத்துவத்தால் விழுங்கப்பட்டதாக இருக்கின்றனவே?”
“தமிழ்த் தேசியம் இந்து மதத்துடன்
போய் இணையாது. இந்து மதம் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டதாக மேலோட்டமாக ஒரு தோற்றத்தை
உருவாக்குகிறார்கள். `நான் இந்து அல்ல’ என ஒரு நூல் எழுதியுள்ளேன். தமிழ்த் தேசியத்தில்
எல்லா மார்க்கங்களுக்கும் இடம் உண்டு. இந்து
என்ற சொல்லே ஒரு மிஸ்நாமினல். அப்படி ஒரு மதமே கிடையாது. இந்த நிலத்தின் எந்தப் பழைய
நூல்களிலும் அந்தச் சொல் கிடையாது.”
“பெரியார் மத, தேசிய, மொழி அபிமானங்கள்
எல்லாவற்றையும் நிராகரித்தாரே... நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட். தேசியம் எனும் உரையாடலை
எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“ஆமாம்... பெரியார் எல்லா அபிமானங்களையும்
நிராகரித்தார். தமிழைக் `காட்டுமிராண்டி பாஷை’ என்றார்தான். ஒரு கோபத்தில், ஒரு வேகத்தில்
இழிசொல்லால் வைவது இல்லையா? அப்படித்தான் அவர் இவற்றை எல்லாம் நிராகரித்தார். அவர்
கோபங்கள், ஆதங்கங்கள் நியாயமானவை. ஆழமான மானுட நேசத்தில் இருந்து வருபவை.”
“இன்றையச் சூழலில் தமிழ்ச் சமூகம்
உடை, பண்பாடு, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்திலும் தன் தனித்தன்மையை வேகமாக இழந்துவருகிறேதே?”
``பண்பாடு என்பது சிறிய விஷயம்
இல்லை. யாராவது சித்தப்பா பெண்ணைத் திருமணம் செய்கிறார்களா... இல்லையே? அப்படிச் சில
அடிப்படையான விஷயங்கள் எப்போதுமே எந்தப் பண்பாட்டிலும் மாறாது. மற்றபடி சில விஷயங்கள்
காலத்துக்குத் தகுந்தாற்போல் மாறத்தான் செய்யும். அதில் பெரிதாகத் தவறும் இல்லை. உடையில்
தனித்தன்மை வேண்டுமா என்றால், அப்படி ஒன்றும் பெரிதாக வேண்டாம் என்றே சொல்வேன். பார்ப்பதற்கு
நாகரிகமான, மற்றவர்கள் முகம் சுளிக்காத, நமக்கு வசதியான ஓர் உடை இருந்தால்போதும். வேட்டிதான்
கட்ட வேண்டும் என அவசியம் எல்லாம் இல்லை.”
“கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில்கூட
நம் அடையாளத்தை இழக்கிறோமே... தமிழே எழுதப் படிக்கத் தெரியாத தலைமுறை ஒன்று உருவாகிவருகிறதே?”
“இது மோசமான விஷயம். தமிழ்வழிக்
கல்வி தொடர்பாக ஒரு பேரியக்கம் தொடங்கவேண்டிய அவசியமான, அவசரமான காலத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனால், அதற்குத் தகுந்த தலைவர்கள் தற்போது நம்மிடம் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.’’
“தமிழர்களின் தனி அடையாளம் என்று
சொன்னால் எவற்றை எல்லாம் சொல்வீர்கள்?’’
``நிறையச் சொல்லலாம். குறிப்பாக,
சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களில் சொல்லலாம். வேறு எந்தச் சமூகத்தைவிடவும் தமிழ்ச் சமூகத்தில்
தாய் மாமன் என்கிற உறவு, ஒரு குடும்பத்தோடு நெருக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதுபோலவே,
இறந்தோருக்குச் செய்யப்படும் சடங்குகளில் தொட்டு வணங்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது.
பிராமணர்கள் சவத்தைத் தொட்டு வணங்க மாட்டார்கள். பொது இடத்தில் பெண்கள் மீதான வன்முறையைத்
தடுப்பதை தமிழ்ச் சமூகத்தின் தனி அடையாளம் என்று சொல்லாம்.”
``சேர, சோழ, பாண்டியர் எனும் பேரரசு
மரபுகள் உருவான காலத்தில்தான் மதங்கள் உருவானதாக சொல்லப்படுகிறதே?”
``லெனின் `ஸ்டேட் அண்ட் ரிலிஜன்’
என ஒரு தியரி சொல்வார். `பேரரசு மரபும் பெரும் தத்துவமும்’ என கைலாசபதி ஒரு கட்டுரை
எழுதியிருக்கிறார். அதில் அவர் அப்படித்தான் சொல்கிறார். சின்னச்சின்ன இனக் குழுக்களைப்
பெரிதாகத் திரட்டி, ஒரு பேரரசை உருவாக்கும்போது, பெரிய மதம் ஒன்று தேவைப்படுகிறது.
அப்படித்தான் சோழர்களுக்கு சைவம் தேவைப்பட்டது. பாண்டியர்களுக்கு சைவமும், ஓரளவு வைணவமும்
தேவைப்பட்டன. சமணத்தையும் பெளத்தத்தையும் காலி செய்துவிட்டார்கள்.’’
“சமணமும் பெளத்தமும் தமிழ்ச் சமூகத்தில்
இருந்து வெளியேறிய காரணம் என்ன... அது வன்முறையாக அப்புறப்படுத்தப்பட்டதா?’’
``சமணர்களைக் கழுவில் ஏற்றிய கதை
எல்லாம் உண்மைதான். ஆனால், வட நாட்டில் சமணத்துக்கும் பெளத்தத்துக்கும் நடந்ததைப் போன்ற
பெரிய அளவிலான வன்முறைகள் தமிழகத்தில் நடக்கவில்லை. அவற்றின் அழிவுக்கு அவையும் ஒரு
காரணமாக இருந்தன. அளவுக்கு மீறிய துறவு நெறி ஒரு முக்கியமான காரணம். நிலப்பிரபுத்துவச்
சமூகம் வலுவாகக் காலூன்றிய பிறகு, ஒரு சம்சாரியால் பின்பற்றவே இயலாத துறவு நெறி அவனுக்குத்
தேவை இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும். எனவே, தன்னியல்பாக மக்கள் அந்த மதங்களைவிட்டு
வெளியேறியிருக்க வேண்டும். இன்னொரு காரணம்... செல்வம். அது திரண்டுகொண்டே இருந்தது.
செல்வம் ஒரு பக்கம் திரண்டுகொண்டே இருக்க, துறவு வாழ்வும் செல்வமும் ஒன்றோடு ஒன்று
ஒத்திசைந்து செல்ல இயலவில்லை. போலித் துறவிகள் வள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள்
என்பதற்கு, `நெஞ்சிற் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வார்’ என்ற குறளே சாட்சி.”
“இன்று தமிழகத்தில் பல்வேறு சாதியினர்
தாங்கள் ஆண்ட பரம்பரை எனச் சொல்லிக்கொள் கிறார்களே?”
“சுத்தப் பைத்தியகாரத்தனம் இது.
அரசன் சாதி கெட்டவன். பெரும் எண்ணிக்கையில் உள்ள சாதிகள் எப்போதும் அரசனுக்குத் துணையாக
இருந்திருப்பார்கள் என்பது உண்மைதான். அப்படித் துணையாக இருந்த சாதிகளில் இருந்தெல்லாம்
அரசன் பெண் கொடுத்து பெண் எடுத்திருந்திருப்பான். அதற்காக நாங்கள் அவன் வாரிசு என்று
எப்படிச் சொல்ல முடியும்? ஆண்ட பரம்பரை எனச் சொல்லாத சாதிகளும் தமிழ்நாட்டில் உண்டு.
உண்மையில் அவர்களுமேகூட வரலாற்றின் ஏதோ ஒரு தருணத்தில், ஏதாவது ஒரு நிலப்பரப்பின் அதிகாரத்தைக்
கையில் வைத்திருந்தவர்களாக இருப்பார்கள். எனவே, `நாங்க ஆண்ட பரம்பரை’ எனச் சொல்வதில்
எந்தத் தனிப்பட்ட பெருமிதமும் இல்லை.”
``பெரியாரின் தலைமையில் நடந்த மிகப்பெரிய
போராட்டங்களையும் சமூக சீர்திருத்த கருத்தாக்கங்களையும் தாண்டி இன்று கல்விக்கூடங்களில்கூட
சாதியுணர்வுகள் கூர்மையடைந்திருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?’’
``சாதி, மண உறவுகளைப் பாதுகாப்பதன் வழியாக, தன்னை தக்கவைத்துக்கொள்கிறது.
சமூக வாழ்வில் தோல்வி அடைந்தவர்கள், அரசியல் செல்வாக்கு இழந்தவர்கள் சாதியைக்கொண்டு
தங்கள் அதிகாரத்தை மீட்க நினைக்கிறார்கள். ஒருவனை நடுராத்திரியில் காவல்துறை வந்து
அடித்து இழுத்துச்செல்லுமெனில், அவனை ஜாமீனில் எடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். அவனது
சாதிக்காரன்தான் வருவான்.
காவல்துறைக்குள்ளும் சாதிய உணர்வுகள்
புரையோடிப் போயிருக்கின்றன. ஒருவகையில் சாதிய ஒடுக்குமுறை உணர்வு இல்லாத ஒரு காவல்
நிலையம் என்பது இங்கு கிடையாது. அல்லது ஒடுக்குமுறை உணர்வுள்ள காவல்துறை அதிகாரிகள்
எல்லா காவல் நிலையங்களிலும் இருக்கிறார்கள். காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவது
வாடிக்கைதான். ஒருவகையில் பிரச்னையைப் பெரிதாக்கிவிடுகிறவர்களே அவர்கள்தான். இதனால், காவல் நிலையத்திற்கு உள்ளே
செல்லும்போது இருந்ததைவிட வெளியே வரும்போது அவனது சாதிய உணர்வு ஆழமாகிறது.
கிராமத்தின் வேளாண் கட்டுமானமும்
சாதியக் கட்டுமானமும் இன்னும் முழுமையாகச் சிதையவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு
பெறும்போது அவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனையுடனும் வாழ்முறையுடனும் வருகிறார்கள்.
மேல் சாதிக்காரர்களுக்கு இணையாக உண்கிறார்கள், உடுத்துகிறார்கள், பார்களில் உட்காருகிறார்கள்.
இதை, மேல் சாதிக்காரர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இவன் ஒடுக்க முற்படுகிறான்.
அவன் அடங்க மறுக்கிறான். டீக்கடையில் யாரேனும் தவறுதலாக டீயைக் கொட்டிவிட்டாலும் பிரச்னை
வந்துவிடுகிறது. இவ்விடத்தில் ஒடுக்குவதற்கும் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் இருவரும்
சாதியச் சங்கங்களை நாடுகிறார்கள். இருவரிடத்திலும் ஆயுதப் புழக்கம் இருக்கிறது. தமிழ்ச்
சமூகம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பதற்கு அடையாளம் இது.”
``இன்று எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களும்
கல்வியறிவு பெற்று, பல்வேறு அறிவு சார்ந்த பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். பேராசிரியர்களாக
இருக்கிறார்கள். ஆனாலும் சாதியை அவர்கள் கைவிடத்தயாராக இல்லையே...’’
``முதலில் இந்தக் கல்வி, கல்வியே
அல்ல. இது மருத்துவம் அல்ல, இது கலை அல்ல, இது சினிமா அல்ல, இது அரசியல் அல்ல. எல்லாவற்றிலும்
நாம் மாற்றைத் தேடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாற்றைத் தேடுகிற முயற்சியை நாம்
ஊக்குவிக்க வேண்டும்.
திருநெல்வேலியின் எந்த ஊரின் தெருவுக்குப்
போனாலும் அவர்களின் சாதியைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிற வகையில் பெயர்வைத்திருப்பார்கள்.
ஏதாவது அடையாளங்களை நிறுவி இருப்பார்கள். இதையெல்லாம் சரி செய்யாமல் ஒன்றும் செய்ய
முடியாது.’’
``சென்னையில் பல தெருக்களுக்கு,
பல பகுதிகளுக்குச் சூட்டப்பட்டு இருந்த சாதிப்பெயர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டுவிட்டன
அல்லது மாற்றப்பட்டுவிட்டன... அதற்கான சட்டமும் கொண்டுவரப்பட்டது. அதைச் செயல்படுத்தலாம்
அல்லவா?’’
``அது ரொம்பக் கஷ்டம். சென்னை போன்ற
நகரங்களில் இது சாத்தியப்படலாம். இங்கு அது சாத்தியம் இல்லை. எனது தெருவில் இருக்கும்
பெயரில்கூட சாதி இருக்கிறது. அதை நீக்க வேண்டும் என்று அரசு சொன்னால், ஊரே எதிராகக்
கிளம்பிவிடும்.’’
``இதை அரசு செய்ய வேண்டும் என்று
ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? இங்குள்ள பெரியோர்கள், சிந்தனையாளர்கள் இத்தகைய விஷயங்களைச்
செய்யலாம் அல்லவா?’’
``பழைய சமூக அமைப்பில், ‘பெரிய
மனுஷன்’ என்ற ஒருவன் இருந்தான். இன்று எந்த ஊரிலும் பெரிய மனுஷன் என்கிற ஒருவனே கிடையாது.
நமது கல்விமுறை அப்படியானவர்களை உருவாக்க வில்லையே.’’